134. மதங்களும் மனித நல்லிணக்கங்களும்.

 

 

மதங்களும் மனித நல்லிணக்கங்களும்.

 

ஒன்றே மதம், ஒருவனே தேவன்
என்று வாழ்வது இனிய இணக்கம்.
மனிதனோடு மனிதனுக்கு இல்லை இணக்கம்
மனிதன் ஆக்கிய மதங்களாலும் பிணக்கம்.
      தொன்றுதொட்டுப் பல மதங்களின் வணக்கம்
      நின்று உலவி கெடுத்தது நல்லிணக்கம்.
      மன அமைதி தரும் மத சிந்தனையின்று
      மன நிம்மதி குலைக்கும் போதனையாயிற்று.
தான் சார்ந்த மதம் உயர்வென்று
வீண் போராட்டம் ஒருவருக்குள் ஒருவர்.
வன்முறை, கொலை, குழுச் சண்டை
வலையெனப் படர்கிறது முழு உலகில்.
      கட்டுப்பாடு ஒழுக்கம் சமூகத்தில் நிலவ
      நட்டுக் கொண்டனர் மனதில் இறைபயத்தை.
      விடடுவிலகியது இறை பயம் மனதால்;.
      காட்டுத் தீயாகிறது காசினியில் பிணக்கு.
மத தீவிரவாதம் பலர் மானுடவேதம்.
பேதம், போதனை, வாதப் பிரதிவாதமாக
மதம் மனித நல்லிணக்கத்தின் எதிர்க் கணக்காகவே
கதம் தரும் செயல்கள் நிலவுகிறது.

 

பா ஆக்கம்   வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
21-11-2006

 

                                   

Advertisements

133. மன்னராலும் கரையிடமுடியாத……

 

 

மன்னராலும் கரையிடமுடியாத……

 

மனம் நெகிழ்ந்த போதும்,
மனம் மகிழ்ந்த போதும்,
மனம் குலைந்த போதும்,
மனம் அனாதரவான போதும்,
மனம் கனத்த போதும்
மணித் துளியாகத் துளிர்க்கும்.
மனம் பின்னர் இலேசாகும்.
மாய மந்திரமானதும் கண்ணீர்.

வல்லின மனதையும் கரைக்கும்.
நல்லின மனதையும் சாய்க்கும்.
விழியின் கரையுடைத்து, சமயத்தில்
வழியும் வெண்படலம் உருகி
வழியும் உயர் பனித்துளி.
விழிச்சிப்பி விரிந்து கணத்தில்
வழியும் முத்துகள் கண்ணீர்.

கண்களில் பளபளக்கும் அபிசேகக்
கனகதுளி, வெந்நீர் திரையிட்டால்
மன்னராலும் கரையிட முடியாது.
தேசியச் சாரல் கண்ணீர். – சமயத்தில்
தந்திர உபாயக் கருவி.
தூசி விழுந்தாலும் இது ஓர்
ஆசி பெற்ற பொது நீர்
அரிய உயிரை அரிக்கும் நீர்.

உப்புக் கரிக்கும் கண்ணீர்.
உழைப்பாளி, பணக்காரன், ஏழை
இந்து, கிறிஸ்து, இஸ்லாம்
கிறுக்கன் மேதையென எண்ணாதது.
சம்பந்தன் கண்ணீருக்குப் பாலமுதை
சர்வேசுவரி ஊட்டினாள்.
வானத்துக் கண்ணீர் மழையில்
வளமாகிறது பூவுலகு.

வேப்பமரத்துக் கண்ணீர்
அப்புதலுக்கு ஒரு பிசின்.
இறப்பர் மரத்துக் கண்ணீரில்
இராச்சியப் பொருளாதாரம் உயர்வு.
மனிதக் கண்ணீரின் சாதனையன்றி
மரத்துக் கண்ணீரும் உயர்வுதான்.
கண்ணீர் வடிக்கும் துன்பத்தால்
கட்டுடலே தளர்கிறான் மனிதன்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ், டென்மார்க்.
19-10-2006.

( ரி.ஆர்.ரி தமிழ் அலை, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.
வார்ப்பு இணையத் தளத்திலும் வெளியானது.)

http://www.vaarppu.com/view/587/

 

 

                            

132. ஆடி வந்த வேளை….

 

ஆடி வந்த வேளை….

 

கவிபாடிக் குறளாடிய காதலி
கருத்தாடி உறவாடினாள்.
தமிழாடிக் களவாடிய நெஞ்சு
கூத்தாடியது, களிப்புச் சாரலில்.
காத்தாடியானது அன்னநடையாக
அவளாடி வந்த போது.

முதலடி எடுத்த எம்
முத்துக் குழுந்தைகள் இருவர்
சித்திரத் தேரான குறுநடையில்
கோடி மலர்கள் பூத்துக்
கும்மியடித்தது நெஞ்சம், அவர்கள்
ஆடி வந்த வேளை

மந்த மாருதப் புன்னகை
சிந்தி மகிழும் மாதம்.
கந்தன் கதிர்காமத்தில் திருமண
பந்தம் இணைந்த இன்பம்
வந்து தொடரும் மாதம்
இந்த ஆடி வந்த வேளை.

 

பா ஆக்கம்   வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,   டென்மார்க்.
18-7-2006

(இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                               

131. கனவு.

கனவு.       

 

தரை மீது மனிதக் கனவு மேடை
உரையில்லாக் காட்சிக் கடை.
திரை மூடிய நாடக மேடை.
நரையின்றியும் வளரும் கொடை,
அரைகுறையிலும் சுருங்கும் கொடை.
கரையில்லாக் கனவு ஓடையில்
நுரைக்கும் பயப்பிராந்தி வாடை.
விரைந்த இன்பமும் பலருக்கு விடை.

கனவு ஓர் இலவசச் சுவை.
மனக் கடல் ஆழக் குமிழிகளிவை.
கனவில் வித்திடும் முளைகள்
நனவாகியும் கனியும் விளைவுகள்.
கனவு மாயா உலகத்தில்
மனதின் நினைப்பும், நினையாததும்
வனப்புச் சிறகு விரிக்கும்.
கனத்த எண்ணங்களும் பெருக்கும்.
 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-10-2006

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                               

130. இணைவாக்கமற்ற நிலை.

 

இணைவாக்கமற்ற நிலை.

 

நெற்றிக் கண்ணைத் திறந்தாலும்
குற்றம் குற்றம் தான்.
ஏற்றி, எறிந்து வாய்வீசல்
கற்ற புத்தியின் செயலல்ல.

சட்டம், பட்டம் ஏதுமின்றி
மட்டம் தட்டி ஆளும்
ஹிட்லர் மனப்பாங்கு, அன்று
மட்டுமல்ல இன்றும் இங்கு.

இணைவாக்கம் மேற்கில் என்றால்
இந்த நிலை மாறும். நம்
இனத்தோடு வாழ்வு என்றால்
இந்நிலை என்றும் மாறாது.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
17-12-2006

(பதிவுகள் இணையத்தளத்தில் வெளியானது.
இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.geotamil.com/pathivukal/poem_vetha_jan2007.htm

 

                                 

129. அடுத்த தலைமுறை நோக்கி…..

 

அடுத்த தலைமுறை நோக்கி…..
 

அடுத்த தலைமுறை நோக்கிய பாதையில்
தொடுத்த மணிகளான பிள்ளைகள் தமிழில்.
நெடுத்த பாதை அடியிட்டதும் வராது.
படுத்த பாறை உடைக்க வேண்டும்.
நெடுத்த பற்றை வெட்ட வேண்டும்.
எடுத்த ஆயுதத்தின் உறுதி, பாவனை
கொடுத்த உழைப்பில் தொழிலாளி பங்கும்
கொடுத்திடும் ஒரு வெற்றிப் பாதை.

 

உத்தம மனிதர் பலர் உழைத்தாலும்
சத்தியமான உழைப்பெனும் பெயரை
அத்திவாரமின்றி அமையும் கட்டிடம்
மொத்தமாகத் தராது என்பது திட்டம்.
அடுத்த தலைமுறை நோக்கிய பயணம்
ஆடம்பரமாய், சர்வதேச மயமாய், சுயமாய்
அவரவர் திறமையின் அடிப்படை விரிவில்
அடி பெயர்ந்திடும் வேகமாய், விவேகமாய்

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ்,  டென்மார்க்.
11-0-2006.

( இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                             

7. பெண் மொழிகள்.

 

பெண் மொழிகள்.

 

மறைவுறுப்புகள் பெயர் எழுதி, அதில்
    நிறையும் உணர்வு, செயற்பாடு எழுதி,
மறைவின்றிப் பச்சை பச்சையாகப் பலர்,
    இறைக்கிறார் கவிதைகள், இது விடுதலையாம்.
இலையாடைப் பிறப்பு, நிர்வாண நிலையருக,
    தலையெடுப்பு நாகரீகம் பல உயர்படிகளாக.
அலைபுரண்டது மதிப்பு மரியாதையென
    வலை விரித்தது நாகரீக உறவாடல்கள்.
          
மனிதம் நாகரீக உச்சம் கண்டதென்று
    மடங்கி விழுந்ததோ இன்று தொப்பென்று!
ஆதியில் பேசினோமே பச்சை பச்சையாக,
    நீதியில்லையாம் அதை மூடிமறைப்பது!
ஆடையெதற்கு இன்று எமக்கு அங்கத்திலே
    ஆதியில் திரிந்தோமே நிர்வாணமாயென்று; ,
வாதிக்கமாட்டாரோ அடுத்த வாரிசுகள்?
    போதிக்கும் வழியோ இப் ” பெண் மொழிகள். ”
         
புல்லை, புவியை, புலர்காலை அழகென்று
    சொல்லை உழுத கவியுலகில் ” பெண் மொழி ”
முல்லை மணம் வீசுமோ! கல்லையாகுமோ!
    எல்லையின்றி எங்கு போய் முடியுமோ?
பெண்களின் கவிதையானால் இன்று சிறு
    பின்வாங்கல் அதில் மேய்ந்திட, ஐயகோ!
பெண் மொழிகளாற் தலை சுற்றுகிறது.
    என்ன இது! கவியுலகம் எங்கே போகிறது!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்
2-6-2006.

(வார்ப்பு இணையத் தளத்தில் வெளியானது.)

 

 

                                    
 

 

Previous Older Entries