28. டென்மார்க் மேகவியின் அரங்கேற்றம்.

டென்மார்க் நித்திய சதங்கை நர்த்தனாலயா ஆசிரியை பரதக் கலைமணி ஸ்ரீமதி யாழினி பா. பாலேந்திரன் அவர்களின் மாணவி.. செல்வி மேகவி பத்மசேகரன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம்.

 

இடம் : Holstebro Musikteater

காலம் : 31.03.2012

நேரம் : 16.00

ஆசிரியை யாழினிக்கும், மாணவிக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-3-2012.

Alaikal news :-    http://www.alaikal.com/news/?p=101415

மேகவியின் நடன அரங்கேற்றம்.

பரதத்தை மேகவி பத்மசேகரன்
விரதம் போலப் பழகியுள்ளாள்.
இரதம் அலங்கரித்ததாய் இறைவன்
வரதமுடன் நடனம் அரங்கேற்றுகிறாள்
நித்ய சதங்கை நர்த்தனாலயா
நியமித்த திகதி 31-3-2012ல்.
கண்ணாலும் பேசும் பரதம்.
எண்ணங்கள் உணர்வு பொதிந்து
எண்ணப் பரிமாற்றம் செய்யும்.
வண்ணக் கதைகளும் கூறும்.
கதைகூறி சாமியாடி, சடங்கு
கொண்டாட்டத்தில் வெளியானது நடனம்.
சிந்து வெளி நாகரீக காலம் தொட்டு
பந்தி விரித்து முன்னேறியது.
கண்ணிறைந்த உயிருடை அசைவுடைத்து.
பின்னுகிறாரின்று உடற்பயிற்சி, நீச்சலுமாக.
பார்வையாளரிற்கு நிகழ்த்திக் காட்டும்
நேர்த்தியான கலைநுணுக்கம் பரதம்.
ஆர்வமுடன் இசை, தாளத்தோடு
ஈர்க்கின்றவொரு தொடர்பு முறையானது.
செல்வி- பத்மசேகரன் புதல்வி
மேகலையுயர்ந்து நடன தாரகையாகட்டும்!
வாழ்க! வளர்க! சுரதமுடை(இனிமையான)
மேகவியின் அரங்கப் பிரவேசம்.

வாழ்த்துவோர்.- திரு. திருமதி இலங்காதிலகம், வேதா. குடும்பத்தினர்.
ஓகுஸ், டென்மார்க். 31-3-2012.

In Alaikal .com  Web site:- http://www.alaikal.com/news/?p=101557

 

                               

24. பாலுக்குப் பதிலாகக் கோலாவை…..

 

பாலுக்குப் பதிலாகக் கோலாவை…..

 

அதிகமாகப் பிள்ளைகள் பாலுக்குப் பதிலாக – கோலாவைக் குடிக்கின்றனர்.

மரக்கறி, மீனுக்குப் பதிலாக – சிப்ஸ், போகெர்ஸ் (burgers   ) உண்கின்றனர்.

வெளி விளையாட்டை, விளையாட்டுத் திடலைப் பாவிக்காது – அமைதியாகக், கல்லுப் போலக் கணனிக்கு முன்பு உட்காருகின்றனர்.

இது நல்ல யோசனையோ, ஆரோக்கியமான நிலையோ அல்ல என்கிறார் உலா கினப்ப(Ulla knappe ) டென்மார்க் எலும்புகள் சம்பந்தமான ஒரு குழுமத்தின் தலைவர்.

இந்த நவீன வாழ்வு முறை. பிற்காலத்தில் பெரிய உடல் ரீதியான பாதிப்பை உருவாக்கப் போகிறது. என்கிறார் இவர்.

நலிவான எலும்புகள் விரைவில் உடையும் தன்மை கொண்டன. முதுகுத் தண்டு வளைந்து கோணலாகி விடும். அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாத நிலை உருவாகும். நடு வயதிலும் முதுமை வயதிலும் நோய்கள் அண்டிக் கொள்ளும். ஆதலால் சிறு பருவத்திலேயே இதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். பிற்காலப் பாதிப்பிற்கு முற்காலத் தடுப்பு நடவடிக்கை சுகாதாரமானது.

எலும்பு மச்சை வளர்ச்சி பெறும் 25 வயது வரை நம் உடம்பிற்குத் தேவையான அளவு கல்சியம் பெறும் படி நாம் கவனிக்க வேண்டும். எலும்பு மச்சைத் தேய்வு ஆணுக்கும், பெண்ணுக்கும் வயதுப் பிரகாரம் 35 வயதில் ஆரம்பமாகிறது. பின்னர் இது வாழ்வு முழுதும் தொடர்கிறது. இதனால் குழந்தைகளும் இளையவர்களும் தமது எலும்பு மச்சைகளை அதன் தேய்வு வயது வரு முன்னரே நன்கு கட்டி எழுப்ப வேண்டும்.

ஒரு பாடசாலைப் பிள்ளை ஒரு நாளிற்கு அரை லிட்டர் பாலும் இரண்டு துண்டு சீசும் சாப்பிட வேண்டும். பதின்ம வயதினர் இன்னும் அதிகம் உண்ண வேண்டும்.

நிறைய சுகாதார உணவு, அதிக கல்சியம், டி உயிர்ச்சத்து இவைகளே பிற்காலப் பிரகாசத்திற்கு மிகச் சிறந்த தீர்வாகிறது.

பிள்ளைகள் தேவையான சத்தைப் பெறுவது பெற்றவர் கடனே.

டென்மார்க்கில் 4 இலட்சம் மக்கள் எலும்பு சம்பந்தமான நோய்களால் அல்லல் உறுகின்றனர்.

நாங்கள் இதை நல்ல கவனத்தில் எடுக்க வேண்டும். 

நலம் பெறுங்கள்!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-5-2004.

 

 

                      

229. உணர்வு மரத்திடும் பரிதாபம்!…

 

 

உணர்வு மரத்திடும் பரிதாபம்!…

 

க்களை அமைதியாய் வாழ
மக்களே அனுமதிக்கமாட்டார்கள்.
கட்சி கட்டிக் கருத்துரைத்து
கடுமையாய் வேட்டியை வரிந்து
கட்டிச் சிலம்பம் ஆடுவார்.

த்தனை கோடுகளும் மனிதன்
அநியாயமாய்ப் போடுவதே – அன்பை
அழித்துச் சாத்தானை மனதுள்
அமர்த்தித் தன் அமைதியையும்
அழித்துச் சூழலையும் குளப்புகிறான்.

பார்த்து ரசிப்பவரும், நன்றாகப்
பந்தம் பிடிப்பவரும், திரிக்கு
பாந்தமாய் எண்ணெய் விடுவோரும்,
பவ்வியமாய் நடிப்போருமாய் எத்தனை
பாவங்கள்! உறவுக்குள் நாடகம்!

லையில் உலகைத் தாங்குவதாகவும்,
தலைப்பாகை வேண்டுவோரும் – பிறருக்குத்
தகுதியே இல்லாத மாதிரியும்
தலைக்கனம் மிகுந்து ஆடும்
தரணி வாழ்வு எதுவரை!

ரசியலிலிருந்து அந்தப்புரம் வரை
ஒரு பக்க நியாயம் நிறுவிட
பெரும்பாடு, பொய்யையும் பிணைத்து.
படுபாதாளத்தில் நீதி என்பது!
நடுநிலையானது கனவு நிலையே!

யிர் போகும் போது
உடன் வருவது எது!
உணர்வு மரத்து உடல்
உரு ஆடும் போது
உணர்வதேது! பரிதாபமே!
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-3-2012

  

 

                                    

42. முகிலோ!..வானமங்கையின்..துகிலோ!…

 

முகிலோ!..வானமங்கையின்..துகிலோ!…

 

வெள்ளிப் பறவை கிழித்தது முகில்
தள்ளி அமர்ந்தேன் சாளரம் அருகில்.
கொள்ளை அழகு வானம்! ஆகா!
வெள்ளிப் பனிமலையோ! வானில் என்
வெள்ளைக் கோழி இறகுப் போர்வையை
அள்ளிப் பிரித்து வெளியே தூவியதார்?

வாயுக்காதலன் வானமங்கைச் சேலையொளிக்கும்
மாயச் சிருங்கார லீலையோ முகில்!
வாயுதேவன் மாளிகைத் திரைச் சேலைகளை
ஓய்வு வேளையில் இழுத்துச் சுருக்குகிறானோ!
தண்ணீர்த்தவம் யென்ம சாபல்யம் பெற்று
விண்ணில் விரிக்கும் வெண் குடையோ முகில்!

சூரியனில் பொறாமை கொண்ட வேளையில்
சூரியக் கதிரைச் சூறையாடிச் சுருட்டும்
சூரியப் பெரும் எதிரியோ கருமுகில்?
முகிலும் முகிலும் முட்டி மத்தாளம் கொட்டி
வைர ஊசியாய் மின்னலொளி பாய்ச்சி
வகிர்ந்திட நினைப்பது எதை?

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-5-2006

(லண்டன் தமிழ் வானொலி புதன் யோகேஸ் தேவா நிகழ்வில் இயற்கை தலைப்பில் ஒலிபரப்பானது.
2006-9ம் மாத சிறு சஞ்சிகை நந்தவனம் இதழில் பிரசுரமானது.)

இதோடு ஒட்டிய வேறு இரு இணைப்புகள்:- 

<a

https://kovaikkavi.wordpress.com/2010/08/31/42-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%ae%e0%af%8d/

https://kovaikkavi.wordpress.com/2010/10/24/124-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%a3%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

 

                                               

 

26. உண்மையில் மூத்தவர்களிற்கு…..

உண்மையில் மூத்தவர்களிற்கு…..

மரியாதை தரப்படுகிறதா!

 

”மரியாதையைக் கொடுத்து மரியாதையை எடுக்க வேண்டும்” என ஒரு ஆங்கிலப் பழமொழி உள்ளது.

மூத்தவர் ஒரு எடுத்துக் காட்டாளராக, பண்பாளராக இருக்க வேண்டும். அவர் வார்த்தையை அமிர்தமாக கடைப் பிடிக்கலாம் என்பது இன்றைய தலைமுறையினரின் நிலைப்பாடாக இருக்கிறது.

இன்றைய தலைமுறையினர்  மேற்குலக நடைமுறையில் தலை நிமிர்ந்து நடை போடுகின்றனர். இவர்களுக்குப் போலி நடையில்லை. பொய்யில்லை உள்ளதை உள்ளபடி பேசி நடக்கின்றனர்.

நாம் மதிப்பிற்குரியவர்களாக நடந்தால் ஏற்றுக் கொள்கின்றனர்.
மூத்தவரென்றாலும் பொய்யன், பித்தலாட்டக்காரன், சமூகவிரோதி, பிறரை ஆட்டிப் படைப்பவர்களை இன்றைய தலைமுறையினர் தூக்கி எறிவார்கள்.

” மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் ” என்பதை

” பண்பாளர் வார்த்தை அமிர்தம்”

”பண்பாளராக வாழ்தல் அமிர்தம்” என்று மாற்றி நோக்கலாம் என்பது இங்கு சிறப்பாகிறது.

சுயநலம் நிறைந்து, தலைமைத்துவத்திற்காக, கதாநாயக வணக்கத்திற்காக நல்லனவற்றை மிதிக்கும் பலர் பெரியவர்களாக இருக்கும் போது மதிப்புக் கிடைப்பது மிகச் சிரமம்.

நாம் சரியாக நடந்து கொண்டால் மதிப்பைத் தானாக நாம் பெறுகிறோம். நமது பண்பிற்குப் பிறர் என்றும் தலை வணங்குவார்கள்.
மூத்தவர்கள் மூத்தவர்களாகச் சரியாக நடக்க வேண்டும்.

இன்று வயது அல்ல பிரச்சனை. பெரியவர்கள் சரியாக நடந்தால் இளையவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்பது எனது கருத்து.

இன்னொரு வகையில் கூறினால் ஆத்துமாவிற்கு வயது இல்லை. மனித உடலிற்குத் தான் வயது. மனிதத் தன்மை – மனித நேயமே இங்கு சிறப்பாக மதிக்கப் படுகிறது.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மாhர்க்.
15-10-2004.
(இலண்டன் ரைம் வானொலிக்காக அனுபவக் குறிப்பாக எழுதி வாசிக்கப்பட்டது.)

 

                                       

228. கண் படும் நட்பு….

 

கண் படும் நட்பு….

இதயத்தில் இணைந்த நட்பும்,
இயைந்து உறவாடும் இன்பம்,
பிணைந்து பரிமாறும் அனுபவம்,
பிரித்தறியாத பிடிப்பும் அருமை.

 ஓரமாக்கும் நீர் அழுக்கை,
ஒதுக்கித் தள்ளும் காற்று.
சாரமுடை நட்பு இவற்றோடு
சேராது நடை தொடரும்.

விரிந்த மலரின் மணமாய்,
சொரிந்த சாரற் சிலிர்ப்பாய்,
புரிந்த உறவு உடலில்,
சிரிக்கப் பரவி உரசும்.

இனிக்கும் பாலின் சுவையாய்,
கனியின் கன்னற் சுவையாய்,
இனிய நட்புரசும் உணர்வு,
புனித சிந்தனை தூண்டும்.

பதுமையெனக் காலத்தில் நழுவல்
எதுவும் பேசாது நடைநீள்தலில்,
நட்பு நகர்தல் அல்ல
நல்லது கெட்டது பகிர்தல்.

கொடிய சுயநலம், ஆற்றாமை
கெடுக்கும் பளிங்கு அன்பை.
கொடுத்து வைக்க வேண்டும்
தொடுக்கும் தூய அன்பிற்காய்.

கண் படும் நட்பு
மண்ணில் கொண்டார் நடப்பு
எண்ணிலா செல்வத்திற் கொப்பு.
திண்ணியவராவார் இவர் சிறப்பு.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-3-2012.

                                       

 

25. மனம் போல வாழ்வு.

 

மனம் போல வாழ்வு.

 

” எண்ணம் போல் வாழ்வு”

” மனம் போல் வாழ்வு ”

என மொழி வழக்குகள் கூறவார்கள். ஆச்சிமார், பாட்டிமார் கூறக் கேட்டுள்ளேன். ஒரு வகையில் இதுவும் சரி தானோ என்று கேள்வி எழுப்புவது கூடாது. மிக மிகச் சரியான கூற்று இது.

மனதில் எந்த நேரமும் துன்ப நினைவில் மூழ்கும் ஒருவர், பிரச்சனையைப் பிசையும் ஒருவர், பேசும் வார்த்தையிலும், அவர் குரலிலும் பிரச்சனை, துன்ப வாடையே வீசும். அவரது மகிழ்வுக் குரல் கூட அழுகுரலாகப் பிரதிபலிக்கும். அவர் பார்வையில் சோகம் வழியும்.

மனிதனைச் சுற்றிச் சக்தி வட்டம், ஒரு ஒளி வட்டம் இருக்கு மென்பார்கள். இதன்படி சோகமானவர், பிரச்சனையாளர் தன் நினைவு அலைப் பிரதிபலிப்பைப் பிறருக்கும் அனுப்புகிறார்.  இதை அவர் நினைத்துப் பார்ப்பதே இல்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

உதாரணமாக –   காலையில் முதன் முதலாக ஒருவரைக் காணும் போது அவர் மலர்ந்த முகமாக இருந்தால் நாமும் மகிழ்கிறோம். அவர் உம்மென்று முகத்தைத் தூக்கிக் கொண்டு போனால் பார்க்கும் எமக்கும் ஏதோ போன்று இருக்குமல்லவா!

பிறரின் மகிழ்வலை தீவிர சக்தியுடைய அதிர்வுகள் கொண்டிருந்தால், எதிரே இருப்பவரின் சோகம் கரைந்து போய், மனநிலை மாற்றமடைந்து வேறு பரிணாமம் அடைகிறது.

கண்ணிரும் சிரிப்பும், பிரச்சனையும் நாமே நமக்கு உருவாக்குவது தான்.

இந்தத் துன்பங்களிற்கு நாமே துன்பம் உண்டாக்கி விரட்ட வேண்டும் அல்லவா?

எமது மனம் பிரச்சனையை  உள் வாங்கும் தன்மைப் படியே வெளியே பிரதிபலிக்கின்றது. சோகத்தில் நீந்துபவனுக்குச் சோகம் ஒரு பொருட்டல்ல. அதனுள்ளே ஊறி ஊறி அதுவாகவே அவன் ஆகிறான்.

இதை விட்டு மகிழ்வுலகிற்கு வந்து பாருங்கள்! மகிழ்வால் உடலில் அதிக சக்தி பெருகுகிறது. 300 தசைகள் இயக்கமடைகிறதால் அதிக நன்மை பெருகுகிறது. கண்ணிரால் உடலில் அதிக சக்தி விரயமாகிறது என்பவை விஞ்ஞான உண்மை.

உங்கள் சோகத்தை வெளியே விசிறி பிறருக்கும் தொற்ற வைத்துச் சூழலையே சோக மயமாக ஆக்குவதை நீங்கள் உணருங்கள்.  இப்படி ஆக்குவதிலும் பார்க்க

பிறரது மகிழ்வில் கலந்து நீங்களும் மகிழ்வேந்துபவராக ஆகுங்களேன்!…….இங்கு சிறிது உற்சாகமும், மாற்றுச் சிந்தனை ஓட்டமுமே தேவைப் படுகிறது….. இதை உங்கள் கைப்பையில் எடுத்துக் கொள்கிறீர்களா?…..

துன்பமில்லாதவன் உலகில் இல்லை. ஆயினும் அதைத் தீர்க்க வழியைக் கண்டு, வெளியே வருகிறீர்களா?  கொஞ்சம் அமைதியாக மகிழ்வாக இருப்போம்!…அனுபவிக்க உலகில் எவ்வளவோ இருக்கிறது கண்ணீரைத் தவிர!…

எந்த நேரமும் கண் கலங்கிப் புலம்பி…….சிச்சிச்சீ!…

இந்தாங்கோ!….கைக்குட்டை!……துடையுங்கோ!….

பிள்ளைகளுக்குமெல்லே…தொத்தப் போகிறது!………

உன் பங்கைத் தரமாய் எடு
என்பதில் உறுதிப்படு!
இன்பத்தைப் பண்பாயத் தொடு!
துன்பத்திற்குத் துன்பங் கொடு!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-7-2006.

(யேர்மனி இந்து மகேஷ்ன் – பூவரசு சஞ்சிகைக்காக ”துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்கி” –  என்ற தலைப்பில் எழுதியது.)

 

 

                                

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Previous Older Entries