21. இலண்டன் தமிழ் வானொலி,

  

இலண்டன் தமிழ் வானொலி,

 

புலத்தில் பூத்தது எழுத்தில் முதலது.
பலத்தில் உறுதியாய் உயர்வு கொள்ளுது.
வலத்தில் உலகின் கண்களைக் கவருது.
தலத்தில் இலண்டன் தமிழ் வானின் பிறப்பது.

பூக்கள் விடும் பட்டம் அது.
பூரித்துப் பறக்கும் தமிழ் வண்ணமது.
புன்னகையில் நவஅகவையில் உவகையது.
ஏன்னாளும் மலரட்டும் உயர்வினால் அது.

சின்னஞ் சிறுசுகளின் சீரான வார்த்தையது.
பென்னம் பெரிய சாதனையின் சாவியது.
தன்னம் தனியாக அல்ல கூட்டிணைவது.
இன்னும் வளரட்டும். இணையின்றி உயரட்டும்.

வாழ்க ஓடி விளையாடு பாப்பா!
வாழ்க முதல் ஓடியோக் கலையகம்!
வாழ்க இலண்டன் தமிழ் வானொலி!
வாழ்க நேயர்கள்! கூட்டுறவு வளர்க!.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-6-06.

(வானலையில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

வேறு

பத்தாவது ஆண்டு இலண்டன் ரைம் வானொலி
வாழ்க! பல்லாண்டு நீடு!

பத்து ஒன்பது
நித்தமும் நினைவில்
ஆரம்பம் சாரமாய்
ஆரமாய் நினைவுகள்.
உத்தம சிறப்புடன்
பத்தோடு நூறாக
முத்தாக ஒளிர்க!
மொத்தமான எம்
சித்தமினிக்கும் வாழ்த்துகள்.
வாழ்க! பல்லாண்டு நீடு!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-6-2016

 

                      

3. நான் படித்ததில் ரசித்தது.

நான் படித்ததில் ரசித்தது.

இலங்கைத் தீவுக்கு எத்தனை பெயர்கள்!

எழுத்தாளர் க. குணராசாவின் யாழ்ப்பாண அரச பரம்பரை எனும் புத்தகம் வாசித்த போது நல்ல தகவலாக இருந்தவையை இங்கு தொகுத்து தருகிறேன்.

எழுத்தாளருக்கு நன்றி.

 

இலங்கை,… ஈழம், …தமிழ்ஈழம். …பிரச்சனை, …பயங்கரவாதம்…. கைது…. என்று எத்தனை…. எத்தனை… இன்று.    ஆனால்…..அன்று

இலங்கையெனும் தீவிற்கு இலங்காபுரி, ஈழம் என்று பெயர் ஆதிகாலம் தொட்டு வழங்கி வந்ததாம். அதனாலேயே லங்கா, இலங்கை என்ற பெயர் தொடர்ந்து வந்துள்ளதாம்.

இராமாயண உத்தர காண்டத்தில் இலங்காபுரி என்று குறிப்பிடப் பட்டுள்ளதாம். மேலைத் தேயத்தார் இலங்கை வந்த போது சைலன்,( Zeilan) சையிலன்( Sailan )அவை மாறுபட்டு சிலோன்(Ceylon) என்றும் பெயர் வந்ததாம்.

பட்டினப் பாலை எனும் நூலில் ‘ ஈழத்துணவும்’ என்ற வரி வருகிறதாம். மேலும் தமிழ் இலக்கியங்கள், பழைய கல்வெட்டுகள், புராதன காசுகள் ஈழம் என்ற பெயர் இலங்கைக்குப் பாவிக்கப் பட்டதென உறுதிப் படுத்துகின்றன.

திருப்பரங்குன்றப் பிராமிக் கல்வெட்டிலும் ‘ஈழக் குடும்பிகன்’  என்பவன் பணி பற்றிய வரி வருகிறது. பாண்டியக் கல்வெட்டு ஒன்றிலும் ஈழம் பற்றிய தகவலுள்ளது.

இலங்கையில் அனுராதபுரத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் ஈழக்காசு பற்றிக் குறிப்புள்ளதாம். இந்த ஈழக்காசுகள் தான் சிங்கள மன்னர் பயன் படுத்திய சுகவனுக் காசுகள் எனக் கருதுவர்களாம்.

ஈழம் என்றால் – உலோகக் கட்டிகள், பொன் எனப் பல அர்த்தப்படுமாம்.
ஆதி கால இயக்கரும், நாகரும் ‘எலு’ என்ற இக்காலத்தில் பிழையாக வழங்கப்படும் ‘ஈழு’ என்ற நிறைவில்லாத மொழியை பேசி வந்தனராம். அதனாலேயே ‘ஈழம்’ – ‘ஈழமண்டலம்’  என்று

இலங்கைக்குப் பெயர் வந்ததாம்.
‘ஈழம்,’  ‘சீழம்’  என மாறி ‘சிகழம்’ என்று வந்ததாம்.
‘சீழம்’   என்பதிலிருந்து ‘சீழம்தீப்’ – ‘சேரண்டிப்’ என்ற அரபுப் பெயர்களும், ‘சிலாங்,’ ‘சிலோன்’ என்ற மேற்கு நாட்டவரிட்ட பெயர்களும் வந்ததாம்.
ஈழம் என்பது மாறுபட்டு  ‘சிறீ’  என்ற சொல்லுடன் சேர்ந்து ‘சீகள’ என்ற பாளி வடிவமாகவும் ‘சீம்கள’ என்ற வடமொழி வடிவமாகவும் வந்தது எனப்படுகிறது.
ஆதி இலங்கை வடபகுதி நாகதீபம் என்றும், தென்பகுதி தம்பண்ணை அல்லது தாமிரபரணி என விளங்கியதாம்.
 

மேலைத்தேய கீழைத்தேய அறிஞர்களால் தாமிரபர்ணி என்று இலங்கைத் தீவுப் பெயர் குறிப்பிடப்பட்டு வந்தது.

அருவியாறு கதம்பநதி என்றும், களனி கங்கை கல்யாணி நதி என்றும் குறிப்பிடப்பட்டது.
பொதுவாக இலங்கைத் தென்பகுதி தம்பண்ணை, அல்லதுதாமிரபரணி என்று அழைக்கப்பட்டது. கிரேக்க ரோம வர்த்தகக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நுழைந்த போது காற்று நீரோட்ட வீச்சுகளால் கதம்பநதி (அருவியாறு) கல்யாணி நதிக்கு (களனி கங்கை)இடைப்பட்ட பகுதி தாமிரபரணி மேற்குக் கரை நோக்கியதாக இருந்தது.  இதனால் இந்தத் தீவையே பொதுவாகத் தாமிரபரணி என்று கூறி அதனை தேசப் படங்களிலும் குறித்துள்ளனர்.

கி.மு 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏரோதோஸ்தீனிஸ், குளோடியஸ் தொலமி என்ற இரண்டு வானவியல் பூமி சாத்திர நிபுணர்கள் அக்கால தேசப்படங்களில் இலங்கையை ‘தப்ரோபேன்’ – ‘தப்ரபேண்’ எனவும் குறித்துள்ளனர்.

இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் நூலிலும் தாமிரபரணி எனும் சமஸ்கிருத வார்த்தையை ‘தம்பபன்ன’ என்று பாளி மொழியில் குறிப்பிடப்படுகிறது.

    

இந்திய தமிழ் நாட்டுத் தாமிரபர்ணி நதி திருநெல்வேலி மாவட்டத்தில் பாய்கிறது. மேற்குக் கரை மலையில் உற்பத்தியாகும் இந்நதி ஆதிச்ச நல்லூர் ஊடாக பாய்ந்து மன்னார் குடா இந்து சமுத்திரத்தில் கலக்கிறது. ஆற்றின் கிழக்கே நேராக இலங்கைத் தீவில் கொணா நதி (காலஓயா) அமைந்துள்ளது. கதம்ப நதி (அருவியாறு) கொணாநதிக்கு (காலஓயா) இடைப்பட்ட பிரதேசமே தாமிரபர்ணி என அடையாளம் காணப்பட்டது. திருநெல்வேலி மக்கள் பல காரணங்களால் இலங்கை மேற்குக் கரையில் குடியேறி வாழ்ந்தனர். அதனால் தமது இடத்துப் பெயரை இங்கும் சூட்டினர் என்பது மிகப் பொருத்தமாகும் என்கிறார் எழுத்தாளர். 

தாமிரபரணியில் இயக்கர் குலம் பரவி வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனையிறவுக்கு மேலே யாழ்ப்பாணம் ஒரு தனித்தீவாக விளங்கியுள்ளது.  யாழ்ப்பாண ஆனையிறவுக் கடல் நீரேரியூடாக கப்பல்கள் வங்காள விரிகுடாவுக்குச் சென்றன. சுண்டிக்குள நுழைவாயில் மணல் படிந்து அடைபட்டது.

வட இலங்கை நாகநாடு – சிங்கை நாடு(சிங்கைநகர்)   மணவை (மணற்றி)   ஈழம், உத்தரதேசம், தமிழ்பட்டினம் என்றெல்லாம், அழைக்கப்பட்டது.
 

புவியியல் அடிப்படையில் திராவிட இன பாரம்பரியத்  தீவில் கி.மு 483ல்சிங்கல விஐயனும் 700 தோழர்களும் ஒரு புது இனமாக தம்பபன்னவில் வந்திறங்கினர்.

நன்றி  எழுத்தாளர் க. குணராசா.

 

தொகுப்பு வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

24-11-2010

 

                                

127. இயல்பை இயல்பாய்….

  

 

இயல்பை இயல்பாய்….

 

விடு! விடு! விசாலமான வானில்
விகசித்துப் பறக்கட்டும் பறவை.
பறக்காதே நடவெனப் பகர்வாரில்லை.

கண்கவரும் சின்னஞ் சிறு
மின்மினிப் பூச்சி ஒளியை,
கண் கூசுதென நிறுத்துவாரில்லை.

அன்னம் பாலைப் பிரித்தருந்துமாம்.
பிரிக்காது  சேர்த்து அருந்தென
உலகில் யாரும் கேட்பாரில்லை.

மயிலின் தோகை நீளமும்
குயிலின் குரலினிமை யியல்பும்
ஓயிலான இயற்கை வரங்கள்.

விரல்களைந்தின் இயல்பையிவன்
தரமாய் ஏற்கிறான். மானிட
வித்தியாச இயல்பை ஏற்றிடான்.

புவியின் பல்லின வகையான
கவிஞன் வீரிய  கவிச்சிறகும்
கருத்தாய் விளங்கும் வகையிது.

இயல்பை இயல்பாயேற்காது மனிதனை
இயக்கி அடக்குதலில் சர்வாதிகாரியாய்
அஞ்ஞானத்தில் குளிப்பார் சிலர்.

இதயங்கள் விசாலமாய் இணைய
பரந்த சிந்தனை புகுதல்
சுயநல வறுமையை அழிக்கும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-11-2010.

                                          

11. தொலைந்து போன ஒற்றைப் பாதணி

 

 

 

 

தொலைந்து போன ஒற்றைப் பாதணி

சின்னக் குட்டித் தேவதை தூக்கத்தில்
என்னமாய்ச் சிரிக்கிறாள்!
கன்னித் தேவதை கனவில் வந்து
கன்னம் வருடிக் காலணியைக் கொடுத்தாளோ!

ண்ணாவோடு பந்து விளையாடுவதாய்
அண்ணாந்து கால்களை எம்பிக் குதித்துக்
கண்களை இறுக மூடிப் பந்தாக
விண்ணிற்கு எறிந்தாள் பாதணியை.

பூமரத்திலே அது மாட்டித் தொங்கியது.
சாமரம் வீசி ஆடியது அழகாக.
காலணி தொங்கியது விளங்காத மழலை
”அம்மா! பெரிய பூ பார்!” என்றாள்.

ற்றைக் காலணியோடு வந்து
மற்றக் காலணி எங்கே என்று
குழந்தை அழுதழுது
 கண்ணயர்ந்தாள் கன்னம் வீங்க.
ஒற்றியெடுத்தேன் முத்ததால் அவளை

 பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
 ஓகுஸ், டென்மார்க்.
 20-4-2010.

 

                                

126. வாழ்ந்து பார்க்கவேண்டும்…அறிவில்…

 

*

வாழ்ந்து பார்க்கவேண்டும்…அறிவில்…

*

வயலில் இருக்கும் புற்கள் களைந்தால்
இயல்பாய் விளைச்சல் அள்ளிக் கொள்ளலாம்.
செயலில் கேடு நினைக்கும் சிந்தையை
செழிக்க விடாது தடுத்தாட்கொண்டால்
கொழிக்கும் நன்மை உலகில் ஏராளம்.

*

அழியாது அறிவை வளமாக்க முயன்றால்
துளிர்க்கும் மகிழ்வால் கூடி ஆடலாம்.
வாழ்வு, கவிதை, காதல், பாடலாய்
வாழ்ந்து பார்க்கலாம் நல் மனிதனாகலாம்.
வாழ்த்துப் பாடுமுலகம், வாழ்ந்து பார்!

*

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-2-2010.

*

( தமிழ் ஆத்தேர்ஸ். கொம் இணையத் தளத்தில் வெளியானது.)

http://www.tamilauthors.com/03/156.html

*

                           

125. யாரை நம்பி நான் பிறந்தேன்

 

 

யாரை நம்பி நான் பிறந்தேன்

போங்கடா போங்க…

 

விரக்தியெனும் மனிதமனத் தொல்லை
துரத்தும் மனிதனை வாழ்வின் எல்லைக்கு.
தரமின்றிப் பிறரைக் கெடுக்க நினைக்கும்
திரமற்றுத் தன்னை அழிக்கச் செய்யும்.
பொறுப்பின்றிக் குளப்பம் விளைக்கத் தூண்டும்.
மறுப்பேது உடல் மெலியச் செய்யும்.
வெறுப்பு, ஏமாற்றம்,சோம்பல் கலந்து
கறுப்புப் போர்வை போர்த்தித் துரத்தும்.

விசனம் பெருக்கும், விரோதம் பெருக்கும்.
விளைவு வில்லங்கம் பெருக்குவதுண்மை.
அன்பு, ஆதரவு, அணைப்பு, ஆர்வம்
தென்புடைத் தெப்பம் வாழ்வுக் கடலில்.
இன்பமான இவை நழுவும் நிலையில்
துன்ப விரக்திப் பாசி படரும்.
பாதக நினைவை ஓட விரட்டி
சாதக நினைவை விருப்போடு புகுத்தலாம்.

சுறுசுறுப்பான உடலின் அசைவில்
சுத்த இரத்தம் மூளைக்குச் செல்லும்.
சுகமான காற்றில் வெளியே உலாவ
சுகந்தப் புத்துணர்வு முகத்தில் மோதும்.
அழுத்தும் நினைவுகளின் மனத்தாக்கம் வடிய
அமைதிப் பிரார்த்தனை நல் வடிகாலாகும்.
இயல்பூக்கம் சிறந்த இயங்கு நிலையாகும்.
சுயதிருப்தி, தன்னம்பிக்கை உன்னை எழுப்பும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-3-2010

(முத்துக் கமலம் இணையத்தளத்தில் வெளியானது.
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai429.htm

 

                                  

10. தமிழ் படிப்போம்.

 

தமிழ் படிப்போம்.

வாருங்கள்!  வாருங்கள்!
வண்ணத் தமிழ் படிப்போம்.
வசீகரத் தமிழ் படிப்போம்.
வளமான தமிழ் படிப்போம்.

ரியத்தின் மூலமொழி
திராவிடத்தின் தாய் மொழி.
உலக முதன் மொழியென்று
மொழிந்தார் பாவாணர்.

ஓளவை மொழி பயில்வோம்.
வள்ளுவர் மொழி படிப்போம்.
கள்ளமற்ற நல்வழியால்
வெள்ளை  மனமாய் வாழ்வோம்.

ளர்ப்பது  தமிழெனும் எண்ணத்தால்
வளமான தமிழ் பாய்ச்சுவோம்.
வாக்குத் திறமை கூட்டி
வசீகரத் தமிழாய்க் கொட்டுவோம்.

பா வரி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-11-2010.

In vaarppu. com.

http://www.vaarppu.com/view/2357/

  

 

                           

124. ஓ! மனிதா!

 

 

 

 

 

ஓ! மனிதா!

 

கவிதை காலத்தின் கண்ணாடி
கருத்துடைக் குறள் காலத்து
விருப்புடை வாழ்வு வராதா!
நெருக்கடி வாழ்வில் நொறுங்கும்
மனிதா! மகத்துவப் பெறுமதியான
மனிதம் தொலைக்கிறாயே! ஓ!
மனிதா! சுயநலத்தைத் தூக்கியெறி!
புனித திருக்குறள்கால வாழ்வைக் கையிலெடு!

 

பா ஆக்கம் வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-4-2010.

161. தூக்கம் உன்கண்களைத் தழுவட்டுமே!….

 

தூக்கம் உன்கண்களைத் தழுவட்டுமே!….

 

(இந்தப் பாடலில் பிறந்த வரிகள்)

வெல்லும் வாழ்வு மனிதனின் முயற்சி.
நல்ல தூக்கம் கவலையின் வெற்றி.

நிம்மதித் தூக்கம்  தன்னாலும் உண்டு.
நிம்மதித் தூக்கம்  பெண்ணாலும் உண்டு.

ளைப்பில் இருபது நிமிடத் தூக்கம்
இரண்டு மணி ஓய்வு நேரத்திற்குச் சமன்.

ம்மதமா மெல்லிய தூக்கம் கண்டிட.
சும்மா இலேசாகக் கண்களை மூடுங்கள்…..

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
26-2-2010.

(முத்துக் கமலம் இணையத்தளத்தில்வெளியானது.)

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai410.htm

20. லாலி சுப லாலி….

 

 

லாலி சுப லாலி….

 

கொத்து வைரம் கொட்டியதாய்,
பத்து மலர் மணம் சிந்துவதாய்,
குளிர் நிலா தண்ணொளியுடன்
அருவிச் சாரலை அனுபவிப்பதாய்,
பட்டு மலர் மொட்டு விரிந்து
பூப்பெய்தினாள் செல்வி. இனியென்ன!
சுப்பிரபாத விடியல் இளமைக்கு.
ஆனந்தம்! பரமானந்தம்! உறவுகள்
ஆராதிக்கும் இனிய நிகழ்வு.
இறெக்கைக்குள் குஞ்சாக செல்வியை
எல்லோரும் பொத்திப் பாதுகாப்பார்.
கண்ணும் மனமும் பரபரக்க
காவல் இளமைக்கு வேலியாக.
ஆவலுடை சுதந்திரம் பறிபோகுமா!
ஆசைதீர சுயகாலில் நிற்கட்டும்!
அருமையான எதிர்காலம் அமையட்டும்!
அன்பான பெற்றோர், செல்வியின்
ஆசைகள் நிறைவேற வல்லமை
இறையருள் என்றும் கிடைக்கட்டும்.
வாழ்த்துகள்! மனமார்ந்த வாழ்த்துகள்!

 

 

கவி ஆக்கம்
வேதா இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
26-5-2010.

(முத்துக் கமலம் இணையத் தளத்தில் வெளியானது.)

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai453.htm
 

 

 

Previous Older Entries Next Newer Entries