22. இலையுதிர்காலம் பனிக்காலமான.(.2010ல்)

 

இலையுதிர்காலம் பனிக்காலமான.(.2010ல்)

 

மப்பு வானம் பனி விசிற
அப்பிய பசிய இலைகளின்றி
இப்புவி மரங்களோ அதிசயம்!
கொப்புகளனைத்தும் நிர்வாணம்!
எப்போதும் வருடத்தின் ஊர்வலம்
தப்பாத இலையுதிர்காலம்.

வெள்ளைப்பனி பற்றிய மரங்கள்
வெள்ளைப் பூ பூத்த காட்சி.
கொள்ளை மலர்களள்ளிக் கொட்டியதாய்
வெள்ளைப் பூக்கள் தூவிய சாலை.
அள்ளி எடுத்து ஆனந்திக்கும்
பிள்ளைக் கூட்டக் கும்மாளம்!

ஊர் விட்டு ஊர் வந்து
ஊதற் காற்றடிக்கச் சிறிதாய்
ஊடுருவும் வெப்பத்தில், மழையோ
ஊற்றுவது பனியோவெனத் தடுமாறி
ஊசிக் குளிரில் உதறலெடுக்கும்
ஊர்…..எங்கள் ….டென்மார்க்.

பனிக்கால ஆரம்பம் மார்கழி15.
இலையுதிர் காலமோ பெரும்
அடைபனிக் காலமான 2010.
நான்கு பருவ காலங்களும் கூட
நிரந்தரமில்லையெனக் காட்டியதோர்
பாடமெமக்கு! பெரும் குளிர்வதை!

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-12-2010.

(முகநூலிலும்)

In Tamilvishai.com.

http://www.tamilvishai.com/poem/?p=1282

 

                                          

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (17)

 

வீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (17)

 

(பயண அனுபவங்களுடன் சரித்திரத் தகவல்களும் அமைந்தது.)

பைசா நகர மக்களின் செல்வ நிலையைக் காட்டவே இந்த மணிக்கூட்டுக் கோபுரம் கட்டப்பட்டது என்று முன்னர் கூறினேன்.

ந்தக் கோபுர ஆரம்ப கர்த்தாவாக 1172ம் ஆண்டு ஒரு பணக்கார விதவை  Berta di Bernade  எனும் பெண்மணி தனது உயிலில் 60 வெள்ளிக் காசுகளை, முதல் ஆரம்பக் கல்லை வாங்கும்படி எழுதி வைத்தாராம்.

3 கட்டமாக இந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 1173ல் ஆவணி மாதம் முதற் கல்லு வைக்கப்பட்டது. அடிப்பாகம்  BONNANO  PISANO  என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர்  Florance  நாட்டுக்கு எதிராகப் போர் ஏற்பட்டது. கட்டட வேலை நின்றது.

1180ல் மறுபடி கட்டிட வேலை ஆரம்பித்தது.  1185ல் 1ம், 2ம், 3வது மாடிகளைக் கட்டி முடித்தனர். புளோறன்சா நாட்டுடன் மறுபடியும் போர். நாட்டுப் பணம் போருக்கே செலவானதாம். இந்நேரம் இந்தக் கட்டிடம் தெற்குப் புறமாகச் சாயத் தொடங்கியது.

ணியில்லாது எப்படி இது மணிக்கூட்டுக் கோபுரமாகும் என்று 1198ல் 3வது மாடியில் மணியைப் போட்டார்கள். மறுபடியும் புளோறன்சாவுடன் 9 வருடப் போர் நடந்தது.
1284ல்  Giovanni di Simone  என்பவர் இன்னும் 3 மாடிகளைக் கட்டி முடித்தார்.

14ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 6வது மாடியில் மணி வைக்கப்பட்டது. 55.86 மீட்டர், அதாவது 83.27 அடி உயரமானது இக் கோபுரம்.

து சரியில்லாத நிலத்தில், உயரமாக, பாரமாகக் கட்டப்பட்டதால் கட்டிடம் சாய்ந்ததாம். கடல் மட்டத்திலிருந்து 6அடி உயரப் பூமியில், கடற் படுக்கை அளவிலிருந்து இக் கட்டிடம் கட்டப்பட்டதாம். நீண்ட கால இடைவெளிகள் எடுத்துக் கட்டப்பட்டதால் அத்திவாரம், கட்டிடம் நன்கு இறுகியதால் கட்டிடம் விழாது இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

க் கட்டிடம் சுண்ணக் கல்லினால் கட்டி மாபிளினால் மூடப்பட்டுள்ளதாம். அத்திவாரத்திற்கு மேல் 1.2 மி.மீட்டர் ஒவ்வொரு வருடத்திற்கும் சரிகிறதாம்.( இது பழைய கணக்குக் கதையாக இருக்கலாம்.)

1934ல் ஒரு இத்தாலியக் கட்டிட நிபுணர் 361 துளைகளை உருவாக்கி அதனுள் காரைச் சுண்ணாம்பையிட்டு, கட்டிடத்தைப் பெலப்படுத்துவதற்காக நிரப்பினாராம். பின்னர் 1995லும் அத்திவாரத்தைத் திருத்தி இவர்கள்; களைத்து விட்டனராம். அதன் பின்னர் கோபுரம் வடக்குப் பக்கம் நோக்கிச் சாயத் தொடங்கியதாம்.

தன் பின்னர் இங்கிலாந்துக் கட்டிட நிபுணர்களின் முயற்சியால் 16 இஞ்சுகள் நிமிர்த்தி, 1838ல் இருந்த நிலைக்குக் கொண்டு வந்து, இன்னும் 300 வருடங்களிற்குப் பாதுகாத்துள்ளதாக எண்ணுகின்றனர்.                                       

பைசா நகர மக்களோ அதை நிமிர்த்த வேண்டாம். அது விழுந்தால் விழட்டும், இது சாய்ந்த கோபுரமாகவே இருக்கட்டும் என்கிறார்களாம்.

1990ல் இக் கட்டிடம் பொது மக்கள் பார்வைக்கு இல்லாது மூடப்பட்டது. வைகாசி 2001ல் மறுபடி திறக்கப்பட்டு மக்கள் பார்க்கிறார்கள். 8 மாடிக் கட்டிடமாக 294 படிகள் சுருளாக spiral போல மேலே ஏறிச் செல்லுவதற்கு உள்ளது. 7 மணிகள் 7 வித்தியாச வருடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்கள் இங்கு குறுக்கப்பட்டுள்ளது.
(சில பைசா நகரக் காட்சிகளை இங்கு காண்கிறீர்கள்.)

        
கார்ட்டூன்களில், டிஸ்னி படங்கள், சில சினிமாக்களில் இக் கட்டிடம் பாவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இங்கும் என் அபிமான பிரசாந்த், ஐஸ்வர்யாராய் நினைவுக்கு வந்தனர்.

கோபுரமும் மனதுக்குள் பூ விரித்தது. மிகப் பிரமாண்ட வெள்ளை வெளேர் என்ற தேவாலயமும், ஞானஸ்நான மண்டபமும் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றுக்கு அழகு சேர்ப்பது….அருமை தான்!

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-2-2007.

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (16)

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (16)

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

வீன பார்த்சாரதியை நிறுத்தி விட்டு, இத்தாலியை நோக்கி லிவோர்னோ பாதையை எடுத்து வரும் போது, பைசா நகரம் காட்டியது. அந்தப் பாதையில் போக இறங்கினோம். (அங்கம் 15ல் லிவர்னோ போகும் பாதையில் பைசா நகரம் படத்தில் காணக் கூடியதாக உள்ளது.)

சுற்றிச் சுழன்று பைசா நகரம் அடைந்தோம். ஆயினும் உள்ளே உள்ளே கிராமம் போல ஓடி ஓடி ஒரு சுற்று மதில் கட்டிடத்தின் முன் நின்று, உள்ளே புகுவதா விடுவதாவென யோசித்து, கணவர் இறங்கி விசாரித்தார். உள்ளே செல்ல வேண்டு மென்று அறிந்தோம். இதற்கிடையில் கோபுரம் தானே, எங்கே உயரமாக ஒன்றையும் காணோமே என்று சுற்றிச் சுற்றிப் பார்த்தபடி வழியெல்லாம் நான் தேடியபடி இருந்தேன். உள்ளே புகுந்ததும் வட்டமான வெள்ளைக் கட்டிடமாக மாபிளினால் உருவான சாய்ந்த கோபுரம் தெரிந்தது.

        

னது கற்பனையில் அது மிக உயரமான கோபுரமாக இருக்கலாமோ என்று தான் இருந்தது. ஆனால் அது சாதாரணமான 8 மாடிக் கட்டிடமாக, ஆனாலும் அநியாயமாகச் சாய்ந்திருந்தது. மனம் கவரும் வெள்ளை நிறம், ஆடம்பரமாக இருந்தது.         

றோனா நதிக்கரையில் ரஸ்கனியில் ஒரு நகரம் பைசா ஆகும். நவீன பௌதிகவியலாளர், கலிலியே கலிலி பிறந்த இடமும் இதுவாகும்.

ரியாக வாகனம் நிறுத்துமிடம் தெரிந்து நிறுத்திவிட்டு, கவனிக்க!  இங்கு எந்தவித பிரச்சனையுமின்றி வாகனம் நிற்பாட்டினோம். 

முதலில் இடத்தை ஒரு கண்ணோட்டம் விடுவோம் என்று , நான் புகைப் படக்கருவியுடன் சென்று மளமளவென படங்களைச் சுட்டேன். சனக்கூட்டமாகவே இருந்தது, திருவிழாக் காலம் போல.                         

ன் கணவர் தங்குமிடம், நகரம் சுற்றிப் பார்த்தல் என்பவைகளைக் கவனித்தார்.

ங்களாதேஷ் இளைஞர்கள் பலர் வியாபாரம் செய்தபடி இருந்தனர். எம்மைக் கண்டதும் முகம் மலர்ந்து மிகவும் அன்பாகப் பேசினார்கள், தகவல்கள் தந்தனர். அந்த உணர்வு எமக்கு மிகப் பழக்கமான உணர்வு தான். நாடு விட்டுப் பிரிந்திருக்கும் உணர்வு தான் அது.

சுற்று வட்டத்தின் ஒரு கண்ணோட்டத்தின் பின், உள்ளே சிறிது நடை தூரத்தில், நாம் தங்கிட வாடி வீடு எடுத்தோம். இங்கு அறை எடுக்க எந்தவித சிரமமும் வந்திடவில்லை. மிகச் சுலபமாக இடம் கிடைத்தது. வாகனம் நிறுத்த  தங்கும் அறைக்கு முன்னாலேயே இடமும் கிடைத்தது.

திரும்ப வந்து வாகனத்துடன் போய் களைப்புத் தீர நீராடி, ஆடை மாற்றி, மறுபடியும் கோபுரம் பார்க்க வெளியே வந்தோம்.

புகையிரதப் பெட்டிகள் இரண்டை இணைத்தது போன்ற ஒரு வாகனத்தில் பைசா நகரம் சுற்றிப் பார்த்தோம். பலரைச் சேர்த்து, அது போதும் என்றதும் ஓடத் தொடங்குகிறார்கள்.  பைசா மிக நல்ல பழைய கால நகரமாக இருந்தது.

பைசா நகர மக்கள் மத்தித் தரைக்கடலில் 200 வருடங்களுக்கும் முன்னர் சிறந்த மாலுமிகளாக இருந்தனர். இவர்கள் யெருசலேம்,  catthago,   Ibiza, Makkarca, ஆபிரிக்கா, பெல்சியம், Britania, நோர்வே, ஸ்பெயின், மொறக்கோ இன்னும் பல நாடுகளைக் கைப்பற்றியிருந்தனர். இவர்களுக்கு ஒரு எதிரியாக Florance  நாடு இருந்தது. இவர்கள் தங்கள் செல்வ நிலையை உலகுக்குக் காட்டுவதற்காகவே இந்த மணிக்கூட்டுக் கோபுரத்தைக் கட்டினார்களாம்.

1. கிறிஸ்துவப் பிரதான கோயில்.
2. ஞானஸ்நானத் தொட்டில் கட்டிடம்.
3. ஞாபகர்த்தப் புதை குளி
4. பைசா சாய்ந்த கோபுரம்.

வை நான்கும் ஒன்றாக அருகருகே உள்ளன.
வெள்ளையடிக்கவே தேவையற்ற அத்தனை சுத்த வெள்ளை அழகுடன் இந்தக் கட்டிடங்கள் உள்ளன.         

மிகுதியை அடுத்த அங்கம்16ல் பார்ப்போம்.                                         

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
3-2-2007.

22. பெற்றோர் மாட்சி.

 

 

பெற்றோர் மாட்சி.

3-6-2006.
தெய்வமெனும் நிலைக்குச் சமமான
தெய்வத்துவம் நிறைந்தவர்  நல்ல பெற்றோர்.
தொய்யாத அன்புடைய பெற்றவரும் குழந்தைகளும்
தெய்விகமாக அமைவது தெய்வச் செயல்.
தெரிந்து என்றும் உலகில் நல்லவற்றைச் செய்தால்
நல்ல இன்பம் காணலாம் என்று கண்டு கொணடேன்.

4-6-2006.
லயமாம் இல்லத்தில் தெய்வங்களாக
ஆலிங்கனம் செய்த மனித தெய்வங்கள்
ஆலமரமான அருள் நிழற்குடைகள்.
ஆளாகி நாமுயர தினமும் அன்பை
ஆலாபனம் செய்யும் ஆளுகையான பெற்றோர்
நிழலில் இல்லைச் சேதாரம். ஆளாகி
நாமுயர அதுவே ஆதாரம்.

17-6-2006.
நானாகப் பிறந்தேனா! பெற்றது
நீங்கள் தானே என்று பெற்றோரை
வீணாகச் சினப்பார் சிலர்.
கூனாகக் குருடாக இருந்தாலுமெம்மை
ஊனாக, உயிராக எண்ணுவோர் பெற்றோர்.
கோனாக வரவேண்டுமென்று எம்மைக்
கோடி கற்பனையில் வளர்ப்பவரல்லவா நீங்கள்!

18-6-2006.
நினைவில் இருக்கிறது,…என் நினைவு
தொடங்கிய நாள் முதல் அனைத்திலும்,
வினையிலும், மனையிலும், முனைவாய்
என்னுடன் பழகிய பெற்றவர் மலையிலும்,
பனையிலும் உயர்வாய் மனதில் நிறபவர்களென்று
புனைகிறேன் வரிகள் மனதில் நிறுத்தி.

25-6-2006.
நானாக எல்லாம் செய்தேனா!
ஊனாக, உயிராக என் பெற்றவர்
தூணாகத் துணையாக இருந்து
துளிர்த்து வளர உதவினரே!
தேனான காலங்கள் மாறியது.
தேடுகிறேன் அந்நாளை மறுபடி
தேடுகிறேன்.

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                                                   
 

21. பெற்றோர் மாட்சி

 

 

 

 பெற்றோர் மாட்சி

23-12-2007.
உயிரில் உயிர் வைத்து உலகுக்கு
எனைத் தந்தவர்கள் பயிரிட்ட பாசம்,
பண்பு பாங்காய் வளர்ந்துலகில்
பரவியமை, எமது வாரிசுகளுக்கும்
பிறருக்குமான ஒரு பூந்தோட்டம்.
 

5-1.2008.
இதயம் முழுதும் தியாக சிந்தனையுடன்
உதயமாகும் பெற்றவர் அன்பெனும் திருக்குறள்,
பதியமாகி நல்வழி செல்லும் பிள்ளைகள்
பெருநிதியமானவர்கள். அவர்கள் பண்பை
அறியும் பெற்றவரதும், பிறர் மனமும்
பாகாக உருகுமே! நல்ல
பிள்ளைகளால் அன்பு மனம் உருகுமே!

21-5-2006.
நானே மட்டுமல்ல, மானே தேனே
எனக் கொஞ்சி அணைத்து
ஊனே உருக எமை வளர்த்த
உயிரான பெற்றோரை யாரும்
உதறி மறக்க முடியாது.
நான் மட்டும் மறப்பேனா?

 இதயம் உணர்ந்து அனுபவிக்கும்
இன்ப உறவு பெற்றவர் அன்பு.
இதை முழுமையாக அடைந்த மனிதனின்
இதயம் ராக்பெல்லர் மாளிகை தான்.
இனிய பெற்றவர் அன்பெனும் திருக்குறள்
இல்லம் தோறும் நாளும் புரட்டும் குறள்தான்.

இமையாக எமைக் காப்பார்.
சுமையாக எமைக் கருதுவதில்லை.
தமைக் கொடுத்துத் தியாகிப்பார்.
அமையவேண்டும் இது அனைவருக்கும்.
எமைக் காப்பவருக்குப் பிரதியுபகாரம்
எம் அன்பைக் கொடுக்கும் உபாயமே!

20-5-2006.

அழகான உங்கள் உருவம்,
பழகிய அன்பால் பெருகியது.
இழகிய மனதால் உயர்ந்தது.
பல்கலைக்கழகமான குடும்பத்தில்
அப்பாவுடன் நிழலாக நீங்களும்
ஆழமாய்ப் பதிந்த உருவம் அம்மா.

13-5-2006.

எப்படி வைப்படி இருப்பதென்று
தப்படியின்றி என்னை வளர்த்தவர்கள்.
அப்படி வளர்ந்த நான் இன்று
இப்படிக் கவித்துவமாய் நன்றி கூற
நாடி எழுதுகிறேன் பெற்றவருக்காய்.
நன்றி தவிர வேறெது சொல்வேன்!

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                              

                   

 

 

 

 

142. வதந்தி.

 

 

வதந்தி.

 

வெடித்துப் பறக்கும் இலவம் பஞ்சு.
துடித்துப் பறக்கும் வதந்திப் பஞ்சு.
படித்துக் கேட்டு வெடிக்கும் நெஞ்சு.
அடிக்கும் கோபம் தடுத்தும் மிஞ்சும்.
நாகாக்காததால் எழும் வார்த்தைப் பந்தி.
சோகாக்குமிப் பெரும் சோலிச் சந்தி.
ஆதாரமின்றிச் செவியோடு பரவும் கெந்தி.
சேதாரமாக்கும் பலர் வாழ்வைக் கொந்தி.
      

       வசந்தத்திற்கு இது ஒரு நந்தி.
       வதந்தி பூதமெனத் தரும் பயப்பிராந்தி.
       இதம் தராதிது ஒரு வகைக் கிரந்தி.
       இது நூலற்ற பட்டம், வலைபின்னும் சிலந்தி.
       ஆற்றாமையால் புரண்டு விழும் வாந்தி.
       ஆத்திரத்திலும் சிறகு விரிக்கும் முந்தி.
       அச்சுக்கூடமற்ற அதிவேகப் பத்திரிகைச் செய்தி.
       அமைதி நெஞ்சை அசைக்காது வதந்தி.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்.
2-7-2006.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலி ஆகழயவற்றில் என்னால் வாசிக்கப்பட்டது.
வார்ப்பு இணையத்தளத்திலும் வெளியானது.)

http://www.vaarppu.com/view/557/

 

                          

141. தானாக எழும் பொறி.

 

 

தானாக எழும் பொறி.

 

எந்நேரமும் உள்ளே கனலும்
ஏதாவது செய்!..செய்! எனும்
எழுச்சியெனுமொரு நெருப்பு!
எவரும் கூறி வருவதல்ல.

 ஒரு நிமிடம் ஓய்ந்திடாது,
துருதுருவெனத் தூண்டிவிடும்;
பெரு விருப்புடை எழுச்சி மனம்
ஒரு இறைவன் கொடை.

எள்ளளவும் மனிதனைத் தூங்கவிடாது
எத்தனமாகும் இந்நவநீத நெருப்பு.
எல்லையின்றி மனிதனை இயக்கும்.
எந்திர வில்லானது இப்பொறி.

ஆரோக்கிய மனதில் தினம்
ஆரோகணிக்கும் அற்புத எழுச்சி.
ஆகாசத்தையும் தொடவைக்கும்.
ஆற்புதம் ஆனந்தத் தன்முனைப்பு.

நன்கொடையாம் நன்னய நெருப்பு
நன்மார்க்க நல்வினைப் பொறி
நச்சு நச்சென்று யாரையும் தினம்
நச்சரித்து எழுவதல்ல இப் பொறி.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-5-2008.

In tamilauthors.com…link

http://www.tamilauthors.com/03/304.html

 

                             

 
 

வேதாவின் மொழிகள். 4

 

 

வேதாவின் மொழிகள்.

18-1-2005.
கண்ணில் மல்கும் கண்ணீர் துடைக்கக் கைக்குட்டை தேடும் வார்த்தைகளை விட்டு, எழுந்து முன்னோக்கிச் செல்ல உந்தும் வார்த்தைகளாகச் சிந்தனை வார்த்தைகளை இணைக்கலாம். ஊன்று கோல் பிடித்து எழுந்து கொள்ள வைக்கும் வார்த்தைகளாகவும்,  துள்ளி வரும் அழகிய பந்தாகவும் சிந்தனைகளைத் துள்ள வைக்கலாம். பச்சாதாபம் வழியாது பற்றி எழுந்திட உதவும்வர்த்தைகளாக அமைக்கலாம், சிந்திக்கலாம்.

23-8-2008.
நமது சாதாரண வாழ்வே கடும் முயற்சிகளுடன், தோல்விகளும், காயங்களுமாக அமையும் போது, உங்கள் கற்பனையில் கூட கண்ணீரைக், கவலையைத் தவிர்த்துக் கொள்ளுங்களேன்! சிந்தனையில் சுபிட்சம் வந்தால் நிச வாழ்விலும் அது ஒட்டிக் கொள்ளும். ஏற்றுக் கொள்கிறீர்களா!…
இப்படிச் செய்து பாருங்களேன்!…….

முயலின் சுறுசுறுப்பு மனித வெற்றி முழக்கத்திற்கு அததிவாரம்.

காப்பு.
இல்லறத் தோப்பில் இதயசுத்தம் காப்பு.
இன்ப மழலைக்கு கண்டிப்பு ஆப்பு.
ஆண்டவன் பாதத்து நூல் நம்பிக்கைக் காப்பு.
அநாதைக் குழந்தைக்கு காப்பகம் பெரும் காப்பு.

வரம்பு.
வரம்பின்றி வார்த்தைகளை உதிப்பது ஆபத்து.
வரம்பற்ற அன்னியக் கலாச்சாரத் தழுவலும்
வரம்புடைத்து வாழ்வுப் பாதையை மாற்றும்.

வரம்பினூடு வயல் நடுவே நடந்த நினைவு
அரும்பச் செய்கிறது ஆனந்த உணர்வு.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                        

வேதாவின் மொழிகள். 3

  

வேதாவின் மொழிகள்.

 23-3-2005.

உங்கள் பிள்ளைகள் எல்லை மீறும் போது நீங்கள் எப்படி எடுக்கிறீர்கள். தாங்கிக் கொள்ள, எற்றுக் கொள்ள முடிகிறதா?
 ஆதலால் முதலில் பெரியவர்கள் உங்கள் எல்லைகளை        நீங்கள் அறியுங்கள். உங்கள் எல்லைக் கோட்டை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். எதிலும் அளவுடன் இருத்தல் சிறந்தது.
மயிலிறகு ஏற்றும் வண்டியானாலும், அதையும் அளவோடு ஏற்றாவிடில் அச்சு முறிந்து விடும் என்று திருவள்ளுவரும் தனது குறளில் ‘ வலியறிதல்’ எனும் அதிகாரத்தில் கூறுகிறார்.

 எந்த வழி எமக்குச் சிறந்த வழியோ அவ் வழியைத் தெரிவு செய்யலாம். ஒருவரின் எழுத்துத் திறமை  சிறப்புற இல்லை, கோர்வையாக  எழுத முடிவதில்லையெனில், தன் பேச்சுத் திறமையில் கவனம் செலுத்தலாம். மிக நல்ல முறையில் பேச்சு வன்மையை வளர்த்து முன்னேறலாம். அது போலப் பேசுவதற்குக் கோர்வையாகச் சொற்கள் வரவில்லையா, குரல் கீச்சுக் கீச்சு என ஒத்துளைக்க மறுக்கிறதா! பிறருக்குக் குரல் இனிமை தரவில்லையா? இருக்கின்ற எழுத்துத் திறன் மூலம் சுய திறனை வெளிப்படுத்திப் பிரகாசியுங்கள். இதுவே அறிவுடைமையயாகும்.

13-3-2005.

 மறைந்திருந்து மரத்திற்கு உதவும் வேர் அஃறிணை. மறைந்திருந்து மனிதனை உதைக்கும் மனிதன் உயர்திணை. உயர்திணை செயலினால் அஃறிணையாகிறது. அஃறிணை தன் செயலினால் உயர்திணையாகிறது. படைப்பினால் ஏற்பட்ட தவறல்லவிது. கடக்கும் மனித வாழ்வில் நிகழும் மனிதத் தவறு இது.

மழலைக்கு நடை பழக நடை வண்டி பலம். மழவனின்(இளைஞன்) நடை தொடர தன்னம்பிக்கை பலம். நடுக்கும் குளிரில் உழைக்க ஆரோக்கியம் பலம்.   நாவறியா மொழி சரளமாக   பேச்சுப் பயிற்சி பலம்.

 

ஆக்கம்.வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                     

4. அமைதி தேடல்.

 

மைதி தேடல்.

 அமைதி தேடல் என்பதில் அல்ல, அமைதியை அழித்தலில், குலைத்தலில் தான் அதிகம் ஈடுபடுகிறார்கள். இதன் காரணமே ஆசை! ஆசையே தான்.

 பிறரைத் துன்புறுத்தித் தனக்கு வேண்டியதைப் பெறும் நினைவு தான் மனிதனிடம் மேலாக உள்ளது. பிறரைத் துன்புறுத்த லென்பது உடலளவிலும், மனதளவிலும் நிறைவேற்றப் படுகிறது.

 புகழின் பெயரில் மனம் நீந்த முயல்கிறது. நான் தான் சிறந்தவன் என்று வாழாது, நல்லதைச் செய்து சிறந்தனாக வாழ முயலலாம். இலக்கம் ஒன்று நிலைக்கு வர எல்லோருமே முயல்வது சிறப்பு. இங்கு தான் அமைதியழிகிறது. சிறப்புடன் வாழ முயற்சிப்பது தவறல்ல.  மனிதத்திலிருந்து இறங்குவது தான் அமைதியை அழிக்கிறது.

 தகாத செயலில் இறங்க நல்லவர்கள் என்றுமே கூச்சப் படுவார்கள்.

 கட்டுக்குள் அடங்காத மனதை ஒரு நிலைப்படுத்திப், பரபரக்கும் உடலையும் ஓரிடத்தில் நிலைப்படுத்தி அமைதிச் சிறகினுள் அணைப்பது தியானம்.

 நேர்மை, ஆத்திரம் அடக்கல், சந்தோஷம், தியானம், சாந்தி, ஒருவர் பேச்சை மற்றொருவருக்குக் கூறும் நிலையில் மாற்றம், உலக சீவன்களில் தயவு தாட்சண்யம் காட்டல், அடுத்தவர் சொத்துக்கோ, சிறு பொருளுக்கோ ஆசைப்படாமை, குன்றாத முயற்சி, உற்சாக மனம் என்பது மனிதனுக்கு மிக அத்தியாவசியமாகிறது.

 மன அமைதி, மன நிதானம் உள்ளவருக்குப் புற அதிர்வுகள் தாக்கத்தைத் தருவதில்லை. வெறும் பானை அதிக சத்தம் தரும். நிறைகுடம் தழும்பாது என்பதான நிலையே   இதுவென்று கூறலாம்.

மனம் அமைதியடையும் போது, உடல் அமைதி பெறுகிறது. இது உலக வாழ்வுக்கு அவசியமாகிறது.

மனம் அமைதியாக, நிதானமாக இல்லாத போது புற சலசலப்பால் புயலென எழுந்து அமைதியழித்தல் நடைபெறுகிறது. அமைதியைத் தேடி, அதை நாடி அற்புத, அழகிய உலகின் ஆனந்தத்தைப் பெறுங்கள். காத்திரமான பலன் பெறுங்கள்.

களிப்பதற்கு உலகம்.
கம்பீரத்திற்குக் குரல்.
சிரிப்பதற்கு முகம்.
சிந்திக்க மனம்.
முந்துங்கள் அமைதி தேட.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-3-2009.

( இலண்டன் ரைம் வானொலியில் சகோதரர் ஞானலிங்கம் நிகழ்வில் (பூந்தோட்டம்) வானலையில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                        
 

Previous Older Entries Next Newer Entries