47. பாமாலிகை (தமிழ் மொழி)

இதில் முதல் பத்துப் பாடல்கள் எனது 6வது நூல்
மனக்கடல் வலம்புரிகள் – ல் பிரசுரமானது இனிய தமிழெழுது- வரை (கீழிருந்து பாருங்கள்)

 

26.jpg.ss

*

செந்தமிழ் வாழியவே!

*

செந்தமிழ் வாழியவே! எம் வேர்!
நந்தமிழ் வாழியவே! எம் உயிர்!
தீந்தமிழ் தொல்காப்பியத் தமிழ் பார்!
அருந்தமிழை அழகாய்ப் பேசுவீர்!

*

செம்மொழி! திராவிட மொழிக் குடும்பத்தின்
முதன்மை மொழியில் ஒன்று, நறுந்தேன்!
பைந்தமிழ்! எட்டுக் கோடியினருக்கும் மேலானவர்
அருந்தமிழைப் பேசும் பெருமையுடைத்து.

*

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுக்கும் மேலானது!
மிரண்டிடாதீர்! குமரிக்கண்டத்தில் தோன்றிய மொழி!
முரணற்றது மணிமகுடம் சங்க இலக்கியங்கள்!
திரண்ட இலக்கிய மரபுடைத்து.

*

திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, நாலடியார்
பெரும் பொக்கிசப் புதையல் தமிழ்!
கருத்தோடு காத்து வளர் செந்தமிழை!
விருப்போடுயர்ந்து செந்தமிழ் வாழியவே!

*

வள்ளுவர், கம்பர், பாரதி, ஒளவை
அள்ளிப் பரப்பிய ஆதி மொழி!
அள்ளி அணையுங்களெம் தெய்வ மொழியை!
தள்ளாதீர் செந்தமிழ் வாழியவே!

*

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-5-2016

*

end

46. தங்கத் தமிழ்

954560_889634221062911_1775597506_n-kk

தங்கத் தமிழ்

***

உயிர் மெய்யான தங்கத் தமிழ்
பயிர் செய்வது உங்கள் கையில்!
உயிர் என்பதாய் யான் மொழிதல்
உயர் காதல் தமிழில் அதனால்.
புதிய சொற்கள் கருத்துகள் தினம்
புதிதாய் பழகிட என்ன கனம்!
குளம் குட்டையாய் தேங்குவதா மனம்!
வளமுடை நதியான பிரவாகம் தனம்!
***
நான்கு வயதுத் தமிழ் வேறு
நாற்பது வயதுத் தமிழொரு கூறு!
வித்தகம் உத்தமம்! தமிழ் சாறு
எத்தகு இனிமை! இல்லையது சேறு!
நல்ல தமிழால் சாதனை உண்டு!
வல்ல தமிழை நெருங்கி அண்டு!
கொல்லாது குடையும் இன்ப வண்டு!
இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-11-2015
Swirl divider v2

45. தமிழ் மையை நிரப்பு

 

26.jpg.ss

 

தமிழ் மையை நிரப்பு

 

ஆதித் தொன்மையாம் குமரிக் கண்டம்
ஆஸ்திரேலியா, சாலித்தீவு, தென்னாபிரிக்கா இணைவாம்
ஏக மனதாராய்ச்சி தேவநேயப்பாவாணரோடு பலரால்.
ஊகமல்ல பதினான்கு மாநிலங்களான பிரிவாம்
ஏழு தெங்கு நாடு என்றும்
ஏழு பனை நாடெனப் பிரிவுகளாம்!
தமிழன், தமிழ்மொழி பிறப்பிடம் குமரிக்கண்டம்
தக்கசான்றுகள் பினீசியர்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்.

 

உன்னத இலக்கியம் இரண்டாயிரமாண்டுகளிற்கு மேலானது
கன்னலாம் நீண்ட இலக்கண மரபுடையது.
இன்பத் தமிழேயித்தனை பழமைத் திமிரே!
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென
துன்ப அகராதி துடைத்தழிக்கும் அமிழ்தே!
என்னுயிர்ச் சொத்தாமுலகின் பதினெட்டாம் நிலையே!
உன்னையின்னும் மக்கள் இழுத்து அணைக்கட்டும்!
சின்ன எழுதுகோலில் தமிழ்மையை நிரப்பட்டும்!

 

மொழி எம் வாழ்க்கையின் வழி!
ஆழி! உள்ளாழ்ந்து முத்துக் குளி!
தோழியாய்த் தோளணைத்து மழையாய்ப் பொழி!
ஊழிக்காலம் வரை காத்திட விழி!
அறிவானது பனையோலை வாய்மொழியான பாதுகாப்பு!.
செறிமைச் சூரியன்! இன்ப நீரோடை!
வறியவனாக்காத மொழிப் பயிர் மேடை!
தறியெனும் எழுதுகோலால் நூல் நெய்வோம்!

 

பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்    20-6-2015

10429486_849560548416048_5114170664496932595_n

44. பழுத்துக் கனிவதா!

12208428_10206885021301247_2818818089751784509_n

 பழுத்துக் கனிவதா!

குமிழ் குமிழாகக் குதிக்கிறது
தமிழ் குட்டி நதியாக
தமிழ் புரள வேண்டும்
கவிதை தரமாகத் தவழ்திட
வார்த்தைகளில் கஞ்சம் ஏது
கணத்தில் நேர்த்தியான வரட்சியுமாகும்.
வேர்க்க வைப்பதும் உண்டு
ஆயினும் ஈர்க்கும் வரியமையும்.
Superstar---5-Star-rating---Gold
அலட்சியம், உதாசீனம், ஆற்றாமை
தாண்டி இலட்சியத் தேரோடும்.
மலட்டாறு அல்ல தமிழ்!
சிறக்க புலமகள் அருள்வாள்.
எழுத்திற்கு அளவு தான்
என்ன! பழுத்துக் கனிவதா!
நீரோட்டத்தில்  பதமாகுமா தமிழ்
தானோட்டத்தில் உயர்ந்து உருளுமா!
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-11-2015
ssssd

43. தமிழாம் எம் மொழி

12122756_935765536504301_3233280117178799162_n.jpg-kk

தமிழாம் எம் மொழி

தமிழனுக்குத் தமிழ் கலங்கரை விளக்கு.
தமிழரிதை உணர்தல் கலக்கமற்ற இலக்கு.
தமிழினைக் காத்தல் பலரது நோக்கு.
அமிழாது காக்க குழுநிலைகள் இயக்கு.
குழந்தையிலிருந்து தமிழ் பேசத் தொடக்கு.
குவியலான மொழிகளோடு தமிழையும் பழக்கு.
குழப்பமின்றிப் பேசலாம் அறிவியல் வழக்கு
குழம்புவது பெற்றோரே, இல்லையிது சிறாருக்கு

தமிழுணர்வு உணவு ஒரு தமிழனுக்கு.
தமிழுன் வேர், ஊன்றுகோல் விளக்கு.
தமிழொரு மது அருந்தியுனை இயக்கு.
தமிழ் அமுது, இசை, முழக்கு,
தமிழ் ஒலி ஊன் நமக்கு.
தமிழை அணை, தோள் நமக்கு.
தமிழ் தேன் சந்ததி விருட்ச வேருக்கு.
அமிழ்தமாய் எடுக்க ஏது பிணக்கு.

தமிழ் பேசக் கூசுவோர் பலர்
தமிழென்று சொல்லவே அவமானம் அவருக்கு
தமிழை இகழ்வாகச் சொல்வோருக்குத் துலக்கு
தமிழால் புகழ் ஏந்தலாம் இயக்கு.
தமிழ் காற்று நுழையட்டும் சுவாசமாக்கு.
தமிழ் முத்தெடுக்க இன்றே மூழ்கு
தமிழ் சிகரத்திலொளிர பாடுபடு, வணங்கு.
தமிழை வானில்  மின்னும் நட்சத்திரமாக்கு.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

August 2015

lines-stars-243923

42. அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்!

unnamed

அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்!

அலட்சியங்களால் அலவு கொண்டாலும்
அலட்டிக் கொள்ளாது அம்பாக
அலத்தமாகச் செந்தமிழ் தெம்பாக          
அலங்கார வரிகள் ஓயவில்லை!!

கவி, பா மழை
புவியான மனம் நனைக்க
அவிழ்வது அமைதி ஆனந்தம்
குவிவது தமிழ் வாசம்!

நினைத்ததை மேடையில் கூறல்
நிகழ்ந்தது பதினொரு அகவையில்
நின்மல எழுச்சியது பெரும்
நிறைவுடை ஆக்கம் ஊக்கம்!

கர்வம் சுயநலம் நிறையுலகில்
சர்வசாதாரணச் சஞ்சாரம் கடிது
வர்ணம் பூசி வகையாய்
அர்ப்பணம் செய்யலாம் காலத்தை!

(அலவு – மனத்தடுமாற்றம், வருத்தம்; அலத்தம் – சூரியகாந்தி)

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்:
டென்மார்க்.    9-8-2015

dividers

41. இணையத் தமிழே இனி..

surfing-the-internet

இணையத் தமிழே இனி..

*

சுணையற்று உறைந்தவர்மணை விட்டெழுகிறார்!

அணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்!

புணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்!

இணைந்து ஆர்வமாய்ப் பின்னுகிறார்! விதைக்கிறார்!

இணையற்ற ஏணியிது தமிழ் வானிற்கு

பணையுடை பாட்டரும் காணாத சுரபி

பிணையும் எழுத்துப் பிழைகள் பாசி

கணைச் சூடாகாது வெல்லல் வாசி

*

தூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்

பாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்

ஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து

வாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை

பூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்

கூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்

நேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்.

யாசிக்காத இணையத் தமிழே! அற்புதம்!

*

கட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,

கொட்டிய கலைகள், சமயம், அரசியல்

எட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென

சொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்

தொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்!

தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!

எட்டும் இணையத் தமிழே இனி

கொட்டும் முரசு வெள்ளிடை மலை!

*

(மணை – அமரும் பலகை, சிறு பீடம்.   புணை – தெப்பம்.

பணை – பெருமை.  கணைச் சூடு – நோய் வகை   சுணை – சுரணை, அறிவு, கூர்மை)

*

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

12-5-2015.

computer or connection

40. எழுதுகோல் எடு!

 

1111A copy

எழுதுகோல் எடு!

ஆ வரைந்து மொழியறிந்த காலம்

பூ வரைந்து ரசித்ததொரு காலம்

பா வரைந்து திளைப்பதிக் காலம்.

ஆசி நிறைத்து வாழ்த்தட்டும் ஞாலம்.

எழுதுகோல் எடுத்திடு!எழுதுவோம் கவி.

பழுதான பழக்கம் வழக்குகளைப் புவி

கழுவிட வழிகள் பலவாய்க் குவி!

நழுவிடாதே நடுவோம் நற் கவி!

 

தேட்டம் தொடர்! பாட்டை வடி!

நாட்டமுடன் பல இதழ்கள் படி!

வாட்டம் தொலை! வாழ்வின் படி 

ஆட்டம் காணாது இறுகப் பிடி!

வல்லமையாய் மொழிக் கடலுள் ஆழ்ந்து

நல்ல பாக்கள் பல குவித்து

வல்லாங்கு அறிவில் திறன் கலந்து

வெல்ல வேண்டும் வெற்றியை அணைத்து.

பா ஆக்கம்

பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

21-3-2015

pathivukal.com

 

39. தமிழ் கடலில் சுழியோடல்…

Tamil_News_436256051064

தமிழ் கடலில் சுழியோடல்…

கவிதை சிலவேளை பினாத்தல் ஆகிறதோ!

சதைப் பிடிப்பெனும் அருத்தமில்லாப் புலமையற்று

கதைப்பதாகித் தனக்குள் பூஞ்சையான ஊதுகுழலின்

விதைப்பாகிறதோ, பித்தன் மொழியை அலசுதலாக!

கவிதையைக் கருத்தாழப் பதிதல் அறிவாகி

உவிதலற்று உயிராய் மலர்ந்து மணக்கிறது.

பூவிதையாய் ஆழப் பதிவாய் மகிழ்வு தருகிறது.

பாவிதை குளம்பிய மனதிற்கு  வடிகாலாகிறது.

அருவியெனக் குளிர்வித்துச் சிலிர்க்கும்

வரிகள்மருவி வாழ்வுடன் மொழியில் இணைகிறது.

கருவியாய் நம்பிக்கை விதை தூவுகிறது.

ஒரு கணத்தில் வார்த்தையின் சுழற்சி

பெரு மாற்றமுருவாக்குகிறது மனதை வருடி.

புருவம் உயர்த்தலில் புது மெட்டவிழ்கிறது.

கரு புரள்கிறது புத்தலை திரண்டு

ஒரு கவிதையிலிருந்து இன்னொன்று பிறக்கிறது.

 

கவிதையிலிருந்து இன்னொரு கவிதை பிறத்தலே

கவிதையின் புனிதப் பின்னலின் தாக்கம்.

கவிதையின் வெற்றி மொழித் தீட்டல்.

கவிச் சொல்லாளுமைக்கு ஆயுள் நீட்டம்.

புவியில் நிலைநிற்கும் வரிகள் எமக்கு.

பவித்திரப் பாதை காட்டுதல் தெளிவு.

கை நழுவும் கண்ணாடிக் குவளையன்றி

கைநிறையத் தமிழ் முத்திற்கு மூழ்கலாம்.

பா ஆக்கம்

பாவானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

16-3-2015

pT5ooLeec-i

38. தமிழை எல்லோரும் வளைக்கலாம்

 tamillanguage-l

தமிழை எல்லோரும் வளைக்கலாம்

***

என்னுள் வழியும் செந்தமிழ் விரிவு
இன்னுமதை உணர்ந்தால் உயர்வு! – தேடி
நன்னூல் பல நாடி உள்ளெடுத்தால்
நலமாகும் என் தமிழ்.

***

பொல்லாத மனிதர் தமிழைப் புறமாக்கி
இல்லாத கதை கூறி – உள்ளே
வல்லதென வாழ்விடத்து மொழியணைத்து நிதம்
செல்லமாய்க் காதலிப்பாரென் செய்க!

***

கைவிடாது தமிழைக் கரைத்துக் குடித்து
வைகையாய்த் தமிழறிவு பெருக்கி – நாளும்
மையிலென் பெயரெழுதப் பாடுபடும் நெஞ்சம்
தைதைதா தமிழெனக் கெஞ்சும்

***

இல்லாத அறிவல்ல, வல்லமையாய்த் தேடினால்
வில்லாகத் தமிழை எல்லோரும் வளைக்கலாம்
பல்லாண்டு வாழ்ந்த பழமைத் தமிழன்றோ!
சொல்லாள ஏது தடை!

***

நல்ல நிலையில் தமிழோடு விளையாடி
வெல்லக் கவிகள் பல அரங்கேற்ற
வல்லமை தாவென மெல்லக் கேட்பேன்
இல்லையென்னாது அருள் தா!

***

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
29-1-2015

 

green-line-2

Previous Older Entries