248. நம்ப நட

 

 

நம்ப நட

 

மெல்ல நகர்ந்து இணைந்து
நல்ல விதமாய்ப் பிணைந்து
வல்ல கதைகள் பின்னியது
வல்லமையோ! நட்பு முரண்படவோ!

இச்சை மனதில் பச்சையான
கூச்சம் விலகியதோ! மிச்சமான
மெச்சிடும் குணம் மாறியதோ!
எச்சமாய் புகுந்தது எதுவோ!

மௌனமாயிருந்தவளிடம்
கௌசலம்(திறமை, சூழ்ச்சி) இன்று புகுந்ததோ!
பவ்வியம்(தாழ்மை, அடக்கம், பணிவு)மறந்து, எழுந்ததோ
அவ்வியம்!(அழுக்காறு, வஞ்சனை) எதற்கோ மாறிட்டான்.

காதலவனுக்கு புகழ் – பெயரில்!
காதல் அவனுக்கு – எழுத்தில்!
காதலை வெறுப்ப தெப்படி!
காதல் தானே வாழ்வுப் படி!

காதலை விலக்கி ஒதுக்கி
மோதுவதேன் கடமை கடவுளென்று!
கோதுகிறதோ மறைவாக ஆதிக்கம்!
கூதல் அதிகாரம் ஆட்டுகிறதோ!

ஆண் தானே! ஆதிக்கம்
நாண் என ஆதியிலூட்டியதே!
தூண் போலத்தானிருப்பான்.
தூ! இது மாறாத நோய்!

யாசிப்பு அன்பெனினும் வேண்டாம்!
யாரை நம்பி நடப்பது!
யாண்டும் நம்ப நடக்கும்
யாத்திரையே சிறப்பு! சிறப்பு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-9-2012.

 

                                              

 

 

Advertisements

247. பரிசுகள்.

 

பரிசுகள்.

 

இன்னும் இரண்டு விருதுகள் கிடைத்துள்ளது. தகவல் இப்போது தான் தெரிந்தது. இதன்படி 28-7-2012ல்

Sun shine blogger award.   

http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html Sl. No. 61

 

11-8-2012ல் லிப்ஸ்ரர் பரிசும்     http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html Sl.No. 53.

திரு.வை.கோபாலகிருஷ்ணன் சாரால் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இத்தடன் 6 பரிசுகள் இயைணத்தளத்தில் கிடைத்துள்ளது.

 

அடுத்து

டென்மார்க் வாழ் தமிழ் கலைஞர்கள் ஒன்றிணைந்து நடாத்திய வெள்ளிவிழா கலை மாலையும் முத்தமிழ் அரங்கும் நிகழ்ச்சி கடந்த 22.09.2012 சனிக்கிழமையன்று டென்மார்க் கேர்னிங் நகரில் வெற்றிகரமாக நடந்தேறியது.

டென்மார்க் மண்ணில் நின்று 25 வருடங்கள் கலைத்துறைக்கு தொண்டாற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு. வென்ஸ்ர கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அனி மத்தீசன் …பரிசளித்தார்….

http://www.alaikal.com/news/?p=113106#more-113106   

முதலாக 35 கலைஞர்கள் கௌரவிக்கப் பட்டனர்.  அதில் நானும் ஒருவளாக…

கலைஞர் பேராயம் நடாத்திய வெள்ளிவிழா கலைமாலை பரிசளிப்பு புகைப்படங்கள். http://www.alaikal.com/news/?p=113783#more-113783

 

வெள்ளிவிழாக் கலைமாலையிரவில் என்னால் மேடையில் வாசிக்கப்பட்ட கவிதை.

கம்பன் ஒரு இலக்கியப் பந்தல் போட்டதை எங்கோ வாசித்த நினைவு அது இப்படிப் போகிறது:-…

”…சோதிமலையொன்று தோன்றிற்றதிலொரு வீதியுண்டாச்சுதடி
   வீதி நடுவொரு மேடையிருந்ததடி, மேடையிலேறினேனடி
   மேடையங்கொரு….” 

என்று இப்படியே தொடர்கிறது.

அப்படியொரு இலக்கியப் பந்தல் ஒன்று நான் போட்டு, அதில் நின்று சிறு கவிதை ஒன்று தருகிறேன்.

”…டென்மார்க் நாடொன்று கண்டோமதிலொரு வாழ்க்கையுண்டாச்சுதடி!
   மொழியைப் படித்த வீதியிலொரு கூடம் தெரிந்ததடி!
   கூடத்தினுள்ளே கூடிப் படித்து மேடையிலேறினேனடி!
     ” பெட்டகோ” (pædagog) மேடையிலேறினேனடி
   வாழும் நாட்டில் இழந்த மேடையை  இங்கு பெற்றேனடி….”

இனி.

வெள்ளி விழா…ஓகோ வெள்ளிவிழா!

உள்ளிப் பூடாய் நாளும்
அள்ளித் தமிழை (தமிழரை) அணைப்போரும்,
தள்ளி – தனியே வாழ்வோரும்
பள்ளி கொண்டே தமிழோடு
புள்ளி சேர்த்து உயர்வோருமாக
கொள்ளை விதமான தமிழருக்கின்று
வெள்ளிவிழா ஓகோ! வெள்ளி விழா!

அறிவைத் தேடி ஓடினால்
குறைவா யெண்ணு முலகில்
முறையாய் நூல்கள் செய்தால்
நிறைவாய் ஆதரிக்கா உலகில்
நிறைவாய் மனம் சோர்ந்;தே
திறந்தேனொரு வலையதற்கு 2 வயது.
வேதாவின் வலையென்று கூகிளில்
தேடுங்கள்! கோவைக்கவி.வேட்பிரஸ்.கொம் என்று தேடுங்கள்.

சமுதாயப் பள்ளங்களை யாராலும்
முழுதாக நிரவ முடியாது.
மனித சரித்திரம் சாதனையுடையதானால்
வனிதமது ஆவணப் படுத்துதல்.
கணிதமான இவ் விழாவும்
ஆவணமாகட்டும் சாதனையில்.
வாரிசுகளிதை அறியட்டும்.
பூரிக்கட்டும் முன்னவரெம் நகர்வால்.

ஒழுங்குகள் மதில்களாக இருக்கட்டும்.
பழுதற்ற பண்பாடுகள் தழும்பி
மொழியோடு யுத்தமிடாது
மொழிச் சுளற்சியில் அரசாளட்டும்.
இன்னும் வளரும் தமிழ்.
இன்னும் புதுமைகள் காணும்.
பெற்றோர், உற்றோர் கைகொடுப்பில்
அற்புதமாய்த் தமிழ் முன்னேறும்.

கலைகளையேற்றுக் கருத்து வீசாஉலகில்
நிலையாலுயர்ந்தெமைக் கௌரவித்தற்கு
மலைபோல் மனது வேண்டும்.
அலைகள் வலைப்பணியது பாராட்டுடைத்து.
அலைகளின் சேவை மகத்தானது.
விலையற்றது, விமரிசனத்திற்கு அப்பாற்;பட்டது.
மாலையிடுகிறோம் மனதால் மகிழ்ந்து.
மூலை முடுக்கெல்லாம் அலைகள் புகுந்து வளம் படுத்தட்டும்.

வாழ்க! வளர்க!
அலைகளென்றால் கே.எஸ் துரை.
கே.எஸ்.துரையென்றால் அலைகள்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

25-9-2012.

 

                            
 

4.பயணம் மலேசியா 10.

 

4.பயணம் மலேசியா 10.

பத்து மலைக்கோவிலில் இருந்து சுமார் மாலை ஏழு மணியளவில் வீடு திரும்ப ஆயத்தமானோம்.

கடந்த முறை மலாக்கா செல்ல ஆசைப்பட்டும் அது நடக்க வில்லை. யோகூர் சென்றோம்.
இந்த முறை மலாக்கா செல்ல வாடகை வாகனத்திற்கு 400 றிங்ஙெட் எடுத்தனர். அடுத்த நாள் காலை 9 மணிக்கு பயணப்பட்டோம். வழியில் முதலில் ஒரு உல்லாசப் பயணத் தகவல் நிலையத்தில்

சில புத்தகங்கள் தகவல்கள் எடுத்துக் கொண்டு போனோம்.
நெடுஞ்சாலை வீதி மருங்கிலும் பாம் தோட்டங்கள்,

பார்வைக்கு தென்னைத் தோட்டங்கள், அல்லது பேரீச்சம் மரங்கள் போல  பசுமையாக இருந்தன. படத்தில் இதைக் காண்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் அழகுக்கு அழகான மரங்கள் நட்டு

பாதை, கடையோரங்கள் எல்லாம் அழகு படுத்தி வைக்கிறார்கள் மாதிரிக்கு இதைப் பாருங்கள். (பின்னும் வரும்) மருமகள் சாந்தி கூட ” அன்ரி இப்படி அழகு படுத்துவது இங்கு விசேடம் படம் எடுங்கள்!”  என்றார்.
முதலில் பகல் ஒன்று முப்பது போல அபஃமோசா றிசோட் (Afamosa  resort    ) எனும் பறவைகள் விலங்குகள் காப்பகம் அல்லது வன விலங்குப் பூங்காவிற்குச் சென்றோம்.

520 கெக்ரார் நிலப்பரப்பில் இது அமைந்துள்ளது.  பல விதமான் உல்லாச பொழுது போக்குகள் உண்டு. ( கவ்போய் உலகம், ( cow boy world ) தண்ணீர் உலகம் ( water world   ) போன்று.
நிறைய உல்லாசப் பயணிகள் வாகனம் வாகனமாக வந்து இறங்கிப் போய் வந்த வண்ணமே இருந்தனர்.
குறிக்கப் பட்ட நேரத்திற்கு சாரதியும், உதவியாளரும் வர கம்பிகளால் திறந்த கூடாக

அடைத்த லொறியில் எங்களை (சுமார் 15 – 20 பேர்) ஏற்றிக் கொண்டு மேடு பள்ளம் எல்லாம் ஏறி இறங்கி வாகனம் ஓடியது. சுமத்திராப் புலி,

யானை, வரிக்குதிரை,

ஆபிரிக்கப் பறவைகள், பாம்பு, காண்டா மிருகம், பசு, ஆடு, மான்,

பன்றி, பிளமிங்கோ, மந்திகள்  என்று 1000 மிருகங்கள் 159 ஏக்கரில்  உள்ளன. 

வாகனம் ஓட ஓடப்  புகைப் படங்களும் எடுத்தோம். பாருங்கள்.
பகலுணவு அங்கேயே வாங்கும் வசதி இருந்தது. வாங்கிச் சாப்பிட்டோம். சாப்பிடும் போது ஆபிரிக்கப் பறவைகள் கிட்டக் கிட்ட வந்து பழகின.

இவை முடிய மலாக்கா சென்ரர் அதாவது நடுப்பகுதிக்கு வந்தோம்.
மலாக்கா ஆசியாவின் பழைய பட்டினம். சுமத்திரா,மலேசியாவின் இடையே ஒரு போத்தலின் கழுத்துப் போன்ற மலாக்கா ஜலசந்தி மிகவும் பெயர் பெற்ற துறைமுகம். பங்களா தேஷ் – யாவாக் கடலின் ஜலசந்தி இது.

1511ல் மலாக்கா சுல்தானை வென்று போர்த்துக்கீசிய துறைமுகமாக இருந்தது. த போட்ரா டி சன்ரியாகோ (The porte de Santiago) என்று அழைக்கப் பட்டது. மிளகு, ஏலம், கறுவா கராம்பு போன்று வாசனைச் திரவியச் சரக்குகளை ஏற்றி  இறக்க போர்த்துகீசம், கோவா, சீனா போன்ற இடங்களிற்கு கப்பல் வழிப்பாதைக்கு உதவியாக இருந்தது.

1641ல்டச்சுக்காரர் வசமானது. பின்னர் 19ம் நூற்றாண்டில் பிரிட்டசார் வசமானது.  பின்பு நெப்போலியன் பிரான்ஸ், பின்னர் சிங்கப்பூரைக் கண்ட சேர் ஸ்ரம்பேஃட் றபெஃல்ஸ் (Sir Stamford Raffels) மலாக்கா வந்தார். 1810ல் த சேவைவிங் கேட் ஒப்ஃ அபாஃமோசா போர்த்துக்கிஸ் போட் இன் மலாக்காவை( The surviving gate of the Afmosa Portuguese port in Malacca)    ) அழியாது மிச்சப் படுத்தினாராம்.

அங்கம் 11 ல் மிகுதியைப் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-9-2012.


 

37. மீன் விழி நீந்தி…

நன்றி:- கல்கி.

 

மீன் விழி நீந்தி…

 

ஆண்:-

மீன்விழி நீந்தி மகிழ்வினில் ஆடும்
குளிர் நீரோடையோ!
உன் மேனியென்ன பனிமலர்
அமைத்த பஞ்சணையோ!…. ……  (மீன் விழி)

காமன் அமைத்த பூந்தோட்டமோ! நம்
காதல் ஊஞ்சல் மேடையோ!
காலம் இதுவே அருகில் வர
கோபம் ஏனோ கோமளமே!……………(மீன் விழி)

பாதம் நோகுமோ பாவையே வா!
பேதமின்றிப் பிரியாது பழகுவோம்!
பூவினும் மெல்லிய இதழ்த் தேனை
பூரித்து அருந்துவோம் பூமகளே!……(மீன் விழி)

பூக்கள் தூவும் வரவேற்புக் கவிதை!
பூமி வரையும் வாழ்த்துக் கவிதை
தீர்க்கட்டும் எம் காதல் நோயை!
பார்க்கட்டும் உலகு நம் காதலை!…(மீன்விழி)

பெண்:-

ன்னவா உன் மார்பென்ன
சின்னச் சிங்கார மஞ்சமோ!
மன்மதனின் பாணமேந்தும் சித்திரப்
பொன்னுடல் மேடையோ!……………..(மீன்விழி)

வாருங்கள் அன்பு தாருங்கள் நாளும்
சேருங்கள் என்று காத்திருந்தேன்.
கோருவது தினம் இதுவே கோதையின்
கோமள ராஜனே வருக!………………….(மீன்விழி)

ற்பக தருவாய், காமதேனுவாய்க் காதல்
காலமெல்லாம் பயன் தரட்டும்.!
மலர்களும் மாலைகளும் மஞ்சத்தில் நிதம்
மணக்கட்டும் கல்யாணிராகம் மயக்கட்டும்!……(மீன்விழி)

ன்மதலோக மாயவன் கணைகள்
மென்மையாகப் பாயட்டும்!
மாலையென்ன காலையென்ன மன்மத
மாயங்கள் செய்யட்டும் நாளும்!………..(.மீன்விழி)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-9-2012.

 

                             

                                                                                                   http://youtu.be/d4WAXasFE_E

பாடலில் பிறந்த கவிதையெனலாம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் – தென்றலில ஆடும்.)

 

                           

 

 

246. படிப் படியாய்….

படிப் படியாய்….

ம்மா அப்பாவோடணைந்தபடி
அகரம் கூறியது மழலைப்படி.
ஆசிரியர் உறவுமிணைந்தபடி
ஆரம்பமானது வளர்ச்சிப் படி.

ச்சை மண்ணில் எழுதியபடி
இச்சையாய்த்  திருக்குறள் மனனப்படி.
மிச்சம் வளரும் முயற்சிப்படி
உச்சம் ஏறும் சவாற்படி.

ருணையாய்ப் பாசுரங்கள் ஒதியபடி
கடவுள் வணக்கம் நியமப்படி
கலகலத்த உறவோடாடியபடி
கண்ணியமாய் வளர்ந்தோமுன்னதப்படி.

ள்ளிப் படிப்பு கடமைப்படி
பல சூதுவாது கலந்தபடி
பெரியோர் வழி காட்டற்படி
படித்துச் சமாளித்தது வெற்றிப்படி.

நேர்மைப்படி நேரப்படி
நெடும் பாதையிவை கடந்தபடி
நம்பிக்கையோடு துணிவுப்படி
ஏற்றியபடியிவை ஏணிப்படி.

லையோடு கவிதைப்படி
உணர்வோடு ஊடகப்படி
ஊடாடியது உற்சாகப்படி
கூடுகிறோமின்று இணையப்படி.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-9-2012.

*

***************************************************

 

4. பயணம் – மலேசியா. 9.

சிறீ சுப்பிரமணிய ஆலய பூசை.

 

4. பயணம் – மலேசியா. 9.

மினேறாவின் தாமரை உருவ நீர் பொங்கும் வழியால் சுமார் 4 மணியளவில் வெளியேறினோம்.

அடுத்து பத்து Baktu caves temple)  குகைக்கோவில் பார்க்க.

எமக்கு இது இரண்டாவது விஜயம். இங்கும் நாம் முதல் தடவை சென்றிருந்தோம்.  மகளவைக்குத் தான் இது புதிய இடம்.

இது கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. சுண்ணக்கற்களால் உருவான குகை. 3 குகைகளில் – கோயில் இருக்கும் குகையே பெரியது.

சிங்கப்பூரில் பிறந்த கே.தம்புசாமிப்பிள்ளை  எனும் வியாபாரியே இதைக் கண்டு பிடித்தவராம். இன்று சிறீ சுப்பிரமணிய ஆலயமாக உள்ளது. 113 வருடப் பழைமை வாய்ந்த கோயில்.
272 படிகள் ஏறிப் போக வேண்டும்.

நிலமட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் உள்ளது. நிதானமாக மூச்சு விட்டு நின்று நின்று இளைப்பாறி நாம் மேலே ஏறினோம்.
மலை ஏறி மேலே வந்ததும்


இதிலிருந்து குகைக்குப் போக கீழே படிக்கட்டுகள். இதிலேயே கடைகள் ஆரம்பிக்கிறது காண்கிறீர்கள்.

வெயிலில் நடந்து வந்து களைப்பானால் குகை உள்ளே போக,  சில்லென்று இருக்கும்.
படிக்கட்டுகள் இருந்தாலும் – கோயிலை அடைய – 160 மலைப் பாதைகள் உள்ளதாம்.
1890களில் கரடு முரடான மலைப்பாதையே இருந்ததாம். 1920ல் மரப் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டதாம்.

படிகள் தூரத்தில் தெரிகிறது.

பாதையெல்லாம் குரங்குகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அலைபவை. கையில் இருப்பதைக் கூடப் பறிப்பார்கள். உங்கள் அருச்சனைப் பொருட்களை சும்மா தட்டில் ஏந்திப் போனால் குரங்குகள் பறித்து விடும். ஒரு உறையில் போட்டு எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.

கோவில் முன்பு 42.7 மீட்டர் உயரமான முருகன் சிலை உள்ளது. இந்தியச் சிற்பிகளும், மலேசியாச் சிற்பிகளும் சேர்ந்து அமைத்த சிலையாம்
உலகிலேயே உள்ள உயரமான முருகன் சிலை இதுவாம். நாம் முன்பு போன போது இது இருக்கவில்லை. இதன் இடது புறத்திலுள்ள குகையில் இந்துக் கடவுள் உருவங்கள் வண்ணத்தில் உள்ளதாம். இதை மியூசியம் குகை என்பார்.
இன்னொரு குகை மின்சாரப் பாவனைக்கு பாவிக்கிறார்களாம்.

மிக அற்புதமான குகைக் காட்சி. அதிசயம் என்றும் கூறலாம்.

நிறையப் புறாக்கள் வருகிறது. எனக்கு அதனுள் நின்று படம் எடுப்பது பிடிக்கும்.


எனது பயணக்கதை வரிசைகளில் முதலாவது பயணம் – அங்கம் 18ல் படங்களுடன் விவரங்கள் உள்ளன. படங்கள் அளவில் சிறியதாகப் போட்டுள்ளேன். அதை அழுத்தினால், அதன் பெரிய உருவம் காணலாம். அதன் லிங்க் (இணைப்பு) தருகிறேன் விரும்பியவர்கள் வாசிக்கலாம்.

https://kovaikkavi.wordpress.com/2010/10/02/18/

தை மாசியில் 3 நாட்கள் தைப்பூசத் திருவிழா உலகப் பிரபலம்.

நானும்  இவரும் வயதானவர்களாகவும், மகளும் துணைவரும் இளையவர்களாகச் சென்றிருந்தோம். கோயில் குருக்கள் மகளவையைப் பார்த்து அதிகமாக விவரங்கள் கூறி (பூஜை புனஸ்காரம், அருச்சனை, மின்னஞ்சல் என்று) பலவாறாகப் போசினார். ஒரு வேளை மகளின் துணைவர்  ஆங்கிலேயர் என்பதாலோ தெரியவில்லை. வெளியே வந்து மகள் கூறினா ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் வயதானவர்களாக இருந்தும் உங்களை அலட்சியம் பண்ணி ஏன் இப்படி எம்மோடு கதைத்தாரோ, பணம் கறப்பதற்கோ தெரியாது என்று வியந்தனர்.  நாம் சிரிப்பதைத் தவிர வேறு என்ன பண்ண முடியும்.!

கூகிளில் படப் பகுதியில் குகை பெயரை அழுத்துங்கள், கண்கொள்ளாக் காட்சி காண்பீர்கள். இவைகள் உலகில் பார்க்க வேண்டியவை.

படியிலிருந்து  எதிரே தெரியும் மலேசியாவின் காட்சியை இறுதியாகக் காண்கிறீர்கள். மிகுதியை அங்கம் 10ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-9-2912.

36. மறந்திடு! மாறிடு!

                                   நன்றி தேவி வார இதழ்.

 

மறந்திடு! மாறிடு!

 

வா வா என்கிறான்.
தா காதலென்கிறான்.
சா வராதோவென்கிறான்.
பா பாவாக வரைகிறான்.

பொல்லாக் காதலனவனோ!
தோல்வியைத்தான் கண்டானோ!
கல்லான காதலுக்காய்த் தினம்
நல்லாக ஏங்குகிறான் ஏங்குகிறான்!

ண்ணிறைந்த ஏக்கம் விலக்கி
எண்ணக் கிளையில் காதல்
வண்ண இலைகள், மலர்கள்
தண்மையாய் (குளிர்மையாய்) விரியவில்லையாம்.

டகுத் துறைக்குக் காதல்
படகு வரவில்லையாம், அதனால்
தடங்கல் சயனத்திற்கென்று
கடலாக ஏக்கம், தாக்கம்!

பாவை தனைத் தேடாளோவெனப்
பாகாய் உருகி மாய்கிறான்.
பாவாணர் பரம்பரையாய்ப்
பாங்காய்ப் பா வரைகிறான்.

லக்கணம் மாறிய காதல்
பிலாக்கணம் பாடுது நோதலால்.
துலக்கமாகிறது சலனக் கூதல்.
கலக்க வலி வரியினோதல்.

றக்கலாம் இதனையவன்!
சிறக்கலாம் புதுப் பாதையிலிவன்!
மானில வாழ்வொருமுறைதான்!
தேனிலவாக்கலாம் மாறியிவன்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-9-2012.

 

                                   

 
 

Previous Older Entries