அனுபவம். அங்கம். 6சென்ரோசா தீவுக்குப் போகும் போது நல்வரவுப் பலகையையுடைய படத்தை இந்த அங்கத்தில் இணைத்துள்ளேன். நாமும் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

டொல்பின் காட்சி முடிய நிலத்துக்கு அடியில் உள்ள நீருலகம்  (அன்டர் வோட்டர் வேல்ட்) அல்லது நீரடிச் சுரங்கத்துக்குச் சென்றோம். இது ஒரு செயற்கைச் சுரங்கம். பாதை ஊடறுத்துச் செல்லும் பெரிய மீன் தொட்டி, அல்லது பார்வைக்குக் கடல் போல உள்ளது. வலது, இடது, தலைக்கு மேலே எம்மோடு ஒட்டிக் கொண்டு மீன்கள் உரசிச் செல்வது போல 2500க்கும் மேலான பல வகை மீன்கள்,   சுறாக்கள், விலாங்குகள், கடற் குதிரைகள், கல் மீன்கள் (ஸ்ரோன் ஃபிஷ்)  சிங்க மீன்கள், பவளப் பாறைகள் என்று பலவகைகள். நாமே கடலுக்கடியில் போய்ப் பார்ப்பது போல ஒரு பிரமை தரும்.   ஒரு உணர்வு தரும் இந்த அனுபவம்.   ஒன்றரை அடிக்கும் மேலான, சிறு மனிதக் குழந்தையிலும் பெரிய மீன்கள் பல வண்ணங்களில் காண முடிந்தது.

சுரங்கப் பாதை போன்ற உருளும் நடை பாதை.    இந்த உருளும் நடை பாதையில் செல்ல பய உணர்வு கொண்டவர்கள் சாதாரண நடை பாதையில் நடந்து செல்லலாம்.  83 மீட்டர்நீளம் கொண்ட காட்சிப்பாதை. கைகளால் மீன்களைத் தொடலாம், பிடிக்கலாம் எனும் உணர்வு தரும் அனுபவம்.   சிறியதும், பெரியதுமாக கண் பறிக்கும் அற்புதக் காட்சியாகவே இருந்தது. அவசர அவசரமின்றி ஆறுதலாக   அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒரு காட்சியாகும்   இது.     நீருக்குள்ளே செல்லும் ஆடையுடன் வழிகாட்டியுடன் உள்ளே சென்றும் பார்க்கலாமாம். விசேட அனுபவம் தேவையில்லை என்றும் வாசித்து அறிந்தேன். இதை நாம் தேடவில்லை.   நடை பாதையில் மட்டும் சென்று அனுபவித்தோம். ரசித்தோம்.
—-மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.——-

 

2. அழியாமறை திருவள்ளுவம்.

 

 

 

அழியாமறை திருவள்ளுவம்.

அதிகன், ஒளவை, கபிலர், வள்ளுவர்
உப்பை, உறுவை, வள்ளி என்றாக
ஆதிக்கும் பகவனுக்கும் ஏழு பிள்ளைகள்.
திருவள்ளுவர், செந்நாப்போதார், பெருநாவலர்,
தெய்வப்புலவர், முதற்பாவலரின்  நூல்
முப்பாநூல், உத்தரவேதம், பொய்யாமொழி
எப்போதுக்குமான பொதுமறை திருவள்ளுவம்.
தப்பாது படிப்போர் வாழ்வும் தரமாகும்.

வாழ்வியல் அகராதி வடித்தவர் வள்ளுவர்.
வாழ்வெனும் தேரின் அச்சாணி வள்ளுவம்.
ஏழ்மை அறிவை உயர்த்தும் குறள்.
தாழ்ந்திடாத வாழ்விற்குக் கைத்தடி குறள்.
ஓர் அதிகாரம் பத்து வெண்பாக்கள்.
ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்கள்.
நூற்றுமுப்பத்து மூன்று அதிகாரங்கள்.
நாற்பதாயிரம் சொற்களுடன் திருக்குறள்.

முத்து மணிகள் ஏழாக வார்த்தைகளில்
கோர்த்த வைரக் குறள் வெண்பா.
வேத நூலாக வீடுகளில் வேண்டும்.
கீதை போல நாம் ஓதவேண்டும்.
நாடு, மொழி, இனத்திற்கப்பால்
வீடுபேறு சிறக்க உயர் அறங்கள்
கேடு இன்றிக் கூறும் தமிழ்மறை.
ஈடிணையற்ற வாயுறை வாழ்த்து திருக்குறள்.

வீணற்றது வாழ்வென உணர்த்தும் ஈரடி.
மானிலத்தில் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு.
மனிதன் மனிதனுக்குக் கூறியது. வாசுகி
மணாளனின் மனிதம் பேணும் முயற்சி.
உள்ளுணர்வில் ஊறி உயிரைத் தட்டும்
கள்ளு வெறியுடை கவின் சுவையாம்
வள்ளுவன் அறவரியாம் அறிவுச் சுரபியை
அள்ளுவோர், அருந்துவோர் அழிவதில்லை.
    

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
1-10-2007.

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி கவிதை பாடுவோமில்,  இலண்டன் தமிழ் வானெலியில் என் குரலில் ஒலி பரப்பானது.

In Eluthu.com web site:—http://eluthu.com/kavithai/57612.html

 

            

                                   

 

அனுபவம் அங்கம் 5.

 

சென்ரோசா தீவின் உள்ளே சென்றோம்.  சிங்கப்பூரின் பிரதிவிம்பம் என்று ஒரு வழிகாட்டி விளக்கிக் கூறினார். சிங்கப்பூர் கடலோடிகள், சரித்திரச் சரணடைவுகள், சிங்கப்பூர் விழாக்கள், இவை மெழுகு உருவமாகவும், படங்களிலும், காட்டி விளக்கினார். வண்ணத்துப் பூச்சிப் பூங்காவென்று கண்ணாடிப் பெட்டிகளில் 3 ஆயிரத்துக்கும் மேலான பூச்சிகள் ஒட்டி வைத்திருந்தனர். ஆழகழகானவைகள். அது அற்புதம் தான்! ஆனால் நான் என் வேலையில் பிள்ளைகளோடு படங்கள் பார்த்து விதம் விதமாக நாள் தோறும் கீறுவதால், (பிள்ளைகளுக்கு வண்ணத்துப் பூச்சி கீற, வண்ணம் பூச மிக விருப்பம்.) இது புதுமையாகத்  தெரியவில்லை.                                             பின்பு பூச்சிகளின் இராச்சியம் என்று பெரிய பெரிய கருவண்டுகள், இராட்சதக் கருவண்டுகள், பார்க்க அருவருப்பாகவும், பயமாகவும், பயங்கரமாகவும், பெயர்களுடன் கண்காட்சியாக இருந்தது. அடுத்து சினிமானியா என்று ஆதிகாலத்தில் குண்டு போடுவது, கால்வாய்களால் போவது, படிகளால் இறங்கிப் போவது, விமானத் தாக்குதல் விழாக்கள  என 3டி படங்கள் காட்டினார்கள்.                                                                                                                                                  இதன் பின் டொல்பின் லகூன் என்று கடற்கரைக்குச்   சென்றோம். அங்கு இரண்டு டொல்பின்களை வைத்து அதை இயக்கி வேடிக்கை காட்டினார்கள். அங்கு கூடும் மக்களும், வாயிலின் அறிவிப்புப் பலகையும், வேறு படங்களும் டொல்பின் பற்றியது இங்கு இணைத்துள்ளேன். இதை விட  ஜெர்மனி   ஃபன்ராசி லாண்டில் நாம் பார்த்த டொல்பின் கண்காட்சி மிக நல்லது. இங்கு பார்த்தது என்னைக் கவரவில்லை. இங்கு 2 பார்வையாளர்களை அழைத்து டொல்பினைத் தொட, அதற்கு உணவாக சிறு மீனைக் கொடுக்க என்று விடுகிறார்கள். இது ஒரு மேலதிக வித்தியாசம் இங்கு. கடற்கரைக் காட்சி அழகு. மணலில் இருந்தும் டொல்பின் காட்சியைப் பார்க்கலாம். நாற்காலிகளும் உள்ளன. இவைகள் மகிழ்வாக இருந்தது. மழைக் காலங்களில் வார இறுதியில் மட்டும் இக் காட்சி நடைபெறுகிறது. கடற்கரை மணலில் இருந்து பார்த்ததும் அற்புதம்; மணல் கால்களில் ஒட்டியதும் மறக்க முடியாதவைகள். இவை பற்றிய ஏழு புகைப் படங்கள் இருப்பதால் இந்த அங்கத்தை இதோடு முடித்து                                                                                            

 ——-அடுத்த அங்கம் 6ல் தொடர்வோம்.——-

7. வெள்ளிக் குடைக் கம்பியோ!

 

 

வெள்ளிக் குடைக் கம்பியோ!

வான் உரசி மின்னல் ஒளி வீச,
வான் முரசு இடித்து மத்தளம் கொட்ட,
கோன் வரக் குடிமக்கள் ஒதுங்குவதாய்
வான் கொடையது வாரித் தருகிறது,
ஊன் உதறும் பேய் மழையது.
காண்! எத்தனை நாள் தூசியிது! சிச்சிச்சீ!
ஏன் துப்புரவாக்கவில்லை! அச்சச்சோ!
தானே பூமியைக் கழுவிடும் மழை.

மனிதக் கண்ணீராவியோ மழையாய்ப் பூமியில்!
முகில்களின் குடியுரிமை வானில் மறுப்பால்
முத்து முத்துக் கண்ணீர்த் துளிகளோ!
வானக்குடை திருத்துவோன் பொதியவிழ்ந்து
வழுகிவிழும் வெள்ளிக் கம்பிகளோ!
ஒழுகுதோ பெரும் அண்டாவால் கவிழ்ந்த நீர்!
விரிவான்  மணற் சல்லடையால் பூமியில்
சொரிகிறதோ மயைழகாய்ப் பூமியில்!

வெள்ளிக் கம்பி இணைப்பால் வானம்
அள்ளித் தரும் செய்தி என்ன!
சுள்ளி ஈர்க்குச்சி மழை பளபளத்துத்
துள்ளி எறிகணையாய் வீழ்கிறது சடசடத்து.
வெள்ளம் பெருகியது பூமியில் கலகலத்து,
புள்ளி வரைகள் அழிக்கிறது சலசலத்து.
அள்ளி ஒழிக்கிறது அசிங்கக் குப்பைகளை,
தள்ளித் தன்னோடு அணைத்தும் செல்கிறது.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-4-2006.

(இக் கவிதை ரி.ஆர்.ரி தமிழ் அலை, தமிழ் ஒலியிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும்  என் குரலில் ஒலிபரப்பானது.)

In Eluthu.com web site:-    http://eluthu.com/kavithai/55582.html

இதோடு தொடர்பான மழைக் கவிதை இன்னொன்று- அதன் இணைப்பு..https://kovaikkavi.wordpress.com/2011/11/05/16-%e0%ae%aa%e0%af%82%e0%ae%ae%e0%ae%b4%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/

Another rain poem:-     https://kovaikkavi.wordpress.com/2013/12/14/54-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

 

                               

                                

 

மேலும்

1. கும்மியடிப்போம்.

 

 

கும்மியடிப்போம். 

கும்மியடிப்போம் கும்மியடிப்போம்
குழந்தைகள் நாமும் கும்மியடிப்போம்.
கூடிக் கலந்து நவராத்திரியில்
கும்மியடித்து மகிழ்ந்திடுவோம்.      ( கும்மியடி….)

துர்க்கையம்மனைத் துதித்து நாமும்
துணிவு வீரம் கேட்டிடுவோம்.
துன்பம் தீரக் கும்மியடிப்போம்.
துணிவொடு நாமும் கும்மியடிப்போம்.  ( கும்மியடி…)

செல்வம் கேட்டு இலட்சுமி தாயை
செந்தாமரைத்தாயை வணங்கிடுவோம்.
செல்வம் பெற்று மகிழ்வாக என்றும்
செம்மையாய்  நாமும் கும்மியடிப்போம்.   ( கும்மியடி …)

சரசுவதி  தேவியை  எண்ணியொன்றாய்
சந்தோசமாய்க் கும்மி கொட்டிடுவோம்.
சகல கலையும் கல்வியோடெமக்கு
சரசுவதி தந்திடக் கும்மியடிப்போம்.  ( கும்மியடி…. )

 பா ஆக்கியவர் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
10-11-2007.

( 2007 நவராத்திரி விழாவிற்கு ஓகுஸ் குழந்தைகள் பாடி கும்மியடித்தனர்.  நெய்தல் .கொம  

இணையத்தளத்தில் பிரசுரமானது.

 

இலண்டன் தமிழ் வானொலியில் யேர்மனிய சகோதரி காயத்திரி. சிவநேசன் வானலையில் இசையமைத்துப் பாடினார் ).
 

 

                       

                                

                        

 

 

6. நினைவுச் சொர்க்கம்.

நினைவுச் சொர்க்கம்.

 

திகாலை துயில் நீங்க
புதிதாய் உதிர்ந்த மல்லிகைகள்
புதுக்காலை வணக்கம் தாங்கி
மதிப்புடன் ஒரு வரவேற்பு.
இரவில் உதிர்ந்த மல்லிகைகள்
பரவிக் கிடந்தது முற்றத்தில்.
பூவிரிந்த மணத்தால் மனதில்
பா விரிக்கும் பிரயத்தனம்.

 

உள்ளம் கொள்ளையிடும் மலர்கள்
மெள்ளக் கட்டளை போட்டது….
‘முதலில் என்னில் விழித்தாய்!
மிதிபடுமுன் என்னைச் சேகரிப்பாய்!’…
மெதுமை மெத்தை இதழ்கள்
புது உணர்வாய்க் கண்ணடிப்பு.
நாளின் புத்துணர்வுச் சிலிர்ப்பு
காலைக் கடன்கள் முடிப்பு.

மல்லிகை மலர்மாலை தொடுப்பு
மணக்க கூந்தலில் இணைப்பு.
மறுநாள் விரித்த கூந்தலில்
மருட்டும் மல்லிகையாள் சுகந்தம்.
வாசனைத் திரவியமின்றிக் கூந்தல்
வசீகர நறுமணம் ஏந்தும்.
வாடாத நினைவுச் சொர்க்கம்
வடமிட்டு இனிக்கும் வர்க்கம்.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்
3-9-2002.

( ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானவை –  எனது குரலில்)

In Eluthu.com web site :-     http://eluthu.com/kavithai/55434.html

                                         

 

2. காந்தியின் ஐப்பசி இரண்டு.

மேலும்

அனுபவம். அங்கம. 4

மேலும்

14. உறவற்ற சிகரம்……

 

 

 

உறவற்ற சிகரம்……

 

பிரமிக்கும் சிகரத்திலிருந்து  கீழ் நோக்கினால்
பிள்ளையார் எறும்பின் உருவென மனிதர்.
புரண்டொருவர் சிகரத்தால் கவிழ்ந்தால்
பிண்டம், உயிர் பிரிந்த உடல்.

சிகர உச்சியை மூடும் பனி
சிறகு விரிக்கும் குளிர்காற்றும் தனி.
பகர ஒரு தரு நிலைக்காது.
நுகர, பயிர் பச்சை இருக்காது.

நகரம், நாட்டில் உயரும் சில
சிகரம் தொடும் மனங்களை வண்டாய்
சிதைக்கும் கர்வப் பனிப் படலம்.
வதைக்கும் அலட்சியக் குளிர் வாடை.

உயரம் எட்டும் பல மனிதத்தின்
உறவு விலக, உணர்வு உலரும்.
உறவற்ற வாழ்வு வேப்பம் காயாகும்.
உறவற்ற உயர்வு வெறுமை, நிசப்தம்.

பகர முடியாத புகழின் பிரமிப்பு.
நிகரற்ற வெற்றிக் கொடிப் பரப்பு.
சிகரம் உறவின்றேல் ஒரு மகரமல்ல!
சிகர வெற்றிக் கொடி மட்டும் போதாது!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
20-2-2007.

( ஐ.ரி.ஆர் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும் ஒலிபரப்பானது.)

In Eluthu.com web site :-   http://eluthu.com/kavithai/55001.html

 

                  

அனுபவம். அங்கம். 3

 

சுற்றுலாப் பயணம் திகைப்புத் தருவதும், மனச்சித்திரவதை கொண்டதும் என்ற யேர்மனியச் சுற்றுலாவாசிகளின் கூற்றுப் போல நாம் ஒவ்வொரு இடங்களிலும் அனுபவித்தோம்.
நகைக் கடைகளில் மட்டும் நகைக் கடைக் கலாச்சாரப்படி, இந்தியர்கள், தமிழர்கள் மிக அன்பாக, பண்பாக நடந்த கொள்கின்றனர். ஆனால் மற்றைய கடைகளில் பலர் பெரும்பாலும் அன்பை, பண்பை மறந்து மிக அநாகரீகமாக, கடுமையாகவும் நடந்து கொண்டனர், வேண்டினால் வேண்டுங்கள் இல்லாவிட்டால் செல்லுங்கள் எனும் பாணியில். விலைகளும் அள்ளிப் போட்டது போலவே கூறினார்கள். பாதிக்குப் பாதி அதை வெட்டிப் பேசிப் பேரம் பேசினால் பொருள் வாங்க முடிகிறது. அன்பற்ற இந்த அநாகரீக முறையும், இந்தப் பேரம் பேசும் முறையும் எனக்குப் பிடிக்கவேயில்லை. வெறுப்பாக இருந்தது. சில கடைகளை விட்டு விலகியே சென்றும் விட்டோம். ‘ ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்’ என்று நான் அலுத்துக் கொள்ள, “”‘வாழ்க்கை அனுபவங்கள், நெருக்கடிகள் தான், வேறு என்ன?’ “”என்றார் என் கணவர். பொருட்களின் விலைகள் மிக அதிகமாகவே காணப்பட்டன சிங்கப்பூரில்.

10ம் திகதி கார்த்திகை – மாலை எமது வேலைகள் யாவும் முடிய இரவு 9.30-10.00 மணியிருக்கும் வீராசாமி தெருவினுடாக எமது வாடி வீட்டுக்கு வரும் வழியில் எதிர் கொண்ட நிகழ்வு மனதைத் தொட்டது. தெருவெல்லாம் எக்கச்சக்கமான சன நெரிசலாக, அதுவும் முழுவதும் ஆண் மக்களாக நின்றது எம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது.  எங்கெல்லாம் மக்கள் உட்கார முடியுமோ, மதிலில், சந்து பொந்துகளில் மக்கள் அமர்ந்தும், நின்றும் குவிந்து வழிந்தனர். எங்கோ தேர்த் திருவிழாவோ, கதாப்பிரசங்கமோ, அன்றி சினிமா பிரபலங்களின் வருகையாக இருக்குமோ! ஏதோ ஒன்று நடக்கிறது, என்னவென்று அறிய வேண்டுமெனும் ஆவல் எம்மை உந்தித் தள்ளியது.

இதில் நானொருத்தி தான் தெருவில் இருந்த ஒரு பெண். கணவரின் கரங்களை இறுகப் பற்றியபடி, ஒரு சிறு அச்சத்தடன் பாதையில் இடமுள்ள பகுதிகளினூடு புகுந்நு, நுளைந்து சென்றோம். ஏற்கெனவே தெருத் திருட்டு, நகைகள், கைப்பை கவனம் என்று தெரிந்தவர்கள் எச்சரித்தது நினைவுக்கும் வந்தது. என்ன தான் நடக்கிறது என்று அறியும் ஆவலில் தமிழ்க் குரல் வந்த திக்காகச் சென்று, ஒரு இளைஞனிடம் ‘நீர் தமிழ் பேசுவீரா?’  என்று ஆங்கிலத்தில் உறுதிப் படுத்தக் கேட்டோம். அவர் வெருண்டு கொண்டு திணறி மழுப்பினார். ‘ தமிழ் குரல் இந்தப் பகுதியால் வந்ததே அது தான் கேட்கிறோம் என்றோம்’ என்றேன் நான். உடனே சமாதானமடைந்த இளைஞன், ‘” ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு சிங்கப்பூரின் எல்லாப் பக்கத்திலும் சிதறியிருந்து வேலை செய்பவர்கள், தமது ஊராரை, நேசத்திற்கு உரியவர்களை, வேண்டியவர்களைச் சந்திக்கும் வாரத்தில் ஒரு நாளாம் இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை இது. அந்தந்த ஊரார் அவர்களுக்கெனக் கூடும் இடத்தில் சந்திப்பார்கள். உதாரணமாகப் பாண்டிச்சேரி மக்களென்றால்   அவர்கள் கூடும் இடத்தில் அவர்களைக் காணலாம்’ ” என்றார். ‘” நீர் மணமானவரா?'” என்றேன். அவ் வாலிபன் வெட்கப் பட்டு “‘இல்லை’ “என்றார். “‘முழுவதும் ஆண்களாகவே காணப்படுகிறீர்களே! சரி! ஆண்கள் நீங்கள் இப்படிச் சந்தித்துப் பேசி உங்கள் தாகங்களைத் தீர்க்கிறீர்களே, அப்படியானால் பெண்களின் நிலை என்ன?  அவர்கள் எங்கு சந்திப்பது?’ “என்றேன். ஒரு நமட்டுச் சிரிப்பைத் தான் பதிலாகத் தந்தார். இவர் ஒரு இந்தியத் தமிழ் மகன் தான்.

கோபதாபங்களுக்காகக் குழு நிலையில் தேடிச் சென்று அடிதடிகளும் நடப்பதுண்டு என்றார். பொலீசாரும் அங்கு தென்பட்டனர். லிட்டில் இந்தியா, தேக்கா, செரங்கூன் பகுதித் தெரு முழுவதும் இந்திய இளவட்டச் சனக் குவியலாகவே காணப்பட்டது. இது ஒரு விசித்திர அனுபவமாகவே இருந்தது. உணவகங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட வெறுமையாகியே விட்டது. எக்கச்சக்க வியாபாரம் இந்த ஞாயிறு நாளில் நடக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந் நிகழ்வு எம்மை உலுப்பிய நிகழ்வாகவே இருந்தது. அறைக்குப் போயும் இது பற்றியே நீண்ட நேரம் அலசினோம். இந்த உறவுத்  தாகம், உறவுத் தேடல், ஞாயிறு சந்திப்பு இவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாக இருப்பது வெள்ளிடை மலை.
 

இதையே இங்கு ஐரோப்பாவில் ஊடகங்களின் மூலம் நாம், செய்கிறோம் என்பது எமக்குப் புரிந்தது. எமது எண்ணங்கள், உணர்வுகள் ஊடகங்கள் மூலம் தான் வடிகிறது. பலர் இதன் மூலம் ஆறுதல் பெறுவதாகவும் வானலையில் கூறுகிறார்கள்.
நாம் தங்கியிருந்த  பெலிலோஸ் தெருவும், செரங்கூன் தெருவும் சந்திக்கும் மூலையில் வீரமாகாளி அம்மன்கோயில் இருந்தது. சகல நேரப் பூசைகளும் நடக்கின்றன. மக்களும் குவிநது வண்ணமே உள்ளனர். சிறிது தூரத்தில் ஸ்ரீ சிறீனிவாசப் பெருமாள் கோவிலும் இருக்கிறது. இவைகளை விட பல சிறு சிறு கோவில்களும் உண்டு.
எங்கள் உறவினர்கள் வந்து சேர்ந்ததால் நாங்கள் அனைவரும் சலேற்றா கில் என்னுமிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து எல்லோரும் ஒன்றாகத் தங்கும் எண்ணத்தில் மாறினோம். இது சிங்கப்பூரின் வட மேற்குப் பகுதியில் அமைந்ததாகும். சிங்கப்பூரின் வடகிழக்கு ஆரம்பப் பகுதியில் செரங்கூன் பகுதி உண்டு. சலேற்றா கில் வட மேற்கில் உள்ளது.

இதுவரை நெருக்கடி நிறைந்த கடைகளுடன் கூடிய வீடுகளை, கடை வீதிகளை, குப்பைகள், உடைசல்கள், நெரிவுகள் யாவற்றையும் கண்டோம். இப்போது தனித் தனி வீடு, காணி,  பூந்தோட்டங்கள்,  வீட்டிற்கு முன் ஒன்றிரண்டு வாகனங்கள் என கொழும்பு ஏழு என்றழைக்கும் சினமன் காடின், கறுவாக்காடு என்று கூறும் பகுதி போன்று மிக அழகாக இருந்தது.  4 படுக்கையறைகள், தனி சமையலறை என்று பெரிய வீடாக இருந்தது.

இவ்வளவு நாளும்  காலை முதல் மாலை வரை நடந்து நடந்து களைத்து வந்து சுடு தண்ணீரில் தான் குளித்து ‘அப்பாடா!’ என்று ஓய்வு கொண்டோம். இங்கு தான் முதன் முதலில் இந்தத் தடவை பச்சைத் தண்ணீரில் குளித்தேன். நீண்ட காலங்களின் பின் சில்லென்று குளிராகத் தான் முதன் முதலில் நீரை ஊற்ற இருந்தது. 12ம் திகதி மகள் இலண்டனில் இருந்து வந்தார். என் கணவர் சங்கி விமான நிலையத்திற்குச் சென்று மகளைக் கூட்டி வந்தார். ‘ நான் போகும் போது பேருந்தில் தான் போனேன். உன்னைக் கூட்டிப் போகாததிற்கு இப்போது மனம் வருந்துகிறேன். வழி நெடுக மிக அழகான காட்சிகள், நீயானால் மிகவும் ரசித்துப் பார்த்திருப்பாய் நான் மிக வருந்துகிறேன் ( ஐ ஆம் வெறி சொறி)’ என்றார். மகளுக்கும் எங்களுக்கும் சிங்கப்பூர் விஐயம் இது முதற் தடவையாகும்.

—அடுத்த அங்கத்தில் சந்திப்போம்—-

 

Previous Older Entries Next Newer Entries