244. வேலி. (முதலாவது நூலில் வெளியான கவிதை)

 

வேலி.

(துறுகல் – பாறை, குன்று, கால்வாய் அடைக்கும் கல்)

வேலி போட்டுத் தடுத்தாலும்
வேகம் மீறி இயங்கும்
காற்றுக்கென்ன வேலி!
மனஆற்றலும் காணாது வேலி.
ஆற்றுக் கென்ன வேலி!
ஊற்றுக்கென்ன துறுகல்!

எல்லையற்ற உலகில்
எண்ணிறைந்த வேலி!
ஓசைக்கெது வேலி!
ஆசைக்குப் பயம் வேலி.
விழுமிய வாழ்விற்கு ஒழுக்கம்
வித்தகத் தமிழுக்கேது வேலி!

வேலி போட்டு வாழ்ந்தும்
வெளியே வருவோர் பலரே.
ஓலை வேலியுள்ளேயங்கே
ஒடுங்கி வாழ்ந்தோம் நாம்.
மனவேலி போடாது வாழும்
மக்கட் கூட்டத்தோடிங்கு

இணைந்து வாழவியலாது
இருளில் வாழுமொரு கூட்டம்
இரும்பு வேலிக்குள்ளும்
இறுகிடும் நிலையுமுண்டு
உலகப் பெருவெளியில்
சட்டக்காவல் வேலியுள்ளே.

தாலியையும் மனிதரே ஒரு
வேலியாக்கினார் பெண்ணுக்கு.
காலி ஆணுக்கெது வேலி!
கேலியன்றோ இவ்வஞ்சகம்!
நிறை மனக் கட்டுப்பாடே
நிறைந்த வேலியுலகில்.

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-4-1999.
(ரி.ஆர்.ரி தமிழ்ஒளி தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கவிதை.)

14-8-2012 செவ்வாய் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் கவிதை நேரத்தில் (19.00-20.00)மறுபடியும் என்னால் வாசிக்கப் பட்டது.

 

                                            
 

Next Newer Entries