22. மொழிச் சிற்பவியல்.

 

மொழிச் சிற்பவியல்.செந்தமிழ் அருங்காவினில் நுழைந்து
அந்தமில்லா அருந் தமிழெடுத்து 
செங்கரும்புச் சாறில் தோய்த்து
சங்கம் வளர்த்த தமிழது
பொங்கிப் பாயுது கணனியில்.


ரு வொன்றைக் கவிதையுள்
உருவாக்கி உலகிற்கோர் உவப்பான
தகவலை, செய்தியை உருவேற்றும்
நற் போதனையைத் தருவதன்றோ
இவ் விதைப்பு நிலை.


காவிடும் அனுபவம், கற்பனைகள்
பூவிரிக்கும் பல்லுணர்வுகள்
காவிரியாகும் நாளங்களால் மேவி
தாவித் தமிழ் குழைக்கும்.
பாவிரித்துப் பதிக்கும் எழுதுகோல்.


லக்கணம் மீறியது புதுக் கவிதை.
இலக்கணமுடையது மரபுக் கவிதை.
வழக்கம் என்று ஒன்றும்
வழமை மாறலென்று ஒன்றும்
புழக்கமாகிறது செம்மை வரிகளாக.


விதை ஒரு இரகசியமல்ல.
தூவிடும் பெரும் பரகசியம்.
சொற்களின் அமைப்பில் அழகுச்
சிற்ப மாளிகைகள், கோபுரங்கள், 
சித்திரச் சிலைகளாக்கல் அற்புதம்!     


அற்புதம்! இன்பம்!


 
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ், டென்மார்க். 
31-5-2011.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-5-2011.

In Pathivukal web site this poem :-  http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=273%3A2011-07-14-00-50-44&catid=4%3A2011-02-25-17-28-36&Itemid=23

 

                         

Advertisements

பெற்றோர் மாட்சி 33.

 

 

 

பெற்றோர் மாட்சி 33.

 

17-11-2007.
சொர்க்கம் என்ற வாழ்வை இனிமையான
வர்க்கமாக்கு என்று பெற்றவரெத்தனை
தீர்க்கமாய் எம்மை வளர்த்தார்.
தர்க்கங்களும் தியாகங்களுமாய் வளர்த்தார்.
சொர்க்கம் கையினில் வருமென்று
வேர்க்க விறுவிறுக்க நாமும் பாடுபடுகிறோம்.

16-9-2007.
எங்கள் வாழ்வின் கலங்கரை விளக்குகள்
பொங்குமனுபவ, ஆதரவின் அரிச்சுவடி எழுத்துகள்.
மங்காத பாசமுடைய இனிய பெற்றவர்.
பொங்குமன்பின் அட்சய பாத்திரங்கள்.
இங்கிவ்வுலகில் வாழும் பேசும் தெய்வங்கள்.
எங்கும் வியாபித்த இறைவனுக்குச் சமமானவர்கள்.

ஆவணி-2007.
பெற்றோரின் ஆதரவின்றேல்
முற்றாத பிஞ்சு மழலைகள்
சற்றேனும் முன்னேற முடியாது.
வற்றாத அன்பிலும், அனுபவத்திலும்
குற்றாலம் அருவியில் குளிப்பதாய்
பற்றும் நம்பிக்கையில் நாம்
குவிப்பது வெற்றிகளையே.

15-9-2007.
துயர்களைத் துரத்தத் துணையானவர்கள்.
துணிவைத் துடுப்பாகத் தர முயன்றவர்கள்.
துருவநட்சத்திரமாக எம் மனதில் உள்ளவர்கள்.
துடிப்புடை எமதுயர்வின் சிந்தனையுடையவர்கள்.
துலக்கமாகக் கூறமுடியும் வேறு யாரது?
துயிலாத கண்ணாகவெமைப் பாதுகாத்த பெற்றோரே.

24-1-2009.
முதியோரான பெற்றவர் தரும்
முதிர்ந்த சிந்தனைகளை நாம்
மனமுவந்து ஏற்று நடக்கலாம்.
முகமூடியற்ற அனுபவ உரையது.
முன்னுரையாகுமிது பேரக்குழந்தைகளுக்கு.
முதன்மையான வழிகாட்டியுமாகும்.

தை -2009.
பூமியின் வாழ்க்கை, உறவினால்
பூத்துக் குலுங்கக் கிடைத்த பொக்கிஷம்.
பூமி போல் பொறுமையுடையவர் பெற்றோர்,
பூப்போல் அவர்களைப் பேணுங்கள்.
பூமியில் உங்கள் பாதை நிம்மதியில் பூக்கும்.
பூக்குமேயதனால் சிறந்த வாழ்வு அனைவருக்கும்.

 

ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(முதற் படம் – நன்றி ஆனந்தவிகடன்)

 

                         

 

 
 

23. கவிதை பாருங்கள்(photo,poem)

 

 

                              

192. வினைத்திட்பம்.

 

 

வினைத்திட்பம்.

 

முயற்சித் திருவினையைக் கண்டீரோ!
பயிற்சியின் உயர்ச்சியைக் கண்டீரோ!
அயர்ச்சியில்லாக் கால மயிலின்
வியப்புடைத் தோகை விரிப்பின்
நயம் கண்டீரோ! ஆனந்தம்!
வாய்ப்பின் அற்புதம்! பரமானந்தம்!

னந்தம்! அங்கீகாரம் ஆனந்தம்!
ஆனந்தம்! சங்காரமின்றி வழங்கும்
அனந்த ஊக்கம் ஆனந்தம்!
ஓங்கார பலத்தில் ஓசையின்றி
ஓங்கிடும் வினைத் திட்பம்
சிங்காரமாய் அரங்கேறல் ஆனந்தம்!

நிலையூன்றும் சுயநலச் சுழிகள்,
அலையிழந்து சிக்கும் மனிதன்,
நிலையாகப் போராடி எட்டும்
கலையான வெற்றி கண்டீரோ!
விலையற்ற  இலக்கு எட்டும்
நிலை, வாய்ப்பு! ஆனந்தம்!.

யிரோட்ட வாழ்வில் நிதம்
போராட்டம் பல விதம்.
தட்டுங்கள் திறக்கப்படும் வேதம்.
எட்டுங்கள் வாய்ப்பிற்கு நிதம்!
தேரோட்ட இலக்கின் நோக்கு
நீராட்டும் வாய்ப்பு! வியப்பு!

ற்றும் வீரியக் கனவு
இற்றிடாது சிந்து பாடும்!
வற்றிடாக் கடலாய் உந்தும்!
உற்ற காலத்துத் திருவினையால்
வெற்றி காணலாம் வினைமனம்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
25-5-2011.

 

                              

 

 

தாய்லாந்துப் பயணம். – அங்கம் 18.

எனது பயண அனுபவத்தில் 3வது பயண அனுபவம் 

தாய்லந்துப் பயணம். – அங்கம் 18.

தாய்லாந்து நாட்டின் உருவ அமைப்பானது இதன் கிழக்குப் பகுதி யானையின் காது ஆகவும், தெற்குப் பகுதி தும்பிக்கையாகவும், யானை உருவில் தாய்லாந்து உள்ளதாகவும் தாய்லாந்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.     (படத்தில் காணலாம்.   எல்லை நகரங்களைக் கோடிட்டுள்ளேன் மலேசியா அடியில் உள்ளது.)

 

தாய்லாந்தின் மேற்கு, வடமேற்குப் பகுதி மியன்மார் – பர்மா தேசமும், வட கிழக்கு, கிழக்கில் லாவோஸ், அல்லது கம்போடியாவாகவும், தெற்கில் மலேசியாவும் எல்லையாக உள்ளது.

மொத்தம் 76 மாகாணங்களாக தாய்லாந்தைப் பிரித்துள்ளனர். தத்தமது பிரிவின் தலை நகரப் பெயரே மாகாணப் பெயராக உள்ளது. பாங்கொக் தனி மாகாணமாக இன்றி, தனி ஒரு விசேட பிரிவாக உள்ளது

இப்போது (2009) ஆளும் அரசன் கிங் பும்பில், அதாவது ராமா 9.ஆவார். 

நாம் அடுத்தொரு பயணமாக கோறல் ஐலண்ட், கோறல் தீவுக்கு, பவளத்தீவுக்குப்  போவதாகப்  புறப்பட்டோம்.  இருவருக்கும் செலவு 1000 பாத் ஆகியது. 150 டெனிஷ் குரோனர். இது பயணம், பகல் சாப்பாடு உள்ளாக அடங்குகிறது.                                                                

அதிகாலை ஏழரை மணிக்கு பயணம் ஆரம்பமானது.

பாங்கொக்கின் கிழக்குப் பகுதிக்குப் பயணமாகும் போது வாகனச் சாரதி ஜேர்மனி, பிரான்ஸ் போல தெருவிற்கு கட்டணம் கட்டினான். அதாவது றோட் ராக்ஸ் போகும் போது 30 பாத், வரும் போது 30 பாத் கட்டினான்.  ( படத்தில் பாங்கொக், பற்றியா இரு இடமும் காணக்கூடியதாக கோடிட்டுள்ளேன்.)

போக முதல் கடற்கரையில் போடக் கூடிய பாதணி அதாவது பீச் ஸ்லிப்பர்ஸ், நீச்சலாடை, துவாலையும் தேவையென அறிந்து கொண்டோம்.

பாதையில் தெருவின் மேலேயுள்ள பாலங்களில் தாய்லாந்து ராசா ராணியின் படங்கள் 2, 3 விதமான படங்களாகப் பெரிதாக்கி மாட்டியிருந்தனர். இது எமக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

அடுத்து இங்கு ஐரோப்பாவில் மின்சாரத் தொடர்பு இணைப்புகள் (அதாவது வயர்கள்) நிலத்தின் கீழே அல்லவா நம்மால் கண்டு கொள்ள முடியாதவாறு புதைக்கிறார்கள்! அங்கு தோரணம் தொங்குவது போல கண்டபடி வயர்கள் தெருவின் ஓரங்களில் அசிங்கமாகத் தொங்குகிறது, இதைப் பார்க்கக் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருந்தது.

பயணத்தின் பாதையில் வாழைமரம், தென்னை மரங்கள், ஐரோப்பாவில் பெரிய வாழைப் பழங்களே பார்த்த கண்ணுக்கு கதலி வாழைப்பழம் போல குட்டி வாழைப் பழங்கள் காணக் கூடியதாக இருந்தது.

நாம் பற்றியா எனும் நகரத்திற்குச் சென்றோம். நல்ல உல்லாசப் பயண நகரம் தான் பற்றியா. கடற்கரையோர நகரம்.

இதுவரை சனநெருக்கடி கொண்ட பாங்கொக்கை விட்டுக் காற்றாட வந்துள்ளோம். ஒன்றரை இரண்டு மணிநேர வாகன ஓட்டத்தின் பின் எம்மை அழைத்துப் போனவர்களின் கந்தோரில் சென்று அமர்ந்து அவர்களின் அடுத்த மணி நேரத் திட்ட விளக்கங்களைக் கேட்டோம்.

சுமார் 10.45க்கு கடற்கரையோரம் வந்து அமர்ந்தோம். கன்வஸ் சாய்மானக் கதிரைகள் வரிசையாகப் போடப்பட்டு சூரியக் குளிப்புக்குத் தயார் நிலையில் கடற்கரை இருந்தது. பால் வெள்ளை மணல். சளக் சளக்கென அலையடிக்கும் கடல். தூரத்தில் பல உயர் மாடிக் கட்டிடங்கள். அழகான காட்சியது.

     

வயதான வெள்ளையர்கள் அரைக் கால்சட்டை ரி சேட்டுடன் அமர்ந்திருக்க, இவர்களைச் சுற்றி இளம் தாய் கன்னிகள் சுளன்றபடி திரிந்தனர்.  ‘பார்!  பென்சனை எடுத்து விட்டு வெள்ளைகள் வந்து செய்கிற வேலை இது தான்!’ என்று என் கணவர் நமட்டுப்  புன்னகையுடன் கூறினார்.

நாம் சுமார் பத்துப் பேர், வேகப் படகில், ஸ்பீட் போட்டில் போகத் தயாரானோம். மொழி பெயர்ப்பாளர் வந்த பினனர் எம்மைப் புகைப் படங்கள் எடுத்தனர். அதாவது அவர்களது புகைப்படப் பிடிப்பாளர் எம் அனைவரையும் படம் எடுத்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம் எம்மைப் படம் எடுக்கும்படி அவர்களைக் கேட்கவே இல்லையே என்று.

ஆனால் என் கணவர் ‘ பாரேன்!  எவ்வளவு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு என்று! சடுதியில் ஏதும் விபத்து ஏற்பட்டாலும் ஒரு பாதுகாப்புக்கு படம் எடுக்கிறார்களப்பா’ என்று விழியகலக் கூறினார். நினைத்துப் பார்க்கும் போது இது சரியாகவே இருந்தது.

பற்றியாவிலிருந்து கிழக்குப் பற்றியா ஓரமாக தாய்லாந்து வளைகுடாவில் 7கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  கோ லான் (koh larn)  எனும் பெயர் கொண்ட கோறல் தீவுக்குப் புறப்பட்டோம். 44சதுர மீட்டர்கொண்டது இத்தீவு. அருகருகாக 3 தீவுகள் உள்ளது. கோ குறொக், (koh krok) கோ சக்  (koh sak)  என்பன மற்றைய தீவுகள் பெயர்.          

——–பயணம் தொடரும்.—————–

வேதா. இலங்காதிலகம்.  
ஓகுஸ்   டென்மார்க்.
11-2-2009.

                             

வாழ்வியற் குறட்டாழிசை. 6 (கோபம்)

Art by Vetha.

வாழ்வியற் குறட்டாழிசை.. 6

கோபம்.

பெரும் மனித சக்தியல்ல கோபம்
உருப்படாத மாபெரும் தவறு.

அறியாமையின் திரள்வு பெரும் கோபம்.
வெறியாகி சுயத்தைத் தின்றிடும்.

தனியன் கோபம் உருண்டு திரண்டு
மனிதனின் குடும்பப் பகையாகிறது.

குடும்பப் பகை உருண்டு திரண்டு     
சமூகம், நாட்டுப் பகையாகிறது.

வன்முறை நிறைந்த தீவிரவாதத்திற்குப் பெரும்
கோபமே முதலான படியாகும்.

கோபமொரு சதுரங்கம். காய் நகர்த்தலில்
பகையை நட்பாக்குவோன் வெற்றியாளன்.

அடுத்தவர் மீது ஏவும் கோபம்
தொடுத்தவருக்கே பாதிப்பு உருவாக்கும்.

கோபம் அடுத்தவருக்கு வலி ஏற்படுத்துவதில்
கோபக்காரன் மிக மகிழ்வான்.

மதகௌரவம், கொள்கைகள் நிலையூன்றத் திணிக்கும்
கோபம், வன்முறைக்கு அழைக்கும்.

கோபத்திற்கு இன்பத்தை விலையாக்குதலிலும் அமைதியாக
இருக்கப் பழகுதல் நன்மையாகும்.

நாம் கோபப்படும் போது நம்
நல்ல குணாதிசயங்களை மிதிக்கிறோம்.

கோபம் ஒரு செய்தி, அதன்
காரணத்தைக் கண்டிடல் அவசியம்.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-5-2011.

In Anthimaalai web site:-       http://anthimaalai.blogspot.com/2011/08/6.html

    

                                    

34. நட்சத்திரங்கள்.

 

 

நட்சத்திரங்கள்.

வானில் தொங்குமிவை சரவிளக்கா!
வானிலே ஒரு கார்த்திகைத் தீபமா!
ஈர உடலிலொட்டிய காய்ந்த மணலா!
வைரங்களோ! கண் பறிக்கும் போலிகளோ!

மெழுகுவர்த்தித் தீபத்தால் நான்
ஒழுகவிட்ட நீருள் மணிகளா!
மாதுளை முத்து மணிகளையென்
மழலை உதறிவிட்டாளோ!

வான மல்லிகைப் பந்தலின்
மின்னும் அழகு மல்லிகைகளோ!
நீலமேகக் கன்னியுன் மேனியில்
மின்னும் நவீன அழகுப் பொட்டுகளோ!

சாலம் காட்டும் மின்மினிப் பூச்சிகளோ!
நீலப் பட்டில் தைத்த முத்துக்களோ!
வானக் கடலின் இரவுத் தங்க
மீன்குஞ்சு நட்சத்திரங்களோ!

கவிதையாம் சொற் சித்திரம்
விதைத்த பாடுபொருள் – நட்சத்திரங்கள்.
இதயக் கலசத்தால் கொட்டி வழிந்தவை
தமிழ் சொற் குவியல் நட்சத்திரங்கள்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-11-2010.

In Tamilauthors.com…(link)

http://www.tamilauthors.com/03/281.html

                               

                          

Previous Older Entries