IN ALLAIKAL.COM — INTERVIEW.

la-congratz-128

IN ALLAIKAL.COM — INTERVIEW.

வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு 23.05.2010

May 23, 2010
டென்மார்க்கில் கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதிவரும் பெண் படைப்பாளியாகிய வேதா இலங்காதிலகத்துடன் சந்திப்பு.
இன்று புலம் பெயர் நாடுகளில் தமிழ் படைப்பாளிகளின் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி காணப்படுவதை யாராலும் மறுக்க முடியாது. அதேவேளை பெண் படைப்பாளிகளைப் பொறுத்தவரை அது இரட்டிப்பாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன் எழுத்துத் துறையில் இருந்த பெண்களில் பலர் இப்போது இல்லை. தொடர்ந்து பத்து ஆண்டுகள் தாக்குப்பிடிக்கக் கூடியவாறு பலருடைய வாழ்வியல் சூழல் இல்லை. இந்த நிலையில் இடைவிடாது முயன்று கொண்டிருக்கும் டென்மார்க்கின் பெண் படைப்பாளி வேதா இலங்காதிலகத்தை சந்தித்தோம்.
கேள்வி : நீங்கள் கவிதையிலும், படைப்பிலக்கியங்களிலும் நாட்டம் கொள்ளக் காரணமென்ன ?
வேதா : எனது தந்தையார் நகுலேஸ்வரர், பாட்டன் முருகேசு சுவாமிநாதன் ஆகியோருடைய காலத்து தாக்கம் எனது இளமைக்கால வாழ்க்கையோடு கலந்திருந்தது. அதன் காரணமாக படைப்பிலக்கியத்தில் எனது ஆர்வம் பெருகியுள்ளது என்று கருதுகிறேன்.
கேள்வி : மூதாதையர் எப்படி உங்களிடையே கவிதைகளை ஊக்குவித்தார்கள். அதை கொஞ்சம் விளக்குங்கள் ?
வேதா : முதலாவது எனது முன்னோர்கள் தமிழ் சார்ந்த வாழ்வு கொண்ட பெரியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்கள் பழைய தமிழரசுக்கட்சி தொண்டர்களாகவும் இருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால தலைவர் கோப்பாய் கோமான் வன்னியசிங்கம் பின்னர் சிந்தனைச்சிற்பி கதிரவேற்பிள்ளை போன்ற தமிழ் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடையோராக இருந்தார்கள். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பொட்டு வைத்துத் தமிழ் உணர்வை பிரதிபலித்தார்கள். மேலும் அக்காலத்தே வெளியான பிரபல படைப்பாளிகளின் ஆக்கங்களை எல்லாம் எடுத்துவந்து வீட்டில் வைப்பார்கள். அதை வாசிப்பது எனது பொழுது போக்கு. குறிஞ்சிமலர் நாவலில் இருந்து அக்காலத்தே வந்த படைப்புக்களை எல்லாம் படித்தேன். பாரதியார் கவிதைகள் என்னை வெகுவாக பாதித்தன. கோப்பாய் தமிழ் உணர்வை தேக்கி வைத்த மண். அங்கிருந்து பல சிறந்த படைப்பாளிகள் உருவானார்கள்.
கேள்வி : நீங்கள் அறிந்த கோப்பாய் படைப்பாளிகள் பற்றி நினைவில் உள்ளதா..
வேதா : கோப்பாய் என்ற பெயரை தன்னில் தாங்கி கோப்பாய் சிவம் என்ற எழுத்தாளரை அறிந்துள்ளேன். அதுபோல வடகோவை வரதராசன் என்பவரையும் குறிப்பட வேண்டும். மேலும் கோவை மகேசனைவிட கோப்பாய்க்கு வேறென்ன புகழ் வேண்டும். இறுதிவரை தனது கொள்கை மாறாது இருந்த பத்திரிகையாளர். இலங்கையின் பல எழுத்தாளர்கள் கோவை மகேசனின் சுதந்திரனில் இருந்து வெளி வந்தவர்கள்தான். சமீபத்தில் நான் கோப்பாய் சென்றபோது கோப்பாய் எழுத்தாளர் யோகேஸ்வரி சிவப்பிரகாசத்தின் இரண்டு நூல்களை கொடுத்தார்கள். அவருடைய கணவன் சிவப்பிரகாசம் அதை என்னிடம் கொடுத்தார். ஈன்ற பொழுதில் என்ற சிறுகதைத் தொகுப்பும், உனக்கொன்று உரைப்பேன் என்ற சிந்தனைக் கட்டுரைகளையும் உள்ளடக்கியுள்ளது. இந்தப் படைப்பாளிகள் வரிசையில் நானும் எழுத முயல்கிறேன்.. மேலும் எனது கணவர் இலங்காதிலகமும் இளமைக்காலத்தில் அதிகமாக கவிதைகளை எழுதுவார். அவரும் எனது முயற்சிகளுக்கு அன்று முதல் இன்றுவரை உறுதுணையாக இருக்கிறார்.
கேள்வி : காதலைப் பாடும் கவிஞர்கள் நிஜ வாழ்விலும் காதலுக்காக உயிரும் விட துணிவதுண்டு.. நீங்கள் எப்படி ?
வேதா : எனது கணவரின் தந்தையார் மலையகத்தின் தேயிலைத் தோட்டத்தில் தலைமைக் கிளாக்காக இருந்தவர். கலவரத்தில் பாதிக்கப்பட்டு வடக்கே வந்தபோது என் கணவர் இலங்காதிலகம் எங்கள் வீட்டில் சிலகாலம் தங்கியிருந்தார். அவருடைய கவிதைகளை அப்போது படிப்பேன் காதல் மலர்ந்தது. நான் கவிஞரானேன், அவர் கணவரானார்.
கேள்வி : பலருக்கு காதல் வீதியில் வரும், உங்களுக்கோ வீட்டிற்குள்ளேயே வந்துள்ளது.. மேலும் சிறீதரின் கல்யாணப்பரிசு படத்தில் வருவது போல இருக்கிறதே.. ?
வேதா : கல்யாணப்பரிசுக்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் எமது காதல் பல எதிர்ப்புக்களின் மத்தியில் கைகூடியது. கல்யாணப்பரிசில் கைகூடவில்லை. அதனால்தான் எம் இருவருக்கும் இடையே நல்லதோர் புரிதல் இன்றுவரை நிலவுகிறது.
கேள்வி : காதல் தோல்வியடைந்தால் எல்லாவற்றையும் அழிக்கும், வெற்றி பெற்றாலும் அதே இழப்புக்களை தரும் என்கிறார்கள் இது சரியா ?
வேதா : ஆமாம்.. காதலித்த காரணத்தால் என்னை பாடசாலை போகக் கூடாது என்று நிறுத்திவிட்டார்கள். இதனால் அந்தக் காலத்தில் எச்.எஸ்.சி உயர் வகுப்பில் படித்த நான் ஒரு வருடத்திலேயே படிப்பை இழக்க நேர்ந்தது. ஓர் ஆசிரியையாக வரவேண்டும் என்ற எனது கனவை அடித்து வாயில் போட்டுவிட்டது அந்தத் தடை. ஆனால் இரண்டாண்டு காலம் ஒரு நேர்சரியில் படிப்பித்துள்ளேன். பின்னர் டென்மார்க் வந்து படித்து பிள்ளைகள் பராமரிப்பு நிலைய பணியாளராகி அந்த இடைவெளியை நிரப்பிக் கொண்டேன்.
கேள்வி : அப்படியானால் காதல் தவறு என்கிறீர்களா ?
வேதா : இல்லை.. காதலித்து மணமுடித்த காரணத்தினால் இன்று என்னைப் புரிந்த கணவன் கிடைத்துள்ளார். இதைவிட காதலுக்கு வேறென்ன மரியாதை வேண்டும்.
கேள்வி : அன்று ஆற்றிலே போட்ட படிப்பை இன்று டென்மார்க் குளத்திலே எடுத்துள்ளீர்கள் மகிழ்ச்சி. டென்மார்க்கிற்குள் புக முன்னர் கோப்பாயை கொஞ்சம் மனதில் வரைய முடியுமா ?
வேதா : கோப்பாய் யாழ். குடாநாட்டில் புகழ் பெற்ற ஊர். பருத்தித்துறையில் இருந்து புறப்படும் யாழ்ப்பாணம் பிரதான சாலையில் உள்ள முக்கிய நகரம். வாழைத் தோட்டங்களால் நிறைந்த பூமி. விவசாயம், மாடு வளர்ப்பு, ரியூட்டரிகள், ஆலயங்கள் என்று சகலதும் சூழ்ந்த அழகிய மண். அங்குதான் மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்லம் இருக்கிறது. அது கடந்த சில காலமாக கவனிப்பாரின்றிக் காணப்படுகிறது. எனது கவிதைகள் எல்லாமே கோப்பாயின் அழகை சட்டையாகப் போட்டே ஊர்வலம் போகும். எனது தந்தையார் அப்பகுதியில் அதிக நிலத்திற்கு உடமையாளராக இருந்தார். இதனால் விவசாய வாழ்வின் சுகங்கள், வயல் வரப்புக்கள், தொழிலாருடன் பழகும் வாய்ப்புக்கள் என்று தாயகத்தின் மருத நில வாழ்வு மனதில் பூத்துக் குலுங்கும். சோளகக் காற்றுவந்து வாழையிலைகளை நார் நாராகக் கிழித்து நாதஸ்வரமிசைத்து, மேலே கிளம்பி காவோலையைச் சுழற்றி ஊளையிட்டு ஓடிப்போகும்.. என்ன சுகம்.. என்ன சுகம்.. இதுமட்டுமா ஐந்து லிங்கங்கங்கள் இருந்து புகழ் பெற்ற மண் கோப்பாய். வவுனியாவில் இருந்த அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தை உங்களுக்கு தெரியும். பிரிட்டீஸ் மகாராணிக்கு கணிதம் படிப்பித்த ஆசான். அவர் கோப்பாயில்தான் படித்தவர். அதுபோல இலங்கையின் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் நாகலிங்கம், இதுபோல படித்த பஞ்சலிங்கங்களாகிய ஐந்து லிங்கங்கள் எழுந்த பூமி.
கேள்வி : சமீபத்தில் கோப்பாய் போய் வந்தீர்கள் எப்படியிருக்கிறது.. ?
வேதா : அன்று நான் பார்த்த அழகிய கோப்பாயை இன்று என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாமே தலைகீழாகிக் கிடக்கிறது. இதுதான் நமது கோப்பாயா என்று நம்மை நாமே கேட்க வேண்டிய அவலமே நிலவுகிறது.. மக்கள் இனம்புரியாத மௌனிகளாக வலம் வருகிறார்கள். மௌனவிரதம் இருப்பதைப் போல கொடுமை எங்கும் இருக்க முடியாது. உள்ளக்கதவை மூடிவிட்டு உன்னதம் இழந்து வாழ்கிறார்கள். அதேவேளை எனது காலத்தில் கீழ்வகுப்புக்களில் படித்த பல பெண்கள் இப்போது ஆசிரியைகளாகவும், அதிபராகவும், விரிவுரையாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களுடைய வளர்ச்சியைப் பார்க்க மனதிற்கு மகிழ்வாகவும் இருக்கிறது.
கேள்வி : கடந்த 25 வருடங்களாக இடைவிடாது எழுதுகிறீர்கள்.. உங்களைப் போல மற்றவரால் எழுத முடியவில்லை என்ன காரணம் ?
வேதா : எனது பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள். நானும் கணவனும் பிள்ளைகளுக்காக அதிக நேரத்தை ஒதுக்கும் நிலையை கடந்துவிட்டோம். இதனால் போதிய நேரம் இருக்கிறது. இதுபோல எல்லோர்க்கும் வாய்ப்பது கடினம்.
கேள்வி : அப்படியானால் கணவன் பொறுப்புக்களைச் சுமந்தால் பெண்கள் படைப்பிலக்கியத்தில் ஈடுபட வாய்ப்பாக இருக்கும் என்கிறீர்களா ?
வேதா : அது தவறானது.. ஒரு நல்ல படைப்பாளிக்கு தடையென்று எதுவும் கிடையாது. கடுமையைன நிலத்தை கிழித்துக் கொண்டு தாவரம் வெளியே வருகிறதே அதுபோலத்தான் படைப்பிலக்கியமும். அது வெளிவரவில்லை என்பதற்கு எந்தவொரு காரணத்தையும் கூற முடியாது. நானே அதிகமான குடும்பத்தின் சுமைகளைச் சுமக்கிறேன் அது எனது படைப்பை தடுக்கவில்லை. ஆனால் ஒரு விடயம் மிக முக்கியம் தொல்லை இல்லாமல் வாழக்கூடிய அமைதி வீட்டில் இருப்பது படைப்பை சுகப்பிரசவமாக்கும்.
கேள்வி : தங்கள் மகள் இலாவண்யா டென்மார்க்கில் சிறந்த மேடைப்பாடகியாக இருந்தார். இப்போது அவருடய கலை முயற்சிகள் எப்படியுள்ளன ?
வேதா : அவர் இங்கிலாந்தில் வாழ்கிறார். பிரபலமான வைத்தியசாலை ஒன்றில் தியேட்டர் கிளாக்காக வேலை பார்க்கிறார். தற்போது சைக்கோ தெரபி என்ற கல்வியையும் கற்று வருகிறார். அடுத்த ஆண்டு படிப்பு முடிகிறது. கலை என்று பேசவே நேரமில்லாத இங்கிலாந்தின் பரபரப்பு வாழ்வு.
கேள்வி ; தங்களுடைய படைப்புக்கள் மக்களுக்கு நல்ல தகவல்களை தரவேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருப்பதை சகல படைப்புக்களிலுமே காண முடிகிறது ஏன் ?
வேதா : அதுதான் என்னுடைய நோக்கம். மேலும் நான் பிள்ளை வளர்ப்பு தொடர்பாக ஒரு மொழி பெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளேன். அது விக்கிபீடியா, தமிழ் நூல்கள் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. டேனிசில் வெளியான 0 – 14 வயதுவரை என்ற நூலும், இன்றைய காலத்து குழந்தைகள் என்ற நூலும் தமிழில் வரவே வேண்டுமென நினைத்து நான் எடுத்த முயற்சி அது. அதற்குப் பிறகு மொழி பெயர்ப்பு பணிகளில் நாட்டம் குறைந்து கவிதைகளில் முனைப்புக் காட்டினேன்.
கேள்வி : இன்றய டென்மார்க் இளம் பெண்களின் வாழ்வு குறித்த தங்கள் பார்வை எப்படியுள்ளது ?
வேதா : பலர் பாராட்டக்கூடிய நிலையில் இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு கவலை தமிழ் மொழியை காப்பாற்ற வேண்டுமென்ற ஆவல் இவர்களில் நிறையப்பேரிடம் இல்லை. தங்கள் பிள்ளைகளுடனேயே டேனிஸ் மொழியில்தான் கதைக்கிறார்கள். இவர்கள் எங்கே போகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்..தவறான பாதையில் சரியாக வாகனத்தை ஓட்டி என்ன பயன் ?
கேள்வி : பொதுவாக நமது மக்களின் வாழ்வும், அதற்குள் தமிழ் பெண்களின் நோக்கும் போக்கும் எப்படியுள்ளது.
வேதா : தன்னம்பிக்கை வேண்டும், சொந்தக் காலில் நிற்க வேண்டுமென முயலும் அனைவரையும் பாராட்டுகிறேன். அதேநேரம் எல்லாமே பணமென நினைத்து வேலை வேலை என்று அலைந்து, ஒன்றுக்கு மூன்று வேலை செய்து வாழ்வைத் தொலைப்பவர்கள் குறித்து நான் கவலையடைகிறேன். வீடுகளை கட்டி, மேலும் பெரிய வீடுகளை கட்டி, தற்போது நாற்சார வீடு கட்டும் முறைக்கும் போய்விட்டனர் பலர். விரலுக்கு தக்க வீக்கம் பாராமல் நடப்பதால் உடம்பையும் கவனியாது, பல்வேறு நோய்களில் சிக்குப்பட்டு கிடக்கிறார்கள். இவர்களின் யாழ்ப்பாணத்து நாற்சார வீட்டுப் பார்வையிலும், பரபரப்பு வாழ்விலும் படைப்பாளி பைத்தியக்காரனாகவே தெரிவான்.
கேள்வி : புதுமாத்தளனுக்குப் பிந்திய புலம் பெயர் வாழ்வு பற்றி..
வேதா : தற்போது புலம் பெயர் நாடுகளில் அரசியலிலும் பல முயற்சிகள் நடைபெறுகின்றன. அனைத்தும் எப்படிப் போகும் என்பதை இப்போதே கூற முடியாது. எல்லாவற்றையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேள்வி : சமீபத்தில் டென்மார்க்கில் படித்த நூல்கள் பற்றி..
வேதா : ஜீவகுமாரனின் யாவும் கற்பனையல்ல படித்தேன். நகைச்சுவையாக பல கருத்துக்களை முன் வைத்துள்ளார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துரைத்துள்ளார். அதுபோல சக்திதாசன் கவிதைகளையும் படித்து ரசித்தேன். வேலணையூர் பொன்னண்ணாவின் தாயக நேசமிக்க படைப்புக்களையும் சுவைத்தேன். ஒரு சினிமா பைத்தியத்தின் உளறல் படித்து ரசித்தேன். எல்லோரும் சினிமாபைத்தியங்கள்தான் அதில் இலக்கைத் தொட்ட ஒருவரைக் கண்டேன். அதுபோல இணையத்தில் பலருடைய ஆக்கங்களை படிப்பது எனது பொழுது போக்கு.
கேள்வி : இனி நாங்கள் கேட்காமலே நீங்கள் பதில் கூறும் இடம்..
வேதா : அலைகளின் பத்தாண்டு வளர்ச்சி என்னை திரும்பிப் பார்க்க வைக்கிறது. எல்லாமே அலைகளில் இருப்பதால் நான் தினசரி முதலில் படிப்பது அலைகள்தான். அலைகளில் உள்ள வஸந்தின் பாடல்கள், காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இந்திய தயாரிப்புக்களுக்கு இணையான தரம் அவருடைய கலைகளில் உள்ளது.
கேள்வி : உங்கள் எதிர்கால கனவு.. ?
வேதா : கவிதைத்துறையில் எனது மன இலக்கை தொடுவது.. முயற்சிக்கிறேன்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறோம்.

Written by Thurai · Filed Under Flash News
Comments

இது அலைகள்.கொம் இணையத்தளத்தில் என்னுடனான  பேட்டி.
http://www.alaikal.com/news/?p=38761#more-38761

என்னைப் பற்றி கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவில் உள்ளதையும் சேர்த்துள்ளேன்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

2726040v4xjvomhhk

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  பிப் 02, 2017 @ 16:48:33

  Annamalai Balamanoharan :- தங்களையிட்டு மேலும் சிறப்பாக அறிந்துகொள்ள இப் பேட்டி உதவியது.

  நான் யாழ்ப்பாணக் கல்லூரியில் கற்றதனாலும், கோப்பாயில் அக் கல்லூரி சம்பந்தப்பட்ட குடும்பங்கள் பல இருந்தமையாலும் நான் கோப்பாயை நன்கறிவேன்.

  அதுவும் யாழ்ப்பாணத்து விவசாயிகளின் வாழ்வை ஊன்றிக் கவனித்தவன் நான். அவர்களின் உழைப்பும் உற்சாகமும் எம் வன்னி விவசாயிகளுக்குப் பின்னாட்களில் உதாரணமாக அமைந்தன.

  தங்கள் இலட்சியம் இனிதே நிறைவேற உங்களுக்கு என் வாழ்த்துக்கள்! உங்களுக்கு உறுதுணைணயாக உள்ள உங்கள் கணவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள்!

  பணåவன்புடன் பாலமனோகரன்.
  23 May 2010 at 20:12 · Like

  Vetha Langathilakam :- In real alaikal .com you can see with photoes.
  Thank you so murch. I can take this is as a blessing.
  23 May 2010 at 22:17 · Like

  Shan Nalliah:- GREAT INTERVIEW!
  24 May 2010 at 00:36 · Like

  Vetha Langathilakam:- Nanry. Nanry.
  24 May 2010 at 08:44 · Like

  Raggshana Vinayagamoorthy :- great interview
  24 May 2010 at 09:57 · Like

  Vetha Langathilakam :- Thanks da! see and read in the original alaikal.com with photoes!
  24 May 2010 at 10:05 · Like

  பூவரசி வெளியீடுகள்:- nice interview

  மறுமொழி

 2. கோவை கவி
  பிப் 02, 2017 @ 16:50:07

  Jeyaseelan Arulananthajothie Saraswathyammah :- நல்ல பேட்டி. தங்களை பற்றிய விபரங்கள் அறிய உதவியது.
  24 May 2010 at 17:51 · Like

  மன்னார் அமுதன் :- மிகவும் அருமையான பேட்டி. வாழ்த்துக்கள்
  6 June 2010 at 15:27 · Like
  Vetha Langathilakam
  Vetha Langathilakam :- If you go through real alaikal.com( link is in my wall)There was many photoes.. Anyway Thanks a lot.
  6 June 2010 at 15:31 · Like

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 03, 2017 @ 01:33:08

  // கணவன் பொறுப்புக்களைச் சுமந்தால் பெண்கள் படைப்பிலக்கியத்தில் ஈடுபட வாய்ப்பாக இருக்கும் //

  இதற்கான பதில் அசர வைக்கிறது அம்மா… வாழ்த்துகள் பல…

  மறுமொழி

 4. கரந்தை ஜெயக்குமார்
  பிப் 03, 2017 @ 14:08:36

  மனஇலக்கைத் தொட வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 5. Trackback: 2. பேட்டி – நேர்முகம். – வேதாவின் வலை.2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: