32. மணல் விளையாட்டு.

vethri3 027aa

மணல் விளையாட்டு.

*

தணலென மன மகிழ்வு
மணல் விளையாட்டில் விரிவு.
மணல் அள்ளித் தூவல்
மணலில் பாதம் பதித்தல்
மணலில் கால் புதைத்தல்
மணலில் அளைதல், குழைத்தலாம்
மானாவாரி அனுபவம் மழலைக்கும்
மனிதருக்கும் மகோன்னத நன்மையாம்.

*

மணலில் குழியாக்கல், வரைதல்
மணலில் பொருள் ஒழித்தல்
மணலில் கிளிஞ்சல் தேடல்
மணலில் அச்சு பதித்தல்
மணலில் உருண்டு, புரளல்
மழலைக்கு மலைப்பின்றி மகத்தான
தோலில் நோயெதிர்ப்புச் சக்திக்கு
தோழனாகித் தோள் கொடுக்கும்.

*

(மானாவாரி – மழை பெய்து விளையும் விளைச்சல்)

பா ஆக்கம் பா வானதி. வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-11-2013.

643630yr2vtei28b

Advertisements

31. வளரட்டும் சுயபலம்….

toddler-stairs-climbing-photo-420x420-ts-AA013115

வளரட்டும் சுயபலம்….

 

வாராண்டி வாராண்டி

வாசுதேவன் வாராண்டி.

வாரப்பாடு காட்டியே

வாருகிறார் பேத்தியை.

வாரணையாய் வளர்ச்சிக்கு

வாசல் நந்தியாகிறார்.  (வாராண்டி)

 

 

ணவைப் பிள்ளைக்கு

உருகியுருகி ஊட்டுகிறார்.

உடையை அணிந்திட

உதவியே தொலைக்கிறார்.

உருப்படியாய் பேத்தி வளர

உதவி தர மறுக்கிறார். (வாராண்டி)

 

 

ப்போதும் உதவினால்

எதிர்பார்ப்பு உருவாகும்.

எழுச்சி உணர்வும்

எழாமலே அமுங்கிடும்.

எண்ணமும் முயற்சியும்

எதிர்மொழி  பேசாது.  (வாரப்பாடு)

 

 

தானே முயற்சித்து

தாண்டவிடு படிகளை!

தாறுமாறு ஆனாலும்

தாராள அனுபவம்

தானமாக்கும் தகுதியை.

தாட்டிகமாயெழும் சுயபலம். (வாரப்பாடு)

 

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.

ஓகுஸ,  டென்மார்க்.

5-2-2013.

 

( வாரணை – தடை.  தாட்டிகம் – வலிமை, இறுமாப்பு)

 

 

11art

 

 

30. பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.

 

பிள்ளைகள் காயப்படுகிறார்கள்.

 

எப்படி வெளியே பிள்ளைகள் காயப்படுகிறார்கள்!

பாலர் பாடசாலையில்  வெளியே உலா செல்லும் நாட்களில் தெருக்களைக் கடக்கும் போது, சன நெரிசலிற் புகும் போது, குழுநிலையில் சிறுவர்கள் ஒருவருடன் ஒருவர் கைகளைக் கோர்த்து, சோடி சோடியாக இடையில் பெரியவர்களுடனும் நடக்க வேண்டும்.

எல்லோரும் சோடி சோடியாகக் கை பிடித்து நிற்க இறுதியாக 3 வயதுடைய ஒரு ஆசியப் பெண் குழந்தையும், ஒரு டெனிஸ் ஆண் குழந்தையும் எஞ்சி நின்றனர்.
”கையைக் கோர்த்திடு” என்றேன்…பெண் குழந்தையிடம்.
மாட்டேன் என்று மறுத்தாள்.
” இப்படி உலாப் போகும் போது சிறு பிள்ளைகள் கை பிடிக்க வேணும் என்ற வழக்கத்தை மறந்து விட்டாயா?..” என்றேன்.
”நான் ஆண் பிள்ளைகள் கையைப் பிடிக்க மாட்டேன்!”…என்று அடம் பிடித்தாள்.
” ஏன்” என்ற போதும் (இக் கேள்வியை மிக மன நோவுடனேயே நான் கேட்டேன்)
”மாட்டேன்…மாட்டேன்”… என்றாள்.
பின்பு நானும் சேர்ந்து அவளோடு கை பிடித்து நடந்தோம்.
எமது வற்புறுத்தலால் அவளது கண்கள் கலங்கி விட்டன. அழுதாள். அவளது நிலைமை எனக்கு விளங்கியது.

பின்னொரு தடவை – வேறொரு நாள் சைக்கிளோடி விளையாடிய போது, ஒரு ஆபிரிக்க ஆண்பிள்ளை 4 வயதுடையவன் எனக்கு பெண் பிள்ளையோடு சைக்கிளில் இரட்டையாக, சமமாக உட்கார முடியாது என்றான்.
”ஏன்” என்றேன்.

” ஆண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்., பெண் பிள்ளைகள் பெண் பிள்ளைகளோடு தான் விளையாட வேண்டும்.” என்று அடித்துக் கூறினான்.
”..யார் கூறியது?…” என்றேன்.
”…அம்மா..கூறினார் ” என்றான். (நானும் ஒரு ஆசியப் பெண் ஆனாலும், ஐரோப்பியக் கலாச்சாரப் பாலர் பாடசாலை ஆசிரியையாகப் பயிற்றப் பட்டு ஐரோப்பியரோடு வேலை செய்தவள். புலம் பெயர்ந்த பிள்ளைகள் நிலை இது.)

இது தான் கலாச்சார இடிபாடு.

வீட்டில் கூறும் பிற நாட்டுக் கலாச்சாரப் புத்திமதிகள் பிள்ளைகளிடம் வேலை செய்கிறது. ஆனால் அது இங்கு (ஐரோப்பியக் கலாச்சாரத்தில்) வெளியில் எடுபடாது.

ஆணும் பெண்ணும் கலந்து பழகி விளையாட வேண்டும். அவர்கள் கலந்து பழகி விளையாட நாமோ தடை செய்வதில்லை, ஊக்குவிக்கிறோம். இது எமது தொழில்.

புலம் பெயர்ந்த பிள்ளைகளிற்கு கூறும் புத்திமதியின் விதம் பிழையானது என்பது எனது கருத்து ஆணும் பெண்ணும் சேர்வதே கூடாது என்று கூறி  சேரும் ஆவலைப் பெற்றோர் மறைமுகமாகத் தூண்டுகின்றனரோ என்று தோன்றுகிறது.
நன்கு விளக்கமாக இது கூறப் படல் வேண்டும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பிள்ளைகளிற்கு உங்கள் முழு அன்பை, ஆதரவைக் கொடுப்பதே.

எப்படி வெளியே அடிபடுகிறார்கள் பார்த்தீர்களா?

கிளப், பாடசாலை, ஓய்வு நேரப் பாடசாலைகளில் இதை விட நிலைமைகள் வேறு. டிஸ்கோ, சேர்ந்து பயணங்கள் போய் இரவு தங்குதல் என்று பல. இதில் பயணத்திற்குக் கொண்டு போகும் பொருட்களின் நினைவுப் பட்டியலில் கருத்தடை உறையும் ஒரு பொருளாகப் பாடசாலையால் எழுதப் பட்டிருக்கும்!

இவைகளைப் புரிந்து கொண்டு அணையுங்கள்! இல்லாவிடில் உடைந்து விடுவார்கள் பார்த்தீர்களா!

எவ்விடயமானாலும் பக்குவமாகக் கூறிட வேண்டும்!

கவனியுங்கள்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2004.

(இது இலண்டன் தமிழ் வானொலி ” ஓடி விளையாடு பாப்பா”  நிகழ்வில் 5-9-2004 ல் எழுதி வாசிக்கப்பட்டது.)

(ஒரு மழை நாளில் சைக்கிளோடும் விளையாட்டு…)

 

                                    

29. உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது!

 

உங்கள் சிரிப்பு மிக முக்கியமானது!

 

படுக்கையில் நித்திரை கொள்வதும், அழுவதும், பால் குடிப்பதுமாக இருந்த பிறந்த குழந்தை, தனது தொடர்புக் கணையாக அழுகையைப் பாவித்த குழந்தை, முதன் முதலில் தனது முகத்துத் தசை நார்கள் விரிந்து,

சிரிக்க ஆரம்பிக்கிறது.

இரண்டாவது தொடர் கணையாகச் சிரிப்பது, புன்முறுவல் பூப்பது அதன் வளர்ச்சியின் ஒரு முன்னேற்றம்.

நீங்களும் கண் தொடர்பை நன்கு பேணிக் கொண்டு குழந்தையுடன் பேசுங்கள். அம்மா அப்பாவாகிய நீங்கள் சிரிக்கச் சிரிக்கக் குழந்தையும் சிரித்துத் தன் திறனை வளர்க்கும்.

மிகச் சிறு குழச்தைக்கு இது பொருந்தும்.

” உம் ” என்று முகத்தைத் தூக்கி வைத்துத் திரிவது பிள்ளைகளைப் பாதிக்கும். சிரியுங்கள். புன்னகையுங்கள் இது வீணாகி விடாது.

பெற்றவரை மாதிரியாக வைத்தே பிள்ளைகள் வளருகிறார்கள். ஆகவே உங்கள் சிரிப்பு என்றுமே வீணாகாது.

சிரிப்பு முக்கியமானது. உங்கள் குழந்தைக்கு அந்தச் சிரிப்புக் கொடுக்கும் செய்தியாவது, நானும் நீயும் ஒன்று, எனக்கு நீ உனக்கு நானனெனும் செய்தியே, நாம் நெருக்கமானவர்கள் என்று கூறுகிறது.

அது போலவே தான் அழுகையும் அமைகிறது. மனிதர்களின் கவனிப்பை  அழுகையும் இழுக்கிறது.

அதுவே குழந்தைக்குத் தேவையானதுமாகிறது.

பல விடயங்களில் மனிதரைக் குரங்குடன் ஒப்பிடுவோம். ஆனால் இந்தச் சிரிப்பில் மட்டும் அது ஒத்து வருவதில்லை. பிறந்த குழந்தையும் சிரிக்கிறது.

அம்மா அப்பாவின் தொடர்பு நழுவுகிறதோ! அதைத் தெரிவிப்பதும் சிரிப்புத் தான்.
ஒரு மாய மந்திரக் கயிறாக மழலைச் சிரிப்பு எம்மை இழுக்கிறது.

எத்தனை கோடியையும் அச் சிரிப்பிற்கு ஈடாகக் கொடுக்கலாம். பிள்ளையை விட்டு விலக மனமின்றி அணைக்கிறோம்.
இந்த அணைப்பையே குழந்தை கேட்கிறது.

ஏன் சிறு குழந்தை சிரிக்கிறது என்றால் நீங்கள் என்னோடு அருகிலேயே இருங்கள் என்று மேல் மனுச் செய்கிறதாம்.

உங்கள் குழந்தையை விளங்கிக் கொள்கிறீர்களா!

சிரியுங்கள்! பல சிறப்பு உருவாகும்!

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-8-2004.

 

                                     

 

28. தொட்டிற் பாடல்

 

தொட்டிற் பாடல்

 

சாய்ந்தாடய்யா சாய்ந்தாடு!
சாதனை வீரனாய்ச் சாய்ந்தாடு!

சாதுரிய சீலனே சாய்ந்தாடு!
சாந்த ரூபனே சாய்ந்தாடு!

கட்டித் தங்கமே சாய்ந்தாடு!
பெட்டி வைரமே சாய்ந்தாடு!

கற்கண்டுக் கட்டியே சாய்ந்தாடு!
கருணை ஒளியே சாய்ந்தாடு!

தாமரை மொட்டே சாய்ந்தாடு!
தாவிக் குதிக்கச் சாய்ந்தாடு!

சின்னப் புறாவே சாய்ந்தாடு!
சிணுங்காது சிரித்துச் சாய்ந்தாடு!

                 —— வேதா……..

வண்ணங்களின் கீழ் வருகிறது இப் பாடல். தமிழில் 1000 வண்ணங்கள் உள்ளதாம். இப் பால்களின் ஓசை நயம் குழந்தைகள் செவிப் புலன் சீரடைய வழி வகுக்கும். இது பிள்ளைகளின் பிற்கால இசை வளர்ச்சியை, பாடல் (செய்யுள்) இயற்றலையும் வெகு இலகுவாகக் கற்க உதவிடும்.

மிகவும் முயற்சியுறாது கேட்டுணரும் இவை பிற்காலத் தமிழ் இசை, இலக்கிய வளத்திற்குப் பெரிதும் உதவியாற்றும்.

3 முதல் ஏழு வயதுப் பிள்ளைகளிற்கு இது நல்ல கருத்துணர்வைத் தட்டியெழுப்பும். சிந்திக்கும் திறனை உருவாக்கும்.

இவர்கள் இந்த இசையின் கவர்ச்சியால் சொல்லின் கருத்தறிவார்கள். சொற் கருத்தால் பொருளின் அறிவு பெறுவார்கள். அறிந்த பொருளுடன் அறியாத பொருள் பற்றியும் ஆராய முயற்சிப்பார்கள்.

வியப்பு, நேசம், பாசமிகு அன்புப் பாடல்களை இவர்கள் மிக விரும்புவார்கள்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் தன் பாட்டி இலக்குமிப்பிள்ளை ஒரு பிள்ளையைத் தூக்கி வைத்துப் பாடிய பாடல் என்று

”…சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
   தாமரைப் பூவே சாய்ந்தாடு…”

எனும் பாடலை எழுதியுள்ளார். இவை மழலைப் பருவ இலக்கியங்கள் என்கிறார்.

பாடசாலைப் பருவ இலக்கியத் தமிழ் கற்க ‘ அழகியலுணர்வு ‘ பெற இப்பாடல்கள் அடிப்படையைத் தருவது என்கிறார். ஓசை நயம் கலந்த இந்தப் பாடல்களை இடைவெளியின்றித்  திரும்பத் திரும்பக் குழந்தைகள் கேட்கலாம். நாமும் பாடலாம். அவர்கள் அறியாது இவைகளை அறிவார்கள்.

மனம் முயற்சியின்றிப் படித்தலெனும் இத்திறனை அகநூலார் ”அசாக்கிரப் படிப்பு” என்பார் என்கிறார் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.
”குழவிப் பருவ இலக்கியப் பாடல்கள் எல்லாம் அசாக்கிரமயுருப்படுவனவாதலின் அவை செவ்விய ஓசை வளமுடையனவாக இருத்தல் வேண்டும்” என்கிறார் சோமசுந்தரப் புலவர்.

1955ம் ஆண்டுப் பதிப்பு நூலில் 35 ஆண்டுகளிற்கு முன்னர் இத்தகைய பாடல்கள் யாழ்ப்பாணத்தில் சொல்வழக்கிலிருந்தது என்கிறார்.
இதை நாம் இன்று கூறுவதானால் 92 வருடங்களிற்கு  முன் இவை யாழ்ப்பாணத்தில் சொல் வழக்கிலிருந்தது என்று கூறமுடியும்.

பிறநாட்டு மொழிகள், நாகரீகம் வந்து புக எமது பழைமைப் பாடல்கள் அழிந்துபட்டன. ஆயினும் எனது பாட்டிமார் இதைப் பாட நான் கேட்டுள்ளேன். இதை எம் பேரனுக்காக நான் எழுதினேன். அவர் சிறிது வளர, பாடிக் காட்டுவேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2012.

இதோடு சேரும் ஒரு இடுகை. வாசித்துப் பாருங்களேன்!  மிக்க நன்றி.

https://kovaikkavi.wordpress.com/2010/12/12/179-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

 

                             

27. மோகன முறுவலில்…..

 

மோகன முறுவலில்…..

 

மோகன முறுவலில் மயங்காதார் யார்!…..

 

”ஹாய்!…எனக்கு உன்னைப் பார்க்க முடிகிறது. உன் குரலைக் கேட்க முடிகிறது. எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும்.  உன்னோடு சேர்ந்து இருப்பது மிக இன்பமயமானது…”

பச்சிளம் பாலகன் வள்ளுவன் இந்த உலகத்திற்கு வந்து நான்கு கிழமைகள் தான் ஆகிறது. சிறு புன்னகை மூலம் தான் அவனால் செய்தி தெரிவிக்க முடியும். மேலே கூறிய தகவலை அவன் அப்படித்தான் தெரிவித்தான்.

அந்த மின்னல் கீற்று முறுவலைப் பார்த்து மனமிளகி மறுபடியும் அவனைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள். நீங்கள் ஆனந்தத்தால் நிரம்பி வழிவீர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தனது குழந்தையின் முதற் சிரிப்பால் பெறும் அனுபவம் மனித வாழ்வில் ஒரு மிகப் பெரிய அனுபவமாகும்.

ஆரம்பத்தில் அந்த மோகன முறுவல் ஒரு ஓட்டமானதாகத்,  தாயானவளுக்கு நிச்சயமில்லாததாக,  பிள்ளை சிரிக்கிறானா இல்லையா என்று உறுதியின்றி இருக்கும்.
திடீரென எந்தவிதத் தடுமாற்றமுமின்றி உங்களைப் பார்த்துத் தான் அவன் சிரித்தான் என உணர்வீர்கள்.

குழந்தையின் முதற் சிரிப்பு சிறு சத்தங்களை உருவாக்கி இது ஒரு விளையாட்டுப் போன்று தோன்றும்.

உங்கள் கரத்தில் பிள்ளையைச் சாய்வாகத் தூக்கி நிமிர்த்திக் கண்களோடு கண்களின் தொடர்பைக் கொள்ளுங்கள். மிக இன்பமாக நிறையச் சிரிப்புகள் தொடரும். ஒரு மாதத்தினுள் குழந்தையின் சிரிப்பு மிக வளர்ச்சியடையும். இச்சிரிப்பு மிக நீளும். குழந்தையின் முகத்தையும் ஒளியடையச் செய்யும்.

அன்றாட வாழ்க்கைக் கடன்களால் நீங்கள் அமுங்கி, ஒளியிழந்து இருந்தாலும், கோபமாக இருந்தாலும் அந்தக் குழந்தைச் சிரிப்பை நீங்கள் பார்க்கும் போது ஈடு இணையற்ற ஆனந்தமடைவீர்கள்.

மறுபடி ஒரு பெரிய சிரிப்பைக் கொடுப்பது தவிர உங்களிற்கு வேறு வழியே இல்லை. உங்களால் எது விதத்திலும் இதிலிருந்து தப்பவே முடியாது.

ஒரு மாதக் குழந்தையான கைக்குழந்தை நீங்கள் தான், தன் பெற்றோர் என்று உங்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை.

மற்றைய பெரியவர்களையும்,  தன் கண்பரப்பில் விரிபவர்கள் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறது.

ஏனெனில் அது ஒரு வகையான பேசப்படும் குரல். தொடர்பாடல் முறை.

தன்னைப் பற்றிய கவனத்தை உங்களிடம் எழுப்பி, தன்னைப் பார்க்கச் செய்கிறது.
உங்களுக்கே உங்களுக்காக பிள்ளை சிரிக்க நீங்கள் நான்கிலிருந்து ஏழு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

சிரிப்பெனும் தூண்டிலால் ஒரு குழந்தை ஆறு மாதத்திற்குள் யாராயிருந்தாலும் எல்லோரையும் தன் பரப்பினுள் இழுக்கிறது.

ஏழு மாதத்தின் பின்னரே நெருங்கியவர்கள், தனக்குத் தெரிந்தவர்கள் என்று அடையாளம் கண்டு சிரிக்கிறது.
வெளியார் யார், தனது நெருங்கியவர் யார் என அடையாளம் புரிகிறது.

நன்கு சிரித்து விளையாடிய பிள்ளை ஏன் திடீரென தெரியாதவர்களைப் பார்த்து ஒரு வித்தியாசமான நிலையில் ஓதுங்குகிறது என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இது ஒரு சாதாரண நிலையிலான உங்கள் பிள்ளையின் முன்னேற்றமே.
நீங்கள் இதையிட்டு மகிழ வேண்டும். அதை மதிக்கப் பழக வேண்டும்.
பிள்ளை ஒரு படி முன்னேறியுள்ளான், வளர்ந்துள்ளான் என்று நீங்கள் மகிழ வேண்டும்.

 

ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-10-2004.

( இது யெர்மனிய இந்து மகேஷ் ன் ”பூவரசு” இனிய தமிழ் ஏடு- கார்த்திகை, மார்கழி 2004 இதழில் பிரசுரமானது.)

  

 

                                  

26. ஒரு குதூகலமான நாள் முயலுங்களேன்!…

ஒரு குதூகலமான நாள் முயலுங்களேன்!…

 

1.        வெளி நாட்டில் நல்ல கோடையில் சூரியன் உதிக்கும் போது பிள்ளைகளிற்கும், பெரியவர்களிற்கும் குதூகலமாக இருக்கும்.
குறைந்த ஆடைகளுடன் வெளியே போக விரும்புவார்கள். வார இறுதியில் பிள்ளைகளுடன் வெளியே புறப்படுங்கள்.
அழகான பூக்களை நீண்ட காம்புடன் பிடுங்கி வந்து ஒரு பாரமான புத்தகத்துள், சமையலறைக் கை துடைக்கும் கடதாசியை வைத்து அதன் மேலே பிடுங்கிய பூ வைத் தலை கீழாக ஒவ்வொன்றாகப் புத்தகத்துள் மூடிப் பாரம் வைக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் செல்ல அவை காய்ந்த பின்பு எடுத்து அழகான வாழ்த்து அட்டைகள், சட்டம் போடக் கூடிய கலையழகுடைய படங்கள் செய்யலாம்.

 

2.       இன்னும் காய்ந்த விதைகள், இறகுகள், கம்பளி நூல், மெல்லிய றிபன் போன்றவைகளையும் இவைகளோடு சேர்த்துக் கலா ரசனையுடன் வித விதமாக ஒட்டிப் பாவிக்கலாம்.

3.       சவர்க்காரக் கரைசலை உறிஞ்சும் குழாய்கள் மூலம் ஊதிக் குமிழிகள் செய்து பறப்பதை ரசிக்கலாம்.  சிறுவர்கள் அதைப் பிடித்தும் விளையாடுவார்கள். இதுவும் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

4.       பெரிது படத்திக் காட்டும் கண்ணாடியுடனும் சென்று பூச்சிகளைப் பிடித்துப் போத்தல்களில் இட்டுக் கவனிக்கலாம். இது பெரியவர்களிற்கும் மனமகிழ்வு தரக் கூடியது என்பது எனது அபிப்பிராயம்.

5.       தீயில் இறைச்சி வாட்டி உண்டு மகிழலாம்.

6.      கடற்கரைக்குச் சென்று மகிழலாம்..

 

இப்படிப் பல வகையில் வெயில் நாளை அனுபவித்து மகிழலாம்.

நீங்கள் தயாரா?…..

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-6-2005.

 

                             

Previous Older Entries