11. தமிழ் செழிக்க வேண்டும்.

 

மிழ் செழிக்க வேண்டும்.

 

அந்தத் தொலைபேசிக் கலந்துரையாடலின் பின் மனதில் ஒரே குடைச்சல், கவலையாக இருந்தது. அதனால் இதை எழுத எண்ணமும் உருவானது.
 

இலங்கையில் வசிக்கும் என் அக்கா வாணியின் மகளுக்கு இலண்டனில் திருமணம். அதற்காக வாணி அக்காவும் அத்தானும்  இலண்டன் வந்து எனது ஒன்றுவிட்ட அண்ணா ரகு வீட்டில் தங்கியிருந்தனர். நான் தொலைபேசி எடுத்த நேரமெல்லாம் அவர்கள் வீட்டில் இருக்கவில்லை. தொலைபேசி எடுத்தே களைத்துப் போனேன். இறுதியாக எடுத்த போது மறுமுனையில் ‘ ..ஹலோ! ‘ என்ற குரல் கேட்டது.’ நான் யேர்மனியிலிருந்து வாணியின் தங்கை ராதா கதைக்கிறேன். அண்ணா இல்லையா? ‘ ..என்றேன். மறு பக்கத்தில் அவ்வளவு ஆர்வமான பதில் இல்லை. ‘நீர் மகளா பேசுவது?’…என்றேன். ஓ என்று குரல் இழுபட்டது.
 

விடயம் என்னவென்றால் பிள்ளைக்கு தமிழ் பேசவரவில்லை. பதினைந்து வயதாம். ‘ நீங்கள் தமிழர் தானே! தமிழ் தெரியாதா? ‘..என்றேன்  மிக வீரப் பிரதாபமாக ‘..பேசினால் விளங்கும’…; என்றாள். என்ன படிக்கிறீர்கள், சகோதரர்கள் தமிழ் பேசுவார்களா? வீட்டில் ஆங்கிலம் தான் பேசுவீர்களா? என்றெல்லாம் கேட்டு அறிந்தேன்.  வீட்டில் பெற்றோர் தமிழ் பேசியிருந்தால் தான் பிள்ளைகளும் தமிழ் பேசுவார்களே!

பின்னாலே அடுத்த அறையிலிருந்து எனது கணவர் ‘ பேசாமலிரேன்! உனக்கேன் இந்தக்கதை!…’ என்று என்னை அதட்டினார்.

தமிழ் தெரியாது என்ற பதிலை அங்கிருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்குத் தூக்கிவாரிப் போட்டது போல இருந்தது.

அண்ணன் ரகு ஒரு வைத்தியரோ என்சினியரோ இல்லை. அதாவது உயர் சமூக அந்தஸ்து உள்ளவரும் இல்லை.

அண்ணியின் அப்பாவோ ஊரில் வெங்காயத் தோட்டம் வைத்து சம்பாதித்தார். அண்ணி கூட காலையில் பெற்றொருடன் தோட்டம் போய் விட்டுத் தான் பாடசாலை போய் படித்தார்.
இப்படி அடிமட்டம் அல்லது நடுத்தர வாழ்வு அடிப்படை உள்ள அண்ணியா தன் பிள்ளைகளை ஆங்கிலத்தில் வளர்த்துள்ளார்! இது என்ன ஒருவகைத் தாழ்வு மனப்பான்மையில் வந்த மனப்பிறழ்வா? எப்படி  தன் அன்னை மொழியைக் கைநழுவ விட்டார்?  தமிழ் பாடசாலைகளுக்குக் கூட பிள்ளைகளை அனுப்பவில்லையா?

எமது தமிழினம் எங்கே செல்கிறது! என்று  பலவாறான கேள்வி, குளப்பம் உருவானது.

புலம்பெயர்ந்த துருக்கி இன மக்கள் தமது பிள்ளைகளுக்கு 3,4 வயது வரும் வரை அந்நிய மொழிப் பாலர் பராமரிப்பு நிலையங்களுக்கு தம் பிள்ளைகளை அனுப்புவதில்லை. தாங்களாக, பிள்ளைகளை மொழி, கலாச்சாரம், தமது உணவு என்று பழக்கிய பின்பே பிறமொழிப் பாலர் நிலையங்களுக்கு அனுப்புகிறார்கள். அந்த அளவுக்குத்  தமது மொழி கலாச்சார விழுமியங்களைப் பாதுகாக்கின்றனர். தமது மரபு வழி வழுவுவதை விரும்புவதில்லை.

நம்மவர்களோ தலைகீழாக உள்ளனா. இலண்டன் என்பது சொர்க்க புரி என்று எண்ணி ஆங்கில மோகத்தை அணைத்து வாழ்கிறார்கள். அண்ணை ரகு மட்டுமல்ல, பலர் நமது வேர் எனும் மொழியை இழுத்து அறுக்கின்றனர்.

மறு பகுதியில் மண்ணுக்கு, மொழிக்காக சீவ மரணப் போராட்டம் நடக்கிறது.

ஒரு பிள்ளை தன் தாய்மொழியில் வல்லுனன் ஆகவோ அல்லது நன்கு பரிச்சயமாகி, சரளமாகப் பழகினாலோ அது பிறமொழி உயர்வுகளுக்கு நல்ல ஒரு ஏணியாகும் என்கிறார்கள். நல்ல படிக்கட்டாகும் என்கிறார்கள், மொழியியல் வல்லுனர்கள்.

தமிழன் என்பது ஆங்கிலம் பேசினால் இல்லாமற் போய் விடுமா? அல்லது வெள்ளைத் தோல் தான் எமக்கு வந்து விடுமா? உண்டு, உடுத்துப் படுத்த எமது மொழி எப்படி எம்மை விட்டு விலக முடியும்?
இது யாருடைய பிழை? நிச்சயமாகப் பெற்றோர் விடும் பிழை தான். பெற்றவரின் அறியாமை அல்லது அறிய மனம் இல்லாமை தான்.

இப்படியான குடும்பப் பிள்ளைகளுடன் நான் கூடியளவு தமிழில் தான் உரையாடுகிறேன். இது தான் என்னால் முடிந்த ஒன்று.

மங்கு தமிழ் என்று முதலில்
சங்கு ஊதுவது தாய்ப் பொருமாட்டி தான்.
ஆங்கில மோகம், அந்நியமொழி
ஓங்கி வளருது தமிழை உதைத்து.

கெஞ்சுதல் கொஞ்சுதல், மிஞ்சுதல்,
அஞ்சுதலும் அருமைத் தமிழானால்
இஞ்சு அளவும் எம்மை விட்டு
விலகாது எம் கொஞ்சு தமிழ்.

அம்மா அப்பாதமிழ் பேசி
சும்மா அலுப்பதும் தமிழாகி எம்
சுவாச ஒலியும் தமிழானால்
சுருண்டு, வரண்டிடாது தமிழ் மொழியும்.

….வேதா……

                                                                         

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-2-2011.

                                                    

 

10. அனுபவக் குறிப்பு.

  

 

னுபவக் குறிப்பு.

 

பிள்ளைகள் பொருட்கள் போல வாகனங்களில் ஏற்றி இறக்கப்படுவதிலும் பார்க்க, அவர்களை நடக்க, துவிச்சக்கர வண்டி ஓட்ட விடவேண்டும். தமது கால்களை, உடலைப் பாவிக்க அனுமதிக்க வேண்டும்.

ஒரு தாய்க்கு ஒரு கைக் குழந்தையும், நடக்கக் கஷ்டப்படும் ஒரு பிள்ளையும் இருந்தால், பிள்ளை வைத்துத் தள்ளும் வண்டிலில் சிறு குழந்தையையும், நடக்கக் கஷ்டப்படும் முதற் பிள்ளைக்கு, நின்று கொண்டு போக, ஒரு தொங்கும் வண்டியும் தள்ளு வண்டிலில் இணைத்து, பெற்றோர் அதைத் தள்ளிக் கொண்டு போகிறார்கள்.
 

இது மிகவும் ஆரோக்கியமற்றது. சுகாதாரமற்றது. நடக்கும் குழந்தையை நாம் முடமாக்குகிறோம்.

இப்படிப் பொம்மையாக வளர்க்கும், வளரும்  பிள்ளைகள், தமது பதின்ம வயதில் (teenage ல்) இருதய நோயோ, 2வது நிலை நீரிழிவு நோயோ, வயதுக்கு மீறிய எடை பெறும் நிலையோ உருவாகிறது.

சுறு சுறுப்பின்றி இருப்பதற்கு அதிகரித்த எடையும், தொலைக்காட்சி, கணனி போன்ற அதீத பாவனையும் இன்னொரு காரணமாகிறது. இதே நேரம் சுகாதாரமற்ற கொறிக்கும் உணவும் ஆரோக்கியமற்றதாகிறது.

உதாரணமாக:- கோலா, சிப்ஸ், கொழுப்புகள் கொண்ட, கலோறிகள் அற்ற அதிவேக உணவுகள் (ஃபாஸ்ட் ஃபூட்fast food) ஆகும்.

உடல் பருமனான பிள்ளைக்கு சமூகத்திலும் மதிப்புக் குறைந்து காணப்படும். இவர்கள் பிறரால் வித்தியாசமாக நோக்கப்படுகிறார்கள். அதனால் பெற்றவர் முதலில் சுறு சுறுப்பு, மகிழ்வானவராகி, பிள்ளையையும் அது நெருங்கச் செய்ய வேண்டும்.

எம்மைப் பார்த்தே எமது பிள்ளைகள் அனைத்தையும் பழகுகிறார்கள். அதற்கு நாம் சிறந்த முன் மாதிரியாக வேண்டும்.

நீங்கள் விளையாட்டு வீரர்களாகத் தேவையில்லை. வீட்டில் உடற் பயிற்சி செய்தாலே பிள்ளைகளுக்கு அது தொற்றிவிடும்.

அசையுங்கள் உங்கள் உடலை! அசையுங்கள் உங்கள் அங்கங்களை அசையுங்கள்! அதைப் பிள்ளையும் பார்த்துச் செய்திடும்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-4-2006.

 

              

9. பயிற்சி உலா – சிறுவர் இலக்கியம. 3. (இறுதியங்கம்.)

 

 

யிற்சி உலா – சிறுவர் இலக்கியம. 3. (இறுதியங்கம்.)

 

நான் பார்க்காத நேரத்தில் முஸ்தபாவும் மணல் மேட்டில் ஏறிவிட்டான் டானியலால் எவ்வகையிலும் முஸ்தபாவிற்கு உதவி செய்ய முடியாது. அவன் சிறுவன். முஸ்தபாவும்  விடா முயற்சி கொண்டவன். அவன் பல தடவை முயற்சித்து மேலே ஏறியிருப்பான்.

 

இருவரும் மணல் மேட்டில் நீளவாக்கில் ஓடியும், அதில் இருந்த சிறு மரங்களைக் கட்டிப் பிடித்தும் விளையாடினார்கள். அது அலுத்ததும் டானியல் ஓடி வந்து மேட்டின் உச்சியில் நின்று கயிற்றைப் பிடித்தபடி என்னைப் பார்த்தான். அதைப் பிடித்தபடி கீழே இறங்க நெஞ்சுத் துணிவு வரவில்லை அவனுக்கு. ஒரு உந்துதல் தேவைப்பட்டது. அந்தப் பார்வை அதைத்தான் எனக்குக் கூறியது.

 

என்ன பிள்ளைக்கு முடியவில்லையா? இறங்க வேணுமா? நான் வந்து பிடிக்கட்டுமா? என்ற அர்த்தமற்ற கேள்விகள் இங்கு ஊக்கம் தராது. நான் நின்ற இடத்தை விட்டு நகராது ‘ டானியல்! ஞாபகம் வைத்திரு! நான் உன் மீது தான் கண்ணாக உள்ளேன்.’…..என்றேன். என்னை அன்புடன் கனிவாகப் பார்த்து, சரி என்ற வகையில் தலையாட்டினான். கயிற்றைப் பிடித்தான் மளமளவெனக் கீழே இறங்கினான். நான் இரு கைகளையும் தட்டி ‘ கெட்டிக்காரன்! உன்னால் முடியும்’.. என்று உற்சாகமாகச் சத்தமாகக் கூறினேன். அவன் சிரித்து மகிழ்ந்தபடி பல தடவை கயிற்றைப் பிடித்து ஏறி இறங்கினான்.

முஸ்தபாவும் கயிற்றைப் பிடிப்பது , விடுவது என்று முயற்சித்தபடி இருந்தான். டானியலின் முன்னெடுப்புத் தான் முஸ்தபாவுக்கு இங்கு ஊக்குவிப்பாக இருந்தது. முஸ்தபாவும் பின்னர் வெற்றி கண்டான். தொடர்ந்த என் கைதட்டலும் ‘நீங்கள் எவ்வளவு கெட்டிக் காரர்கள்!’  என்ற என் புகழ்ச்சியும் இருவருக்கும் கிடைத்தபடியே இருந்தது.

அடுத்து டானியல் கயிற்றைப் பிடித்தபடி மரக் குத்தியில் ஏறினான். என் நெஞ்சு நடுங்கியது. இவன் கீழே விழுந்தால் பிஞ்சுத் தலை மரக்கட்டையோடு அடிபட்டால்,…. அதை விட இது பெரிய பிள்ளைகள் விளையாடும் இடம், அவனால் முடியுமா என்று இப்படிப் பலவாறாக என் எண்ணம் ஓடியது….. என் எண்ணம் ஓடியபடி இருந்தது.

டானியலோ மளமளவெனக் கயிற்றைப் பிடித்தபடி சர்வ சாதாரணமாகக் குற்றிகளின் மீது நடந்தான். வெற்றி கண்டு விட்டான். கரகோசம் பாராட்டுடன் பெருமையாக நிமிர்ந்து விளையாடினான். பல தடவை முயற்சித்தான். இது டானியலின் முதல் முயற்சி.

அவனது திறமை,…. சாகசத்தை, அவனது அறைப் பெரியவர்களிடம் அறிவித்தேன். ‘ஆகா! அப்படியா! அவன் முன்பு அப்படி விளையாடவில்லை. இப்போதெல்லாம் புதிது புதிதாக   அவன் ஆராய்ச்சிகள் செய்கிறான்’ என்று மகிழ்ந்தனர். இனி அவன் விரைவில் பெரிய பிள்ளைகள் பிரிவிற்கு வந்து விடுவான்.

இப்போதெல்லாம் நானும் டானியல், முஸ்தபாவும் நல்ல சிநேகிதர்கள். வித்தியாச வேலை நேரங்களில் நான் உள்ளே போகும் போது அவர்கள் வெளியே ஏதாவது விளையாடியவாறு  நிற்பார்கள். கண்டவுடன் ‘ உன்னைக் கட்டி அணைக்கட்டுமா?’…என்பேன்…. புன்னகையோடு தலையாட்டுவார்கள் சம்மதிப்பதாக. இறுக அணைத்து சில கணப்பொழுது மகிழ்வேன்   அவர்களோடு.   எனக்கும் இது திருப்தியான மகிழ்வுக் கணங்கள் தான்.

முஸ்தபாவின் பெற்றோர் மாலையில் வந்து அவனைக் கூட்டிப்   போகும் போது, அவனைப் பச்சைக் குழந்தையைப் போல் தூக்கிப் போவதைச் சிலவேளைகளில் நான் காண்பதுண்டு.   உள்ளுரக் கோபம் வந்தாலும், உலகைத் திருத்த முடியுமாவென்றும் எண்ணுவதுண்டு.

திருடனாகப் பார்த்துத் திருந்தி, திருட்டை ஒளிக்கும் நிலை தான் குழந்தை வளர்ப்பும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியே!

                    

  முற்றும்.

(படம் – ஒரு மழை நேரம், றப்பர் பாதணி, மழை மேலாடையுடன் என் பின்னால் ஒரு பிள்ளையை வைத்து குழந்தையாக நானும்  சைக்கிள் ஓட்டினேன். தலைவியை இது கவர எங்களை –  தன் கமராவுக்குள் அடக்கினார்.)

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ், டென்மார்க்.

10-6-2007.

8. பயிற்சி உலா 2 (சிறுவர் இலக்கியம்.)

 

(படத்தில் நான் (பெட்டகோ)சிறுவருடன்.)

*

 

யிற்சி உலா. –  சிறுவர் இலக்கியம் 2.

 

இது ஒரு மேடு பள்ளமான விளையாட்டிடம். மிக அழகான படிகளோடு எல்லா இடத்தையும் பாவிக்கும் முறையில் அமைக்கப் பட்டுள்ளது. மேலே மணல் விளையாட்டு, மிதி வண்டி ஓடல் போன்றவையில் அலுப்படைந்த டானியலும், முஸ்தபாவும் மரக்குத்திப் படிகளில் இறங்கிக் கீழே போய்விட்டனர். இவர்களது உடல் இயக்க சக்தி மிக அருமையாக வளர்ந்து, நரம்பு, எலும்பு யாவும் நன்கு இயங்குவது இதிலிருந்து தெரிகிறது.
 

தொட்டில் பிள்ளைகள் (3 வயதிற்குக் கீழானவர்கள்) அந்த மரக்குத்தியில் இறங்கக் கூட பெரியவர்கள் உதவி தேவை.
இவர்கள் போனதற்கென்ன, நான்கு அடி நடந்து, தயங்கித் தயங்கிப் பள்ளத்திலிருந்து என்னைப் பார்த்தனர். அதன் கருத்து, நாம் அங்கே போய் விளையாடப் போகிறோம், நீ என்ன சொல்கிறாய், போகட்டுமா, என்பது தான். தொட்டில் பிள்ளைகள் ஒரு பெரியவரோடு தான் அங்கு போக முடியும். அப்படி அவர்கள் பெரியவரை மீறிப் போனாலும், பெரியவர்கள் பின்னாலே போய்விடுவார்கள். தனியே போக விடமாட்டார்கள். (இங்கு குறிப்பிட வேண்டும், நான் எப்போதும் 3க்கு மேற்பட்ட வயதுடையவர்களோடும், 3ம் வகுப்பு வரையுமான பிள்ளைகளோடு தான் வேலை செய்கிறேன்.)

கீழே 4, 5 அடி உயரத்தில் ஒரு செயற்கை மணல் மேடு உள்ளது. அதில் பெரிய பிள்ளைகள் தான் ஏறிக் குதிப்பார்கள். ஒரு பகுதி சாய்வாக யாவரும் ஏறும் விதத்திலும், மறு பகுதி செங்குத்துச் சாய்வாகவும், மூன்றாவது பகுதி செங்குத்தாக ஆனால் அதில் சுலபமாக ஏறி இறங்கக் கயிறும் கட்டப்பட்டுள்ளது. கயிறு பிடித்து ஏறி இறங்க முடிந்தவர்கள் மரக் குத்திகளிலும் ஏறி மேலே போகும் வசதியும் உண்டு. நிதானம் (பலன்ஸ்) அற்றவர் கயிறைப் பிடித்துக் கொண்டும், மரக்குத்தியில் ஏறி மேலே போக முடியும்.

ஆக, அது ஒரு சிறுவர் சாகச விளையாட்டு இடம். இங்கு தான் இவர்கள் விளையாட ஆசைப்பட்டனர். ‘ அங்கே போய் விளையாடப் போகிறீர்களா? ‘ என்றேன்.  ஆமாம் என்று தலையாட்டினார்கள் ‘ சரி போய் விளையாடுங்கள்! நான் உங்கள் மீது கண் வைத்தபடி இருக்கிறேன், பயமின்றி விளையாடுங்கள்’ என்றேன். அனுமதி கிடைத்த மகிழ்வில் குடு குடுவென மேட்டுப் பகுதியை நோக்கி ஓடினார்கள்

இப்போது நானும் இவர்களைத் துல்லியமாகப் பார்க்கக் கூடியதாகப் பல்கனி போன்று, அரச குடும்பத்தினர் நின்று கையசைப்பது போன்று ஒரு மரக் கொட்டில் மாடத்தின் ஓரமாகச் சென்று வசதியாக நின்று கொண்டேன். அதே நேரம் என் காதும் கவனமும் என் பின்னால் விளையாடும் மற்றப் பிள்ளைகளின் மீதும் இருந்தது. எங்கு அழுகைச் சத்தம் , அலறல் கேட்குமோ, அங்கு நான் உடன் பிரசன்னமாவேன். முடியாவிடில் இன்னொருவரை உதவிக்கு அழைப்பேன், அது வேறு விடயம்.

நீண்ட சாய்வான பகுதியால் தான் டானியலும், முஸ்தபாவும் ஏறுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். அவர்களோ  செங்குத்தான சாய்வான பகுதியால் முயற்சித்தனர். டானியல் விறுவிறென மேலே ஏறிவிட்டான். அவனோடு சோடியாக ஏறிய முஸ்தபா சறுக்கிச் சறுக்கி, உருண்டு உருண்டு விழுந்தான். நான் எனது இடத்தில் நின்று வாய்விட்டுச் சிரித்து விட்டேன். அவனால் ஏற முடியாமலேயே போய்விடுமோ, போய் உதவி கொடுக்க வேண்டுமோ என்றும் எண்ணினேன்.

டானியல் டெனிஸ் பையன், மேலிருந்து  முஸ்தபாவை வரும்படி அழைப்பது தெரிகிறது. இருவரும் ஒரே வயதாயினும் முஸ்தபாவால் முடியவில்லை, டானியலால் முடிகிறதே

ஏன்?…… ஏன்?…….

ஆமாம் மிகவும் எளிமையான காரணம் தான். மிக மடைத்தனமான காரணமும் கூட.
சாப்பாட்டையும் ஊட்டி, சட்டையையும் மாட்டி, சப்பாத்து நாடாவையும் கூட பெற்றவரே கட்டிக் கட்டி முஸ்தபாவின் தன்னம்பிக்கையை நொறுக்கி விட்டனர்.

தன்னம்பிக்கையிருந்தால் நிச்சயமாக அவன் டானியல் போலத் தடதடவெனச் செங்குத்துச் சாய்வில் தானாக ஏறியிருப்பான்.

இந்த இருவரில் டானியல் தான் தலைவனாக இருக்கிறான். நிர்வகிக்கிறான்.

இவை சாதாரண சிறு விடயங்கள் தான். இது பிள்ளைகளை எப்படிப் பாதிக்கிறது தெரிகிறதா?

பெரியவரின் மூக்கு நுழைப்பு    இது பாசமாம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-6-2007.

******************************

 

7. பயிற்சி உலா 1 (சிறுவர் இலக்கியம்.)

 

 

பயிற்சி உலா – சிறுவர் இலக்கியம் 1.

 

வெளியே வெய்யில், மூன்றிலிருந்து ஆறு வயதுப் பிள்ளைகள் கும்மாளம் அடித்து விளையாடுகிறார்கள். அவர்களை மேற்பார்வை பார்த்தபடி பெரியவராய் நான் மட்டும் வெளியே தனிய.
 

இந்த உலகில் நாமும் உலா வரவேண்டும், பக்கத்து அறைப் பெரிய பிள்ளைகள் போல நாமும்  விளையாட வேண்டும் என்ற உணர்வில், இறக்கையின் உள்ளேயிருந்து தலை நீட்டிக் குஞ்சுகள் வெளியே பார்ப்பது போல 3 வயது டானியலும் முஸ்தபாவும் பூஜ்யத்திலிருந்து  மூன்று வயதுப் பகுதிக் குழந்தைகள் அறையிலிருந்து மெல்ல மெல்லத் தயங்கியபடியே தங்கள் பக்கத்தால் வெளியே வந்தனர்.
 

இந்த வெளி உலகத்தில் அவர்களும் தனியே உலா வந்து உலகைச் சமாளிக்க வேண்டுமே! அவர்கள் தமது சிறு படலையைத் திறக்காமல் வெளியே வரும் ஆவலில் குட்டி போட்ட பூனை போல படலைக்கு உள்ளேயே வளைய வந்தது தெரிந்தது. ஆயினும் அவர்கள் வெளியே வருவதற்குரிய ஆடை போட்டிருப்பதும் தெரிந்தது. நான் நிற்பது தெரிந்தே அவர்களது அறைப் பெரியவர்கள் அவர்களை வெளியே வர அனுமதித்துள்ளதும் புரிந்தது.

அக் குழந்தைகளுக்கு ஒரு அங்கீகாரம் தேவைப்பட்டது. எம்மோடு இணைய ஒரு அனுமதி தேவை என்பது அவர்கள் தயக்கத்தில் தெரிந்தது. அதைப்பரிந்து கொண்ட நான் ‘ஹாய்! டானியல்! ஹாய்! முஸ்தபா! வெளியே விளையாடப் போகிறீர்களா? ..’ என்று வார்த்தையால் அவர்களை அணைத்து, வாங்களேன்…..விளையாடுவோம் என்று நன்கு சிரித்தபடி அழைத்தேன். அவ்வளவு தான் முகத்தின் தயக்கம் முழுதுமாய் மாற, என் ஏற்றுக் கொள்ளலின் மகிழ்வில்  ஓடி வந்து இணைந்து ஒவ்வொரு விளையாட்டிலும் பத்துப் பத்து நிமிடங்கள் முயற்சித்தனர். இப்போது நான் பார்த்தும் பார்க்காதது போல, ஆனாலும் அவர்களை மறைவாகக் கண்காணித்தபடி நின்றேன்.

அவர்கள் தமக்குள் பேசிச் சிரித்தபடி பாய்ந்து ஓடி விளையாடி அனுபவித்தனர். தமக்குத் துணையாக ஒரு பெரியவர் தயார் நிலையில் இப்போது உள்ளார் எனும் பாதுகாப்பு உணர்வு அது. முழு இடமும் தமக்குச் சொந்தம் போல இயல்பாக மகிழ்ந்து விளையாடினார்கள்.

குழந்தைகளுடன் ஒரு புன்முறுவல், ஒரு வார்த்தையின் அணைப்பு, ஒரு நெருக்கம் மிக அன்னியோன்னியத்தைத் தந்திடும். நிறைந்த மனோபலத்தை இது அவர்களுக்கும் தந்திடும்.
இந்தத் தொல்லை மிகுந்த வெளி உலகில் அவர்கள் தனியே தம்மைச் சமாளிக்க வரும் உலா, ஒரு பரிசோதனை இது.  3வயது தான் இவர்களுக்கு. ஒரு பெரிய மனிதர்களின் ஆசாபாசத்துடன் மலர்ந்த தளிர்கள்.

5, 6 வயது வலியவன் இவர்கள் விளையாட்டைத் தடுப்பான். விளையாடும் பொருளைப் பிடுங்குவான். போகும் போது வேணுமென்றே இடிப்பார்கள். நல்ல சந்தர்ப்பங்களைத் தட்டி விடுவார்கள். தட்டி விட்டு  ஒரு வார்த்தையும் பேசாது, மன்னிப்பும் கேட்காது விலகித் தம் காரியம் பார்ப்பார்கள். இவைகளைக் கவனித்துச் சரியானபடி இயங்கப் பண்ணலே  எமது கடமை. இந்த உலகத்துத் தொல்லை பெரியவர்களுக்கு மட்டுமல்ல,

வலியவன்  மெலியவனை வருத்துதல், அழுத்துதல் சிறு உலகத்திலும் உண்டு. இதில் தான் டானியலும், முஸ்தபாவும் யோசித்து யோசித்து  இறங்குகிறார்கள் என்பது உங்களுக்குப் புரிகிறதா?

பெரியவர்கள் கண்காணிப்பில் சிறுவர்களைத் தனியே இயங்கப் பண்ணலே சிறந்த வழியாகும்.

தேவையற்று நாம் மூக்கு நுழைப்பது அவர்களைப் பலவீனப் படுத்தும். தன் காலில் நிற்கும் தகுதியைத் தொலைக்கும்.

—-தொடரும்—

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-5-2007.

 

                                 

23. அரை நேர வேலை.

 

அரை நேர வேலை. 

அம்மா! அம்மா! என் அம்மா!
அம்மா கடமையை ஏன் மறந்தாய்?.
அம்மா நீயொரு பொம்மையம்மா.
அம்மா நாமம் உனக்கெதற்கு?
காலையில் எம்முடன் வெளிவந்து
மாலைக் கருக்கலில் வீடு வரும்
வேலை புரியும் அம்மாவே
என் வேதனையுனக்கேன் புரியவில்லை?.

 

குவிந்த தனிமைப் போர்வையுள்ளே
தவிக்கும் கணங்கள் இணை நடக்க
தொலைக்காட்சி, கணனி தோழியாக
கலைக்கிறேனே ஓய்வுப் பொழுதை.
நாலும் பேசி மனம் கலக்க
நல்ல தோழியாயேன் நீயில்லை?.
நான்கு சுவருக்குள் என் மகிழ்வு
நலமழிவதை நீ அறிவாயோ?.

 

பிள்ளையைப் பெற்றால் போதாதம்மா
கொள்ளை அன்பும் தேவையம்மா.
அள்ளியெடுத்து அணைக்க வேண்டும்.
ஆதரவு வார்த்தை தரவேண்டும்.
காணும் நட்புடன் மனம் திறக்க
காரணமெம் உறவின் தூரம்
பூரணமாக்க நெருங்கிடு அம்மா!
பூவான அன்பைத் தாவம்மா!.

 

பணத்தைப் பகட்டை நினைக்கிறாயே!
மனத்தை மகிழ்வைப் பாரம்மா!
தினமும் குடும்பக் குலாவலில் மகிழ
திட்டமொன்று தீட்டுவோமம்மா.
முழு நேர வேலையைக் கழுவி விடு!.
அழுமென் மனதைக் குளிர விடு!
அரை நேர வேலையை எடுத்து விடு!.
அருகினில் இருப்பாயா ஆசையம்மா!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்:  டென்மார்க்.
6-8-2007.

(ரி.ஆர்.ரி தமிழ்ஒலியில், இலண்டன்தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                               

 

6. இதுவா இக் காலப் பிள்ளைகள் சிந்தனை!…….

இதுவா இக் காலப் பிள்ளைகள் சிந்தனை!

தாரணியை எனக்குச் சமீப காலமாகத் தான் தெரியும். திருமணமாகி ஒரு மாதம் தான் கணவன் நரேனுடன் சண்டை பிடித்தபடியே இருந்தாள்.

சீக்கிரமாக ஒரு பிள்ளையைப் பெறுங்கள் சண்டை ஓடி ஒளிந்து விடும் என்றேன் நான். ” அது வேறு ஒரு செலவு அல்லவா? ” என்றாள் தாரணி திடமாக.
” பிள்ளை ஒரு செலவா? ” என்றேன்.  ” வேறு என்ன? ” என்றாள் தாரணி. இவள் மட்டுமல்ல பலரது நினைவும் இதுவாகவே உள்ளது. பிள்ளை எதற்கு, நாம் மகிழ்வாகவே உள்ளோம் என்பது போன்ற அபிப்பிராயங்கள் இளையவரிடம், பலரிடம் உலவுகிறது. இதை நாம் புதிய சிந்தனை, நவீன சிந்தனை என்கிறோம். இப்போதைய பிள்ளைகள் மனப்பாங்கு என்கிறோம். சமீபத்தில்  ஒரு சில வரிகள் வாசித்தேன்.

அகத்தியன் என்பவன் கடற் கன்னியோடு சேர்ந்து பெரும்சாகரன் என்ற மகனைப் பெற்றானாம். பெரும்சாகரன் தீண்டத் தகாதவள் ஒருத்தியோடு சேர்ந்து பகவன் எனும் மகனைப் பெற்றான். பகவன் பல்கலைப் பண்டிதனாக வளர்ந்தான். இது ஒரு புறமிருக்க,

பிரம்மகுலத்துத் தவமுனி ஒருவர் அருண்மங்கை எனும் பெண்ணை மணந்து பெண் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கைவிட்டாராம். கைவிட்ட இந்தப் பெண் குழந்தையை உறையூர்ச் சேரித் தாழ்ந்த குலத்தவன் எடுத்த வளர்த்த போது அந்த ஊர் அழிந்தது.

அப்போது இப் பெண் மகவை மேலூர் அகரத்து நீதிஐயன் எடுத்து வளர்த்தாராம். நீதிஐயன் ஒரு சத்திரக் காவலாளியாக வேலை செய்த போது பல்கலைப் பண்டிதன் காசி போகும் வழியில்,  நீராடி, சத்திரத்தில் தங்கிய போது, நீதிஐயன் வளர்ப்பு மகளைக் கண்டு ” நீ தீண்டத் தகாதவளா? ” என்று கேட்டுச் சருவச் சட்டியால் தலையில் அடித்தான். இரத்தம் வழிந்தது.  இதுவும் ஒரு புறமிருக்க, ….

பகவன் காசி நகர யாத்திரை முடித்துத் திரும்ப வந்த போது, இந்தப் பெண் பேரழகு மங்கையாகி நின்றாள். இருவரும் காதலித்து, நீதிஐயன் அனுமதி பெற்றுத் திருமணம் புரிந்தனர்.

நெற்றிக் காயத்தின் விபரம் கேட்ட போது, முன்பு பகவன் சட்டுவத்தால் அடித்த ஆதியளே அதாவது பழையவளே என்று பகவன் அறிந்தார். ஆதியள் என்று பகவன் கூறியதால் ஆதி என்ற பெயர் அவளுக்கு வந்தது.

ஆதி தன் கணவனை விடாது பின் தொடர்ந்தாள். இவள் தன்னோடு சேர்ந்து வாழ வேண்டுமானால் பிறக்கும் குழந்தைகளை அந்தந்த இடத்திலேயே விட்டுவிட்டு வர வேண்டும் என்பது கணவனின் வேண்டுகோள்.

முதற் குழந்தை அவ்வையார். அக் குழந்தையை ஆதி விட்டு வரத் தயங்கிய போது, கலைமகளே அவ்வையாராகப் பிறந்ததால்

” இட்டமுடன் என் தலையில் இன்னபடி
   என்றெழுதிவிட்ட சிவனும்  செத்துவிட்டானோ
   முட்ட முட்டப் பஞ்சமே யானாலும்
   பாரமவனுக் கன்னாய் நெஞ்சமே அஞ்சாதே நீ ”     

என்று குழந்தை பாட,

தாயார் விலகிச் சென்றார். இப்படி ஏழு பிள்ளைகளையும் பெற்று, விட்டு விட்டுச் சென்றனர். ஒளவை, கபிலர், அதியன், வள்ளுவன், உப்பை, உறுவை, வள்ளி. என எழுவர்.

பிள்ளை வேண்டாம், செலவு, தொல்லை எனும் கருத்து நவீன கருத்து, இளையவர் கருத்து என்கிறோமே! பகவனுக்கும் அன்று வந்த கருத்தும் இதுவாகவே அல்லவா உள்ளது. என்ன கூறுகிறீர்கள்? இது நவீன எண்ணமோ?

 

வேதா இலங்காதிலகம்

ஓகுஸ்,  டென்மார்க்.
 1-10-2007.

 

                              

5. வயதுக்கேற்றபடி….

வயதுக்கேற்றபடி…. 

 

இந்தக் குடிமனைப் பகுதிக் கல்விச் செயற்பாட்டுக் குழுவில் நானும் ஒரு அங்கத்தவராக இருக்கிறேன்.

அன்று இளவயதினரின் பேச்சுப் போட்டி நடக்கவிருந்தது. இதில் தெரிவு செய்யப்படுபவர்கள்; குடிமனைக் குழுவிலிருந்து பிற மானிலக் கூட்டங்களிற்கு பேச்சுகள் செய்யச் செல்வார்கள். இதில் 3 பேரைத் தெரிவு செய்யும் நிகழ்வு இது.

பேச்சுகள் மேடையில் அரங்கேறியது. பத்துப் பேர் பேசினார்கள்.                                          

பிறிட்டா(Britta) பிழியப்பிழிய அழுதாள்.

எனக்குத் தெரியும், அன்று நானும் இதே நிலையில் தானே இருந்தேன். குழந்தை வயதில் கம்பீரமாக பேசிய பாணியில் பல பரிசுகள் வேண்டிக் குவித்தவள் நான்.  9 வயதில் திருக்குறள் பற்றிப் பேசும் போது அதே மழலைப் பாணியில் ஆனால் கம்பீரமாகப் பேசிய போதும் முதற் பரிசை வெல்ல முடியாது இரண்டாவது நிலைக்குத் தள்ளப்பட்டவள். பிழியப்பிழிய அழுதவள். அதாவது மழலைப் பாணியில்   9 வயதில் பேசியதால் எனது பேச்சு எடுபடாது போன நிலை அது. இன்று பிறிட்டாவின் நிலை அன்றைய எனது நிலை போலவே இருந்தது.

இந்த நிலையைப் பற்றி கவனிக்க வேண்டும், பிள்ளைகள் வளர வளர வயதுக் கேற்ற வகையில் பேச வேண்டுமென முன்னைய கூட்டத்தில் நான் விளக்கிக் கூறியிருந்தேன். பிறிட்டாவிற்கு உதவியவர்கள் இதைக் கணக்கில் எடுக்கவேயில்லை.

இன்று பெற்றவரும் உதவியாளரும் பேந்தப் பேந்த விழிக்கின்றனர். பிறிட்டா பிழியப் பிழிய அழுதாள். அருகில் சென்று அவளை அணைத்தேன். மிகவும் உடைந்து போய்க் குலுங்கிக் குலுங்கி அழுதாள். அருகில் இருந்த இருக்கையில் நான் அமர்ந்து அவளையும் மடியில் இருத்தி அணைத்து என் பாசத்தைச் சிறகாக்கினேன். அவளை ஆறுதல் படுத்தினேன்.

பிள்ளைகள் வளர வளர அவர்கள் அணுகு முறையில் மாற்றம் வர வேண்டும். மழலைக் கால நடவடிக்கை நிலை போல இளவயதுக் காலத்தில் பேசுவதை நடப்பதை மாற்றி சிறிது முதிர்ந்த நிலைக்கு வர வேண்டுமென்பதைப் பெற்றவர், உதவியாளரும் உணரத் தவறிவிட்டனர். கேட்க, பார்க்க இனிமையாக வயதுக்கேற்ற செயல் முறைகள் மாற வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மழலைப் பாணியின் எடுப்பான நிலை வயதுக்கேற்ற படி மாற வேண்டும்.

 

ஆக்கம் வேதா இலங்காதிலகம்.
ஓகுஸ்  டென்மார்க்.
6-4-2009.

                               

4. ஏன் அந்தக் கேள்வி?

 

ஏன் அந்தக் கேள்வி?

 

வாழ்வின் சவால்களை எதிர் நோக்கி, எப்படிச் சமாளிப்பது எனும் பயிற்சியைப் படிக்கும் ஓரிடமான பாடசாலையின் முதலாம் புகுமுகமான அரிவரி வகுப்பில், அன்றலர்ந்த ரோசாக்கள் போல வித்தியாசமான மலர் முகங்கள்.    பார்த்துக் கொண்டிருந்தாலே பசி தீரும் முகங்கள்.

இவ் வகுப்பிற்கு நிரந்தர ஆசிரியர்களின் பொறுப்பில், செய்முறைப் பயிற்சிகளைப் பயில வரும் மாணவ ஆசிரியர்கள், மாணவப் பெட்டகோமார்களாக அவ்வப்போது பல புது முகங்கள் வந்து வந்து போவார்கள். ஒரு கிழமை, இரண்டு கிழமை, ஒரு மாதம் மூன்று மாதங்களென இவர்கள் பயிற்சிக்காக வந்து போகும் போது, பற்பல புதிய விடயங்களைப் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்பார்கள். எமக்கும் அது சுவையாக இருக்கும்.

காலையில் முதலில் வட்டமாக அமர்ந்து பல விடயங்கள் பற்றிப் பேசுவோம். நிறங்கள், ஆடைகள், கிழமை நாட்கள், இலக்கங்கள் பற்றிப் பேசுவோம். புதிய பயிற்சியாளர்கள் வரும் போது, புதியவர்களின் பயிற்சிக்கு முன்னுரிமை கொடுத்து, நாமும் குழந்தைகளாவோம். மாணவப் பயிற்சியாளரின் தவறான வழிமுறைகள் திருத்திப் பயிற்றுவிக்கப் படும்.                                                  

அன்றும் பத்மா என்ற தமிழ்ப் பெண், மாணவ ஆசிரியையாக டெனிஸ் பிள்ளைகளுடன் இருந்தார். இவர் ஒரு டெனிஸ் பாடலைப் பிள்ளைகளுடன் பாட விரும்பிப், பாடலுக்கு விளக்கங்கள் கொடுத்தார். விளக்கம் முடிந்து பாடலைப் பாடுவதற்குப் பதிலாக ”சரி நாம் இனிப் பாடுவோமா?” என்று கேள்வியைத் தொடுத்துப் பிள்ளைகளைப் பார்த்தார்.

உடனே கிறிஸ்ரினா, அந்த வகுப்பு ஆசிரியர் இடைமறித்தார். ”அந்தக் கேள்வியை நீர் கேட்கக் கூடாது, பாடலைப் பாடத் தொடங்கும் ” என்றார். பாடல் பாடப் பட்டு நிகழ்வுகள் இனிது நடந்தது. 
பின்னர் மாணவ ஆசிரியையும் வகுப்பு ஆசிரியரினதும் கலந்துரையாடல் நேரத்தில் கிறிஸ்ரினா விளக்கங்கள் கொடுத்தார்.

”சரி இனி நாம் பாடுவோமா?” என்றால் பிள்ளைகள் ” இல்லை இப்போது வேண்டாம், இல்லை நாம் பாடவில்லை, என்றெல்லாம் கூற சந்தர்ப்பத்தை நீர் கொடுக்கிறீர். நீர் முடிவு செய்த பின்பு அந்தக் கேள்விக்கு அங்கு இடமே இல்லை நேரடியாகப் பாடலைப் பாட வேண்டியது தான் ” என்று உறுதியாகக் கூறினார். இப்படித்தான் நானும் எனது பெட்டகோ படிப்பிற்கு முன்னர் ‘ பாடுவோமா?, செய்வோமா? ‘ என்று கேட்டேன். 1993ல் எனது படிப்பு  முடிந்த பின்பு அந்தப் பழக்கத்தை விட்டு விட்டேன்.

இது எம்மில் சிலரிடம் உள்ள ஒரு பழக்கம் .  பேசுவோமா, பாடுவோமா,  தொடங்குவோமா என்று போகிற போக்கில் ஒரு கேள்விக் கணையை வீசுவது.

உண்மை தான், நாம் ஒன்றைச் செய்யத் தீர்மானித்து ஆரம்பிக்கும் போது அப்படி ஒரு கேள்வியைப் போட்டு, முதலில் கூறிய பெறுமதி மிகுந்த வார்த்தைகளை, உறுதியான வார்த்தைகளை நாம் மழுங்கடிக்கச் செய்கிறோம்.                                     

நமது உறுதியற்ற மனநிலையைப் பகிரங்கப் படுத்துகிறோம் என்பது என் எண்ணம். ‘ இதைப் பற்றிச் சிந்திப்போமா?’  என்று கேட்டு நான் எழுதுவதை முடிக்க விரும்பவில்லை. மிக உறுதியான கருத்தாகக் கூறுகிறேன் இது பற்றிச் சிந்தியுங்கள்.

 

ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.

( பிள்ளை பராமரிப்புப் பயிற்சிப் படிப்பு 3 வருடம் முடிந்ததும் என் பெயரோடு  ஒட்டிக் கொண்ட பட்டம் பெட்டகோ.)

 

                                        

 

                                         

3. குழந்தை இலக்கியம்.

 

 

வித்தியாச விசித்திர அழைப்பிதழ். 3

 

சாப்பாடு தயாராக பிள்ளைகளை அழைத்தோம். ‘புழுவும் இரத்தமும் ஆந்தை வாந்தியும் உண்போம்’ என்று, ‘இதோ புழு!’ என்று நூடில்ஸ்சைப் பரிமாறினார்கள். இரண்டு மேசையில் பெரியவர்கள் சிறுவர்களாக அமர்ந்தோம். என்னருகில் இருந்த பையன் தனக்கு உணவு வேண்டாம் என்று அருவருப்புடனும் கவலையுடனும் சொன்னான். அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. தயாராக இருந்த பாண் அவனுக்குப் பரிமாறப்பட்டது. பாணுக்கு இரத்தமும் அதாவது சோசும் வேண்டாம் என்று கூறிவிட்டான். நாம் எவ்வளவோ விளக்கிக் கூறினோம், மறுத்துவிட்டான். ‘கறுப்புப் புழு யாருக்கு வேண்டும்?’ என்று வீட்டுக்கார ஆண் கரண்டியில் அதைச் சுற்றியபடி கேட்டுப் பரிமாறினார். இதைக் கொதிக்க வைத்த போது வந்த வாசனை சாப்பிடும் உணர்வைத் தூண்டியது என்று என் உதவியாளர் கூறினார்.( கணவாய் மை கலந்ததால்)                                                                                

கறுப்பு நூடில்ஸைப் பாதிக்குப் பாதியான பிள்ளைகள் சாப்பிட்டனர். சிலர் இரண்டாவது தடவைக்கு பாண் வேண்டுமென அடம் பிடித்தனர்.                            

இவைகள் முடிய மோபின் (moffin)என்று கூறும் கேக், சின்ன வட்டக் கடதாசி கிண்ணத்தில் செய்த கேக், அதன் மேலே முட்டை உடைத்து ஊற்றியது போல வெள்ளை மஞ்சள் கருவுடைய  ஐசிங் பொருள் கேக் மேல் வைத்து பேக் பண்ணப் பட்டிருந்தது.  இது தான் பறவை மூளையும் முட்டைப் பொரியலும் என்று பரிமாறப்பட்டது.

உணவு முடிய இதே மேசையில் அமர்ந்தபடி பிறந்த நாள் பாடல் பாடி, பிறந்த நாள் பரிசும் அந்தப் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்டது.                                                               

 பின் எல்லோரும் வெளியே போய் சுரங்க வேட்டை விளையாடினோம்.  புதையலானது இனிப்புப் பண்டங்கள் நிறைந்த ஒவ்வொருவருக்கும் உரிய பைகளின் மூட்டை. அதைக் கண்டு பிடித்த பின், பிள்ளைகளுக்குப் பிரித்துக் கொடுத்தனர் வீட்டுக்காரர்.                       

இவை முடிய பாலர் நிலையம் வந்தோம்.                                                       

பெரியவர்கள் பன்னிரண்டரையிலிருந்து இரண்டு பிரிவாக இடைவேளை எடுப்போம். எங்கு போனாலும் அந்த நேரத்திற்கு நிலையத்திற்கு வந்து விடுவோம்.

இது தான் இந்த வித்தியாச விசித்திர அழைப்பிதழ். நான் அழைப்பிதழைப் பார்த்ததும் மிகவும் அருவருப்படைந்தேன். அப்படி அவசரத் தீர்மானம் கொள்ளக் கூடாது என ஒரு அறிவுறுத்தலாக இச் சம்பவம் எனக்கு இருந்தது. எதுவாக இருந்தாலும் அமைதியாக எதிர் கொள்ள வேண்டும். முடிவு சுபமாகவும் இருக்கலாம் என இதன் மூலம் என்னால் அறிய முடிந்தது.                                                                       

சரி அன்பர்களே!  இத்துடன் இந்த 3 அங்கமும் முடிவுறுகிறது.  

 

 

வேதா. இலங்காதிலகம். 

 ஓகுஸ், டென்மார்க்.

30-1-2008.

 

                                

 

 

 

Previous Older Entries Next Newer Entries