28. மண் வாசனை.

 

மண் வாசனை.       

 

நீரினால் பூமி சிலிர்க்கும் தோரணை
மழை பூமிக்குச் செய்திடும் பூசனை
நுழையும் மூக்கில் மண் வாசனை.
இழையும் பழக்க வழக்க வாசனை
தழையும் மொழியால் பெறும் வாசனை
விளையும் வட்டாரப் பேச்சு வாசனை
குழைந்து இழையும் இப்போஷனை.
வளைந்து பெயர் பெறும் ஊர் வாசனை.

 

மண் வாசனை உன் பிறப்பால்.
உன் வாசனை உயரும் அறிவால்.
திறமை வாசனை பெருக்கிக் காலத்தில்
மண் வாசனை உயரக் கை கொடுப்போம்.
அரசியல் வாசனைக் கேட்டினால் மண்ணில்
உரசும் சோக வாசனை போதும்.
ஓற்றுமை வாசனைக்கு வரியமைத்து
ஏற்றலாம் மண் வாசனையை உலகறிய.

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,   டென்மார்க்.
19-3-2007.
(1-9-2006ல் சிஐ ரிவில் வாசித்தேன். இரு வானொலிகளிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                               

 

                                   

 

26. மனநோய் அரசியல்…

 

      

மனநோய் அரசியல்…

தாய்மை தூய்மையென்று நல்
ஆய்வுக் கட்டுரைகள் உலகில்.
வாய்கிழியப்  பிரசங்கம் மேடையில்.
மெய்தான் இது என்றால்
தாய்மையின்  உயிர் பலவந்தமாய்
கொய்யப்படுகிறது நாட்டில் ஏன்!
பாய் விரித்துச் சாய்த்துப்
பேய் போன்று ஏன் வன்புணர்ச்சி!

தாய்க் கருவறையில் தானே
தோய்ந்து உலகிற்கு உதயமானோம்!
செய்திடும் கலாச்சாரச் சீரழிவா!
நோய் கொண்டோர் செயலா இது!
மனித உயிர் விலைமதிப்பற்றது.
கனிவாய் உயிர் காத்தல் மனிதம்.
முனிபோல் உயிர் எடுத்தல்
புனிதமல்ல இது சைக்கோ அரசியல்!

பா ஆக்கம் வேதா இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-3-2010.

(மிழ் விசை இணையத்தளத்தில் வெளியானது.)

முகநூலிலும் போடப்பட்டது.

http://www.facebook.com/notes.php?id=1148741300&notes_tab=app_2347471856#!/note.php?note_id=379894722181       

                                     

                            

 

24. வானமே கூரையாய்…..

 

வானமே கூரையாய்…..

வானமே கூரையாய் வாழ்கிறான்
மானத் தமிழன் வடபுலத்தில்.
காணாததாக உலக நாடகம்
நானாவிதமாக அரங்கேற்றம்.

ண்கவரும் அழகிய கண்ணாடி
மீன் தொட்டி உடைந்து
மண்ணில் துடிக்கும் மீன்களாக
வன்னி மக்கள் நிலைமை.

ண்ணற்ற திறமை மிகு
கன்னியரும், காளையரும் மறுபடி
நன்னீருள் செல்லும் நிலை
என்னாளோ! விரைவில் வருமோ!

செதில் உடைத்து வால்
நறுக்கிய மீன்களாக அவர்
உறுப்புடைத்து கன்னிமை
அழிக்கும் மகா கொடுமை.

காடழித்து களனி செய்து
வீடமைத்துக் கை நிறையத்
தேடிப் பொருளோடு வாழ்ந்தவர்கள்
தேவைக்குக் கையேந்தும் நிலையானதே.

டுக்கையிழந்த மக்களின்
இடுக்கண் களைவது எப்போது!
கடுங்காலம் விரைந்து மாறிடாதோ!
கொடுங்கோல் கோணிடாதோ!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-9-2009.

                           

                         

23. பள்ளிக்கூடம்.

 

 

 

பள்ளிக்கூடம். 

பள்ளிக்கூடம், கல்விச்சாலை
உள்ளத்தில் அறிவு விதைத்த
கள்ளமற்ற ஞானச் சாலை.
பிள்ளை விளையாட்டுக் களம்.

 துள்ளிக் குதித்த ஆனந்தக்களம்.
கொக்கான்வெட்டு, கெந்தியடி
மாங்கொட்டையடி, கோலாட்டம்
கும்மியடிகளை எப்படி மறப்பது!

வெள்ளைக்கமலத்துச் சரஸ்வதியை
திருவள்ளுவரை, சமயகுரவர்களை
குருபூசைகளை, திருக்குறள் மனனப்
போட்டிகளை எப்படி மறப்பது!
3-9-2009.

http://www.vaarppu.com/padam_varikal.php?id=42

(இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                           

 

 

 

 

22. இரண்டகமின்றி அசையட்டும்!…..

 

இரண்டகமின்றி அசையட்டும்!…..

னியென்ன! புத்தாண்டு
இரண்டாயிரத்துப் பத்து
இணைந்தாடுது எம்முடன்!
இசைவாகத் தொடரட்டும்!

வெள்ளைப் பனி மூடிய
வெள்ளை நத்தாருடன்
உள்ளே வந்தாய்!
கள்ளமின்றி உறவாடுவாயாக!

சிற்றலகால் சிறுகச்சிறுக
கொத்தி வெளியான
புத்தம்புதுக் குஞ்சாய்
புத்தாண்டே நிற்கிறாய்!

ந்தகார இருட்டிலொரு
சுந்தர ஒளியாயெமக்கு
இந்தப் புதுவருடம் ஆனாலுமது
அப்பாவியாய்த் தான் வரும்!

ரினத்தின் மனிதநேயத்தை
ஞானசூனியமாக்கிய கடந்தாண்டு
ஞாபகவீதியில் எப்போதும்
ஞானமுத்திரை பதிக்கும்.

ரண்டகம் செய்த
இரண்டாயிரத் தொன்பதாய்
புரண்டிடாது அசையட்டும்
இரண்டாயிரத்தொன்பது!

நாலாபுறமும் திசையறியா
காலத்தின் தலைவாசலில் – தமிழனுக்கு
ஞாலத்தில் விடியுமோவெனும்
கோலஒளியாக எதிர்பார்ப்பு புத்தாண்டுக்கு!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க
3-1-2010.

(ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் ஒலி வானொலியிலும் என்னால் வாசிக்கப்பட்டது)

                             

 

 

 

 

21. விடியலுக்கான நாட்கள்.

  

 விடியலுக்கான நாட்கள்.  

பஞ்சு மெத்தைப் படுக்கை.
பாதம் நோகாமல் பாதணி,
பலவகை உணவு பசிக்கு
புலம் பெயர் வாழ்விங்கு.
நிலம் போகுது அங்கென
கலங்கும் நெஞ்சங்கள் இங்கு.

வெடிக்கின்ற குண்டு மழையால்
வடிகின்றதங்கு இரத்த ஆறு.
இடியும் ஊர், உடைமைகள்
மடியும் பல்லுயிர் தாய்நிலத்தில்.
அடிவானத்திலும் தெரியவில்லை
எம் விடியலுக்கான நாட்கள்.

தேடித்தேடி உயிரழிப்பு.
கொடிய அரசோடு சேர்ந்து
கூடி உதவிடும் நாடுகள்.
முடியாதா போராட்டம் என்று
துடிக்கிறதெம் மனம் துவளுகிறது
விடியலுக்கான நாட்கள் எப்போது!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-1-2009.

17-2-2009  ல் ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியில் வாசித்தேன்.                      வார்ப்பு இயைணத்தளத்திற்கு அனுப்பியது.  

 

                     

 

20. தீக்கோழி மண்ணுக்குள் முகம் புதைக்குமாம்!

 

 தீக்கோழி மண்ணுக்குள் முகம் புதைக்குமாம்!

வண்ண இயற்கைத் துறைமுக மென்று
கண்வைப்பு வெளிநாட்டார் திருகோணமலை மீது.
எண்ணெய், துறைமுக அபிவிருத்தியென்று
எண்ணும் அரசு கையேந்தல் வல்லரசுகளிடம்.

நல்ல பொருளாதாரத் திட்டம் என்று
சில்லுச் சில்லாகச் சின்ன நாட்டை
பல்லிளித்துக் கொடுக்கிறார் பலன் எடுக்க,
கையளித்து ஆப்பிழுத்த குரங்கு ஆகிறார்.

முன்னைய சனாதிபதி பிரதம மந்திரிகள்
பின்னி முடிச்சாக்கிய இனப் பிரச்சனை
பென்னம் பெரிய விசுவரூபம் எடுத்து
சின்னா பின்னம் ஆக்குகிறது பல்லுயிர்களை.

கொல்லும் வெறி கொண்ட தலைமை!
நல்ல போர் நெறியற்ற இராணுவம்!
எல்லாமாய் ஈழத்தில் செய்யும் கொடுமை,
சொல்லும் தரமன்று! இல்லையொரு தர்மமங்கு!

வல்லுறவுப் பாலுறவு! வயது முதிர்ந்;தோர்,
செல்ல மழலைகள் விதிவிலக்கின்றி அழிக்கிறார்.
கல்லுளிமங்கனையும் கரைக்கும் நிகழ்வுகளங்கு!
செல்லுகளிலும் இரத்தம் கொதித்துப் பாயும்!

பீரங்கித் தாக்குதல்கள் மக்கள் மீது
ஓரங்க நாடாகம் அரங்கேறி ஆடுது!
ஊரங்கு அழிந்தாலுமது புலி அழிப்பாம்!
பாருங்கோ! தீக்கோழி மண்ணுக்குள் முகம் புதைக்குமாம்!

8-2-2009.

( ரி.ஆர்.ரி தமிழ் உலி, இலண்டன: தமிழ் வானொலியில் என் குரலிலும், லங்கா சிறி இணைத் தளத்திலும் வெளியானது.)

 

                       
 

19. சடுதியான செயல் அல்ல.

 

 

சடுதியான செயல் அல்ல. 

திவ்வியமாய் உணர்வுகளைத் தீண்டியவனே!
எவ்வளவு தூரம் நிகழ்வுகள்
எவ்வுதல் உனக்குத் தந்திருந்தால்
இவ்வகை முடிவுக்கு வந்திருப்பாய்!

தூங்கும் மக்களை, அரசை
ஏங்கும் மனதில் நம்பிக்கையை
செங்கனலாய் எரியச் செய்த
பங்கு உன்னது முத்துக்குமாரா!

த்தனை உறுதியாய் தீயில்
பித்துப் பிடித்தவனாய் உன்னுயிரை
மொத்தமாய்த் திட்டமிட்டு எரித்தாய்!
முத்துக்குமாரா! நீயெம்மை அதிரவைத்தாய்!

ன் கடிதங்கள் இதற்குச் சாட்சியாய்
நின்று சடுதியான செயலல்லவிது
என்று நிரூபணமாக்குகிறதே! ஓ!
உன் ஆத்மா சாந்தியடையட்டும்!

பா ஆக்கம் வேதா.இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-2-2009.

 

( எவ்வுதல் – துன்பமிழைத்தல் )

                            

18. புதைகுழி.

 

 

புதைகுழி.  

புதையற் புதைகுழியைப் பூதம் காத்தது!
கதை கதையாம் சாகசக் கதைகள்
இதை அதிசயம், அற்புதமென்று கேட்டு
எதை நம்புவதென்று குளம்பிய சிறுவயது!

மஞ்சு மூடும் வானம் போல
கொஞ்சும் காதல், பாசம், அன்பு
அஞ்சும் வஞ்சம், பொறாமை துன்பமென
கொஞ்சம் அல்ல மனதுள் புதைக்கிறோம்!

பிரபஞ்சத்திலும் மகா பெரிய மனித
நெஞ்சம் ஒரு இரகசியப் புதைகுழி!
கொஞ்சம் கொஞ்சமாய் அது கிளறப்பட்டால்
அஞ்சிடும் சேதம் மனித மனத்திற்கு.

பிஞ்சு வயதுப் பெரும் மனத்தாக்கங்கள்
பூஞ்சணமாகிப் பின்னாளில் பூதாகரமாய் அதிரும்.
நெஞ்சப் புதைகுழியைச் சுத்தமாக்க மனவியலில்
விஞ்சிய மருத்துவர் பெரும்பாடு படுவார்.

ஆரோக்கியம் அற்ற உணவைத் தினம்
நீரேற்றால் வயிறும் ஒரு நோயென்ற
போர் ஏற்றுக் கொள்ளும் புதைகுழியே!
யாரேனும் இதை மறுப்பதற் கில்லை.

புதைகுழியில் புதைக்காத உடலங்கள்
சிதையில் வைத்து எரிக்காத உடலங்கள்
விதைக்கப் பட்டது கிளிநொச்சி, முல்லையில்.
கதையல்ல உண்மை, போரவலமன்றோ இது!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-2-2009.

http://www.vaarppu.com/padam_varikal.php?id=31

                           

 

17. பெயர்தானென்னவோ!

 

 பெயர்தானென்னவோ!  

 என்று பிறந்தான் தமிழன் இலங்கையில்
என்ற கேள்வியை வென்றவர் நாம்.
தொன்றுதொட்டு வாழ்ந்த இனத்தைக்
கொன்று ஒழிப்பதன் பெயர்தானென்னவோ!
பத்தாயிரம் மலையகத் தமழர் வாக்குரிமை
பத்திரமாய் பறித்தெடுத்த வினை,
கல்லோயாவில் சிங்களக் குடியேற்றம்,
ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபத்திநான்கு
தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கலவர வினை
ஆயிரத்துத் தொழாயிரத்து எண்பத்தொன்றின்
அரும் தமிழ் நூலக எரிப்பு வினை,
தந்திரமான ஒரு தரப்படுத்தல் வினை,
சிங்களம் மட்டும் ஆட்சி மொழி.
ஆண்டுக்கு ஆண்டு இனக்கலவரங்கள்,
தமிழர் கிராமங்கள், ஆலயங்கள் அழித்தல்,
தமிழ் தெருக்களிற்குச் சிங்களப் பெயரிடுதல்,
தமிழன் தரமிறக்கி அடிமையாக மாற்றுதலிற்குத்
தந்திடும் பெயர் தானென்னவோ!
அனைத்தும் இனவழிப்பில் சேராதோ!
பத்திரமாக ஒரு தமிழன் அமைதி வாழ்விற்கு,
உத்தரவாதமில்லாத நிலைக்கு நாம்
வைத்திடும் பெயர் தானென்னவோ!
மறத்தமிழர் வாழ்வை எம்மண்ணில்
சிறகறுத்துக் கூட்டில் அடைக்கிறார்!
திறமுடை ஒளி வழி திறக்குமென்று
அறவழிப் போராட்டம் புலங்களில்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2-6-2009.

pathivukal.com 

9-6-2009  trt. tv நான் வாசித்தேன்.

                        

Previous Older Entries Next Newer Entries