17. ஆன்மீகச் சிந்தனைகள்.

  

 

  

 

ஆன்மீகச் சிந்தனைகள்.

 

இறைவனைக் கோயிலிலும் வணங்கலாம், வீட்டிலும் வணங்கலாம். கோயிலில் அதே மனநிலை கொண்டவர்களின் மன அதிர்வுகள் சுவர்களில் எதிரொலிக்க, கோயிலின் சூழலும் ஒரு மனக்கோலத்தை உருவாக்குகிறது. அதனால் மனதிற்கு மகிழ்வு அமைதி கிட்டுகிறது.

இறைவனுக்குத் தொண்டு (ஊழியம்) செய்வது என்றுமே வீணாகாது. காரணம் தொண்டினால்(தெய்வ வழிபாட்டுத்) அதீத மன வலிமை பெறலாம்.

திருமொழிகள் போன்ற திருமுறைப் பதிகங்களை இறைவன் திருவடி எண்ணி ஒரு முறையேனும் ஓதினால் வாழ்வில் திருப்தி கிடைக்கும். திருப்பமும் நேரும்.

முதிர்ந்த இறை பக்தர்கள் இறைக்கும் ஆன்ம சிந்தனைகள், மன ஆறுதலையும், இறைபக்தியையும் தரவல்லன. பாலைவன மனங்களில் அருள் நீர் இறைக்கும் உணர்வு தருபவை.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

2-4-2011.

In Anthimaali web site:-  http://anthimaalai.blogspot.com/2012/05/9.html

                            

16. ஆன்மீகச் சிந்தனைகள்.

 

ஆன்மீகச் சிந்தனைகள்.
19-5-2007.
 

ண்டவனைச் சார்ந்து வாழுபவர்கள், அன்புள்ளவர்கள், அமைதி வாழ்வை வாழுகிறார்கள். அன்புடையோரிடம் கூற முடியாதவைகளை ஆண்டவனிடம் மானசீகமாகக் கூற முடியும். ஆலயத்தில் கண் மூடித் தியானித்தலில் எங்குமே அடைய முடியாத அமைதியை, இன்பத்தை அடைய முடியும்.
மனவியல் நிபுணர்கள் கூறும் பல வழிகளை அக் கால ஞானிகள் ஆண்டவன் எனும் பெயரில் கூறி மக்கள் பிரச்சனைகளை நிவர்த்தித்தனர்.

லயம் சுற்றி, குனிந்து, எழுந்து வணங்குதல் என்பவை அருமையான ஆரோக்கிய உடற் பயிற்சிகளாக இருந்தன, இருக்கின்றன.

நாள் முழுதும் பெரிய குடும்பத்திற்கு உழைத்துக் கொட்டும் ஒரு தாய்; ஆலய வீதி சுற்றி, விழுந்து தாளிட்டு வணங்குதல் அவளுக்கு அருமையான உடற் பயிற்சியாகும். அதில் அவள் அமைதி காண்கிறாள். அது மட்டுமின்றி குளித்துத் தூய ஆடை அணிந்து சுகாதாரமும் பேணப்படுகிறது. மனவியல் சிகிச்சை வழியெனும் ஆண்டவனைச் சார்ந்து வாழ்தல் மனதில் ஒளி தருமென்பது எனது சிந்தனையாகும்.

ன்பைக் கொடுத்தும், அவமதிப்பு, நிராகரிப்பு, அலட்சியம் பெறுகின்றனர் பலா.; ஆண்டவனிடம் அவைகளை நாம் பெறுவதில்லை. மாறாக அமைதி, மனப்பிரகாசம், இன்பம் அடைகின்றனர்.

2-6-2007.

ன உணர்வுகளின் தாக்கம் குரல் மூலம் தெரியப்படுகிறது. ஆத்திரமான குரல் மனிதனை எப்படி  கிளர்ச்சி பண்ணித் தூண்டகிறது என்பது நம்மால் சாதாரணமாகப் புரிந்திடக் கூடிய ஒரு விடயமாக உள்ளது.

றைவனைத் துதி பாடும் போது மனமுருகி, மன இறுக்கங்களை இளக்கி நாம் மென்மையாகத் தொழுது, எனக்கு அருள் செய்வாயாக என்று இழைந்து பாடுகிறோம் அல்லவா!

து போலவே இசை பாடும் போதும் மன இறுக்கம் முரட்டுத் தனங்களை விலக்கி விட்டு மனதை, குரலை இளக்கி மென்மையாக, குரலில் இனிய ஏற்ற இறக்கங்களுடன் பாடுவது உலகத்தாரை உங்கள் இசையோடு சொக்க வைக்கும் பாடல்களின் எண்ணிக்கையை ஏற்ற வேண்டும், பாடவேண்டும் என்ற பிடிவாதத்துடன் பாடுவது இசை இனிமையை இறக்கி விடும். இறைவனும் அதை விரும்ப மாட்டான். மென்மையையும், இனிமையையும் மனதில் சேர்த்து விடுங்கள். குரலில் அது தானாக வந்து ஒட்டி விடும். வேறு உணர்வோடு பாடுவதற்கும், பக்தியோடு பாடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் தெரிய வரும்.

முரட்டுத்தனம், பிடிவாதத்தோடு பாடுவதும் குரல் மூலம் தெரிய வரும்.
பிறரை உங்கள் இசையெனும் பசை மூலம் ஒட்ட வைக்க, இறைவனோடு இணைய, பாடுங்கள்!

குரலிணைய இனிமையாக, மென்மையாகப் பாடுங்கள்!

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                                

 

15. வணங்குகிறேன்.

 

வணங்குகிறேன்.  

இராப்பகலாய் உனை வணங்கி
இராசவரி எழுதி ஒரு
இராசராகம் பாடி இறைவா
இரட்சிப்புக் கேட்கிறேன்.

இரக்கம் கொண்டு நீயும்
இத் தரையில் வந்தெமது
இன்னல்கள் களைந்து விடு!
இன்பங்கள் தந்து விடு!   (இரா…)

சூரியனாய் இவ் உலக
சூதுவாது சுட்டு விடு!
சுவர்ண பூமியாக்கி, தீய
சுவடுகளை மாற்றி விடு!  (இரா…)

உறவு மேடையில் தினம்
உன்னை நினைந்து உருகி
உயர் பக்திப் பாலருந்தி
உணர்வோடு வணங்குகிறேன். (இரா….)

19-7-2008.

 

 

                                                      

 
 

14. தெய்வம்.

 

 தெய்வம்.

 (இசையோடு பாட)

     
இறையுருவின் மீது
பாறை போல் நம்பிக்கை
நிறைவாகப் பிணைப்பார்.
குறைவின்றி வணங்குவார்.
மறைவான பெரும் துணை
இறைவன் – தெய்வம்.        (இறையுருவின்….)

உயர்ந்தவர் தாழ்ந்தாலும்
தாழ்ந்தவர் உயர்ந்தாலும்
பக்கலில் நிற்பானவன்.
சோதனை தந்தும்
வேதனை நீக்கியும்
தீவினை தணிப்பானவன்.        (இறையுருவின்…)

அவன் சாரத்தியம்
அவன் இயக்குவான்.
அவனில் பாரமிட்டு
அவனை வணங்கும்
அதிலொரு சுகம்.
அவனே எம் துணை.          (இறையுருவின்…)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
11-1-2009.

 

                                                   

 

 

13. நவராத்திரி. – 1 -2

நவராத்திரி.  –  1

 

மூர்த்தியாகத் தேவியர்கள் மூலவராகும் இராத்திரி.
முச்சக்தி நாயகியரின் மூலமான இராத்திரி.
மும்மூன்று இராத்திரியாக முகிழ்வது நவராத்திரி.

ங்கல முதல் மூன்று மகோன்னத இராத்திரி.
மகிசாசுரமர்த்தனி துர்க்காவின் இராத்திரி.
மகாவீரம் மல்கிட மக்கள் துதிக்கும் இராத்திரி.

செல்வத்து அதிபதி செந்தாமரைச் செல்வியிடம்
செல்வம் யாசித்துச் சக்தி இசை பாடியும்
சேவிக்குமிரவுகள் நடு மூன்று இராத்திரி.

ல்வி கலைகளின் கர்த்தா கலைவாணியின்
கருணை கசியும் கடை மூன்று இராத்திரி.
காலத்திற்கும் ஆழவூன்றும் அறிவுக்கான இராத்திரி.

 ருத்தான வித்தியாரம்பம் கலைகளின் ஆராத்தி,
கடைநாள் விசயதசமியோடு களிப்புடன் பூர்த்தி.
கலைகொஞ்சும் நவரச அனுபவம் நவராத்திரி.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-10-2004.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Anthimaalai.web site:-     http://anthimaalai.blogspot.com/2011/10/1.html

 

                                         

 

 

                                             

12. இறை சிந்தனை

 

 

 இறை சிந்தனை

 1.          5-12-2006.
 றை சன்னிதியில் சன நெருக்கடியின்றி நிறைவான அமைதி தேடல் இன்பம்.

2.     17-4-2006.

னதிற்கு அமைதி, ஆறுதல், மகிழ்வு தரும் சிந்தனை இறை சிந்தனையாகலாம்.  இறை சிந்தனை – இறைவனை நினைக்கும் சிந்தனையாகத் தான் இருக்க வேண்டு மென்பதல்ல. பிறர் மனதைக் கீறிக் காயப் படுத்தாத, கறைபடுத்திச் சேறு வாரிப்பூசாத நறை வாரியிறைக்கும் சிந்தனை இறை சிந்தனையாகலாம்.

3.    23-4-2006.

வ்வுலக வாழ்வின் ஏமாற்றம், வேதனை, வக்கிரம், விகாரங்கள் மனதுள் குமுறும் போது, அவற்றைப் பக்தி கொண்டு இறைவனிடம் மானசீகமாகக் கொட்டும் போது அது ஒரு வகையில் வடிகாலாகிறது. இந்த இறை சிந்தனையிலான சமர்ப்பணத்தின் மூலம் நாம், நா காக்கிறோம்.  நல்லுறவுகளைக் காக்கிறோம். இதன்படி இறை சிந்தனை மனித வாழ்வைக் காக்கும் கவசமாகிறது.  ஒரு கேடயமாகிறது. கேடயமில்லாத போர் தான் இறை சிந்தனையற்ற வாழ்வும்.

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                              

 

11. பக்தியின் நாற்று.

 

பக்தியின் நாற்று.

காற்றில் இணையும் வரிகள்
நாற்றுத் தானே பக்தியில்.
ஏற்றும் கற்பூர தீபமாய்
போற்றும் இறை பக்தியை.

மாற்றம் இல்லா அருள்
ஊற்றாய் எம்முள் ஊற
கீற்றாக பக்தி மலர்கள்
சாற்றல் மகிழ்வு தினமும்.       (காற்றில்…)

ஓன்று இரண்டு, மூன்றாய்
என்றும் இசை மலர்கள்
நன்று தருவேன் தெய்வமே!
நலங்கள் தருவாய் ஐயனே!

ஆற்றல் என்றும் வேண்டும்.
ஊற்றாய் வரிகள் வேண்டும்.
நேற்று, இன்று, நாளையும்
நூற்றுக்கும் மேலாய் பாடுவேன்.    (காற்றில்…)

 

பா ஆக்கம் வெதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-6-2007.

                                      

 

10. காலத்திலும் ஞானமாய்…

 

 

 காலத்திலும் ஞானமாய்…

தேவ கிருபையாலே நாம்
தேவ கீதம் இசைப்போம்.
தேவாதி தேவனைத் துதித்து
தேவ நற்கருணையைப் பாடுவோம்.  (தேவ)

சீவிதம் சிறப்பாய் அமைத்திட
சீதள உலகை உருவாக்கினார்.
சீவ ஆத்துமங்கள் உருவாக்கினார்.
சீவ சுவாசம் தந்திட்டார்.         (தேவ)

கர்த்தருக்கு நன்றியாக நாம்
கருணையை உலகில் பரப்புவோம்.
கடமைகள் சரியாய் கவனிப்போம்.
காலத்திலும் ஞானமாய் நடப்போம்..  (தேவ)
19-4-2007.

                                        

                             

 

 

9. ஐந்து கடமைகள்.

 

ஐந்து கடமைகள்.   

 

கடமைகள் ஐந்து இஸ்லாம் கொண்டது.
கலிமாவெனும் மூல மந்திரம், தொழுகை,
கருத்துடை நோன்பு, ஐகாத், ஹஐ;
கணக்காய் இஸ்லாமியர் பின்பற்றுவார்.

அல்லாஹ் தொழுவதற்குரியவர், முகம்மது
அல்லாஹ்வின் இறுதித் தூதுவர் என்று
உறுதியாய் நம்பி நடத்தலும் அதை
உண்மையாய் மொழிதலும் கலிமாவாகும்.

நாளும் ஐந்து வேளை தொழுகை
நல்ல ஒன்பதாம் மாதம் ரம்லான்
நாட்கள் முழுவதும் நோன்பு இருத்தல்.
நோன்பும் தொமுகையும் இரகசியமல்ல

இருக்கும் செல்வம் நாற்பதில் ஒன்றை
இல்லாதோருக்கு ஆண்டு தோறும் வழங்குதல்
இனிய ஐகாத் எனும் கடமையாம்.
இணைத்து நடப்பார் வாழ்வை வெல்ல.

வசதி வாய்ப்பும் இணைந்தால் மக்காவிற்கு
வாழ்நாளிலொரு முறை யாத்திரையாகுதல்
வாய்த்திடும் ஹஜ் எனும் கடமையாகும்.
ஏய்திடலின்றி வாழ்தல் நிறைவாகும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-1-2009.
.

(இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

In anthimaalai web site:-  http://anthimaalai.blogspot.com/2012/05/10.html

                                      

8. தஞ்சைப் பெரிய கோயில்…..

 

தஞ்சைப் பெரிய கோயில்…..

 

நெஞ்சை உயர்த்தி நிற்கும்
விஞ்சும் இந்தியப் பெருமை
தஞ்சைப் பெரிய கோவில்.
இராஐராஐனின் உருவாக்கம்.
கட்டிடக் கலையின், தொழில்
நுட்ப அறிவின் வியப்பு!…..
அடுக்கடுக்காகப் பாறைகள் சேர்த்து
அடுக்கிய உருவகம் கோயிலாம்.

ஆயிரத்து நான்கில் ஆரம்பம்.
ஆயிரத்துப்பத்து வரை கட்டிய
ஆறுவருட அளப்பரிய சாதனை.
கட்டுமானத் தலைமைப் பொறியியலாளராய்
கட்டியவர் குஞ்சரமல்லராம்.
தெய்வபக்தியுடை மனிதசக்திகளால்
செய்திட்ட தமிழின் உன்னதம்.
சோழப் பேரரசின் முத்திரை.

மூன்றடி உயர லிங்கபீடம்
ஐம்பத்தைந்து அடி சுற்றளவாம்.
ஆறு அடி கோமுகத்துடன்
ஒரே கல்லில் உருவாக்கியதாம்!!!…
இருநூற்றிப்பதினாறடி உயர
கோயில் விமானமாம். ஆயிரம்
வருட இந்திய ஓவியங்களின்
சேகரிப்புக் குவியல்கள் உள்ளேயாம்.

இந்தியாவின் நெற்றிப்பட்டமாக 
குந்தியிருப்பதிது தஞ்சாவூரில்.
இரண்டாயிரத்துப் பத்தாம் வருடம்
ஆயிரமாம் பிறந்தநாள் நிறைவு.
பிரகதீஸ்வலர் ஆலயம் என்பர்.
உலக மரபுச் சின்னமென்பது
யுனெஸ்கோவின் அங்கீகாரமாம்.
தஞ்சைப்பெரிய கோயில் பல்லாண்டு வாழ்கவே!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்
24-9-2010.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2012/03/8.html 

 

In Muthukamalam web site:_    http://www.muthukamalam.com/verse/p1070.html

 

        

                                           
 

Previous Older Entries Next Newer Entries