34. திருமண வாழ்த்து.

75526_682090118468040_23422310_n

பெறா மக்கள், மருமக்கள் திருமண வாழ்த்து.

அப்பப்பா அம்மப்பா திரு தர்மலிங்கம்
அம்மம்மா அப்பம்மா திருமதி திலகவதியினரின்
அருமைப் புதல்வி சுகிர்தா(ஆசை) திரு வித்தியானந்தனை
திருமணம் இணைக்கிறது 19.10.2013 ஓகுஸ் நகரில்.

கண்ணிற்கு மையிட்டு அமுதூட்டிப் பஞ்சணைக்
கட்டிலில் எம்மைக் கொஞ்சிக் குலாவி
கிளியாக எங்களை வளாத்தார் ஆசையம்மா
கிங்கிணியாய் நெஞ்சில் நிறையும் ஆசையத்தை சுகிர்தா.

நோயிலே மனம் வாடி மார்பிலும் தோளிலும்
தாயாகத் தாங்கியெம்மை இரவு பகலேந்தி
வாயாரப் பாடி, விளையாட்டுக் காட்டி
வாரிவாரி அன்பை இறைத்துப் பார்த்தீர்கள்!

சேர்ந்து சிரித்தோம், சோர்ந்திடாது நாளும்
பார்த்துப் பார்த்தெமைப் பாசமாக உருவாக்கினீர்கள்!
கோர்த்த இவ்வுறவு எம் பிறவி யோகம்!
பார்த்திடுங்கள் திருமணத்துணையே! ”ஆசையை” பக்குவமாக.

உன் பிறக்காத மழலைகள் எங்களையணைத்து
அன்புச் சிறகால் ஆதரவோடு விரல் பிடித்து
நீராட்டி வாசைன பூசி கரிசனையாய்
ஆராட்டியமைக்கு ”ஆசையே!” எமது நன்றி.

இழைந்தோடும் திருமண வாழ்வு சிறக்க
மழையாகப் பொழிகிறோம் எம் ஆசை வாழ்த்துகள்!
தழைத்தோங்கி அன்புடன் இன்பமாய் வாழ
அழைக்கிறோம் எங்கள் ”ஆசைக்கு” இறையாசி பெருக!

வானம் பூமி வாழ்த்த நீவிர் நீடூழி வாழ்க!
வாழ்க பல்லாண்டு!

வாழ்த்துவோர் உங்கள் பெறா மக்கள்,
மருமக்கள்.
ஓகுஸ், டென்மார்க்.

30. இலக்கியத் தமிழ் வளவு.

Elkkiya......

இலக்கியத் தமிழ் வளவு.

பசும்பாலைப் பக்குவமாய்க் காய்ச்சிப் பின்
பதமாய் ஆறிடப் பிரை சேர்க்கின்
பாகமாகும் தயிர் கடைந்து வெண்ணெயாக்கும்
பாங்கு நல்லிலக்கியத் தமிழ் வளவு.

நூற்திரிகளின் திரிப்பு கயிறெனும் பிறப்பு.
நுட்ப மனப்பகுப்பால் இலக்கியப் பிறப்பு.
நூலறிவின் நுணுக்க அலசல் விரிப்பு.
நுகர்ந்த அறிவுணர்வின் மூத்தோர் தொகுப்பு.

வாழ்வினால் பிறக்கும், வாழ்வை வளமாக்கும்
வானுயர் சிந்தனையால் மனம் பண்படும்.
அறிவு, உணர்வை ஆளுமையாக்கும் இலக்கியம்.
அரும்பொருட் சொல்லோசை நயமிகு இலக்கியம்.

உள்ளதை மனம் உணர்ந்து மொழியும்.
உள்ளங் கவரும் சொல்லழகு ரதம்.
பள்ளம் மேடு பாயுமகண்ட நீரோட்டம்.
உள்ளபடி இயங்கும் மானுட அறிவாயுதம்.

குமுகாயம் சீராக்கும் ஓரின அறிவாயுதம்.
குமுகாய நெளிவைத் தட்டித் தட்டி
குறை தீர்க்கும் மொழிச் செயற்பாடு.
குணம்தரு மிலக்கியத் தமிழ் வளவு.

(குமுகாயம் -சமூகம். பிரை – உறை மோர்)

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-1-2004.

pachchai line

40. இன்னுமெந்தன் காதில்…

amma

இன்னுமெந்தன் காதில்…

இன்னுமெந்தன் காதிலுங்கள் குரல்
பின்னுகிறது பழைமை வேதமாக!
இன்னுமெந்தன் கனவில் உருவம்
சின்னத்திரை போல் மின்னுகிறது!
இன்னும் நீங்கள் பூவுலகில்
பின்னும் நினைவோடு தானம்மா.

நீங்கள் இல்லையென்று எதற்காக
நானிங்கு கலங்க வேண்டும்!
நீங்களென்றும் என்னுள் தானம்மா
நான் மறந்தாலன்றோ விலகிட
நீங்களென்னை விட்டுப் போகவில்லை.
தேன் நினைவு கனவிலுமென்றும்

பொறுமையாம் பெருமாயுதம் தந்தீர்கள்
பண்பெனும் நடைவண்டியிற் பிடித்து
பக்குவமாய் நடை பயிற்றனீர்கள்
பாரில் நிமிர்ந்துள்ளேன் பெருமையாயின்று.
என் மனிதத்தின் சாவியே
என் அப்பாவுடன் நீங்களுமன்றோ!

விநாயகராய் உங்களைச் சுற்றினேன்
விளக்கமிகு வாழ்வுக்கனி யேந்தினேன்.
அன்னையர் தினமெனவொரு நாளேன்!
குன்றிடாத நினைவுகள் என்றுமே!
நன்றிகள் நவில்வது மென்றுமே
நான் எண்ணுவதும் என்றுமே.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
30-3-2003.

anjali-2

25. முருகா

Muruga88[1]-----m

அழகான மயிலேறி ஆறுபடை வீட்டினிலே
அருள் முகம் காட்டும் முருகா
அன்பர்கள் மனமிரங்க ஞானப் பழமாக
அறிந்து கொண்ட முருகா!

வளமாக எமது தேசம் வாழ
குளமாக ஆனந்தம் பொங்கி வழிய
உளமார அருட்பார்வை தாராய்
தளமாக அறிவினைத்தாராய்!

என்றும் இளமையான அழகு முருகா
வென்று நம் தமிழ் அழகுற
நன்று அருட் பார்வை வீசாய்!
குன்றில் குடி கொண்ட முருகா!

முத்துத் தீவை மொத்தமாய் மாற்றி
சொர்க்கத் தீவாய் ஆக்கித் தருவாய்!
சொக்கநாதர் செல்வனே முருகா! நீ
தக்கது அறிவாய் அழகு முருகா!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
24-10-2013

anjali-2

291. சுக்கானாகும் நல்லறிவு.

praanaayaamam

சுக்கானாகும் நல்லறிவு.

அறிவின் ஒளியகலச் சுடர் வீசும்
முறிவற்ற சுடர் முகத்தினிலும் வீசும்!
செறிவோடு இலையிட்ட உணவாகிப் பிறரிற்கும்
நெறியோடு பசியாற்றும் நிறைந்த அறிவாம்.

கொடு! கொடுத்தாலது வெகு புண்ணியமாகும்!
எடு! மனமுதிர்வில் மறுபடி யுரமாகும்!
படுக்குமிலை, புல் இற்றுப்போ யுரமாகும்.
அடுத்துக் கெடுத்தலிலுமிது வெகு உயர்வு!

ஒருவரிற்குக் கடத்து மறிவு பரந்து,
ஒரு குடும்பம் சமூகத்திற்காய் விரிவது,
பெரும் வழக்காகு மிப் பூலோகத்தில்.
தருக்குடன் தனக்குள் சுருளல் அறிவன்று.

சுகந்த மலராய் மணம் வீசுமறிவு,
சுவைக்கும் தேனா யினிக்கு மறிவு,
சுகிர்த குணம் தரும் நல்லறிவு
சுதந்திரம் நிறை நல்லறிவு சுக்கானாகும்!

(சுகிர்த – நற்குணம்)

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22.10.2013.

sunburst

290. உறவிற்கு முதலாய்

adam-and-eve

உறவிற்கு முதலாய்

 

உறவிற்கு முதலாய் ஆணும் பெண்ணும்

திறவுகோலாய் உலகில் உருவாக்கம்.

துறவு அல்ல துணையோடு சந்ததிச்

சிறகு விரித்தனர் ஆதாம் ஏவாள்.

 

உரமான சந்ததிக்கு உறவுத் தேவைகள்

சரவிளக்காகிப் பெருகி உயர்ந்தன உயர்ந்தன.

சாரமிகு சுக துக்கச் சுயதேவைகள்

சாதிப்பதில் காலச் சக்கரச் சுழற்சி.

 

உறவிற்கு முதலாய் உள்ளத்து உண்மை,

உரிமை அன்பு, உதவும் நெஞ்சு,

உற்சாக உள்ளம் உவப்பான உறவை

உரமாய்ப் பிணைத்து உன்னதம் காட்டும்.

 

உறவிற்கு முதலாய் ஆன்ம நிம்மதி.

கறக்கும் பணமோ பலரின் நிம்மதி.

துறக்கும் சடப் பொருளால் மனிதம்

மறந்து பிறக்கும் நிம்மதி பிராணவாயுவாகாது.

 

வெட்ட வெளியில் தன் சிறகடிக்கும்

சிட்டுக் குருவியும் உறவிற்கு முதலாய்

கொட்டும் தீனி பொறுக்கும் நிம்மதி

எட்டும் மகிழ்வே உறவிற்கு முதலாய்.

 

 

பா ஆக்கம் பா வானதி வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

21-8-2005.

 

straight line

 

 

 

21. ஓன்றுக்கு ஒன்று.

TwoLorenzOrbits

 ஓன்றுக்கு ஒன்று.

 

ஒரு விதிக்குள் அடங்கல் என்று

இரு புனித நதிகளின் சங்கமமென்று

பெரும் உடல்நல முடிவிதுவென்று

உருவான எழுதாத சட்டமன்று.

 

பதித்தனர் திலமிடும் வார்த்தைகள்

ஒருத்திக்கு ஒருவன், ஒருவனுக்கொருத்தி.

திருத்தச் செயலுடையோருடன் பொருத்தம்.

விருத்தியுளப் பங்காளியுடன் மிகப்பொருத்தம்.

 

உருத்து உண்டொரு நல்லுரிமைக்கு.

யாருக்கு வெறுப்பு, மறுப்புமில்லை.

சேருமிரு பொருந்திய மனங்களிற்கு

ஒருவனிற்கு ஒருத்தி, ஒருத்திக்கொருவன்.

 

வருத்தம் தினம் தரும் வன்முறையாளருடன்

திருத்தவியலாத ஒரு மனச்சீக்காளியுடன்

பொருத்தமற்ற பொல்லாத பங்காளியுடன்

அருத்தமில்லா அமில வார்த்தையிது.

 

 

பா ஆக்கம் பா வானதி  வேதா. இலங்காதிலகம்.

டென்மார்க்.

22-8-2005

divider1

Previous Older Entries