18. இரட்டைக் கட்டிலில்..(சிறு கட்டுரைகள்.)

வணக்கம் அன்புறவுகளே சுமார் 2 கிழமையின் பின் தொடர்கிறேன்.
(இந்த ஆக்கம் இலண்டன் தமிழ் வானொலி ” ஓடி விளையாடு பாப்பா” நிகழ்வில் 2004ல் ஒலி பரப்பானது)

இரட்டைக் கட்டிலில்..

( இதைக் குழந்தைகள் உலகம் ஆக்கமாகவும் நீங்கள் எடுக்கலாம். தொடராக விரும்பியவர்களும் எழுதலாம். கௌரி சிவபாலன் இந்த வேண்டுகோளை தொடர் பதிவிட எனக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடக் கூடியது.)

காதலுடன் கணவரோடு துயில்வது, அவரது உடற் சூடு, உடலின் மணம் எப்படி சுகத்தைத் தருகிறதோ , அப்படியே ஒரு குழந்தைக்கும் உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர்களான அம்மா அப்பாவுடன் துயில்வது சுகம் தருகிறது.

கருப்பையின் இருட்டில் தாயின் உடற் சூட்டுடன் மிகப் பாதுகாப்பாக தூங்கியது குழந்தை. அம்மாவின் உடலில் இருந்து வெளியேறும் மூச்சுச் சத்தம், இதயத் துடிப்பைக் கவனித்த பிள்ளை,

அம்மாவின் இருமலின் போதும், குறட்டை விட்ட போதும், சிரிக்கும் போதும், கதைத்த போதும் கேட்டுப் பழகியபடி தூங்கியது. இத்தனை ஆரவாரத்துடன் துயின்ற பிள்ளையைத் தனியே குழந்தை அறையில் படுக்கப் போடுவது மிகவும் கொடுமை அல்லவா!

குழந்தைப் படுக்கையறைக் கதவை இழுத்து மூடுங்கள். உங்கள் இரட்டைக் கட்டிலுக்கு குழந்தையை எடுத்து அணைத்துத் துயிலுங்கள். அப்பா அம்மாவுடன் இரட்டைக் கட்டிலில் படுக்க வைக்க நெருக்கடியாக இருந்தால் சிறு தொட்டில் படுக்கையோ எதுவோ உங்கள் கை எட்டும் படியாகப் படுக்க வையுங்கள்.

குழந்தை உங்களை (உணர), உங்கள் மணம், உங்கள் குரலையும் கேட்டு உணரட்டும். பசித்த போது அம்மா மார்பைச் சுவைக்கட்டும்.

பிள்ளை அருகிலிருந்தால் தான் பிள்ளைக்கு ஏற்றபடி தாயால், தந்தையால் உடனே இயங்க முடியும். குழந்தையின் சமிக்ஞையை உடனே அறிய முடியும். இது குழந்தைக்கு நம்பிக்கை தரக் கூடியது. சுய பெறுமதியைத் தரும். குழந்தையின் தேவைகள் உடனே பூர்த்தியாகும்.
தனி அறையில் படுத்துத் தாயைத் தேடிப் பலமாகக் கத்தத் தேவையில்லை. பிள்ளை அருகிலிருப்பதால் தாயும் சேயும் நிம்மதித் தூக்கம் பெற முடியும்.

நாள் முழுதும் விலகியிருக்கும் தந்தையின் நெருக்கமும் ஒன்றாகத் தூங்கும் போது கிடைக்கிறது.

தந்தையின் நெருக்கமும், உடற் தொடர்பும் பிள்ளைக்குப் பாதுகாப்பு உணர்வு தருகிறது. இப்படி ஒன்றாகத் துயிலும் மன பலம் பின்னால் பிள்ளை தனியே தனது அறையில் துயில்வதற்கு மனத்துணை ஆகிறது.

”  வெள்ளி நிலாக் குழந்தையைத்
தள்ளியே தூர வைக்காது
உள்ளம் நிறைந்த உங்களன்பைக்
கிள்ளிக் கொடுக்காது, வாரி
அள்ளியள்ளிக் கொடுங்கள்.”

. –வேதா—

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-5-2004

  

                             

 

29. இயக்கும் புதுச் சக்தியாக…(பா மாலிகை (காதல்)

 

இயக்கும் புதுச் சக்தியாக…

 

விழி மொழி வீசிய கதிர்
வழி – களி கொண்ட புதிர்
மொழி – தந்தது சல்லாபச் சதிர்.
அழிந்தது இதயம் மூடிய கூதிர்.

ளமையாம் இனிய தேவகோட்டை
வளமை தருமொரு ராஜபாட்டை.
களமது காதற் கனவுக் கோட்டை.
உளமே தினம் மறக்கும் வீட்டை.

லராத பூவாய் விரியும்
மனம், மணப்பதில்லை, பரிவில்
தினம் தானே சிரிக்கும்.
கனமற்ற காதல் விரிப்பு.

யக்கம் புது மயக்கம்.
வியக்கும் நிலை இயக்கும்.
இலயிக்கும் நிலையிது உவக்கும்.
நயக்கும் காதலெனும் முயக்கமே.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-11-2011.

(முயக்கம் -தழுவுதல்,     கூதிர்- பனக்காற்று, குளிர்.)

 

                           

 

17. நீங்கள் ஒழுங்கானவரா?

 

நீங்கள் ஒழுங்கானவரா?

( இந்த இடுகையின்  இரண்டு – ஓடி விளையாடு பாப்பா – அனுபவக் குறிப்புகளும் 2004 ம் ஆண்டு இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானது.)

நீங்கள் எடுத்துப் பாவித்த பொருட்களை எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஒழுங்கானவர் தான் வாழ்த்துகள்!
உங்கள் பிள்ளைகளுக்கும் இப் பழக்கத்தைப் பழக்குகிறீர்களா?

ஏன்?

மறந்துவிட்டீர்களா?

இன்றே பழக்கிடுங்கள்!

  – மேசையிலிருந்து அல்லது சாய்வுக் கதிரையிலிருந்து படித்த பின் புத்தகங்களை,               எழுதுகோலை உரிய இடத்தில் வைக்கிறீர்களா?

– சாப்பிட்டபின் சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவி உரிய இடத்தில் கவிழ்ப்பீர்களா?

– பாண் வெட்டிய பின் மேசையைத் துடைத்து, பாண் வெட்டிய பலகையை உரிய இடத்தில் வைக்கிறீர்களா?

– காலணிகளைக் (சப்பாத்துகளைக்) களற்றி உரிய இடத்தில் வைப்பீர்களா?

– மேலாடையை (ஜாக்கெட்டை) களற்றி கண்ட இடத்தில் போடுகிறீர்களா? அதற்குரிய இடத்தில் கொளுவுவதில்லையா?

– அழுக்குத் துணிகளை அழுக்குக் கூடையில் போடுகிறீர்களா?

இப்படி ஒவ்வொரு செயல்களையும் சிறு வயதிலிருந்து பழகும் போது எதிர் காலத்தில் உங்கள் வாழ்வில் நீங்கள் சிறந்த கணவனாக, சிறந்த மனைவியாக வாழ முடியும்.
உங்கள் பழக்க வழக்கத்தால் நீங்களும் பெற்றோரும் சிறப்படைவீர்கள், பெருமையடைவீர்கள்.

பிள்ளைகளுக்குப் பெற்றோர் உதவி செய்ய, பிள்ளைகள் பெற்றோருக்கும் உதவி செய்யலாமன்றோ!

22-8-2004.

 

 

ராகுல் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில்லை.

வழக்கமாக ராகுல் கழிவறையில் (ரொய்லெட்டில்) நின்று கொண்டு தான்
சிறுநீர் கழிப்பான். இப்போதெல்லாம் இருக்கையில் அமர்ந்து சிறுநீர் கழிக்கிறானாம். இது அம்மா ரோகிணிக்கு மிகவும் ஆச்சரியம். ஏப்படி இப்படி மாறினான்!  இதன் காரணம் என்ன?

பாலர் நிலையத்திற்கு ராகுல் வரத் தொடங்கி மூன்று கிழமை தான் ஆகிறது. மூன்று வயது ராகுலின் அம்மா ரோகிணி பாலர் நிலையத்தில் இது பற்றி அறிய கேள்விக் கணை தொடுத்தார்.

” ஆண் பிள்ளை நின்று தானே சிறு நீர் கழிப்பார். எப்படி கழிவறை இருக்கையில் அமர்ந்து சிறு நீர் கழிக்க முடியும்? வெளியே எல்லாம் சிந்திடாதா? ” 
இலேசான புன்முறுவலுடன் கேள்விக் கணை தொடுத்தார் ரோகிணி என்னிடம்.

” ஆமாம்! சிறுநீர் கழிக்கும் இருக்கையில் அமர்ந்து, சிறுநீரை வெளியேற்றும் சின்ன மனிதனை (சிறுநீரை வெளியேற்றும் உறுப்பை) ஒரு விரலால் கீழே அழுத்திக் கொடுக்க வேண்டும். சிறுநீர் உள்ளேயே இறங்கும். நிச்சயமாக கழிவறை விஜயம் முடிய கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும். இதையும் முக்கியமாக சொல்லிக் கொடுக்கிறோம்” என்று பதிலிறுத்தேன்.

”ஓகோ! அது தான் இப்போதெல்லாம் ராகுல் இருக்கையில் அமர்ந்து சிறு நீர் கழிக்க விரும்புகிறான்.” என்று திருப்தியாகச் சிரித்தார்.

எமது பயிற்சி வெற்றியளித்தது எமக்கும் மகிழ்ச்சியே.

ஒரு பெண் குழந்தை பாலர் நிலையத்தில் நின்றபடி சிறு நீர் கழிப்பது வெள்ளைக்காரர்களுக்கு ஒரு ஆச்சரியமான விடயம். 

சோமாலியப் பெண் குழந்தை
பாத்திமா கூட ஆரம்பத்தில் நின்று கொண்டு தான் சிறுநீர் கழித்தாள். வாராந்தர ஊழியர்கள் கூட்டத்தில் இது பற்றிக் கலந்துரையாடிய பின், அவளுக்குப் பயிற்சி கொடுத்தோம். இப்போது அவளும் அமரப் பழகிவிட்டாள்.

சிறுவர்கள் மட்டுமா?

எமது ஆசியக் குடும்ப நண்பர் டொமினிக் எமது வீட்டிற்கு விஜயம் செய்வதானால் எனக்கு ஒரே திண்டாட்டம் தான் போங்கள்!

அவர் போன பின்பு கழிவறை, தரை விரிப்பு, இருக்கை எல்லாம் சிந்திய சிறு நீரைத் துடைத்து, கிருமிநாசினி போட்டுக் கழுவாவிடில் இரவு எனக்குத் தூக்கமே வராது.

என்ன! தொட முடியதா புள்ளியைத் தொட்டு விட்டேனா?

சுத்தம் சுகம் தருமன்றோ!

எல்லாம் பேச முடிந்த விடயங்கள் தானே!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-8-2004.

                                

39. வண்ணவில்! வானவில்!

 

ண்வில்!  வாவில்!

 

எந்தக் குழந்தைத் தூரிகையின்
பாந்தமான அழகு விசிறல்
இந்த ஏழு வண்ண வானவில்!

மழையோடு இணைந்த வெயில்
அழைத்து வானிற்கு இட
குழைத்த திலகமோ வானவில்!

கோணலாய்  வளைந்தேன் கிடக்கிறது
வானத்தெருவின் சமிக்ஞை விளக்கு!
வாருங்களேன் தூக்கி நிறுத்தலாம்!

நிலத்தில் தானே வளைகிறது!
நில்லாது வாருங்கள் ஓடுவோம்!
நிச்சயமாய்த் தொட்டு ரசிப்போம்!

அட்சர கேத்திர கணிதத்தில்
அசகாய சூரனோ இயற்கை!
அருமையாக வளைத்துள்ளானே வானவில்லை!

விப்ஜியோர் (VIBGYOR ) ஏழு நிறங்கள்
விரிக்கும் ஆரம்ப எழுத்துகள்
அரிதாய் ஐந்தாம் வகுப்பில் கற்றது.

வானவில்லில் தோரணம் கட்டி
வஞ்சி மகளுக்கு ஊஞ்சலிட்டு
இஞ்சு இஞ்சாய் ரசிப்போம் வானவில்லை.


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-11-2011.

 

                           
 

வாழ்வியற் குறட்டாழிசை. 18 (செயல் உறுதி.)

Art by Vetha

செயல் உறுதி

ஞ்சலாடும் மனமும், உடைந்த மனமும்
உறுதியான செயலை உருவாக்காது.

ன உறுதியும், மனத் துணிவுமே
செயலின் உறுதிக்கு உரம்.

ட்டிடத்திற்கு அத்திவாரம் போன்று நல்ல
திட்டமிடல் செயலை உறுதியாக்கும்

டம், பொருள், ஏவல், காலம்
அறிந்த செயலே உறுதியாகும்.

டலுறுதியால் மனவுறுதி, செயலுறுதிக்கு
இயல்பாகக் கடத்தப் படுகிறது.

முயல் போன்று வேகம் இல்லாவிடிலும்
செயலுறுதி சாதனைக்கு உயர்த்தும்.

ன்னம்பிக்கை கொண்ட செயலுறுதியின் ஆதாரத்திற்கு
நம்பிக்கை ஏணி துணை.

நேர்மை ஒரு கர்ம சிரத்தையான
செயலிற்கு உறுதி தரும்.

நேர்மையற்ற செயலைச் செய்யும் போது
கூர்மையான மனவுறுதி வழுகிடும்.

கூட்டுறவும் ஒருவிதமாக வீரிய செயலுறுதிக்குக்
காட்டுகிறது தன் பங்கை.

சொல் வேறு செயல் வேறென்றால்
செயல் உறுதி குறையும்.

சொற் பந்தலுரம் போன்று உறுதியான
செயற் பந்தலும் தேவை.

க்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ் டென்மார்க்.
7-11-2011.

 

In Anthimaalai web site:-    http://www.anthimaalai.blogspot.com/2012/01/18.html

  

                             

 
 

38. பூமழை நீரோவியங்கள்! (பாமாலிகை)

பூமழை நீரோவியங்கள்!

வானத் தண்ணீர்த் தொட்டியால்
வாரி இறைக்கிறதே நீர்ச்சாரல்!
வாளால் தொட்டியை யாரறுத்தார்!

வானக் கூட்டுமாறு களன்றதோ!
தானமாய் யார் ஈர்க்குச்சிகளை
ஏனாம் தரையிலவிழ்த்துக் கொட்டுகிறார்!

கார்மேக நீள்வானம் நேர்
நீர்க் கோடுகள் போடத்தயார்!
யார் ஓடாது நிற்கிறார்!

வானுக்கும் மண்ணுக்குமான நீட்சி
வரையறையற்ற கண்ணீர் வீழ்ச்சி.
வானத்தோடு யார் சண்டையிட்டது!

வானத்துப் பன்னீர்க் குடமுடைந்ததோ!
வருவது நீர்ப் பிரசவமோ!
வன்முறை ஐலப் பிரளயமோ!

வானத்து நயகரா அருவியதோ!
வசீகர உலகைக் கழுவித் துடைக்க
வற்றாது வழிந்து கொட்டுகிறதோ!

தடதடவென வீழும் மழையின்

சடசட சத்தத்தால் குழந்தை

பயந்தலறி தாயை அணைக்கிறது.

தக்கா தையவெனக் கைகொட்டி
எக்காளமிட்டு ஆரவாரித்து மறு
குழந்தை மழையை வரவேற்கிறது.

சாயக் குப்பிகள் கவிழ்த்தும்
மாயக் கரைசல்கள் செய்யும்
ஓவியச் சிதறல்கள் மழை.

  

பூமாதேவியெனும் வரை தாளில்
பூமழை நீர் ஓவியங்களால்
பூக்கள் பூக்க வைக்கும் சாரல்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-11-2011.

In Anthimaalai web site :-    http://anthimaalai.blogspot.com/2011/11/blog-post_07.html

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் 8-11-2011 செவ்வாய் கவிதை பாடுவோம் நிகழ்வில் என்னால் இக் கவிதை வாசிக்கப்பட்டது)

இதோடு தொடர்பான மழைக் கவிதை இன்னொன்று- அதன் இணைப்பு..https://kovaikkavi.wordpress.com/2010/07/25/24-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b/

Another one  train  :-       https://kovaikkavi.wordpress.com/2013/12/14/54-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

                             

37. பேசாத எழிலே!….

பேசாத எழிலே!….

நீல ஆழியில் செல்லும் வெள்ளி ஓடம்.
நூலில் ஆடாத வெள்ளிப் பந்து.
நிலத்தின் இருட்டைச் சலவை செய்து
நிலா மஞ்சள்  பூசும் சந்திர வட்டக் கவியாள்!
தலைக் கனமற்று கலைத் தடமிடுபவளே!
திடல் ஏறி உன்னைத் தொடுமாசை தான்
திருடன் உன்னைத் தூற்றகிறான், அவன்
திருட்டு உன்னொளியில் தெரியப் படுமாம்.

நட்சத்திர  நங்கையர் கூட்ட
நல்லிரவு ராணியே! முகில் வலைத் துணி
முக்காட்டை விலக்கி நிலத்தினையொரு
முறை பாரேன்! தண்ணொளி வீசேன்!
காலைச் சூரியன் ஒளியில் நீ முற்றாகக்
காணாமற் போவதில் என்றும்
கவலையே கொள்வதில்லையா இரவரசியே!

நீலவானில் அம்புலியாய், கவிஞருள்ளக்
கோல எழிற் கற்பனை ஊற்றாய்
வலம் வருகிறாய் அற்புதமாய்!
ஓய்வில்லா நிலவே! கலம் இறங்கிய மனிதன்
காலடியும் நிலவில் விழுந்துள்ளதே!
நிலவு அந்த மழலைக் காலம்!
நிலவாய்த் தேய்ந்து முதுமை மறுபடி
உலவுகிறது மழலைத் திங்களாய்.


இகத்துச் சீவராசிகளின் வைப்பு நிதியாய்
இதய வங்கியில் ஆனந்தக் காசு
சேர்க்கும் தண்மதி வெண்ணிலவே!
வேண்டுதல் வேண்டாமையற்று
பேதா பேதங்கள் அற்ற பேசாத எழிலே!
இலங்கையிலும் உன்னைக் கண்டேன்.
இங்கும் உன்னைக் காண்கிறேன்
அறிவில் உயர்ந்தோன் எங்கும் தெரியப் படுவதாய்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-6-2006.

வேறு:-

விண்ணிலாடும் தண்ணிலவே
கண்ணிலாடும் வெண்ணிலவே
எண்ணிலாக் கனவுகளையே
மண்ணிலெ தருகிறாயே

2010

(சீஐ ரி  வி (cee i tv) யில் கவிதையே தெரியுமா நிகழ்வில் என்னால் வாசிக்கப் பட்ட கவிதை.)