அனுபவம். அங்கம். 12

மேலும்

அனுபவம். அங்கம் 11.

நாம் பினாங் பற்றிச் சிறிது பார்ப்போம்.

மலேசிய தீபகற்பத்தின் தென் பகுதி அடிப்பாகத்திலிருந்து மேற்கு ஓரமாக மலையூடாக ஊடறுத்து வடக்கு நோக்கிப் பயணித்தால் தாய்லாந்து எல்லைக் கடலோரமாக ஒரு பெரிய தீவு புலாவு லங்காவி. இத்தீவின் தென் பகுதயிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தால் தெரிகின்ற அடுத்த பெரிய தீவே பினாங் ஆகும். இடையிடையே பல குட்டிக் குட்டித் தீவுகள் உண்டு. பினாங் மிகப் பெரிய உல்லாசப் பயணத் தீவு, தலைநகர் யோஜ் ரவுண் ஆகும்.

பிரதான மலேசிய தீபகற்பக் கடல் ஓர மாகாணம் செபரங் பிராய் அல்லது வெலெஸ்லியில் பட்டர்வேத் நகரம் பிரதானமானது. இது ஒரு பெரிய துறைமுகமாகும். விமானப் படைத்தளமும் இங்கு உண்டு. பட்டர்வேத்திலிருந்து 3 கி.மீட்டர் நீளமான கடவைப் படகுக் கால்வாய் பினாங்கிற்கு வருகிறது. இன்று ஒரு பாலத்தையே கடல் மேல் உருவாக்கியுள்ளனர். பாலம் 13.5 கி.மீட்டர் நீளம்(8.4மைல்).  தென் கிழக்கு ஆசியாவிலேயே மிக நீண்ட பாலம் இதுவாகும்.

இதையே அத்தியாயம் 10ல் படத்தில் பார்த்தீர்கள். இன்னும் பார்ப்பீர்கள். உத்தியோகபூர்வமாக புரட்டாதி 14 – 1985ல் இந்தப் பாலம் திறக்கப்பட்டது.
கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்காக 1786ல் கப்டன் பிரான்சிஸ் லைற், பினாங் எனும் வெற்றிலைக் கொட்டைத்தீவைப் (பீற்றில் நட் தீவைப்) பாதுகாக்க உள்ளுர் சுல்தானிடமிருந்து பெற்ற போது, அந்த நாள் இராசகுமாரனுடைய பிறந்த நாளாக இருக்கக் கண்டு அதற்கு, பிறின்ஸ் ஒஃப் வேல்ஸ் தீவு என பெயரை மாற்றினார். பின்னர் அங்கு யோஐ;ரவுண் என சிறு நகரத்தை இவர் உருவாக்கினார். தீவின் வடகிழக்கில் யோஐ;ரவுண் உள்ளது. இக் காலகட்டத்தில் பிறின்ஸ் ஒஃப் வேல்ஸ் என அழைக்கப்பட்ட இளவரசர் தான் நான்காவது கிங் யோஜ் ஆவார்.
1805ல் பம்பாய், மதராஸ் நகரங்களோடு சேர்ந்த அதிகாரத்தின் கீழ் பினாங் ஒன்றிணைக்கப்பட்டு இருந்தது. மிகவும் சிரமமான ஒரு நிர்வாகத் திறமையின் கீழ் இது இருந்துள்ளது. 1986வது ஆண்டில் 1.1மில்லியன் மக்கள் வாழ்ந்துள்ளனர். யோஜ்   ரவுண் ஒரு சீன நகரமாக, சீனச் சுவைகள் நிறைந்ததாக கொங்கொங் சிங்கப்பூரிலும் பார்க்கச் சீனமாக இருந்தது. பழைய கடைகளும், சைக்கிள் ரிக்க்ஷா   வாகனங்களும் இன்றும் இங்குள்ளது. 1031 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது பினாங் தீவு. அழகான வெள்ளை மணற் கடற்கரைகள் கொண்டது.
தென் கிழக்கு  ஆசியாவில் 1816ல் முதன் முதலில் ஆங்கிலப் பாடசாலை யோஜ்  ரவுணில் உருவானதாம்.
தாய்லாந்து, பினாங் முதலிய இடங்களுக்குச் செல்லும் ரயில் சேவை, பேருந்து சேவைகள் யாவும் பட்டர் வேத் நகரில் இருந்தே நடைபெறுகிறதாம். முதன் முதலில் ஆங்கிலப்பாடசாலை யோஜ்  ரவுணில் ஆரம்பமானது எனும் போது எனது குடும்பத்துக் கதை ஒன்றும் இங்கு நினைவு வருகிறது….கூறுகிறேன்…..கேளுங்கள்.
மலேசியாவின் தென் பகுதி நுழைவாயிலின் யோகூர் மானிலத்திலிருந்து மேற்கு நோக்கிப் பயணித்தால் மலாக்கா பகுதியும், கிழக்கு நோக்கிப் பயணித்தால் பகாங் மாநிலமும் வருகிறது. முருகேசு சுவாமிநாதன் எனது அப்பப்பா இவரைச் செல்லமாகக் கண்ணாடியப்பா என்றே நாம் அழைப்போம்.
……….மிகுதியை அங்கம் 12ல் பார்ப்போம்……

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-3-2003
(படத்தில் மலேசியா, பினாங் கடவைப் படகு கால்வாய், பாலம் கீறிய படம் , இரவு அழகுப் பாலம் – மலாக்கா, பகாங், யோகூர் மாநிலப் படங்களும் காண்கிறீர்கள்.)

அனுபவம். அங்கம் 10.

கோட்டா ரிங்கி நீர்வீழ்ச்சியில் கோடை காலமானால்  சனக்கூட்டம் யே!…யே! என்று இருந்திருக்கும். வானக் கூரையின் கீழ் மரத்தினாலான மேசைகள், வாங்குகள், ஒற்றைக் கால் இருக்கை (ஸரூல்) என உருவாக்கி வைத்திருந்தனர். இவைகள் சனக் கூட்டம் நிறைய வரும் என்பதற்குச் சாட்சியாக இருந்தது. ஒரு மணி நேரம் நடந்து சுற்றிப் பார்த்தோம். கழிவறை வசதிகள் மிக துப்பரவீனமாக இருந்தது குறிப்பிடக் கூடியது. இந்தச் சுற்றுலா திருப்தியாக இருக்க வில்லை. ஆயினும் யோகூரில் இது ஒரு அனுபவம் என்று எண்ணினோம். திரும்பிப் போகும் போது பேருந்தில் செல்வது என்று பேருந்து எடுத்தோம். நீர்வீழ்ச்சிக்கு அருகாமைக்கே பேருந்து வருகிறது. மிக மிக பழைய பேருந்து, விரல் படும் இடமெல்லாம் கறுப்புப் புகை போல அழுக்கு. அடிக்கடி பயணித்தால் உடல் நோ வந்துவிடும். நாம் ஒருவரை ஒருவர் பரிதாபமாகப் பார்த்த படி, சிரிப்பு ஒரு புறம், பயணித்தோம். பேருந்துக் கட்டணம் ஒருவருக்கு ஆறு றிங்ஙிட் தான். இது போல நாலு பங்கு பணம் கொடுத்து வாடகை வண்டியில் இங்கு நாம் வந்திருந்தோம்.

யோகூரில் இருந்து சரித்திரப் பிரசித்தி பெற்ற மலாக்காவிற்குச் செல்ல இருந்தோம். அங்கிருந்து பினாங் – யோஜ்ரவுண் செல்வது திட்டம்.   22ம் திகதி எமக்கு கோலாலம்பூரில் இலங்கை செல்ல விமானம் இருந்தது. நாட்கள் போதாது என்பதால் மலாக்கா பயணத்தைத் தள்ளி விட்டு அன்று 19ம் திகதி இரவு தூங்கும் நேரத்தைப் பயணத்துடன் தூக்கமாக   ஆக்கி 20ம் திகதி காலை பினாங்கில் இறங்குவது என விரும்பினோம்.
வாடி வீட்டிற்கு வந்து சாமான் அறையில் வைத்த எமது பெட்டிகளைச்   சேகரித்துக் கொண்டு வாடகை வாகனத்தில் பெரிய பேருந்து நிலையத்தை அடைந்தோம்.

 சகல பயண விவரத்தையும் கேட்டறிந்து மாலை 6 மணிக்கு  நாம் புறப்பட்டாலும் இரவு 12 மணிக்கே பினாங் செல்ல பேருந்து இருந்தது. பல வகைப் பேருந்து முகவர்கள் தமக்குரிய ஆட்களை அமர்த்தி அவர்கள் கூவிக் கூவி அழைத்து பேருந்தை நிறைத்திட ஆட்களைச் சேகரிக்கிறார்கள். பேருந்து நிலையத்திலேயே, நாம் அமர்ந்த இடத்திலேயே பயணச் சீட்டை விநியோகித்துப், பணத்தைப் பெற்று ஏமாற்றும் பேர்வழிகளும் உள்ளனர். பலரைத் தட்டிக் கழித்தோம். ஒருவர் மிகவும் வற்புறுத்தினார்…’ இதோ வாகனம் தயார் போகலாம்..’ என்று.

எமது பொதிகளைத் தூக்கி அலைவதிலும் பார்க்க, ‘நான் இவைகளைப் பார்த்தபடி இருக்கிறேன் நீங்கள் போய் வாகனம் இருக்கிறதா, இவர் கூப்பிடுவது சரியா என்று உறுதி பண்ணி வாங்கோ ‘ என்று கணவரை அந்த நபருடன் அனுப்பினால், அது வெறும் சுத்து மாத்து, பொய் என்பதைக் கணவர் கண்டு வந்தார். நமக்குள் பேசுவதற்கு டெனிஸ் மொழி பல சந்தர்ப்பங்களில் மிக வசதியாக இருந்தது. ஏமாற்றுப் பேர் வழிகளிடம் தப்பி 12 மணி நள்ளிரவுப் பேருந்தை பினாங் செல்ல எடுத்தோம். எமது தோற்றம் பொதிகளைப் பார்த்து உசார் அடைந்து ஏமாற்றுப் பேர்வழிகள் எம்மை நெருங்குவதை உணர்ந்தோம். இந்த ஏமாற்றுப் பேர் வழிகளுக்காக நாம் நாமாக இன்றி வேறு வேடத்திலா செல்ல முடியும்! ஓவ்வோரு தடவையும் பரிபூரணமாக விழித்தபடியே நடந்து அவர்களிடமிருந்த தப்பினோம்.

கிட்டத் தட்ட  6மணி நேரம் சொகுசு பேருந்தில் பயணித்தோம். என் கணவர் பயணத்தின் போது நன்கு நித்திரை கொண்டார். நான் தூக்கமும் விழிப்புமாக, வெளியே நல்ல மழை அடித்து ஊற்றியது. யன்னல் திரையை அடிக்கடி விலக்கி விலக்கிப் பார்த்துக் கொண்டே பயணித்தேன். மலைப் பிரதேசம், சுரங்கப் பாதையூடாகவும், இலங்கை கண்டி நுவரெலியா பாதையில் செல்வது மாதிரி தெரிந்தது. தூக்கத்திற்கு வசதியாக பேருந்தினுள் இருட்டாக்கி யிருந்தது.
 கார்த்திகை 20ம் திகதி அதிகாலை 6.00மணிக்கு பினாங் சென்றடைந்தோம். வாயினுள் நுழைய முடியாத  நகரப் பெயர்களாக இருந்தது நாம் வந்த வழி. ஏற்கெனவே புத்தகத்தில் பார்த்துத் தெரிவு செய்த  கத்தி ஹோட்டலுக்கு வாடகைக் கார் ஒன்று அமர்த்திச் சென்றோம். குளித்துவிட்டு வெளியே புறப்பட்டோம்.
இதுவரை நாங்கள் தங்கிய வாடி வீடுகள் நவீன மயமான அடுக்கு மாடிகளாக இருந்தது. ஆனால் இப்போது தங்கிய இடம் வித்தியாசமான ஒரு அரச மாளிகை போல இருந்தது. இது வேறு ஒரு வித மகிழ்வாக இருந்தது. மின் விசிறி, இணைப்புக் குளியலறை  இருந்தது. ஆனால் காலை உணவு இல்லை யென்பது ஏமாற்றமாக இருந்தது. குளித்து ஆடை மாற்றிப் புத்துணர்வுடன், பேருந்தில் போனால் இடம் பார்க்க முடியாது என்று நடக்கத் தொங்;கினோம். மிகப் பழைய இடங்கள், தெருக்கள், முன்னேற்றம் இல்லாத இடமாகத் தெரிந்தது நாம் தங்கிடத் தெரிவு செய்த இடம்.
நான் மச்சம் மாமிசம் உண்ணாதவளானதால் தமிழ் உணவகம் தேடுவது எமக்கு ஒரு முக்கிய தேவையாக இருந்தது. நாம் பினாங் பற்றிச் சிறிது பார்த்த விட்டு மேலே தொடருவோம் ——-அடுத்த அங்கம் 11ல் பார்ப்போம்.——

(கத்தி வாடிவீட்டு படங்கள் 3ம்,   மலேசியாவிலிருந்து பினாங் செல்லும் பாலத்தின் படத்தை சில கோணங்களிலும்  இங்கு பார்க்கிறீர்கள்.)

அனுபவம். அங்கம். 9

எறும்புகள் சாரி சாரியாக அணிவகுத்தது போன்ற ஊர்வலக் காட்சியை முன்னரும் சென்ரொசா போய் வந்த அன்று மாலை நேரமும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கேள்வி எழுப்பியதாக எழுதினேன் அல்லவா! இப்போது ஆச்சரியத்தை அடக்க முடியாது  வாடகைக் கார் சாரதியிடம் கேட்டேவிட்டோம், ‘இது என்ன? ஏன் இத்தனை தொகை மோட்டார் சைக்கிள்கள்! ‘ என்று. ஆம் நாள்தோறும் 15 ஆயிரம் பேர்கள் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குப் போகிறார்களாம். காலையில் போய் மாலை வீடு திரும்பகிறார்களாம். இவர்களையே நாம் இரண்டு நாளும் கண்டு ஆச்சரியப்பட்டோம். இன்னொரு முக்கிய விடயம், ஒரு சிங்கப்பூர் டொலர் மலேசியாவில் இரண்டு றிங்கெட் பெறுமதியானது. இதனாலும் பலர் மலேசியாவில் வசித்துக் கொண்டு சிங்கப்பூரில் வேலை செய்கிறார்களாம்.
வார இறுதியிலும், அரச வங்கி விடுமுறைகட்கும் பல சிங்கப்புரார்கள் மலேசியாவிற்குப்  பொருட்கள் வாங்கவென்று வருகிறார்கள், முக்கியமாக பெண் இன்பத்திற்காகவும் ஆண்கள் வருகிறார்கள். தெரு நாடகங்களும் (ஸ்றீற் தியேட்டர்) மஜிக்கல் எண்ணெயும் (‘லவ் ஒயிலும்’ ) விற்கப்படுகின்றனவாம்.  ஜேபி பிரசித்தமான எல்லைப் பட்டினமாக உள்ளது.
‘கொம்பக்ட’ வாடிவீட்டின் 14வது மாடியில் இருந்து எமது யன்னலூடாக பார்க்கும் போது சிங்கப்பூரும், நாம் வந்த பாதையும் தெளிவாகத் தெரிந்தது, அற்புதமான காட்சியாக இருந்தது.   வந்த களைப்புத் தீர குளித்து விட்டு வெளியே கிளம்பினோம்.  ஜேபியில் நடக்கத் தொடங்கினோம். இரண்டு அடிக்கு ஒரு பணம் மாற்றும் இடம் (மணி எக்ஸ்சேஜ்) இருந்தது. ஒரு வேளை பெரிய பெரிய வாடி வீடுகள் அருகருகில் இருந்ததுவும்    ஒரு    காரணமாகவும்   இருந்திருக்கலாம், இந்த நெருக்கமான பணம் மாற்றும் வசதிக்கு.    நிமிடத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நிற்கிறது, 3 நிமிடத்தில் பணத்தை மாற்றிக்கொண்டு செல்கிறார்கள். நாமும் சிங்கப்பூர் டொலர்களை மாற்றிக் கொண்டோம் நாங்கள் நடந்த 100 அடி தூரத்தினுள் 3 பேர் கண்கள் சிவந்த போதை முகத்துடன், கையோடு கையாக போதை வஸ்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள். எனக்கு இது புதுக் காட்சியும், அவர்களது பார்வை திகிலையும் தந்தது. ஓரக் கண்களால் இவைகளைக் கவனித்து, நாம் டெனிஸ் மொழியில் எமக்குள் கதைத்தபடி நடந்தோம். ஓடி ஓடி உழைப்பது, எக்ஸ்சேஜ்ல் பணம் மாற்றி, உடல் அலுப்புத் தீரவென்று இதை அனுபவிப்பது சிலருக்கு வாடிக்கையாகவும் இருப்பது தெரிகிறது. உன்னிப்பாகக் கவனித்தபடி போகும் போது, தமிழ்க் கோவில் ஒன்று தெரிந்தது.

அது ஒரு பிள்ளையார் கோவில், அங்கு சென்று வணங்கி விட்டு ஒரு தமிழ் உணவகம் சென்று உணவருந்தினோம்.  ஓவ்வொரு தடவையும் மாற்றி மாற்றி உணவுகளைத் தெரிவு செய்தோம். பின்பு கடை வீதிகளைச் சுற்றினோம். சிங்கப்பூருடன் ஒப்பிடும் போது ஆடைகள் மிக மலிவாக இருந்தது. நடந்து சுற்றும் போது இனி போதும் என்று கால்கள் கெஞ்ச அறைக்கு வந்து துயில் கொண்டோம்.

அடுத்த நாள் 19ம் திகதி கோட்டா ரிங்கி எனும் நீர் வீழ்ச்சி பார்க்கப் புறப்பட்டோம். ஏற்கெனவே புத்தகம் வாசித்து இதைத் திட்டமிட்டிருந்தோம். 18ம் திகதி மாலை 18.30க்கு அறை பதிவு செய்திருந்தோம். இரவு இங்கு தங்கப் போவதில்லை யென்பதால் இரண்டாவது நாள் கணக்கிற்கு பணம் செலுத்தாமல் அறையை வெறுமை செய்து, எமது பெட்டிகளை வாடி வீட்டுப் பொருட்கள் வைக்கும் அறையில் வைத்து விட்டு, வாடகை வாகனம் ஒன்றில். கோட்டாரிங்கி நீர்வீழ்ச்சி காணப் புறப்பட்டோம். பேருந்து வசதி இருந்தும், பேருந்து நிலையம் தேடுவதில் நேரம் வீணாகிவிடும் என்பதால் 57கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லும்பொங் எனும் இடத்திற்கு வாடகை வண்டியில் சென்றோம். மீட்டர் போடாது பேரம் பேசி 50 றிங்கெட் பயணக் கட்டணம் என ஒப்புக் கொண்டு புறப்பட்டோம். வழி நெடுக பச்சைப் பசேலென பாம் மரத் தோப்பாகவே தென்பட்டன. இவைகள் அசப்பில் தென்னை மரச் சோலைகளாகவே தெரிந்தன. (இதைப் படத்தில் காணலாம்) வழியில் பெரிய மாரியம்மன் கோவில் ஒன்று தெரிந்தது. இப்படி இருப்பதாக வாசித்திருந்தோம்.  கோட்டாரிங்கி நகருக்குச் சென்று, அங்கிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.

அங்கு ஒரு பாடசாலைக் குழு, ஆசிரியர்களுடன் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் உல்லாசமாகக் குளித்துக் கூடி மகிழ்ந்திருந்தனர். ‘இப்படித் தானே நானும் எனது வேலையிடத்துப் பிள்ளைகளோடு சுற்றுலா போவோம’  என்று கணவரோடு நினைவு கூர்ந்தேன். இவர்கள் தவிர சில இளவட்டங்கள் கும்மாளமாக நீந்தி மகிழ்ந்தனர். துப்பரவு மிகக் குறைவு. இலங்கையில் ‘தியலுமா’   நீர்வீழ்ச்சிச் சாரலை அருகில் ரசித்தது, ஒரு தென்னை மரமளவு உயரத்திலிருந்து நீர் விழுந்த அழகை அட்வான்ஸ் லெவல் படித்த போது ரசித்தது நினைவு வந்தது. இது ஒரு சிறிய நீர்வீழ்ச்சி. ஒரு சாதாரண வீட்டுக் கூரையளவு உயரத்திலிருந்து விழுகிறது. ‘இதுவா நீர் வீழ்ச்சி!’ என்று வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.   

நீர் மிகக் குளிராக இருந்தது. என் கணவர் கால் நனைக்கவே மறுத்தார். இவ்வளவு தூரம் வந்து சும்மா போவதா என்று நான் நீருள் இறங்கி காலை நனைத்து ரசித்தேன். அவ்வளவு குளிராக இருக்கவில்லை. இந்த நீர் இங்கிருந்து ஓடி கோட்டா ரிங்கி ஆறாகி மலேசிய தென் கிழக்கில் தென் சீனக் கடலில் விழுகிறது. மேற்கே மலாக்கா ஐலசந்தி உள்ளது. நாம் போனது மாரி காலம் என்பதால் சனக் கூட்டம் இல்லை.
(படத்தில் நாம் தங்கிய வாடிவீடு, ரிசப்சன் முன்னறை, நிர் வீழ்ச்சிப் படங்களைக் காண்கிறீர்கள்.)
—————–இனி அடுத்த அங்கம் 10ல் மிகுதியைப் பார்ப்போம்.———————-

அனுபவம். அங்கம். 8.

 

பரமேசுவரன் மலேசியாவைக் கண்டு பிடித்தான் என்றபடி 1390ம் ஆண்டுக்கு முற்பகுதியில்  பலெம்பங் எனும் இடத்து இந்து இராசகுமாரன் மஐபகிட் இராச்சியத்திற்கு விசுவாசமான பரமேஸ்வரா ரிமாசெக் (சிங்கநகருக்கு)க்கு ஓடி வந்தான். இங்கு இவன் நன்கு வரவேற்கப்பட்டான். ஆயினும் பரமேஸ்வரனும் அவன் சகாக்களும் தமக்கு அடைக்கலம் கொடுத்தவர்களையே கொலை செய்துவிட்டு, சிங்கப்பூரைக் கடற்கொள்ளை ஸ்தலமாக வைத்திருந்தான். 1398ல் தாய்லாந்து சிங்கைநகரைத் தாக்கியபோது பரமேஸ்வரா மலாக்காவிற்கு ஓடினான்.

மீன் பிடிக்குச் சிறந்த இடமாக இருந்த அந்த நகரை மிக வேகமாக ஆசியாவிலேயே சிறந்த வர்த்தகத் துறைமுகமாக வளரச் செய்தான். அதுவே இன்றைய மலாக்காவாகும். மலேசியா, சிங்கப்பூர், புறூனெய் ஆகியவை ஆசியாவின் பணக்கார நாடுகளின் வரிசையில் உள்ளன.

மூன்று புறமும் நீர் சூழ்ந்த மலேசியா ஒரு தீபகற்பமாகும்.

மாசி மாசி மாதம் 1948ல் சமஷ்டி மலேயா உருவானது. அப்போது சிங்கப்பூரும் மலேசியாவுடன் சேர்ந்து இருந்தது. ‘மலே’ மக்களை சிங்கப்பூரில் வைத்திருக்க மலேசியா விரும்பியது.    1965ல் மலேசியா உருவாக்கப்பட்ட போது சிங்கப்பூரைத் தனியாகத் தள்ளிவிட்டனர்.

மலேசியா றப்பர், தகரம், மரக்குத்திகள், மரங்களால் (லொகிங்) செல்வம் பெறுகிறது. இன்று பாம் எண்ணெயில் பெருவாரியாக சம்பாதிக்கின்றனர். பாம் மரங்களில் மட்டும் 300 விதமான மரங்கள் இன்று அங்கு இருப்பதாக  ஒரு வழிகாட்டிச் சாரதி கூறினார்.

மலேசிய நீண்ட தீவுடன் கிழக்கில் உள்ள இந்தோனேசியா அல்லது போர்ணியோ எனக் கூறும் தீவில் சறவாக், சபா எனும் பகுதிகளும் சேர்த்து கிழக்கு மலேசியா என அழைக்கப்படுகிறது. இவைகளின் அரசியல் அதிகாரம் மலேசியாவிற்கே உண்டு. ஆனால் மலேசியாவின் பொருளாதார நாடியில் சீனாவின் விரல்களும் படுகின்றன.
இந்தியப் பிரசைகள் 10 வீதமாகவும், வியாபாரத்திலும், சமூகத்தில் படித்தவர்களாகவும், தொழிலாளர்களாகவும் உள்ளனர். மலேசிய மக்கள் முஸ்லிம் மதத்தவர்கள்.

கோலாலம்பூர் தலைநகரில் 2 மில்லியன் மக்கள் உள்ளனர். முழு மலேசியாவிலும் 35 விகிதம் சீன மக்களும், 30 விகிதம் சறவாக்கிலும், 16 விகிதம் சபாவிலும் உள்ளனர். 55 விகிதம் மலே இன மக்களும் உள்ளனர்.

‘ஒறேஞ் அஸ்லி’ என்று அழைக்கப்படும் பழங்குடி மக்கள் 80 ஆயிரமளவில் அங்கு வாழ்கின்றனராம். பலர் தொழில் நுட்பங்கள் தெரிந்து நாகரீகமாகியுள்ளனர். பலர் காட்டில் வாழ்கின்றனர். நாட்டு மொழி மலே என இருந்தும் வியாபார மொழி சீன மொழியாக உள்ளது. பாடசாலையில் தமிழரும் ‘மன்றின்’ எனும் சீன மொழியை, மலே மொழியுடன் பயில்கின்றனராம்.

யோகூர் பக்றூ   (ஜேபி) மலேசியாவின் 2வது பெரிய நகரம். 7இலட்சம் மக்கள் இங்கு வாழ்கின்றனர். முக்கிய பொருளாதார நகரமான இது பாம் எண்ணெய், றப்பர், பைன் அப்பிளினால் செல்வமாக உள்ளது.

1948ல் சமஷ்டி மலேயா உருவானது என்று எழுதியிருந்தேன். கனடியப் பக்கத்தால் 1957ம் ஆண்டு ஆவணி மாதம்  15ம் திகதி பிரித்தானியாவிலிருந்து மலேசியாவிற்குப் பூரண சுதந்திரம் கிடைத்தது என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக் குறிப்புகளும் சரியானதே. இடைப்பட்ட 9 வருடங்களில் என்ன நடந்தது என்பதைச் சிறிது சுருக்கமாகத் தந்து, நாம் யோகூர் பக்றூவிற்குச் செல்வோம்.

1948ல் சமஷ்டி மலேசியா உருவாக , அதன் இறைமையை சுல்தான்மார் காப்பாற்றினார்கள். மலேயர்கள், அந்நாட்டவரல்லாத இந்தியர்களுக்கும், சீனாக்காரர்களுக்கும்  விசேட சலுகைகள் கொடுக்க மறுத்தனர். அதே நேரம் எம்சிபி பார்ட்டி  (த மெயின்லி சைனீஸ் மலேயன் கம்யூனிஸ்ற் பார்ட்டி) 2வது உலகப் போரில் யப்பானுக்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டாலும், பிரிட்டிஸ் காலணித்துவத்திற்கு எதிராக கொரில்லா யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். 1950ல் பிரிட்டிஷ் அவசரகாலச் சட்டத்தை ஏற்படுத்தியது. 1960ல் கம்யூனிச அபாயத்தை நீக்கினார்கள். ஆனாலும் 1989ம் ஆண்டு வரை ஆங்காங்கு வன்முறைகள் நடந்தன. ஆனால் ஒரு போதும் கம்யூனிஸ்டுகளுக்கு முழு ஆதரவும் கிடைக்கவில்லை. சீனக் குழுவினாலேயே அதிகமாக கம்யூனிஸ்ட் கட்சி நடத்தப்பட்டது. பிரித்தானியாவிற்கு எதிராகச் சுதந்திரம் கேட்ட மலாய்காரர்கள் மறுபடியும் சீனர்கள் தம்மை  ஆள்வதை விரும்பவில்லை.  கொரில்லாக் குழுக்கள் 1989ல் பொது மன்னிப்பக் கிடைக்கும் வரை தாய் எல்லையை அடுத்துள்ள காட்டிலேயே வாழ்ந்து வந்தார்கள்.

1955ம் ஆண்டு பிரித்தானியர்கள் மலேசியாவுக்கு 2 வருடத்தில் சுதந்திரம் கொடுக்க ஒப்புக் கொண்டனர். 1955ம் ஆண்டு நடந்த தேர்தலில் மலேசிய இந்திய கொங்கிரசும், மலேசியா சைனீஸ் அசோசியேசனும், யுனைட்டட் மலேசியன் நஷனல் ஓகனைசேசன் ஆகிய 3 கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலில் மாபெரும் வெற்றியை ஈட்டின. 1957ம் ஆண்டு ஆவணி 15ம் திகதி பிரித்தானியாவிடமிருந்து மலேசியாவிற்குப் பூரண சுதந்திரம் கிடைத்தது. சிறுபான்மையினருக்கும் பிரசா  உரிமை கிடைத்தது.

 
18ம் திகதி தலைநகர் யேபிக்கு வரும் வழியில்,  கார்கள் வரும் பாதையில் இல்லாது, வேறு தனிப்பட்ட பாதையாக ஓராயிரம் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்து கொண்டிருந்தன. ஊர்வலமாக வந்த மோட்டார் சைக்கிள்கள் ‘கெல்மெட்டுடன்’ இருப்பதைப் பார்க்க ஊரில் கறுப்பு கொள்ளி எறும்புகள், அல்லது சர்க்கரை எறும்புகள் சாரி சாரியாக அணிவகுத்துக் கொள்வது போல இருந்தது.
—-மிகுதியை அடுத்த அங்கம் 9ல் பார்ப்போம்———–
( புகைப் படத்தில் யோகூர் நகர படமும், சறவாக்,  சபா,  மலாக்காவைக் காட்டும் படங்களும் உள்ளது.)

 

                                                                                                                                                       Johor    Bahru.

  

 

 

 

அனுபவம். அங்கம் 7.

 

மாலை 7.30க்கு சங்கீத நீரூற்றுக் காட்சி. (மியூசிக்கல் ஃபவுண்டன்)க்குச் சென்றோம். ஆக 25 நிமிடக் காட்சி தான் இது, எமக்கு இரண்டரை மணி நேர உணர்வைத் தந்தது. சிங்கப்பூரில் என்னைக் கவர்ந்த இரண்டாவது விடயம் இந்தக் காட்சியாகும். அனைவரும் அனுபவிக்க வேண்டிய உன்னதக் காட்சியாகும்.

நீரூற்றுடன் ஒளிவிளையாட்டு. ஒரு திரைக்காட்சி போல, திரையின்றிச் செய்யும் காட்சி. லேசர் கதிர்கள், ஒளி சாலம் வர்ணங்களுடன். பனிபோல (மிஸ்ற்) வைத்துக் காட்டும் காட்சி.  இதில் கிக்கி எனும் கேலிச் சித்திரக் குரங்கு உருவம் முக்கிய இடம் பிடிக்கிறது. எத்தனை தடவையும் அலுக்காது பார்க்கலாம். உணர்வுகளின் வியப்பும், ஆச்சரியத் தாக்குதலிலும் எம்மை மறந்து நாம், வியப்பில் ‘ ஆ!….ஓ!…ஊ! …’ என வாய் விட்டுச் சத்தமிட்டு உணர்வுகளை வடிகாலாக்கினோம். அவ்வளவு அற்புதமாக இருந்தது.

மறுபடியும் 8.30க்கு அடுத்த காட்சியையும் நின்று பார்க்கலாம். ஆனால் இறுதிக் கேபில் கார் இரவு 9.00மணிக்கு உண்டு. இது  நிறுத்தப்படும் போது சிங்கப்பூர் நகருக்கு செல்ல கடவைப் படகு (ஃபெறி) தான் பாவிக்க வேண்டும். நாம் அங்கு எல்லாமும் பார்த்திடவில்லை. உல்லாச வாடி வீடுகளில் தங்கி,   மறு நாளும் செல்லலாம். நல்ல உணவகங்களும் தங்குமிட வசதியும் அருமையாக இருந்தது.  நள்ளிரவு கனடா செல்லும் உறவினருக்கு விமானம் இருந்ததால்,   இறுதிக் கேபில் காரில் சிங்கப்பூர் திரும்பினோம்.

‘இரவில் சிங்கப்பூர்’ காட்சியை மின்சார ஒளி விளக்குக் கட்டிடங்களைக் காட்சிகளாக திரும்பி வரும் போது பார்த்து ரசித்து வந்தோம்.     இது இன்னொரு அற்புதக் கண்ணிறைந்த காட்சியாக இருந்தது.

ஆக, இந்த சென்ரோசா பயணத்தில், சினிமாவில் பார்த்த சிங்காரச் சிங்கப்பூரை கொஞ்சமாகவாவது  பார்த்தோம் என்ற திருப்தி வந்தது. இதிலிருந்து உங்களுக்குப் புரியுமே! முழுச் சிங்கப்பூரும் நாம் பார்க்கவில்லையென்று. அங்கு போய் வந்த பின்பு, இங்கு தொலைக் காட்சியில், ஒலி ஒளிப் பாடல் காட்சிகளில் சென்ரோசாத் தீவுக் காட்சிகள், சங்கீத நீரூற்று, ஓச்சாட் தெரு எனப் பார்க்கும் போது, அதில் நடந்தோம், இதில் இருந்தோம் என இடங்களை இனம் புரிய முடிந்தது.

நாம் வரும் வழியில் தெருவில் ஏராளமான மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக ஓடியபடி வந்தன. ஒரு துவிச்சக்கர வண்டியைக் கூடக் காண முடியவில்லை. கார்களும் மோட்டார் வண்டிகளும் தான். இது ஏன்? ஏதற்காக இந்தக் காட்சி? எங்காவது ஊர்வலமோ? எனக் கேள்வி கேட்டுக் குளம்பினோம். அப்படியே இரவு உணவிற்காகச் செரங்கூன் பக்கம் திரும்பி உணவகம் பனானா லீஃவ்ஐத் தேடினோம்.

அதே ஞாயிறு நாள். உறவு தேடும் நாள். சனக் குவியல் தெருவெல்லாம் நிரம்பி வழிந்தது. இரவு 11.00 மணியப்படி சலேட்டா கில் வீடு வந்து சேர்ந்தோம். விமானத்துக்குச் செல்பவர் தயாராக, கதைப்பவர்கள் கதைக்க, நாம் நித்திரை கொள்ளப் போனோம்.

மறு நாள் 18ம் திகதி உறவினர்கள் யு.கே, இலங்கை என்று புறப்பட நானும் கணவரும் ஒரு ரக்சியில் மலேசிய தென் எல்லை நகரான யோகூர் புறப்பட்டோம். நாம் தங்கிய வீட்டிலிருந்து 18 நிமிட கார் பயணம் தான்    மலேசியாவிற்கு.  வாகனம் ஓடிய படியே ரக்சி சாரதி தந்த பத்திரங்களை நிரப்பினோம். மலேசிய நாட்டினுள் செல்ல எல்லைக் காவற் பகுதியில் பாஸ்போட்டுகளைக் காட்டி அனுமதியைப் பெற்றுக் கொண்டோம். அதாவது ரக்சிச் சாரதி வாகனத்தில் இருந்தபடியே பெற்றுத் தந்தார்.

சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், பிரான்ஸ் போல, ஒரு நகர் விட்டு மறுநகர் போகப் பணம் செலுத்த வேண்டும். வாகனச் சாரதி இவைகளைச் செய்வார். யோகூர் எனும் பகுதியின் தலைநகர் யோகூர்பக்ரூ ஆகும்.  இதை யேபி (பி ஆங்கில எழுத்தின் 2வது உச்சரிப்பு) எனவும் கூறுவர். யோகூர் எனும் மலேசியத் தென்பகுதி வாயிலில் இருந்து சிங்கப்பூர் 1046 மீட்டர் நீளமான சதுப்பு நிலத்தில் உயர்த்திய பாதையுடன் இணைந்துள்ளது. முதலில் நாம் மலேசியா பற்றிச் சிறிது பார்ப்போம்.

கிறிஸ்துவிற்கு முன் 100ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ‘ஸ்வர்ணதுவீப’ என – தங்கத் தீவு, தங்க நாடு என மலேசியா அறியப்படுள்ளதாம். மலேசிய அரசர்கள் ‘ராஜா’ என அழைக்கப்பட்டனர் எனவும், மலே திருமணங்கள் இந்திய சாயலில் இருப்பதும், இந்துக் கோவில்கள் பல இருப்பதுவும் இந்தியர்களின் செல்வாக்கு இங்கு அதிகம் இருந்தது என்று புலனாகிறது.
யாரைப் பார்த்தாலும் மலேசியாவைக் கண்டு பிடித்தவன் பரமேஸ்வரா எனக் கூறியபடி இருந்தனர்.     –

——– மிகுதியை அடுத்த அங்கம் 8ல் பார்ப்போம்.———–

( படங்களாக இதில் நீங்கள் பார்ப்பது சங்கீத நீரூற்றுப் படங்கள் இரண்டையும், சிங்கப்பூரிலிருந்து யோகூர் செல்லும் பள்ளச் சதுப்பு நிலத்தின் குறுக்கே உயர்த்திய மேடான பாதையையும்(தெருவையும்)

 

அனுபவம். அங்கம். 6சென்ரோசா தீவுக்குப் போகும் போது நல்வரவுப் பலகையையுடைய படத்தை இந்த அங்கத்தில் இணைத்துள்ளேன். நாமும் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

டொல்பின் காட்சி முடிய நிலத்துக்கு அடியில் உள்ள நீருலகம்  (அன்டர் வோட்டர் வேல்ட்) அல்லது நீரடிச் சுரங்கத்துக்குச் சென்றோம். இது ஒரு செயற்கைச் சுரங்கம். பாதை ஊடறுத்துச் செல்லும் பெரிய மீன் தொட்டி, அல்லது பார்வைக்குக் கடல் போல உள்ளது. வலது, இடது, தலைக்கு மேலே எம்மோடு ஒட்டிக் கொண்டு மீன்கள் உரசிச் செல்வது போல 2500க்கும் மேலான பல வகை மீன்கள்,   சுறாக்கள், விலாங்குகள், கடற் குதிரைகள், கல் மீன்கள் (ஸ்ரோன் ஃபிஷ்)  சிங்க மீன்கள், பவளப் பாறைகள் என்று பலவகைகள். நாமே கடலுக்கடியில் போய்ப் பார்ப்பது போல ஒரு பிரமை தரும்.   ஒரு உணர்வு தரும் இந்த அனுபவம்.   ஒன்றரை அடிக்கும் மேலான, சிறு மனிதக் குழந்தையிலும் பெரிய மீன்கள் பல வண்ணங்களில் காண முடிந்தது.

சுரங்கப் பாதை போன்ற உருளும் நடை பாதை.    இந்த உருளும் நடை பாதையில் செல்ல பய உணர்வு கொண்டவர்கள் சாதாரண நடை பாதையில் நடந்து செல்லலாம்.  83 மீட்டர்நீளம் கொண்ட காட்சிப்பாதை. கைகளால் மீன்களைத் தொடலாம், பிடிக்கலாம் எனும் உணர்வு தரும் அனுபவம்.   சிறியதும், பெரியதுமாக கண் பறிக்கும் அற்புதக் காட்சியாகவே இருந்தது. அவசர அவசரமின்றி ஆறுதலாக   அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒரு காட்சியாகும்   இது.     நீருக்குள்ளே செல்லும் ஆடையுடன் வழிகாட்டியுடன் உள்ளே சென்றும் பார்க்கலாமாம். விசேட அனுபவம் தேவையில்லை என்றும் வாசித்து அறிந்தேன். இதை நாம் தேடவில்லை.   நடை பாதையில் மட்டும் சென்று அனுபவித்தோம். ரசித்தோம்.
—-மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.——-

 

அனுபவம் அங்கம் 5.

 

சென்ரோசா தீவின் உள்ளே சென்றோம்.  சிங்கப்பூரின் பிரதிவிம்பம் என்று ஒரு வழிகாட்டி விளக்கிக் கூறினார். சிங்கப்பூர் கடலோடிகள், சரித்திரச் சரணடைவுகள், சிங்கப்பூர் விழாக்கள், இவை மெழுகு உருவமாகவும், படங்களிலும், காட்டி விளக்கினார். வண்ணத்துப் பூச்சிப் பூங்காவென்று கண்ணாடிப் பெட்டிகளில் 3 ஆயிரத்துக்கும் மேலான பூச்சிகள் ஒட்டி வைத்திருந்தனர். ஆழகழகானவைகள். அது அற்புதம் தான்! ஆனால் நான் என் வேலையில் பிள்ளைகளோடு படங்கள் பார்த்து விதம் விதமாக நாள் தோறும் கீறுவதால், (பிள்ளைகளுக்கு வண்ணத்துப் பூச்சி கீற, வண்ணம் பூச மிக விருப்பம்.) இது புதுமையாகத்  தெரியவில்லை.                                             பின்பு பூச்சிகளின் இராச்சியம் என்று பெரிய பெரிய கருவண்டுகள், இராட்சதக் கருவண்டுகள், பார்க்க அருவருப்பாகவும், பயமாகவும், பயங்கரமாகவும், பெயர்களுடன் கண்காட்சியாக இருந்தது. அடுத்து சினிமானியா என்று ஆதிகாலத்தில் குண்டு போடுவது, கால்வாய்களால் போவது, படிகளால் இறங்கிப் போவது, விமானத் தாக்குதல் விழாக்கள  என 3டி படங்கள் காட்டினார்கள்.                                                                                                                                                  இதன் பின் டொல்பின் லகூன் என்று கடற்கரைக்குச்   சென்றோம். அங்கு இரண்டு டொல்பின்களை வைத்து அதை இயக்கி வேடிக்கை காட்டினார்கள். அங்கு கூடும் மக்களும், வாயிலின் அறிவிப்புப் பலகையும், வேறு படங்களும் டொல்பின் பற்றியது இங்கு இணைத்துள்ளேன். இதை விட  ஜெர்மனி   ஃபன்ராசி லாண்டில் நாம் பார்த்த டொல்பின் கண்காட்சி மிக நல்லது. இங்கு பார்த்தது என்னைக் கவரவில்லை. இங்கு 2 பார்வையாளர்களை அழைத்து டொல்பினைத் தொட, அதற்கு உணவாக சிறு மீனைக் கொடுக்க என்று விடுகிறார்கள். இது ஒரு மேலதிக வித்தியாசம் இங்கு. கடற்கரைக் காட்சி அழகு. மணலில் இருந்தும் டொல்பின் காட்சியைப் பார்க்கலாம். நாற்காலிகளும் உள்ளன. இவைகள் மகிழ்வாக இருந்தது. மழைக் காலங்களில் வார இறுதியில் மட்டும் இக் காட்சி நடைபெறுகிறது. கடற்கரை மணலில் இருந்து பார்த்ததும் அற்புதம்; மணல் கால்களில் ஒட்டியதும் மறக்க முடியாதவைகள். இவை பற்றிய ஏழு புகைப் படங்கள் இருப்பதால் இந்த அங்கத்தை இதோடு முடித்து                                                                                            

 ——-அடுத்த அங்கம் 6ல் தொடர்வோம்.——-

அனுபவம். அங்கம. 4

மேலும்

அனுபவம். அங்கம். 3

 

சுற்றுலாப் பயணம் திகைப்புத் தருவதும், மனச்சித்திரவதை கொண்டதும் என்ற யேர்மனியச் சுற்றுலாவாசிகளின் கூற்றுப் போல நாம் ஒவ்வொரு இடங்களிலும் அனுபவித்தோம்.
நகைக் கடைகளில் மட்டும் நகைக் கடைக் கலாச்சாரப்படி, இந்தியர்கள், தமிழர்கள் மிக அன்பாக, பண்பாக நடந்த கொள்கின்றனர். ஆனால் மற்றைய கடைகளில் பலர் பெரும்பாலும் அன்பை, பண்பை மறந்து மிக அநாகரீகமாக, கடுமையாகவும் நடந்து கொண்டனர், வேண்டினால் வேண்டுங்கள் இல்லாவிட்டால் செல்லுங்கள் எனும் பாணியில். விலைகளும் அள்ளிப் போட்டது போலவே கூறினார்கள். பாதிக்குப் பாதி அதை வெட்டிப் பேசிப் பேரம் பேசினால் பொருள் வாங்க முடிகிறது. அன்பற்ற இந்த அநாகரீக முறையும், இந்தப் பேரம் பேசும் முறையும் எனக்குப் பிடிக்கவேயில்லை. வெறுப்பாக இருந்தது. சில கடைகளை விட்டு விலகியே சென்றும் விட்டோம். ‘ ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்’ என்று நான் அலுத்துக் கொள்ள, “”‘வாழ்க்கை அனுபவங்கள், நெருக்கடிகள் தான், வேறு என்ன?’ “”என்றார் என் கணவர். பொருட்களின் விலைகள் மிக அதிகமாகவே காணப்பட்டன சிங்கப்பூரில்.

10ம் திகதி கார்த்திகை – மாலை எமது வேலைகள் யாவும் முடிய இரவு 9.30-10.00 மணியிருக்கும் வீராசாமி தெருவினுடாக எமது வாடி வீட்டுக்கு வரும் வழியில் எதிர் கொண்ட நிகழ்வு மனதைத் தொட்டது. தெருவெல்லாம் எக்கச்சக்கமான சன நெரிசலாக, அதுவும் முழுவதும் ஆண் மக்களாக நின்றது எம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது.  எங்கெல்லாம் மக்கள் உட்கார முடியுமோ, மதிலில், சந்து பொந்துகளில் மக்கள் அமர்ந்தும், நின்றும் குவிந்து வழிந்தனர். எங்கோ தேர்த் திருவிழாவோ, கதாப்பிரசங்கமோ, அன்றி சினிமா பிரபலங்களின் வருகையாக இருக்குமோ! ஏதோ ஒன்று நடக்கிறது, என்னவென்று அறிய வேண்டுமெனும் ஆவல் எம்மை உந்தித் தள்ளியது.

இதில் நானொருத்தி தான் தெருவில் இருந்த ஒரு பெண். கணவரின் கரங்களை இறுகப் பற்றியபடி, ஒரு சிறு அச்சத்தடன் பாதையில் இடமுள்ள பகுதிகளினூடு புகுந்நு, நுளைந்து சென்றோம். ஏற்கெனவே தெருத் திருட்டு, நகைகள், கைப்பை கவனம் என்று தெரிந்தவர்கள் எச்சரித்தது நினைவுக்கும் வந்தது. என்ன தான் நடக்கிறது என்று அறியும் ஆவலில் தமிழ்க் குரல் வந்த திக்காகச் சென்று, ஒரு இளைஞனிடம் ‘நீர் தமிழ் பேசுவீரா?’  என்று ஆங்கிலத்தில் உறுதிப் படுத்தக் கேட்டோம். அவர் வெருண்டு கொண்டு திணறி மழுப்பினார். ‘ தமிழ் குரல் இந்தப் பகுதியால் வந்ததே அது தான் கேட்கிறோம் என்றோம்’ என்றேன் நான். உடனே சமாதானமடைந்த இளைஞன், ‘” ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் முழு சிங்கப்பூரின் எல்லாப் பக்கத்திலும் சிதறியிருந்து வேலை செய்பவர்கள், தமது ஊராரை, நேசத்திற்கு உரியவர்களை, வேண்டியவர்களைச் சந்திக்கும் வாரத்தில் ஒரு நாளாம் இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை இது. அந்தந்த ஊரார் அவர்களுக்கெனக் கூடும் இடத்தில் சந்திப்பார்கள். உதாரணமாகப் பாண்டிச்சேரி மக்களென்றால்   அவர்கள் கூடும் இடத்தில் அவர்களைக் காணலாம்’ ” என்றார். ‘” நீர் மணமானவரா?'” என்றேன். அவ் வாலிபன் வெட்கப் பட்டு “‘இல்லை’ “என்றார். “‘முழுவதும் ஆண்களாகவே காணப்படுகிறீர்களே! சரி! ஆண்கள் நீங்கள் இப்படிச் சந்தித்துப் பேசி உங்கள் தாகங்களைத் தீர்க்கிறீர்களே, அப்படியானால் பெண்களின் நிலை என்ன?  அவர்கள் எங்கு சந்திப்பது?’ “என்றேன். ஒரு நமட்டுச் சிரிப்பைத் தான் பதிலாகத் தந்தார். இவர் ஒரு இந்தியத் தமிழ் மகன் தான்.

கோபதாபங்களுக்காகக் குழு நிலையில் தேடிச் சென்று அடிதடிகளும் நடப்பதுண்டு என்றார். பொலீசாரும் அங்கு தென்பட்டனர். லிட்டில் இந்தியா, தேக்கா, செரங்கூன் பகுதித் தெரு முழுவதும் இந்திய இளவட்டச் சனக் குவியலாகவே காணப்பட்டது. இது ஒரு விசித்திர அனுபவமாகவே இருந்தது. உணவகங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட வெறுமையாகியே விட்டது. எக்கச்சக்க வியாபாரம் இந்த ஞாயிறு நாளில் நடக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந் நிகழ்வு எம்மை உலுப்பிய நிகழ்வாகவே இருந்தது. அறைக்குப் போயும் இது பற்றியே நீண்ட நேரம் அலசினோம். இந்த உறவுத்  தாகம், உறவுத் தேடல், ஞாயிறு சந்திப்பு இவர்களது உணர்வுகளுக்கு வடிகாலாக இருப்பது வெள்ளிடை மலை.
 

இதையே இங்கு ஐரோப்பாவில் ஊடகங்களின் மூலம் நாம், செய்கிறோம் என்பது எமக்குப் புரிந்தது. எமது எண்ணங்கள், உணர்வுகள் ஊடகங்கள் மூலம் தான் வடிகிறது. பலர் இதன் மூலம் ஆறுதல் பெறுவதாகவும் வானலையில் கூறுகிறார்கள்.
நாம் தங்கியிருந்த  பெலிலோஸ் தெருவும், செரங்கூன் தெருவும் சந்திக்கும் மூலையில் வீரமாகாளி அம்மன்கோயில் இருந்தது. சகல நேரப் பூசைகளும் நடக்கின்றன. மக்களும் குவிநது வண்ணமே உள்ளனர். சிறிது தூரத்தில் ஸ்ரீ சிறீனிவாசப் பெருமாள் கோவிலும் இருக்கிறது. இவைகளை விட பல சிறு சிறு கோவில்களும் உண்டு.
எங்கள் உறவினர்கள் வந்து சேர்ந்ததால் நாங்கள் அனைவரும் சலேற்றா கில் என்னுமிடத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து எல்லோரும் ஒன்றாகத் தங்கும் எண்ணத்தில் மாறினோம். இது சிங்கப்பூரின் வட மேற்குப் பகுதியில் அமைந்ததாகும். சிங்கப்பூரின் வடகிழக்கு ஆரம்பப் பகுதியில் செரங்கூன் பகுதி உண்டு. சலேற்றா கில் வட மேற்கில் உள்ளது.

இதுவரை நெருக்கடி நிறைந்த கடைகளுடன் கூடிய வீடுகளை, கடை வீதிகளை, குப்பைகள், உடைசல்கள், நெரிவுகள் யாவற்றையும் கண்டோம். இப்போது தனித் தனி வீடு, காணி,  பூந்தோட்டங்கள்,  வீட்டிற்கு முன் ஒன்றிரண்டு வாகனங்கள் என கொழும்பு ஏழு என்றழைக்கும் சினமன் காடின், கறுவாக்காடு என்று கூறும் பகுதி போன்று மிக அழகாக இருந்தது.  4 படுக்கையறைகள், தனி சமையலறை என்று பெரிய வீடாக இருந்தது.

இவ்வளவு நாளும்  காலை முதல் மாலை வரை நடந்து நடந்து களைத்து வந்து சுடு தண்ணீரில் தான் குளித்து ‘அப்பாடா!’ என்று ஓய்வு கொண்டோம். இங்கு தான் முதன் முதலில் இந்தத் தடவை பச்சைத் தண்ணீரில் குளித்தேன். நீண்ட காலங்களின் பின் சில்லென்று குளிராகத் தான் முதன் முதலில் நீரை ஊற்ற இருந்தது. 12ம் திகதி மகள் இலண்டனில் இருந்து வந்தார். என் கணவர் சங்கி விமான நிலையத்திற்குச் சென்று மகளைக் கூட்டி வந்தார். ‘ நான் போகும் போது பேருந்தில் தான் போனேன். உன்னைக் கூட்டிப் போகாததிற்கு இப்போது மனம் வருந்துகிறேன். வழி நெடுக மிக அழகான காட்சிகள், நீயானால் மிகவும் ரசித்துப் பார்த்திருப்பாய் நான் மிக வருந்துகிறேன் ( ஐ ஆம் வெறி சொறி)’ என்றார். மகளுக்கும் எங்களுக்கும் சிங்கப்பூர் விஐயம் இது முதற் தடவையாகும்.

—அடுத்த அங்கத்தில் சந்திப்போம்—-

 

Previous Older Entries Next Newer Entries