16. அப்பாவாய் நீயிரு!…

  (படம்:- நன்றி –  இந்திய சஞ்சிகைக்கு)

 

அப்பாவாய் நீயிரு!…

ச்சிதனை முகர்வாய்! – என்
அச்சம் ஓடி மறையுதம்மா
உச்சமான நம்பிக்கை
மிச்சம் வளருதம்மா.

நின்னைத் துணை கொண்டால் – ஒரு
நிமிடமும் பேரின்பம் தானம்மா.
சின்னஞ்சிறு  வெறுப்பும்
மின்னலாய் ஒளியுதம்மா.

மெச்சிடும் உன்னுறவு – எனக்கு
துச்சமே இல்லையம்மா.
அச்சச்சோ தூரப் போகாதே
அச்சா அம்மா நீயே.

ப்போதும் பகலில் – எனக்கு
அப்பாவைக் காணா ஏக்கம்.
எப்படி எடுத்துரைப்பேன்
அப்பாவின் பிரிவுத் துயர்!

செப்புவேன் ஒன்றுனக்கு
தப்பாய் எடுக்காதேயம்மா.
அப்பா வரும் வரையெனக்கு
அப்பாவாய் நீயிரு அம்மா!

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-3-2012.

(உண்மைச் சம்பவம் கவிதையாக.)

 

                                

 

15. வெள்ளைக்காரரும் விரும்புவார்.

(குழந்தைப் பாடல்கள் -சிறுவர் பாடல்கள் – எழுதுவதில் எனது முதல் நூலான வேதாவின் கவிதைகளில் ”ஒளவைப் பாட்டி” என்ற ஒரு கவிதையும்,

குழந்தைகள் இளையோர் சிறக்க என்ற எனது இரண்டாவது நூலான மொழிபெயர்ப்புக் கட்டுரை நூலில் 13 கவிதைகளும்,

உணர்வுப் பூக்கள் என்ற மூன்றாவது கவிதை நூலில் மூன்று கவிதைகளும் இடம் பெற்றது.

இந்த வலையில் சிறுவர் பாடல் வரிகளில் இது 15வது.

மதிப்பிற்குரிய சகோதரர் தம்பி.கூர்மதியான் அவர்கள் ஒர் தடவை (ஆனி – 1- 2011ல் புதன் கிழமை) இதை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தார்.  

இப்படி:- 

”…பொடியன்களா இருக்கும் போது எக்கசக்க பாடல் பாடியிருப்போம். எல்லாம் இப்போ நமக்கு ஞாபகம் இருக்கிறது இல்ல. ஆனா அதை கொஞ்சம் ஞாபகப் படுத்தி சுண்டி விட இங்க ஒருத்தர் கோவை கவியாக நமக்கு வழி செய்கிறார். சிறுவர் பாடல்களை போட்டு தாக்குகிறார்…”
— தம்பி)

சரி……மேலே தொடருவோம்…..

 

 

15. வெள்ளைக்காரரும் விரும்புவார்.

டலை முன்னால் வளை!
கைகளை ஒன்றாய்ச் சேர்!
தும்பிக்கையாய் வளை!
அசைந்து அசைந்து நட!
ஆனை போல நட!
யானை யானை பார்!

 

சுளகு போன்ற காது
சுவர் போன்ற உடம்பு.
தூண் போன்ற கால்கள்.
குஞ்சரம் போன்ற வால்.
யானை! யானை!  யானை!
யானை வருகுது பார்!

வெள்ளைத் தந்தம் பார்!
வெள்ளைக்காரரும்  விரும்புவார்!
சர்க்கஸ்காரரும் பழக்குவார்!
மரங்கள் இழுக்கும் யானை.
ஆலயத்திலும் இருக்கும்
ஆசி கூடக் கூறும்.

யானை யானை யானை
யானை வருகுது பார்!
சேனையும் கண்டு நடுங்கும்.
யானை முகம் பிள்ளையாருக்கு.
யானை நிறம் கருப்பு.
ஐராவதம் வெள்ளை யானை.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-2-2012.

(ஒரு தகவல் யானைகளின் தினம் பங்குனி 13 ம்.)

 

                              

14. சிறுவர் பாடல் வரிகள். (வண்ணத்திப்பூச்சி).

 

    

வண்ணத்திப்பூச்சி…

விண்ணிற்கும் மண்ணிற்கும் இடையில்
எண்ணற்ற கோடி அதிசயங்கள்.
வண்ணப் பூச்சிகள் ஏராளம்.
வண்ணத்திப் பூச்சியுமொரு வகையாம்.

ல வர்ணத்தில் இறக்கைகள்
கண்ணைப் பறிக்குது பாருங்கள்!
பார்க்கப் பரவசம் தந்திடும்
ஈர்த்து மக்களை மயக்கிடும்

பூரிப்பாய் அமர்ந்து தேனருந்த
பூவிற்குப் பூவாய்ப் பறக்கும்.
தொட்டால் வண்ணம் ஒட்டும்.
பட்டு இறகுப் பூச்சி.

பொத்தினால் கையினுள் அடங்கும்.
எத்தனை சுதந்திரப் பூச்சி.
எனக்கும் ஒரு ஆசை
வனப்பு வண்ணத்திப் பூச்சியாக.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-5-2011.

                        
 

13. காக்கா!…வா!..(சிறுவர் பாடல் வரிகள்.)

 

   

காக்கா!…வா!…

கா..கா….கா…
காக்கா..வா!…வா!…வா!
கன்னம் கரிய காக்காவே!
கடிதெனப் பறந்து வா!…
கடமைச் சனி விரதக்
கறி சோறு உண்ணலாம் வா!..  (கா!..கா!…கா!…)

குரலில் இனிமை இல்லாரையும்
காக்காக் கத்தல் தானென்று
ஒப்புவமைக்கு உதாரணமாய்
செப்புகிறா ருன்னை… காக்காவே!
கழிவைச் சுத்தமாக்கும் தோட்டியே!
கடுப்பின்றி ஓடிவா! காக்காவே!   (கா!…கா!…கா!..)

ற்றுமைக்கு உதாரணம் நீயாம்!
ஓப்பிட்டுப் பேசுகிறார் ஆறறிவாளர்.
ஒரு பயனுமில்லை இவர்
ஓசை மட்டுமே எழுப்புவார்.
ஒருபோதும் உன் போல்
ஒன்றாக இருக்கார் உலகிலே!….(காக்கா..வா!..வா!..)

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-3-2011.

 

 

                               

12. சிறுவர் பாடல் வரிகள்.

 

கிறிதுமஸ்க்கு ஒரு பாடல்; —

தேவபாலன்….   

யெருசலேம் புண்ணிய நகரிலே
யோசேப் மரியாள் வயிற்றிலே
செனித்த கருவின் முதிர்விலே
யெகம் பாலிக்க வந்தான்.       (யெருசலேம்….)

ங்கிய ஊசிக் குளிரிலே
மங்கிய பனி இரவிலே
தாங்கிய மாட்டுக் கொட்டகையில்
தேவாபலன் வந்துதித்தார்.       (யெருசலேம்…)

லகரட்சகர் யேசுபாலன்
உதித்தார் மார்கழித் திங்களிலே
உன்னதமாக தேவதைகள்
விண்ணால் மலர்மாரி பொழிந்தார்.  (யெருசலேம்…)

பா ஆக்கம்.   வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
6-12-2008.

  

 

                      

 

 

 

 

11. தொலைந்து போன ஒற்றைப் பாதணி

 

 

 

 

தொலைந்து போன ஒற்றைப் பாதணி

சின்னக் குட்டித் தேவதை தூக்கத்தில்
என்னமாய்ச் சிரிக்கிறாள்!
கன்னித் தேவதை கனவில் வந்து
கன்னம் வருடிக் காலணியைக் கொடுத்தாளோ!

ண்ணாவோடு பந்து விளையாடுவதாய்
அண்ணாந்து கால்களை எம்பிக் குதித்துக்
கண்களை இறுக மூடிப் பந்தாக
விண்ணிற்கு எறிந்தாள் பாதணியை.

பூமரத்திலே அது மாட்டித் தொங்கியது.
சாமரம் வீசி ஆடியது அழகாக.
காலணி தொங்கியது விளங்காத மழலை
”அம்மா! பெரிய பூ பார்!” என்றாள்.

ற்றைக் காலணியோடு வந்து
மற்றக் காலணி எங்கே என்று
குழந்தை அழுதழுது
 கண்ணயர்ந்தாள் கன்னம் வீங்க.
ஒற்றியெடுத்தேன் முத்ததால் அவளை

 பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
 ஓகுஸ், டென்மார்க்.
 20-4-2010.

 

                                

10. தமிழ் படிப்போம்.

 

தமிழ் படிப்போம்.

வாருங்கள்!  வாருங்கள்!
வண்ணத் தமிழ் படிப்போம்.
வசீகரத் தமிழ் படிப்போம்.
வளமான தமிழ் படிப்போம்.

ரியத்தின் மூலமொழி
திராவிடத்தின் தாய் மொழி.
உலக முதன் மொழியென்று
மொழிந்தார் பாவாணர்.

ஓளவை மொழி பயில்வோம்.
வள்ளுவர் மொழி படிப்போம்.
கள்ளமற்ற நல்வழியால்
வெள்ளை  மனமாய் வாழ்வோம்.

ளர்ப்பது  தமிழெனும் எண்ணத்தால்
வளமான தமிழ் பாய்ச்சுவோம்.
வாக்குத் திறமை கூட்டி
வசீகரத் தமிழாய்க் கொட்டுவோம்.

பா வரி வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-11-2010.

In vaarppu. com.

http://www.vaarppu.com/view/2357/

  

 

                           

9. காலத்திலும் ஞானமாய்…

 ( இசையோடு பாட..)

 
தேவ கிருபையாலே நாம்
தேவ கீதம் இசைப்போம்.
தேவாதி தேவனைத் துதித்து
தேவ நற்கருணையைப் பாடுவோம்.  (தேவ)

சீவிதம் சிறப்பாய் அமைத்திட
சீதள உலகை உருவாக்கினார்.
சீவ ஆத்துமங்கள் உருவாக்கினார்.
சீவ சுவாசம் தந்திட்டார்.         (தேவ)

கர்த்தருக்கு நன்றியாக நாம்
கருணையை உலகில் பரப்புவோம்.
கடமைகள் சரியாய் கவனிப்போம்.
காலத்திலும் ஞானமாய் நடப்போம்.  (தேவ)

பாடல்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-4-2007.

 

                       

 

 

8. பனி விளையாட்டு.

 

பனி விளையாட்டு. 

பொல பொலவெனப் பொழிந்த பனி
பளபளவென ஒளிர்ந்தது சூரியனால்.
வெடவெடவென நடுங்கினார் பலர்.
துருதுருவென சிறுவர் நாம்
குடுகுடுவென வெளியே ஓடினோம்.
சர்சர் என பனியில் சறுக்கினோம்.
தடதடவென ஓடி ஆடினோம்.
கலகலத்த சிரிப்பும் கும்மாளமாய்.

 

பூப்பூவான பனி விளையாட்டில்
சொதசொதவென நனைந்தோம் செப்பமாய்.
தொணதொணத்தாள் அம்மா போதுமென.
சிடுசிடுத்துக் குசுனியுள் சென்றாள்.
சுடச்சுடத் தேனீர் தந்தாள்.
கதகதக்கும் வீட்டு வெப்பமும்
கமகமக்கும் அம்மாவின் உணவும்
சுறுசுறுப்புத் தந்தது எமக்கும்.

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,   டென்மார்க்.
5-3-2007.

(லண்டன்தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

  

 

                      

                        

7. தாயே! சரஸ்வதியே!…

       

 

தாயே! சரஸ்வதியே!… 

     (பாடுவதற்கு…..)
      

       அருளொளி வீசிடும் தாயே!
       கருணை பொழிவாய் நீயே!
       திருச்செயல் உனக்கு தினமும்
       கிருபை செய்வது தானே.      (அருளொளி)

       பாமர மனங்களுக் கருளும்
       தாமரை மலர்த் தாயே!
       பாமாலை கொண்டு உனக்கு
       சாமரம் வீசுவேன் தாயே.      (அருளொளி)

       நூலை ஏந்தும் தாயே!
       காலைப் பணிகிறேன் தாயே.
       பாலென அருளைப் பொழிந்து
       பாலித்திடு அம்மா தாயே!.      (அருளொளி)

       பாடல் ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
       ஓகுஸ், டென்மார்க்.
       31-7-2007.

   

 

                             

Previous Older Entries Next Newer Entries