179. மதுவை விலக்கிடு! அன்றேல்

 

மதுவை விலக்கிடு! அன்றேல்
மாதாவை என்னோடு….

இறைவா! ஏனிப்படி என்வாழ்வை
குறையோடு படைத்தாய்! குளம்புகிறேன்.
மது அரக்கனோடு தந்தை,
மாதா தந்தையினரக்கப் பிடியில்.
ஆதாரமில்லாத என் நிலை
சேதாரமாகிச் சேற்று வழியேக
தோதாகிப் போனது, திருந்தியுள்ளேன்.
ஆதாயமாக நிம்மதி வேண்டும்!

தந்தையே! இப் பாதையில்
சிந்திய பாலாயுன் வாழ்வு.
அந்தி வானமாய்ச் சிவக்கும்
எந்தன் தாயின் மனதும்.
அந்தகனாய் இதற்கு ஒரு
அந்தம் காண முடியாது
நொந்து வேதனையில் நானும்,
இந்த நிலை மாற வேண்டும்!

மதுவை விலக்கிடு! அன்றேல்
மாதாவை என்னோடு விட்டிடு!
நீயே தெரிந்திட்ட பாதையை
நீயே தனியே அனுபவித்திடு!
கல்லானாலும் கணவன் அன்று!
புல்லானாலும் புருசன் அன்று!
வல்லமையற்றவன் கணவனென்றாலவன்
இல்லையென்றிருப்பதில் ஏது தவறு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-3-2011.

 

இந்திரபோக வாழ்வு
இங்குதான்!…..இங்குதான்!…

நவீன உலகிது! நாம்
நவ நவ திறமைகள் கொண்டு
நாகரீக வாழ்வு வாழலாம்.
நவமான வாழ்வும் வாழலாம்.
நாகம் தீண்டியது போல
நாசகார மதுவை அணைத்து
நாலு பேர் எம்மைக் கண்டு
நாணுகின்ற வாழ்வு எதற்கு!

அறிவும் ஆற்றலும் உண்டானால்
அருமையான விற்பன்னர் உதவுவார்.
அழைத்துச் செல்லலாம் தந்தையை!
அடம் பிடித்து நிராகரித்தால்
அது அவரின் தலைவிதி!
இதுவே புத்தியுள்ளோர் செயல்…
இகழ்ச்சிக்கு இடம் கொடேல்!
இந்திரபோக வாழ்வு இங்குதான்!…இங்குதான்!….

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-3-2011.

                         

 

தாய்லாந்துப் பயணம் – அங்கம் 8

எனது  பயண வரிசைகள் மூன்றில்
தாய்லாந்துப் பயணம் – அங்கம்.  8   
 

பாசம் வைப்பது மோசம் என்பது வாழ்வு அனுபவம். 10 வருடங்களுக்கு முன்பு 1998ல் ஒரு நாள், ……..

அப்போதெல்லாம் இலங்கைச் செய்திகள் அறிய டென்மார்க்கில் தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாத காலம். கொழும்பில் சிலிங்கோ கட்டிடத்தில்  The Finance company க்கு குண்டு போட்டு விட்டனர் என்று அறிந்து மாலை டெனிஷ் தொலைக் காட்சியைப் பார்த்த போது செய்தியில் சிலிங்கோ கட்டிடம் எரிவது தெரிந்தது.

…’ஐய்யோ! தம்பி வேலை செய்யும் கம்பெனி எரியுது! ” என்று
பதறிய நான் கொழும்புக்குத் தொலை பேசி எடுத்தேன். அன்று வேலையால் தம்பி வீடு வரவில்லை யென்றும், இரண்டு வைத்தியசாலைப் பெயர்ப் பட்டியலிலும் தம்பியின் பெயர் இல்லையென்றும், நாம் அவரைத் தேடுகிறோம் என்றும், தங்கை கூறினாள்.

கொத்தலாவலையின் கம்பெனி அது. என் தம்பி அங்கு நிறைவேற்று அதிகாரியாக (exicutiv staff ஆக) வேலை செய்கிறார் (இந்தக் கட்டுரை எழுதும் போது). எனக்கு ஒரேயொரு, உயிரான தம்பி. குண்டு வெடித்ததும் தம்பி தனது அறிமுக அட்டை, திறப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கலவரம் வெடிக்க முதல் தனது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து எடுத்திட வேண்டும் என்று இறங்கி ஓடியுள்ளார். மக்களோடு இடிபட்டு அவரது ஆடையில் இரத்தக் கறை பட்டுள்ளது. பொலிசார் சந்தேகப்பட்டுப் பிடித்த 16 பேரில் இவரும் ஒருவராக அகப்பட்டு விட்டார். பிறகு திருவாளர் கொத்தலாவலை வந்து இவர் தனது ஊழியர் என்று கூறி நீதிமன்றத்தில் தம்பியை விடுவித்தனர்.  இது அங்கு நடந்தது.

இங்கு இரவு முழுதும் நான் அழுதபடி.

விடிகாலையில் கொழும்புத் தொலைபேசியில் தம்பி பொலிஸ் நிலையத்தில் இருக்கிறார் என்ற செய்தியைத் தந்தனர். மூன்றாவது நாள் எனது ஒரு கால் நடக்க முடியாது நோவெடுத்தது.

வைத்தியர் முதலில் டிஸ்கோபொலப்ஸ் என்றார். ( முதுகு தண்டில் சவ்வு விலகுவது)

ஓரிரு நாள் படுக்கை ஓய்வின் பின் என்னால் நடக்க முடிந்தது. அது டிஸ்கோபொலாப்ஸ் (இந்த உச்சரிப்பு டெனிஸ் மொழிக்குரியது) இல்லையென்றும் ஆனது. ஆயினும் வைத்தியர் மசாஜ்க்கு எழுதினார்.

அதிலிருந்து தான் நான் 10 வருடமாகத் தேவை ஏற்படும் போது மசாஜ்க்குப்  போவதுண்டு. எப்போதும் பாரம் தூக்க வேண்டாம் என்றனர்.

தாய் மசாஜ் உலகப் பிரசித்தம். இரண்டு நாளுக்கொரு தடவை, தாய்மசாஜ்,  herbal மசாஜ் என்று மாறி மாறி அங்கு நான் போய் செய்தேன்.  கேபல் மசாஜ்  என்பது, மசாஜின் பின் சூட்டுடன் மூலிகைப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுப்பது.

கராட்டி ஆடை போல தொளதொள முக்கால் கால்சட்டை, முக்கால் கை நீட்ட மேலாடை தந்து ஆடை மாற்றக் கூறி ஆடையோடு தான் மசாஜ் செய்தனர் கேபலுக்கு நமது ஆடையில் சாயம் படும் என்று அவர்களது ஆடையோடு தான் படுக்க வைத்து செய்தனர்.

ஒரு முதிரிளம் பெண், சம்சாய் எனது மசாஜ்  பெண் திருமணமாகாதவள்,  அவள் கூறினாள்,  ” இங்கு ஆண்கள் நன்கு குடித்திட்டு குடும்பத்தைக் கவனிக்க மாட்டார்கள். இந்த நிலையை என்னால் சமாளிக்க முடியுமோ தெரியவில்லை. அதனால் தான் திருமணம் புரியவில்லை. இந்த வாழ்க்கை நல்லாயிருக்கு”  என்றாள்.

அந்த நீண்ட அறையில் 6,7 கட்டில்கள் விரித்தபடி, அழகிய தாய் படுதாக்கள் சுவரில் அழகுக்கு தொங்கியபடி. இனிய இதமான மெல்லிய இசை பின்னணியில் இசைந்தபடி, அழகிய பூ சாடிகள், மனம் மயங்கும் வாசனை அறையினுள்ளே.

 

      (for examble  -massage rooms.)

அந்தச் சூழலே நோவை மாற்றி விடும். ஒரு மணி நேரம் அந்த அறையுள் இருந்து வெளியே வரும் போது இந்த உலகமே என் கையுள் என்பது போன்ற மனதிடம் உடற்பலம் வந்தது போல இருந்தது.

மனமுணர்ந்து சேவை செய்தாள் அந்தப் பெண். ஒவ்வொரு தடவையும் அவளை இறுகக் கட்டியணைத்தே விடை பெற்றேன். அவளை மறக்க முடியாது.

இன்றும் அவளது மசாஜ்க்கு என் மனம் ஏங்கித் தவிக்கிறது.

– பயணம் தொடரும்——

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
29-11-2008.

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/07/8.html

 

                          

                            

178. உண்மை நின்றிட வேண்டும்..

 

உண்மை நின்றிட வேண்டும்..
ஓம்!….ஓம்!….ஓம்!…….ஓம்!….
               —சுப்பிரமணிய பாரதி—-

இந்திய தேர்தல் கூத்து!…..
சிந்தித்தால் சிந்தனை நின்றிடும்.
இந்தியா மட்டுமா!..எங்கள்…
இலங்கையிலும் நாற்றம் தானே!..

பணத்தால் அடிக்கிறான்! இலஞ்சப்
பணத்தால் அடிக்கிறான்…மனிதன்!…
குணத்தைக் குப்பையில் வீசி
பிணமாய் மனிதத்தை ஆக்குகிறான்!…

உண்மை உலகில் நின்றிட்டால்
மண்ணில் சுனாமியும் வராது.
எண்ணிடில் நல் தூக்கமும்
வெண்ணிலவாய் வாழ்வும் ஒளிரும்!…

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-3-2011.

                      

                                    

176. அரிய ஞானம்.

 

அரிய ஞானம்.

 

அறிவின் அனுபவ வானம் மனிதனில்
பொறிக்கும் உயர்நிலை அரிய ஞானம்.
மனிதனில் அடங்கிக் கிடக்குமொளி
அனுபவ மின்சாரத்தால் பெறுமொளி.

உயிர் கலைந்து உடலழிந்தாலும்.
உலகோருக்கு ஒளிதருமுன் ஞானம்
அகத்தால் வீசும் ஞான ஒளி
முகத்தில் வீசும் அன்பு ஒளியாய்.

அனுபவ அடுக்குகளின் பல பரிணாமம்
ஆசிரியனாக்கும்  உன்னை ஞானம்.
உலக ஆசைகளின் மயக்கமற்ற
உணர்வே தெளிந்த ஞான உண்மை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-3-2011.

In Muthukamalam…..  –    http://www.muthukamalam.com/muthukamalam_kavithai669.htm

 

                             

 

தாய்லாந்துப் பயணம் -அங்கம் – 7

எனது பயண வரிசைகளில் மூன்றாவது பயணதின்

தாய்லாந்துப் பயணம் -அங்கம் – 7   

காலையுணவு முடித்து அறைக்கு வந்தவுடனேயே கணவர் தொலைக் காட்சியில் செய்தி தான் கேட்பார்.

செய்தியின் பின்ணனியில் படங்கள் வருவதால் ஓரளவு என்ன விடயமென்று ஊகிக்க முடிந்தது. தாய்லாந்து இளவயதினர் ஆணும் பெண்ணுமாகவே செய்தி வாசித்தனர். அவர்கள் மொழியின் தொனியில்  தேவையான இடத்தில் அழுத்தம் கொடுத்து செய்தி வாசித்த முறை மிக கம்பீரமாகவே இருந்தது. தமது மொழியை அவர்கள் அழகாகக் கையாண்டனர்.

ஒவ்வொரு வசனங்களின் முடிவில் முற்றும் தரிப்புக்கு முன் இறுதிச் சொற்களை உச்ச சுருதியில் எம்மவரில் சிலர் உயர்த்தி ராகம் இழுப்பது போல அசிங்கம் எதுவுமே செய்யவில்லை. வாசித்தார்…கூறினார் என்று முடிக்கும் போது அந்த  ர்…ர்..க்குக் கொடுக்கும் அழுத்தம் இருக்கே அது சொல்லும் தரமன்று…( ஒரு வகையில் தமிழ் கொலை தான் என்பது என் கருத்து.)

எமது அழகான தமிழை, தாம் இலக்கம் ஒன்றான செய்தியாளர் என்ற நினைப்பில் சிலர் செய்தி வாசிப்பில் மேலே கூறிய முறையில் இங்கு அசிங்கம் பண்ணுவதை இந் நேரத்தில் என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.

ஆரம்ப நாட்களில் அழகாகச் சித்திரம் போல செய்தி வாசிப்பார்கள். நாம் ரசிப்போம். நாட்கள் செல்லச் செல்ல, சிறிது அனுபவம் வர தலை, கண்களால் அபிநயங்கள் பிடித்து நாடகமாகவே இங்கு ஆக்குகிறார்கள் செய்தி வாசிப்பை.

சரி மேலே தொடருவோம்.

பத்து மணி போல நாம் வெளியே வெளிக்கிட்டோம்.

முதலாவதாகத்
தாய்லாந்தில் வாங்கப் போகும்       பொருட்களைக் கடல்வழி மார்க்கமாக டென்மார்க் அனுப்புவதற்குத் தரகர்களைத் தேடினோம். அங்கு தடுக்கி விழுந்தாலும் தரகர்கள்,  cargo  ஏஐன்சிக் கடையாகவே இருந்தது. மூட்டை மூட்டையாகப் பொதிகளைக் கட்டிக் கப்பலுக்கு அனுப்ப, கனரக வாகனங்களில் தெருவை அடைத்து ஏற்றியபடியே உள்ளனர்.

இந்தத் தரகு வேலையோடு, உடம்பு பிடித்து விடுதலையும், அதாவது மசாஜ் செய்வதையும் அவரவர் தங்கியிருக்கும் வாடி வீட்டினரும் செய்கின்றனர்.
விலைகளிலே தான் வித்தியாசம் உள்ளது.

இலங்கைத் தமிழர், சிங்களவர், ஆபிரிக்கர், இந்தியர், மொறிசியர், பிலிப்பைன்ஸ் என்று பல்லின மக்களும் வந்து பொருட்கள் வாங்கிப் பொதி பொதியாக சுமந்தபடி தாம் தங்கியிருக்கும்  வாடி வீட்டிற்கு நடக்கின்றனர். யாரைப் பார்த்தாலும் கையில் ஒரு பெரிய பொதியுடனே தான் நடக்கிறார்கள். இவைகளைப் பார்க்க எமக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

கடைகளில் ஒரு பொருளைக் கண்டு வாங்க விலை கேட்டால் 200 பாத் என்கிறார்கள். ஒரு பொருளை 2 அல்லது 3 ஆக வாங்கினால் மொத்த வியாபார விலை 180, 160 பாத் என்கிறார்கள். அதையே 10 பொருளாக வாங்குகிறோம் என்றால் 120 அல்லது 80 பாத்துக்கும் விலையில் இறங்குகிறார்கள் பேரம் பேச வேண்டும். பயணத் தகவலில் இதையும் தருகிறார்கள். பொருட்கள் மிக மிக மலிவு தான்.

இரண்டாவதாக
நாம் தங்கிய அறையில் ஒரு பழைய மணம், பூஞ்சண மணம், தூசி மணம் வந்தது. அது எனக்கு அருவருப்பாக இருந்தது. இரண்டு   இரவுக்குப் பிறகு அறைக்கு அங்கேயே தொடர்ந்து பதிய வேண்டும், அல்லது வேறு இடம் தேட வேண்டும். நாம் வேறு இடம் தேட விரும்பினோம்.

மூன்றாவதாக

உடம்பு பிடித்து விடுதல், மசாஜ் செய்ய இடம் தேடினோம். தெருவுக்குத் தெரு உடம்பு பிடித்து விடும்    இடங்கள் இருந்தன. முதலில் உடம்பு பிடித்து விடும் நிலையத்திற்குச் சென்றோம். ஒரு மணி நேரம் உடம்பு பிடித்து விட, 180 பாத் அதாவது 30 குரோனர்கள். 60 நிமிடங்களும் பிடித்து விடுகிறார்கள். இதுவே டென்மார்க்கில் என்றால் ஒரு மணித்தியாலத்திற்கு 300 குரோனர்கள். ஒரு மணித்தியாலம் என்று கூறி 20  நிமிடங்களே பிடித்து விடுவார்கள். எதுவும் கூற முடியாது.                                                 

ஒரு தடவை அது பற்றி நான் டென்மார்க்கில் கேட்டும் பார்த்தேன். அது அப்படித் தான்.

முதலில் 180 பாத் என்று தயங்கினேன்.  6ஆல் பிரித்து 30 குரோணர் தானே என்று  ஊக்கப் படுத்தியது கணவர் தான்.

நான் தாய் மசாஜ்  ம், (body massage) ம்,

  

கணவர் பாதம் மசா ஜ் ம் செய்தோம். 

        

 பத்து வருடமாக டென்மார்க்கில் தேவை ஏற்படும் போது நான் இந்த மசாஜ்க்குச் செல்கிறேன்……. 10 வருடங்கள் என்பது மிக நீண்ட காலமல்லவா! …..    

 -பயணம் தொடரும்.—                                                                     

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
19-11-2008.

In anthimaalai web site  —   http://anthimaalai.blogspot.com/2011/06/7_27.html

 

                                             

175. வாழ்வுக்கூடப் பாடம்

 

வாழ்வுக்கூடப் பாடம்

 

உயரிய பாடம் அனுபவம்.
அள்ளுமிடம் வாழ்வுக்கூடம்.
நூலறிவு மட்டுமல்ல பாடம்.
நூற்கும் அனுபவமும் பாடம்.

வாழ்வில் எடுக்கும் ஓரடியும்
தாழ்வுயர்வும் ஆழ்ந்த அனுபவம்.
துணிவுள்ளோனிதை நேசிப்பான்.
முன்னேறுவோன் மிக விரும்புவான்.

அனுதினம் பெறும் அனுபவம்
சுய ஏணி, வெற்றிப் படி.
அனுபவ நுரைகளின் வரைகளே
அந்தியின் வெண் நரைகள்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-5-2004.

 

                              
 

20. தண்ணீர் சுடுவதென்ன!…சரம்சரமாய் பாய்வதென்ன!….

 

தண்ணீர் சுடுவதென்ன!…சரம்சரமாய் ……பாய்வதென்ன!….

(பாடலில் பிறந்த கவிதை.)

அலையில் அளையும் சிவந்த கரம் காண்கையிலே
ஆலைக் கரும்பாய் அலையுதடி என் மனசு.
மாலையிட எண்ணி மனசு தவிக்குதடி
நாளை நாளையென நாட்கள் ஓடுதடி.

சிவந்த திராட்சை ரசத்திலும் போதையடி
கருத்த திராட்சை உன் காந்த விழிகளடி.
தண்ணீர் ஓட்டத்தினுள் தகதகக்குமுன் கால்கள்
என் செந்நீர் ஓட்டத்தினை தகிக்க வைக்குதடி.

மௌனத்தை விலக்கி விடு, நீயாக
மகிழ்ந்தருகே  வா! என்னை மயக்கும் மானே.
மனசைத் திறந்தொரு வார்த்தை பேசிடடி!
மாலை மறையுமுன்னே என் மயக்கம் தீர்த்துவிடடி!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-3-2010.

http://www.geotamil.com/pathivukal/poems_march2010.htm

http://youtu.be/L06Oc56ttu8

 

                                   

வேதாவின் மொழிகள். 10

வேதாவின் மொழிகள். 10

கண்களின் தரிசனமும், காதுகளின் ஒலியும் கருத்துடன் மனதில் பதியும். இனிய நல்ல காட்சிகளைப் பார்க்கவும், இதமான மனது மயக்கும் இனிய ஓசையை காது கேட்கவுமே மனித மனம் விரும்புகிறது. மாறாக இனிமையற்ற இசை, இதமற்ற வார்த்தைகள் அதிகார வார்க்க அரசாங்கத்தின் குண்டுகள் போல நம்முள் விழுகிறது. தம்மை விடச் சிறந்தவரில்லை என்று வீசும்  இவ்வகைக் குண்டுகள் மனித நேயத்தை நசுக்கும்  குண்டுகள் என்று மனிதன் உணரத் தவறுகிறான். மாறாக இக் குண்டு உலகைத் திருத்தும் என்று எண்ணுகிறானே!…..அந்த மனிதன் பாவம்!….

நல்ல செயல்களைச் செய்யும் போது வஞ்சகம், சூழ்ச்சி, தவறுகள், கெட்ட எண்ணங்கள், செயல்கள் என்ற நினைவுக் குமிழிகள் வராது நிச்சயமாகப் தவிர்க்க வேண்டும். செய்யும் குற்றங்களுக்குச் சமாதானம் கூறிச் சமாளிப்பது தவிர்க்கப் பட வேண்டும்.

உன்னைச் சந்தோசமாக வைத்துக் கொள்! உன்னைச் சுற்றியுள்ளவர்களைச் சந்தோசமாக வைத்துக் கொள்! அல்லது துன்பப் படுத்தாமலாவது இரு!

வாலிபத்து மிடுக்கை வயோதிபத்தில் அணைத்திட வசப்படுத்துவது உடற்பயிற்சி. நீரும் பழமும் மேலதிகமான செல்வம்.
 

திறமை என்பது திட்டத்துடன் பயணிப்பது, பயனடைவது. இதில் திருத்தமின்றேல் அது வெறும் அறுந்த பட்டம்.

அன்பைத் தரமனமில்லாத போது தான் ஆயிரம் காரணங்கள், கதைகள் வெளிவரும்.

தவறுகளைப் பூசி மெழுகுதல் ஒரு வகை.
தவறுகளைத் தவறென்று எடுத்துக் கூறித் தெளிவாக்குதல் இன்னொரு வகை.
தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஒரு வகை.
கண்டும் காணாமல் இருப்பது இன்னொரு வகை.
தவறைத் தவறென்று எத்தனை பேர் ஏற்றுக் கொள்ளத் திடமாக உள்ளனர்!

4-7-2004
உறவு அலை ஓயாத புரள்வு –அதில்
சிறகொடிந்த சரிவு பிரிவு.

’30-7-2004.
துன்பம் ஒரு புற்றுநோய்.
இன்பத்தை விழுங்கும் முதலைவாய்.
ஐம்புலனின் சக்தியை ஆட்டம் காண வைக்கும்
துன்பத்தில் இன்பம் காணுவர் சிலர்.
துன்பத்தை வெறுப்பார் சிலர்.
துன்பம் தரும் வாழ்வியல் பாடம் பல.
துன்பத்தின் பின் வரும் இன்பம் இனிமை.

நிசம் பேசுதல் சத்திய சோதனை.
நிசமாக வாழ்தல்  நெஞ்சுக்கு நிம்மதி.
நிசம் சிலருக்கு வேம்பாகக் கசக்கும்.

1. துன்பமென்று ஏதுமில்லை. நாம் எந்த விடயத்தை எப்படி எடுப்போம் என்பதிலேயே உள்ளது.
2. நிசம் என்பது சிலருக்கு நிசமாக இருக்கும். அதுவே சிலருக்கு நிழலாக இருக்கும்
—மகள் லாவண்யா—

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-3-2011.

 

                             

 

174. செய்யுங்கள்! பெறுவீர்கள்! (பாமாலிகை)

செய்யுங்கள்! பெறுவீர்கள்!

 

வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள்!
விமர்சியுங்கள் விமர்சிக்கப்படுவீர்கள்!
மதியுங்கள் மதிக்கப்படுவீர்கள்!
அதியன்பை, அக்கறையைக் கொடுங்கள்!
அதையே திரும்பப் பெறுவீர்கள்!

வாய்மலர்ந்து வாழ்த்தாத ஒருவர்
ஆய்தலுடன் விமர்சிக்காத அன்பர்
வாய்நிறைந்த வாழ்த்தை, விமரிசனத்தை
கொய்திட விரும்புவது, மனிதரை
மெய்யாக ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

வெளியாகும் ஆக்கங்களை வாசிக்கும்
வேலையற்றோரின் விமரிசனமென்ற
வெகுளியான சிந்தனை வீச்சை
வெளித்தள்ளுங்கள்! உள்ளே ஆழமான
அர்த்தமுடை நட்பும் இருக்கலாம்.

19-4-2010.

முகநூலில் பிரசுரித்திருந்தேன் – அதன் தொடுப்பு இணைப்பு –

https://www.facebook.com/note.php?note_id=382367352181

http://www.vaarppu.com/view/2157/

 

                         

தாய்லாந்துப் பயணம். அங்கம் -6.

எனது பயண வரிசைகளில் மூன்றாவது பயண அனுபவம். 
தாய்லாந்துப் பயணம். அங்கம்  -6.

 

பேருந்தில் நாம் ஒரு மேம்பாலத்தில் உயரத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். எமது அருகோடு இன்னொரு மேம்பாலம். தூரத்தில் பார்த்தால் பாம்பு வளைவுகளாக அழகாகப் பல மேம்பாலங்கள். மேலிருந்து பார்த்து ஆ! வென்று வாய் பிளந்தோம்.

       

இங்கு தொலைக்காட்சியில் சென்னை நகர ஓரு மேம்பாலத்தை அடிக்கடி பார்க்கிறோமே, அப்படி தாய்லாந்தில் பல மேம்பாலங்கள்.

லூட்ஸ் பாதையில் யேர்மனியில் நாம் முன்பு பார்த்தது குட்டிக்குட்டி மேம்பாலங்கள். இது மிகப் பெரியது. ஒரு இடத்தில் நான்கிற்கும் மேற்பட்ட பாலங்கள் தென்பட்டன. ஏதோ வெள்ளப் பெருக்கிற்குப் பயந்து, சதுப்பு நிலத்திற்காக இப்படிப் பல பாலங்களைக் கட்டினார்களோ என்றும் தோன்றியது. பாங்கொக் ஒரு மேம்பாலங்களின் நகரம் என்பது என் கருத்து.

இது மட்டுமல்ல……                                            

 உயர் கட்டிடங்களோ எண்ணுக் கணக்கற்றவை. அம்மாடி! இந்தப் பக்கம் பாருங்கள்! அந்தப் பக்கம் பாருங்கள்! என்று கூறிக் கூறிப் பார்த்து இதற்கும் வாய் பிளந்தோம்.

                    

ஓரே உயர் மாடிக் கட்டிடங்கள் தான் போங்கள்! மேலே உயர் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து பேருந்து ஓட முதல் கீழேயும் பார்த்திடலாம் என்று பார்த்தால்

……”.’ இதென்ன! தரை தகரமாகக் கிடக்கே!’ ……என்றேன்.

….” வடிவாகப் பார்! கீழே குடிமனைகள் இருக்கிறது”… என்றார் என் கணவர்.

…..” ஓமப்பா! இதென்ன! ஆச்சரியம் இந்த ஒற்றுமை வேற்றுமை!’ ‘….என்றேன் நான்.

பாங்கொக் ஒரு உயர் கட்டிடங்களின் நகரம் என்பதும் என் கருத்து.                                                               

இதை விட சதுப்பு நிலத்தில் கம்புகள் நட்டு அதன்மேல் வீடுகள் கட்டியும் மக்கள் வாழ்வதும் தெரிந்தது. தண்ணீர் தேங்கி நிற்கும் நிலங்களாகவும், வயல்களாகவும் இருந்தது. இந்தப் பாதையில் அதிக உயரமற்ற தென்னை மரங்கள் இருந்தன. இந்த வியப்புகளைப் பார்க்கும் போது பாங்கொக்கில் தங்கிட நாம் சரியான இடத்தைத் தான் தெரிவு செய்துள்ளோம் என்ற திருப்தி உண்டானது.

நமது வாடிவீட்டு முகவரியைக் காட்ட அதற்குக் கிட்டவாகப் பெருந்தெருவில் எம்மை இறக்கி விட்டனர். ஏழு, எட்டு நிமிட நடையில் வாடிவீட்டை மாலை ஆறு மணிக்கு அடைந்தோம்.

Best bangkok house  ஏழு மாடிக்கட்டிடம் தான். எமக்கு 4வது மாடியில் அறை.
கட்டிலின் கால்மாட்டில் பாதிரிப்பூ மாதிரி மரூண் நிறத்தில் தனிப் பூவும், ஒரு தடவை வீட்டின் உள்ளே பாவித்து வீசும் பாதணிகளும் இருந்தது. நமது இரண்டு பேரின் தலையணை மேலே ஒல்வொரு பூவும், கட்டிலுக்கு அருகில் உள்ள சிறு மேசையிலும் ஒற்றைப் பூவுமாக அறை அலங்கரித்து இருந்தது.  சிறிய அறை தான்.

குளித்து ஆடை மாற்றி வெளியே கிளம்பினோம். தெருக்களைச் சிறிது சுற்றிப் பார்த்தோம். கைத் தொலைபேசியைப் பாவிக்க அட்டைகள் எல்லாம் வாங்கினோம். குடிக்கத் தண்ணீர், பழங்களுடன் அறைக்கு வந்து பிள்ளைகளோடு அமைதியாகக் கதைத்தோம்.

அதன் பின்பு வெளியே போய் இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு ஆறுதலாக அறைக்கு வந்தோம். குளிரூட்டி அறையாதலால் நன்கு குறைந்த அளவில் அதைச் சரிக்கட்டிக் கொண்டு அடுத்த நாள் வேலைத் திட்டங்களைப் பேசினோம்.

7.00 மணிக்கு அந்த வானொலி கேட்க வேண்டும்,  இந்தத் தொலைக் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஒரு சிந்தனையுமின்றி இரவு நிம்மதியாகப் படுத்துத் தூங்கினோம்.

அடுத்த நாள் முதலாம் திகதி அழகாக விடிந்தது. cnn ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் கேட்க முடிந்தது. தாய் மொழியிலும் (தாய்லாந்து) செய்திகளைக் காட்சியுடன் பார்த்தோம். 

வாடிவீட்டிலேயே காலையுணவு வசதியுடனே தான் அறையை எடுத்தோமாதலால் ஆறுதலாகப் போய் காலையுணவாக பாண்  பழ கலவை முட்டையென எடுத்தோம். கறுவா தூள் மட்டும் கொண்டு போயிருந்தோம், காலை உணவுடன் தவறாமல் அதையும் எடுத்தோம்.                           

———பயணம் தொடரும்.—                         

வேதா.இலங்காதிலகம். 
ஓகுஸ்,  டென்மார்க்.
5-11-2008.   

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/06/6.html

   

                               

Previous Older Entries Next Newer Entries