தாய்லாந்துப் பயணம்.- அங்கம். 11

எனது பயணங்களின் வரிசையில் மூன்றாவது பயணம்.                             
தாய்லாந்துப் பயணம்.-  அங்கம். 11.   

 

தாய்லாந்து மொழியில் வற் என்றால் மடாலயம்  monastry  என்பது கருத்து. கோயிலும் கோயிலுடன் சேர்ந்த இந்த அமைப்பு, முழு தாய்லாந்திலும் 21,000  wats  இருக்கிறதாம். பாங்கொக்கில் மட்டும் கிட்டத்தட்ட 200 வற்கள் இருக்கிறதாம். முழு தாய்லாந்திலும் 27,000 புத்த கோயில்கள் உள்ளதாம்.

வற் போ கோயிலின் உள்ளே போகக் கட்டணம் எல்லாம் மொழி பெயர்ப்பாளரின் பொறுப்பு.

கிறிஸ்துவிற்கு முன் 269லிருந்து 237களில் இந்திய அரசன் அசோகச் சக்கரவர்த்தி காலத்தில் பாடலிபுரத்திலிருந்து சோனா தேராவும், உத்தர தேராவும் சென்று சுவர்ண பூமி வட்டாரத்தில் (மலேசியா, பர்மா, சுமத்திரா, தாய்லாந்தில்) புத்த மதம் பரப்பியுள்ளனர். இந்த வற் போ கோயிலின் பெயர் அப்போது யெலுவன விகார என்று இருந்ததாம்.

இந்தக் கோயிலில் இருந்து சிறிது தூரம் நடந்து ஒரு ஆற்றின் கரைக்கு வந்தோம். சாயோ பிறையா chao phraya  எனும் இந்த ஆற்றங்கரையில் கடவைப் படகில் போக அனைவருக்கும் பயண அனுமதிச் சீட்டுகளை மொழிபெயர்ப்பாளர் எடுத்தார்.

ஆறு பொங்கிப் பிரவாகித்து ஓடியது, மழை பெய்து வெள்ளமும் சேர்ந்து ஒரே கலங்கலாக இருந்தது. ஆற்றின் இக் கரையிலிருந்து அக்கரை போக வேண்டும். நீண்ட படகு. சுற்றி வர அடைக்காத, மேலே கூரை போட்ட பிளாஸ்டிக் இருக்கைகள் கொண்ட யந்திரப் படகு. மிக வேகமாக ஓடியது. இக்கரையிலிருந்து பார்க்க அக்கரை, சாயோ பிறையாவின் மேற்குக் கரைக் கோயிலின் கோபுரம் மிக அழகாகத் தெரிந்தது.

ஊரில் தென்னையளவு கிணறுகள் பார்த்து, எனக்குத் தண்ணீர் என்றாலே பயம். 

ஆனால் படகில் ஏறியதும், பயணம் செய்ததும் மிகக் குஷியாக இருந்தது. சிறிதளவு பயமும் இருக்கவில்லை.

இந்த சாயோ பிறையா ஆறு 370 கி.மீட்டர் நீளமானது. இதன் ஆதி காலப் பெயர் மீனம். இந்த நதி பிங், வங், நான் (யேn) யோம் எனும் கிளை நதிகளாக மேலே மலைப் பகுதிகளிலிருந்து ஊற்றாகி தாய்லாந்து நடுப்பகுதிக்கு வந்து தா சின் – சாயோ பிறையா என்று இரு கிளையாகி தாய்லாந்து வளைகுடாவில் சமாந்தரமாக விழுகிறது. 

 

வழமை போல்  மக்கள் குடிகள் இந்த ஆற்றின் கரையில் தான் தமது ஆதி வாழ்வைத் தொடங்கினர். மீன் பிடியும், பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதியும், பிரதானமாக அரிசி விளைச்சலின்   கிண்ணமுமாக இந்த ஆறு இருக்கிறது.  river of king ஆற்றின் அரசன் என்றும் இந்த ஆற்றைக் கூறுகின்றனர். இது 25 மீட்டர் ஆழமுடையது என்று எமக்கு மொழி பெயர்ப்பாளர் கூறினார்.

       

ஐந்து நிமிடம் கூட போயிருக்காது அக்கரை சேர்ந்தோம். பாங்கொக் யாய் மாவட்டத்தில் அமைந்த வற் அருண்  Wat Arun  என்ற கோயிலை அடைந்தோம்.  Temble of dawn  விடியலின் கோயில் என்றும் இதைக் கூறுவதுண்டு. அதிகாலை ஒளி கோயிலின் மேற் பகுதியிற் பட்டு அற்புதமாக பிரதிபலித்து வானவில்லின் வர்ணஜாலமாகத் தெறிப்பதால் இப் பெயர் வந்ததாம். கோயிலின் முழுப் பெயர் வற் அருண்ரட்சாவரராம் ரட்சாவோர மகாவிகாரா. வெளியே தெரியும் நடுவில் இருக்கும் கோபுரமே இதன் முக்கிய பகுதியாகும்.

        

செங்குத்தான படிகள் இரண்டு மாடித் தட்டுகளாக உள்ளது. 

         

over the second terrace are four statues of the hindu god indra riding on Erawn.  2வது மாடித் தட்டில் சைவக் கடவுளான இந்திரனின் 4 உருவம் ஐராவதம் யானையில் போவதாக உள்ளது. மொழிபெயர்ப்பாளர் எறவன் என்று கூற, நான் முதலில் இறைவன் என்றே விளங்கினேன். பின்னர் தான் எனக்குத் தெளிவானது அது ஐராவதம் யானை என்று. மொழிபெயர்ப்பாளரின் ஆங்கில உச்சரிப்பும் புரிந்து கொள்வது சிரமமாகவும் இருந்தது.

இரண்டு சீனப் போர் வீரர்களின் உருவமும் வற் அருண் கோயிலுக்குக் காவலாக வாயிலில் செதுக்கப்பட்டுள்ளது.    

     

 

 

–பயணம் தொடரும்-   

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
22-12-2008.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/07/10.html

                                         

தாய்லாந்துப் பயணம். – அங்கம் 10.

எனது சுற்றுலாப் பயணங்களில் மூன்றாவது சுற்றுலாப் பயணம்.
தாய்லாந்துப் பயணம். –  அங்கம் 10.

 

5ம் திகதி பகல் வாடிவீட்டு வரவேற்பறையில் 12.00 மணிக்கு முன்னரே தயாராக இருந்தோம்.

               

மொழி பெயர்ப்பாளர் 12மணிக்கு ஒரு பெயர்ப் பட்டியலுடன் வந்து எங்களைத் தேடினார், சென்று கை குலுக்கி இணைந்தோம். எங்களை ஒரு மினி வானில் அழைத்துப் போனார். எம்மோடு இன்னும் 4, 5 பல்லினத் தம்பதிகளையும் ஒவ்வொரு வாடிவீடாகச் சென்று சேகரித்துக் கொண்டு ஒன்றாக பயணித்தோம்.

தெருவில் தெருக்கள் பெயர் எழுதும் நீலம், பச்சை நிற பெயர்ப் பலகைகள் தலைக்கு மேலே தெரியுமே! அதில் முக்கிய தெருவில் தெருவின் படம் நவீன பார்த்த சாரதி போல, அதாவது நவிகேட்டர் போல கீறப்பட்டு, அந்தப் பாதை எந்த இடத்தை நோக்கிச் செல்கிறது என்று தெளிவாக எழுதிக் காட்டியிருந்தது. நாம் நிற்கும் இடமும் ஒளி போட்டு மின்னியபடி இருந்தது. இது வேறு நாட்டில் நாம் காணாத ஒரு புது விடயமாக, மிகத் தெளிவான வழி காட்டியாகத் தெரிந்தது. ஒரு வேளை இப்போது இந்த முறை பல இடங்களிலும் வந்து விட்டதோ எனவும் தெரியவில்லை.                                                          

ராம்1, ராம்4, ராம்5, என்று தெருக்கள் பெயர்கள் காணப்பட்டது. ஆரம்பத்தில் இது என்ன! ராம், ராம் என்று பெயர்கள! என்பது புரியாத புதிராக இருந்தது. பின்பு தான் புரிந்தது அவை அரசர்கள் பெயர் என்று.

இதை விட, தெருவெல்லாம் நல்ல வண்ணமயமாக வாடகை வண்டிகள், டாக்சிகள் ஓடின. பச்சை, நீலம், மெல்லிய நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் இவைகள் காணப்பட்டது. கற்பனையில் பாருங்கள் வண்ணமயமாக இவை தெருவில் ஓடுவதை! இதற்கு முன்னர் ஓரிரு நிறத்தில் வாடகை வாகனங்களைக் கண்டோம். இப்போது பல நிறங்களாகத் தெருவில் ஓடியது, ஒரு வித அழகாகவும், விசேடமாகவும் தெரிந்தது.

இவைகள் தனியார் கூட்டுறவுக் குழுமங்கள் நடத்துவது. ஒவ்வொரு இணையமும் தம்மை அடையாளப் படுத்தத் தமக்கென ஒரு நிறமும், வண்டியில் குழுமப் பெயர்களுடனும் உண்டு.

வாடகை வாகனச் சாரதிமாரும் தமது அறிமுக அட்டையை வாகனத்தில் ஒட்டியுள்ளனர். எம்மால் அவர்கள் பெயர் முகவரியை வாசிக்க முடிகிறது. அரை மணி நேரத்திற்கும் மேலாக ஓடி Wat pho எனும் reclaining  புத்தா என்ற கோயிலுக்குச் சென்றோம்.

தூங்கும் புத்தர் கோயில். உள்ளே போனதுமே கோயிலின் பிரசித்தம் வெளிப்படையாகவே தெரிந்தது. என்னவென்கிறீர்களா? இந்திய சினிமாக்களில் தாய்லாந்தில் கடற்கரை தவிர்ந்த காதல் காட்சிகள் எடுக்கப்படும் அழகிய மாளிகை மாதிரியான இடங்கள் தான்.    இவைகள். மிக அழகான தொழில் நுட்பக் கலையழகோடு இக் கோயில்கள் விளங்குகிறது.

முதன் முதலில் இலங்கை நடிகர் ஆகாஷ் (இலண்டனுக்குப் புலம் பெயர்ந்தவர்)  நடித்த படத்துக் காதல் காட்சி,   ஜாம்பவான் படத்தில் நிலா- பிரசாந்தின் காதல் காட்சியும் இங்கு தான் எடுக்கப் பட்டுள்ளது,   எல்லாக் கோயில்களையும் துண்டு துண்டாக எடுத்துக் கலந்து காட்டியுள்ளனர்.

இக் கோயிலில் கைப்பிடியுள்ள கோயில் மணிகளை நிலத்தில் வைத்தது போன்ற தோற்றமுடைய உருவில் கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளது.

    

அழகென்றால் அழகு! அத்தனை அழகு! உள்ளக அனுமதிக் கட்டணம் 20 பாத்.. 20 ஏக்கர் விஸ்தாரமான இடத்தில் உள்ள மிகப் பெரியது இக் கோயில்.                                                       

இங்கு படுத்திருக்கும் புத்தர் 46 மீட்டர் நீளமும், 15 மீட்டர் உயரமுமான தங்கக் கவசம் போட்ட சிலை. இது தாய்லாந்தில் உள்ள பெரிய புத்தர் சிலையாகும். இச் சிலை புத்தரின் நிர்வாணா எனும் நிலையைச் சித்தரிக்கிறது. புத்தரின் கண்களும், பாதமும் முத்துகள் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதாவது  mother of pearl  வைத்துக் கட்டப் பட்டுள்ளது.

         

இக் கோயில் 200 வருடங்களுக்கு முன் பாங்கொக் தலைநகராக முன்னர் கட்டப்பட்டு, காலத்திற்குக் காலம், இறுதியில் ராமா ஒன்றினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள கட்டிடத்தில் 394 புத்தர் சிலைகளைப் பார்த்தோம்.

தாய் மசாஜின் பிறப்பிடமே இந்தக் கோயில் தானாம். 1962ல் தாய்லாந்தின் பாரம்பரிய மருத்துவமும், மசாஜ்ம் ஆக முதன் முதல் சர்வகலாசாலை இங்கு தான் உருவகமான பெருமையும் கொண்டது இக் கோயில்.

புத்தபிக்குப் பாடசாலையும் அருகே உள்ளது. மிக ஆடம்பரமான காட்சியாக இக் கோயிலின் அழகு இருந்தது. இதைப் பார்க்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்தது மிக மகிழ்வைத் தந்தது.           

 –பயணம் தொடரும்—-                                                          

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-12-2008.

In anthimaalai web site –  http://anthimaalai.blogspot.com/

 

 

                                  

தாய்லாந்துப் பயணம் – அங்கம். 9

 

எனது பயணங்களின் வரிசையில் மூன்றாவது
தாய்லாந்துப் பயணம் – அங்கம். 9

எனது கணவரை டென்மார்க்கில் பல தடவை பாதம் மசாஜ் செய்ய போகும்படி கேட்டும் மறுத்திட்டார். நீங்கள் போனால் தான் நான் போவேன் என்று, அங்கு நான் அடம் பிடித்தேன். வந்தார். அவருக்கு நன்றாகப் பிடித்துக் கொண்டது. தனக்கு நிறைய காலில் நோவு இருந்தது. மசாஜ்க்குப் பின் அதெல்லாம் போய்விட்டது என்று மகிழ்ந்தார். இப்போதானால் மசாஜ்க்குப் போக வேண்டும் நல்லது என்கிறார்.

அங்கிருந்து வரும் போது ” நாங்களே ஒருவருக்கு ஒருவர் மசாஜ்  செய்யலாமே கம்பசூத்திரமல்ல இது’*  என்றார் என் கணவர்.  இங்கு இப்போது கிழமைக்கு ஒரு தடவை நானே அவருக்கு பாதம் மசாஜ்  செய்து விடுகிறேன். அது வேறு கதை.                                      

காலையுணவோடு வெளியே செல்வோம். மாலையில் அறைக்கு வரும் போது இரவு உணவையும் கையோடு எடுத்து வந்திடுவோம். குளித்து ஆடை மாற்றினால் களைப்பில் பிறகு வெளியே போக மனம் வராது.

இளநீரும் வழுக்கையும் கூட ஒரு நேர உணவு அல்லது இரண்டு மணிக்கு ஒரு கொறியலாகவும் எடுத்தோம்.

தெருவோரம் நடந்தால் வாயூறும். குளம்பு, ரசம் போல ஒரே உணவு வாசனை தான்.  நான்கு சில்லு வண்டில். அதில் ஒரு குசினியே இருக்கிறது. கரி அடுப்பில் உடனே சமையல் செய்து கொடுக்கிறார்கள்.

   

பெரிய உணவகம் சென்று உண்பது விலை அதிகம். இவர்களிடம் உண்பது விலை குறைவு தான். எமது மகன் ஏற்கெனவே ” ‘நன்கு விதம் விதமாகச் சாப்பிட்டு அனுபவியுங்கள் தெருவோரமானாலும் அவர்கள் மிக சுத்தமானவர்கள்”’   என்று சொல்லியே எங்களை அனுப்பினார். ஆரம்பத்தில் கணவர் விரும்பவே இல்லை. பின்னர் ஒரு நாள் கோழிப் பொரியல் வாங்கிச் சாப்பிட்டார். கோழிக் காலை மாவில் தோய்த்து பொரிக்கிறார்கள். அதை சாப்பிட்ட பின்னர் அவர் கூறினார் ” கொஞ்சம் உப்பும், மிளகாய்த் தூளும் போட்டால் நல்லாக இருக்கும்”… என்று.                                                     

மாம்பழம், பப்பாளிப் பழங்களை சிறு சிறு துண்டாக வெட்டி ஒரு சிறு பொலிதீன் உறையில் போட்டு, ஒரு குச்சியும் வைத்துத் தருகிறார்கள்.( நகரும் வண்டியில் தான்..)அப்படியே நடந்து நடந்து அதைக் குத்திச் சாப்பிட்டோம். மிகவும்  சுவைத்தது.

அன்னமுன்னாப் பழம், அரிநெல்லிக் காய் இருந்தது. பலாப் பழத்தைக் காணவே இல்லை.

எமது வாடி வீட்டிற்கு ஒரு பக்க நிலத்தில் தகரக் கொட்டகை வீடுகள் தான். அங்கிருந்தும் சிலர் சமைத்து வண்டிலில் சாப்பாடு கொண்டு வந்து தெருவில் விற்கின்றனர், நடமாடும் சாப்பாட்டுக் கடையாக. எங்கு மக்கள் அதிகம் கூடுகிறார்களோ அங்கு தேடித்தேடி ஓடி விற்பனைக்கு நிற்கும் விடா முயற்சியாளர்கள் தான் தாய்லாந்து மக்கள்.                                                       

நமது வாடிவீட்டை இரண்டாவது இரவுடன் கணக்கு முடித்தோம். 1000 பாத் விலை கொண்டது. 

ரென் ஸ்ரார் ஹோட்டலில் 5வது மாடியில் 800 பாத் திற்கு மாறினோம். இது மிகப் பெரிய அறை. நன்கு பிடித்துக் கொண்டது. இது கடை வீதிக்கு இன்னும் மிகவும் கிட்டவாகவும் அமைந்தது.

எக்கச் சக்க எண்ணிக்கையில் இந்திய உணவகங்கள். தெருவில் நடக்க முடியாதபடி தரகர்கள் இந்திய உணவக விசிட்டிங் அட்டைகளை கையுள் திணிக்கிறார்கள். நாளுக்கு ஒரு இடமாகச் சென்று உணவுகளை மாறி மாறி ருசித்துப் பார்த்தோம். பிள்ளைகளுடன் கதைக்கும் போது, சாமான் வாங்குவதை விட்டு விட்டு இடங்களைப் பாருங்கள் என்று ஏசத் தொடங்கி விட்டார்கள்.                                    

வாடி வீடுகளில் ஒரு கோப்பு  (ஃபைல்) உண்டு. அதில் சுற்றுலாவிற்காக எங்கு, எத்தனை மணிக்குப் போய்,    எத்தனை மணிக்கு வருவது, என்ன விலையென்ற விபரங்கள் யாவும் உண்டு. அதில் பார்த்து நமக்குப் பிடித்த இடத்தைப் பதிய வேண்டியது தான்.

முதலில் பாங்கொக் நகர சுற்றுலா என்ற பெயரில் இரண்டு புத்த கோயில்களைப் பார்க்க நாம் பெயர் பதிந்தோம். என்ன! புத்த கோயிலுக்கா என்கிறீர்களா! அவை சுற்றுலாப் பயணத்திற்காகத் திறந்து விடப்பட்ட கோயில்கள் தான்!.            

—- பயணம் தொடரும்—-                                          

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

In anthimaalai web site –  http://anthimaalai.blogspot.com/2011/07/9.html

                                        

தாய்லாந்துப் பயணம் – அங்கம் 8

எனது  பயண வரிசைகள் மூன்றில்
தாய்லாந்துப் பயணம் – அங்கம்.  8   
 

பாசம் வைப்பது மோசம் என்பது வாழ்வு அனுபவம். 10 வருடங்களுக்கு முன்பு 1998ல் ஒரு நாள், ……..

அப்போதெல்லாம் இலங்கைச் செய்திகள் அறிய டென்மார்க்கில் தமிழ் தொலைக்காட்சிகள் எதுவும் இல்லாத காலம். கொழும்பில் சிலிங்கோ கட்டிடத்தில்  The Finance company க்கு குண்டு போட்டு விட்டனர் என்று அறிந்து மாலை டெனிஷ் தொலைக் காட்சியைப் பார்த்த போது செய்தியில் சிலிங்கோ கட்டிடம் எரிவது தெரிந்தது.

…’ஐய்யோ! தம்பி வேலை செய்யும் கம்பெனி எரியுது! ” என்று
பதறிய நான் கொழும்புக்குத் தொலை பேசி எடுத்தேன். அன்று வேலையால் தம்பி வீடு வரவில்லை யென்றும், இரண்டு வைத்தியசாலைப் பெயர்ப் பட்டியலிலும் தம்பியின் பெயர் இல்லையென்றும், நாம் அவரைத் தேடுகிறோம் என்றும், தங்கை கூறினாள்.

கொத்தலாவலையின் கம்பெனி அது. என் தம்பி அங்கு நிறைவேற்று அதிகாரியாக (exicutiv staff ஆக) வேலை செய்கிறார் (இந்தக் கட்டுரை எழுதும் போது). எனக்கு ஒரேயொரு, உயிரான தம்பி. குண்டு வெடித்ததும் தம்பி தனது அறிமுக அட்டை, திறப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் கலவரம் வெடிக்க முதல் தனது பிள்ளைகளைப் பாடசாலையிலிருந்து எடுத்திட வேண்டும் என்று இறங்கி ஓடியுள்ளார். மக்களோடு இடிபட்டு அவரது ஆடையில் இரத்தக் கறை பட்டுள்ளது. பொலிசார் சந்தேகப்பட்டுப் பிடித்த 16 பேரில் இவரும் ஒருவராக அகப்பட்டு விட்டார். பிறகு திருவாளர் கொத்தலாவலை வந்து இவர் தனது ஊழியர் என்று கூறி நீதிமன்றத்தில் தம்பியை விடுவித்தனர்.  இது அங்கு நடந்தது.

இங்கு இரவு முழுதும் நான் அழுதபடி.

விடிகாலையில் கொழும்புத் தொலைபேசியில் தம்பி பொலிஸ் நிலையத்தில் இருக்கிறார் என்ற செய்தியைத் தந்தனர். மூன்றாவது நாள் எனது ஒரு கால் நடக்க முடியாது நோவெடுத்தது.

வைத்தியர் முதலில் டிஸ்கோபொலப்ஸ் என்றார். ( முதுகு தண்டில் சவ்வு விலகுவது)

ஓரிரு நாள் படுக்கை ஓய்வின் பின் என்னால் நடக்க முடிந்தது. அது டிஸ்கோபொலாப்ஸ் (இந்த உச்சரிப்பு டெனிஸ் மொழிக்குரியது) இல்லையென்றும் ஆனது. ஆயினும் வைத்தியர் மசாஜ்க்கு எழுதினார்.

அதிலிருந்து தான் நான் 10 வருடமாகத் தேவை ஏற்படும் போது மசாஜ்க்குப்  போவதுண்டு. எப்போதும் பாரம் தூக்க வேண்டாம் என்றனர்.

தாய் மசாஜ் உலகப் பிரசித்தம். இரண்டு நாளுக்கொரு தடவை, தாய்மசாஜ்,  herbal மசாஜ் என்று மாறி மாறி அங்கு நான் போய் செய்தேன்.  கேபல் மசாஜ்  என்பது, மசாஜின் பின் சூட்டுடன் மூலிகைப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுப்பது.

கராட்டி ஆடை போல தொளதொள முக்கால் கால்சட்டை, முக்கால் கை நீட்ட மேலாடை தந்து ஆடை மாற்றக் கூறி ஆடையோடு தான் மசாஜ் செய்தனர் கேபலுக்கு நமது ஆடையில் சாயம் படும் என்று அவர்களது ஆடையோடு தான் படுக்க வைத்து செய்தனர்.

ஒரு முதிரிளம் பெண், சம்சாய் எனது மசாஜ்  பெண் திருமணமாகாதவள்,  அவள் கூறினாள்,  ” இங்கு ஆண்கள் நன்கு குடித்திட்டு குடும்பத்தைக் கவனிக்க மாட்டார்கள். இந்த நிலையை என்னால் சமாளிக்க முடியுமோ தெரியவில்லை. அதனால் தான் திருமணம் புரியவில்லை. இந்த வாழ்க்கை நல்லாயிருக்கு”  என்றாள்.

அந்த நீண்ட அறையில் 6,7 கட்டில்கள் விரித்தபடி, அழகிய தாய் படுதாக்கள் சுவரில் அழகுக்கு தொங்கியபடி. இனிய இதமான மெல்லிய இசை பின்னணியில் இசைந்தபடி, அழகிய பூ சாடிகள், மனம் மயங்கும் வாசனை அறையினுள்ளே.

 

      (for examble  -massage rooms.)

அந்தச் சூழலே நோவை மாற்றி விடும். ஒரு மணி நேரம் அந்த அறையுள் இருந்து வெளியே வரும் போது இந்த உலகமே என் கையுள் என்பது போன்ற மனதிடம் உடற்பலம் வந்தது போல இருந்தது.

மனமுணர்ந்து சேவை செய்தாள் அந்தப் பெண். ஒவ்வொரு தடவையும் அவளை இறுகக் கட்டியணைத்தே விடை பெற்றேன். அவளை மறக்க முடியாது.

இன்றும் அவளது மசாஜ்க்கு என் மனம் ஏங்கித் தவிக்கிறது.

– பயணம் தொடரும்——

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
29-11-2008.

In Anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/07/8.html

 

                          

                            

தாய்லாந்துப் பயணம் -அங்கம் – 7

எனது பயண வரிசைகளில் மூன்றாவது பயணதின்

தாய்லாந்துப் பயணம் -அங்கம் – 7   

காலையுணவு முடித்து அறைக்கு வந்தவுடனேயே கணவர் தொலைக் காட்சியில் செய்தி தான் கேட்பார்.

செய்தியின் பின்ணனியில் படங்கள் வருவதால் ஓரளவு என்ன விடயமென்று ஊகிக்க முடிந்தது. தாய்லாந்து இளவயதினர் ஆணும் பெண்ணுமாகவே செய்தி வாசித்தனர். அவர்கள் மொழியின் தொனியில்  தேவையான இடத்தில் அழுத்தம் கொடுத்து செய்தி வாசித்த முறை மிக கம்பீரமாகவே இருந்தது. தமது மொழியை அவர்கள் அழகாகக் கையாண்டனர்.

ஒவ்வொரு வசனங்களின் முடிவில் முற்றும் தரிப்புக்கு முன் இறுதிச் சொற்களை உச்ச சுருதியில் எம்மவரில் சிலர் உயர்த்தி ராகம் இழுப்பது போல அசிங்கம் எதுவுமே செய்யவில்லை. வாசித்தார்…கூறினார் என்று முடிக்கும் போது அந்த  ர்…ர்..க்குக் கொடுக்கும் அழுத்தம் இருக்கே அது சொல்லும் தரமன்று…( ஒரு வகையில் தமிழ் கொலை தான் என்பது என் கருத்து.)

எமது அழகான தமிழை, தாம் இலக்கம் ஒன்றான செய்தியாளர் என்ற நினைப்பில் சிலர் செய்தி வாசிப்பில் மேலே கூறிய முறையில் இங்கு அசிங்கம் பண்ணுவதை இந் நேரத்தில் என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை.

ஆரம்ப நாட்களில் அழகாகச் சித்திரம் போல செய்தி வாசிப்பார்கள். நாம் ரசிப்போம். நாட்கள் செல்லச் செல்ல, சிறிது அனுபவம் வர தலை, கண்களால் அபிநயங்கள் பிடித்து நாடகமாகவே இங்கு ஆக்குகிறார்கள் செய்தி வாசிப்பை.

சரி மேலே தொடருவோம்.

பத்து மணி போல நாம் வெளியே வெளிக்கிட்டோம்.

முதலாவதாகத்
தாய்லாந்தில் வாங்கப் போகும்       பொருட்களைக் கடல்வழி மார்க்கமாக டென்மார்க் அனுப்புவதற்குத் தரகர்களைத் தேடினோம். அங்கு தடுக்கி விழுந்தாலும் தரகர்கள்,  cargo  ஏஐன்சிக் கடையாகவே இருந்தது. மூட்டை மூட்டையாகப் பொதிகளைக் கட்டிக் கப்பலுக்கு அனுப்ப, கனரக வாகனங்களில் தெருவை அடைத்து ஏற்றியபடியே உள்ளனர்.

இந்தத் தரகு வேலையோடு, உடம்பு பிடித்து விடுதலையும், அதாவது மசாஜ் செய்வதையும் அவரவர் தங்கியிருக்கும் வாடி வீட்டினரும் செய்கின்றனர்.
விலைகளிலே தான் வித்தியாசம் உள்ளது.

இலங்கைத் தமிழர், சிங்களவர், ஆபிரிக்கர், இந்தியர், மொறிசியர், பிலிப்பைன்ஸ் என்று பல்லின மக்களும் வந்து பொருட்கள் வாங்கிப் பொதி பொதியாக சுமந்தபடி தாம் தங்கியிருக்கும்  வாடி வீட்டிற்கு நடக்கின்றனர். யாரைப் பார்த்தாலும் கையில் ஒரு பெரிய பொதியுடனே தான் நடக்கிறார்கள். இவைகளைப் பார்க்க எமக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

கடைகளில் ஒரு பொருளைக் கண்டு வாங்க விலை கேட்டால் 200 பாத் என்கிறார்கள். ஒரு பொருளை 2 அல்லது 3 ஆக வாங்கினால் மொத்த வியாபார விலை 180, 160 பாத் என்கிறார்கள். அதையே 10 பொருளாக வாங்குகிறோம் என்றால் 120 அல்லது 80 பாத்துக்கும் விலையில் இறங்குகிறார்கள் பேரம் பேச வேண்டும். பயணத் தகவலில் இதையும் தருகிறார்கள். பொருட்கள் மிக மிக மலிவு தான்.

இரண்டாவதாக
நாம் தங்கிய அறையில் ஒரு பழைய மணம், பூஞ்சண மணம், தூசி மணம் வந்தது. அது எனக்கு அருவருப்பாக இருந்தது. இரண்டு   இரவுக்குப் பிறகு அறைக்கு அங்கேயே தொடர்ந்து பதிய வேண்டும், அல்லது வேறு இடம் தேட வேண்டும். நாம் வேறு இடம் தேட விரும்பினோம்.

மூன்றாவதாக

உடம்பு பிடித்து விடுதல், மசாஜ் செய்ய இடம் தேடினோம். தெருவுக்குத் தெரு உடம்பு பிடித்து விடும்    இடங்கள் இருந்தன. முதலில் உடம்பு பிடித்து விடும் நிலையத்திற்குச் சென்றோம். ஒரு மணி நேரம் உடம்பு பிடித்து விட, 180 பாத் அதாவது 30 குரோனர்கள். 60 நிமிடங்களும் பிடித்து விடுகிறார்கள். இதுவே டென்மார்க்கில் என்றால் ஒரு மணித்தியாலத்திற்கு 300 குரோனர்கள். ஒரு மணித்தியாலம் என்று கூறி 20  நிமிடங்களே பிடித்து விடுவார்கள். எதுவும் கூற முடியாது.                                                 

ஒரு தடவை அது பற்றி நான் டென்மார்க்கில் கேட்டும் பார்த்தேன். அது அப்படித் தான்.

முதலில் 180 பாத் என்று தயங்கினேன்.  6ஆல் பிரித்து 30 குரோணர் தானே என்று  ஊக்கப் படுத்தியது கணவர் தான்.

நான் தாய் மசாஜ்  ம், (body massage) ம்,

  

கணவர் பாதம் மசா ஜ் ம் செய்தோம். 

        

 பத்து வருடமாக டென்மார்க்கில் தேவை ஏற்படும் போது நான் இந்த மசாஜ்க்குச் செல்கிறேன்……. 10 வருடங்கள் என்பது மிக நீண்ட காலமல்லவா! …..    

 -பயணம் தொடரும்.—                                                                     

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
19-11-2008.

In anthimaalai web site  —   http://anthimaalai.blogspot.com/2011/06/7_27.html

 

                                             

தாய்லாந்துப் பயணம். அங்கம் -6.

எனது பயண வரிசைகளில் மூன்றாவது பயண அனுபவம். 
தாய்லாந்துப் பயணம். அங்கம்  -6.

 

பேருந்தில் நாம் ஒரு மேம்பாலத்தில் உயரத்தில் போய்க் கொண்டிருக்கிறோம். எமது அருகோடு இன்னொரு மேம்பாலம். தூரத்தில் பார்த்தால் பாம்பு வளைவுகளாக அழகாகப் பல மேம்பாலங்கள். மேலிருந்து பார்த்து ஆ! வென்று வாய் பிளந்தோம்.

       

இங்கு தொலைக்காட்சியில் சென்னை நகர ஓரு மேம்பாலத்தை அடிக்கடி பார்க்கிறோமே, அப்படி தாய்லாந்தில் பல மேம்பாலங்கள்.

லூட்ஸ் பாதையில் யேர்மனியில் நாம் முன்பு பார்த்தது குட்டிக்குட்டி மேம்பாலங்கள். இது மிகப் பெரியது. ஒரு இடத்தில் நான்கிற்கும் மேற்பட்ட பாலங்கள் தென்பட்டன. ஏதோ வெள்ளப் பெருக்கிற்குப் பயந்து, சதுப்பு நிலத்திற்காக இப்படிப் பல பாலங்களைக் கட்டினார்களோ என்றும் தோன்றியது. பாங்கொக் ஒரு மேம்பாலங்களின் நகரம் என்பது என் கருத்து.

இது மட்டுமல்ல……                                            

 உயர் கட்டிடங்களோ எண்ணுக் கணக்கற்றவை. அம்மாடி! இந்தப் பக்கம் பாருங்கள்! அந்தப் பக்கம் பாருங்கள்! என்று கூறிக் கூறிப் பார்த்து இதற்கும் வாய் பிளந்தோம்.

                    

ஓரே உயர் மாடிக் கட்டிடங்கள் தான் போங்கள்! மேலே உயர் கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து பேருந்து ஓட முதல் கீழேயும் பார்த்திடலாம் என்று பார்த்தால்

……”.’ இதென்ன! தரை தகரமாகக் கிடக்கே!’ ……என்றேன்.

….” வடிவாகப் பார்! கீழே குடிமனைகள் இருக்கிறது”… என்றார் என் கணவர்.

…..” ஓமப்பா! இதென்ன! ஆச்சரியம் இந்த ஒற்றுமை வேற்றுமை!’ ‘….என்றேன் நான்.

பாங்கொக் ஒரு உயர் கட்டிடங்களின் நகரம் என்பதும் என் கருத்து.                                                               

இதை விட சதுப்பு நிலத்தில் கம்புகள் நட்டு அதன்மேல் வீடுகள் கட்டியும் மக்கள் வாழ்வதும் தெரிந்தது. தண்ணீர் தேங்கி நிற்கும் நிலங்களாகவும், வயல்களாகவும் இருந்தது. இந்தப் பாதையில் அதிக உயரமற்ற தென்னை மரங்கள் இருந்தன. இந்த வியப்புகளைப் பார்க்கும் போது பாங்கொக்கில் தங்கிட நாம் சரியான இடத்தைத் தான் தெரிவு செய்துள்ளோம் என்ற திருப்தி உண்டானது.

நமது வாடிவீட்டு முகவரியைக் காட்ட அதற்குக் கிட்டவாகப் பெருந்தெருவில் எம்மை இறக்கி விட்டனர். ஏழு, எட்டு நிமிட நடையில் வாடிவீட்டை மாலை ஆறு மணிக்கு அடைந்தோம்.

Best bangkok house  ஏழு மாடிக்கட்டிடம் தான். எமக்கு 4வது மாடியில் அறை.
கட்டிலின் கால்மாட்டில் பாதிரிப்பூ மாதிரி மரூண் நிறத்தில் தனிப் பூவும், ஒரு தடவை வீட்டின் உள்ளே பாவித்து வீசும் பாதணிகளும் இருந்தது. நமது இரண்டு பேரின் தலையணை மேலே ஒல்வொரு பூவும், கட்டிலுக்கு அருகில் உள்ள சிறு மேசையிலும் ஒற்றைப் பூவுமாக அறை அலங்கரித்து இருந்தது.  சிறிய அறை தான்.

குளித்து ஆடை மாற்றி வெளியே கிளம்பினோம். தெருக்களைச் சிறிது சுற்றிப் பார்த்தோம். கைத் தொலைபேசியைப் பாவிக்க அட்டைகள் எல்லாம் வாங்கினோம். குடிக்கத் தண்ணீர், பழங்களுடன் அறைக்கு வந்து பிள்ளைகளோடு அமைதியாகக் கதைத்தோம்.

அதன் பின்பு வெளியே போய் இரவு உணவும் சாப்பிட்டுவிட்டு ஆறுதலாக அறைக்கு வந்தோம். குளிரூட்டி அறையாதலால் நன்கு குறைந்த அளவில் அதைச் சரிக்கட்டிக் கொண்டு அடுத்த நாள் வேலைத் திட்டங்களைப் பேசினோம்.

7.00 மணிக்கு அந்த வானொலி கேட்க வேண்டும்,  இந்தத் தொலைக் காட்சி பார்க்க வேண்டும் என்ற ஒரு சிந்தனையுமின்றி இரவு நிம்மதியாகப் படுத்துத் தூங்கினோம்.

அடுத்த நாள் முதலாம் திகதி அழகாக விடிந்தது. cnn ஆங்கில செய்தி தொலைக்காட்சியில் கேட்க முடிந்தது. தாய் மொழியிலும் (தாய்லாந்து) செய்திகளைக் காட்சியுடன் பார்த்தோம். 

வாடிவீட்டிலேயே காலையுணவு வசதியுடனே தான் அறையை எடுத்தோமாதலால் ஆறுதலாகப் போய் காலையுணவாக பாண்  பழ கலவை முட்டையென எடுத்தோம். கறுவா தூள் மட்டும் கொண்டு போயிருந்தோம், காலை உணவுடன் தவறாமல் அதையும் எடுத்தோம்.                           

———பயணம் தொடரும்.—                         

வேதா.இலங்காதிலகம். 
ஓகுஸ்,  டென்மார்க்.
5-11-2008.   

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/06/6.html

   

                               

தாய்லாந்துப் பயணம் – அங்கம் 5.

எனது பயண வரிசைகளில்  மூன்றாவது பயண அனுபவம்.

தாய்லாந்துப் பயணம் – அங்கம்  5.   

பட்டுனாம் செல்ல பேருந்திற்கு ஒருவரிற்கு 150 பாத்.

தாய்லாந்துப் பணம்  baht  ஐ ஆரம்பத்தில் 8ஆல் பிரித்து குரோனர் பெறுமதி பார்த்தோம். பின் இரண்டு நாள் போனதும் பணப் பெறுமதியில் வித்தியாசம் வந்து 6ஆல் பிரித்துப் பெறுமதி பார்த்தோம். எமது வாடி வீடான best bangkok house  க்கு வாடகைக் காரில், அதாவது ராக்சியில் போகும் கட்டணம் 500 பாத். இதை முதலே கணனியில் பார்த்ததால் தான் இந்த முடிவை எடுத்திருந்தோம். எமது பேருந்துப் பயணத்தால் வாடி வீட்டிற்குச் செல்ல ஒரு மணித்தியாலம் எடுக்கும்.

அது வரை, பட்டுனாம் போக முதல் நாம் இந்த நாடு தாய்லாந்தைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.

சீயம், சியாம் என்று அழைக்கப்பட்ட நாடு இது. 1939 ஆனி 24ன் பின் அரச ஆட்சி, பாராளுமன்றத்துடன் கூடிய மக்களாட்சியான போது இந்த நாடு தாய்லாந்து என்ற பெயரைப் பெற்றது. தாய்லாந்து மொழியில் கசநந free land  சுதந்திர நாடு என்ற கருத்தைக் கொண்டது.

19ம் நூற்றாண்டில் ” வெனிஸ் of  ஈஸ்ற் ‘ ‘….. கிழக்கின் வெனிஸ் என்று அழைக்கப்பட்டது. நாடு நிறைய கால்வாய்கள் கொண்டதாக இருந்ததால் இப் பெயர் பெற்றதாம். மிதக்கும் சந்தைகள்  floting markets  இன்றும் சுற்றுலாக் கவர்ச்சியாக உள்ளது. smiling of the land.  புன்னகைக்கும் நாடு, சிரிப்பின் நாடு என்று எப்படியாவது நீங்களே சரியாக மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள். The land of robes  மஞ்சள் அங்கிகளின் நாடு – அல்லது மஞ்சள் அலங்கார அங்கிகளின் நாடு என்றும் ஆதி காலத்தில் கூறப்பட்டதாம். Angels of the land  தேவதைகளின் நாடு என்றும் பெருமையாகக் கூறுகிறார்கள்.                             

 513,000 ஆயிரம் ச.கிலோ மீட்டர், 198,000ச.மைல் கொண்ட நாடு. 62 மில்லியன் மக்கள் தொகையுடையது. இதில் பாங்கொக் தலைநகரில் மட்டும் 10 மில்லியன் மக்கள் வாழ்கிறார்களாம்.

80 விகிதம் புத்த மதத்தினர், 10 விகிதம் சீன மக்கள், 4 விகிதம் மலாய் மக்கள் மிகுதியானவர்கள் பல்லினமாக, இந்தியர்கள் உட்பட வாழ்கின்றனர். 96 விகிதமாக நாட்டில் புத்த மதமே நிறைந்துள்ளது.                     

 என்றுமே இந்த நாடு காலனி ஆதிக்கத்தின் கீழோ, அன்றி ஐரோப்பிய சக்தியின் கீழோ இருக்கவில்லையென்ற பெருமையுடைய நாடு. காலம் காலமாக ஆட்சிகள் மாறி மாறிச் சுழலும் போது அயோத்தியா நகரம், தோண்புரி நகரம் என்று ஆட்சியிலிருந்து,

1762 ல் ஜெனரல் சக்கிரி என்பவர், சக்ரி வம்ச முதல் அரசன் ராம் – ஒன்று என்ற பெயரில்  பாங்கொக் நகரைத் தலைநகரமாக்கினார். அயோத்தியா நகரத்து அரச மாளிகைகளின் மாதிரியில் பாங்கொக்கில் அரச மாளிகைகளைப் புதிதாகக் கட்டினார்.

அரசர்களுக்கு ராம் ஒன்று, ராம் இரண்டு, மூன்று என்று பெயர்கள் தொடருகிறது. இப்போது ராம் ஒன்பது அந்த நாட்டை அரசாளுகிறார்.

சரி, வாருங்கள் நாம் பயணத்தைத் தொடருவோம்.

       

பேருந்தில் வரிசையில் முதல் இருக்கையில் அமர்ந்து விசாலமான பெரும் தெருவை ரசிpத்தபடி வந்தோம். 5வரிசை, சில இடத்தில் 7வரிசையாகவும் தெரு இருந்தது. ஒரு இடத்தில் ஆம்சரடாம் தெரு போலவும், இன்னொரு இடத்தில் கனடா போலவும் பரந்து விசாலமாக அழகாக இருந்ததை வாய்விட்டுக் கூறி ரசித்தேன்.

‘ ‘ இப்படி யாழ் – கொழும்பு வீதியை ஆக்காது போருக்குப் பணத்தை கொட்டி அழிக்கிறார்களே!”…. என்றார் என் கணவர்.(இந்தக் கட்டுரை எழுதிய போது போர் நடந்து கொண்டிருந்தது.)

ஏனோ எமக்கு தாய்லாந்தில் எமது நாட்டு நினைவு தான் அதிகமாக வந்தது. ஒரு வேளை அதே காலநிலை தான் அப்படி ஒரு உணர்வைத் தந்ததோ தெரியவில்லை.

—பயணம். தொடரும்—-             

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-10-2008.

In anthimaalai .com ;—    http://anthimaalai.blogspot.com/2011/06/5.html

                               

தாய்லாந்துப் பயணம் – 4

எனது பயண வரிசைகளில்  மூன்றாவது பயண அனுபவம்                

தாய்லாந்துப் பயணம் – 4

30 ம் திகதி இரவு 11.20க்கு பாங்கொக் செல்லும் விமானத்தினுள் சென்றோம்.

பயணம் இனிதாகச் சென்றது.
இரண்டு நேர உணவு. இதில் எனக்கு சைவ உணவு பதிவாக்கியிருந்தோம், பிரச்சனையே இல்லை. தூக்கம், பயணக்காட்சி, தொலைக்காட்சி, பேசி மகிழ்ந்தது, புத்தகம் வாசித்தது. இவை போக இடை இடையே காலையும் நீட்டி மடக்கி சிறிது காலுக்குப் பயிற்சியும் செய்தோம்.

நேபாளம், இமாலயப் பனிமலையும் அழகாகப் பார்த்தோம். பனிமலைத் தொடர் காட்சி மிக அழகாக யன்னலூடாகத் தெரிந்தது. தொலைக்காட்சியில் எங்கு பறக்கிறோம் என்று பார்க்கும் போது, அது மலைப் பிரதேசமா, நகரப் பகுதியாவென அறிவது சுலபமாக இருந்தது.

ஞாயிறு பகல் 2.20க்கு பாங்கொக் சுவர்ணபூமி விமான நிலையம் சென்றடைந்தோம்.
என்ன நேயர்களே! சுவர்ணபூமி விமான நிலையம் என்ற பெயர் ஆச்சரியமாக உள்ளதா! ஆமாம் இது சமஸ்கிருதப் பெயரே தான். பயண அனுமதிச் சீட்டில் இப் பெயரைப் பார்த்ததும் எமக்கும் ஆச்சரியமாகவே இருந்தது. விமானம் மெல்ல உருளும் போது, எழுத்துக் கூட்டியும் வாசித்துப் பார்த்து என் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டேன்.

இது புதிய, பெரிய விமான நிலையம்.

         

 2006 ஐப்பசி மாதப் பிற்பகுதியில் திறக்கப்பட்டதாம். 120 விமானங்கள் நிறுத்தக் கூடிய பரப்பளவு கொண்டது.                       

சுமத்திரா, மலேசியா, கம்போடியா, பர்மா ஆகிய நாடுகள் தங்களது நாட்டிற்கே சுவர்ணபூமி என்ற பெயர் உள்ளது என கூறியபடியே உள்ளனர்.

தாய்லாந்தின் முன்னைய தலை நகரமான நோக்கொன் பதம் (Nokon patham) தான் சுவர்ணபூமி என்று தாய்லாந்து கூறுகிறது. இன்று விமான நிலையத்திற்கே இப் பெயரைச் சூட்டியுள்ளனர். சுவர்ணபூமி தங்க நாடு, தங்க நிலம், தங்க பூமி என்கிறார்கள்.                                                             

ஒரு சட்டியை பக்கவாட்டில் நிமிர்த்தி, பல சட்டிகளைச் சாய்த்து ஒன்றோடொன்று  அடுக்கியது போலக் கூரை, (மேலே படத்தைப் பெரிது பண்ணிப் பாருங்கள்) பெரிய குகை வாயில்கள் போல, கட்டம் கட்டமாக வாயிலை அலங்கரித்து, மிக அழகாக அமைந்துள்ளது. –  இது எனது பார்வை.

விமானத்திலிருந்து இறங்கி வழமை போல தகவற் பலகையில் எந்த இடத்தில் எமது பொதிகள் வருகிறது என்று அறிந்து சென்றால், நீண்ட நேரம் காத்திருந்தே எல்லோர் பொதிகளும் சுளரும் பட்டியில் வந்து சேர்ந்தது. இது அங்கு ஒரு குறையாக எப்போதுமே பிந்தித்தான் வருமாம். பின்பு பாஸ்போட் பரிசோதனைப் பகுதியில் வெளிநாட்டினர் பிரிவிற்குச் சென்று வரிசையில் நின்றோம்.

இங்கு மிக விரைவாக யாவும் நடந்தது. விமானத்திலேயே பத்திரம் நிரப்பிக் கொண்டு வந்தோம் எம்மைப் பரிசோதிக்கும் ஊழியர் மேசையின் முன்பு மேசை விளக்குப் போல ஒற்றைக் காலுடன் ஒரு கருவி இருந்தது. எல்லாம் பார்த்த பின்பு, அந்தக் கருவியை மேலும் கீழுமாகவும் உருட்டினார். சரி போகலாம் என்பது போல, தலையை ஆட்டினார்.

‘ என்ன படம் எடுத்தாயா? ‘ என்று புன்முறுவலுடன் ஆங்கிலத்தில் கேட்டேன். ஆமாம் என்று தலையை ஆட்டினார்.

ஆக, தமது நாட்டினுள் எம்மைப் படம் எடுத்தே உள் புக அனுமதித்;தனர். வேறு இடங்களில் அனுபவிக்காத புது அனுபவமாக இது இருந்தது.

விமான நிலையத்திற்கு வெளியே வரும் வாயிலில் வாடகைக் கார் சாரதிகள், தரகர்கள் நான் முந்தி நீ முந்தியெனப் போட்டி போட்டு வந்தனர் தமது வாகனத்iதில் எம்மை ஏற்ற. –  (photo  வெளிவாயில்)

 நாம் பட்டுனாம் வட்டாரத்திற்குச் செல்ல வேண்டும். அதற்குரிய சொகுசுப் பேருந்து இலக்கத்தை அறிந்து அந்தக் கந்தோரிலேயே பணத்தைக் கட்டி ரசீதும் எடுத்தோம். பேருந்து வர இதில் செல்லவேண்டும் என்று காட்டினார்கள்.

—பயணம் தொடரும்.—                          

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்-
23-10-2008.

In anthimaalai.com;-        http://anthimaalai.blogspot.com/2011/06/4.html

                                 

3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து).3

எனது பயண வரிசைகளில்   மூன்றாவது பயண அனுபவம்.  அங்கம்
தாய்லாந்துப் பயணம்.  3

டென்மார்க் தலைநகர் கொப்பென்கேகன் காஸ்ருப் விமான நிலையத்திற்குச் செல்லும் தொடருந்தால் விமான நிலையத்திற்குள் சென்றோம்.(  photo..    copenhagen train station kastrup.)

 

தாராளமான நேரம் இருந்தது. மாலை 4.30க்கு ஒஸ்ரியன் விமானத்தில் நாம் ஒஸ்ரியா வீயென் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும்.      ( photo-copenhagen air port.)

                                                

wien  என்பது டெனிஷ் உச்சரிப்பு. ‘ஐ’ என்ற ஆங்கில எழுத்து டெனிஷில் ‘ஈ’ என்ற உச்சரிப்பைப் பெறுகின்றது. இதுவே வீன்னா, வைன் என்றும் வேற்று மொழியில் உச்சரிப்பு வரலாம்.                                                  

நேரம் வர தகவல் பலகையில், உள்ளே செல்லும் படலை இலக்கம் அறிந்தோம். பயணக் கண்காணிப்புக்கு ‘ செக் இன்னுக்கு’ வரிசையில் நின்று எமது பெட்டிகளை ஒப்படைத்தோம். அப்பாடா! இனி தாய்லாந்தில் அதை எடுக்கலாமே! ஒரு பாரச் சிறகை உள்ளே மடக்கியது போல இலேசாக இருந்தது. இரண்டு பெட்டிகளும் 16, 16 கிலோ இருந்தது என்றதும் மகிழ்வாக இருந்தது. ஏனென்றால் வரும் போது இன்னும் பாரத்துடன் வரலாமேயென்ற மகிழ்வு.                                               

உலகத்துத் தொல்லைகள் அனைத்தையும் விட்டு வீசி விட்டு வேறொரு உலகத்துள் புகுவதாக மாலை 4.30க்கு விமானத்திற்குள் சென்றோம். நாமும் எமக்குச் செல்லம் கொடுக்க விரும்பி எடுத்த பயணம் இது. மனம் நூறு விகிதமும் ஆனந்தத்தில் மிதந்தது. அது என்ன செல்லம் கொடுத்தல் என்கிறீர்களா?

டென்மார்க்கில் ஒருவர் மிகத் துன்பத்தில் இருந்தால் அவருக்கு நண்பர்கள், நெருங்கியவர்கள் புது உடை, சப்பாத்து, என்று ஏதாவது பரிசுகள் வாங்கிக் கொடுத்து துன்பப்படுபவரை மகிழ்விப்பார்கள், செல்லம் கொடுப்பார்கள்.

துன்பப்படுபவரும் தன்னை உற்சாகப் படுத்த தலையலங்காரத்தை மாற்றுதல், பயணம் செல்லுதல் என்று தனக்குத் தானே செல்லம் கொடுப்பார். மனதில் தைரியம் உள்ளவர்கள் தான் இதைச் செய்வார்கள். மற்றவர்கள் துன்பத்தில் விழுந்து தத்தளிப்பார்கள். இதைத் தான் டெனிஷில் forkæle  பண்ணுதல், செல்லம் கொடுத்தல் என்போம்.

”….ஒரு சோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
    உறவன்றி வேறு இல்லை கவனங்களில்.”….

விமானத்தில் பேசியபடி, சாளரம் ஊடாகப் பார்த்தபடி, தொலைக் காட்சியில் நாடுகளுக்கு ஊடாகச் செல்வதை ஆர்வமாகப் பார்த்தபடியும் பயணித்தோம்.

சிறிது நேரத்தால் உணவு வண்டில் வந்தது. இந்த விமானத்தில் எனக்கு சைவ உணவு பதிவு செய்ய இயலாது என்றனர்.  என்ன உணவு வருமோ என்று குளப்பமாக இருந்தது. நல்ல வேளை ஒஸ்ற், கத்தரிக்காய், பஸ்ரா எல்லாம் கலந்த சூடான ஒரு உணவுக் கலவையும், புடிங், பாண், பழங்கள் என்றும் தந்தனர். மகிழ்வு தான். கணவர் கோலாவுடன், நான் தேனீருடன் உணவு கொண்டோம். மிக அருமையாக, திருப்தியாக இருந்தது.                                        

மாலை 6.30க்கு வீயென் விமான நிலையமடைந்தோம்.   —   ( photoes.)

    

உள்ளே சுற்றுசுற்றென்று சுற்றினோம். அங்கிருந்து பாங்கொக்கிற்கு இரவு 11.20 ற்கே விமானம். ஆமாம்! காத்திருந்த நேரம் அதிகம் தான். நடந்து கால்கள் நோக, அமர்ந்திருந்தும் நேரத்தை ஓட்டினோம். புத்தகத்திலும் பாதிக்குக் கிட்ட வாசித்துவிட்டேன்.

சுமார் 10.00 மணிக்கு படலை திறக்க உள்ளே சென்றோம். இது வரை ஐரோப்பாவில் சுற்றினோம்.

இனி பத்து மணி நேரப் பயணம், ஐந்து மணித்தியால நேர வித்தியாசத்தில் பாங்கொக் விமானநிலையம்  சென்று சேருவோம்.

பயணம் தொடரும். 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-10-2008.

In Anthimaalai. 3rd ankam.   http://anthimaalai.blogspot.com/2011/05/3.html?showComment=1307028494957#c8402686147045620015

                             

3. பயணக் கட்டுரைகள். (தாய்லாந்து)- 2

எனது பயண வரிசைகளில் இது மூன்றாவது பயணமாக… 
தாய்லாந்துப் பயணம் – 2

(2008 ஆவணி 30 லிருந்து புரட்டாதி 12 வரை.)

வாழ்வு பரபரப்பு நிறைந்தது. ஓயாத ஓட்டமும், சவால்களுடனும் கூடியதாயினும் இடையிடையே வரும் இன்பங்கள், சூழல் மாறிய சிந்தனைகள், அனுபவக் காசுகளாக மனதிற்குப் பலம் தருகிறது.

யந்திரத்திற்கு எண்ணெய் மாற்றி, துடைத்து, இடைவேளை கொடுப்பது போல வாழ்வில் பயணங்களும், அதன் இனிய அனுபவங்களும் மன அமைதி, ஓய்வு, மகிழ்வு என மிக மிகப் பயன் தருகிறது.                                    

இந்த வகையில் இது எமக்குத் தேவையென எம் குடும்பத்தினர் உணர்ந்த போது,’ ‘ நான் அண்ணாவிற்கு உதவுகிறேன் நீங்கள் வெளிக்கிடுங்கள்! ” என்று மகள் கை கொடுத்தாள்.

பயணம் சுற்றுலாவாகவும், மகனின் வியாபாரத்திற்கு உதவியாகப் பொருட்களும்  கொள்வனவு செய்யலாம் என்று 2008 ஆவணி 30 ல் 12 நாட்கள் விடுமுறையில் சுற்றுலாவுடன், வியாபாரம் என்று தாய்லாந்தைத் தெரிவு செய்தோம்.

அந்த நீண்ட தூரப் பயணம் எமது உடல் நிலைகளுக்கு ஒத்து வருமா, எல்லாம் சரியாக அமையுமாவென்று பீதிதான் முதலில் மேலோங்கியது. காரணம் சிங்கப்பூர், இத்தாலி போன்ற உஷ்ண நாடுகளில் என் கணவர் பட்ட அவதிகள் தான் எமக்கு நினைவுக்கு வந்தன. ஆயினும் மெல்ல மெல்ல பயண ஏற்பாடுகளைச் செய்தோம்.

பாங்கொக் பயணவாசிகள் ஈரல் வியாதி சம்பந்தமான தடுப்பூசி போடவேண்டும் என்ற வைத்திய ஆலோசனையின் பிரகாரம் இரண்டு விதமான தடுப்பூசிகள் போட்டோம். அத்தாட்சிகளையும் சேகரித்தோம்.

தாய்லாந்து விபரங்களைக் கணனியில் சேகரித்தோம். அங்கு போனவுடன அவதிப்படாது தங்கிட வியாபார வட்டாரமான ‘பட்டுனாம்’ (Paratunam) ல் 2 நாட்கள் தங்க ஒரு வாடிவீட்டைத் தெரிவு செய்து உறுதிப்படுத்தினோம்.                                                            

அமைதியற்றுக் குளம்பிய மனசு,  பயண ஆயத்தங்கள் ஒவ்வொன்றும் உறுதிப்பட உறுதிப்பட, அமைதியாகி பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மனம் மகிழ்வை எட்டியது. கற்பனை சிறகடிக்கத் தொடங்கியது.

மகளும் 29ம் திகதி காலை இலண்டனிலிருந்து டென்மார்க் வந்து சேர்ந்தார்.                                                                   

 30ம் திகதி காலை ஒன்பது மணிக்கு பேருந்திலே உருட்டும் பயணப் பொதி, உணவுப் பொதியுடன் பயணம் மகிழ்வுடன் ஆரம்பித்தது.                                             

காலை ஒன்பது நாற்பத்தைந்திற்கு ஓகுஸிலிருந்து தொடருந்தில் தலைநகர் கொப்பென்கேகன் ‘காஸ்றுப்’ (Kastrup) விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும். மூன்று மணிநேரப் பயணம்.                                                  

தொடருந்தில் இருக்கைகள் பதிவு செய்ததால் ஆறுதல், அமைதி, ஆனந்தமாகப் பயணித்தோம்.

                              

(Aarhus railway station entranc.- intercity train. and aarhus platform.)

இதற்கு முன்பு மகிழுந்தில் கடவைப் படகில் பயணித்திருந்தோம். இதுவே ஸ்ரோவ பெல்ட் பாலத்தினூடாக தொடருந்தில் முதற் பயணம். ஸ்ரோவ பெல்ட்டில் போகும் போது, சுற்றிவர கடல் நீராக, நல்ல ஒரு புதிய மிக அழகிய காட்சியாக இருந்தது.

   

(டென்மார்க்கில் யூலண்ட் நாமிருக்கும் தீபகற்பம் யேர்மனியுடன் நிலத்தொடர்பு கொண்டது. இங்கிருந்து தலைநகருக்குச் செல்வது குறிப்பிட்ட விமான நிலையம் செல்ல. இந்தப் பாதையை வெள்ளை அடையாளமுடன் பார்க்கிறீர்கள் டென்மார்க் படத்தில்.)

தாய்லாந்து இப்படியும் இருக்குமோ என்ற கேள்வியையும் தந்தது. பேசி மகிழ்ந்த, காட்சிகள் பார்த்த கணங்கள் போக, கணவர் பத்திரிகை வாசிக்க, நான் இது வரை வாசிக்கச் சந்தர்ப்பம் ஏற்படாத புத்தகமாக, சாதனையாளன், சகோதரன் எம்.பி. பரமேசின் ‘ என் இனிய பயணங்களில்…’ என்ற நூலை வாசிக்கத் தொடங்கினேன். பசி எடுத்தபோது நாம் கொண்டு சென்ற உணவையும் உண்டு மகிழ்ந்தோம்.

சுமார் ஒரு மணிக்கு காஸ்றுப் விமான நிலையத்தையடைந்தோம்.
            
மேலும்  பயணிப்போம்……

 

வேதா.இலங்காதிலகம்.
                                
ஓகுஸ், டென்மார்க்.
11-10-2008.

In anthimaalai  second ankam.   http://anthimaalai.blogspot.com/2011/05/2.html

                       

Previous Older Entries Next Newer Entries