10. வரையாத கோலங்கள்.


 

 

வரையாத கோலங்கள்.

 

நுரைச் சதங்கைகள் குலுங்க
தரையில் விசிறும் திரைக்கோலம்
அரைவட்ட அம்புலி பூரணமாகினால்
நரையிட்ட ஒளவையார் உள்ளே.
தரை தழுவும் தென்றல்,
ஊரைச் செழிப்பாக்கும் அருவியென,
சருகையிடும் இயற்கை வசந்தங்களை
வரைந்தது யார் உலகில்!

சிலந்தி வலையின் செப்பம்,
சிலம்பு ஒலியின் சத்தம்
சிங்காரப் பறவைகள் மொழி,
பொங்கும் பாசம், சத்தியம்,
தரையில் மானுட வாழ்வு,
கரையும் நிமிடங்கள், மனிதன்
உரைக்கும் வார்த்தைகளும் இனிதான
வரையாத கோலங்கள் தானோ!

சுதந்திரம் என்ற சிறப்பு,
தந்திரமான மனிதப் போக்கு,
சந்தர்ப்பவாதம், வாக்குறுதிகள்,
விதைக்குள் உறங்கும் தருவென்பவை
வரைந்திட்ட கோலங்களாகுமோ!
உரை நடை வரைகின்ற உயிராம்
நுரைக்கும் செந்தமிழ் மட்டும்
வரையாத கோலமாகக் கூடாது.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-6-2007.

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி,  இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

 

 

31. எண்கள்.

 

 

ண்ள். 

பூச்சியத்தில் தொட்ட எண்களின் நீட்டம்
இராச்சியம் ஆளும் வல்லமைக் கூட்டம்,
நீச்சலடிக்கிறது பூகோள வட்டத்தில்.
நேரமெனும் பன்னிரு எண்களின் ஆரம்
தீரமாய் பிரபஞ்சத்தைத் தன் கரத்துள்
தரமாய் அடக்குதல் அதிசயம், அற்புதம்.
வரமெனும் எண்,  அறிவு, மனிதவாழ்வில்
ஒரு கண்ணென்கிறார் பெருநாவலர் வள்ளுவர்.

நிரவும் வயதுப் பிரமாணமளக்கும் கோல்.
வரவு-செலவு, பிறப்பு-இறப்புத்
தரவு தரும் நிரந்தரப் படிகள்,
வரலாற்று ஆய்வின் மையக் கற்கள்.
விரலாற்றல் நுனியில் எண்களை அழுத்த
விபரமாய் எமது சரித்திரம் எழுத்தில்,
சி.பி.ஆர் இலக்கமென டென்மார்க்கின், மத்திய
ஆட்பதிவு இடாப்பு எண்களெனும் சூத்திரம்.

ண்டுமாதம்,  நாளெனும் கணக்குப்
பூண்டு,  இளமை முதுமை உருவை
எண்கள் எடுத்துக் காட்டும் அட்டவணை.
வாகனவேகம்,  உடற்பாரம்,  இதயத்துடிப்பு,
இரத்த அழுத்தம்,  கொழுப்பு,  சீனியளவெனப்                               
பல சுவடுகள் காட்டும் கண்ணாடி, எண்கள்.
வாழ்வில் முதலாம் எண் நிலையில்
வாழ்தல் பல்லோரின் தணியாத ஆசை.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
15-6-2008

http://www.muthukamalam.com/verse/p884.html

(இலண்டன் தமிழ் வானொலி,   ரி.ஆர்.ரி தமிழ்ஒலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

                           

9. கற்பனைத் தூரிகை வண்ணம்.

 

கற்பனைத் தூரிகை வண்ணம்.

 

வானத்தை ரசிப்பது தனி இன்பம்.
வாடிக்கை அன்று சின்ன மனதுக்கு.
வேடிக்கை இன்றும் என் மனதுக்கு.
விண் மீன்களை எண்ணித் திணறுவது,
விண் மீன்களில் பெரியது எது,
கண்ணருகே தெரிவது எதுவென
கண் மீன்கள் கருத்தாகக் கணக்கிடும்,
கழுத்தில் நோவு வரும் வரைக்கும்.

 னதில் என் கற்பனைத் தூரிகை.
மென் நீல வானம் திரை.
முதலில் கண்கள் தேடி ஓடும்,
பதமான பஞ்சு மேகத்தை நாடும்.
நிலாப்பெண் குளிக்கும் நீலத் தடாகம்.
நீந்திப் பொங்கும் சவர்க்கார நுரையும்,
முன்னேறி வரும் காற்று மெத்தைகள்.
நன்றாய் அமர்ந்த நாய்க்குட்டி அதன்மேல்.
 

நாய்க்குட்டி மாற அர்ச்சுனன் தேர்.
பாய்கின்ற குதிரையில் பிணைந்த தேர்
தேய்ந்து மறைய நீலத்திரை. – பின்னர்
நேர்த்தியான ஒரு சோடிப் பூனை.
வார்க்கும் கற்பனைக்கு இல்லை இணை.
கற்பனை வளர வளர பஞ்சுமேகம்
சொற்பமின்றிப் பெருக்கம் அமோகம்!

வான நீலம் மறைத்தது வெண்மேகம்.
வந்தது அங்கு ஒரு வட்டக்குளம்.
வளர்ந்து பெரிதாய் நீண்டது குளம்.
எழுந்தார் அங்கொரு தாடித் தாத்தா.
விழுந்தார் அந்த நீளக் குளத்தில்.
எழுந்தார் வாயு பகவான் வேகமாக.
கோலக் கற்பனைக்கு வந்தது முடிவு.
ஈழத்தில் வந்தது! என்ன இன்பமது!

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்

(11-02-2003 ரி.ஆர்.ரி தமிழ் அலையில்.
10-7-2006ல் இலண்டன் தமிழ் வானனொலியில் என்னால் வாசிக்கப்பட்டது. எனது 3வது நூலான ”உணர்வுப் பூக்களில்’ ‘  பக்கம் 53ல் இக் கவிதை இடம் பிடித்துள்ளது.)

another vaanam poem:-
https://kovaikkavi.wordpress.com/2010/10/24/124-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

                                  

5. பொங்கல்.

    

 

 

பொங்கல்.                                   

 

பொங்கல் பொங்கல் தைப்பொங்கல்
பொங்கும் ஆனந்தத் தைப் பொங்கல்.
சத்தோடு முந்திரிகை, பயறு கலந்து
சக்கரை, பால் ருசிக்கும் பொங்கல்

முற்றத்தில் மெழுகிக் கோலம் போட்டு
மூன்று கற்களில் பானை வைத்து
கரும்பு, தோரணம், கலகலப்பாய் அப்பாவும்
கலந்து கலக்கும் தைமாதப் பொங்கல்.

ள்ளிக்கு விடுமுறை பாலர் கூடுவோம்.
வண்ண ஆடை அணிந்து கொண்டு
கொள்ளை மகிழ்வில் உறவுகள் வீடுகள்
துள்ளித் துள்ளி  உலா வருவோம்.

வசியம் என்பது அன்றாட நிகழ்வாய்
ஆனந்த உலாவாக ஆலயம் செல்வோம்.
ஆசையாய்க் கூடி ஆடிப் பாடுவோம்.
ஆனந்தத் தையின் பொங்கலோ பொங்கல்.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-01-2008.

( லண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.
வார்ப்பு .கொம்,   தமிழ் தோட்டம் இணையத்தளத்திலும் பரசுரமானது. அதன் இணைப்பை தருகிறேன் இங்கு.)

http://www.vaarppu.com/view/1078/

http://tamilparks.50webs.com/tamilpoem/pongal_baby_song_vetha_langathilakam.html

 (ஓகுஸ் பொங்கல் கொண்டாட்டத்தின் போது இப்பாடலுக்கு ஓகுஸ் குழந்தைகள் சிலர் நடனம் ஆடினார்கள்.)

 

 

                                 

30. புலம்பெயர் மண்ணில் நம் பாதைகளும் பயணங்களும்.

மேலும்

29. புலம் பெயர் வாழ்வில் இளையோர் கலாச்சாரப் பாதிப்பு.

                                                                             

            புலம் பெயர் வாழ்வில் இளையோர் கலாச்சாரப் பாதிப்பு

   புது மொழி, புது ஆடை
புது சுவாத்தியம், புது உணவு
புது சூழல் புதிய கருத்துகள்
இது போதுமே இளையோர் பாதிப்பிற்கு!
அனுமதி பெற்று, மூத்தவரைச்சார்ந்து
அலுவல்கள் செய்தோம் அங்கு.
அகல விரி! உன் அறிவை!
அற்புதம்! சுய சிந்தனையானது இங்கு.

பொது இரவு நடனக் கேளிக்கை
மது, மாது இங்கு சர்வசுதந்திரம்.
இது தானிங்கு மாபெரும் மந்திரம்.
இது தவிர்ந்த வாழ்வு ஒரு தந்திரம்.
கிடைக்கும் வசதியைப் பலர்
உடைக்காது பயனாக்கிப் படித்து
தடையின்றிச் சாதனையில் உயர்ந்து
குடை விரிக்கிறார் பெயரோடு புகழாய்.

புதிய கருத்தோடு இளையவர்கள்.
ஆதிக் கருத்தோடு பெற்றவர்கள.
மோதி முரண்படும் தலைமுறைகள்.
மதிப்பு வேண்டிக் கவன ஈர்ப்புகள்.
கதியெனக் குழுக்கள் அமைத்து
சுதியாச் சுழன்று திரிந்து
விதியெனச் சாகசங்கள் செய்து
மதி கெட்டு அலைகிறார் சிலர்.

கோவணம், மரஆடை நூலாடையாகி
கோலங்கள் மாறி நவீன பாணிகளாக,
கூடி வாழ்ந்தவர்கள் பின் தாலியால் வேலியிட
மாடி வீட்டிலின்று  குகை வாழ் மனிதர்கள்.
படிப்படியாக மாற்றங்கள் சூழும்.
பாதிப்பும் வாழ்வியல் மாற்றமும் நீளும்.
பாதம் நிலாவில், அறிவாலும், ஆற்றலாலும்.
பாதிப்பில்லை அறிவுயரும் கலாச்சார மாற்றத்தால்.

 

கவியாக்கம்.
(நகுலபுத்ரி என்ற பெயரில் எழுதியது.)
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-2-2007.      

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில்13-2-2007ல் கவிதை பாடுவோம் நேரத்தில் சகோதரர் சில்வெஸ்ரர் வாசித்தார்.19-6-2008 யெர்மனிய மண் சஞ்சிகையிலும் வெளியான கவிதை.)

 

இளையொர் வாழ்வில் கலாச்சாரப் பாதிப்பு.

பெற்றவர் கலாச்சாரம்
பேச்சிலும் மூச்சிலுமானாலும்,
பச்சையாய்க் கண்பறிக்கிறது
புலம் பெயர் கலாச்சாரம்.
மூடப்பழக்கமோவென மயக்கமாய்
வாடித் தெரிவது எம் கலாச்சாரம்.
தேடி ஆராய்ந்தால் அங்கு
கூடிய நன்மைகள் புரியும்.

லக மாற்றத்தோடு நவீனமாய்
உருளும் புலம்பெயர் கலாச்சாரம்
உல்லாசமாய் அனைவரையும் தன்வசம்
இழுப்பது ஆச்சரியமில்லை.
இலையாடை அணிந்தவனின்று
இல்லையந்தக் கலாச்சாரத்தில்.
உலகமே மாறுகிறது நம்
வழமைகளும் பல மாறுகிறது.

லாச்சாரப் பாதிப்பென்பது மனதில்
கலப்பையால் உழுதிடும் நிலைதான்.
ஆழப்போகும் வேரான தமிழ், எம்
மூலமொழி – இன அடையாளம்.
காலம், இட மாற்றத்தோடு ஆகும்
கலாச்சாரப் பாதிப்பால் அழிய வேண்டாம்.
நிலாத்தொட்ட காலத்திலும் இளையவர்
சலாம் போடத் தமிழ் வளர்க்கட்டும்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-3-2007.

ரி.ஆர்.ரி தமிழ் அலையில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதையிது.

 

28. சுனாமியின் சுவடுகள்.

 

சுனாமியின் சுவடுகள்

 

ழிப்புயலென அழைக்காது வந்த சுனாமி
ஊழித் தாண்டவம் ஆடியது ஊழ்வினையோவென.
சமுத்திரராஐன் பெரும் மதிப்பிற்குரியவனின்
சமுத்திர இராசாங்கமேன் கணத்தில் கொடூரமானது!
சமூகத்து நெய்தல் நிலமேன் கரைந்துபோனது!
சுமுக நிலையாகி இச்சுமையென்று தீருவது?

ணவன், மனைவி, பெற்றோர் பிள்ளைகள்
கடல் காவெடுத்து நீந்திய உடல்கள்,
கன்று, காலிகள் சுவடின்றிக் கழுவியோடிய விதிகள்!
குர்ஆனின் மசூதி, அர்த்தமுடை இந்து ஆலயம்,
கர்த்தாயேசு ஆலயம், கருணை புத்தர் கோயிலும்
கழுவிக் கரைத்துக் கல்லாகக் காட்டிய தடங்கள்!

கோரமான தேசீயக் கவலையை இனங்கள்
வீரமாய்ச் சமாளித்து நிமிர்ந்திட வேண்டும்.
ஆரமாய் இணைந்துதவும் அவசர உதவிகள்
சாரமாய் மக்களிடம் சேர வேண்டும்.
அனாவசியச் சுனாமி தாரணவிற் புரண்டு
கனாக்களையழித்த தடங்கள் ஆற்றுமா சாதனைகள்!

வேற்று மனிதராயெமை எண்ணும் அரசு
சாற்ற வேண்டும் உதவி, அழிவுகளுக்கு.
கற்ற கல்வியால் மனிதர் ஓரினமென
சுற்றி உதவிகள் கிடைக்க வேண்டும்.
வெற்று மனங்களின் வேதனை தீர வேண்டும்.
முற்றாய்ச் சுனாமியின் சுவடழிய வேண்டும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(22-9-2006 ல் யேர்மனிய – மண் சஞ்சிகையிலும், 21-1-2005ல் ரி.ஆர். ரி தமிழ் ஒலி வானொலியிலும், இலண்டன் தமிழ் வானொலியிலும் வெளியான கவிதை. பிரித்தானிய தமிழ் உலகம் சஞ்சிகைக்கும் அனுப்பிய கவிதை.)

 

                                 

8. மீன் தொட்டி.

மேலும்

27. இதிகாசத்தில் ஓரிடம் பிடிக்க…

மேலும்

26. அன்னியம்.

 

அன்னியம்.

நிறுபடும் அன்பால் நிதானம் அன்னியம்.
இறுகிடும் முதுமையால் இளமை அன்னியம்.
அறுபடும் நூலால் பட்டம் அன்னியம்.
விறுவிறென அந்தரமாய் வீழும் ஓரிடம்.
சேறுபடும் ஆடையால் சுத்தம் அன்னியம்.
சேதப்படு முன் காத்தல் சுகாதாரம்.
பெறும் நற்பேறால் தோல்வி அன்னியம்.
பெறுதலும் பெருக்குதலும் ஓயாத ஊக்கம்.
 

ஊறுபடும் பேச்சால் உற்சாகம் அன்னியம்.
ஊனமாகும் ஊக்கம், மனம் வெறுப்பாகும்.
கீறுபடும் ஓவியத்தால் அழகு அன்னியம்.
கீர்த்தி பெற, கடும் முயற்சி அவசியம்.
கூறுபடும் குடும்பத்தால் ஆனந்தம் அன்னியம்.
கூடி மகிழ்தல் குறைவில்லா நன்மையாகும்.
நீறு பூசும் நெற்றியால் நாத்திகம் அன்னியம்.
நீளும் பக்தி மனதிற்கு நல்லுரமாகும்.

தூறிடும் மழையால் வெப்பம் அன்னியம்.
தூவானத்திலும் மனம் துள்ளிக் குதிக்கும்.
வேறுபடும் சங்கதியால் விளையும் வில்லங்கம்.
மாறுபடும் இலக்கத்தால் முகவரி அன்னியம்.
மீறுபடும் சட்டத்தால் ஒழுங்கு அன்னியம்.
மீகாமன் இல்லாத மரக்கலமாகும் வாழ்வு.
உறுதிபடும் உண்மையால் பொய் அன்னியம்.
உள்ளம் திறந்து பேசல் நன்னயம்.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
18-2-2007.

( ரி.ஆர்.ரி தமிழ் அலை, தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலி ஆகியவற்றில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                            

Previous Older Entries