21. சந்தப் பாடல்கள் -1

சந்தப் பாடல்கள் -1

(23-5-2004 ல் இலண்டன் தமிழ் வானொலி ஓடி விளையாடு பாப்பா வில் ஒலிபரப்பானது)

சந்தப் பாடல்கள் திறமைக்கு ஊக்குவிப்பு.

தொட்டிற் பாடல், தாலாட்டுப்பாடல்கள் இனிய ஓசை நயம், அழகியலும் கொண்டது. இது நல்ல தாள லயத்தோடு பாடப் படும் போது, செவிக்கு இதமாகிக் காதின் இயக்க சக்தியைக் கூர்மையாக்குகிறது.

தால் என்றால் நாக்கு.
ஆட்டுதல்– நாவை அசைத்தல், ஆட்டுதல், தால் ஆட்டுதல்.
ஆராட்டுதல், தாலாட்டுதல் ஒரே கருத்துடைத்து.
ஆதி காலத்தில் (பழங்குடியினர்) நாவை அசைத்து ஆட்டித் தானே முதலில் ஒலி எழுப்பினர்.

எனது அம்மம்மா ஆராட்டுதல் என்றே கூறினார்கள். குழந்தை அழுதால் கொஞ்சம் ஆராட்டுங்களேன் என்பார்.

…ராராரோ…ராராரோ…
ஆராரோ ஆரிவரோ…
அடித்தாரைச் சொல்லி..அழு!”…

 என்று…அந்த அந்த நிலைமைகளை வைத்து இட்டுக் கட்டி, ஆனால் சந்தமுடன் பாடப் படுவதுமாகிறது தாலாட்டு.

 
இப்படிக் கேட்டுப் பழகும் அனுபவம் பிற்காலத்தில் இசை பயில்வதில் குழந்தைகளின் திறமையையும், பாடல் இயற்றும் திறனையும் மிக எளிதாகப் பெறும் வாய்ப்பையும் உருவாக்குகிறது.

சிரமப் பட்டு மனதில் பதிக்காது, தானாகக் காது வழி புகுந்து, இதயத்தில் இறங்கும் இப் பாடல்களால் பிள்ளைகளின் பிற்காலம் மிகச் செழிப்பாகும் என்று மனவியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

மூன்று வயது முதல் ஏழு வயதுக்குரிய பிள்ளைகளிற்கு ஓசை நயம் செறிந்த பாடல்கள் மிகச் சுலபமாக மனதுள் இறங்குகின்றன. இந்த எளிய ஓசை நயத்தால், சொற்களுடன் மனம் இலயித்து  ஈடுபடுகிறது. சொல்லின் தொடர்பால் கருத்தோடு மனம் இணைகிறது. அறிந்த பொருட்களின் கருத்துடன், தான் அறியாத பொருளின் கருத்தையும் அறியும் வாய்ப்பைப் பிள்ளைகளிற்குத் தருகிறது.

உதாரணமாக:-
                சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
                சந்தனச் சிலையே சாய்ந்தாடு
                கட்டிக் கரும்பே சாய்ந்தாடு
                கண்ணின் மணியே சாய்ந்தாடு.

                குண்டு மணியே   சாய்ந்தாடு
                குயிலே மயிலே சாய்ந்தாடு
                அன்னக் குஞ்சே   சாய்ந்தாடு
                அம்மா மடியில் சாய்ந்தாடு

இது எளிய நடைச் சந்தப் பாடல். குழந்தை இலக்கியமாகும். பல தடைவை திரும்பத் திரும்பக் கேட்டாலும் அலுப்புத் தராதவை. இது குழந்தைகளின் பிற்கால பாடசாலை இலக்கிய அனுபவத்திற்கு அடிப்படையாகிறது.

(இரண்டாவது அங்கம் அடுத்த முறை தொடரும்.)
ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2004.

                                        

 

20. வேண்டிய நேரம் கொடுங்கள்.

வேண்டிய நேரம் கொடுங்கள்.

(30-4.2005ல் இலண்டன் தமிழ் வானொலியின் ஓடி விளையாடு பாப்பா அனுபவக் குறிப்பில் ஒலி பரப்பானது.)

பிள்ளைகள் பல விதம். உணவு விடயத்தில் சில பிள்ளைகள் அடம் பிடிப்பவராகவோ, வித்தியாசமானவராகவோ, பிடிவாதமானவராகவோ இருக்கிறார்கள் என்று கூறுகிறீர்களா!
அப்படி அல்ல. அவர்களுக்கு வித்தியாசமான உணவைப் பழக்கிக் கொள்ள நல்ல நேரம் தேவை.

நாம் ஓரிரு தடவைகள் புது உணவைக் காட்டி விட்டு, பிள்ளைக்கு இது பிடிக்கவில்லை என்கிறோம் மிக எளிதாக.

ஒரு அமெரிக்க ஆய்வின்படி  ஒரு புது உணவை ஒரு குழந்தைக்கு பத்துத் தடவைகள் அறிமுகப் படுத்த வேண்டுமெனக் கண்டுள்ளனர்.

118 குடும்பங்களை ஒரு வருடமாக அவதானித்துக் கண்டது யாதெனில், இவர்கள் புது உணவை ஆக இரண்டரைத் தடைவை மட்டுமே அறிமுகப் படுத்துகிறார்களாம். இரண்டரைத் தடைவ மட்டுமே பரிமாறுகிறார்களாம்.

ஆகையால் பத்துத் தடவையளவில் புது உணவைப் பரிமாறுங்களேன்! வெற்றியடைவீர்களா என்று பாருங்களேன். உங்களுக்கு நல்லதிஷ்டம் கிடைக்கட்டும்.

 

(கீழ் வரும் ஆக்கம் 11-10-2005ல் ஒலிபரப்பானது.)

 

சுத்தமாக.. மெத்தமும்… புதிதாக்கலாம்

சித்தம் புத்துயிர்க்க
நித்தம் சுத்தம்
உத்தம சொத்தாகும்.
சுத்தம் சுகம் தரும்

தத்தம் பிள்ளைகள் மொத்த விளையாட்டுப் பொருட்களையும் வாயால் சுவைப்பார்கள், அன்புடன் முத்தமிடுவார்கள். சொத்தான அவர்கள் ஆசைப் பொருட்களை அடிக்கடி சுத்தம் செய்யும் பழக்கம் உங்களிற்கு இருக்கிறதா?

இரு வாரத்திற்கு ஒரு முறையோ, அன்றி அடிக்கடி இவைகளைச் சுத்தம் செய்தல் அவசியமானதாகிறது. நோயுற்ற போது, கிருமிகள் படிந்து, அவை மீண்டும் மீண்டும் தொல்லைகள் தராது இருக்கவும், மொத்தமான சுகாதாரத்திற்கும் இவற்றைக் கழுவுதல் மிகப்பயனுடைத்து.

லீகோ கட்டைகளைப் பாத்திரங்கள் கழுவும் யந்திரத்திலிட்டுக் கழுவலாம். பூனை நாய்க் குட்டிப் பஞ்சுப் பொதிப் பொம்மைகளைத் துணி கழுவும் யந்திரத்திலிட்டுக் கழுவலாம்.

தண்ணீரில் விளையாட எந்தப் பிள்ளைக்கும் கொள்ளை ஆசை தான். தண்ணீரில் விளையாட ஆசையுள்ள பிள்ளைகளைப் பெரிய வாயகன்ற கிண்ணத்தில் சிறிது சவர்க்காரமிட்ட நீரில் விளையாட்டுப் பொருட்களைப் போட்டு விருப்பப் பிரகாரம் அவைகளைக் கழுவி விளையாட விடலாம்.

விளையாடி முடிய நிலத்தையும், பிள்ளையையும் துடைத்து விடலாம். விரும்பினால் பொருட்களை நீங்களும் இறுதியில் கழுவலாம், அல்லது பிள்ளைகளிடமே தண்ணீரை மாற்றி உதவி செய்து அவர்களையே துடைக்கவும் விடலாம்.

தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்கள்.
குழந்தைகளுக்கு இது விளையாட்டாகவும், பொருட்கள் சுத்தமானதாகவும் ஆகிறது.
முயன்று பாருங்களேன்!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-10-2005.

                                

19. இப்படித்தான் வாசிப்பு தொடக்கப்படுகிறது…

 

இப்படித்தான் வாசிப்பு தொடக்கப்படுகிறது…

 

(அனுபவக் குறிப்பு:- 7-3.2005ல் இலண்டன் தமிழ் வானொலியில் ” ஓடிவிளையாடு பாப்பா”வில் காலையில் இடம் பெறும் அனுபவக் குறிப்பில் ஒலி பரப்பானது.)

எனது வேலையிடத்தில் பிள்ளைகளைக் கொண்டு வந்து விடும் பெற்றோர், திரும்பிப் போகும் போது பிரியும் விடை கொடுப்பது என்பது சில பிள்ளைகளுக்கு மிகக் கஷ்டமான ஒரு விடயம். அழுவார்கள், பெற்றோரைக் கட்டிப் பிடித்தபடி அடம் பிடிப்பார்கள்.

சில பெற்றோர்கள் பிள்ளைகளைப் படம் வரைய, லீகோ கட்டைகளை அடுக்கி விளையாட என்று ஏதாவது ஒரு நடவடிக்கையில் புக விட்டு விடை பெறுவார்கள். அதாவது மகிழ்வோடு விடை பெறுவார்கள்.

இதில் இரண்டு பெற்றோர்கள் மிக சுறு சுறுப்பாக வருவார்கள். இவர்களது பெண் பிள்ளைகள் இன்னும் 4, 5 மாதத்தில் பாடசாலையில் அரிவரி வகுப்பில் சேர உள்ளனர்.

 
இவர்கள் பாலர் நிலையத்திற்கு வந்தவுடன் பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ புத்தக அடுக்கிலிலிருந்து ஒரு புத்தகத்தை உருவி, பிள்ளையை மடியில் இருத்தி புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைக்கும் விளங்கும். 3 -4 பக்கங்கள், அல்லது ஒரு கதை என வாசித்த பின் மகிழ்வாக விடை பெறுவார்கள்.

 

இது நாள் தோறும் காலையில் நடக்கும். 24 பிள்ளைகளில் 2 பெற்றோர் தொடர்ந்து இப்படிச் செய்கிறார்கள். இந்தப் பெற்றோர் நல்ல படிப்பு, உத்தியோகம் என்று நல்ல நிலையில் உள்ளவர்கள்.

என்னை இது மிகவும் ஈர்த்தது.

எமது தமிழ்த் தாய்மார் இப்படி நடக்கிறார்களா?

இப்படிப் புத்தகம் வாசிப்பார்களா?

என்று பல கேள்விகளை எனக்குள் கேட்கிறேன்.

இப்படிச் சிறு வயதிலேயே இவர்கள் (டெனிஸ் மக்கள்) வாசிப்புத் தொடங்குகிறது. வாசிகசாலைக்குச் சென்று கட்டுக் கட்டாகப் புத்தகங்கள் கொண்டு வந்து வயது வித்தியாசமின்றி வாசிப்பார்கள்.

நாங்கள் புத்தகங்கள் செய்தால், கையில் வாங்கிப் பார்த்து விட்டுத் திருப்பித் தரும் எம்மவர்களும் உள்ளனர். (3 புத்தகங்கள் செய்து பெற்ற அனுபவம்)

இந்த அனுபவம் ஒருவரையாவது வாசிக்கப் பண்ணினால் அது எனது வெற்றி,  உங்கள் ஒளிமய எதிர்காலமுமாகும். நல்லதிஷ்டம் கிட்டட்டும்

(எனது புத்தகங்கள் பற்றிய தகவல்கள் – எனது புத்தகங்கள் – என்ற தலைப்பின் கீழ் வலையில் உள்ளது . விரும்பியவர்கள் வாசிக்கலாம். உங்களிடமிருந்து கேள்விகள் , மின்னஞ்சல்கள் வர முதல் நானே அத் தகவலைத் தந்துள்ளேன்.)

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-3-2005.

 

                             

 

18. இரட்டைக் கட்டிலில்..(சிறு கட்டுரைகள்.)

வணக்கம் அன்புறவுகளே சுமார் 2 கிழமையின் பின் தொடர்கிறேன்.
(இந்த ஆக்கம் இலண்டன் தமிழ் வானொலி ” ஓடி விளையாடு பாப்பா” நிகழ்வில் 2004ல் ஒலி பரப்பானது)

இரட்டைக் கட்டிலில்..

( இதைக் குழந்தைகள் உலகம் ஆக்கமாகவும் நீங்கள் எடுக்கலாம். தொடராக விரும்பியவர்களும் எழுதலாம். கௌரி சிவபாலன் இந்த வேண்டுகோளை தொடர் பதிவிட எனக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடக் கூடியது.)

காதலுடன் கணவரோடு துயில்வது, அவரது உடற் சூடு, உடலின் மணம் எப்படி சுகத்தைத் தருகிறதோ , அப்படியே ஒரு குழந்தைக்கும் உலகிலேயே தனக்கு மிகவும் பிடித்தவர்களான அம்மா அப்பாவுடன் துயில்வது சுகம் தருகிறது.

கருப்பையின் இருட்டில் தாயின் உடற் சூட்டுடன் மிகப் பாதுகாப்பாக தூங்கியது குழந்தை. அம்மாவின் உடலில் இருந்து வெளியேறும் மூச்சுச் சத்தம், இதயத் துடிப்பைக் கவனித்த பிள்ளை,

அம்மாவின் இருமலின் போதும், குறட்டை விட்ட போதும், சிரிக்கும் போதும், கதைத்த போதும் கேட்டுப் பழகியபடி தூங்கியது. இத்தனை ஆரவாரத்துடன் துயின்ற பிள்ளையைத் தனியே குழந்தை அறையில் படுக்கப் போடுவது மிகவும் கொடுமை அல்லவா!

குழந்தைப் படுக்கையறைக் கதவை இழுத்து மூடுங்கள். உங்கள் இரட்டைக் கட்டிலுக்கு குழந்தையை எடுத்து அணைத்துத் துயிலுங்கள். அப்பா அம்மாவுடன் இரட்டைக் கட்டிலில் படுக்க வைக்க நெருக்கடியாக இருந்தால் சிறு தொட்டில் படுக்கையோ எதுவோ உங்கள் கை எட்டும் படியாகப் படுக்க வையுங்கள்.

குழந்தை உங்களை (உணர), உங்கள் மணம், உங்கள் குரலையும் கேட்டு உணரட்டும். பசித்த போது அம்மா மார்பைச் சுவைக்கட்டும்.

பிள்ளை அருகிலிருந்தால் தான் பிள்ளைக்கு ஏற்றபடி தாயால், தந்தையால் உடனே இயங்க முடியும். குழந்தையின் சமிக்ஞையை உடனே அறிய முடியும். இது குழந்தைக்கு நம்பிக்கை தரக் கூடியது. சுய பெறுமதியைத் தரும். குழந்தையின் தேவைகள் உடனே பூர்த்தியாகும்.
தனி அறையில் படுத்துத் தாயைத் தேடிப் பலமாகக் கத்தத் தேவையில்லை. பிள்ளை அருகிலிருப்பதால் தாயும் சேயும் நிம்மதித் தூக்கம் பெற முடியும்.

நாள் முழுதும் விலகியிருக்கும் தந்தையின் நெருக்கமும் ஒன்றாகத் தூங்கும் போது கிடைக்கிறது.

தந்தையின் நெருக்கமும், உடற் தொடர்பும் பிள்ளைக்குப் பாதுகாப்பு உணர்வு தருகிறது. இப்படி ஒன்றாகத் துயிலும் மன பலம் பின்னால் பிள்ளை தனியே தனது அறையில் துயில்வதற்கு மனத்துணை ஆகிறது.

”  வெள்ளி நிலாக் குழந்தையைத்
தள்ளியே தூர வைக்காது
உள்ளம் நிறைந்த உங்களன்பைக்
கிள்ளிக் கொடுக்காது, வாரி
அள்ளியள்ளிக் கொடுங்கள்.”

. –வேதா—

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-5-2004

  

                             

 

17. நீங்கள் ஒழுங்கானவரா?

 

நீங்கள் ஒழுங்கானவரா?

( இந்த இடுகையின்  இரண்டு – ஓடி விளையாடு பாப்பா – அனுபவக் குறிப்புகளும் 2004 ம் ஆண்டு இலண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பானது.)

நீங்கள் எடுத்துப் பாவித்த பொருட்களை எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் ஒழுங்கானவர் தான் வாழ்த்துகள்!
உங்கள் பிள்ளைகளுக்கும் இப் பழக்கத்தைப் பழக்குகிறீர்களா?

ஏன்?

மறந்துவிட்டீர்களா?

இன்றே பழக்கிடுங்கள்!

  – மேசையிலிருந்து அல்லது சாய்வுக் கதிரையிலிருந்து படித்த பின் புத்தகங்களை,               எழுதுகோலை உரிய இடத்தில் வைக்கிறீர்களா?

– சாப்பிட்டபின் சாப்பாட்டுத் தட்டுகளைக் கழுவி உரிய இடத்தில் கவிழ்ப்பீர்களா?

– பாண் வெட்டிய பின் மேசையைத் துடைத்து, பாண் வெட்டிய பலகையை உரிய இடத்தில் வைக்கிறீர்களா?

– காலணிகளைக் (சப்பாத்துகளைக்) களற்றி உரிய இடத்தில் வைப்பீர்களா?

– மேலாடையை (ஜாக்கெட்டை) களற்றி கண்ட இடத்தில் போடுகிறீர்களா? அதற்குரிய இடத்தில் கொளுவுவதில்லையா?

– அழுக்குத் துணிகளை அழுக்குக் கூடையில் போடுகிறீர்களா?

இப்படி ஒவ்வொரு செயல்களையும் சிறு வயதிலிருந்து பழகும் போது எதிர் காலத்தில் உங்கள் வாழ்வில் நீங்கள் சிறந்த கணவனாக, சிறந்த மனைவியாக வாழ முடியும்.
உங்கள் பழக்க வழக்கத்தால் நீங்களும் பெற்றோரும் சிறப்படைவீர்கள், பெருமையடைவீர்கள்.

பிள்ளைகளுக்குப் பெற்றோர் உதவி செய்ய, பிள்ளைகள் பெற்றோருக்கும் உதவி செய்யலாமன்றோ!

22-8-2004.

 

 

ராகுல் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதில்லை.

வழக்கமாக ராகுல் கழிவறையில் (ரொய்லெட்டில்) நின்று கொண்டு தான்
சிறுநீர் கழிப்பான். இப்போதெல்லாம் இருக்கையில் அமர்ந்து சிறுநீர் கழிக்கிறானாம். இது அம்மா ரோகிணிக்கு மிகவும் ஆச்சரியம். ஏப்படி இப்படி மாறினான்!  இதன் காரணம் என்ன?

பாலர் நிலையத்திற்கு ராகுல் வரத் தொடங்கி மூன்று கிழமை தான் ஆகிறது. மூன்று வயது ராகுலின் அம்மா ரோகிணி பாலர் நிலையத்தில் இது பற்றி அறிய கேள்விக் கணை தொடுத்தார்.

” ஆண் பிள்ளை நின்று தானே சிறு நீர் கழிப்பார். எப்படி கழிவறை இருக்கையில் அமர்ந்து சிறு நீர் கழிக்க முடியும்? வெளியே எல்லாம் சிந்திடாதா? ” 
இலேசான புன்முறுவலுடன் கேள்விக் கணை தொடுத்தார் ரோகிணி என்னிடம்.

” ஆமாம்! சிறுநீர் கழிக்கும் இருக்கையில் அமர்ந்து, சிறுநீரை வெளியேற்றும் சின்ன மனிதனை (சிறுநீரை வெளியேற்றும் உறுப்பை) ஒரு விரலால் கீழே அழுத்திக் கொடுக்க வேண்டும். சிறுநீர் உள்ளேயே இறங்கும். நிச்சயமாக கழிவறை விஜயம் முடிய கைகளைச் சவர்க்காரமிட்டுக் கழுவ வேண்டும். இதையும் முக்கியமாக சொல்லிக் கொடுக்கிறோம்” என்று பதிலிறுத்தேன்.

”ஓகோ! அது தான் இப்போதெல்லாம் ராகுல் இருக்கையில் அமர்ந்து சிறு நீர் கழிக்க விரும்புகிறான்.” என்று திருப்தியாகச் சிரித்தார்.

எமது பயிற்சி வெற்றியளித்தது எமக்கும் மகிழ்ச்சியே.

ஒரு பெண் குழந்தை பாலர் நிலையத்தில் நின்றபடி சிறு நீர் கழிப்பது வெள்ளைக்காரர்களுக்கு ஒரு ஆச்சரியமான விடயம். 

சோமாலியப் பெண் குழந்தை
பாத்திமா கூட ஆரம்பத்தில் நின்று கொண்டு தான் சிறுநீர் கழித்தாள். வாராந்தர ஊழியர்கள் கூட்டத்தில் இது பற்றிக் கலந்துரையாடிய பின், அவளுக்குப் பயிற்சி கொடுத்தோம். இப்போது அவளும் அமரப் பழகிவிட்டாள்.

சிறுவர்கள் மட்டுமா?

எமது ஆசியக் குடும்ப நண்பர் டொமினிக் எமது வீட்டிற்கு விஜயம் செய்வதானால் எனக்கு ஒரே திண்டாட்டம் தான் போங்கள்!

அவர் போன பின்பு கழிவறை, தரை விரிப்பு, இருக்கை எல்லாம் சிந்திய சிறு நீரைத் துடைத்து, கிருமிநாசினி போட்டுக் கழுவாவிடில் இரவு எனக்குத் தூக்கமே வராது.

என்ன! தொட முடியதா புள்ளியைத் தொட்டு விட்டேனா?

சுத்தம் சுகம் தருமன்றோ!

எல்லாம் பேச முடிந்த விடயங்கள் தானே!

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-8-2004.

                                

16. இரு அனுபவங்கள்.

இரு அனுபவங்கள்.(சிறு கட்டுரைகள்)

(இங்கு வரும் இரு அனுபவக் குறிப்புகளும் 2005ல் ஓடி விளையாடு பாப்பா அனுபவக் குறிப்பாக இண்டன் தமிழ் வானொலியில் ஒலி பரப்பானது.)

ஒரு தாயும் ஐந்து வயதுப் பிள்ளையும் கடைக்குப் பொருட்கள் வாங்க வருகிறார்கள். பிள்ளை தனக்குத் தேவையான ஐஸ்கிறீம், இனிப்பு வகைகளைத் தானாகத் தெரிவு செய்து தாயுடன் சேர்ந்து வாங்குகிறது.

முடிவில் தாயார் வங்கி அட்டையைப் பாவித்துப் பணம் கொடுக்கும் போது, பிள்ளை தானே தான் அட்டையை யந்திரத்தில் உரசி பணம் கொடுக்க வேண்டுமென்று அடம் பிடித்தது. அட்டையை அழுத்தித் தேய்க்க பிள்ளையின் கைப்பலம் கூட,    போதுமாவெனத் தெரியவில்லை.

இரண்டு பேரும் சேர்ந்து செய்வோமென உடன்பட்டுத் தாயாரும் பிள்ளையுமாக அட்டையைத் தேய்த்தனர்.

பின்னர் இலக்கங்களையும் தானே தான் அழுத்த வேண்டுமென பிள்ளை அடம் பிடித்தது. தாயார் பதிலேதும் கூறாமல் மௌனமாக இலக்கங்களை அழுத்திவிட்டு, இறுதியில் அங்கீகரிக்கும் பச்சைக் கட்டையை அழுத்தும்படி பிள்ளையிடம் கூறினார், பிள்ளை    அழுத்துகிறார்.   உலகை வென்ற ஆனந்தம் பிள்ளை முகத்தில்.

விடயம் இனிமையாக முடிந்தது.

இது ஒரு சிறு விடயம். எவ்வளவு புத்தி சாதுரியமாக இந்தத் தாயார் விடயத்தைக் கையாண்டார்!  இரு பகுதியும் திருப்தியாக மகிழ்வாகச் செல்கிறார்கள்!

இதுவே நம்மவர் ஒருவரானால்  எத்தனை மறுதலிப்பு, பிரதிபலிப்புக்கு இந் நிகழ்வு ஆளாகும்!
தர்க்கம், எதிர்ப்பு என்று பலமான தாக்கங்கள் உருவாகுமல்லவா!….

இப்படி நுணுக்கமாக விடயங்களைக் கையாளும் திறமை நமக்கு வேண்டும்!

நம்மில் எத்தனை பேருக்கு இப்படித் திறமையுள்ளது!….

19-9.2005.

 

பயணப் பொருட் பட்டியல்.

நீங்கள் குழந்தைகளுடன் குடும்பமாகப் பயணம் செய்கிறீர்கள். போயிருக்கும் இடத்தில் நித்திரையின் போது உங்கள் குழந்தை, எப்போதும் தனது கையில் வைத்தபடி அல்லது அணைத்தபடி நித்திரை கொள்ளும் பொம்மையையோ, பொருளையோ கேட்டு  அடம் பிடித்து நித்திரை கொள்ளாது உங்களைப் படுத்துகிறது.

இது தவிர சிறிது வளர்ந்த பிள்ளைகளானால் தானாகவே ஏதாவது படம் வரைந்தோ அல்லது தானாக அடுக்கி விளையாடும் சில பொருட்களுக்காக ஏங்கி, கவலைப்படுவார்கள். இவைகளைப் போகும் அவசரத்தில் நீங்களும் மறந்திருப்பீர்கள்.

இதற்கு மிக சுலபமான ஒரு வழி இருக்கிறது.
நீங்கள் பயணத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பட்டியலிடுங்கள்.

உங்கள் பயணப் பெட்டியை அடுக்கும் போது சரியாகப் பார்த்துப் பார்த்து அடுக்குங்கள். இதில்
அப்பாவின் பொருட்கள்,
அம்மாவின் பொருட்கள்,
பிள்ளையின் பொருட்கள்,
போகும் இடத்து விருந்தினர் பரிசு உட்பட எழுதுங்கள்.

கணனியில் கூட இந்தப் பட்டியலைப் பதிந்து வைத்துத் தேவையான போது பிரதி எடுத்து பார்த்துப் பார்த்து பொருட்களை அடுக்கலாம்.

இப்படியானால் பெரும்பாலும் பொருட்களை மறந்து விட சந்தர்ப்பம் அமையாது.  இப்படித்தான் நான் செய்கிறேன். இது எனது அனுபவம்.

உங்களுக்கும் பயன் படுமா? சிந்தித்துப் பாருங்கள்.

நன்றி.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-5-2005.
வலையேற்றம். 29-10-2011.

                               
 

15. காலையுணவின் முக்கியத்துவம்.(சிறு கட்டுரைகள்)

 

காலையுணவின் முக்கியத்துவம்.

(23-5-2005ல் இலண்டன் தமிழ் வானொலியின் ”ஓடி விளையாடு பாப்பா” நிகழ்வின் அனுபவக் (அவசியக்) குறிப்பில் இடம் பெற்ற குறிப்பு இது.)

காலையுணவை எல்லோரும் முக்கியப் படுத்தி உண்பதில்லை. ஆனால் காலையுணவு உட்கொள்ளுதல் மனித வாழ்வில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும். நாளின் சக்தியைக் காலையுணவு காலையிலேயே தருகிறது.

காலையுணவைத் தவிர்ப்பவர்களுக்குக் குருதிச் சுற்றோட்ட நோய் வரும் ஆபத்து அதிகளவாக உள்ளது.

புகைப்பவர்களுக்கு உடற் பாரம் அதிகரித்து மதுபாவனை அதிகரிப்புக்கும் ஆளாகிறார்கள்.
என்ன!!…மூச்சுத் திணறுகிறதா?..ஆய்வுகளின் கண்டுபிடிப்பே இது. அமெரிக்க ஆய்வின் படி காலையுணவு உண்பவர்கள் காலையுணவு உண்ணாதவர்களிலும் பார்க்க நோய் வாய்ப்படும் தன்மையைக் குறைவாகப் பெறுகின்றனர்.

காலையுணவு நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குகிறது. அதே நேரம் இரண்டாவது வகையான நீரிழிவு நோய் வராது தடுக்கிறது.

நாளின் தொடக்கத்தில் அதாவது காலையிலேயே இரத்தத்தில் நிதானமான சீனிச் சத்து உணவில் விருப்பத்தையும், மன அழுத்தம் உருவாகாமலும் சீர் செய்கிறது.

என்ன! உங்களில் எத்தனை பேர் காலையுணவு உண்ணாது நாளைத் தொடங்குகிறீர்கள்?….

சரி! இனியாவது காலையுணவு உண்ண ஆரம்பிக்கலாமே!…


 

இப்படி ஏசுகிறீர்களா?

( இதுவும் 10-1-2006ல் அனுபவக் குறிப்பாக இதே வானொலியில் இடம் பெற்றது.

–    ”  எத்தனை தரம் உனக்குச் சொல்வது? ”
–   ”  உனக்கு இன்னும் விளங்கவில்லையா? ”
–  ” ஏன் இதை முதலிலேயே உனக்கு விளங்கிக் கொள்ள முடியாதா? ”

இப்படி உங்கள் பிள்ளைகளை நீங்கள் ஏசும் போது நீங்கள் பிள்ளைகளுக்கு வேதனையையே விதைக்கிறீர்கள்.

இந்த வார்த்தைகள் ‘நீ புத்தியில்லாதவன்! மடையன்!’ எனும் கருத்தை மறைத்து வைத்திருக்கிறது அல்லது மறைமுகமாகக் கூறுகிறது.

பிள்ளையின்  உணர்வுகள் தேவைகள்  எனும் நிலையில் எம்மை வைத்துப் பிள்ளையை நாம் கவனிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். உங்கள் பிள்ளை உங்களோடு ஒத்துளைத்து நல்லது செய்யவே விரும்புகிறது.

மிகச் சிறு பிள்ளையானால் அதற்குத் தன் மனதில் உள்ளதை அழகான சொற்களில் உங்களுக்கு  விளங்க வைக்க முடியாது. இந்த நிலையில் இதை நாம் விளங்க முடியாத போது, பிள்ளைக்கு விரக்தி, வெறுப்பு உணர்வு வருகிறது.

ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் அழுகிறார்கள், உதைக்கிறார்கள், பிறாண்டுகிறார்கள், அடிக்கிறார்கள், பொருட்களை வீசி எறிகிறார்கள்.

உங்கள் பிள்ளை அருகில் அமருங்கள், அவர்கள் கரத்தை ஆதரவாகப் பிடித்து நீங்கள் அவருக்கு உதவி செய்ய விரும்புவதாகக் கூறி இரு பகுதிக்கும் நன்மை தரும் தீர்வைக் காணுங்கள்.

ஆச்சரியமான விளைவைக் காணுவீர்கள்.

அன்பான அணைப்பு ஒரு அதிசய அட்சய பாத்திரம்.

இது உங்களுக்குத் தெரியாதது அல்ல.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

  

                             

 

14. நட்பும் நடிப்பும்.

 

 

நட்பும் நடிப்பும்.

 

மூத்தவர்களை மதிப்பதென்பதும், நல்ல நாட்கள், பெருநாட்களில் வயதுக்கு மூத்தோரிடம் ஆசீர்வாதம் வேண்டுதல் என்பதும், பழைய கலாச்சாரம். புதிய உலகம் வேறு மாதிரியானது.

என்ன கூறுகிறேன் என்று ஆச்சரியப் படுகிறீர்களா!….?…..

அந்த இரண்டு குடும்ப நண்பர்கள் திருமண வெள்ளி விழாக்களுக்கு, சீதா வீட்டிற்கு அழைப்பு வரவில்லை. நகரத்தில் வாழ்க்கை அனுபவமும், வயதிலும்  மூத்த தம்பதிகளே சீதாவும் ராமனும்.  அழைப்பு வராததால் மனது சிறிது கசங்கியது போல உணர்வு கொண்டனர் சீதாவும் ராமனும்.

பின்பு கேள்விப்பட்டனர்…. அவை பிள்ளைகளின் ஏற்பாட்டில் நடந்த ஆச்சரியக் கொண்டாட்டங்கள்  என்று. அதிலும் ஒரு குடும்பத்திலேயே, பிள்ளைகள் குடும்பத்தை அழைத்தும், பெற்றவர் குடும்பத்தை அழைக்காமலும் என்று தவறுகள் நடந்துள்ளது என்றும் அறிந்தனர்.

இதில் ஒரு விழாவிற்கு ஒரு குழுவினரின் வேண்டுகோளின் படி சீதா வாழ்த்துப்பாவும் எழுதிக் கொடுத்துள்ளாள், அது வேறு விடயம்.

இந்த இரண்டு குடும்பத்து இளைய பிள்ளைகளுடன் சீதா மிக அன்பாகப் பழகுவாள். முகநூலில் கூட அவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளாள். அப்படி இருந்தும் இப்படி நடந்துள்ளது. இதை சிறிது மனவருத்தத்துடன் சீதா என்னிடம் கூறினாள்.

இப்படி நடந்ததின் தவறு யாருடையது?

பெற்றவரின் கொண்டாட்டத்தை ஆச்சரியமாக நடத்துவது சரி. ஆனால்…… பெற்றவரின் மனதுக்குப் பிடித்த மாதிரித் தானே விழாவை நடத்த வேண்டும்!…….

இங்கு பெற்றவர்கள் தமது உறவுகள், நண்பரது பெறுமதிகளை பிள்ளைகளுடன் நாளாவட்டத்தில் கலந்து பேச வேண்டும். உறவின் பெறுமதி, தராதரம் அனைத்தும் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறப்பட வேண்டும். அப்போது தான் பெற்றோர் பழகும் முறை, உறவின் தரம் என்பவைகளைப் பிள்ளைகள் அறிவார்கள். இப்படிப் பேசாவிடில் பிள்ளைகள் தமது நட்பு வட்டத்தைத் தானே,  தாம் ஒழுங்கு பண்ணும் விழாக்களுக்கு அழைப்பார்கள்!…..

விழாவிற்கு வந்தவர்களை ஒளி நாடாவில் பார்த்த போது, இவ்வளவு தூரம் நாம் முக்கிய மற்றவர்களாகி விட்டோமே என்று சீதா மனம் சிணுங்கிளாள்.

” இதென்னப்பா!.. பெடியள் தங்களோடு ஒத்த  கூட்டத்திற்குத் தானே  அழைப்பு அனுப்புவார்கள்! ” என்று ராமன் சீதா மனசைத் தேற்றினார்.

”எல்லாம் பெற்றவர்கள் தவறு”…… என்றாள் சீதா.
”பெற்றோரைக் குறை கூறாதீர். பிள்ளைகள் செய்வதற்கு பெற்றவர் என்ன செய்வார்?”……  என்றார் ராமன்.

”சரியப்பா இந்தக் கதையை விடுங்கள்”…. என்று கதையின் தலைப்பை மாற்றினோம் நாங்கள். 

இனி இந்த இரண்டு குடும்பத்துப் பிள்ளைகளும் சீதாவைப் பார்த்து ”ஹாய்! அன்ரி!”….. என்பார்கள். எல்லாம் மறந்து சிரித்தபடி ”ஹாய்!…. ” என்று சீதா எப்படிப் பேசுவாள் சொல்லுங்கோ!……

இது ஒரு சிறு சம்பவமானாலும் காத்திரமான தாக்கமுடைய ஒரு சம்பவம். பிள்ளைகள் பெற்றொரின்  உறவின் நெருடல் இங்கு தெளிவாகப்  பிரதிபலிக்கிறது. 

இச் சம்பவம்  மற்றைய பெற்றோருக்கு ஏதாவது கூறினால் அது நன்மையே!

நட்பு நடிப்பா!…. நடிப்பு நட்பா!….

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-7-2011.

In Anthimaalai  web site –   http://anthimaalai.blogspot.com/2011/07/blog-post_9411.html

 

                  

13. பிள்ளையின் கத்தலும் கூச்சலிடலும்….

 

 

பிள்ளையின் கத்தலும் கூச்சலிடலும்….

 

திடீரென ஒரு பிள்ளை குழம்பி கத்தி கூச்சலிடுகிறது. குறிப்பட்ட  சப்பாத்தைப் போடு என்று தான் கூறினீர்கள். இதற்கு எதிர்ப்பு, பலத்த கத்தல், மறுப்பு. ஒரு பிள்ளை இப்படிக் கோபமடையும் போது முழுக் குடும்பத்தையே வேலை வாங்கிவிடுகிறது.

‘ என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்களும் பெலமாகக் கத்தப் போகிறீர்களா? குழந்தையைக் கவனிக்கப் போகிறீர்களா அல்லது அலட்சியம் பண்ணிக் காலுறையுடன் போகவிடப் போகிறீர்களா?’

”..பிள்ளையை நோக்கிக் கத்தாதீர்கள்!”..என்கிறார் முழுநேர பேச்சாளர், குழந்தைகள் பின்னணியில் பலகாலம் வேலை செய்த ஒரு டெனிஸ் விற்பன்னர்.

இப்படிக் கத்தும் பிள்ளையை அடக்க ஒரு தொகைச் சக்தியைப் பாவிக்க வேண்டி வரும். நாமே சத்தம் போடும் போது, பிள்ளை நம்மோடு நல்ல மாதிரி சேர்ந்திருக்கும் நேரமும் வடிந்து போய், கோபமான பிள்ளையோடு சேர்ந்திருக்கும் அசிங்கமான நிலைமை உருவாகிறது. இதனால் பிள்ளையுடன் வீட்டிலிருப்பதிலும் வேலையிடத்தில் அதிக நேரம் தங்கி வரலாம் என்ற சிந்தனையும் உருவாகிறது. வேலையிடத்தில் நாம் நினைத்தபடி நடக்க முடியும். விடயம் சரிவர விளங்காது பிள்ளைகள் சொல்வதைக் கேட்காது எதிர்ப்பார்கள். அவர்களோடு சேர்ந்திருப்பது எப்போதும் நாங்கள் நினைப்பது போல இருக்காது.

நீங்கள் எடுத்த ஒரு முடிவை, தீர்மானத்தை எதிர்ப்பதற்குப் பிள்ளைகள் கோபத்தை ஒரு எதிர்ப்பு வழியாக பாவிப்பார்களானால் நீங்கள் உங்கள் நிலைப்பாடில் இருந்து வழுவாது திடமாக நிற்க வேண்டும் என்கிறார். ஃபிளெமிங் பீட்டர்சென்.

நீங்கள் உங்கள் தீர்மான நிலையிலிருந்து பின் வாங்கினால் அது பரிதாபகரமானது. இப்படிக் கத்தி, கோபத்தைக் காட்டினாலோ, நீண்ட நேரம் தொடர்ந்து செய்தாலோ தன் விருப்பம் நிறைவேறி விடும் என்று பிள்ளைகள் எண்ணுவார்கள். அதனால் பிள்ளையிலும் பார்க்க உங்கள் நிலைப்பாடில் இருந்து விலகாது பிள்ளையிலும் பார்க்க திடமாக நில்லுங்கள்.

சிறு விடயங்களில் வேணுமானால் பிள்ளையைத் திருப்பதிப் படுத்த நீங்கள் மாறலாம். அப்படி மாறும் சந்தர்ப்பங்களில, ஆனால் கட்டாயமாக அன்று பிள்ளையைப் படுக்கப் போடும் போதோ, அல்லது சரியான ஒரு சமயத்தில் ” நான் யோசித்துப் பார்த்தேன் எனது முடிவு பிழை தான் என்று நினைத்து மாற்றினேன். நீ கோபப்பட்டுக் கத்தியதற்காக நான் மாறவில்லை ‘ என்பதை உறுதியாகக் கூறிவிட வேண்டும்.

சிலவேளை பிள்ளையின் கோபம் உங்களை எதிர்ப்பதற்காக அல்ல, இரவில் படுக்கைக்குப் போகும் நேரத்திலும் சிறிது கூடுதலாக விழித்திருக்கவோ, அல்லது சாப்பாட்டிற்குப் பின்னான இனிப்பு உணவு சிறிது கூடுதலாகப் பெறவோ என்றால்…..

 பெற்றவர்கள் அதைப் பண்பாக பிள்ளைக்கு எடுத்துக் கூறவேண்டும் இப்படிக் கத்திக் கூச்சலிட்டுக் காரியம் பெறுவது தவறு என்று.

அப்படியும் கேட்காது கத்திக் குளறிக் கூச்சலிட்டால் அதைக் கவனிக்காது, அலட்சியம் செய்ய வேண்டும்.  இல்லை உங்கள கண் முன்னால் வந்து நின்று நின்று கத்தினால் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு அவரை மாற்றி, அங்கிருந்து கத்தி முடித்து  அல்லது அழுயை நிறுத்தினால் தான் மேற்கொண்டு பேச முடியும் என்று திடமாக நடக்க வேண்டும். திருப்பித் திருப்பியும் நாம் அப்படிச் செய்து அவர் அழுகையை நிறுத்திய பின் இவை அழுது பெறும் காரியங்கள் அல்ல  என்பதை உணரப் பண்ண வேண்டும்.

நீங்கள் (பெரியர்கள்) தடுமாறினால் பிள்ளைகள் உங்களில் இடம் கண்டு கொள்வார்கள். இப்படிக் கத்தியே எல்லாக் காரியமும் பெறமுடியும் என்று முடிவு கொள்வார்கள்.

பிள்ளைகள் உங்கள் நெருக்கத்தையும் உங்கள் கவனிப்பையும் எப்போதும் விரும்புவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-2-2011.

 

                                        

12. ஈ..அடிச்சான் கொப்பி……

 

 

..அடிச்சான் கொப்பி……

 

கண்களை மூடினால் உலகே இருண்டதாக எண்ணும் பூனையாக இன்றி சரண் யார் எது செய்தாலும் அதையே தானும் செய்து முடிக்கும் கெட்ட குணம் கொண்டவனாக இருக்கிறான். ஆனால் இவன் மிகத் திறமைசாலி. தன் சுய சிந்தனையில் மிக நல்ல சிறந்த செயல்களைச் செய்யலாம்.
 

இது சரணின் மகன் சாந்தனுக்குப் பிடிக்கவேயில்லை. மற்றவனைப் பார்த்து செய்வதை  ‘ஈ அடிச்சான் கொப்பி’  என்று கூறும் வழக்கம் உண்டு.

 

ஒருவன் மற்றவனைப் பார்த்து எழுதினானாம்.  இரவு, முதலில் எழுதியவன் எழுதும் போது பூச்சி ஒன்றும் அதில் விழுந்து இறந்து விட்டதாம் அப்படியே கொப்பியை மூடிவிட்டான். பூச்சியும் செத்து எழுத்தோடு ஒட்டுப்பட்டு விட்டது. பார்த்து எழுதியவன் அதே போல பூச்சியையும் தேடி தனது எழுத்தோடு ஒட்டி விட்டானாம். (ஈ அடிச்சான் கொப்பிக்கு வழங்கும் கதை இது).

 ‘என்னப்பா! நீங்கள்! ..அதே போல ஏன் செய்ய வேண்டும்?..’ என்று தடுத்தாலும் சரண் கேட்பதேயில்லை.

சரண் பொறாமைத் தினவெடுத்து, ஆற்றாமை, பொறாமைச் செங்கதிர்ப் பரப்பலில் வெந்து போகிறான். பிறர் செய்வதை அப்படியே தானும் செய்து மனம் ஆறுகிறான், தன் திறமையை உணராது.
இதை எண்ணி எண்ணி சாந்தன் வெட்கக் குமிழிகளில் தன்னை அமிழ்த்துகிறான்.

பெற்றவரின் நல்ல செயல்களைப் பிள்ளைகள் பின்பற்ற வேண்டும். இங்கு பெற்றவர் செயலால் குறுகிவிடுகிறான் சாந்தன்.

‘…அப்பா! உங்கள் திறமை சிறந்தது. உங்களால் முடியும். புதிது புதிதாக ஏதாவது செய்யுங்களப்பா!…கண்ணன் மாமா, சுந்தர் மாமா செய்வதையே நீங்களும் செய்ய வேண்டாமப்பா!..’ என்று ஓதியபடியுள்ளான் அப்பா மாறுவார் என்ற நம்பிக்கையில்…….

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-2-2011.     

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/12/blog-post_05.html 

 

                            

Previous Older Entries Next Newer Entries