20. மொழிச் சுழியோடி……

 tttaaammmiill61

மொழிச் சுழியோடி……

 

ண்ணில் தொட்டு ஒற்றி

மண்ணில் விரலால் சுற்றி

சின்ன மழலையாக அன்று
கன்னித் தமிழ் எழுதியது.
ஆய்வுகள் இயற்கை மாற்றங்கள்
எய்தும் சம்பவங்கள், காலப்பதிவுகள்,
தேய்வுகள், திருத்தங்களையெடுத்தின்று
என்னோடுலகுய்வுற எழுதுவது.

விரலைந்தின் கூட்டிணைவால்
வரலாறு வரையும் தூரிகை.
வரமான தமிழாம் காரிகை
அரசாட்சி உரமாக எழுதுவது.
நானறிந்ததைப் பிறருக்குக் கையளிக்க
நற்கருத்தை உலகுக்குப் பரிமாற
நம் வேரான மொழி காக்க
நாள்தோறும் பதிவாக்க எழுதுவது.

டுத்த வாரிசுகள் மொழியால்
எடுத்தடி வைக்க உதவ
தொடுக்கும் மரதன் ஓட்டமாக
கொடுக்கும் அஞ்சலாக எழுதுவது.
மொழிச் சூழலழில் மூழ்கி
மொழி விளையாட்டில் சுழியோடி
பழிக்காது கற்றோர் காமுற
எழிலாகக் களித்து எழுதுவது.

கூனுடையோர் தமிழ் கோல்
பிடித்து நிமிர்ந்து நடக்க,
பண்ணாக, கண்ணாக இன்று
என்னேடுலகு இன்புற எழுதுவது.
எழுதுவது..எழுதுவது நிலம்
உழுவது போன்று எழுதுவது.
புழுதி பறக்க, சிறக்க
எழுவது இமயத்திற்கென்றெழுதுவது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.
31-3-2011.

12-4-2011ல் ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியில் (மாலை7.00 மணி- 8.00 மணி) கவிதை நேரத்தில் என்னால் வானலையில் வாசிக்கப் பட்டது.

https://www.facebook.com/photo.php?fbid=690263157669217&set=a.395787887116747.107113.100000566177564&type=1&theater&notif_t=photo_reply

                                                            

தாய்லாந்துப் பயணம்.- அங்கம். 11

எனது பயணங்களின் வரிசையில் மூன்றாவது பயணம்.                             
தாய்லாந்துப் பயணம்.-  அங்கம். 11.   

 

தாய்லாந்து மொழியில் வற் என்றால் மடாலயம்  monastry  என்பது கருத்து. கோயிலும் கோயிலுடன் சேர்ந்த இந்த அமைப்பு, முழு தாய்லாந்திலும் 21,000  wats  இருக்கிறதாம். பாங்கொக்கில் மட்டும் கிட்டத்தட்ட 200 வற்கள் இருக்கிறதாம். முழு தாய்லாந்திலும் 27,000 புத்த கோயில்கள் உள்ளதாம்.

வற் போ கோயிலின் உள்ளே போகக் கட்டணம் எல்லாம் மொழி பெயர்ப்பாளரின் பொறுப்பு.

கிறிஸ்துவிற்கு முன் 269லிருந்து 237களில் இந்திய அரசன் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் பாடலிபுரத்திலிருந்து சோனா தேராவும், உத்தர தேராவும் சென்று சுவர்ண பூமி வட்டாரத்தில் (மலேசியா, பர்மா, சுமத்திரா, தாய்லாந்தில்) புத்த மதம் பரப்பியுள்ளனர். இந்த வற் போ கோயிலின் பெயர் அப்போது யெலுவன விகார என்று இருந்ததாம்.

இந்தக் கோயிலில் இருந்து சிறிது தூரம் நடந்து ஒரு ஆற்றின் கரைக்கு வந்தோம். சாயோ பிறையா chao phraya  எனும் இந்த ஆற்றங்கரையில் கடவைப் படகில் போக அனைவருக்கும் பயண அனுமதிச் சீட்டுகளை மொழிபெயர்ப்பாளர் எடுத்தார்.

ஆறு பொங்கிப் பிரவாகித்து ஓடியது, மழை பெய்து வெள்ளமும் சேர்ந்து ஒரே கலங்கலாக இருந்தது. ஆற்றின் இக் கரையிலிருந்து அக்கரை போக வேண்டும். நீண்ட படகு. சுற்றி வர அடைக்காத, மேலே கூரை போட்ட பிளாஸ்டிக் இருக்கைகள் கொண்ட யந்திரப் படகு. மிக வேகமாக ஓடியது. இக்கரையிலிருந்து பார்க்க அக்கரை, சாயோ பிறையாவின் மேற்குக் கரைக் கோயிலின் கோபுரம் மிக அழகாகத் தெரிந்தது.

ஊரில் தென்னையளவு கிணறுகள் பார்த்து, எனக்குத் தண்ணீர் என்றாலே பயம். 

ஆனால் படகில் ஏறியதும், பயணம் செய்ததும் மிகக் குஷியாக இருந்தது. சிறிதளவு பயமும் இருக்கவில்லை.

இந்த சாயோ பிறையா ஆறு 370 கி.மீட்டர் நீளமானது. இதன் ஆதி காலப் பெயர் மீனம். இந்த நதி பிங், வங், நான் (யேn) யோம் எனும் கிளை நதிகளாக மேலே மலைப் பகுதிகளிலிருந்து ஊற்றாகி தாய்லாந்து நடுப்பகுதிக்கு வந்து தா சின் – சாயோ பிறையா என்று இரு கிளையாகி தாய்லாந்து வளைகுடாவில் சமாந்தரமாக விழுகிறது. 

 

வழமை போல்  மக்கள் குடிகள் இந்த ஆற்றின் கரையில் தான் தமது ஆதி வாழ்வைத் தொடங்கினர். மீன் பிடியும், பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியும், பிரதானமாக அரிசி விளைச்சலின்   கிண்ணமுமாக இந்த ஆறு இருக்கிறது.  river of king ஆற்றின் அரசன் என்றும் இந்த ஆற்றைக் கூறுகின்றனர். இது 25 மீட்டர் ஆழமுடையது என்று எமக்கு மொழி பெயர்ப்பாளர் கூறினார்.

       

ஐந்து நிமிடம் கூட போயிருக்காது அக்கரை சேர்ந்தோம். பாங்கொக் யாய் மாவட்டத்தில் அமைந்த வற் அருண்  Wat Arun  என்ற கோயிலை அடைந்தோம்.  Temble of dawn  விடியலின் கோயில் என்றும் இதைக் கூறுவதுண்டு. அதிகாலை ஒளி கோயிலின் மேற் பகுதியிற் பட்டு அற்புதமாக பிரதிபலித்து வானவில்லின் வர்ணஜாலமாகத் தெறிப்பதால் இப் பெயர் வந்ததாம். கோயிலின் முழுப் பெயர் வற் அருண்ரட்சாவரராம் ரட்சாவோர மகாவிகாரா. வெளியே தெரியும் நடுவில் இருக்கும் கோபுரமே இதன் முக்கிய பகுதியாகும்.

        

செங்குத்தான படிகள் இரண்டு மாடித் தட்டுகளாக உள்ளது. 

         

over the second terrace are four statues of the hindu god indra riding on Erawn.  2வது மாடித் தட்டில் சைவக் கடவுளான இந்திரனின் 4 உருவம் ஐராவதம் யானையில் போவதாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் எறவன் என்று கூற, நான் முதலில் இறைவன் என்றே விளங்கினேன். பின்னர் தான் எனக்குத் தெளிவானது அது ஐராவதம் யானை என்று. மொழிபெயர்ப்பாளரின் ஆங்கில உச்சரிப்பும் புரிந்து கொள்வது சிரமமாகவும் இருந்தது.

இரண்டு சீனப் போர் வீரர்களின் உருவமும் வற் அருண் கோயிலுக்குக் காவலாக வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது.    

     

 

 

–பயணம் தொடரும்-   

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-12-2008.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/07/10.html

                                         

வாழ்வியற் குறட்டாழிசை. 3 (இல்லறம்.)

 

Art by Vetha.

 

வாழ்வியற் குறட்டாழிசை. 3

இல்லறம்.

ஆணும் பெண்ணும் மனமொத்து இணைந்து(இணைக்கப்பட்டு)
வாழும் வாழ்வு இல்லறம்

‘இல்லறம்’ பெயரில் பல இணைகள்
பொல்லா வாழ்வு அமைக்கிறார்கள்.

நல்ல மனைவி(கணவன்) குழந்தை கொண்டவர்
நல்லறமாக வாழ்வைச் செலுத்தலாம்.

பெயரிற்குச் சோடியாகவும் இல்லத்தில் மிக
துயருடன் வாழ்வது இல்லறமல்ல.

கணவனும், மனைவியும் ஒத்த ஒழுக்கம்
அமைந்தவரானால் இல்லம் சிறக்கும்.

இல்லறத்தில் நல்ல குழந்தைகள் வாழ்வில்
மாபெரும் செல்வம் ஆகும்.

இல்லத்தில் பெற்றவர் முன் மாதிரியானால்
பிள்ளைகள் அவ்வழி தொடர்வர்.

நற் குடும்பம் அமைப்போர் வாழ்வு
வெற்றியுடைய இல்லறம் ஆகும்.

கணவனோ, மனைவியோ கெட்ட வழி
சென்றால் இல்லறம் பாழாகும்.

நல்ல இல்லறம் தலை நிமிர்ந்து
வாழும் தகுதி தரும்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-3-2011.

In Anthimaalai web site – http://anthimaalai.blogspot.com/2011/07/3_14.html

  

                                  

தாய்லாந்துப் பயணம். – அங்கம் 10.

எனது சுற்றுலாப் பயணங்களில் மூன்றாவது சுற்றுலாப் பயணம்.
தாய்லாந்துப் பயணம். –  அங்கம் 10.

 

5ம் திகதி பகல் வாடிவீட்டு வரவேற்பறையில் 12.00 மணிக்கு முன்னரே தயாராக இருந்தோம்.

               

மொழி பெயர்ப்பாளர் 12மணிக்கு ஒரு பெயர்ப் பட்டியலுடன் வந்து எங்களைத் தேடினார், சென்று கை குலுக்கி இணைந்தோம். எங்களை ஒரு மினி வானில் அழைத்துப் போனார். எம்மோடு இன்னும் 4, 5 பல்லினத் தம்பதிகளையும் ஒவ்வொரு வாடிவீடாகச் சென்று சேகரித்துக் கொண்டு ஒன்றாக பயணித்தோம்.

தெருவில் தெருக்கள் பெயர் எழுதும் நீலம், பச்சை நிற பெயர்ப் பலகைகள் தலைக்கு மேலே தெரியுமே! அதில் முக்கிய தெருவில் தெருவின் படம் நவீன பார்த்த சாரதி போல, அதாவது நவிகேட்டர் போல கீறப்பட்டு, அந்தப் பாதை எந்த இடத்தை நோக்கிச் செல்கிறது என்று தெளிவாக எழுதிக் காட்டியிருந்தது. நாம் நிற்கும் இடமும் ஒளி போட்டு மின்னியபடி இருந்தது. இது வேறு நாட்டில் நாம் காணாத ஒரு புது விடயமாக, மிகத் தெளிவான வழி காட்டியாகத் தெரிந்தது. ஒரு வேளை இப்போது இந்த முறை பல இடங்களிலும் வந்து விட்டதோ எனவும் தெரியவில்லை.                                                          

ராம்1, ராம்4, ராம்5, என்று தெருக்கள் பெயர்கள் காணப்பட்டது. ஆரம்பத்தில் இது என்ன! ராம், ராம் என்று பெயர்கள! என்பது புரியாத புதிராக இருந்தது. பின்பு தான் புரிந்தது அவை அரசர்கள் பெயர் என்று.

இதை விட, தெருவெல்லாம் நல்ல வண்ணமயமாக வாடகை வண்டிகள், டாக்சிகள் ஓடின. பச்சை, நீலம், மெல்லிய நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் இவைகள் காணப்பட்டது. கற்பனையில் பாருங்கள் வண்ணமயமாக இவை தெருவில் ஓடுவதை! இதற்கு முன்னர் ஓரிரு நிறத்தில் வாடகை வாகனங்களைக் கண்டோம். இப்போது பல நிறங்களாகத் தெருவில் ஓடியது, ஒரு வித அழகாகவும், விசேடமாகவும் தெரிந்தது.

இவைகள் தனியார் கூட்டுறவுக் குழுமங்கள் நடத்துவது. ஒவ்வொரு இணையமும் தம்மை அடையாளப் படுத்தத் தமக்கென ஒரு நிறமும், வண்டியில் குழுமப் பெயர்களுடனும் உண்டு.

வாடகை வாகனச் சாரதிமாரும் தமது அறிமுக அட்டையை வாகனத்தில் ஒட்டியுள்ளனர். எம்மால் அவர்கள் பெயர் முகவரியை வாசிக்க முடிகிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடி Wat pho எனும் reclaining  புத்தா என்ற கோயிலுக்குச் சென்றோம்.

தூங்கும் புத்தர் கோயில். உள்ளே போனதுமே கோயிலின் பிரசித்தம் வெளிப்படையாகவே தெரிந்தது. என்னவென்கிறீர்களா? இந்திய சினிமாக்களில் தாய்லாந்தில் கடற்கரை தவிர்ந்த காதல் காட்சிகள் எடுக்கப்படும் அழகிய மாளிகை மாதிரியான இடங்கள் தான்.    இவைகள். மிக அழகான தொழில் நுட்பக் கலையழகோடு இக் கோயில்கள் விளங்குகிறது.

முதன் முதலில் இலங்கை நடிகர் ஆகாஷ் (இலண்டனுக்குப் புலம் பெயர்ந்தவர்)  நடித்த படத்துக் காதல் காட்சி,   ஜாம்பவான் படத்தில் நிலா- பிரசாந்தின் காதல் காட்சியும் இங்கு தான் எடுக்கப் பட்டுள்ளது,   எல்லாக் கோயில்களையும் துண்டு துண்டாக எடுத்துக் கலந்து காட்டியுள்ளனர்.

இக் கோயிலில் கைப்பிடியுள்ள கோயில் மணிகளை நிலத்தில் வைத்தது போன்ற தோற்றமுடைய உருவில் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது.

    

அழகென்றால் அழகு! அத்தனை அழகு! உள்ளக அனுமதிக் கட்டணம் 20 பாத்.. 20 ஏக்கர் விஸ்தாரமான இடத்தில் உள்ள மிகப் பெரியது இக் கோயில்.                                                       

இங்கு படுத்திருக்கும் புத்தர் 46 மீட்டர் நீளமும், 15 மீட்டர் உயரமுமான தங்கக் கவசம் போட்ட சிலை. இது தாய்லாந்தில் உள்ள பெரிய புத்தர் சிலையாகும். இச் சிலை புத்தரின் நிர்வாணா எனும் நிலையைச் சித்தரிக்கிறது. புத்தரின் கண்களும், பாதமும் முத்துகள் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதாவது  mother of pearl  வைத்துக் கட்டப் பட்டுள்ளது.

         

இக் கோயில் 200 வருடங்களுக்கு முன் பாங்கொக் தலைநகராக முன்னர் கட்டப்பட்டு, காலத்திற்குக் காலம், இறுதியில் ராமா ஒன்றினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள கட்டிடத்தில் 394 புத்தர் சிலைகளைப் பார்த்தோம்.

தாய் மசாஜின் பிறப்பிடமே இந்தக் கோயில் தானாம். 1962ல் தாய்லாந்தின் பாரம்பரிய மருத்துவமும், மசாஜ்ம் ஆக முதன் முதல் சர்வகலாசாலை இங்கு தான் உருவகமான பெருமையும் கொண்டது இக் கோயில்.

புத்தபிக்குப் பாடசாலையும் அருகே உள்ளது. மிக ஆடம்பரமான காட்சியாக இக் கோயிலின் அழகு இருந்தது. இதைப் பார்க்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது மிக மகிழ்வைத் தந்தது.           

 –பயணம் தொடரும்—-                                                          

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-12-2008.

In anthimaalai web site –  http://anthimaalai.blogspot.com/

 

 

                                  

12. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 கவிதைத் தீப்பந்தமும் ஒரு ஆயுதமே!

                   

22. கண்சிமிட்டும் காலமது!.

 

 

கண்சிமிட்டும் காலமது!…

 

தூங்கி எழுந்ததும் உன் விழிப்புனலில் மூழ்கிட
ஏங்கியிருந்த தேன் ரசமான காலமது.
தேனீர் தரும் சாக்கில் தூக்கத்தால் உனையெழுப்புp
தேன்முத்தம் விழுமாவென பூத்திருந்த காலமது.

பாடசாலை செல்லும் பாதையில் நீ வருவாயென்று
பாதி வழியில் பின்னால் பார்த்திருந்த காலமது.
பகல் வேளை உணவைப் பந்தியாக அமர்ந்து
பசியாற, உனைப் பார்க்கப் பார்த்திருந்த காலமது.

இடைவேளை நேரத்திலுமுன் வகுப்பறையூடாக
இரகசியமான  உன் பார்வைக்காய் நடந்த காலமது.
மாணவர் தலைவனாய் நீ வகுப்பறைகள் மேற்பார்வையிட, நான்
வேணுமென்று குப்பை வீசியுனை வம்புக்கிழுத்த காலமது.

பாடசாலை முடிந்து, நீ வருகின்ற வேளைக்காய்
பார்க்காமற் பார்த்திருந்து காத்திருந்த காலமது.
வெளியே செல்லும் நீ, திரும்பி வரும் வரைக்கும்
வெறுமையாய் அமர்ந்து, படலை பார்த்த காலமது.

ஒன்றாக எல்லோரும் ஓய்வாக அமர்ந்திருக்க, நான்
உனக்காகச் சிந்துகள் பாடிய காலமது.
எல்லோரும் படுத்திட நீயும் நானும் விழித்திருந்து
எல்லாமே படிப்பதாய் எதுவும் படிக்காத காலமது.

ஒவ்வொரு துளிப் பொழுதும் உன்னருகே நானிருக்க
ஒவ்வொரு காரணங்கள் தேடிய காலமது.
எங்கு நீ உலவிடினும் அந்தக் கண்களுக்குள்
பங்கு போட்டுப் புகுந்திட ஏங்கிய காலமது.

வீட்டுக்குத் தெரியாமல் விழியுள் விழுந்த அந்த
கூட்டு விளையாட்டுக் குறையாத காலமது.
கற்பகப்பூக் காலமது கண்சிமிட்டும் காலமது.
கற்பூரமாய் மணக்கும் சிரஞ்சீவிக் காலமது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27.1-2003.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் அன்று என்னால் வாசிக்கப்பட்டது.)

                      

 

 

21. ஏன்?…

  

 

ஏன்?…

 

சத்தமில்லா யுத்தம் உன்னுடன் அன்பே!
ரத்தமில்லா யுத்தம் உன்னுடன் அன்பே!
வித்தனே!…அழகான….. எத்தனே!
சித்தமின்றி யுத்தம் உன்னுடன் அன்பே!
தத்திதத்தோம் ஸ்வரஜதியோடு
சித்தித்து மகிழ்ந்த சிங்காரப் பூங்கா
எத்திக்கும் எழிலாய் வியந்த வாழ்வு
அத்திப்பூவாய் இதழ் வாடிட
தித்திப்புச் சுவை மாறித் திணறுவதேன்!
பத்திக்கும் பல கண்கள் பட்டிட்டதோ!

அங்கங்கள் முடங்கிப் போர்வையுள் அடங்கும் உடலாக
அன்றாட நிகழ்வுகள் முடங்கி மன்றாடும் போர்க்களமேன்!
இடைவெளிகள் விரிந்து குடை விரித்து இருண்டு
படை கொண்டு கொல்லும் போர்க்களமேன்!

சுதந்திர வாழ் இன்பக் காற்றை
சுருக்குகின்றாயே..காற்றடைக்கும் உறையுள்!….
பின்னிய கனவைக் குலைத்து
அன்னிய நினைவை விதைப்பது ஏன்!
முத்தம், மோகம், மொத்தமாக எதுவுமில்லை.
புத்தனுமில்லை நீ! சித்தம் தெளிந்திடு!
பணம், மாளிகையெனும் ஆளுகை வேண்டாம்.
அமைதிக் காற்றின் சூழுகை போதும் வா!
மனச் சாந்தியின் தாழிசை போதும் வா!.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-6-2002.

 

Previous Older Entries