77. மனிதநேய வழி…

 

 

மனிதநேய வழி… 

வாழ்க்கைத் தொடர்வண்டிப் பயணத்தின்
நீள்கையில், இணைவு பிரிவின் இயல்போடு
நகை சிந்தும் வதனம், பகையற்ற மனம்
மிகை நம்பிக்கை, அன்புப் பொதியில் கவனம்.

சாதக எதிர்நோக்குப் பயணமிது
பாதகப் பள்ளங்களிங்கு எதிர்பாராதது.
மோதல்கள் மந்தைகளின் தரமானது.
வேதனைகள், மனிதமிங்கு நழுவுவது.

மனிதனாய்  வாழ முயன்றிடும் கொள்கையில்
மனிதனை மனிதன் மதிக்காத தொற்றுகள்,
மனிதநேய முரண்பாட்டுப் பற்றைகள்,
மனிதனாய் நிலைக்க நெருடும் முட்கற்றைகள்.

பண்பற்றவர் படியேறி உயர்வதும்
பண்புள்ளவர்  கீழ் நோக்கித் தாழ்வதும்
சுயநல வெள்ளச் சுழியின்  சுழலில்
மயக்கங்கள், அவலங்கள், மனிதனாய் வாழ.

புனிதமாய் வாழ எண்ணும் பெற்றியில்
இனிய காலடியில் இடறும் கற்களுள்
மனிதனாய் வாழ வழியினைக் காண வேண்டும்.
மனிதநேய வழியாயது சிறக்கவேண்டும்.

 

( பெற்றி – இயல்பு, தன்மை )
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-7-2007.

ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் 16-9-2007.
இலண்டன் தமிழ் வானொலியில் 16.9.2003.
இலண்டன் சுடரொழி சஞ்சிகையில் 16-9-2003
தமிழ் தோட்டம்  –  வெளியான கவிதை இது.

 

                    

 

15. மனிதனிடம் இல்லையோ இயற்கை நியதி!….

மனிதனிடம் இல்லையோ இயற்கை நியதி!…. 

ஆடைகள் உரித்து நிர்வாணமாய் சருகுகள் உதிர்த்த மரங்கள்.
மேடைகளிடா அலங்கார முருகு! அதுவும் வரங்கள்.
மூவாசை துறந்த மனங்களாக, முதிர் ஞானஒளி நிலையாக
முகவரி காட்டி முக மயக்கி முகிழும் இயற்கை.

கலையுளமிருந்தால் மரங்களை ரசிக்கலாம், அன்றேல் காத்திருக்கலாம்.
விலையற்ற காத்திருத்தலில் பூமி தேவியைப் போல
இலைதுளிர் காலவருகைக்கு, வலையென இலை விரிகைக்கு – தருக்கள்
இயற்கை நியதியில் வாழும் இவற்றை மறந்த மனிதர்களாக அல்ல.

பூமி தன்னைத் தானே சுற்றி பகலவனையும் சுற்றும் நியதி
புரளும் நிலையானால் சர்வநாசம் உலகினில்
மனைவி கணவனைச் சுற்ற, கணவன் மனைவியைச் சுற்றும்
பிணைவில் நியதி தவறுவதேன்! இணைவில் தவறு நிகழ்வதேன்!

செம்புலத்தில் பெய்த நீராக சேர்வதில்லை சிலர் அன்பினால்.
எண் புலத்தில் வல்லவனாம் மனிதனில் இல்லையோ மரத்தின் நியதி!
இலை துளிர் காலத்து இலக்கணம் கலைமிளிர் மனிதனிடம் இல்லையே!
இம் மனிதன் இயற்கையிலும் கீழ் மகன் தானோ?.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
25-5-2008.

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி,, இலண்டன் தமிழ் வானொலிகளின் கவிதை  நேரங்களில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.

http://www.vaarppu.com/view/1354/

ரி.ஆர்.ரி தமிழ் அலையில் 20-11-2001லும்
இலண்டன் தமிழ் வானொலியில் 30-11-2003லும் என்னால் வாசிக்கப் பட்டது.)

In Muthukamalam.com:-     http://www.muthukamalam.com/verse/p1410.html

 

                                      

76. குறிப்பான அனுபவமிது…..

 

குறிப்பான அனுபவமிது…..

 

(இ) லாவகமான இதயத்து
(இ) லயம் தவறாது நாளும்.
(இ) லப் டப் தாளத்துடன்
(இ) லாவண்ய வாழ்வாகும்.
(இ) லகானை இழுத்தாற் போல்
(இ) லயம் தவறியது.
(இ) லப்டப் தாளம்
லபக்கென்று நின்றது.

தேவலோகம் இல்லை.
தேவர்களும் இல்லை.
தேவாராதனையையும் நான்
தேடவுமில்லை எங்கும்.
ஆழ்ந்த தூக்கத்தால்
அமைதியோடு விழித்து
‘அட! தூங்கிவிட்டேனே’ என்றேன்.
‘ ஆமாம்! தூங்கிவிட்டாய்.’..

வெண்ணிற தேவதைகளும்
பசுமை தேவதைகளும்
பசிய புன்னகையால்
பொழிந்தனர் அன்பை.
விலா எலும்பில் மார்பில்
விண்ணென்று வலிக்கிறது.
விடாப்பிடியாய் இதயமழுத்தி
விழிக்க வைத்தார் மண்ணில்.

‘இதயம் துடிக்க மறந்ததா?’
‘நல்ல வேளை தப்பிவிட்டாய்’
‘நோகுதா? பூமிக்கு வந்திட்டாயே!
இல்லாவிடில் சங்கு தானே!
குளிர்ப்பெட்டியிலல்லவா பார்த்து
குமுறிக் குமுறி அழுவோம்’…
குறும் சிரிப்போடு கேட்கிறேன்.
குறிப்பான அனுபவமிது.

 

—————-வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.————————–
                2-3-2008.

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன்தமிழ் வானொலி கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam.com  :-   http://www.muthukamalam.com/verse/p1409.html

 

                                     

 

 

75. குடை.

குடை              

 

இடை குடையோவென
படை கொண்டு வந்து,
குடை விரித்துக் காதலாடி
நடை விரிக்கிறது நானிலத்து வாழ்வுக்கு.

வெப்பச் சாமரமிடும்
வெயில், வெகுமானமான
வெகுமாரியிலும் கவிந்து
வெளியேறப் பாதுகாக்கும்.

சின்னக் குழந்தைக்கு
வண்ணமய வடிவில்
என்னமாய் மகிழ
பின்னப்படும் தொழில்நுட்பம்.

நூலில் நடக்க
நிதானம் பலக்க
விதானமாகி
ஏதுவாகும் குடை.

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-5-2008.

http://www.vaarppu.com/padam_varikal.php?id=18

( இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                            

14. கோடை.

 

கோடை. 

 

கோடை டென்மார்க் குளிருக்குப்
பாடை கட்டும் காலநிலை.
பீடை மன அழுத்தத்திற்கு
கூடை மலர்களை இதயத்துள்
கோடையாய்க் கொட்டும் காலநிலை.
உடைப் பாரம் உதறிவிட்டு
உல்லாசத்தை ஒரு துளியும்
உதிர்க்காது ரசிக்கும் காலநிலை.

மூன்று மாதக் கோடையை
முழுதாய் அனுபவிக்கும் நாடிது.
ஆடையால் மூடி உடலை
அடைகாத்த உம்மணாமூஞ்சிகள்
தடையின்றி உடலை, வெய்யிலில்
கடை பரப்பும் கோடையிங்கு.
நடையில் கும்மாளம் நளின
உடையில் சிக்கனக் கோடையிங்கு.

பாளம் பாளமாய்ப் பூமி
பிளந்து, குளம் வற்றி,
தெருவில் தார் உருகி
கருகருவெனப் பாதணியில் ஒட்ட,
பெரும் தாகம், வெப்பம்,,
குருமணலாய் வியர்வைப்
பரு சிவந்த கோடையது,
ஒரு காலமெம் தாய் நிலக்கோடை

 

பா ஆக்கம்.  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
11-7 2008.

http://www.vaarppu.com/padam_varikal.php?id=24

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன்தமிழ் வானொலிக் கவிதை நேரங்களில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

 

                               

74. காற்றுவழி காதினிலே…..

காற்றுவழி காதினிலே…..      

தலையணையை அணைத்துக் காதுவழியூடு
விலையற்ற, திருவுடை, தித்திக்கும் கனித் தமிழ்
நிலையாகக் காற்றலையில் கொய்ய வேண்டும்.
இலை போட்டுப் பரிமாறுவதாய் பகிர்ந்தறிவதில்

குலையாத அறிவு, மதிப்பு பெருகும்.
குலைந்திடும் திருவில்லாத் தமிழ்க் காயாக
கனத்த வக்கிரங்கள் காற்றலையில் கலந்து
காதை நிறைத்தல் பெரும் சித்திரவதை.

காதிற்கினிய நிகழ்வுகள் மட்டுமே கேட்பதைக்
காற்றலையில் ஒலியாக்கச் சட்டம் தேவை.
தாசனாகி, மொழியைத் தரமாகக் கேட்டு
நேசமாகத் தலைமுறைகள் அடியெடுக்க,

மாசில்லாத் தன்னம்பிக்கையால், ஆளுமை பெற
மகத்துவத் தேடலின் அரங்கேற்றம் ஊடகமே.
தேசமெங்கும் மதிப்படைய, வாசமுடை கனிமொழி,
நீசமின்றிப் பாசமுடன் பாயட்டும் வானலையில்.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-5-2008.

 (இலணடன தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி சானொலியிலும் கவிதை நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                                

6. காத்திருக்கும் தோணிகள்.

காத்திருக்கும் தோணிகள்.

பாத்திரமும் பசித்த வயிறும் காய
ஆத்திரமுற்ற அரசின் அவசரகால நிலையால்
நேத்திரம் சோர மீனவர் கரையிலே,
காத்திருக்கும் தோணிகள் மீன் பிடிக்கவென.

உயிருக்கும் வாழ்வுக்கும் உத்தரவாதமின்றி
உற்றம் சுற்றம் பார்க்காது மக்கள்
ஊரை, நாட்டை விட்டு வெளியேற
உதவும் குழுக்களுடன் காத்திருக்கும் தோணிகள்.

களுகங்கை பெரு மழையால் பெருகியது.
கடலாகப் பாதை, தோணியில் பயணம்.
காலையும் மாலையும் தேயிலைக் கொழுந்துகளை
காத்திருந்த தோணிகளில் தொழிற்சாலைக்கு ஏற்றினர்.

கழுத்துறை மாவட்ட கொக்கேனைத் தோட்டத்தில்
கணக்கற்று வெள்ளம் பெருகும் வேளையில்
காலையும் மாலையும் தோணிகளில் நாமும்
காஷ்மீரம் போல் சுற்றுலா, காத்திருந்த தோணிகளில்.

13-6-2008.

in   vaarppu.com

( இலண்டன் தமிழ் வானொலியில், ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் கவிதை பாடும் நேரத்தில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

             

73. எல்லைகளற்ற சுதந்திரப்பாதை.

 

 

எல்லைகளற்ற சுதந்திரப்பாதை

 

தமிழெனும் நாகரீகப் போர்வை போர்த்தி
தந்திரமாய் நடமாடினாலும், உள்ளே தீயாக
அமிழ்ந்துள்ள பொறாமையின் குத்தகைக்காரி நீ!
குமிழியிடும் உன் மன விகாரங்கள் அமைதியைக்
குடைசாய்த்து, பொறாமைப் பாலமீதில்
தடையின்றிக் கருகும் விட்டில் பூச்சியாய்
நடையெடுக்கிறது பிரியத்தை முட்டித் தள்ளி.
படையெடுக்கிறது போட்டியெனும் சுவாசம்.

கவிதை இராக்கதத்தனத்தில் பாமாலிகையாவதில்லை.
கவிதையெனும் வரம் முகிலிடை ஒளிர் நிலவு.
பவித்திர அனுபவ யதார்த்தப் பிணைவிலும்
பாவிடும் கற்பனைச் சன்னலூடாகவும்
பாவிதை ஆக்குகிறது எனது சுதந்திரப் பாதை.
தாவிடும் சாத்தான், முடி பற்றியிழுத்து
ஏவிடும் போட்டியில் எதிராக அல்ல.
மேவிடும் தென்றலையும் அணைத்துப் பாடுவேன்.

 

பா ஆக்கம்.  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்.
23-5-2008.

( இலண்டன் தமிழ் வானொலியில் கவிதை நேரம் என் குரலில்)

                         

72. உரிமைகள்.

உரிமைகள். 

விரிந்த உலகில் வழிவழியாக
உரிமைகள் தொடர்வது இனிமை பெருமை.
உரித்துடன் தானாகவும் வரும் உரிமை,
வரிந்து கட்டிக் கொண்டும் பெறப்படும்.
உரிமைகள் நெரிபட்டு அழிவதுமுண்டு.
உரிமையின் உரித்தாளர் ஊமையாவதால்
உரிமைகள் தானாக அழிவதும் இயற்கை.
அரிய எம்முரிமைகள் தாயகத்தில் சரிந்துள்ளது.

உரித்துடை சிறுபான்மைத் தமிழருக்கு
உரிமைகள் காலாதி காலம் மறுக்கப்பட்டது.
நரித்தன அரச ஒடுக்கு முறைகளால்
காரிருளாய்க் குவிகிறது துன்ப மேகங்கள்.
பேரினவாதம் பேயாட்டம் ஆடுகிறது.
சாம, பேத, தான தண்டமாக
சனநாயகம், அகிம்சை வழி முடிந்து
சமர் எனும் தண்டம் நடக்கிறது.

ஓரினம் தன்னை ஆள நினைப்பது உரிமை.
வேரினை அழித்து இனத்தை ஒடுக்குகிறது.
ஊரினை அழித்து உரிமை நசுக்குகிறது.
பேரினவாதத்தின் பேயாட்டம் தான்.
சமாதான காண்டம், தூது காண்டம்,
அமைதி காண்டம் இன்று ஒரு
போர்க் காண்டமாகி உரிமைக்கான
போராட்டமாகிறது, வாரோட்டமாகிடுமோ?

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
28-4-2008.

(6-12-2007 –ஐரிஆர் வானொலியில்,
பின்னர்  ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில்,
இலண்டன் தமிழ் வானொலியிலும் கவிதை நேரங்களில் என்னால் வாசிக்கப்பட்டது.

http://www.vaarppu.com/view/1661/)

 

                    

 

5. என் தேசமே!

 

என் தேசமே! 

 

அருமைச் சுவாத்தியத்தில் விடியும்
பெருமை நாட்களை நான்
தரிசிக்க முடியாத நிலைமை.
அருவருப்பான குண்டுச் சத்தம்
நாராசமான காலணிச் சத்தம்
மிருக குணமுடை போர்வீரர்களுடன்
வெருவும் என்னுறவு மக்கள்.

நடுக்கும் குளிரில் இங்கு காத்திருக்கிறோம்.
உடுத்துப் புரண்ட மண்ணில் நாம்
உறவாட, சந்திர ஒளி என்னில்
உயிரான தென்னோலைகளின் இடையால்
ஊடுருவ, பல வேளைகளில் நாமிங்கு
ஊசிக் குளிரினால் பூட்டிய கதவுகள்.

தேசமே கண்ணி வெடியால்
குண்டுகளால் களைத்திருக்கும் வேளையில்
எனது தேசத்தில், எனது இடம்
என்னை அரவணைக்குமா, என் மனதைத் தவிர?
என்று விடியும் தேச உறவுக்கு?
எந்த அதிசயம் நிகழும் அந்த உறவுக்கு?
 

4-7-2006

தமிழ்நாதம் – 4-7-2006.
இனிய நந்தவனம் – 9-7-2008 ல்.

(ரி.ஆர்.ரி வானொலி, இலண்டன்தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

இதே தலைப்பில் ஒரு கவிதை இரண்டாவது இணையத்தில். இதன் இணைப்பு இதோ….

https://wordpress.com/block-editor/post/kovaikkothai.wordpress.com/5246

 

 

                               

 

Previous Older Entries Next Newer Entries