250. உயர்த்தும் சுறுசுறுப்பு

 

 

உயர்த்தும் சுறுசுறுப்பு

 

புன்னகைத்து நாட்கள் பிறக்கிறது.
என்ன விதத்திலும் கூட்டலாகிறது
முன்னணிக்கு வரும் ஆட்டமானது
வன்னகைக்கு நிறமூட்டல் – அது
பின்னணிக்குத் தள்ளலுன் திறமை.

அன்றுதல்(சினத்தல்) அன்றே தவிர்த்து
நின்றாடும் பொழுதுகளைச் சிரித்துச்
சென்றோட, திண்டாடாது நன்றாட
வென்றாடிக் கொண்டாட வென்று
அன்றாடம் சுயநம்பிக்கையோடு கட!

நிறைந்த கடமை இறைந்திடினும்
அறைந்திட வராது தனிமையும்.
குறைந்த பொழுது ஓய்ந்திடவும்
நிறைந்த சுறுசுறுப்பு உடலிலும்
உறைந்திடா துயர்ச்சி தரும்.

பூக்களின் மீது தேனான வின்பம்
பாக்களிற் போர்த்தும் சந்தங்களாகும்.
ஆக்கமாகும் வார்த்தை யமுதம்
தேக்கமாதல் அலுப்பற்ற ஆனந்தம்!
நோக்கம் நிறைவேறு மானந்தம்!

அமைதியும் ஆனந்தமும் ததும்பும்
சுமையிலா வாழ்வொரு வேள்வியாம்!
அமைந்த சுறுசுறுப்பான மனம்
அமைத்திடுமிதைச் செப்பமாக.
எமை உயர்திடுமது களிப்புடன்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-10-2012.

(2-10-2012 செவ்வாய்க்கிழமை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் மாலை (19.00-20.00)கவிதை நேரத்தில் என்னால் இக்கவிதை வாசிக்கப் பட்டது.)

                                   

 

                                               

 

249. ஆணி வேர்.

 

 

ஆணி வேர்.

 

அழிக்கவியலாச் சித்து(அறிவு) – மயக்கும்
மொழியொரு  முத்து
வாசிவாசியென்று வாசிக்கவூறும்
மொழியொரு ஊற்று.
மெல்ல மெல்ல உயரவுதவும்
மொழியொரு ஏணி.
தனிமை நீக்கி நிறைவு தரும்
மொழியொரு உறவு.

பழியுடை அநியாயத்திற்கு விசுக்கும்
மொழியொரு சவுக்கு.
அழிக்கவும் பாவிக்கும் புத்தியெனில்
மொழியொரு கத்தி.
விழி பிதுங்கும் துன்பத்தாலிளைப்பாறும்
மொழியொரு நிழல்.
அழிவுக்கில்லையிதன் துணையெனில்
மொழியொரு நண்பன்.

வழியில் வாழ்விலில்லை ஏகாந்தமேனெனில்
மொழியொரு காந்தம்.
எழிலான எதுகை மோனையும் மயக்கும்
மொழியொரு இயலிசை.
அழியா தெம்மின மாடாமலிருக்க
மொழியெம் ஆணி வேர்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
1-10-2012.

(18-9-2012ல் ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் மாலை(19.00-20.00) கவிதை நேரத்தில் என்னால் இக்கவிதை வாசிக்கப் பட்டது.)

Please see this also:-      கவிதைப் போட்டி.:-     http://kavithai7.blogspot.in/2012/09/kavithai-contest.html

 

                                           

Next Newer Entries