15. வெள்ளைக்காரரும் விரும்புவார்.

(குழந்தைப் பாடல்கள் -சிறுவர் பாடல்கள் – எழுதுவதில் எனது முதல் நூலான வேதாவின் கவிதைகளில் ”ஒளவைப் பாட்டி” என்ற ஒரு கவிதையும்,

குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற எனது இரண்டாவது நூலான மொழிபெயர்ப்புக் கட்டுரை நூலில் 13 கவிதைகளும்,

உணர்வுப் பூக்கள் என்ற மூன்றாவது கவிதை நூலில் மூன்று கவிதைகளும் இடம் பெற்றது.

இந்த வலையில் சிறுவர் பாடல் வரிகளில் இது 15வது.

மதிப்பிற்குரிய சகோதரர் தம்பி.கூர்மதியான் அவர்கள் ஒர் தடவை (ஆனி – 1- 2011ல் புதன் கிழமை) இதை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார்.  

இப்படி:- 

”…பொடியன்களா இருக்கும் போது எக்கசக்க பாடல் பாடியிருப்போம். எல்லாம் இப்போ நமக்கு ஞாபகம் இருக்கிறது இல்ல. ஆனா அதை கொஞ்சம் ஞாபகப் படுத்தி சுண்டி விட இங்க ஒருத்தர் கோவை கவியாக நமக்கு வழி செய்கிறார். சிறுவர் பாடல்களை போட்டு தாக்குகிறார்…”
— தம்பி)

சரி……மேலே தொடருவோம்…..

 

 

15. வெள்ளைக்காரரும் விரும்புவார்.

டலை முன்னால் வளை!
கைகளை ஒன்றாய்ச் சேர்!
தும்பிக்கையாய் வளை!
அசைந்து அசைந்து நட!
ஆனை போல நட!
யானை யானை பார்!

 

சுளகு போன்ற காது
சுவர் போன்ற உடம்பு.
தூண் போன்ற கால்கள்.
குஞ்சரம் போன்ற வால்.
யானை! யானை!  யானை!
யானை வருகுது பார்!

வெள்ளைத் தந்தம் பார்!
வெள்ளைக்காரரும்  விரும்புவார்!
சர்க்கஸ்காரரும் பழக்குவார்!
மரங்கள் இழுக்கும் யானை.
ஆலயத்திலும் இருக்கும்
ஆசி கூடக் கூறும்.

யானை யானை யானை
யானை வருகுது பார்!
சேனையும் கண்டு நடுங்கும்.
யானை முகம் பிள்ளையாருக்கு.
யானை நிறம் கருப்பு.
ஐராவதம் வெள்ளை யானை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-2-2012.

(ஒரு தகவல் யானைகளின் தினம் பங்குனி 13 ம்.)

 

                              

22. சந்தப்பாடல்கள் – 2

 

சந்தப்பாடல்கள் – 2

(இது இலண்டன் தமிழ் வானொலி ஓடி விளையாடு பாப்பா நிகழ்வில் 23-5-2004 ல் ஒலி பரப்பானது.)

சந்தப்பாடலான தாலாட்டின் அடிப்படை பிற்காலப் பாடசாலையின் இலக்கிய அனுபவத்திற்கு அத்திவாரமாகிறது.

சந்தப் பாடல், கும்மிப் பாடல், சிந்துப் பாடல் என்று இசைப் பாடல்கள் மூன்று வகையாகிறது. சந்தப் பாடலில் சந்த ஓசையே முக்கியமாகிறது. (இதனுள் கீர்த்தனம் என்பதையும் இணைக்கின்றனர். இது ஒரு பெரிய ஆய்வுக் களமாகும்.) 

”..குழந்தைகள் தாய்மாரின் தாலாட்டில் கண்ணயர்ந்து துயில்கின்றன. இவ்வகைப் பண்பட்ட இன்னோசையின் அமைதியைத் தமிழிலக்கணத்தில் ‘வண்ணம்’ என்பர். தமிழில் நூறு வகை வண்ணம் உண்டு;. ஓவ்வொன்றும் செவிக்குணவு  தருவன.” என்று யாழ்ப்பாணம் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் கூறுகிறார்.
(அருணகிரிநாதர் திருப்புகழும் வண்ணச் சந்தமுடையது.)
மூன்றிலிருந்து ஏழு வயதுக் குழந்தைகளுக்கு நகை, வியப்பு, அன்புச் சுவை மலிந்த பாடல்கள் மிக வாய்ப்பானவை என்றும் இவர் கூறியுள்ளார்.

 

இவ்வகைச் சந்தப் பாடல்களைக் குழந்தைகளுக்கு அனைவரும் பாடி பல திறமைகளுக்கு தூண்டுதலைக் கொடுப்போமாக.

எட்டு முதல் பன்னிரண்டு வயதுக்குரிய பிள்ளைகளுக்கு விவரணப்பாடல்கள், வண்ணப் பாடல்கள், வரலாற்றுப் பாடல்களையும் கொடுக்கலாம். இதை அவர்கள் விரும்புவார்கள்.

பதின்நான்கு முதல் பதினெட்டு வயதுப் பிள்ளைகள் காதல், வீரச் சுவையை மிக விரும்புவார்கள். அன்பு, சத்தியம், நேர்மை, அடக்கம், பொறுமை, ஒற்றுமை முதலிய பண்புகள் வளரும் பருவம் இதுவாகும்.

நீதிப் பாடலுள் அநீதிகள் பொதிந்த பால்களையும், கதை நிகழ்ச்சிப் பாடல்களையும் கற்றுக் கொடுத்தல் நன்மை தரும். பாடல்களை மனப்பாடம் செய்வதற்கும் பொருளறிந்து பாடி மகிழவும் இந்தக் காலம் ஏற்ற பருவமாகும்.

முற்றும்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2004.

 

                                        

21. சந்தப் பாடல்கள் -1

சந்தப் பாடல்கள் -1

(23-5-2004 ல் இலண்டன் தமிழ் வானொலி ஓடி விளையாடு பாப்பா வில் ஒலிபரப்பானது)

சந்தப் பாடல்கள் திறமைக்கு ஊக்குவிப்பு.

தொட்டிற் பாடல், தாலாட்டுப்பாடல்கள் இனிய ஓசை நயம், அழகியலும் கொண்டது. இது நல்ல தாள லயத்தோடு பாடப் படும் போது, செவிக்கு இதமாகிக் காதின் இயக்க சக்தியைக் கூர்மையாக்குகிறது.

தால் என்றால் நாக்கு.
ஆட்டுதல்– நாவை அசைத்தல், ஆட்டுதல், தால் ஆட்டுதல்.
ஆராட்டுதல், தாலாட்டுதல் ஒரே கருத்துடைத்து.
ஆதி காலத்தில் (பழங்குடியினர்) நாவை அசைத்து ஆட்டித் தானே முதலில் ஒலி எழுப்பினர்.

எனது அம்மம்மா ஆராட்டுதல் என்றே கூறினார்கள். குழந்தை அழுதால் கொஞ்சம் ஆராட்டுங்களேன் என்பார்.

…ராராரோ…ராராரோ…
ஆராரோ ஆரிவரோ…
அடித்தாரைச் சொல்லி..அழு!”…

 என்று…அந்த அந்த நிலைமைகளை வைத்து இட்டுக் கட்டி, ஆனால் சந்தமுடன் பாடப் படுவதுமாகிறது தாலாட்டு.

 
இப்படிக் கேட்டுப் பழகும் அனுபவம் பிற்காலத்தில் இசை பயில்வதில் குழந்தைகளின் திறமையையும், பாடல் இயற்றும் திறனையும் மிக எளிதாகப் பெறும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.

சிரமப் பட்டு மனதில் பதிக்காது, தானாகக் காது வழி புகுந்து, இதயத்தில் இறங்கும் இப் பாடல்களால் பிள்ளைகளின் பிற்காலம் மிகச் செழிப்பாகும் என்று மனவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மூன்று வயது முதல் ஏழு வயதுக்குரிய பிள்ளைகளிற்கு ஓசை நயம் செறிந்த பாடல்கள் மிகச் சுலபமாக மனதுள் இறங்குகின்றன. இந்த எளிய ஓசை நயத்தால், சொற்களுடன் மனம் இலயித்து  ஈடுபடுகிறது. சொல்லின் தொடர்பால் கருத்தோடு மனம் இணைகிறது. அறிந்த பொருட்களின் கருத்துடன், தான் அறியாத பொருளின் கருத்தையும் அறியும் வாய்ப்பைப் பிள்ளைகளிற்குத் தருகிறது.

உதாரணமாக:-
                சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
                சந்தனச் சிலையே சாய்ந்தாடு
                கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
                கண்ணின் மணியே சாய்ந்தாடு.

                குண்டு மணியே   சாய்ந்தாடு
                குயிலே மயிலே சாய்ந்தாடு
                அன்னக் குஞ்சே   சாய்ந்தாடு
                அம்மா மடியில் சாய்ந்தாடு

இது எளிய நடைச் சந்தப் பாடல். குழந்தை இலக்கியமாகும். பல தடைவை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அலுப்புத் தராதவை. இது குழந்தைகளின் பிற்கால பாடசாலை இலக்கிய அனுபவத்திற்கு அடிப்படையாகிறது.

(இரண்டாவது அங்கம் அடுத்த முறை தொடரும்.)
ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2004.

                                        

 

29. வித்துவத்துவம்.(photo&poem)

 

வித்துவத்துவம்.

அறிவிற் சிறியோரை
குறிப்பாக மதித்து
சிறிதேனும் பேணாதோர்
நெறியான வித்தகரல்லர்.

சொத்தாகப் புகழும்
சித்திக்க எண்ணும்
பித்தான மனமும்
வித்துவம் அல்ல.

வித்துவப் புலவரென
சத்தமாய் மொழியாதீர்! (மொத்தமாய்க் கணிக்கும்)
பாத்தியதை பிறரால்
ஒத்திட வேண்டும்.

 பத்தும் தெரியுமென
மொத்தமாய்ப் புலம்பும்
வித்தகச் செருக்கும்
உத்தமம் அல்ல.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-2-2012.

வித்தவம் பிறரை
சத்கமாய்ச் சீவுதலின்றி
அத்தக(அழகு பொருந்த) அறிவுடன்
உத்தமமாய் இறங்கலாம்.

வித்துவம் பிறருக்கும்
அத்தராய் மணக்கும்
எத்தனம் எடுக்கலாம்.
சித்திப்பது நன்மையாகும்.

பத்தும் தெரியுமென்ற
வித்தகச் செருக்கும்
மெத்தனமான தலைப்பாரமும்
உத்தமமற்ற இயக்கம்.

 

                           

இல்லறத் துணை. 23

வாழ்வியற் குறட்டாழிசை. 23

இல்லறத் துணை

ல்லறத் துணை பெண் மட்டுமன்று!
இருவருமே ஒருவருக்கொருவராவர்.

ல்ல பண்புடை கணவன்  மனைவியே
இல் வாழ்வின் ஆபரணம்.

ற்புடைமையை ஆணும் பெண்ணும் கட்டாயம்
ஏற்றமுடன் காக்க வேண்டும்.

ற்புடைய கணவன் மனைவிக்கு வாய்ப்பது
வெற்றியுடை அழுக்கற்ற வாழ்வு.

சிக்கனம், புகழ் காத்தலில் இருவருமே
தக்கபடி செயலுறுதல் தேவை.

றையற்ற கணவன் மனைவி என்றும்
நிறைவோடு தலையுயர்த்தி வாழலாம்.

ல்ல மனைவி இருந்தும் கணவன்
நல்லவனல்லால் வாழ்வு ஒளிராது.

ல்ல கணவனிற்கு வாய்க்கும் மனைவி
பொல்லாதவளானால் வாழ்வு  பாழ்.

வீரமும் காதலும் கை கோர்த்தால்
தீரமுடை வாழ்விற்குத் துணை.

ருவரை ஒருவர் தொழ வேண்டாம்
இருவரும் உண்மையாக வாழ்ந்தால்

வாழ்க்கைத் துணைகளின் நல்ல உதாரண
வாழ்வு பிள்ளைகளிற்கு முன்மாதிரி.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-2-2012.

  

                                  

 

Next Newer Entries