அனுபவம். அங்கம். 9

எறும்புகள் சாரி சாரியாக அணிவகுத்தது போன்ற ஊர்வலக் காட்சியை முன்னரும் சென்ரொசா போய் வந்த அன்று மாலை நேரமும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கேள்வி எழுப்பியதாக எழுதினேன் அல்லவா! இப்போது ஆச்சரியத்தை அடக்க முடியாது  வாடகைக் கார் சாரதியிடம் கேட்டேவிட்டோம், ‘இது என்ன? ஏன் இத்தனை தொகை மோட்டார் சைக்கிள்கள்! ‘ என்று. ஆம் நாள்தோறும் 15 ஆயிரம் பேர்கள் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குப் போகிறார்களாம். காலையில் போய் மாலை வீடு திரும்பகிறார்களாம். இவர்களையே நாம் இரண்டு நாளும் கண்டு ஆச்சரியப்பட்டோம். இன்னொரு முக்கிய விடயம், ஒரு சிங்கப்பூர் டொலர் மலேசியாவில் இரண்டு றிங்கெட் பெறுமதியானது. இதனாலும் பலர் மலேசியாவில் வசித்துக் கொண்டு சிங்கப்பூரில் வேலை செய்கிறார்களாம்.
வார இறுதியிலும், அரச வங்கி விடுமுறைகட்கும் பல சிங்கப்புரார்கள் மலேசியாவிற்குப்  பொருட்கள் வாங்கவென்று வருகிறார்கள், முக்கியமாக பெண் இன்பத்திற்காகவும் ஆண்கள் வருகிறார்கள். தெரு நாடகங்களும் (ஸ்றீற் தியேட்டர்) மஜிக்கல் எண்ணெயும் (‘லவ் ஒயிலும்’ ) விற்கப்படுகின்றனவாம்.  ஜேபி பிரசித்தமான எல்லைப் பட்டினமாக உள்ளது.
‘கொம்பக்ட’ வாடிவீட்டின் 14வது மாடியில் இருந்து எமது யன்னலூடாக பார்க்கும் போது சிங்கப்பூரும், நாம் வந்த பாதையும் தெளிவாகத் தெரிந்தது, அற்புதமான காட்சியாக இருந்தது.   வந்த களைப்புத் தீர குளித்து விட்டு வெளியே கிளம்பினோம்.  ஜேபியில் நடக்கத் தொடங்கினோம். இரண்டு அடிக்கு ஒரு பணம் மாற்றும் இடம் (மணி எக்ஸ்சேஜ்) இருந்தது. ஒரு வேளை பெரிய பெரிய வாடி வீடுகள் அருகருகில் இருந்ததுவும்    ஒரு    காரணமாகவும்   இருந்திருக்கலாம், இந்த நெருக்கமான பணம் மாற்றும் வசதிக்கு.    நிமிடத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்கிறது, 3 நிமிடத்தில் பணத்தை மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். நாமும் சிங்கப்பூர் டொலர்களை மாற்றிக் கொண்டோம் நாங்கள் நடந்த 100 அடி தூரத்தினுள் 3 பேர் கண்கள் சிவந்த போதை முகத்துடன், கையோடு கையாக போதை வஸ்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். எனக்கு இது புதுக் காட்சியும், அவர்களது பார்வை திகிலையும் தந்தது. ஓரக் கண்களால் இவைகளைக் கவனித்து, நாம் டெனிஸ் மொழியில் எமக்குள் கதைத்தபடி நடந்தோம். ஓடி ஓடி உழைப்பது, எக்ஸ்சேஜ்ல் பணம் மாற்றி, உடல் அலுப்புத் தீரவென்று இதை அனுபவிப்பது சிலருக்கு வாடிக்கையாகவும் இருப்பது தெரிகிறது. உன்னிப்பாகக் கவனித்தபடி போகும் போது, தமிழ்க் கோவில் ஒன்று தெரிந்தது.

அது ஒரு பிள்ளையார் கோவில், அங்கு சென்று வணங்கி விட்டு ஒரு தமிழ் உணவகம் சென்று உணவருந்தினோம்.  ஓவ்வொரு தடவையும் மாற்றி மாற்றி உணவுகளைத் தெரிவு செய்தோம். பின்பு கடை வீதிகளைச் சுற்றினோம். சிங்கப்பூருடன் ஒப்பிடும் போது ஆடைகள் மிக மலிவாக இருந்தது. நடந்து சுற்றும் போது இனி போதும் என்று கால்கள் கெஞ்ச அறைக்கு வந்து துயில் கொண்டோம்.

அடுத்த நாள் 19ம் திகதி கோட்டா ரிங்கி எனும் நீர் வீழ்ச்சி பார்க்கப் புறப்பட்டோம். ஏற்கெனவே புத்தகம் வாசித்து இதைத் திட்டமிட்டிருந்தோம். 18ம் திகதி மாலை 18.30க்கு அறை பதிவு செய்திருந்தோம். இரவு இங்கு தங்கப் போவதில்லை யென்பதால் இரண்டாவது நாள் கணக்கிற்கு பணம் செலுத்தாமல் அறையை வெறுமை செய்து, எமது பெட்டிகளை வாடி வீட்டுப் பொருட்கள் வைக்கும் அறையில் வைத்து விட்டு, வாடகை வாகனம் ஒன்றில். கோட்டாரிங்கி நீர்வீழ்ச்சி காணப் புறப்பட்டோம். பேருந்து வசதி இருந்தும், பேருந்து நிலையம் தேடுவதில் நேரம் வீணாகிவிடும் என்பதால் 57கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லும்பொங் எனும் இடத்திற்கு வாடகை வண்டியில் சென்றோம். மீட்டர் போடாது பேரம் பேசி 50 றிங்கெட் பயணக் கட்டணம் என ஒப்புக் கொண்டு புறப்பட்டோம். வழி நெடுக பச்சைப் பசேலென பாம் மரத் தோப்பாகவே தென்பட்டன. இவைகள் அசப்பில் தென்னை மரச் சோலைகளாகவே தெரிந்தன. (இதைப் படத்தில் காணலாம்) வழியில் பெரிய மாரியம்மன் கோவில் ஒன்று தெரிந்தது. இப்படி இருப்பதாக வாசித்திருந்தோம்.  கோட்டாரிங்கி நகருக்குச் சென்று, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.

அங்கு ஒரு பாடசாலைக் குழு, ஆசிரியர்களுடன் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் உல்லாசமாகக் குளித்துக் கூடி மகிழ்ந்திருந்தனர். ‘இப்படித் தானே நானும் எனது வேலையிடத்துப் பிள்ளைகளோடு சுற்றுலா போவோம’  என்று கணவரோடு நினைவு கூர்ந்தேன். இவர்கள் தவிர சில இளவட்டங்கள் கும்மாளமாக நீந்தி மகிழ்ந்தனர். துப்பரவு மிகக் குறைவு. இலங்கையில் ‘தியலுமா’   நீர்வீழ்ச்சிச் சாரலை அருகில் ரசித்தது, ஒரு தென்னை மரமளவு உயரத்திலிருந்து நீர் விழுந்த அழகை அட்வான்ஸ் லெவல் படித்த போது ரசித்தது நினைவு வந்தது. இது ஒரு சிறிய நீர்வீழ்ச்சி. ஒரு சாதாரண வீட்டுக் கூரையளவு உயரத்திலிருந்து விழுகிறது. ‘இதுவா நீர் வீழ்ச்சி!’ என்று வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.   

நீர் மிகக் குளிராக இருந்தது. என் கணவர் கால் நனைக்கவே மறுத்தார். இவ்வளவு தூரம் வந்து சும்மா போவதா என்று நான் நீருள் இறங்கி காலை நனைத்து ரசித்தேன். அவ்வளவு குளிராக இருக்கவில்லை. இந்த நீர் இங்கிருந்து ஓடி கோட்டா ரிங்கி ஆறாகி மலேசிய தென் கிழக்கில் தென் சீனக் கடலில் விழுகிறது. மேற்கே மலாக்கா ஐலசந்தி உள்ளது. நாம் போனது மாரி காலம் என்பதால் சனக் கூட்டம் இல்லை.
(படத்தில் நாம் தங்கிய வாடிவீடு, ரிசப்சன் முன்னறை, நிர் வீழ்ச்சிப் படங்களைக் காண்கிறீர்கள்.)
—————–இனி அடுத்த அங்கம் 10ல் மிகுதியைப் பார்ப்போம்.———————-

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: