31. பெற்றோர் மாட்சி.

 

பெற்றோர் மாட்சி 31.

 

சக்தி, மகாசக்தி நிறைந்தது தாயன்பு.

பெற்றவரின் அன்பை அள்ளிக் கொண்ட பிள்ளையின் முகக் களை மிக பிரகாசமாயிருக்கும். அதன் செயல்களில் அமைதி, நிதானம் கூர்மையிருக்கும். பெற்றவர் அன்பை ஆதரவை எட்ட முடியாத பிள்ளை களைத்து, சோர்ந்து செயற்படச் சக்தியின்றி காணப்படும். முகத்தின் ஏக்கக் களை பார்வையில் புலப்படும்.

4-9-2004.
நெஞ்சில் பால் வார்க்கும் பிள்ளையைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். நெஞ்சில் விடம் ஊற்றும் பிள்ளைகளைப் பெற்றவர்கள் துரதிஷ்டசாலிகள்.
நினைவிலும், கனவிலும் பிள்ளைகள் நினைவு.
வாழ்விலும், தாழ்விலும் பிள்ளைகள் நினைவு.
அது பெற்றவர் மனது.

5-9-2004.
மனிதனின்  கொடுமைகளை, குளப்படிகளை  ஆண்டவன் தாங்குவது போல, பிள்ளைகளின் குளப்படிகளை கொடுமைகளைப் பெற்றோர் பொறுக்கின்றனர். பல வகையில் இவர்களும் ஆண்டவர்கள் தான்.

பரபரப்பான, சுமையான, நெருக்கடியான உலகில் நாம் தயாராக, உலகில் உரிமையுடன் ஊன்றிட தேவையான பற்றுக்கோடு என்ற அன்பு பெற்றவர் அன்பு தான்.

அன்பென்ற சொல்லெடுத்து
அகம் நிறைக்கும் அமிர்த சஞ்சீவி.
பாசமென்ற மழை பொழிந்து
பாரில் பாக்கியம் தரும்
பாசம், மனதில் என்றும்
பால் வார்க்கும் அன்பு
பெற்றவர் அன்பு தான்.

12-9-2004.
அன்பெனும் நாணயக் கயிறு மாட்டினால் பாலபருவம் எனும் வண்டி சீராக ஓடும். இதன் மதிப்புக்குரிய  சாரதிகள் பெற்றோர்.
கருவில் உயிரின் ஆதாரம் தாயின் தொப்புள் கொடி. அக் கொடியை ஏற்றியவர் தந்தை எனும் பெயராளர்.
காசினியில் உயிரின் ஆதாரமும் அவர்கள் அன்புக் கொடி தான்.

11-9-2004.
மனித மனக் கோயிலின் மூல விக்கிரகங்கள் பெற்றோர் தான். தாய்மையைத் தவிர உலகில் வேறு எதிலும் கூடுதலான அதிகாரம் பெற முடியாது. ஒரு தாயிற்கு தனது சிறு பிள்ளைகள் மீது முழுமையான அதிகாரம் உள்ளது. அவளது அதிகாரம் அவர்களை உடைக்கவும் முடியும், உருவாக்கவும் முடியும்.

10-12-2006.
மானுடம் நிமிர்த்தும் பெற்றவர் அன்புச் சாரல் ஆற்றலுடைத்து. அதைப் போற்றுதல் பிள்ளைகள் கடன். ஓற்றும் உதடும், ஒரு தொடுகையும் வற்றிடும் போது வேதனை அதிகம்.

9-7-2007.
பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன் என்றில்லாது
பிறப்பு நிறக்க பண்பாக வாழ்ந்து,
இறக்க முன்னர் நல்லவை செய்து
இறக்கமின்றி வாழ நல்ல மனுசியாக வளர்ந்தேன்.

9-12-2006.
பொன் எழில் நிகரொத்தது பெற்றவர்
அன்பு எழில்(வலிமை). அவரோடணையும் ஆதரவு
பூம்பொழில். தேனாய் அவர்கள்
தினம் பொழிந்த அன்பு முத்தத்து
வான் எழில் நிகரான அன்பு எமைக்காத்தது.
நான் எழிலாய் திரும்பக் கொடுக்க அவர் மனம் பூத்தது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

இடுகையிட்டது. 7-5-2011.

                              

 

30. பெற்றவர் மாட்சி வரிகள்.

 

  (படம்-நன்றி விகடன்.)

 பெற்றவர் மாட்சி வரிகள்.

14-1-2007.
உதிரத்தில் உதித்த வாரிசுகள்
உதட்டில் சதிராடட்டும் சரளமாய்
ஆதித் தமிழ். கதிரவன்
கதிராய்ப் பொங்கட்டும் தமிழ்.
பதியாம் நம் தாய் மண்ணில் அமைதி
புதிய வருடத்தில் பொங்கிப் பொலியட்டும்.
கொதிக்கும் மனங்கள் அமைதியில் பொங்கட்டும்.

21-1-2007.
அனுபவங்கள் பொன் பெறும்.
அனுராகமான பெற்றவருடனான
அனுபந்தம் இன்பச் சுரங்கம்.
அனுதினம் அதையே எம் பிள்ளைகளுக்கும்
அள்ளிக் கொடுத்தல் ஆரோக்கியமே!.

3-3-2007.
எப்பொழுதும் பெற்றவர் அன்பு அமுததாரை.
தப்பின்றி வாழ எப்படி வைப்படி இருப்பதென்று
செப்பமாய்க் கூறிப் பாசமழையில் நனைத்த
அப்பாவும், அம்மாவும் மனதினுள்
எப்பொழுதும்….எப்பொழுதும்….

25-3-2007.
செல்வம் குவிவது போன்றது
செல்வோமென விலகாத உறவு,
நல்ல பெற்றவர் உறவு.
வெல்வோம் வாழ்க்கையை என்று
நல்ல பிள்ளைகளாய் நாம்
வாழ்தலால் நாளும் மகிழ்வதும் அவர்களே.

23-6-2007.
அற்புதம் உலகில் எம்மில் பற்றான
பெற்றவர் முதலாவதாகவும், அவர்
வற்றாத அன்பு, ஆதரவு பின்னாகவும்
ஊற்றாக வாழ்வின் இறுதிவரையோர் ஆறுதல்…

24-6.2007.
சுயநலமுடைய சுவடு பதிப்பவர்,
நியமம்(விதி) என்று கடமையாய,;
யாகம் போல் தம் வாழ்வைத்
தியாகம் செய்தவர்கள் பெற்றவர்.
இத்தயாள குணம் எமக்கு வந்தால்
வியப்புடன் அமையும் எம் வாழ்வு.

2-12-2006.
பாசம் – பெற்றவர் நேசம்
பொன் எழில் நிகரொத்தது.
பூம்பொழிலான அவர் பாசம்
பேதம் காட்டாத நந்தவனம்.
வான் எழில் நிகரான அன்பை
தினம் பொழிவார் யாரென தவிக்கிறோம்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

 

                       
 

29. வானுயர வாழ்வோம்!

 pearents21

 

வானுயர வாழ்வோம்!

17, 24-3-2007.
வானுயரமாய் எம் மனதில் பெற்றவர்
தேனின் தித்திப்பாய் தினம் இனிக்கிறார்.
காலையில் எழுந்து கடமைகள் தொடங்கி
கணவன், பிள்ளை, குடும்பமாய் வாழ்வு.
கருத்துகள் கூறி கருமம்  ஆற்றும்
கச்சேரிப் பெண்ணாய் தாய் இன்று.
கடக்கும் பாதையில் மாற்றம் இன்று.
நோக்கம் மட்டும் தினமும் ஒன்றே

4-3-2007.
சேவல் கூவ விழித்துத் தூசிபடாது எம்மைக்
காவல் காத்துக் கண்ணியம் ஊட்டினார்கள்.
ஆவல் நிறைந்து எம்மை உயர்த்தினார்கள்.
காத்தல் தெய்வங்களாம் எம் பெற்றவர்களின்
வயோதிபக் காலத்தில் அவர்களுக்கு நிம்மதி
கொடுப்பதான கடமையை மனிதர் மறக்கலாகாது.
6-5-2007.
பால கால அனுபவங்கள் அற்புத பொக்கிசங்கள்.
அடியெடுத்து, தடுக்கி விழுந்து, கடித்து
கண்ணீர் விடும் போதும் கருணையாய்
அணைத்த பெற்றவர் பாசம் உலகில்
திடமாக நிற்கும் பாதப் பிடிப்பிற்கு அற்புதமானது.

7-4-2007.
ஏக்க வெயிலில் தவிக்கும் உயிர்களைக்
காக்கும் குடை நிழலாகப் பரந்து விரிந்து
காலத்திலும் ஆனந்தம் அளிக்கிறார் பெற்றவர்.
பெற்றவர், பிள்ளைகளின் நோக்கம் நிறைவேறினால்
இவ்வுலகு அன்புத் தோட்டம் தான்.

1-4.2007.
அம்மா என்ற முதல் வார்த்தையில்
அன்பும் அகிலமும் என் கண்ணில்.
அகரமும் அறிவும் அணைத்தது என்னை.
அறிவால் இணைந்து அருகில் துணையாக
ஆதரவாக என்றும் அப்பாவும் என்னோடு.

3-12-2006.
உலகெலாம் உயிர் நனைத்து
வலம் வந்து வளம் பெருக்கும்
பலமுடைய பெற்றோர் அன்பெனும்
பூமெத்தையின் சுகம் அறிவோர்
பூவாக அவர் மனதையும் என்றும்
உணர்ந்து போற்ற வேண்டும்.

25-11-2006.
நினைவுகள் உள்ளவரை பெற்றவர்
கனவுகள் தொடரும். கடமையாகக்
கனவுகளை பிள்ளைகள் நிறைவேற்றுதல்
கனமான கடனாகிறது. பிள்ளைகள்
கனவையும் பெற்றவர் ஆதரித்துக்
கைகொடுக்கும் கடன் வாழ்வுள்ளவரை உண்டு.

 

வரிகளாக்கம்
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-2-2011.

படம் நன்றி – ஆனந்த விகடன்.

                                       

 

 

 

 

 
 

28. எம்மை ஆக்கியவர்.

 

 

எம்மை ஆக்கியவர்.

 

நாங்கள் பெற்றோர் என்ற கொடிக்காலில் பாங்காகச் சுற்றி வளர்ந்த கொடி மலர்கள். தேங்கிய அன்பில் தீதும் நன்றும் அறிந்தோம். எங்கும் இவ்வுறவின் சிறப்பான அடித்தளம் அமைந்தால் பூங்காவனமான உறவமையும். எங்கும் எப்போதும் பேதமற்றது பெற்றோரின் அன்பும், ஆதரவும்.

 எண்ணத்தில் ஒரு சுகம் தருவது பெற்றவர் சொல்லும் இன்ப மொழிகள், அவர்கள் அன்புச் செயல்கள். அச்சுறுத்தல், பயமுறுத்தலின் தாக்கங்கள் அதிக நன்மை தருவதில்லை. நன்மையான எண்ணத்தை எண்ணி அதன் சுகமான நற்பாதையில் நடப்போம்.

மனநிறைவோடு தான் பெற்றவர் எம்மை வளர்க்கிறார். மனம் நிறைந்து பிள்ளைகள் இதை ஏற்றக் கொள்வதில்லை. மனநிறைவோடு பிள்ளைகள் இதை ஏற்றுக் கொள்வதில் தான் பெற்றவர் நிறைவு தங்கியுள்ளது.

3-4-2004.
தேவையைக் குறிப்பாலுணர்ந்து, சேவையினை உவந்து செய்து பூவுலகில் என்னைப் பாவையாக்கினாய். உன் பூரண சேவையின் சிறப்பிற்கு உனக்காகப் பூரிப்புடன் சமர்ப்பிக்கிறேன் பூவை என் கவிப்பூவை அம்மா.
அன்னை எனும் பெயரோடு நீயே தென்னையாய் உயர்கிறாயே! என்னை உலகினுக்குத் தந்து, கண்ணாய் கருதி நீயேந்தி, வண்ணமாய் வாழவைத்தாய் அன்னையே உனக்கு நன்றி!

2-10-2004.
உன்னைக் காணும் போதெல்லாம் உருகியதே என் நெஞ்சம். பனையளவான உன் சேவைகளையெல்லாம் பதமாக அனுபவித்தது கொஞ்சமோ! நினைத்து நினைத்து உருகுவதல்லாமல்  அம்மா! அதை மறக்குமோ என் நெஞ்சம்.

3-10-2004.
பூவாய் முகர்ந்து பூப்போல காத்தாயெமை. பாராட்டி வளர்த்தாய்! தரணியில் நீ பாவை விளக்காய்  என் நெஞ்சில் பரந்து ஒளிர்கிறாயம்மா!

27-8-2005.
குழந்தைப் பருவத்தில் பெற்றவர் வழங்கும் அதிகார நிலை புழங்கும் அடக்கு முறை, குழந்தை மனதில் புழுக்கம் உருவாக்கி, அழுக்குப் படிய வைத்துக் கிருமிகளை உள்ளத்தில் நிறைத்து விடும். குழந்தை பெரியவரானதும் உறைந்த கிருமிநிலை உயிர்த்து தனது செயற்பாட்டை ஆரம்பித்துவிடும். அத்துடன் பெற்றோரின் வாழ்க்கை முறையும் குழந்தையின் மன வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.

பாரில் பெற்றவர் அன்பு தூரிலிருந்து நாம் பெறும் பொக்கிசம். யாரும் ஈடு செய்ய முடியாத பாசம். வேரினைக் காத்தலும், ஊரிலும் சிறந்து வாழ்தலும், அனைவரின் கடனென அனைவரையும் வாழ்த்துகிறேன்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                 

                                                    

 

27. பெற்றோர் மாட்சி.

 

 

(Thank s -photo Vikatan.)

 

பெற்றோர் மாட்சி.

 

21-10-2007.
இதந்தரும் தாலாட்டாக எம்மோடு
சுந்தரத்தமிழை ஒட்டவைத்தனர் பெற்றோர்.
அந்தரத்திலின்று தமிழ் இங்கு.
மந்திரம் மாயமாய்க் காணாமற் போகாது
நிரந்தரமாய் வேர்த்தமிழை வாழ்வியுங்கள்.
நிம்மதியானது, பெற்றவர் போன்றதே தமிழும்.

23-12-2007.
பொத்தி எமை வளர்க்கும் பெற்றவர்கள்
எத்தனை எண்ணிக்கையென்று பார்ப்பதில்லை.
முத்தம் தரும் எத்தனம் அன்பின் மிகுதி.
வித்தகமாய் எம்மை வளர்த்து முன்னேற்றலே
மொத்தமான அவர் நன்நோக்கம்.
பின்னடைவற்ற சிந்தனையுடையதே
அவர்கள் மன முற்றம்.

6-4-2008.
கற்தூண் போன்ற எமது சுயத்தை
வெற்றியுடன் கொண்டு செல்லப்
பற்றிய துணிவு பெற்றவர் தந்தது.
இற்றுவிடாத தன்னம்பிக்கை என்றும்
வற்றாது இருக்கும்; வரை
கொற்றமாய் அவர்கள் துணை
நிற்கிறது எம்முள் உயிருள்ளவரை.

12-1-2008.
இயற்கை தந்த உறவு பெற்றோர்.
செயற்கையில் உறவெனப் பலர் தொற்றுவார்,
மயக்கமும் தந்து மாயமும் செய்வார்.
வியக்கும் உறவான பெற்றவர் பாசமே
தயக்கம் காட்டாது தனியே துடிப்பது.
தவறிடாது அவரைப்போற்றி நன்கு வாழ்வோம்.

8-3-2008.
சுகங்களின்  கைப்படுபொருள்
சுகமான எம் பெற்றவர் ஆதரவு.
தேகம் வளர்த்து, முகம் மலர்த்தி,
அகத்தில் வேரோடி நிறைவு தரும்
சுகத்தை ஒதுக்கித் தள்ளாதீர்!
அணைப்பதால் சுகங்கள் ஆயிரம், ஆயிரம்.

15-3-2008.
கேள்வியில்லாத ஏற்றுக் கொள்ளல்,
கேடு இல்லாது வாழ்வில் பெறுதல்,
கேந்திரமாகிப் பெற்றவர் புத்திமதிகள்
கோடு போட்டு எம்மை வாழவைக்கிறது.
கோணல் மாணலான கோட்டை நாடினால்
பிழையாகிறது வாழ்வின் பதில்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

படம் நன்றி – ஆனந்த விகடன்.

                             

 

26. அறுகம் புல்லாய்ப் பரந்தவள்…

 

அறுகம் புல்லாய்ப் பரந்தவள்…

புல்லாங்குழலின் இசையில் மயங்கினாய்,
எல்லா இசையும் மகிழ்ந்து கேட்பாய்,
வஞ்சக நெஞ்சம் கொஞ்சமே இல்லா
கொஞ்சிடும் மனமுடை அன்புள்ள அம்மா.

லம் விழுதாய் மனதில் ஊன்றியவள்,
அறுகம் புல்லாய் பரந்து படர்ந்தவள்.
உருகும் நெய்யாய் எனையாக்குகிறாள்.
அவளருமை நினைவால் மகிழ்வைத் தருகிறாள்.

ருவறையில் எனைக் காத்தது போலவே
ஒரு பார்வையால் எனை உருவாக்கினாள்.
பிழையென நானும் அதைக் கருதியே
பிணங்கினேன் அவளுடன் கோபமாகினேன்.

ன் அறியாப் பிழையும், அவசரப் பிழையும்
பெரிதாய் எண்ணிப் புலம்பாத அம்மா
நெஞசில் நிறைந்து நினைவில் கலந்தவள்.
பஞ்சாய் எனையேந்திக் கொஞ்சிய அம்மா.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-1-2010.
(ரி.ஆர்.ரி தமிழ் அலையில் என்னால் வாசிக்கப்பட்டது.    இலண்டன் தமிழ் வானொலியில் – 12-6-2004ல் அறிவிப்பாளர் சாயிபா இசையமைத்துப் பாடினார்.

தமிழ் ஆத்தேர்ஸ் இணையத்தளத்திலும் பிரசுரமானது.)

http://www.tamilauthors.com/03/132.html

                             

25. பெற்றோர் மாட்சி.

 

 

செழிக்கும் பெற்றோரன்பு.

வைகாசி 2007.
செம்மண் புலத்தில் பெய்த மழைநீராய்
செந்தளிர்ப்புடன் இணைந்து பெற்றவர் அன்பில்
செழித்திடும் பிள்ளைகள் வழி மாறாது, அன்பில்
குளிப்பாட்ட வேண்டும் பெற்றவர்களை.
அழிவின் பாதையில் செல்லாது ஆக்க
வழியில் பிள்ளைகள் செல்ல வேண்டி வாழ்த்துகிறேன்.

15-7-2007.
காலை மாலையிலும், வேலையிலும் ஓயாது
மாலையாகக் குடும்ப நலத்தைத் தமது
தோளில் போடும் பெற்றோரே! எமக்கு
வேலையென்ன! உங்கள் நினைவை
நூலைப் போல நுகர்ந்து அனுபவிக்கும்
மகள் நான் என்றென்றுமுங்கள் நினைவுடன்.

 

ஆனி 2007.
ஆதியில் உறவு கொண்டு உயிரில்
பாதியாய் எம்மில் கலந்தவர் பெற்றோர்.
மீதியின்றி முழுகௌரவமும் அவர்களுக்கு
வாதிடாது கொடுப்பது நம் கடன்.
மேதினியில் பெற்றவர் நிம்மதிக்காய்
ஆதியும் அந்தமுமான இறையை யாசிப்போம்.

29-9-2007.
நினைவுகளில் உயிர் உடலிலிருந்து பிரியும் வரை
நிசமாக வாழ்வது பெற்றவரின் பேரன்பு.
நிலநடுக்கம் சுனாமியான வாழ்வில் நிகரற்ற
நிவாரணம் தரும் நிம்மதி இன்பநிலவு அது.
நிர்மலமான அன்பில் கடைத்தேறும் உயிர்கள்
நிறைவடையவே நிவேதனமானது பெற்றவரன்பு அலைகள்.

2007.ஐப்பசி.
பொன் எழில் பூத்த என் பெற்றொர் மனமெனும்
அன்பு மாளிகையின் சின்ன ராணியாம்
என் சுய ஆளுமையை அன்பெனும்
மென்னலகால் கோதி, ஆளுமைப் பூவாம்
தன்னம்பிக்கையை மலரச் செய்தவர்கள் பெற்றோர்.

20-10-2007.
பூக்கள் ஏந்தி சக்தியையும், நன்றியுடை
பாக்கள் ஏந்தி பெற்றவரையும்,
நோக்கும் மனம் வேண்டும்.
ஏக்கம் எழாது பெற்றவரைக்
காக்கும் உள்ளங்களினால் பெற்றவர்
கவலைகள் அழிந்து இதயம் அமைதி பெறுவார்.

15-12-2007.
குறிஞ்சிப் பூவல்ல பெற்றவர் அன்பு.
நிறைந்து மலரும் மல்லிகையாக
முல்லையாகத் தினம் விரியுமன்பு.
வாழ்காலம் முழுதும் பெற்றோரன்பால்
இருபகுதியாரும்  உயர்ந்து வாழ்ந்து
உயர் ரோசா மலராக அவரன்பைத்
தகவுடன் போற்றிப் பேணுவோம்.

 வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(படம் நன்றி – ஆனந்த விகடன்.)

 

                      

 

 

24. பெற்றோர் மாட்சி.

  

          

பாச மொழிகள்.

10-9-2006.
தரணியிலே பெற்றோர் அன்பெனும், பாச
ஆரணமாக வந்தவர் பெற்றோர். இவர்கள்
பூரணமான அன்பினை இணைத்து
மரணம் வரை நேசம் குலுங்கும்
தருணம் நிசமான  உறவின்
சமர்ப்பணம் ஆகும்.

4-11-206.
உறங்காத தாய்மை மனம்,
இறங்காத தந்தையின் தேடல்,
அறங்காவலராய் நற்பண்பகளை,
சிறந்திட எமக்கு ஊட்டியவர்கள்,
மறக்காது இவர்களை நினைக்க
சிறப்பாக அனைவருக்கும் வரம் வேண்டுமே!

7-10-2006.
வாழ்வுக் கடலில் முத்துக்குளிக்காது
வந்த முத்துகள் தாயும் தந்தையும்.
அந்தப்புரமான மன மாளிகையில் ஒளிவீசி
இந்த உலகில் திறமைச் சுடருடன்
சிந்துபாடி வாழ்ந்து நன்றிக் கடனாகத்
தந்திடுவோம் நல்லவொரு வாழ்வை.

 

27-5-2007.
துல்லியமாக விடயங்கள் மனதில் பதிவதாக,
மெல்ல விளக்கமாக பிள்ளைகளுக்கு எடுத்து,
வல்லமையாகக் கூறுவது பெற்றவர் கடமை.
சொல்லெடுத்து இதயத்தைக் காயப்படுத்தாது
கல்லாக வில்லெடுத்துச் சொல்லை எறியாது
அன்புச் சொல்லால் பிள்ளைகளை வெல்ல வாழ்த்திடுவோம்.

13-5-2007.
கண்களாய் எம்மை உயிரில் சுமந்தனர்.
புண்கள் பட்டெமை உருவாக்கினர். செய்தவை
எண்களில் இயம்பவியலாத தியாகங்கள்.
பண்கள், பரிசுகள், மாலைகள் போதாது.
எங்கள் நன்றிக் கடனே பெற்றோரிற்குப்
பொங்கும் மகிழ்வு தரும் பூவாக்குவோம்.

26-5-2007.
உதிரம் உணர்வு சேர்ந்த உறவின்
உதிர்ப்பே இவ்வுலக வாழ்வு. பெற்றோரும்
சதிரம் தேய உயிருள்ளவரை பிள்ளைகளுக்காய்
கதிரவன் போல் ஒளி தருவதே பெற்றோர் இலட்சியம்.

வைகாசி-2007.
சித்திரமாய் மனதில் நிற்பவர்.
பத்திரமாய் நாம் நடக்க
புத்தி தந்தவர். நெஞ்சில்
சத்தமிடுமவர் மொழிகள் – அவர்
உத்தம வாழ்வு எமக்கு
நித்தமும் வழிகாட்டும் சிறப்பாய்.

 

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-1-2011.

                                 
 

23. பெற்றோர் மாட்சி.

 

 

       

 பாச வரிகள்.

24-10-2004.
பாசமழையில் நனைந்து,
நேசக் கடலில் மிதந்து,
தாசனாக ஒவ்வொரு சீவனும்
நாசமாகாது உயர, வாசமான
தாய் தந்தையோடு வீசிய
நேசத்திற்கு உலகில் ஈடு ஏது!
24-2-2007.
தயத்திலிருந்து கற்பனை நிறம்
கூட்டி, பதியம் வைத்து வளர்த்தனர்.
தமது பெருநிதியமாகமனசில் கொலுசுகட்டி
எம்மை உருவாக்கியவர்கள்  எம்மினிய பெற்றவர்.
வரமாகப் போற்றி அவர்களைப் பாதுகாப்போம்.
2-7-2006.
காலம் முழுதும் அழியாத ஓவியங்கள்,
பாலத்தில் அன்பின் அடித்தூண்கள்.
பாலம் அமைக்கும் அறிவின் தூண்கள்.
சீலம் போதிக்கும் பெற்றோர் ஆசிரியர்கள்.
ஆலம் விழுதாக விழுதுவிடுமிவர்; நேசம்
தாலம்(பனை) போல உயரும் பாசவாசம்.

23-7-2006.

நாளும் கோளும் பார்த்து
நீளும் காலத்தில் உம்மை
தேளும் பூரானும் கூடத்
தோளில் மேயாது வளர்த்தார்.
ஆளுமவர் தூய அன்புச்
சரணாலயம் என்றும் நமதே.
7-8-2006.
நிலாவெனும் தண்மையான அன்பு
உலாவியது பெற்றவர் பாசத்திலே.
குலாவி மகிழுந்தோம் கலகலப்பாக.
குடும்பமெனும் நிலாமுற்றத்தில் இந்தக்
குடைபோன்ற குளிரன்பைக் கொடுப்போம்
வாரிசுகளுக்கு குளிர்நிலா முற்றமாக.
6-8-2006.
புன்னகையோடு வாழ்வை எதிர்நோக்கினால்
அந்நகை எனக்கும் வருமம்மா.
பொன்னகையால் தராத நிறைவு
இனிய மென்னகையால் வருமம்மா.
உன் புன்னகை ஒளியால் அப்பாவை,
எம்மைப் புளகம் செய்த காலம்
என் பிறந்த வீட்டுத் தேசம்.
15-7-2006.
மாண்புடன் நாம் வாழவென்று
மானசீகமாய் எமை வளர்த்தார்.
மாலுமியாகக் குடும்பத்தில் அப்பா.
மந்திரியாய் அருகில் அம்மா.
மாசில்லாத இவர்கள் பெயர்
மாட்சிமையடைய மாண்புடன் நாமும் வாழலாம்.

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                                           

 

 

22. பெற்றோர் மாட்சி.

 

 

பெற்றோர் மாட்சி.

3-6-2006.
தெய்வமெனும் நிலைக்குச் சமமான
தெய்வத்துவம் நிறைந்தவர்  நல்ல பெற்றோர்.
தொய்யாத அன்புடைய பெற்றவரும் குழந்தைகளும்
தெய்விகமாக அமைவது தெய்வச் செயல்.
தெரிந்து என்றும் உலகில் நல்லவற்றைச் செய்தால்
நல்ல இன்பம் காணலாம் என்று கண்டு கொணடேன்.

4-6-2006.
லயமாம் இல்லத்தில் தெய்வங்களாக
ஆலிங்கனம் செய்த மனித தெய்வங்கள்
ஆலமரமான அருள் நிழற்குடைகள்.
ஆளாகி நாமுயர தினமும் அன்பை
ஆலாபனம் செய்யும் ஆளுகையான பெற்றோர்
நிழலில் இல்லைச் சேதாரம். ஆளாகி
நாமுயர அதுவே ஆதாரம்.

17-6-2006.
நானாகப் பிறந்தேனா! பெற்றது
நீங்கள் தானே என்று பெற்றோரை
வீணாகச் சினப்பார் சிலர்.
கூனாகக் குருடாக இருந்தாலுமெம்மை
ஊனாக, உயிராக எண்ணுவோர் பெற்றோர்.
கோனாக வரவேண்டுமென்று எம்மைக்
கோடி கற்பனையில் வளர்ப்பவரல்லவா நீங்கள்!

18-6-2006.
நினைவில் இருக்கிறது,…என் நினைவு
தொடங்கிய நாள் முதல் அனைத்திலும்,
வினையிலும், மனையிலும், முனைவாய்
என்னுடன் பழகிய பெற்றவர் மலையிலும்,
பனையிலும் உயர்வாய் மனதில் நிறபவர்களென்று
புனைகிறேன் வரிகள் மனதில் நிறுத்தி.

25-6-2006.
நானாக எல்லாம் செய்தேனா!
ஊனாக, உயிராக என் பெற்றவர்
தூணாகத் துணையாக இருந்து
துளிர்த்து வளர உதவினரே!
தேனான காலங்கள் மாறியது.
தேடுகிறேன் அந்நாளை மறுபடி
தேடுகிறேன்.

ரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

                                                                   
 

Previous Older Entries Next Newer Entries