9. கவிதை பாருங்கள்(photo,poem)

 

இளமைக்காலம்.

உளப்பாடில் உணர்வுக் கோலம்
தளர்வின்றித் துள்ளும் காலம்.
கிளர்ச்சியுடை இனிமைத் தாளம்
வழமையான வளர்ச்சிக் கோலம்.
இளமைக்காலம் அற்புதக் காலம்.
குளறுபடியற்ற குதூகல இளமைக்கு
அளவற்ற புத்திமதிகள் பெரியோரால்
இளங்கதிராய் வீசும் காலம்.

சூரிய உதயமாய் எழுந்திடும்
சூரர்கள் துடிப்புடை இளையவர்.
சூனியத்துள் புகுவதாய் ஒரு
சூரிய மறைவாக வின்றி
சூரிய உதயமாய் உயருங்கள!
எங்களால்   முடிந்தது போல
உங்களால் அனைத்தும் முடியும்!
ஓங்கி உயர்ந்து செயலிடுங்கள்.

—வேதா. இலங்காதிலகம்-17-2-2011—–

 

11. படித்ததில் பிடித்தது. 4.

 

 

ஓட்டக்கூத்தர் – 4

 

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் பற்றி நான் எழுதும் இறுதி அங்கம்.

இவர்
ஈட்டியெழுபது,
எழுப்பெழுபது,
தக்கயாகப்பரணி

 என்பவற்றைப் பாடினார்.

இவர்தான் தமிழ் இலக்கியத் துறையில் ‘ பிள்ளைத் தமிழ்’ எனும் பிரிவை முதன் முதலில் வகுத்தார். இந்தப் புகழ் ஒட்டக்கூத்தரையே சாருகிறது.

பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பாடல்களைப் பாடியிருந்தாலும் ‘ பிள்ளைத்தமிழ்’ எனும் தனி நூலைச் செய்த பெருமை ஒட்டக்கூத்தரையே சாருகிறது. இது இரண்டாம் குலோத்துங்கன் மீது பாடிய பிள்ளைத் தமிழும், தமிழில் உள்ள முதல் பிள்ளைத் தமிழ் நூலாகிறது.
‘ மூவருலா’ என்று முறையே விக்கிரம சோழன் மீது ஒரு உலாவும்,

அவன் மகனாகிய 2ம் குலோத்துங்கன் மீது ஒரு உலாவும், அவன் மகனாகிய

2ம் இராஐராஐசோழன் மீது ஒரு உலாவுமாகப் பாடியது ‘ மூவருலா’- என குறிப்பிடப் படுகிறது.

‘ உலா’ என்பது அரசர்கள் நீராடி, அரச மரபுப்படி யானை குதிரை மீது, பல அணிகலன்களுடன், பரிவாரங்களுடன் உலா செல்வதும், அதை ஏழு வகைப் பருவ மாதர்களும் கூடி நின்று தலைவனது அழகைப் பார்த்து வியந்து கூறுவதாக அமைந்தது.

மூவருலாவில் வரும் ஏழு வகை மாதர்கள்

ஐந்து முதல் ஏழு வயதுப் பெண்கள் – பேதை.
எட்டு முதல் பதினொரு வயது வரை – பெதும்பை.
பன்னிரண்டு, பதின்மூன்று வயது வரை    – மங்கை.
பதின்நான்கு முதல் பத்தொன்பது வரை – மடந்தை.
இருபது முதல் இருபத்தைந்து வரை – அரிவை.
இருபத்தாறு முதல் முப்பத்தொன்று வரை – தெரிவை.
முப்பத்திரண்டு முதல் நாற்பது வரை – பேரிளம் பெண் என வரும்.

ஓட்டக்கூத்தர் மிகப் பெரிய கவி அரசர் என்பதால் அதில் நான் கவரப்பட்டு, என் சொந்த வார்த்தைகளில் இந்தச் சிறு தொகுப்பைத் தந்தேன். இதில் யாரும் பயனடைந்தால் மகிழ்ச்சியே.

ஓட்டம் என்பது பந்தயப் பொருள் எனும் கருத்தடையது. இவர் பந்தயத்திற்குப் பாடும் பெரு விருப்புடையவர் என்பதால் ஒட்டக்கூத்தர் எனவும் விக்கிரம சோழன்மீது பாடிய உலாவில் வந்த ஒரு கண்ணியை வைத்துக் கவி பாடக் கேட்டதால், மிக வேகமாகப் பாடினார், இதனால் ஒட்டக்கூத்தர் எனப் பெயர் வந்தது எனப் பல காரணங்கள் கூறப்படுகிறது.

இவர் காலத்தில்தான் கம்பர், புகழேந்தியார் இருந்தனர் என தக்க ஆதாரங்கள் கிடைக்கவில்லை, ஆனால் பேசப்படுகிறது எனவும் வாசித்து அறிந்தேன். ஒட்டக்கூத்தர் பாடிய இன்னும் பல நூல்களும் உண்டு என்பதையும் கூறிவைக்கிறேன்.      

 முடிவுற்றது.

நன்றியுடன் வணக்கம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-4-2008.
                                      

                                                                             
 

29. இயற்கை.

 

 

யற்கை.

 

பிள்ளைக் கூட்டங்கள் குதித்தாட
வெள்ளைப் பனி மறுபடியும் மாசியில்
அள்ளிக் கொட்டுகிறது டென்மார்க்கில்.
உள்ளபடி இதமில்லா இயற்கையிது.
இயற்கையாம் காலநிலை இதுவென
இயல்பாய் மகிழ இயலாது.
மெல்லவும், சொல்லவும் முடியாது,
வல்லமையாய்க் கொல்லும் குளிர்!

இயல்பான இயற்கையில் ஒருசாரார்
மயலாக, மறுசாரார் மறுகுகிறார்.
இயற்கை இயற்கையெனத் தேடுவோரும்
செயற்கையில் மகிழ்வோருமான உலகிது!
நிற்பது, நடப்பது, பறப்பதுவும்
தோன்றிய உயிர்களின் குணங்களும்
அற்புத இயற்கைப் படைப்பே
இயற்கை மாபெரும் வியப்புடைத்து!

ஆணவம், கன்மம், மாயையாம்
ஆளும் மும்மலமும் இயற்கை.
பூணும் நல்லறம் பொய்யின்றி
பேணுதலும் இயற்கை உறவே.
கோணிட, மனம் புண்பட
நாணி வாழ்தல் செயற்கை.
ஆணும் பெண்ணும் சமனென
காணுதல் அங்கீகார இயற்கை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-2-2011.

 
 

                                      

 

 
 

8. கவிதை பாருங்கள் (Photo, poem)

 

                                              

10. படித்ததில் பிடித்தது.3

 

 

ஓட்டக்கூத்தர்  – 3

 

ஓட்டக்கூத்தர் ” ஈட்டியெழுபது, எழுப்பெழுபது ” எனும் நூல்கள் எழுதிய சூழல்களை அறிந்த பின், இவர் பாடிய தக்கயாகப்பரணி எனும் நூல் பற்றிப் பார்ப்போம். இது ஒரே இரவில் பாடப்பட்டது ஆகும்.
தக்கயாகப்பரணி ஆழ்ந்த கவிநயம் கொண்டது. வீரபத்திரக் கடவுளைத் தலைவராகக் கொண்டது.
கும்பகோணத்தில் உள்ள வீரபத்திரர் கோவில் மடத்தில் பல தவயோகிகள் இருந்தனர். இவர்களில் ஒருவர் திருஞானசம்பந்தர் பதிகங்களைப் பாடிப் பிச்சை எடுப்பவர். ஒரு நாள் கூத்தர் வீட்டின் முன் நின்று இசையுடன் பதிகம் பாடினார். கூத்தர் வெளியே வந்து இதன் கருத்து என்ன வென்று கேட்டார்.                         

 ”திருஞானசம்பந்தர் பாடலை எல்லோராலும் கூறமுடியுமோ? உம்மால் கூற முடிந்தால் கூறும் ” என்று தவயோகி கூத்தரையே திருப்பிக் கேட்டார்.

உடனே புலவர் கூத்தர் ஆத்திரமடைந்து தவயோகியைப் பிரம்பால் அடிக்க, தவயோகி கீழே விழுந்து உயிரிழந்தார். இவ் விடயம் அறிந்த மடத்து யோகிகள் கூத்தர் இருப்பிடம் வருகை தந்தனர். கூத்தர் உடனே அரசனிடம் ஓடி விடயத்தை விளக்கினார். அரசன் தனது குருவானவருக்குத் துன்பம் நேராது காக்க விரும்பித் தன் உயிரைத் தருவதாகக் கூறினான்.                                           

”கொலை செய்தவரைக் கொல்வதே முறை” என்று புலவரைத் தரும்படி முனிவர்கள் கேட்டனர். இறுதியில் கூத்தர் தன்னையே அனுப்பி வைக்கும் படி கூறினார். அந்த நேரம் மாலை நேரமாகியதால் கூத்தர் பூசை செய்வதாகக் கூறி, பக்கலில் உள்ள காவிரியில் ஸ்நானம் செய்து, பக்கலில் உள்ள காளி கோயினுள் புகுந்து கதவைப் பூட்டி, உள்ளிருந்து பூசை செய்தார்.

அவர் முன்னே காளிதேவி தோன்ற, தன்னைக் காக்கும்படி கூத்தர் வேண்டினார். வீரபத்திரர் மீது ஒரு பிரபந்தம் இயற்றுமாறு காளி ஆணையிட புலவர் அதை ஏற்று  ”தக்கயாகப்பரணி” எனும் பிரபந்தம் பாடப் பொழுது புலர்ந்தது.

விடியலில் முனிவர்கள் கதவு தட்ட, விரபத்திரர் வீரம் விளங்கும் பிரபந்தத்தை அவர்களிடம் கொடுத்தார்.                                                    

இவர்கள் மடத் தலைவரிடம் கூட்டிச் செல்ல, மடத்தலைவர் மகிழ்வடைந்து நூலை அரங்கேற்றக் கட்டளையிட்டார்.இதற்குப் பரிசாக இவர் ஒரு ஊரைப் பெற்றார். இதுவே தஞ்சாவூர் மாவட்டப் பூந்தோட்டம் புகைவண்டி நிலையத்திற்கருகில் உள்ள கூத்தனூர் எனும் ஊராகும். இதுவே ஒரு இரவில் பாடப்பட்ட தக்கயாகப்பரணி வரலாறு ஆகும். இது தவிர மற்றைய இவரது ஆக்கங்களை இன்னொரு தடவையிற் பார்ப்போம். 

தொடரும்.

 

ஆக்கம் –  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                                                

11. தமிழ் செழிக்க வேண்டும்.

 

மிழ் செழிக்க வேண்டும்.

 

அந்தத் தொலைபேசிக் கலந்துரையாடலின் பின் மனதில் ஒரே குடைச்சல், கவலையாக இருந்தது. அதனால் இதை எழுத எண்ணமும் உருவானது.
 

இலங்கையில் வசிக்கும் என் அக்கா வாணியின் மகளுக்கு இலண்டனில் திருமணம். அதற்காக வாணி அக்காவும் அத்தானும்  இலண்டன் வந்து எனது ஒன்றுவிட்ட அண்ணா ரகு வீட்டில் தங்கியிருந்தனர். நான் தொலைபேசி எடுத்த நேரமெல்லாம் அவர்கள் வீட்டில் இருக்கவில்லை. தொலைபேசி எடுத்தே களைத்துப் போனேன். இறுதியாக எடுத்த போது மறுமுனையில் ‘ ..ஹலோ! ‘ என்ற குரல் கேட்டது.’ நான் யேர்மனியிலிருந்து வாணியின் தங்கை ராதா கதைக்கிறேன். அண்ணா இல்லையா? ‘ ..என்றேன். மறு பக்கத்தில் அவ்வளவு ஆர்வமான பதில் இல்லை. ‘நீர் மகளா பேசுவது?’…என்றேன். ஓ என்று குரல் இழுபட்டது.
 

விடயம் என்னவென்றால் பிள்ளைக்கு தமிழ் பேசவரவில்லை. பதினைந்து வயதாம். ‘ நீங்கள் தமிழர் தானே! தமிழ் தெரியாதா? ‘..என்றேன்  மிக வீரப் பிரதாபமாக ‘..பேசினால் விளங்கும’…; என்றாள். என்ன படிக்கிறீர்கள், சகோதரர்கள் தமிழ் பேசுவார்களா? வீட்டில் ஆங்கிலம் தான் பேசுவீர்களா? என்றெல்லாம் கேட்டு அறிந்தேன்.  வீட்டில் பெற்றோர் தமிழ் பேசியிருந்தால் தான் பிள்ளைகளும் தமிழ் பேசுவார்களே!

பின்னாலே அடுத்த அறையிலிருந்து எனது கணவர் ‘ பேசாமலிரேன்! உனக்கேன் இந்தக்கதை!…’ என்று என்னை அதட்டினார்.

தமிழ் தெரியாது என்ற பதிலை அங்கிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது போல இருந்தது.

அண்ணன் ரகு ஒரு வைத்தியரோ என்சினியரோ இல்லை. அதாவது உயர் சமூக அந்தஸ்து உள்ளவரும் இல்லை.

அண்ணியின் அப்பாவோ ஊரில் வெங்காயத் தோட்டம் வைத்து சம்பாதித்தார். அண்ணி கூட காலையில் பெற்றொருடன் தோட்டம் போய் விட்டுத் தான் பாடசாலை போய் படித்தார்.
இப்படி அடிமட்டம் அல்லது நடுத்தர வாழ்வு அடிப்படை உள்ள அண்ணியா தன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் வளர்த்துள்ளார்! இது என்ன ஒருவகைத் தாழ்வு மனப்பான்மையில் வந்த மனப்பிறழ்வா? எப்படி  தன் அன்னை மொழியைக் கைநழுவ விட்டார்?  தமிழ் பாடசாலைகளுக்குக் கூட பிள்ளைகளை அனுப்பவில்லையா?

எமது தமிழினம் எங்கே செல்கிறது! என்று  பலவாறான கேள்வி, குளப்பம் உருவானது.

புலம்பெயர்ந்த துருக்கி இன மக்கள் தமது பிள்ளைகளுக்கு 3,4 வயது வரும் வரை அந்நிய மொழிப் பாலர் பராமரிப்பு நிலையங்களுக்கு தம் பிள்ளைகளை அனுப்புவதில்லை. தாங்களாக, பிள்ளைகளை மொழி, கலாச்சாரம், தமது உணவு என்று பழக்கிய பின்பே பிறமொழிப் பாலர் நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த அளவுக்குத்  தமது மொழி கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கின்றனர். தமது மரபு வழி வழுவுவதை விரும்புவதில்லை.

நம்மவர்களோ தலைகீழாக உள்ளனா. இலண்டன் என்பது சொர்க்க புரி என்று எண்ணி ஆங்கில மோகத்தை அணைத்து வாழ்கிறார்கள். அண்ணை ரகு மட்டுமல்ல, பலர் நமது வேர் எனும் மொழியை இழுத்து அறுக்கின்றனர்.

மறு பகுதியில் மண்ணுக்கு, மொழிக்காக சீவ மரணப் போராட்டம் நடக்கிறது.

ஒரு பிள்ளை தன் தாய்மொழியில் வல்லுனன் ஆகவோ அல்லது நன்கு பரிச்சயமாகி, சரளமாகப் பழகினாலோ அது பிறமொழி உயர்வுகளுக்கு நல்ல ஒரு ஏணியாகும் என்கிறார்கள். நல்ல படிக்கட்டாகும் என்கிறார்கள், மொழியியல் வல்லுனர்கள்.

தமிழன் என்பது ஆங்கிலம் பேசினால் இல்லாமற் போய் விடுமா? அல்லது வெள்ளைத் தோல் தான் எமக்கு வந்து விடுமா? உண்டு, உடுத்துப் படுத்த எமது மொழி எப்படி எம்மை விட்டு விலக முடியும்?
இது யாருடைய பிழை? நிச்சயமாகப் பெற்றோர் விடும் பிழை தான். பெற்றவரின் அறியாமை அல்லது அறிய மனம் இல்லாமை தான்.

இப்படியான குடும்பப் பிள்ளைகளுடன் நான் கூடியளவு தமிழில் தான் உரையாடுகிறேன். இது தான் என்னால் முடிந்த ஒன்று.

மங்கு தமிழ் என்று முதலில்
சங்கு ஊதுவது தாய்ப் பொருமாட்டி தான்.
ஆங்கில மோகம், அந்நியமொழி
ஓங்கி வளருது தமிழை உதைத்து.

கெஞ்சுதல் கொஞ்சுதல், மிஞ்சுதல்,
அஞ்சுதலும் அருமைத் தமிழானால்
இஞ்சு அளவும் எம்மை விட்டு
விலகாது எம் கொஞ்சு தமிழ்.

அம்மா அப்பாதமிழ் பேசி
சும்மா அலுப்பதும் தமிழாகி எம்
சுவாச ஒலியும் தமிழானால்
சுருண்டு, வரண்டிடாது தமிழ் மொழியும்.

….வேதா……

                                                                         

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-2-2011.

                                                    

 

9. படித்ததில் பிடித்தது. 2

 

ஓட்டக்கூத்தர் – 2

ஓட்டக்கூத்தர் பெயர் வரக் காரணம்.

செங்குந்தர் குடி மக்கள் தம் குலப்பெருமையைச் சிறப்பித்துப் புலவர் கூத்தரை ஒரு நூல் பாடியருளுமாறு வேண்டினார். தமது குலத்தைத் தாமே புகழ்ந்து பாடுவதா என கூத்தன் மறுத்தார். இதனால் கூத்தன் தம் குலத்தின் மீது பற்றற்றவர் என செங்குந்தர் மக்கள் கோபமடைந்து இவரைக் கொல்ல முற்பட்டனர்.               

இதனைக் கேள்விப்பட்ட கூத்தர், புவனை எனும் பதியில் வாழும் தன்மீது நேசம் கொண்ட சோமன் எனும் வள்ளனின் மாளிகையுள் புகுந்து அடைக்கலம் கோரினார். சோமன், திரைகள் இட்ட சிவிகையுள் தனது மகனை வைத்துத், தன் வீட்டைச் சுற்றி நின்ற மக்களிடம் சென்று ‘ இதோ உங்கள் மரபுப் புலவன். இடைவழியில் திரையை நீக்காது எங்கு செல்லவேண்டுமோ, அங்கு சென்று வேண்டியதை விருப்பப்படி செய்யுங்கள் ‘ எனக் கூறி சிவிகையைக் கையளித்தனர்.

தனிமையாகச் சென்று சிவிகையைத் திறந்த மக்கள், சிவிகையுள் சோமனின் மகனைக் கண்டனர். மகனுடன் சோமனிடம் சென்று புலவரைத் தேடும் காரணத்தை விபரித்தனர். ‘ உங்கள் வீரதீரத்தை யாபேரும் அறிய அரசன் முன்னிலையிற் காட்டினீர்களானால் கூத்தர் தங்குலப் பெருமையைப் புகழ்ந்து பாடுவார் ‘ எனச் சபையில் கூறினார்கள்.

அரசருடன் புலவர் கூத்தர் சபையில் அமர்ந்திருந்தார். மக்கள் கூட்டம் தமது கருத்தைக் கூறி தமது தலைகளை வெட்டி இரத்தப் பாவாடையில், சிரச்சிங்காதனம் இட்டுத் தம் சுத்த வீரத்தைக் காட்டிச் சபையோரை ஆச்சரியப்பட வைத்தனர். அந்த சிரச்சிங்காதனத்தில் புலவர் வீற்றிருந்து தன் மரபினரின் வீரப் பெருமைகளை ‘ஈட்டியெழுபது’ எனும் நூலாகப் பாடினார். ஆயிரம் தலைகள் அங்கு வெட்டப்பட்டன.

சிரச்சிம்மாசனம் இட்ட செங்குந்தர்களின் விபரம் உள்ள கூத்தரின் ஈட்டியெழுபதில் ஒரு பாடல் இதைக் கூறுகிறது.
    
     ‘ பூவார் புவனையில் சோமன் தரும் பழி போன பின்பு
       நாவாணர் போற்றிய நாடகம் கேட்ப நலமுடனே
       ஆவாணர் செங்குந்தர் ஆயிரத்து எண் தலை கொய்து  இரத்தப்                          
       பாவாடை இட்டது உலகமெல்லாம் புகழ் பாலித்ததே….’ 

பின்னர் புலவர் சரஸ்வதி தேவியை வேண்டி வெட்டப்பட்ட தலைகளும் உடல்களும் ஒன்று சேர ‘ எழுப்பெழுபது ‘ எனும் செய்யுட்களைப் பாடினார். வெட்டப்பட்ட தலைகள் உறையூரினின்றும் பறந்து சென்று, பரவலாக விழுந்து கிடந்த உடல்களொடு சேர்ந்து ஒட்டி உயிர் பெற்றன. வெட்டிய தலைகள் ஒட்டப் பாடியதால் இவர் ஒட்டக்கூத்தர் எனப் பெயர் பெற்றார். கூத்தரின் பாடல் ஒன்று இதைக் கூறுகிறது.

       ‘ நிலை வந்தார் உலகினுக்குமியாவர்க்கும்
            மானமதை நிலைக்கத் தந்தாh,
         கலை தந்தார் வணிகருக்குச் சீவனம் செய்
            திடவென்றே கையில் தந்தார்.
         விலை தந்தார் தமிழினுக்குச் செங்குந்தர்
            என் கவிக்கே விலையாகத் தம்
         தலை தந்தார், எனக்கும் ஒட்டக்கூத்தனெனப்
            பெயரினையும் தான் தந்தாரே….’                                                                                                                                                        

——–  தொடரும். ————-

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                                          

 

 

8. படித்ததில் பிடித்தது.

 

 

ஓப்பில்லாக் கவி ஓட்டக்கூத்தர். 1

உலகாளும் உமையொருபாகனின் பாதி உமாதேவியார் எடுத்த அடிக்குரிய செம்பஞ்சுப் பாதத்தின் அழகுக்கு, அழகு செய்தது பாதச்சிலம்பு. ஒரு தடவை அம்பிகையின் பாதச் சிலம்பிலிருந்து மணிகள் உதிர்ந்து விழுந்தன. உருண்டோடிச் சுழன்ற நவமணிகளில் அம்பிகையின் சிவந்த மலர் முகத்தின் சாயலைக் கண்டார் பரமசிவன். கண்டது மட்டுமன்று  அக் கனி முகத்தின் மீது ஐயன் காம இச்சை கொண்டார். ஒன்பது மணிகளிலும் தோன்றிய நவரத்தினப் பெண்கள் கருவுற்றனர்.

மேன்மை பொருந்திய வீரத்துடனும், மென்மையான மீசையுடனும், பெரிய தவத்தையுடைய வீரவாகு தேவர் முதலிய நவ வீரர்கள் மரபினர் தோன்றினார்களாம். இவர்கள் செங்குந்த தேவர்கள் மரபினர் ஆகினார்கள். இவர்கள் வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேசுவரர், வீரபுரந்தரர், வீரதீரர் எனும் நவ வீரர்களாவர். இச் செங்குந்தர் குடி வழியே வந்த சிவசங்கர பூபதிக்கும் – வண்டமர் பூங்குழலிக்கும் பிறந்த பிள்ளை  ” கூத்தர் “ என அழைக்கப்பட்டார். ஒட்டக் கூத்தர் எனப் பின்னர் பெயர் பெற்றார். இது பற்றிப் பின்னர் பார்ப்போம். செங்குந்தர் குடியினர் தமிழ்ப் பற்றும், புலமையும், சைவ  ஒழுக்கமும் நிறைந்தவர்களாவர்.

12ம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் பெருமக்களுள் கவிச் சக்கரவர்த்தி, கவிராட்சதர் என்று புகழ்ந்துரைக்கப்பட்ட பெருமகன் ஒட்டக்கூத்தராவர். இவர் உலகச் சக்கரவர்த்திகள் மூவருக்கு அவைக் களப்புலவராக, நல்ல நண்பராக, வழிகாட்டியாக விளங்கியவர். அவரது வம்சாவளிச் சிறப்புக் கூறும் கவி வரிகள்…..

 …….பாதநுபுரத்தில் தேவிசாயை கண்டமலன் கொண்ட
    காதலால் கருப்பமாகும், கதிர் நவமணி மாதர்க்கண்
    மேதகு வீரத்தோடும், மென் மீசையோடும் வந்த
    மாதவ வீரவாகுத் தலைவர் இத் தலைவர் மாதோ!…….                                                              

( தொடரும் )
                

 வேதா. இலங்காதிலகம்.
                 ஓகுஸ், டென்மார்க்.
                     22-3-2007.

 

                                                        

 

 

16. ஆன்மீகச் சிந்தனைகள்.

 

ஆன்மீகச் சிந்தனைகள்.
19-5-2007.
 

ண்டவனைச் சார்ந்து வாழுபவர்கள், அன்புள்ளவர்கள், அமைதி வாழ்வை வாழுகிறார்கள். அன்புடையோரிடம் கூற முடியாதவைகளை ஆண்டவனிடம் மானசீகமாகக் கூற முடியும். ஆலயத்தில் கண் மூடித் தியானித்தலில் எங்குமே அடைய முடியாத அமைதியை, இன்பத்தை அடைய முடியும்.
மனவியல் நிபுணர்கள் கூறும் பல வழிகளை அக் கால ஞானிகள் ஆண்டவன் எனும் பெயரில் கூறி மக்கள் பிரச்சனைகளை நிவர்த்தித்தனர்.

லயம் சுற்றி, குனிந்து, எழுந்து வணங்குதல் என்பவை அருமையான ஆரோக்கிய உடற் பயிற்சிகளாக இருந்தன, இருக்கின்றன.

நாள் முழுதும் பெரிய குடும்பத்திற்கு உழைத்துக் கொட்டும் ஒரு தாய்; ஆலய வீதி சுற்றி, விழுந்து தாளிட்டு வணங்குதல் அவளுக்கு அருமையான உடற் பயிற்சியாகும். அதில் அவள் அமைதி காண்கிறாள். அது மட்டுமின்றி குளித்துத் தூய ஆடை அணிந்து சுகாதாரமும் பேணப்படுகிறது. மனவியல் சிகிச்சை வழியெனும் ஆண்டவனைச் சார்ந்து வாழ்தல் மனதில் ஒளி தருமென்பது எனது சிந்தனையாகும்.

ன்பைக் கொடுத்தும், அவமதிப்பு, நிராகரிப்பு, அலட்சியம் பெறுகின்றனர் பலா.; ஆண்டவனிடம் அவைகளை நாம் பெறுவதில்லை. மாறாக அமைதி, மனப்பிரகாசம், இன்பம் அடைகின்றனர்.

2-6-2007.

ன உணர்வுகளின் தாக்கம் குரல் மூலம் தெரியப்படுகிறது. ஆத்திரமான குரல் மனிதனை எப்படி  கிளர்ச்சி பண்ணித் தூண்டகிறது என்பது நம்மால் சாதாரணமாகப் புரிந்திடக் கூடிய ஒரு விடயமாக உள்ளது.

றைவனைத் துதி பாடும் போது மனமுருகி, மன இறுக்கங்களை இளக்கி நாம் மென்மையாகத் தொழுது, எனக்கு அருள் செய்வாயாக என்று இழைந்து பாடுகிறோம் அல்லவா!

து போலவே இசை பாடும் போதும் மன இறுக்கம் முரட்டுத் தனங்களை விலக்கி விட்டு மனதை, குரலை இளக்கி மென்மையாக, குரலில் இனிய ஏற்ற இறக்கங்களுடன் பாடுவது உலகத்தாரை உங்கள் இசையோடு சொக்க வைக்கும் பாடல்களின் எண்ணிக்கையை ஏற்ற வேண்டும், பாடவேண்டும் என்ற பிடிவாதத்துடன் பாடுவது இசை இனிமையை இறக்கி விடும். இறைவனும் அதை விரும்ப மாட்டான். மென்மையையும், இனிமையையும் மனதில் சேர்த்து விடுங்கள். குரலில் அது தானாக வந்து ஒட்டி விடும். வேறு உணர்வோடு பாடுவதற்கும், பக்தியோடு பாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிய வரும்.

முரட்டுத்தனம், பிடிவாதத்தோடு பாடுவதும் குரல் மூலம் தெரிய வரும்.
பிறரை உங்கள் இசையெனும் பசை மூலம் ஒட்ட வைக்க, இறைவனோடு இணைய, பாடுங்கள்!

குரலிணைய இனிமையாக, மென்மையாகப் பாடுங்கள்!

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                                

 

167. வெளிச்சம்.

வெளிச்சம்

வெளிச்சம் நோக்கிய பயணம் உச்சம்.
வெளிச்சமில்லாப் பாதை தரும் அச்சம்
துணிவு வெளிச்சமோர் அதிட்ட மச்சம்.
துணிவான மனதிற்குத் துயரமும் துச்சம்.
விரிவான் நோக்கு மனதிற்கு வெளிச்சம்.
சொரியும் கானம் சோகத்திற்கு  வெளிச்சம்.
எரியும் வாக்கு நோவிற்கு எச்சம்.
சரியும் பார்வையில் கைபடுபொருள் வெளிச்சம்.

அருவியின் சொரிவு ஆனந்த வெளிச்சம்.
குருவியின் குறுநடை குதூகல வெளிச்சம்.
மருவிடும் வாசனை மனதிற்கு உச்சம்.
இருட்டில் மின்னலும் போக்கிடும் அச்சம்.
பொங்கிய காதல் வதனத்தில் வெளிச்சம்.
தங்கிய அகதிக்குப் பணமன்றோ வெளிச்சம்.
ஏங்கிய அன்பு கைப் பற்றியதும் வெளிச்சம்.
தூங்கிய மனதிலது சூரிய வெளிச்சம்.

இருண்ட வாழ்வில் கல்வி வெளிச்சம்.
சுருண்ட மனதில் நன்நட்பு வெளிச்சம்.
உருண்ட உலகினில் தாய்நிலமே வெளிச்சம்.
வரண்ட மனதில் தாய்மொழி வெளிச்சம்.
திரண்ட மனித நேயம் வாழ்வின் வெளிச்சம்.
வெருண்ட மனதிற்கு அன்பு வெளிச்சம்.
மருண்ட மனதிற்கு பக்தி வெளிச்சம்.
திரண்ட செல்வத்தில் சேமிப்பு மிச்சம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
கார்த்திகை 2004.

இதே தலைப்பில் எனது இன்னொரு கவிதை. கீழே இணைப்பு உள்ளது.

https://kovaikkavi.wordpress.com/2011/01/25/215/

 

                                           

Previous Older Entries Next Newer Entries