55. நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.

நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.

எத்தனை பசுமையாய் இருந்த மரம்
அத்தனை இலைகளும் உதிர்ந்து சிரம்
சுத்தமாய் வழித்ததாய் ஒரு தோற்றம்.
மொத்தமாய் உயிரில்லை என ஏற்கும்
அழகில்லை எனும் ஒரு சகுனம்
அர்த்தம் நிறைந்த ஒரு மௌனம்.
imagesCAK4MBNM

ஒரு ஏக்கநிலைத் தேக்கம்
சிறு காத்திருப்புத் தாக்கம்
கலையின் மாறுபட்ட அலகு
இலையுதிர் காலத்து அழகு
நம்பிக்கைக்கு ஒரு சாட்சி.
வெம்பி மனம் வேகாத மாட்சி.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-11-2003.

straight line

4. இடைவேளையின் பின்பு 4…..

1460110_10202637350034607_547321136_n
(பாலன் தனது தாயாருடன்.
தயார் மாமி (மனோன்மணி) இன்னும் உயிருடன் உள்ளார்.
எத்தனை வயதானும் பிள்ளை பிள்ளை தானே!
இது தாய்மை உணர்வு. அவரது வேதனை சொல்லில் அடங்காது. என்னை வைத்து என் பிள்ளையை எடுத்து விட்டாயே எனக் கலங்கும் தாய். )

இடைவேளையின் பின்பு 4…..

புதிய தெருக்கள் அமைப்பது பற்றியும்…அதனால் என்ன பயன்!!…வாழ்வு முறை என்று மாறும்!… என்று ஆதங்கப்பட்டேன் கடந்த பகுதியில்.
பயண விபரங்கள் தொடர முதல்….
நான் 23ம் திகதி இரவு 9.20க்கு இலங்கையில் விமானம் ஏறினேன் டென்மார்க் வர. 22ம் திகதி பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு மைத்துனர் (என் தங்கையின் கணவரின் தம்பி) உடற் பயிற்ச்சிக்காக நடப்பதற்கு அதிகாலை ஜந்தரை மணிக்கு வெளியே போனவர் இன்னும் வீடு வரவில்லை என்று எல்லோரும் தேடினர். இறுதியாக பொலிசில் சென்று ஆளைக் காணவில்லை எனப் புகார் கொடுத்த போது பொலீசார் தாங்கள் காணக் கூடியதாக ஒரு வீதி விபத்து நடந்தது என்றனர். வைத்தியசாலை சென்று பார்த்தால் பிண அறையில் அவர் உடல் இருந்தது.

பாலன் எனும் இவர் மஞ்சள் கோட்டில் தெருவைக் கடக்கும் போது வேகமாக வந்த ஒரு வான் அவரை அடிக்க கால் முறிந்து வாகனத்தின் மேல் அவர் தூக்கி எறியப் பட்டு அந்த இடத்திலேயே தலையில் அடிபட்டதால் இறந்திட்டார்.

தமிழ் சாரதி அடித்திட்டு ஓடி விட்டார். அவரது வாகன இலக்கத் தகடு கீழே விழுந்திருந்ததால் அவரைப் பின்பு பிடித்தனர். மீதி வழமை முறைகள் அங்கு தொடர்கிறது.
எல்லோரையும் கதி கலக்கிய இது ஒரு திடுக்கிடும் சாவு.

இப்படித் தான் நடக்கிறது.

தம்பி வீட்டிற்கு நான் போனால் மறுபடி திரும்பிப் போகும் போது ” கவனம் அக்கா! பார்த்துத் தெருவைக் கடக்க வேண்டும!”… என்பார் ஒவ்வோரு தடவையும்.
ஒரு தடவை தனது சின்ன மகனை அனுப்பி என்னைத் தெருவைக் கடந்து விட்டிட்டு மகன் சென்றார்.
நானும் தம்பியும் மஞ்சள் கோட்டில் தெருவைக் கடந்தால் தனது கையை வாகனச் சாரதிக்குக் காட்டி கொஞ்சம் பொறுங்கள் நாம் கடக்கிறோம் என்று கடக்கும் வரை கையைக் காட்டியபடி நடப்பார். இதை நான் இங்குள்ள வீதிச் சட்டத்தைக் கூறி இது என்ன அநியாயமப்பா என்பேன்.

இப்படி உள்ளது

பாலனின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அமைதி கிட்டட்டும்.

இனிமுகநூல் நண்பர் லோகநாதன் பிஎஸ் வீட்டிற்கு தம்பியுடன் செல்ல ஒழுங்கு பண்ணி சென்றோம். நீண்ட நேரம் இருந்து பேசினோம். கதை கதையாம் காரணமாம் என்று ”..நொண் ஸ்ரோப்பாக..” கதை நடந்தது. இனிமையான அன்பான பொழுதாக கழிந்தது. இவர் அருமையான ஒரு வீட்டு ஏரியாவில் இருந்தார். மிக மிகப் பிடித்திருந்துது அந்த ஏரியாவின் சூழல்.
சமீபமாகவே கங்காராம விகாரையும் உள்ளது. வீட்டில் மனைவியார், ஒரு மகனும் இருந்தனர். அவரது மகனும் எனது தம்பியின் மூத்த மகனும் (இலண்டனில் இருப்பவர்) நண்பர்கள். இவருக்கும் எனது இரண்டு புத்தகங்கள் கொடுத்தேன். அவரும் எனக்கு இரண்டு புத்தகங்கள் தந்தார். எங்களை அவரது மகனார் (அருண்) தனது காரில் கொண்டு வந்து விட்டு தம்பி வீட்டிற்கும் விஜயம் செய்து சென்றார்.

சந்திப்பிற்கும் மிக மகிழ்வடைந்தேன்….லோகநாதன் அவர்களே.

புத்தகத்திற்கும் மிக்க நன்றி.
cey6th-24th-march14 048
cey6th-24th-march14 062

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
3-4-2014.

anjali-2

3. இடைவேளையின் பின்பு 3.

இடைவேளையின் பின்பு 3.

இலங்கையில் பிறந்து எவ்வளவோ காலம் வளர்ந்து, வாழ்ந்து 26 வருட டென்மார்க் வாழ்வின் பின் 2-3 கிழமை அங்கு போய் நிற்பது, வியர்வையில் குளிப்பாட்டுவது போல ஏன் இருக்கிறது! புரியவில்லை! அத்துடன் இமிற்றேசன் (போலி) கழுத்தணி, கையணிகள் வியர்வையுடன் புரண்டு எரிச்சலைத் தந்தன. தங்க நகைகள் பெரும் பாலும் பலர் அணிவதில்லை.

தம்பி வீட்டிற்கும் தங்கை வீட்டிற்கும் ஆறுதலாக நடக்க 15 நிமிட 20 நிமிட நேர இடைவெளி வரும். தெருவை இரு பக்கமும் கிண்டி பாதையை விரிவு படுத்தும் வேலையால் இன்னும் நேரமெடுக்கும்.
இதை விட தெருவைக் கடப்புதும், தெருவோரம் நடந்து செல்வதும் உயிரைக் கையில் பிடித்தபடி நடப்பது போலாகும். குடை பிடித்தபடி (வெயில் தானே கொளுத்துதே!) நடந்து போய் கால்களை உயரே வைத்தபடி விசிறிக் கொண்டு அமர்ந்திடுவேன்.
cey6th-24th-march14 070 cey6th-24th-march14 071 cey6th-24th-march14 063

நீண்ட தூரங்களை பேருந்திலும் குறுகிய தூரங்களை முச்சக்கர வண்டியிலும் பயணித்தோம்.

பாதையில் நடப்பது படு பயங்கரம். எல்லோரும் படு சுய நலம்..!!!!

முச்சக்கர வண்டி – தான் முண்டியடித்து சந்து பொந்தில் புகுந்து ஓடவேணும். பேருந்துகளும் அப்படியே.
கராட்டி – குங்பூ படித்துத் தான் இதில் ஏற வேண்டும். நீர் கடைசி ஆளா? இறங்க முதல் பேருந்தை இழுப்பான். இது கண்டக்டரின் அவசரம்.

ஒரு தடவை நான் ஓடிய பேருந்தால் இறங்கினேன்.
நல்ல வேளை விழவில்லை.
அதை விட 15 வருடத்திற்கும் மேலாக முதுகு நோவெனும் பிரச்சனையுள்ளவள் நினைத்துப் பாருங்கள்..!!!!!
இறங்கியதும் பேருந்தில் அடித்து (தட்டி) ” மொக்கத கரண்ணே?..” (என்ன செய்கிறாய்?..) என்று அவனை எரிப்பது போலக் கேட்டேன்.
வயசு போனதுகள் வாழ்பவர்கள் என்று எண்ணமே இல்லை சுயநலம்!…சுயநலம்!….
அதன் பின்பு இறுதியாக நான் இறங்கும் போது ”..பொட்டக் இண்ட…..பையினவா.” (கொஞ்சம் பொறு! இறங்குகிறேன் ) என்று கூறியபடியே இறங்கினேன்.
பேருந்தினுள் இறங்குபவர், ஏறுபவர் என்று ஒழுங்கு முறையே இல்லை. இடித்துத் தள்ளி, நெரித்து, தலைமயிர், கைப்பை எதுவானாலும் கடாசி, இழுபட்டு இறங்குவார்கள்…சுயநலம்!…சுயநலம்!….
மற்றவனைப் பற்றிய எந்தச் சிந்தனையுமே இல்லை! துளியளவும் இல்லை. பேருந்தில் ஏறியதும் இருக்க இடம் கிடைத்தால் அவர் அதிஷ்ட்டம் செய்தவரே.
இது என் மனக் கொதிப்பே.
நாட்டில் பாதைகள் சரிக்கட்டுகிறார்கள்.
மிக மிக நல்லது. 20 நிமிடத்தில் விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்குள் வந்து விடலாம். ஆம்சரடாம் தெரு போல அழகாக உள்ளது. நன்று.
என்ன பயன்! வாழ்வு முறை என்று மாறும்!!!! மனிதராக என்று வாழுவோம்.!!!

இது என் ஆதங்கம்……

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1-4-2014

48176-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Border-Of-Rainbow-Lines

Next Newer Entries