அனுபவம். அங்கம். 2

வாடிவீட்டில் எமது அறைக்குச் சென்று பொருட்களை ஒழுங்கு படுத்திவிட்டு பயண அலுப்புத் தீரக் குளித்தோம். தமிழ் கடைகள் எந்தப் பக்கம் இருக்கிறது, எப்படிப் போவது என்று வாடிவீட்டு வழிகாட்டிப் பையனிடம் கீழே இறங்கி வந்து விசாரித்தோம். லிட்டில் இந்தியா போகும் பேருந்து இலக்கம் 106 எனக் கூறி வழிகளையும் கூறி          ‘ நீங்கள் திரும்பி வரும் போது டக்ஸியில் வந்திடுங்கள், பேருந்தில் வருவது சிரமம்’ என்றார். ஏன் அப்படிக் கூறினார் என புரியாது, சரியென்று கூறி பேருந்தில் பயணித்த போதும் ஏன் அப்படிக் கூறினார் என்று குளம்பியபடியே சென்றோம். அங்கு பேருந்திற்கு மாற்றிய சில்லறை நாணயங்களையே கணக்காகப் போட வேண்டுமாம். சாரதியிடம் போகும் இடத்தைக் கூறும் போது, உரிய பணத்தின் கணக்கைக் கூறுகிறார். இதை யந்திரத்தில் போடும் போது, யந்திரம் அனுமதிச் சீட்டைத் தருகிறது. சீசன் அட்டைகள் என்பவை வேறு விதமாக. பேருந்தில் செல்லும் போதும், காரில் செல்லும் போதும் வேறு வேறு வித அனுபவங்கள் தான். இவைகளைப் பெறுவது தானே சுற்றுலா!.

நாம் தங்கியிருந்த  வாடிவீட்டிலிருந்து எதற்கெடுத்தாலும் இந்தப் பக்கம் தான் நாம் ஓடி வர வேண்டிய தேவை உள்ளது என்பது விளங்கியதால, இந்த வட்டாரத்திலேயே தங்கிட ஒரு இடம்  தேடினால் என்ன என்று தோன்றியது. லிட்டில் இந்தியா, தேக்கா சந்தை, செரங்கூன் வீதிகளுக்குக் கிட்டவாக பெலிலோஸ் ஒழுங்கையில் ஒரு இடத்தைப் பார்த்துக் கேட்டு வைத்தோம். இது மிக உல்லாச வாடி வீடு அல்ல நடுத்தரமானது தான். நாம் தான் பகல் முழுக்கச் சுற்றுகிறோம், இரவில் மட்டும் குளித்துத் தாங்கிடத் தானே தேவை ஒரு இடம். நாம் சுற்றிச் சுற்றி இரவு உணவையும் முடித்துக் கொண்டு, பையன் கூறியது போல டாக்சியில் செல்லாமல், பேருந்திலேயே வாடி வீட்டிற்குச் சென்றோம். அது என்னென்றால் சிங்கப்பூர் பேருந்துப் பாதைகள் ஒரு வழிப்பாதை முறையைக் கொண்டது. போன பாதையால் திரும்பி வராது என்பதால் ஊருக்குப் புதிதானவர்களுக்குக் குளப்பமாக இருக்கும் என்றே அந்த வழிகாட்டி அப்படிக் கூறியுள்ளான் என்றது புரிந்தது. நாமோ ‘சவாலே சமாளி’ என்று ஒருபடியாக விசாரித்துத் தெரிந்து வாடி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம். வழிகாட்டிதான் எம்மைத் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார்.அந்த வாடி வீடு பகல் 12.00 மணியுடன் கணக்குத் தீர்க்கும் முறையாதலால், அன்று இரவு நிம்மதியாகப் படுத்துத் தூங்கி, அடுத்த நாள் ஆறுதலாக பகல் 12.00 மணியுடன் அந்த வாடி வீட்டுக் கணக்கை முடித்து பெலிலோஸ் தெருவுக்கு மாறினோம். பேருந்தில் போவதானால் ஒன்றரை வெள்ளிக்கும் குறைவான பணச் செலவு. வாடகை வாகனத்திற்குப் பத்து வெள்ளி எடுத்தது, மிக அதிகம் தான். ஆனால் பாரமான பொதிகளுடன் ஒன்றும் செய்ய முடியாது. அது தவிர வாடிவீட்டு வாசலில் தூரப் பயணத்திற்குக் காத்திருக்கும் வாடகை வாகனம், இந்தக் கிட்டப் பயணத்திற்கு வந்ததே மிகப் பெரிது என மகிழ்ந்தோம்.

இங்கு மீட்டர் போடாது தான் பல வாகனங்கள் ஓடுகின்றன. அங்கு ஒவ்வொரு தடவையும் பொருட்கள் வாங்கும் போதும், வாடகை வாகனத்திற்குப் பணம் கொடுக்கும் போதும், நாம் ஏமாறுகிறோமா? அல்லது அவர்கள் எம்மை ஏமாற்றுகிறார்களா? இது நியாயமா? அநியாயமா? என்ற கேள்விகள் எம்முள் எழுந்த வண்ணமே இருந்தது. இரண்டு யேர்மனிய உல்லாசப் பயணிகளுடன் கதைத்த போது உல்லாசப் பயணம் திகிலானதும், மனச் சித்திரவதையும் கொண்டது (ரூறிசம் திறில்லும், மென்ரல் டோச்சரும் கொண்டது) என்று கூறிய கூற்றுச் சரியாகவே இருந்தது. முன்னைய கிராண்ட் ஹோட்டலில் காலையுணவு இருந்தது. இங்கு அது இல்லாதது எனக்குக் குறையாகவே இருந்தது.  நல்ல அழகிய காட்சி வட்டமுடைய அந்த  வாடிவீட்டை விட்டு இங்க மாறியது பிள்ளைகளுக்க மனத்தாங்கலாக இருந்தது. ஆனால் எமக்கு இது எல்லா இடமும் சுற்றித் திரிய வசதியாக இருந்தது.

நல்ல உணவு, இச்தோனேசியன் பட்டிக் மிக மலிவு, பல தமிழர் கூடுமிடம், இரண்டு அடிக்கொரு அழகு நிலையம், இப்படிப் பல வசதிகள் இருந்தது. ‘ஆசியாவின் சிறந்த உணவுத் தலைநகரம் சிங்கப்பூர்’ என்று வாசித்துள்ளேன். அது போல நாங்கள் ஒரு நாள் சாப்பிட்ட இடத்தில் மறுநாள் சாப்பிடவே இல்லை. அத்தனை வித உணவு வகைகளும் அங்கு பெற முடிந்தது. இனி சிங்கப்பூர் பற்றிச் சிறிது பார்ப்போம்.

சுமத்திரா தீவை மையமாகக் கொண்ட அன்றைய  ஸ்ரீவிஐய இராச்சியமும், யாவா தீவை மையமாகக் கொண்ட மஐபகிட் ராச்சியமும் ‘இன்றைய இந்தோனேசியா’ வாகும். மலேயா கட்டுக் கதையின் படி சுமத்திரா தீவு இராசகுமாரன் ரிமசெக் எனுமிடத்தில் ஒரு சிங்கத்தைக் கண்டார். அது நல்ல சகுனமெனக் கருதி சிங்கபுரா, லயன் சிற்றியைக் கண்டுபிடித்தார். ரிமசெக் எனும் பழைய பெயர் கொண்ட சிங்கபுரா, சுமத்திரா தீவின் ஸ்ரீவிஐய ராச்சியத்தின் மிகப் பலம் வாய்ந்த வியாபார ஏற்றுமதித் துறைமுகமாக அன்று விளங்கியது. 13ம் நூற்றாண்டு நடுப்பகுதியின் முன்னர், இது, யாவாதீவு மஐபகிட் இராச்சியத்திடம் அடிமையாக இருந்தது இன்னொரு கதை. லுயன் சிற்றி- சிங்கபுரா எனும் பெயர் கொண்ட போதும், இங்கு சிங்கங்கள் இருக்கவில்லை. காலத்திற்குக் காலம் அரசுகள் மாறி, நெப்போலியனின் யுத்த காலத்தில் ஹொலாண்ட் நாடு பிரான்சிடம் தோற்ற போது, பிரிட்டன் யாவா நாட்டை ஆண்டது. அப்பொழுது 1811லிருந்து 1816ல் அங்கு, யாவா பிரித்தானிய அரசில் ஸ்ரம்ஃபோட் றஃபெல்ஸ் மகாதேசாதிபதி (கவர்னர் ஜெனரல்) ஆக இருந்தார். பின்னர் பிரான்ஸ் நாடு தோற்கடிக்கப் பட்டு அரசு மாற்றங்கள் நடந்த போது 29-1-1819ல் றஃபெல்ஸ் சிங்கப்பூருக்கு வந்து, சிங்கப்பூர் உள்ளுர் ஆட்சியாளர்களிடம் ஒப்பந்தம் செய்து சிறிது சிறிதாக சிங்கப்பூரைக் கட்டியெழுப்பத் தொடங்கினார். 1823ல் ஒரு மலையைச் சமன் படுத்தி றஃபெல்ஸ் ப்ளேசையும் உருவாக்கி, சிங்கப்பூர் நகரை அழகுற அமைத்து நாட்டைவிட்டு வெளியேறினார். றஃபெல்ஸ் ஹோட்டல் இன்றும் அங்கு றஃபெல்ஸ் ப்ளேஸ் போல பிரபலமானது.

சிங்கப்பூர் சிங்கார நகர் 42 கிலோ மீட்டர் நீளமும் 23கிலோ மீட்டர்அகலமும் கொண்டது. சுற்றி வர 58க்கும் மேலதிகமான சிறு சிறு தீவுகளைக் கொண்டது. அவையெல்லாமாக 646 சதுர மீட்டராகும். புலாயு ரிகொங் எனும் தீவு 24.4 சதுர மீட்டராகும். புலயு யுபின் தீவு 10.2 சதுர மீட்டரும் சென்ரோசா எனும் தீவு 3.3சதுர மீட்டராகும். இந்த சென்ரோசா எனும் விநோத தீவு (ஃபன் ஐலண்ட்) பற்றிப் பின்னர் பார்ப்போம். சிங்கப்பூர்1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் திகதி சுதந்திரம் அடைந்தது. இங்கு முறையே சீன மக்கள், மலே இனத்தவர், இந்தியர்கள் என 3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். சிங்கப்பூரின் இச் சிறு விபரத்துடன் என் அனுபவத்திற்கு வருவோம்.

(முதல் அங்கத்தில் வந்த 3 படங்களும் சங்கி விமான நிலையத்தினுள்ளும், ஓச்சாட் தெருவையும் காட்டுகிறது. இந்த அங்கத்துப்படங்கள் முதலாவது வாடிவீட்டு யன்னலூடான காட்சி.  2வது வாடிவீட்டு வாசலும் முன் தெருவும் தெரிகிறது.)
அடுத்த அங்கத்தில் சந்திப்போம்.—-
 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: