15. சாதித்திடு பெண்ணே!

 

சாதித்திடு பெண்ணே!

 

பெண் தன்னை நம்புதல்
தன் காலிலே ஊன்றுதல்
திண்ணம் ஒரு நெம்புகோல்.
பெண் பெருமைக்கு ஊன்றுகோல்!

சித்திரப்பூ விழிகளின் அறியாமை
நித்திரை  உடனே கலையட்டும்!
எத்திரையும் கிழித்து உலகில்
முத்திரை பதிக்கட்டும் நித்திலப் பெண்மை.

திக்கம் பெண்ணை அழுத்தி
சோதித்துச் சக்தியைப் பறித்து,
பாதித்து மிதிக்க விடாது
வாதித்துச் சாதித்திடு பெண்ணே!

சோகங்களைச் சுகமாக்கி இன்பப்
பாகம் இணைத்திடு! துன்ப
நாகம் துரத்திடு! ஆனந்த
மேகமுன்னைக் கூடும் பெண்ணே!

திரண்ட நம்பிக்கையைத் தூணாக்கு!
வரண்டிடாத சுயம் வளர்த்திடு!
மிரண்டிடாத தாய்மை வழிகாட்டலில்
இரண்டாம் தலைமுறை உயரட்டும்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-1-2005.

(இக் கவிதை யெர்மனி மண் சஞ்சிகையில் பிரசுரமானது. ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளிலும் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                                

 

14. இருநிலத்தில் இருப்பளவு சமமாகினால்

 

இரு நிலத்தில் இருப்பளவு சமமாகினால்….

(யெர்மனிய ”மண்” சஞ்சிகை (வ. சிவராஜா) தனது 150வது இதழையும் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 2006 பெண்கள் தினத்திற்காக எனது கவிதையை அன்று வெளியிட்டது.
அதற்கு அலங்காரம் செய்து இங்கு வலையேற்றியுள்ளேன்.)

 

 

 

                           

13. அம்மம்மா! கொடுமை! ( பா மாலிகை (பெண்மை)

 

 

அம்மம்மா! கொடுமை!

 

டி தடுக்கும்! தூக்கி எடு!
பாலைக் கொடு! படுக்க வை!
பணிக்கிறான் மணவாளன் படு வேகமாக.
பத்து நிமிடமும் பாவைக்கு ஓய்வில்லை.

துமையெனும் பாவை குழந்தையுடன்
பணிகிறாளவன் அதிகாரக் கட்டளைக்கு.
பட்டப் படிப்பாம், நாகரீகக் கனவானாம்!
நசுக்ககிறானவள் சுயத்தை, அடிமையாக!

வெளிநாட்டு மொழி பயில விடாது
இழிவாக இடைவெளியற்ற கர்ப்பம்!
பழி இது!  ஒரு வகைச் சிறை!
துளியும் உதவியற்ற குழந்தை வளர்ப்பு!

ன்ன கொடுமையிது! நவ உலகில்!
இன்னும் மாக்களாகப் பல மனிதர்!
இதில் பெண் அடங்க வேணுமாம்!
இப்படி அடிமையாகவா! கொடுமை! கொடுமை!

ப்படியான கொடுமையாளனை ஒரு பெண்
எட்டிக்காயாகத் தானே ஒதுக்கித் தள்ளுவாள்!
வெட்டிடும் விவாகரத்து அதிசயமயல்ல! இவனை
கட்டியடிப்பதா! அன்றி அடித்துக் கட்டுவதா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-7-2011.

( ஐய்யோ! 3வது கர்ப்பமா! அந்த இளம் தம்பதி நிலை கண்டு துடித்த மனது எழுதியது இதை. இதைக் கொஞ்சம் கேட்கிறீர்களா என்று கணவருக்கு வாசித்துக் காட்டினேன். எனது முதல் விமர்சகர் அவர்தான். ”ஓ! அவனுக்கு முதல்மனைவியிடம் என்ன அனுபவம் கிடைத்ததோ!” என்றார். ” என்ன! பாதி வீடு, பிள்ளையோடு விவாகரத்து, பிள்ளைக்குப் பணத்துடன் அவ போய் விட்டா. இவன் குடித்துக் குடித்து நிறை வெறியோடு என்ன பண்ணினானோ! அவள் செய்ததற்கு இது பாவம் என்ன செய்யும்!” என்றேன் பதிலுக்கு நான். இது 2வது மனைவி. நடக்கும் ஒரு பிள்ளை, கையில், ஒன்று, வயிற்றில் ஒன்று. நிற்க முடியாது இவள் சோர்ந்து சோர்ந்து சாய்கிறாள். நான் திகைத்து விட்டேன். ”அவளைப் போல இவ போகக் கூடாது என்று ஓய்வின்றிக் கர்ப்பமாக்குகிறான் போல” என்றேன்.)

 

                     

 

12. பெண்கள் தினமாம்!…..

 

 

பெண்கள் தினமாம்!…..

 

பெண்கள் தினமாம்!.. பலர்
பண்கள் நிறையப் பாடுகிறார்!
கண்கள் என்றும் வாழ்த்துகிறார்!
பெண்கள் தினத்திலும் மேலாக
உங்கள் அடிமையாக இன்றி
பேணுங்கள் அவளைத் தோழியாக!

பெண்ணியலார் பல கோணத்தில்
கண்ணாகிறார் வாழும் வாழ்விற்கு.
கணையாகச் சொற்கள் வீசி
அன்புச் சாரல் வீசாது
பெண்ணுயிர்க்கு இன்னா செய்வார்
தன்னுயிர்க்கு இன்னா செய்வாராவார்.

திகதி பங்குனி எட்டென்று
வீதிதோறும் பூசனை வேண்டாம்!
நீதியைப் பேணுங்கள்! உங்களில்
பாதியாய்ப் பெண்ணை எண்ணுங்கள்!
ஆதியுமந்தமுமாய் உயிர் கொடுப்பாள்,
அன்றேல் சோகாத்தலேன்!… பெண்ணிழுக்குப்பட்டு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-3-2011.

 

                                         

11. பெண்மை.

 

 

பெண்மை.

 

இன்றைய தலைமுறைப் பெண்கள் திருமணவாழ்வில் எவ்விதத்திலும் தமது சுயகௌரவத்தை, தன்மானத்தை, ஏன் தன் பெண்மையைக் கூட தாலிக்காக ஈடு கொடுக்க (அடைமானம் கொடுக்க) விரும்புவதில்லை. நாம் அத்தனையையும் தாலிக்காக ஈடு கொடுத்தவர்களாகிறோம்(ஒப்புக் கொடுத்தவர் ஆகிறோம்.)

உலக வாழ்க்கை மேடையில் ஆணிலும் பார்க்கப் பெண் பல பாத்திரங்களில் நடமாடுகிறாள்.
பெண்ணிற்கு ஒரு இதயம் உண்டு என்று எண்ணாமல் தான் நினைத்தபடி பெண்ணை ஆட்டி வைக்க எண்ணும் ஒரு ஆண் ஒரு ஆண் மகனல்ல. சீச்சீ…அவன் பிறக்காமலே இருத்தல் மேல்.

பெரும்பாலும் அதிகாரத்தால் பெண்ணை ஆட்டி வைப்பதே சில ஆண்களின் குறியாக உள்ளது. தன் காலில் நில்லாத பெண் அடங்கியே போய் விடுகிறாள். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பால் இல்லறம்  நடத்துதல் உள் நுழையும் போது தான் பெண்ணுக்கு விடுதலை கிடைக்கும். காலம் காலமாக வந்த மூளைச் சலவையே பாதி பிரச்சனைகளுக்குக் காரணம்.

காலம் காலமாய்த் தொடரும் அவசியமற்ற கோலச் சிறைகளை பெண்கள் உடைக்க வேண்டும். சீலமுடை உலகைப் படைக்க உதவ வேண்டும்.

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
12-1-2011.

 

                            

 

10. வேண்டும் துணிவுடை அசைவு!

 

வேண்டும் துணிவுடை அசைவு! 

 

கண்ணே கனியென காரியமியற்றும் தகவு
பண்ணில் பெண்ணைப் பவிசாய்ப் புகழுமளவு
மண்ணிலவளை ஏற்கும் யதார்த்தம் அதிர்வு.
ஆண்டாண்டு தோறும் பெண்ணின் தலைகுனிவு
ஆணாண்டு பெண் அடிமையான சமூக அமர்வு.
எண்ணில் இவ்வதிகார மனப்பதிவு தலைகுனிவு.
உண்மையில் வரவேண்டும் அனைவருக்கும் அறிவு.
பெண்களும் கண்கள் திறப்பது உயர்வு.

மண்ணைக் காக்கிறாளின்று பெண்ணவள் துணிவு.
விண்ணுக்கேகினாள் பெண், ஒரு நிகழ்வு.
எண்ணப் பழுதிற்கு அறிவு ஏர் உழவு
கண்ணைத் திறக்கக் காட்டுமோர் உராய்வு
திண்ணம் இது ஒரு நல்ல பொலிவு.
கோதையே! வேண்டாம் இனியொரு தலைகுனிவு!
பேதமை மாற்றிடும் துணிவுடை அசைவு.
பாதையை வெல் வழி காட்டிடும் நகர்வு.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-10-2004.

ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                                   

 

 

 

 

9. மங்கையருக்கு ஒரு தினம்.

 

  

(பங்குனி 8 பெண்கள் தினத்திற்காய்..)
உமையொரு பாகமாய்…..

உங்கள் இல்லத்த விண்மீன்கள்
மங்கையர் உலகின் கண்களாம்.
செங்கம்பளம் விரிக்கத் தவறியதால்
மங்கையருக்கு ஒரு தினம்.

பாங்குடை மனிதம் நழுவுதலால்
இங்கொரு பனிப் போர் நடக்கிறது.
உங்களுக்கு ஏதும் தெரியுமா?
இங்கு அவளுக்கென்ன குறை!

தனியாய்த் திரையுள் போராடும்
முனைவு எழுப்பிய குரலிது!
வனிதை தாங்கா அவமானம்
இனியும் வேண்டாமெனும் நாள்.

குமைகிறாளே தனக்குள் ஏன்?
சுமைகளைப் பகிருங்கள் சுகமாய்!
இமையாவாள் இல்லத்தின் கண்!
உமையொரு பாகமாய் அமையுங்கள்!

உற்பத்திக்கு மட்டமல்ல
சிற்றின்பக் கட்டிலுக்கு மட்டுமல்ல!
அற்புதத் தோழியாக்குங்கள் சமமாய்!
முற்றும் பகிர்ந்திடுங்கள் இணைவாய்!
14-2-2006.

மங்கையர் தினம்

மங்கையரின் மங்கும் தகுதிகளால் தான்
பங்கு பிரித்துப் பலர் ஊதினார் சங்கு
மங்கையர் தினமென்று உலகில் எங்கும்
இங்கும் முழங்குது மங்கையர் நாள்.

சொல்லாடு! ஊமை நிலைம மாற்று
கல்லாமை நீக்கு பெண்ணெ! நீ
மல்லாடும் சுதந்திர மறுப்பு இவ்வுலகில்
இல்லாமை நிலை மறையும் அறிவாய்!

பாட்டினில் பெண்ணை இறக்கலும் ஏற்றலும்
ஏட்டினில் பெண்ணை வாழ்த்தலும் தூற்றலும்
காட்டினில் நிலவாய்க் கருத்தினில் ஏற்று
நாட்டினில் பண்பாய் அன்பாய் வாழ்ந்திடு.

இறகுப் போர்வையின் இதமான சூட்டில்
சிறகு விரிக்கத் தயங்கும் பெண்ணே
உறவாம் உன் துணைவனோடு சேர்ந்து
பறந்திட உன்னறிவு நிலையினை மாற்று.

உன்னால் அன்பு உலகில் சிறக்கும்
உன்னால் பண்பு உலகில் சிறக்கும்
உன்னால் அறிவு உலகில்சிறக்கும்.
உன்னால் கவிதை உலகில் சிறக்கும்.

14-2-2005

 

 

                                

8. அழகிய தீவாய்ப் பெண்….

 

 

அழகிய தீவாய்ப் பெண்….

பெண்ணிலை வாதம் பேசிப் பேசியே – நாம்
நன்னிலை நாசம் செய்வது மோசம்.
முன்னிலை முயற்சி முனைப்பாய் முன்னெடுத்தால்
என்னிலையிலும் பெண்ணுயர்ச்சி பெருகும்.

அன்பு, வீரம், சுதந்திரம், தர்மம்
அறிவுப் பெண்ணின் உயர் சாரமாகட்டும்.
சதியும் பதியும் சமனெனக் கொண்டு
சங்கீதமாய் நல் சம்சாரம் இழையட்டும்.

நாணம் குறைத்துப் பெண் தலை நிமிரட்டும்.
வானிற்குயர கல்வி கலைகள் பெருகட்டும்.
தன்னை இகழ்பவன் போற்ற வழி காணட்டும்.
தென்னை பனையளவு தன் சிறப்பை உயர்த்தட்டும்.

பழகிய பண்ணாய்ப் பண்பில் இனிக்க வேண்டும்.
அழகிய தீவாய் உலகை அசத்த வேண்டும்.
பாரதி மட்டுமன்று பெண்ணைப் பாடுவோர்
யாரதுவாகிலும் நற் திறம் போற்றுவார்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-1-2006.

In   –      http://www.geotamil.com/pathivukal/poems_feb2011.htm#vetha

( இனிய நந்தவனம் சிற்றிதழில் பிரசுரமானது. ரி.ஆர். ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                             

 

7. பெண் மொழிகள்.

பெண் மொழிகள்.

மறைவுறுப்புகள் பெயர் எழுதி, அதில்
    நிறையும் உணர்வு, செயற்பாடு எழுதி,
மறைவின்றிப் பச்சை பச்சையாகப் பலர்,
    இறைக்கிறார் கவிதைகள், இது விடுதலையாம்.
இலையாடைப் பிறப்பு, நிர்வாண நிலையருக,
    தலையெடுப்பு நாகரீகம் பல உயர்படிகளாக.
அலைபுரண்டது மதிப்பு மரியாதையென
    வலை விரித்தது நாகரீக உறவாடல்கள்.
          
மனிதம் நாகரீக உச்சம் கண்டதென்று
    மடங்கி விழுந்ததோ இன்று தொப்பென்று!
ஆதியில் பேசினோமே பச்சை பச்சையாக,
    நீதியில்லையாம் அதை மூடிமறைப்பது!
ஆடையெதற்கு இன்று எமக்கு அங்கத்திலே
    ஆதியில் திரிந்தோமே நிர்வாணமாயென்று; ,
வாதிக்கமாட்டாரோ அடுத்த வாரிசுகள்?
    போதிக்கும் வழியோ இப் ” பெண் மொழிகள். ”
         
புல்லை, புவியை, புலர்காலை அழகென்று
    சொல்லை உழுத கவியுலகில் ” பெண் மொழி ”
முல்லை மணம் வீசுமோ! கல்லையாகுமோ!
    எல்லையின்றி எங்கு போய் முடியுமோ?
பெண்களின் கவிதையானால் இன்று சிறு
    பின்வாங்கல் அதில் மேய்ந்திட, ஐயகோ!
பெண் மொழிகளாற் தலை சுற்றுகிறது.
    என்ன இது! கவியுலகம் எங்கே போகிறது!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்
2-6-2006.

(வார்ப்பு இணையத் தளத்தில் வெளியானது.

http://www.vaarppu.com/view/538/)

 

                                    
 

 

6. மறுமலர்ச்சி.

(‘ உறவு’  எனும் இந்திய மாத சிறு சஞ்சிகையில்
புதுவை சிவம் அறக்கட்டளை நடத்திய கவிதைப்
போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.    2006- april – page 23 )

          

 

மறுமலர்ச்சி.

இருமனம் இணையும் ஒருவழி யாகம்
இருமனம் சேரும் திருமண யோகம்.
பிணையா இருமனம் திருமணப் பெயரில்
இணையாதொரு வழி ஏகல் நோதல்.
ஆதிக்க நாயகனின் ஆதிக்க நினைவால்
பாதிக்கும் இல்லறம் – நீதியில் பேதம்.
மோதிப் புழுங்குதல் – மிதித்தல் சேதம்.

அன்பின் கசிவு ஆங்காரமாகி, – ஆதிக்கம்
வன்முறைப் புற்றுநோயானால், -பாதிக்கும்
மென்மனம் கண்ணாடியன்றோ,- சோதிக்கும்
எண்ணமேன்? வேதனை அழிக்கும் ஆரோக்கியம்.
தனக்குள் கலங்கும் வெறுப்பான வாழ்வு
தனக்கே சேதம்- பொருமுதல் தேய்வு.
வாழ்வு வளமான வழிமுறைத் தெரிவு.
தாழ்வு வழியேகும் மனக்காப்பு உயர்

தாலிக்குள் தாம்பத்தியத்தை முடிச்சிட்ட மூத்தோரே!
தாலியால் வாழ்க்கையே தடுமாறல் நியாயமா?
ஒருவனுக்கு ஒருத்தியென்று ஒடுங்கியே வாழ்வதா?
இருவேறு பாதையாய் திசைமாறல் மறுமலர்ச்சி.
திருவினை பெற்றிட திட்பமான வழிமுறை
திருமண விலக்கு திருப்தியான செயல்முறை.
திருப்பம் நிகழ திடமான வழிமுறை
தித்திக்கும் வாழ்வின் மறுமலர்ச்சித் திறவுகோல்.
        

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-9-2006

 ( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

                              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  
 

Previous Older Entries Next Newer Entries