தாய்லாந்துப் பயணம். இறுதி அங்கம் 21.

எனது பயண அனுபவங்களில் மூன்றாவது பயணம்

தாய்லாந்துப் பயணம். இறுதி அங்கம்  21.

தாய்லாந்தில் மிகப் பெரிய விற்பனை நிலையமான Big C  க்குப் போய் மிக்ஸி வாங்கும் போது

 

ஒரு இளம் பையன் நின்றிருந்தான். அவன் சீனாவில் செய்த பொருள் நல்லதல்ல. மலேசியாவில் செய்தது தான் நல்லது வாங்குங்கள் என்று ஆலோசனை கூறினான். நாம் மலேசியாவில் செய்ததையே வாங்கினோம். அங்கும் எமது வாங்கும் பொருட்களின் பட்டியலில் வேறு இடங்களில் அகப்படாத சில பொருட்களை வாங்க முடிந்ததும் மகிழ்ச்சியாகவே இருந்தது. Big C யில் பொருட்களை வாங்கியதும்,

நேராக எமது காகோ ஏஜென்சிக் கடைக்கு வந்தோம்.

இப்போது நாம் வாங்கிய எமது பொருட்களைக் கடல் வழிப் பொதியாகக் கட்டும் இறுதி வேலையைச் செய்யக் கேட்டோம். பொருட்களின் பற்றுச் சீட்டுகள் எல்லா இடத்திலும் இரண்டு பிரதிகள் வாங்கி வைத்திருந்தோம். ஒன்றைக் கட்டும் பொதியுடனும் ஒன்றை எம்முடனும் வைத்துக் கொண்டு நாம் பார்த்துக் கொண்டிருக்கவே அனைத்தையும் பெரிய அட்டைப் பெட்டிகளில் கட்டி ஒட்டினார்கள். மறுபடி பொலிதீன் உரப் பைகளால் சுற்றிக் கட்டி, அடுக்கினார்கள்.

 

எல்லாம் எழுதி பணத்தையும் கட்டினோம். ஆமாம் முதலே கூறியிருந்தனர் காசாகவே தர வேண்டும், வங்கி மூலமோ, காசோலையோ வேண்டாம் என்று. நாமும் தயாராகவே இருந்தோம். அவர்களுக்குப் பயணமும் கூறிவிட்டு. வாடிவீட்டு வாசலில் நின்ற வாடகைக் காரை மாலை 8.00 மணிக்கு சுவர்ணபூமி விமான நிலையத்திற்குப் போகப் பேசி வைத்து விட்டு அறைக்கு வந்தோம்.

  

இரவு 11.55க்கு ஒஸ்ரியா வீயென்னாவிற்கு விமானம்.

வாடிவீட்டில் எப்போதும் நாம் வர கதவு திறந்து சேவை புரிந்தவர்கள், அறை துப்பரவாக்கி படுக்கைத் துணிகள் மாற்றிய பெண்கள் என்று சிலருக்கு அன்பளிப்புப் பணங்கள் கொடுத்தோம்.

இரவு 8.00 மணிக்கு ராக்சி ஏறினோம் 9.00 மணிக்கு சுவர்ணபூமியில் இறங்கினோம். சில சுவர்ணபூமி விமான நிலையப் படங்களை நீங்கள் பார்க்க வேண்டும். பாற்கடலைப் பரந்தாமன் கடைகிறாரோ என்று எண்ணும் படி இவை இருந்தது. அதன் கருத்து, ஏன், என்பவை எமக்குப் புரியவில்லை. பாருங்கள்.  ஆச்சரியத்தில் போய் இறங்கியதும் நான் விரும்பி எடுத்த படங்கள்.

பயணம் சுலபமாக முடிந்தது.

சனிக்கிழமை நமது வீடு டென்மார்க் வந்து சேர்ந்தோம்.

பயணத்தில் இங்கிருந்து போகும் போது யன்னலூடாக இமாலயாப் பனி மலைக்காட்சியைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் பார்க்க, சுற்றி இருந்தவர்கள் அனைவரும் ஆவலாக அதைப் பார்த்தது மறக்க முடியாதது. நான் பார்த்துக் காட்டியதால் பலர் அக்காட்சியை ரசித்ததும் மறக்க முடியாதது. இன்னும் சில விமான நிலையப் படங்களையும் பாருங்கள். So beautiful.

    

இந்தப் பயண அனுபவத்தை உங்களுடன் நான் பகிர்ந்ததில் மிகவும் மகிழ்கிறேன்.

கவிதை எழுதுவது எப்படி எனக்கு மிகவும் பிடித்தமானதோ அப்படியே, இரண்டாவதாகப் பயண அனுபவம் எழுதுவதிலும் மகிழ்வடைகிறேன். இந்த சந்தர்ப்பம் உருவான இலண்டன் தமிழ் வானொலிக்கும், கருத்துகள் தந்த நேயர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இறுதியாக தாய்லாந்தின் தாய்லாந்து மொழிப் பெயரை உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன். தயவு செய்து பொறுமையாக நான் 2 மைல் நீளமான பெயரைக் கூறும் வரை ப்ளீஸ்! கேளுங்கள். எனக்கும் இது புரியவில்லை. ஏன் இப்படி இவ்வளவு நீளப் பெயர் என்று மொழி பெயர்ப்பாளரைக் கேட்டேன். அவருடன் அன்று ஒரு தாய்லாந்துப் பெண்ணும் வந்திருந்தார். சிரிக்கிறர்கள்.

முதல் தடவை இதைக் கூறும் போது எழுதி வைத்தேன். இரண்டாம் தடவை தாய்லாந்து மொழி பெயர்ப்பாளன் நிக், ” வேதா! தாய்லாந்துப் பெயரைக் கூறுகிறாயா?” என்று கேட்டார். மறுபடி நான் அதைக் கூறி அவர்களை அசத்தினேன். எழுதியதைப் பார்த்துத் தான் கூறினேன். இதோ கேளுங்கள்.இது தான் அந்தப் பெயர்.
Grunteb /city of angels)

Mahanakon Armon Tathna Kosin Mahindra Ayothiya Mahadilok Popnoprat Rajathany purirum yadomratchnywet Mahachadan amoniman akuathan chasith saka vishnu gampasit

—மகானக்கோன் ஆர்மோன் ரத்னா கோசின் மகின்டிறா அயோத்தியா மகாடிலொக் பொப்னோப்றாற் ராஐதானி புறிறும் யதோம்றட்சினிவெற் மகாசடன் அமோனிமான் அக்குஆதன் சாசித் சகா விஸ்ணு கம்பாசிற்.——— இது தான் அந்தப் பெயர்.

நான் என் கணவருக்குக் கூறினேன், ‘ ‘தாய்லாந்துப் பயணக் கதை முடிகிறதப்பா”  என்று.  ”ஓகோ! தாய்லாந்தின் தாய்லாந்து மொழிப் பெயர் கூறிவிட்டாயா?”     என்றார் இறுதியில் கட்டாயம் கூறுவேன் என்றேன். இதோ கூறிவிட்டேன்.

சரி நேயர்களே! ஆண்டவன் சித்தம் இருந்தால் மறுபடியொரு பயணக் கதையில் சந்திப்போம்.

நன்றியுடன் வணக்கம்.
வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ், டென்மார்க்.
25-3-2009.

In Anthimaalai.web site :-   http://anthimaalai.blogspot.com/2011/10/21.html

 

                      

 

 
 

Advertisements

தாய்லாந்துப் பயணம். அங்கம் 20.

தாய்லாந்துப் பயணம் – 20

 

தாய்லாந்து வளைகுடாவில் வாழைப்பழ உருவப் படகில் இருந்தோம். (படத்தில் படகினூடு நீரை ஊடுருவிப் பார்க்கும் வசதியை நீங்கள் காணக் கூடியதாக இருக்கிறது).

 
வேகப் படகு எமக்குக் கிட்ட வந்தது. அதில் மாறி ஏறினோம். நடுக் கடலில் அப்படி மாறுவது நல்ல திறிலிங் ஆக இருந்தது.
 ’இந்த உல்லாச, அற்புத அனுபவத்திற்காகவே பலர் மாதக்கணக்கில் கடலில் படகில் போய், சட்டி முட்டியுடன் சமைத்துச் சாப்பிட்டு வாழ்ந்து விட்டு வருகிறார்கள்.  அது ஏன் என்பது இப்போது புரிகிறது’ என்றேன் நான் கணவரிடம். அவரும் ஒத்துக் கொண்ட மாதிரி ஆமோதித்துச் சிரித்தார்.
கோலான் தீவிலிருந்து மாலை 5.00 மணிக்குப் புறப்பட்டு 5.15க்கு ‘பற்றியா’ கரையோர நகருக்கு வந்தோம்.
மாலை நேரமாகியதால் பல இளம் பெண்கள் கடற்கரையில் அலங்காரமாக வந்திருந்து உல்லாசப் பயணிகளுக்கு வலை வீசியபடி இருந்தது தெரிந்தது. அதைக் கவனிப்பதும் நல்ல முசுப்பாத்தியாக(வேடிக்கையாக) இருந்தது. எல்லாப் பெண்கள் கையிலும் ஒரு சிறிய அழகு சாதனப் பெட்டி இருந்தது. அடிக்கடி முகத்தைச் சரி செய்தபடியே இருந்தனர்.
பாய்கள் விரித்துப் பெண்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருந்தனர். சும்மா சொல்லக் கூடாது! அங்கே இங்கே என்று உடலில் சதைகள் தொங்காது சிக்கென்று அவர்கள் சிறு உடலுக்கு ஏற்ற ஆடைகளுடன் மாடல் பெண்கள் போலவே இருந்தனர்.
 
வேறு சிலர் ஆண்களும் சிறு சிறு கொறிக்கும் பணியாரங்களையும் மீன், றால் பொரியல் ஆகியனவும், தேனீரும் தட்டுகளில் காவியபடி விற்றனர். கடற்கரை கலகலக்கத் தொடங்கி விட்டது.
இந்திய சினிமாத் துறை ‘மனோபாலா’ ஏதோ படத்திற்கு ரௌடியாக வேடம் போட்டு மோட்டார் சைக்கிளில் ஓடும் போது பற்றியாவில் தான் பொலிஸ் பிடித்ததாம் பின்பு மொழி பெயர்ப்பாளர் வந்து விளக்கிக் கூற விடுபட்டாராம் என்று இங்கு வர வாசித்தேன். சிரிப்பு வந்தது.
உல்லாசப் பயணக் கந்தோருக்குப் போனோம். முதலில் எம்மைப் படம் எடுத்தனர் என்று கூறினேன் அல்லவா! அதை அழகாக சட்டம் போட்டு, பிரேம் போட்டு மேசையில் வைக்கக் கூடியதாகச் செய்து, விரும்பினால் 100பாத் கொடுத்து வாங்கலாம் என்றனர். 16 குறொனர் தான். பற்றியா தாய்லாந் என்று எழுதி, கீழே ஆழக்கடல் அதிசய உலகு, வண்ண மீன்கள், கடற் பாசிகளுடன், மிக அழகாக வரைந்து உருவமைத்து வெள்ளை நிறத்தில் இருந்தது. வேண்டாம் என்று கூற முடியவில்லை. வாங்கினோம். (அந்தப் படம்.)
 

நாமிருவரும் சேர்ந்து நின்ற படம் அது. வீட்டில் அதைப் பார்த்து ” Thats nice !  So sweet! ” என்று பிள்ளைகள் சந்தோசம் கொண்டனர்.

எம்மோடு பற்றியா வந்த சிலர் அங்கேயே 2, 3 நாட்கள் தங்கிச் சுற்றிப் பார்த்து தமது இடத்திற்குப் பயணமாக இருந்தனர். சே! எமக்கு இப்படிச் செய்ய முடியவில்லையே! மறுபடி பட்டுனாம் போக வேண்டுமே! என்று இருந்தது.
பற்றியாவில் முதலைகள், விலங்குகள் வனம், யானைகள் என்று பல சங்கதிகள் பார்க்க இருக்கிறது. பார்த்தவர்கள் அது பற்றிப் பிரமாதமாகக் கூறியிருந்தனர். அவையெல்லாம் ஒரு இரவுக்கும் மேலாக 2 நாட்கள் என்ற கணக்கில் தங்கிப் பார்க்கும் சுற்றுலாக்கள் தான். அதனாலேயே நாம் அதைத் தெரிவு செய்ய வில்லை.
மாலை 8 மணியளவில் பட்டுனாம் வந்தோம். மிகவும் பிந்தினால் அல்லது வெளியே போக அலுப்பானால் அப்படியே ரென் ஸரார் உணவகத்திலேயே இரவு உணவை முடிப்போம்.
அறைக்கு வந்தோம். உப்புத் தண்ணீரில் தோய்ந்ததால், உப்பு எல்லாம் போக குளித்து ஆடை மாற்றி அங்கேயே இரவு உணவை முடித்தோம்.
முன்பு எமது கணனிக்கு நிற மைகள், (கலர் இங்க்) வாங்கவென்று கம்பியூட்டர் சென்ரர் சென்று சுற்றி வாங்கினோம். அங்கு வீட்டுக்கு ஒரு மிக்ஸி வாங்க வேணும் என்று தேடித் தேடிப் பார்த்துக் களைத்து விட்டோம். மிக்ஸியை வாங்குவது எங்கு என்று புரியவில்லை. விடுமுறை முடியும் நாளும் வந்தவிட்டது. அதை எங்கு வாங்கலாம் என்று யோசித்து இறுதியாக இந்திய உணவகத்தில் சென்று கேட்டோம். அவர்கள் முகவரியை எழுதித் தந்தனர்.  Big   C என்ற வியாபார நிலையத்தில் வாங்கலாம் என்றனர்.
அடுத்த நாள் புரட்டாதி 12-2008 வெள்ளிக்கிழமை காலையில் அந்த  Big C  க்கு சென்றோம். பட்டுனாம் சந்தைக்கு அருகிலேயே அது இருந்திருக்கிறது. எமக்குத் தெரியவில்லை. நினைக்க நினைக்கச் சிரிப்பாக இருந்தது.
—பயணத்தின் இறுதி அங்கம் அடுத்த வாரம் வரும்.———
 
 
 In Anthimaalai Web site:-     http://anthimaalai.blogspot.com/2011/09/20.html

தாய்லாந்துப் பயணம். அங்கம் 19.

எனது பயண அனுபவங்களில்  பயணம் மூன்றின்
தாய்லாந்துப் பயணம். அங்கம் 19.

பற்றயாவிலிருந்து வேகப்படகில் கோ லான் தீவுக்கு 7கி.மீ, 20 நிமிட பயணம். இதுவே 3 தீவிலும் பெரிதான தீவு.  தாய்லாந்துப் படத்தில் பற்றயா இருக்குமிடம் கடந்த அங்கத்தில் பார்த்தீர்கள்.  இங்கு பற்றயாவிற்கு அருகில் தீவுகளை கறுப்பு வட்டமிட்டு அம்புக் குறியிட்டுக் காட்டியுள்ளேன்.

  

 25 மீட்டர் ஆழமான கடல். நீலமான கண்ணாடி போல தெட்டத் தெளிந்த நீராக இருந்தது. செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டு நீருக்குள் சிறிது தூரம் நடந்து செல்ல வசதியாக என் கட்டைப் பாவாடை இருந்தது.

வேகப் படகில் ஏறினோம்.

 

படு வேகமான படகின் ஓட்டம். வேகமான காற்று. படகை இறுகப் பிடித்தபடி மிக உல்லாசமாக இருந்தது.

போகும் போது நடுவில் நிறுத்தி  parasail,   jet ski, snorkel  ஆகியவை செய்ய விருப்பமா என்று கேட்டார்கள். இவைகளைத் தமிழ் படுத்த எனக்குத் தெரியவில்லை. அகராதியும் உதவவில்லை. தண்ணீருக்குள் ஏற்ற உடைகளோடு இறங்கி பவளப் பாறைகள் பார்த்து வருவது, நீரினுள் சறுக்கிக் கொண்டு போதல், ஆகாயத்தில் பறப்பது, ஆகியவை என்று நினைக்கிறேன். அதாவது இவைகளை மேலதிகமாக நாங்கள் பணம் செலுத்திச் செய்யலாம். எம்முடன் வந்த யாருக்குமே அவைகளில் ஆர்வம் இருக்கவில்லை.

இருபது நிமிடங்களில் நேராக கோலான் தீவில் போய் இறங்கினோம். 44சதுர மீட்டர் சுற்றளவு கொண்ட தனியார் தீவு. அதாவது பிறைவேட் தீவு. 3000 மக்கள் அங்கு வசிக்கிறார்களாம். குடிப்பதற்கு தண்ணீர் இல்லையாம்.

 

தீவில் போய் 11மணிக்கு இறங்கியதும் மொழி பெயர்ப்பாளப் பெண்மணி (கறுப்பு ஆடையுடன் speed boatல்   இருப்பவர்)  நீரின் எல்லைகளைக் காட்டி ‘இதற்கு அப்பால் போகாதீர்கள்’ என்று கட்டளைகளைக் கூறினாள்.

எல்லைகள் நீரில் வெள்ளையாகத் தெரிகிறது.

எமக்கு திறப்புகளுடன் அலுமாரிகள் எடுத்துத் தந்தாள். 12.45க்கு உணவு வரும். 5.00மணிக்கு இங்கிருந்து போகிறோம் எனக்கூறி சென்றுவிட்டாள்.

நாங்கள் நீச்சலாடை மாற்றித், தண்ணீருள் சென்று விளையாடினோம். மிக ஆனந்தமாக இருந்தது. பொல்லாத உப்புத் தண்ணீர். இளவட்டங்கள் தண்ணீர்ப் பந்து விளையாடினார்கள்.

அதையெல்லாம் பார்த்து ரசித்தோம். நீருள் நின்று ஆடி விரல்கள் சூம்பத் தொடங்க இனிப் போதும் என்று வெளியே வர மனமில்லாமல் வந்து ஆடை மாற்றினோம்.

பின்னர் உணவகத்தில் உணவு.

எங்கு போனாலும் எனக்கு சைவ உணவு முன்னரே பதிவு செய்து விடுவோம். அவ்வுணவில் போஞ்சியை மாவில் தோய்த்துப் பொரித்திருந்தனர். மிக சுவையாக இருந்தது. பழக்கலவை, சலாட் சோறு, பாண் என்று மிக அருமையான உணவாக இருந்தது.

கணவருக்கு கடல் உணவு.  நண்டு, றால் அது இதுவென்று. நல்ல ஒரு பிடி பிடித்தோம். கடைகளில் நினைவுப் பொருட்கள் விற்பனை என்று எல்லாம் யானை விலையாகவே இருந்தது. நமக்கு எதுவும் வாங்க வேண்டிய தேவையும் இருக்கவேயில்லை. அது தான் பாங்கொக்கில் கடை கடையாக ஏறி இறங்கினோமே!

தண்ணீர் விளையாட்டு, சூரியக் குளிப்பு, நீச்சல் தவிர வேறு ஏதுமே அங்கு இல்லை.

   

காடு சுற்றலாம்  என் கணவர் அதை விரும்பவில்லை. ஆயினும் சிறு கடைகளைச் சுற்றிப் பார்க்க மாலை நேரமும் வந்தது.

போகும் போது வாழைப்பழ உருவமான படகில் முதலில் ஏறினோம். அதில் படகினூடாக கீழே தண்ணீரைப் பார்க்க முடியும் தண்ணீர் பளிங்குத் தெளிவானதால் பவளப் பாறைகளைப் பார்க்க முடியும். உள்ளே ஒரு அதிசய, அற்புத உலகம். மீன்கள் இன்னும் பல சீவராசிகள் கூட்டமாக ஓடுவது இன்னும் ஆழக்கடல் ஆழத்து அதிசய உலகைப் பார்த்திடவே அந்தப் படகில் ஏற்றினார்கள். உல்லாசப் பயணத்தில் அதுவும் ஒரு திட்டம். கீழே பாருங்கள் அதோ, இதோ என்று காட்டினார்கள். டிஸ்கவரி சனாலில் கடலின் கீழ் காட்சிகள் காட்டுவார்களே அது போல இருந்தது. அற்புதம்! அதிசயம்! பவளப் பாறைகளும் தெரிந்தது. மிக அழகாக இருந்தது. அதுவும் கோ குறொக், கோ சக் தீவுகளின் அருகில் இவை மிக, கண்ணாடித் துல்லியமாகத் தெரிந்தது.

கோ சக் தீவின் சுற்றுப் பரப்பு 0.05சதுர கிலோ மீட்டராகும். கோ லான் தீவிலிருந்து 600 மீட்டர் தூரத்தில் கோ சக் தீவு. இது குதிரையின் குளம்பு போன்ற உருவமான தீவு. இதில் நீருக்கு அடியிலே போய் பார்க்க முடியும். பணம் கட்டினால் நீருக்குள் இறங்கும் ஆடை, உபகரணங்கள் மாற்றிக் கொண்டு கீழே போய் வரலாம். இத்தீவைத் தாண்டியதும் வேகப் படகும் எமக்குக் கிட்ட வந்தது.

——– பயணம் தொடரும்.———
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
16-2-2009.

                      

 

தாய்லாந்துப் பயணம். – அங்கம் 18.

எனது பயண அனுபவத்தில் 3வது பயண அனுபவம் 

தாய்லந்துப் பயணம். – அங்கம் 18.

தாய்லாந்து நாட்டின் உருவ அமைப்பானது இதன் கிழக்குப் பகுதி யானையின் காது ஆகவும், தெற்குப் பகுதி தும்பிக்கையாகவும், யானை உருவில் தாய்லாந்து உள்ளதாகவும் தாய்லாந்து மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.     (படத்தில் காணலாம்.   எல்லை நகரங்களைக் கோடிட்டுள்ளேன் மலேசியா அடியில் உள்ளது.)

 

தாய்லாந்தின் மேற்கு, வடமேற்குப் பகுதி மியன்மார் – பர்மா தேசமும், வட கிழக்கு, கிழக்கில் லாவோஸ், அல்லது கம்போடியாவாகவும், தெற்கில் மலேசியாவும் எல்லையாக உள்ளது.

மொத்தம் 76 மாகாணங்களாக தாய்லாந்தைப் பிரித்துள்ளனர். தத்தமது பிரிவின் தலை நகரப் பெயரே மாகாணப் பெயராக உள்ளது. பாங்கொக் தனி மாகாணமாக இன்றி, தனி ஒரு விசேட பிரிவாக உள்ளது

இப்போது (2009) ஆளும் அரசன் கிங் பும்பில், அதாவது ராமா 9.ஆவார். 

நாம் அடுத்தொரு பயணமாக கோறல் ஐலண்ட், கோறல் தீவுக்கு, பவளத்தீவுக்குப்  போவதாகப்  புறப்பட்டோம்.  இருவருக்கும் செலவு 1000 பாத் ஆகியது. 150 டெனிஷ் குரோனர். இது பயணம், பகல் சாப்பாடு உள்ளாக அடங்குகிறது.                                                                

அதிகாலை ஏழரை மணிக்கு பயணம் ஆரம்பமானது.

பாங்கொக்கின் கிழக்குப் பகுதிக்குப் பயணமாகும் போது வாகனச் சாரதி ஜேர்மனி, பிரான்ஸ் போல தெருவிற்கு கட்டணம் கட்டினான். அதாவது றோட் ராக்ஸ் போகும் போது 30 பாத், வரும் போது 30 பாத் கட்டினான்.  ( படத்தில் பாங்கொக், பற்றியா இரு இடமும் காணக்கூடியதாக கோடிட்டுள்ளேன்.)

போக முதல் கடற்கரையில் போடக் கூடிய பாதணி அதாவது பீச் ஸ்லிப்பர்ஸ், நீச்சலாடை, துவாலையும் தேவையென அறிந்து கொண்டோம்.

பாதையில் தெருவின் மேலேயுள்ள பாலங்களில் தாய்லாந்து ராசா ராணியின் படங்கள் 2, 3 விதமான படங்களாகப் பெரிதாக்கி மாட்டியிருந்தனர். இது எமக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

அடுத்து இங்கு ஐரோப்பாவில் மின்சாரத் தொடர்பு இணைப்புகள் (அதாவது வயர்கள்) நிலத்தின் கீழே அல்லவா நம்மால் கண்டு கொள்ள முடியாதவாறு புதைக்கிறார்கள்! அங்கு தோரணம் தொங்குவது போல கண்டபடி வயர்கள் தெருவின் ஓரங்களில் அசிங்கமாகத் தொங்குகிறது, இதைப் பார்க்கக் கொஞ்சம் பயங்கரமாகத் தான் இருந்தது.

பயணத்தின் பாதையில் வாழைமரம், தென்னை மரங்கள், ஐரோப்பாவில் பெரிய வாழைப் பழங்களே பார்த்த கண்ணுக்கு கதலி வாழைப்பழம் போல குட்டி வாழைப் பழங்கள் காணக் கூடியதாக இருந்தது.

நாம் பற்றியா எனும் நகரத்திற்குச் சென்றோம். நல்ல உல்லாசப் பயண நகரம் தான் பற்றியா. கடற்கரையோர நகரம்.

இதுவரை சனநெருக்கடி கொண்ட பாங்கொக்கை விட்டுக் காற்றாட வந்துள்ளோம். ஒன்றரை இரண்டு மணிநேர வாகன ஓட்டத்தின் பின் எம்மை அழைத்துப் போனவர்களின் கந்தோரில் சென்று அமர்ந்து அவர்களின் அடுத்த மணி நேரத் திட்ட விளக்கங்களைக் கேட்டோம்.

சுமார் 10.45க்கு கடற்கரையோரம் வந்து அமர்ந்தோம். கன்வஸ் சாய்மானக் கதிரைகள் வரிசையாகப் போடப்பட்டு சூரியக் குளிப்புக்குத் தயார் நிலையில் கடற்கரை இருந்தது. பால் வெள்ளை மணல். சளக் சளக்கென அலையடிக்கும் கடல். தூரத்தில் பல உயர் மாடிக் கட்டிடங்கள். அழகான காட்சியது.

     

வயதான வெள்ளையர்கள் அரைக் கால்சட்டை ரி சேட்டுடன் அமர்ந்திருக்க, இவர்களைச் சுற்றி இளம் தாய் கன்னிகள் சுளன்றபடி திரிந்தனர்.  ‘பார்!  பென்சனை எடுத்து விட்டு வெள்ளைகள் வந்து செய்கிற வேலை இது தான்!’ என்று என் கணவர் நமட்டுப்  புன்னகையுடன் கூறினார்.

நாம் சுமார் பத்துப் பேர், வேகப் படகில், ஸ்பீட் போட்டில் போகத் தயாரானோம். மொழி பெயர்ப்பாளர் வந்த பினனர் எம்மைப் புகைப் படங்கள் எடுத்தனர். அதாவது அவர்களது புகைப்படப் பிடிப்பாளர் எம் அனைவரையும் படம் எடுத்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நாம் எம்மைப் படம் எடுக்கும்படி அவர்களைக் கேட்கவே இல்லையே என்று.

ஆனால் என் கணவர் ‘ பாரேன்!  எவ்வளவு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு என்று! சடுதியில் ஏதும் விபத்து ஏற்பட்டாலும் ஒரு பாதுகாப்புக்கு படம் எடுக்கிறார்களப்பா’ என்று விழியகலக் கூறினார். நினைத்துப் பார்க்கும் போது இது சரியாகவே இருந்தது.

பற்றியாவிலிருந்து கிழக்குப் பற்றியா ஓரமாக தாய்லாந்து வளைகுடாவில் 7கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  கோ லான் (koh larn)  எனும் பெயர் கொண்ட கோறல் தீவுக்குப் புறப்பட்டோம். 44சதுர மீட்டர்கொண்டது இத்தீவு. அருகருகாக 3 தீவுகள் உள்ளது. கோ குறொக், (koh krok) கோ சக்  (koh sak)  என்பன மற்றைய தீவுகள் பெயர்.          

——–பயணம் தொடரும்.—————–

வேதா. இலங்காதிலகம்.  
ஓகுஸ்   டென்மார்க்.
11-2-2009.

                             

தாய்லாந்துப் பயணம். அங்கம் 17 .

எனது பயண அனுபவத்தில் மூன்றாவது பயணமாக
தாய்லாந்துப் பயணம். அங்கம் 17.

முன்னைய  Best bangkok house   வாடிவீட்டில்

   உணவகம்.

காலை உணவுக்கு எமக்கு இரண்டு தெரிவு தான். இதுவா அதுவா என்பார்கள், இதுவென்று அதில் ஒன்றைத்தான் தெரிவு செய்ய முடியும்.

ஆனால்  Ten star hotel ல் காலையுணவுக்குப் பல வகை உணவு செய்து சூட்டுடன் மூடி வைத்திருந்தார்கள்.

 

விரும்பியதைத் தெரிவு செய்து எடுக்கலாம். சலாட், ரோஸ்ற் பாண், பலவகைப் பழங்கள், முட்டை, நூடில்ஸ், பொரியல் சோறு, இறைச்சி, மீன் கறி

என்ன! ஆச்சரியமாக உள்ளதா!

இந்தப் பகல் உணவு போன்றதை ஆபிரிக்க மக்கள் தெரிவு செய்கிறார்கள். பலவகை பழக் கலவை அதாவது ஜாம், வட்டில் அப்பம் போல ஒரு வகை என்று பற்பல விதத் தெரிவுகள். மிக திருப்தியாக, மகிழ்வாக இருந்தது. காலையுணவு மிக அருமை என்று கூறலாம். நானும் மச்சம், மாமிசம் உண்பதில்லை. பயணம் முடியும் வரை நாம்  இங்கே தான் தங்கினோம்.

சுற்றுலாவுக்காக வெளியே போய் ஒரு நாள், இரண்டு நாட்கள் இரவு தங்கி வரும் சுற்றுலாக்களும் இருந்தது. நாம் ஒரு நாள் அரை நாள் பயணங்களையே தெரிவு செய்தோம்.

சற்றுசக்(chatu chak) என்று  ஒரு சந்தை உண்டு. இதைப் பார்க்க விரும்பினோம். ருக் ரக் என்று அழைக்கும் முச்சக்கர வண்டியில் இன்னும் ஏறவில்லை என்பதால் அதில் போவோம் என்று காலையுணவு முடித்துக்  கிளம்பினோம்.

 tuk tak

சைனா ரவுணில் தான் சற்றுசக் இருக்கென்று எண்ணி பேரம் பேசினோம். 30 பாத் என்று பேரம் பேசி முடிவாக்கி பயணித்தோம்.

சிறிது தூரம் போக வண்டிச் சாரதி, அங்கே போக முதல் ஜெம் பலஸ்க்குப்  போவோம் என்று வற்புறுத்தினான். எவ்வளவோ மறுத்தும் கூட அடம் பிடித்தான். ஆக்கினை தாங்காமல் இதோ பார் நேற்று போய் இந்த மோதிரம் வாங்கினோம், அங்கே பார்க்க எமக்கு ஒன்றும் இல்லை என்றோம். அத்தோடு விட்டு விட்டான்.

பிறகு 30 பாத் போதாது இன்னும் கூட தரவேணும், 150 பாத் என்று அந்தச் சாரதி வாகனம் ஓடியபடியே எம்முடன் வாய்த் தர்க்கம் பண்ணினான். 10 நிமிடத்தால் பட்டுனாம் சந்தை வந்தது. இதில் எங்களை இறக்கி விடு உன்னோடு நாம் வரவில்லை என்று இறங்கி விட்டோம். இனி ருக் ரக்கில் ஏறவே கூடாது, இவர்கள் பொல்லாத ஏமாற்றுக்காரர்கள் என்று முடிவெடுத்தோம்.

ஜெம் பலஸ்க்கு எங்களைக் கூட்டிப் போனால் இவர்களுக்கு ஒரு கமிசன் உண்டு என்று நினைக்கிறோம். இல்லாவிடில் என்ன சித்தப்பன் பெரியப்பன் வீடா? யாரைப் பார்த்தாலும் ஜெம் பலஸ்க்கு வா வாவென்று கேட்க! 

பின்பு ஒரு டாக்சி ஒன்று பேசினோம்  100 பாத் என்று கேட்டான், சரி என்று ஏறினோம். ராக்சி மீட்டரும் அவன் கேட்ட பணமும் சிறிது வித்தியாசம் தான். ஆயினும் ஏற்றுக் கொண்டோம். சற்றுசக் எனும் சந்தை சைனா ரவுணில் அல்ல வேறு பக்கத்தில் இருந்தது. நாம் தான் பிழையாக எண்ணி விட்டோம். இது                                          

உலகத்திலேயே மிக நீளமான சந்தையாம். தாய்லாந்தின் பழைய, வடக்கு பேருந்து நிலையத்தின் எதிர் புறத்தில் உள்ளது. பாங்கொக்கின் வடக்கு முனையில் உள்ளது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தான் திறக்கப் படுகிறது. 8,000 த்திலிருந்து 15,000 கடைகள் உள்ளது. 35 ஏக்கர் பரப்பளவு விஸ்தாரம் கொண்டது. ஒரு நாளுக்கு 2இலட்சம் மக்கள் கொள்வனவுக்கு வருகிறார்களாம்.

எல்லா விதமான பொருட்களும் இங்கு வாங்கலாம். இன்று காணும் பொருள் நாளை இருக்காது. எங்கும் காணாத பொருளும் இங்கு காணமுடியும். திறந்த பொது நிலம். கூடாரம் மாதிரி வெயிலுக்கு மேலே துணிகள் கட்டியுள்ளனர். அங்கு போனதும் உடனே எமக்குத் தொப்பிகள் வாங்கினோம். கொழுத்தும் வெயில். சூரிய வெயிலுக்குக் குளுகுளு சூரியக் கண்ணாடிகள் வைத்திருந்தோம்.

   

வீட்டுச் சாமான்கள், அலங்காரச் சாமான்கள், பூச்செடிகள், பாம்பு, முகமூடிகள், மணிக்கூடு, கைத்தொலை பேசிகள், மரச் சாமான்கள், பலவிதமான பைகள், வெள்ளி நகைகள், பீங்கான் பொருட்கள், செருப்பு, சப்பாத்துகள், உடைகள் இன்னும் பலப்பல. உணவுகளும் விதம் விதமாக இருந்தது.

நுங்கு குலையாக இருந்தது.

 

பார்த்ததும் ஆசையாக வாங்கினோம். நுங்கை வெட்டி பெரிய கண்ணாடிக் குவளையில் போட்டு கரண்டியும் தந்தார்கள். அதை பகல் உணவாகச் சாப்பிட்டோம். நல்ல ருசி என்று இல்லை, சும்மா பரவாயில்லை.

7,8 பேருடன் இங்கு வந்தால் உடனே யாவரும் பேசி இரண்டு இரண்டு பேராக பிரிந்து சுற்றட்டாம். ஏனெனில் காணாமல் போய்விடுவீர்கள் என்கிறார்கள். இடத்தின் படத்தையெடுத்து எங்கு சந்திப்பது என்று பேசி ஒழுங்கு செய்தே சுற்ற வெளிக்கிடுங்கள் என்பது சுற்றுலாத் தகவல்.

சில பொருட்களை வாங்கிக் கொண்டு 3,4 மணி போல மறுபடியும் ஒரு ரக்சியிலேயே அறைக்கு வந்தோம்.

——-பயணம் தொடரும்——–

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
4-2-2009.

I anthimaalai web site:-       http://anthimaalai.blogspot.com/2011/09/17.html

 

                         

தாய்லாந்துப் பயணம். அங்கம் .16

எனது பயண வரிசைகளில் மூன்றாவது பயணம்

தாய்லாந்துப் பயணம். அங்கம் 16.       

1432ல் தாய்லாந்து அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது, அதாவது கம்போடிய அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது  புத்தர் சிலையையும் தம்மோடு தாய்லாந்து அயோத்தியாவிற்கு எடுத்து வந்தனர். இப்படியே காலத்திற்குக் காலம் அரசரும் இராசதானிகளும் மாறமாற இச் சிலையும் இடங்கள் மாறி, இன்று நிரந்தரமாக எமரெல்ட் (மரகதம், பச்சை) புத்தாவென இங்கு வைக்கப்பட்டுள்ளது.

வெப்பம், மழை, குளிர் காலங்களிற்கென 3வகை தங்க ஆடைகள் இச் சிலைக்கு உள்ளதாகவும் விழாக்காலங்களில் இதைப் பாவிப்பதாகக் கூறப்படுகிறது.                                                                        

ஏமரெல்ட் புத்த கோயில் பார்த்த பின்பு சிறிது தூரம் வாகனத்தில் பயணித்தோம் .

மாபிள் பலஸ் எனும் இடம் வந்தோம். ” வாற் பெஞ்சமாபோபிற் டுசிற்வனராம் ” என்பது இந்த இடத்துத் தாய்லாந்து மொழிப் பெயா.

இத்தாலி  Floranc carrera marble  கொண்டு வந்து இந்தக் கட்டிடம்  1899ல் கட்ட ஆரம்பித்து 10 வருடத்தில் கட்டப்பட்டதாம். கிங் சுலாலொங் கோண் அதாவது ராம் 5 இதைக் கட்டினாராம். இராசகுமாரன் நாறீஸ் எனும் பிரபல கலைஞர் கிங் ராம் 4ன் மகன் இதை வரைந்தாராம், அதாவது டிசைன் பண்ணினாராம். இக் கட்டிடத்தில் சுற்றிவர உள்ள சாலையில் 53 புத்த உருவங்கள் உலகின் பல் வேறு இடங்களிலுமுள்ள அல்லது ஆசியாவில் உள்ள முழு உருவங்களும் இங்கு வைத்துள்ளனர்.

பிரதான சாலையில் 2.5 தொன் நிறையுள்ள வெண்கல புத்தர் சிலை உள்ளது. நீலநிற பின்னணி ஒளியில் இது துல்லிய அழகுடன் விளங்குகிறது.

வாசற் பகுதியில் வெள்ளை நிற மாபிளில்  சிங்க உருவம் காவலுக்கு உள்ளது. அருகில் உள்ள நீரோடையில் அழகிய பாலம் என்று அனைத்தும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

பாதணிகளைக் கழற்றி வெளியே வைத்துத் தான் கோயில் உள்ளே போக முடியும். உள்ளே மலர் அலங்காரம், மின்னொளி என்று  மிக ஆடம்பரமாக இருந்தது. மக்கள் வந்து அமைதியாக இருந்து மௌனமாக தியானித்துத் செல்கின்றனர். நாமும் அப்படியே சிறிது நேரம் நிலக் கம்பளத்தில் அமைதியாக அமர்ந்திருந்து திரும்பினோம்.                                    

மொழி பெயர்ப்பாளர் இறுதியாக எங்களை  ஜெம் பலஸ்க்குக் கூட்டிப் போனார்.

    

அங்குள்ள உத்தியோகத்தர்கள் எமக்குக் குளிர் பானம் தந்து இரண்டிரண்டு பேராக எம்மை தமது கண்காணிப்பில் உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்கள்.                             

சொல்லவே தேவையில்லை. கண்கள் பறிக்கும் வண்ண வண்ண இரத்தினக் கல் நகைகள். வாங்கு வாங்கு என்று எம் தலையில் கட்டுவதிலேயே எம்மை அழைத்துச் சென்ற பெண்மணி குறியாக இருந்தார்.

இறுதியில் கல் வைத்த சுத்த வெள்ளி மோதிரம் ஒன்றை நான் வாங்கினேன். 600 பாத், அதாவது 100 குரோணர்கள் தான். கணவரோ ‘இங்கு வந்த ஞர்பகமாய் ஒரு வைர மோதிரம் வாங்கேன்!’ என்று மிகவும் வற்புறுத்தினார். எனக்கோ தங்க நகைகளில் உள்ள ஆசை விட்டுப் போய் விட்டது. “”மினுங்கும் வெள்ளைக் கற்கள் வைத்த இந்த வெள்ளி மோதிரம் வாங்குகிறேன். இதை மகள் பார்த்து விரும்பினால் அவளுக்கே கொடுத்திடுவேன், சம்மதமா “”  என்று கணவரிடம் கேட்டுத் தான் வாங்கினேன்.

இளையவர்களுக்கு தங்க நகையிலும் பார்க்க வெள்ளி தானே மிகவும் பிடிக்கும்! அதே போல இங்கு வர மகள் அதைப் பார்த்ததும் ஆசைப்பட்டாள். ‘ இந்தா உனக்குத்தானம்மா!’ என்று அவளுக்கே கொடுத்து விட்டேன்.

அன்றைய நாள் பயணம் முடிந்தது. மாலை 6 மணிக்கு அறைக்குத் திரும்பினோம்.                                            
அங்கு நினைத்தவுடன் மழை வரும். யாரைப் பார்த்தாலும் குடையும் கையுமாகத்தான் செல்வார்கள்.

ஒரு நாள் சாமான்கள வாங்கி வரும் போது நல்ல மழை வந்தது. கடைகளில் ஒதுங்கி நின்று விட்டு மழை விட நடக்கத் தொடங்கினோம்.

சிறிது தூரம் வர முழங்காலளவு வெள்ளம் வழியில் நின்றது. செருப்பைக் கழற்றி கையில் எடுத்துக் கொண்டு, கால்சட்டையையும் முழங்காலுக்கு மேல் சுருட்டிக் கொண்டார் கணவர். நான் பாவாடை கட்டியதால் தப்பித்தேன். மாற்றி மாற்றி தெருக்களைச் சுற்றிச் சுழன்று ஆடைகளும், ஏன் நாமும் கூட நனையாது அறைக்கு வந்து சேர்ந்தோம்.

சிரி சிரியென்று சிரித்தபடி நல்ல ஜாலியாக அனுபவித்து வந்தோம். அறைக்குள் வர நல்ல இதமான சூடு சொகுசாக இருந்தது.     

(கீழ் உள்ள படங்களில் நிறங்கள் பலவான வாடகை வண்டிகளை (ரக்சி) பார்க்கிறீர்கள் இது அரச மாளிகைக் கட்டிடங்கள்.)

                 

—பயணம் தொடரும்—-

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ்,  டென்மார்க்.
22-1-2009.      

                                     

தாய்லாந்துப் பயணம் – அங்கம் 15.

எனது பயண வரிசைகளில் பயணம் மூன்றின்

தாய்லாந்துப் பயணம் – அங்கம் 15.   

சைனா ரவுணைத் தாண்டியதும் அருகிலேயே flower market  பூக்களின் சந்தை வந்தது.  இதை pak khlong talat  என்று கூறுவர்.

60பது வருடமாக இச் சந்தை நடக்கிறதாம். தெருவின் வலது இடது பகுதியில் மிகப் பரந்த நீண்ட தூரத்திற்கு பூக்கடைச் சந்தையாகவே இருந்தது. சியாங்மய், சியாங்றய் என்ற குளிரான பிரதேசங்களில், சுற்று வட்ட மாநிலங்களில் இருந்தும் எல்லா விதமான பூக்கள் அதிகாலையில், படகிலும், பேருந்துகளிலும் இங்கு வருகிறதாம். மிக ஆச்சரியமாகவே இருந்தது. இங்கும் வாய் பிளந்து அம்மாடியோவ்! என்றேன்.

    

இப்போது புரிந்தது முதலாவது வாடி வீட்டில் கட்டிலில் பூவும் மேசையில் பூவும் எப்படி வந்தது என்று. பெரிய வாடிவீடுகளுக்கு பதிவு செய்து அதாவது  order  பண்ணி பூக்களை இங்கிருந்த தான் எடுப்பிக்கிறார்கள் என்பது புரிந்தது.    ( பூக்கடைகள்)

   

தெருவில் வாகனம் மெதுவாகப் போனாலே தரிப்பு இடத்திற்கு ஓடி வந்து மல்லிகைப் பூமாலையை விற்பனைக்கு நீட்டுகிறார்கள். காரணம் இறை பக்தி தான். இல்லாவிடில் இந்தியா மாதிரி மனைவிக்குப் பூக் கொண்டு போக இருக்காதல்லவா? 

அரச மாளிகை அனைவரும் பார்க்க வேண்டியதும் முக்கியமான சுற்றுலா இடமுமாகும். காணக் கண் கோடி வேண்டும்! அத்தனை அழகிய கட்டிடங்கள், தொழில் நுட்ப, கலைத் திறமைகள் கொண்டவை.

     

றோயல் கிறாண்ட் பலஸ் 218,000 சதுர மீட்டர் இடத்தில், சாயோ பிறையா நதி தீரத்தில் பாங்கொக்கில் உள்ளது. சக்ரி பரம்பரையில் ராமா ஒன்று அரசுக்கு வந்த போது அன்று மறுகரையில் தோண்புரியிலிருந்து இக் கரைக்கு அரசினை மாற்றினார்கள். மந்திரிகள் காரியாலயம், பாதுகாப்பு அமைச்சு, அரசர் குடியிருக்கும் மாளிகை என பல காரியாலயக் கட்டிடங்களுடன், சுற்றி வர வெள்ளை மதிலுக்குள் அமைந்த மாளிகை இது.

1783ல் மதில் சுவர்கள் கட்டப்பட்டது. 3 பிரதானமான அழகிய கோபுரங்களுடன்

   

வேறும் பல சிறு கோபுரங்களுடன் அமைந்த மாளிகை இது. தங்க நிறக் கோபுரம் இலங்கைப் பாணியிலும், மற்ற இரண்டும் தாய்லாந்து கம்போடியா மாதிரியிலும் அமைந்துள்ளது.  கோபுரங்கள் மினுங்கும் கற்கள், கண்ணாடிக் கற்கள், தங்கநிற பீங்கான் கற்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. 10 துர்த்தேவதைகள், குரங்குகள், காவலர்கள், உருவங்களும் சுவர்களில் செதுக்கியுள்ளது.

           

முன்பு 158 வருடங்களாக அரசர்கள் இங்கு வசித்து வந்தனர். 20ம், நூற்றாண்டிலிருந்து இங்கு அரசர்கள் வாழ்வதை நிறுத்திக் கொண்டனர். முழுக்க முழுக்க உல்லாசப் பயணிகளுக்காக 3 சாலைகள் திறந்துவிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய – தாய்லாந்து தொழில் நுட்பத்தில் கட்டிடம் வித்தியாசமான கூரையுடன் உள்ளது. இந்த வெள்ளை மதிலுக்குள்ளே தான் அரச தேவாலயமான Emareld  புத்தர் கோயிலும் உள்ளது. இக் கட்டிடங்களும் இந்திய சினிமாவில் காதல் காட்சிகளில் வந்துள்ளது. இங்கு மரியாதையான ஆடைகளுடன் தான் போக முடியும். மிகவும் கட்டையான ஆடைகளுடன் போக முடியாது. இதைக் கண்காணிக்க உத்தியோகத்தர் உள்ளனர்.

இந்த அரசமாளிகை ரட்னா கோசின் தீவு அயோத்தியா மாளிகைகளின் மாதிரியில் கட்டப்பட்டுள்ளது. முழுவதுமான தாய்லாந்தின் பிரபலமான, மிகப் பரந்த தங்க நகரமான பாங்கொக்கின் அடையாளம் (சிம்போல்) இந்த றோயல் அரச மாளிகையாகும். புத்த மத மேன்மையுடைய தாய்லாந்து மக்களுக்கு, நான்கு சுவருக்குள் உள்ள, இந்த எமரல்ட் புத்த கோயில் மெக்காவாக உள்ளது. 45 செ.மீ நீளமான புத்தர் சிலை பச்சை நிற  jade ல், பச்சை ரா கல்லில் ஆனது. இதற்கு தங்கத்தில் 3 காலநிலைக்குரிய ஆடைகளுடன் தேவாலயத்தில் நல்ல பீடங்கள் அமைத்துப் பத்திரப் படுத்தியுள்ளனர்.

எமரெல்ட் புத்த கோயிலுக்கு

   (ஆடைகள் மாற்றும் போது…)

ஒரு சரித்திரம் உண்டு. பழைய கட்டுக் கதையின் படி 43ம் நூற்றாண்டு கி.முன்னர் பாடலிபுரத்தில் நாகசேனா எனும் இடத்தில் இச் சிலை உருவாக்கப்பட்டது. பாடலிபுரம் இன்று பற்னா என்று கூறப்படுகிறது. பாடலிபுரத்தில் 300 வருடங்கள் இச் சிலை இருந்த பின் ஒரு பொது யுத்தம் வந்த போது சிலையைப் பாதுகாக்க இச் சிலை சிறீலங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 457ம் ஆண்டு பர்மிய அரசன் அனுருத் ஒரு தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பி தனது நாட்டில் புத்த சமயத்தை உருவாக்க, மத நூல்களும், எமரெல்ட் புத்த சிலையையும் தனக்குத் தரும்படியாகக் கேட்டானாம். இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கப்பலில் இதை எடுத்துச் செல்லும் போது புயல் ஏற்பட்டு, கப்பல் பாதையைத் தொலைத்து, கம்போடியாவில் கப்பல் நிலையூன்றியதாம். 1432ல் தாய்லாந்து அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது இந்த புத்தர் சிலையையும் தம்மோடு தாய்லாந்தின் அயோத்தியா நகரத்துக்கு எடுத்துச் சென்றனர்

.—பயணம் தொடரும்– —–

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
18-1-2009.

In anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/08/15.html

                                       

Previous Older Entries