222. அதிசயம்!…அபூர்வம்!…

 

திம்!…பூர்ம்!…

 

அறிவினுயர்வில் அன்பெனும்                     (பிறப்பு)
அணுகுமுறை அணியிடும்
அதிசய மானுட உயரமைப்பு
அதிசயம்! அபூர்வம்!

அமரத்துவ நிறைவளிக்கும்                          (உறவு)
அகங்காரமில்லாச் செறிவு
அமைதி தருமுறவு
அதிசயம்! அபூர்வம்!

அவனியில் கொய்யும்                                       (அனுபவம்)
அனுபவங்களால் நெய்யும்
அன்பு வலையின் அதிசய
அர்த்த மாயைகள் அபூர்வம்!

அகவிதழ் விரிக்கும்                                             (அன்புச் சுகந்தம்)
அன்பு மகரந்தத் துகள்கள்
அனுப்பும் இனிய  சுகந்தம்
அன்னியம் விலக்கல் அபூர்வம்!

அன்பொரு வியாபாரமாய்                              (போலி அன்பு)
அர்த்தமற்ற அணுப்பொருளாய்
அர்த்தம் காண்பதிலில்லை
அதிசயம்! அபூர்வம்!

அன்பை அருவியாய்க் கொட்டி                 (நட்சத்திரமாகுதல்)
அகிலத்தோர் வரிசையில்
அடிச்சுவடாய், நட்சத்திரமாதல்
அதிசயம்! அபூர்வம்!

இத்தனையும் உணர்ந்து                                  (வாழ்தல்)
உத்தமமாய் வாழ்தல்
இகத்தினிலே இனிய
அதிசயம்! அபூர்வம்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-7-2005.

(இக் கவிதை இலண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலிகளில் என்னால் வாசிக்கப் பட்டது)

 

                                     

 

 

5. தொலைத்தவை எத்தனையோ!

தொலைத்தவை எத்தனையோ – 5

(இது ஒரு தொடர் பதிவு. )

 இது எனது 670 வது பதிவு.

திறமையறிந்து கதாநாயகன் வேடம் தரப்பட்டதை என் குழந்தை மனம் அறியவில்லை.
இங்கும் அவர்கள் (குவீனி- தாமரை) இணை பிரியாத நண்பர்கள் தானா? நான் தனியாகக் கோவலனா!… என்று என் மனம் இரகசியமாக விசும்பியது, புழுங்கியது. (நான் மௌனமாகத் திரிந்தாலும் அவர்கள் என்னை ஒதுக்கியது என் மனதை வெகுவாகப் புண்ணாக்கியுள்ளது – என்பது இப்போது புரிகிறது)


ஒத்திகைகள் நன்கு நடந்தது. எமது வரிகள் எல்லாம் மனப்பாடமும் செய்தாகிவிட்டது. சிவராத்திரிக்கு இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போது, நான் நாடகத்தில் பங்கு பெறமாட்டேன் என்று மறுக்கத் தொடங்கினேன்.


ஆசிரியை, அவரது தங்கை, பக்கத்து வீட்டு அண்ணை (அவரும் நித்திரை விழிக்க வர இருந்தவர். கெந்திப் பிடித்து விளையாடும் போது சூரப்புலியாகக் கெந்துவார். நீண்ட கால்கள்) எல்லோரும் ” ஏன் என்ன காரணம்?” என்று தூண்டித் துருவி கேட்டனர். நான் பயங்கர மௌனம். முடியாது முடியாது தான் பதில்.

ஆசிரியரின் தங்கை கேட்டா ” உமக்கு நல்ல பாத்திரம் தானே தந்துள்ளோம்” என்று. வரமாட்டேன் வரவில்லை என்பது தான் என் பதில். தாமரையின் அக்கா சுகி தான் தாமரைக்கு நடனம் பழக்கியது. அவ கூட தனது திறமையைக் காட்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ” ஏனாம் பேபி வரமாட்டுதாம்? என்ன காரணம்?;” என்றாவாம்.


சிவராத்திரியும் முடிந்தது.
நித்திரை விழித்தார்களாம், நான் போகவில்லை. நாடகம் நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், (அண்ணனிடம்) நடக்கவில்லையா என்று விசாரித்தேன். ” பேபி முடியாது என்று விட்டதே” அதனால் நாடகம் நடக்கவில்லை என்று பக்கத்து வீட்டு அண்ணை கூறினார். அதைப் பற்றி எனக்கு சாதக, பாதக சிந்தனையே தோன்றவில்லை. செய்தியாகக் கேட்டது போல இருந்தது.
அவ்வளவு தான். இது என் மனக் கணனியில் ஒரு மறந்த சொத்தாகிவிட்டது.

பின்பு ஒரு காலத்தில் இவைகளை எண்ணிய போது ஏன் இப்படி நடந்தேன் என்றால்
என் சின்ன மனம் அவர்களை, கத்தியின்றி, இரத்தமின்றிப் பழி வாங்கியுள்ளது. யாருமே எனக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை இது நானாக எடுத்த செயல். யாருடனும் எதுவும் பேசாது மௌனமாக நடத்திய போர். இது வீட்டாருக்கும் தெரிய வரவில்லை. நான் கூறவும் இல்லை. என்னுள் இருந்தவை, இன்று எழுத்தில்.

பாருங்களேன் மனம்!…..அது கண்ணாடி! ..கீறலும், நொறுங்குதலும்!… செயல் தாக்கமும் பிரதி நடவடிக்கையும்!…எத்தனை விசித்திரமானது! எப்படி இயங்குகிறது…..யாருக்குமே… தெரியாது… இது சரியா..பிழையா..எப்படி நடந்தது என்று…..


இன்று வரை இரண்டிற்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் நானறிந்த வரை மிகக் கவனமாக அவர்கள் மனதைக் கையாளுகிறேன். பிள்ளைகளை ஒதுக்குதல், வேற்றுமை காட்டுதல் என்பது மாபெரும் கொடுமை என்பதற்கு இது நல்ல உதாரண அனுபவம்.

வன்முறைகள் உலகில் மலிவதற்கும் நல்ல அடிப்படைக் காரணங்கள் உண்டு. காரணங்களைத் தேடிக் களையாது தண்டனையை நிறைவேற்றவே உலகு துடிக்கிறது.

எனது தமிழ் இந்தளவு வளர்ந்ததற்கு பாக்கியம் ஆசிரியர் அடிப்படைக் காரணமாகிறார். பிழை விட்டால் குட்டு, பென்சிலோடு காதைப் பிடித்து பல்லைக் கடித்தபடி திருகுவார். அழுததும் உண்டு.

ஒரு தடவை ஐந்தாம் வகுப்பில் உங்களுக்கு என்ன மிருகமாகப் பிறக்க ஆசை என்று முழு வகுப்பையும் கேட்டார். திகைப்பு! என்ன பதில் கூறுவது!…மிருகங்களின் ராஜா சிங்கம், எனக்கு சிங்கமாகப் பிறக்க பிடிக்கும் என்றேன். ஏன் இப்படிக் கூறினேன்! எனக்கே ஆச்சரியமாக உள்ளது. இன்று கேட்டால் சிங்கம் பற்றிய எந்த எண்ணமும் ஆர்வமுமே இல்லை. மானாகப் பிறக்க ஆசை என்பேன், மான் அழகு என்பதால்.

அக் காலத்தில் வகுப்பில் நான் தான் முதல், இக்காலத்தில் தான் ஸ்கொலசிப் பரீட்சையிலும் சித்தி பெற்றதும், ஸ்ரான்லிக் கல்லூரிக்கு ஆறாம் வகுப்பிற்கு மாறியதும்.

முதுமை வந்து பாக்கியம் ஆசிரியர் காலமாகி விட்டார். நான் மூன்று நூல்கள் செய்தும் அவரிடம் ஒரு முன்னுரை பெற முடியவில்லை என்பது எனக்குப் பெரிய குறை தான்.

தாமரை – செல் விழுந்து இறந்து விட்டார். குவீனிக்கு நல்ல வாழ்வு இல்லை, பிள்ளைகள் இல்லை, உறவுகளோடு வாழ்கிறார். (இவர்கள் பெயரை மாற்றியுள்ளேன். இவர்கள் உறவு எப்போதுமே என்னுடன் இப்படித் தான்.)

படிக்கப் போனவீடு ஊரில் கல் வீடாகிக் காட்சி மாறிவிட்டது.  அன்று போல எதுவுமே இல்லை.

அம்மா, அப்பா, சகோதரர்களோடு வாழ்ந்த வாழ்வு, அத்தனையும், அத்தனையும்…

தொலைத்தவை எத்தனையோ!…..

துன்ப அகராதி துடைத்தழிக்க
நண்பனாக்கிய அழகுத் தமிழ்.

என்னைக் கவலைகள் தின்னத்தகாதென
கன்னற் தமிழைச் சரணடைந்தேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-1.2012.

In Anthimaalai web site;-   http://anthimaalai.blogspot.com/2012/01/5_23.html

                                

 

வேதாவின் மொழிகள். 17.

Art by  Vetha—

நெருங்கி நெருங்கித் தேனாகப் பேசுவார்கள். காரியம் பெற்றதும் கழன்று விடும் மனிதர்கள் யாரென நேரியதாகக் கூறுவதா! வீரியமாகக் கூறுவதா! அவர்கள் பாரிய சுயநலவாதிகள் தானே! வேறு எப்படிப் புரிந்து கொள்வது!

பிறரின் உபதேசம் பிடிக்காத போது பிறருக்கு உபதேசிப்பதை விட்டு விடுவது சரியாகும்.

ம்பிக்கை என்றதும் நான் இராணியாக வேண்டும் என்று நம்ப முடியுமா? நம்பிக்கை  கூட எமது வசதி, சூழல், வாழ்வு என்பவற்றோடு கூடி இயங்க வேண்டியது ஆகிறது. ஒவ்வொரு செயலாகச் செய்து வரும் போது நம்பிக்கை கூடியும், குறைந்தும் தன் வட்டத்தைத் தீர்மானிக்கிறது. மனதில் ஒரு குறிக்கோளை எண்ணி, அதனை நோக்கி நடப்பதும் நம்பிக்கையே.

எமது இயக்கம், திறமைக்கு ஏற்ப நம்பிக்கையை வளர்க்கலாம். அளவிற்கு மிஞ்சி நம்பிக்கையை வளர்ப்பது அசிங்கமாகவும் போகலாம்.
நம்பிக்கை நன்கு மனதில் ஊன்றும் போது தயக்கம், நாணம், ஏன் பயம் கூட விலகி விடுகிறது. என்னைப் பொறுத்த வரை நம்பிக்கையை நான் ஒரு அளவோடு தான் வளர்க்கிறேன். என்ன அளவு என்று கூறுதல் இயலாது. ஆனால் என்னால் முடியும், இது சரி வரும் என்ற கணிப்பீடுகளோடு நான் பயணிக்கிறேன். பிறரை நம்பி ஏமாந்த கதைகளுமுண்டு. ஆகாயத்தைத் தொட என்று குதிப்பதில்லை.

தெய்வ நம்பிக்கை போல எது துணை நிற்கும்! தெய்வம் கேட்கும், தெய்வம் தண்டிக்கும் என்பதை வாலிப முறுக்கில் ஏளனம் செய்தாலும், வயோதிபத்தில் யாவும் ஆடி முடிந்த பின் ஆயிரம் நவீனங்கள் வந்தாலும் கூட, மனிதர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.  நம் பாட்டா பாட்டி சொன்னவை தானே இறுதியில் சரியாகிறது. நாம் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையான தேயிலை றப்பர் தோட்டத்தில் வசித்தோம் (கணவர் பணி). நிறைய இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்தனர். அவர்கள் ஆற்றாமையின் போது ஒரு வசனம் கூறுவார்கள். ” அநியாயம் செய்தால் முனியாண்டி கேட்பான் ” என்று. பரம்பொருளின் பஞ்சாயத்தில் எதற்கும் பதமான தீர்ப்பு உண்டு.

வாழ்வு ஒரு வட்டம். ஒரு பக்கம் வெற்றி நந்தவனமாகப் பூத்துக் குலுங்கி மணம் வீசுகிறது ஏற்றமாக. வென்றவனிற்கு அனைத்தும் இலேசாகத் தோன்றுகிறது. மறுபக்கம் தோல்வி ஒரு நரகமாக, இறக்கமாகச் சுட்டெரிக்கிறது. பாலைவனமாகத் தெரிகிறது. தோற்றவனிற்கு யாவும் பிரமாண்டமாகக், கடினமாகத் தெரிகிறது.
சிலர் வெற்றியில் மயங்கி உலகை மறக்கிறார்.பின்னர் தோல்வியைத் தழுவுகிறார்.தோல்வி கண்டவனோ அடக்கமாக முயன்று முயன்று வெற்றியை எட்டுகிறான். இங்கு ஆணவம் செல்லுபடியாகாது. ” நான்” என்று ” வான்” பார்த்தால் மண்  தெரியாது போய் விடும். நடை பாதை சிக்கலாகி விடும். வெற்றியின் தலைக் கனத்தை ஏந்துவது ஆபத்தாகி விடும். தலைக் கனம் தெளிவான பார்வையை மறைத்து விடும். மானம் அவமானம் கூட , கண்ணிற்குத் தெரியாது மயக்கும்.

ல்வி மனிதனைப் பண்படுத்துகிறது. மனிதனைத் துலக்கிக் காட்டுகிறது. முழு மனிதனாக்குகிறது.

னப் பலமும் உளச் சுத்தமும் இருந்தால் உன்னை வெல்ல யாராலும் முடியாது. நீயே சிறந்தவனாகிறாய். முயற்சியால் வெற்றிகளைக் குவிக்க முடியும்.

ல்ல எண்ணம், கடும் முயற்சி, நல்ல வார்த்தைகள் போதும் மிகவும் கம்பீரமானவனாக வாழ.

 

க்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-1-2012.

                                 

221. வெற்றியுடன் வருவாய்!….

 

வெற்றியுடன் வருவாய்!….

(இரவு பிறந்த புது வருட மினுமினுப்பும் கலகலப்பும் குறையவில்லையே!.. 2006 சுனாமி – துன்பத்தோடு வந்த போது எழுதிய ஒரு கவிதையைச் சுவையுங்களேன்!…2012 என்று கருதியபடி…..)

சுற்றிச் சுழன்று தினங்கள் வளர்ந்து
முற்றுப் பெற்றது ஒரு ஆண்டு.
மற்றுமொரு ஆண்டு இரண்டாயிரத்து ஆறென
மறு வேடத்தோடு புதிதாக எம்மருகில்.
இரண்டாயிரத்து ஐந்தே நன்றி உனக்கு!
இரண்டாயிரத்து ஆறே வளமோடு வருக!
திரண்ட அமைதியும் திருவும் தருவாய்!
வரண்ட மனங்களில் செழிப்புத் தாருவாய்!

பூமியின் சுழற்சியிற்  புது ஆண்டு
நாமினி நல்லதை எதிர் கொண்டு
நிமிர்ந்து வரவேற்போம் நினைத்தது நடந்திட,
நிலையான ஆனந்தம் நிரந்தரமாய் நிலைத்திட.
அப்படி அமையுமா! இப்படி அமையுமா!
எப்படி அமையும் இந்த ஆண்டு!
ஊர் கெடுப்பாயா! பேர் தருவாயா!
ஓர் இடம் கால ஏட்டிலே எடுப்பாயா!

னமதைக் காத்திட இளம் தென்றலாய்
மனதில் திடமதை ஏந்திக் கொண்டு
கனமில்லா வாழ்வு புதுச் சுவடாக
கணக்குடன் வருவாயா புதுத் திட்டமோடு!
நெற்றியடியாய்  நம் அனைவருக்கும்
நேற்றைய ஆண்டு தந்த பரிசு
சுற்றிச் சுழன்ற சுனாமி இழப்பு
வெற்றியைப் பறித்து வேதனையாக்கியது.

சுற்றி விழுந்த உடலங்களால் தூர்
வற்றி விடுகிறது நம்பிக்கை நீர்.
பற்றி எரிகிறது மனமாயினும் புத்தாண்டே!
வெற்றியுடன் தொடர்ந்து வருவாய் என்போம்.
சாதகமாய் வரவேற்கிறோம் சாதனைகளை நோக்கி
பாதகம் செய்திடாதே சுனாமியால் தாக்கி!
தீதகு எண்ணமின்றித் தொடர்கிறோம் நன்மையாய்
தோதான ஆண்டாய் வெற்றியுடன் தொடர்வாய்!
 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-1-2006.

In Anthimaalai web site:-  http://anthimaalai.blogspot.com/2012/01/blog-post_02.html

                                

Next Newer Entries