4. பயணம் (மலேசியா) 5.

 

4. பயணம் (மலேசியா) 5.

திருமணம் இனிமையாக கோலாலம்பூர் சித்தி விநாயகர் கோவில் கொண்டாட்ட மண்டபத்தில் நடந்தது. கீழ் பகுதியில் இரவு உணவு மண்டபமாக ஒழுங்கு செய்திருந்தனர்.

புதுத் தம்பதிகள் போர்ணியோவில் மலேசியா ஆட்சிப் பகுதியான சரவக்கிற்கு (Sarawak )  சென்றனர். இது சாந்தியின் உத்தியோகப் பகுதியின் பரிசாக 3-4 நாள் பயணமாக இருந்தது.

நாமும் மகளவையுமாக அடுத்த நாள் ஒரு வாடகைக் கார் பிடித்து இடங்கள் பார்க்கப் புறப்பட்டோம். முதலில் புட்ற யெயா (Putra Jeya ) என்று கூறும் திட்டமிட்டுச் செய்த புதிய மலேசிய நிர்வாக நகரம் (administrative capital of Malaysia) சென்றோம். இங்கு நாம் ஒரு மணித்தியாலம் செலவழிக்கலாம் என்றார் சாரதி. (ஒரு மணி நேரம் போதாது)

கோலாலம்பூரின் மேலதிக சன நெருக்கம், அடைசல், தேக்கம் என்ற காரணங்களால் நிர்வாக நகரம் இங்கு மாற்றப்பட்டது. தேசிய தலை நகரமாக கோலாலம்பூரும், வியாபார, அரச நிர்வாகம் இங்குமாக உள்ளது.

இது ஆதியில் 1918ல் பிறங் பிசார் (Prang Besar  ) என்று பிரிட்டிசாரினால் திறக்கப்பட்ட இடமாம்.
97.4 விகித இஸ்லாமியரும், 1.0விகித இந்துக்களும், 0.9 விகித கிறிஸ்தவரும், 0.4 விகித புத்த மதத்தினரும், இன்னும் பலரும் வாழ்கின்றனராம் புற்ர யெயாவில்.
(3.5கி.மீட்டர்) குறுக்கு வெட்டு 2.7 மைல்களாகுமாம் இதன் இடப்பரப்பு.

சுமார் 9 பாலங்கள் இங்கு உள்ளதாம்.

இது 1990ல் தொடங்கிய வேலைத் திட்டம். 1999ல் கோலாலம்பூரிலிருந்து உத்தியோக பூர்வமாக இங்கு மாறினார்கள். கோலாலம்பூரிலிருந்து 25 கி.மீட்டர் தெற்காக இந்த நகர் உள்ளது.

துங்கு அப்துல் ரகுமான் புட்ற்ரா மலேசிய முதல் பிரதம மந்திரியின் பெயராம். புற்ரா(Putra ) என்றால் இராசகுமாரன். யெயா (success or Victory  )என்றால் வெற்றியாளன்-வெற்றி.

புற்ரயெயா கோலாலம்பூருக்கும் தேசிய விமான நிலையத்திற்கும் ( KLLA  ) நடுவில் உள்ளது.
மிகப் பெரிய உல்லாசப் பயண நகரமாகவும் நாட்டின் நிர்வாக நகரமாகவும், நாட்டின் அடையாளமாகவும் உள்ளது.
சைபர் யெயா குளம் ( Ciber Jeya lake ) சுற்றி வர உள்ளது.

பிரதம மந்திரியின் இருப்பிடம் பெர்டனா புற்ரா (Perdana Putra  ) என்றும்

Perdana Putra. (our photo)

– மகாநாடுகள் நடத்தும் கட்டிடத்தின்(convention center) கூரை வித்தியாசமானது. ( cowboy hat ) கூரை யாக உள்ளது. மிக அழகு!

convention center.

படத்தில் தெரியும் தெருவூடாக சென்று இடது புறமாகத் திரும்பிச் சென்றோம் (வாகனத்தில்). பின் டென்மார்க் வந்து வாசித்து அறிந்தேன். (இதன் கூகிள் படம் தான் நீங்கள் பார்ப்பது.)

இங்கு அரசாங்க நிர்வாகக் கட்டிடங்கள் அனைத்தும் மிக நவீனமாகக் கட்டப்பட்டு ஆடம்பரமாகவும் தோற்றம் தருகிறது. உள்ளே போனதும் பெரிய சதுக்கம் உள்ளது. அதுவே மிகக் கவர்ச்சியாக உள்ளது. வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்தோம். வலது புறமாக இஸ்லாம் மதக் கோவில் (மொஸ்க்) ரோசா நிற கிரனைட் கல்லிலே கட்டப்பட்டு மிக அழகான தோற்றமாக உள்ளது.

My husband taking photo.

google photo.

இதன் ஸ்தூபி 116 மீட்டர் உயரமாக, 36 மீட்டர் சதுர அடியான அகலமாகக் கட்டப்பட்டது.15 ஆயிரம் மக்கள் கூடித் தொழ முடிந்த இடமாம். பக்தாத்திலிருந்து கட்டிடக் கலைஞர்கள் வந்து கட்டப்பட்டதாம். இந்தப் பள்ளிவாசல் அடித்தளச் சுவர்மொறக்கோ காசபலன்ங்கா(casabalanca) மாதிரியில் அமைந்ததாம். இதன் உள்ளே செல்ல அவர்களைப் போல உடையணிந்தால் தான் செல்ல முடியுமாம். செல்ல அனுமதி கிடைக்குமாம்.

நாம் வெளியே நின்று பார்த்து, புகைப்படங்கள் எடுத்தோம்.

our photo.

பள்ளி வாசல் மிக அமைதி, அழகோ அழகு, ஆடம்பரமாக இருந்தது.

இனி அங்கம் 6ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

3-8-2012

                                      
 

4. பயணம் மலேசியா – 4

Goal of 750 Posts Completed. Congratulations! —Wordpress.com

 

4. பயணம் மலேசியா – 4

எமது பயணத் திகதிகளை இங்கு நான் குறிப்பிடவில்லை மகனின் திருமணத்திற்கு 5 நாட்களின் முன்னர் பரிசம் போட்டனர்.

பரிசம் என்றாலே என்னவென்று எமக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்தில் அப்படி நாம் செய்வதில்லை.

எல்லாவற்றையும் எமக்காகவும் செய்யுங்கள் நாம் வருகிறோம் என்றே நேரத்துடன் அங்கு சென்றோம்.

சுமார் 40, 50 மக்கள் சாந்தியின் உறவினர்கள் கூடி பரிசம் போடப்பட்டது.

சினிமாவில் வருவது போல ஆனால் கோயில் குருக்கள் (ஐயர்) வந்து இன்னாருக்கு இன்னாரை மணமுடித்து வைக்கிறோம் என்று கூறி, பெண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றி, சேலை மாலை என்று தட்டுகள் மாற்றி,

(கிட்டத்தட்ட தெத்தம் பண்ணுவது போலக் கொஞ்சம்) அவர்கள் பெண்ணை எமக்குத் தருவது போலவும், பின்னர் சாந்தி சேலை மாற்றி வந்து வீட்டிற்கு விளக்கேற்றினார்.

ஐயரிடம் கேட்டேன் இது ஏன் செய்வதென்று. வீட்டிற்கு விளக்கேற்றுவதே இதன் முக்கிய கருத்து என்றார்.

இரவுணவு, படங்கள், வீடியோவென கிட்டத்தட்ட ஒரு குட்டிக் கல்யாண வீடாகவே இருந்தது – நடந்தது. (என்ன! மாப்பிள்ளைப் பகுதியில் நாமிருவருமே. வேலை, லீவு என்பதால் மற்றவர்கள் இனித்தான் வருவார்கள்.)
இரவு பரிசம் முடிய கூடி இருந்து கதைத்து, வந்த விருந்தினர்கள் யாவரும் செல்ல இரவு ஒரு மணி போல எம் அறைக்குச் சென்று, நல்ல நித்திரை கொண்டோம்.

இது எமது அறை யன்னலூடான காட்சி. கண்ணுக்கு அழகாக உள்ளது. (மழை பெய்ய புழுத்த நாற்றம், சாக்கடை நாற்றம்)

அடுத்த நாள் – காலை ஒன்பதரை, பத்து மணி போல சாந்தியும், திலீபனும் சாந்தியின் நீல நிறக் காரில் வந்து எங்களைத் தங்கள் வீட்டுக்குக் கிட்ட உள்ள டே ரு டே (day to day    ) எனும் உணவகத்திற்கு காலையுணவிற்காக அழைத்துச் சென்றனர்.

இங்கு தான் பசும்பால் கலந்த தேனீர் கிடைக்கும். சாந்தியின் அப்பா, அம்மா சாந்தியின் தங்கை பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக உணவுண்டோம்.

அப்பம் காலையுணவாக எடுத்தோம். நாம் தேங்காய்ப் பாலை அப்பத்தின் மேல் விட்டு சூட்டில் உறைய வைத்து (சுட்டு) உண்போம். இவர்கள் தேங்காய்ப் பாலை வேறாக, குட்டித் டம்ளரில் வைத்தனர். ஆனால் சும்மாவே அப்பம் சாப்பிட மிகச் சுவையாக இருந்தது.

தேனீரும் ம்..ம்….மிக மிக சுவை. ( ஐ லவ் பால் தேனீர் – என் உயிர்)
சாந்தியின் தங்கை மகள் அப்பத்தை தேங்காய்ப் பாலில் குளிப்பாட்டிச் சாப்பிட்டார்.
என் கணவர் அப்பத்திற்குக் கட்டைச் சம்பல் கேட்டார். (மிளகாய் அரைத்து, உப்பு, புளி வெங்காயம், மாசி கலப்பது). உடனே முதலாளி போய்க் கொண்டு வந்தார்.

இதற்கிடையில் நாம் வெளி நாட்டுக்காரர் என்று ஓரே கலகலப்பாக்கி விட்டனர். முதலாளி தன் மனைவியைக் கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தார்.

பின்பு சாந்தி வீடு அப்படி இப்படி என்று நாட்கள் செல்ல மகளும் துணைவரும் இலண்டனில் இருந்து வந்தனர். எமக்கு அடுத்தடுத்த அறையையே அவர்களிற்கும்
பதிவு பண்ணியிருந்தனர். திருமணம் முடியும் வரை வெளியே உலாத்துவதைத் தவிர்த்திருந்தோம்.

மகளுடன் மசாஜ், முக அழகு, காலழகு செய்ய என்று இடம் தேடித் திரிய எம்மோடு எமது துணைகளும் வந்து அந்தப் பெரிய மாலில் செய்தோம், சுற்றினோம்.

அங்கேயே உணவு என்று நன்றாகவே பொழுதைக் கழி(ளி)க்கலாம்.

அவ்வளவு அழகு, நவீனம்.

மிகுதியை அங்கம் 4ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-7-2012.

                                                

 

4. பயணம் மலேசியா .3

 

4. பயணம்   மலேசியா .3

புச்சோங் (Puchong )பயணமானோம். போக்கு வரவு நெரிசல் இல்லாததால் 1 மணி நேரத்தில் சாந்தி வீடு சென்றோம். (நடுவில் வாகனம் ஓடியபடி சாந்தி தன் வீட்டிற்குத் தகவல் கொடுத்தார். உணவு சமைத்துள்ளதாகத் தாயார் கூறினார்கள்.)

அங்கு உணவருந்தினோம்.  ஆறதலாக இருந்து பேசி இரவு போல நாம் தங்கும் வாடி வீட்டிற்கு சாந்தியும், மகன் திலீபனும்  மறுபடியும் எம்மை அழைத்துப் போனார்கள். அரை மணி நேர ஓட்டம் தான்.

சீனாக்காரனின் வாடிவீடு. 101 லேக் வியூ ஹோட்டல். ஒரு நாளிற்கு 90 றிங்ஙெட். இதை 2ஆல் பெருக்கினால் டென்மார்க் 180 குறோணர்கள். சாந்தி தான் இவற்றை ஒழுங்கு செய்திருந்தார். முதலில் 3 நாட்களிற்குப் பதிவு செய்தோம்.

சாந்தியினது வரிசை வீடுகள் (ரெறாஸ கவுஸ்). 25 வருடமாக வாழ்கிறார்களாம். மேலே 3 படுக்கை அறைகள் கீழே இருக்கையறை, குசினி, குளியலறை. முன்னாலே மூடிய விறாந்தை (அல்லது போஃட்டிக்கோ) உள்ளது.

இரவு அறையில் நல்ல குளியல் எடுத்தோம். சுடுநீரும் உண்டு. இது தானே 25 வருடமாகப் பழகியது. ஆயினும் நான் குளிர் நீரிலேயே குளித்தேன். கணவர் சுடுநீரில் குளித்தாராம். குளிருட்டியை எமக்குப் பிடித்தமான அளவில் வைத்து நன்றாகத் தூங்கினோம்.

காலையில் எலாம் அடிக்கவோ, வேலைச் சிந்தனையோ இன்றி ஆறுதலாக எழுந்து மறுபடி குளித்து வெளிக்கிட்டு அருகிலிருந்த Pelita உணவகத்திற்கு சென்றோம் காலையுணவிற்கு.

(இறுதியாகப் அங்கிருந்து டென்மார்க் வரப் பயணப் படும் போது, பயணக்கட்டுரைக்கு உதவுமே என்று அவசரத்தில் காரில் இருந்தபடியே நான் தட்டிய படம் இது.)

இந்த உணவகம் மலேசியா முழுக்க சங்கிலி போல உள்ளது. மலேயாக்காரன், சீனாக்காரனுக்குச் சொந்தமானது. இந்தியா, பங்களாதேஷ் வாலிபர்கள் வேலை செய்கிறார்கள். 

மசாலா தோசை ,ரவா தோசை எனப் பலவாறான தோசைகள், (உழுந்துத் தோசையை நினைக்கக் கூடாது) பரோட்டா என காலை, மாலையுணவாகவும்,  பகலில் சோறு, கடலுணவு வித விதமாகவும், (ஹலோ!..ஹலோ! நான் தாவர பட்சணி! கன்னா பின்னாவெனக் கற்பனை ஓட்ட வேண்டாம்), நூடில்ஸ் எல்லா நேரமும் என்றிருந்தது.

ஆனால்!…ஆனால்!…ஐய்யோ!……..

தேனீருக்கு டின்பாலோ அல்லது மாவோ தான் கரைக்கிறார்களாம். சப்பென்று போய்விட்டது. பசும்பால் தேனீருக்கு விசேட கடைக்குச் செல்ல வேண்டுமாம். இந்தக் கடையில் அங்கு நின்ற நாட்களில் பலவகையாக உணவுகளை ருசித்துப் பார்த்தோம்.

அருகிலேயே பெரிய ஷொப்பிங் மால் உள்ளது (101   shoping mall  ).

அங்கு சுற்றிப் பார்த்து   (3 அடுக்கு  வியாபார நிலையம் சினிமா தொடங்கி அத்தனையும் உண்டு.)மொபைல் சிம் காட்  எல்லாம் வாங்கி, பகல் இரவு உணவும் முடித்து  அறைக்குத் திரும்பினோம்.  அன்றைய பொழுது அப்படியே போனது. வெயிலும், வியர்வையும். காலையும் மாலையும் குளிப்பது தான்.

அடுத்த அங்கத்தில் 4ல் சந்திப்போம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-7-2012.

                                 

4. பயணம் (மலேசியா). 2

our photo.

 

4. பயணம் (மலேசியா). 2

டுபாய் தேசிய விமான நிலையத்தில் இறங்கினோம்.

மாபெரும் விமான நிலையம். 8200 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் பரந்துள்ளதாம். உத்தியோக பூர்வமாக 1960ல் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதாம். மத்திய கிழக்கில் முதன் முதலாகத்திறக்கப் பட்ட விமான நிலையம் இதுவாம்
வருடத்திற்கு சுமார் 40 மில்லியன் பிரயாணிகள் பயணிக்கிறார்களாம். இது கூடிக் கொண்டே வருகிறதாம்.
ரேமினல் 3 –  2008 ல் திறக்கப்பட்டதாம்.

google photo.

இது உலகிலேயே மிகப் பெரிய கட்டடம் எனப்படுகிறது.
மத்திய கிழக்கில் இது மிகவும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகிறது. 130க்கம் மேலான விமானப்பயணங்களும் 220க்கும் மேலாக கால அட்டவணைப்படி சேரும் இடங்களாகவும் உள்ளது.

பிரயாண நெரிசலில், பரபரப்பில் 13வது இடத்தை உலகில் பெற்றது 2011ல்.

our photo.

4 மணி நேரம் நாம் அங்கு தங்கினோம்.

நிறைய தமிழர் ஆணும் பெண்ணுமாக விமான நிலையத்தில் வேலை புரிகின்றனர். எங்களைக் கண்டவுடனேயே தமிழா என்று கேட்டுப் பேசுகின்றனர். பெண்கள் குங்குமப் பொட்டோ, ஒட்டுப் பொட்டுடன் இலட்சுமிகரமாக விமான நிலைய உடையுடன் பணி புரிகிறார்கள். தமிழரைக் காண்பது அந்த அரேபிய விமான நிலையத்தில் மிகவும் சர்வசாதாரணமான காட்சியாக இருந்தது.

our photo. 
25 வருடத்திற்கும் மேலாக இப்படிக் காட்சியை நாம் காணவில்லையே! மகிழ்வாக இருந்தது.

our photo.

அழகு படுத்த செயற்கையாக பூந்தோட்டம் நீரூற்று செய்து வைத்துள்ளனர். மிக அழகாக, ஆடம்பரமாகவே விமான நிலையம் இருந்தது. என் கணவர் ”எண்ணெய்க் காசுகளைப் பிறகென்ன செய்வது! இப்படிக் கொட்ட வேண்டியது தானே!”…என்றார்.

our photo.

அதிகாலை 3 மணிக்கு விமானம் மலேசியாவிற்குப் புறப்பட்டது. பகல் 1.50க்கு கோலாலம்பூர் விமான நிலையம் சென்று சேர்ந்தது. இறங்கியதும் பயணப் பெட்டியைத் தானே தேடுவோம். எங்கு பெட்டிகளை எடுப்பது என்பதை அறிய முடியவில்லை. விசாரித்த போது ஒரு கோச் வண்டியில் ஏறி அடுத்த ரேமினலுக்குச் சென்று அங்குதான் பெட்டிகள் எடுக்க வேண்டுமாம். இது புது விதமாக எமக்கு இருந்தது. சுமார் ஒரு 5 ,10 நிமிட ஓட்டம். இறங்கினோம். இங்குதான் பாஸ்போட், மலேசியா அல்லாதவர் நிரப்பி வைத்த பத்திரம் முதலியவற்றைக் கொடுத்தோம். எதுவித தடைகளுமின்றி எமது பெருவிரல் அடையாளத்தை எடுத்த பின்பு மறு புறம் சென்றோம். காத்திருந்து உருளும் பட்டியலில் எமது பெட்டிகளை எடுத்தோம்.
மகனும்,மருமகளும் எம்மைக் கூட்டிச் செல்ல வந்திருந்தனர். ”…என்னப்பா இறங்கியவுடன் செக்கிங் பெட்டி என்றில்லாது குளம்பி – குட்டி ரெயின் ஏறியல்லவா இங்கு வந்தோம்!..” என்றோம். ”..அன்ரி உங்களுக்கு இதைக் கூற மறந்து விட்டேன்¨ என்றார் சாந்தி.
அங்கு இன்னொரு விமான நிலையமும் உண்டாம் அதில் இப்படியல்ல என்றார் சாந்தி. ”..சரி உடனே மகள் லாவண்யாவிற்கு இதைக் கூற வேண்டும் இல்லாவிடில் அவர்கள் வரும் போது எம்மைப் போன்று குளம்பி விடுவார்கள்..” என்றேன். கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து புச்சோங் எனும் இடம் ஒருமணி நேரப் பயணம். சாந்தியின் வீடு. அங்கு பயணமானோம்.

அங்கம் 3ல் சந்திப்போம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-7-2012.

our photo.

 

                                      

4. பயணக் கட்டுரைகள்.(மலேசியா) – 1

 

4. பயணம் மலேசியா) – 1

கடந்த  வருட 2011 இறுதியில் …
ஓ!..மனம் நிறைந்த மகிழ்ச்சி!…அன்றாட வழமை வேலைகள், குளிர்…அனைத்திலுமிருந்து விடுதலை.
18 நாட்கள் பயணம் வெளிநாட்டில்.
முன்னரும் மலேசியா போயிருந்தோம். ஆயினும் ஆனந்தம்!….ஆனந்தமே!……

பயணம் புது சக்தி தரும்.
நயனம் நிறை மாறுகாட்சிகள்
சயனமற்ற பல புரிதல்கள்
வயன(ண)மான(விதமான) அனுபவங்கள்!
சுயமாயுன்னைப் புதுப்பிக்கலாம்!

அதிகாலை 6.15க்கு பயணப் பெட்டியை உருட்டியபடி சென்று நகரப் பேருந்தில் ஏறினோம்.

15 நிமிடங்களில் அது நமது ஓகுஸ் நகரப் பிரதான பேருந்து நிலையத்தை  அடைந்தது. 

அங்கிருந்து 7.15க்கு டென்மார்க் தலைநகர் கொப்பென்கேகனுக்குச் செல்லும் பேருந்தில் ஏறினோம். 

6, 7 நிமிடத்தில் அது டென்மார்க் கடல் வழி துறைமுகத்திற்குச் சென்றது.

அங்கு பேருந்தும் நாமும் பெரிய கடவைப் படகின் (பெஃறியின்) வயிற்றினுள் புகுந்தோம். பேருந்திலிருந்து இறங்கி படிகளால் ஏறி கப்பலினுள் சென்றோம்.
 

இது ஒன்றரை மணி நேர கடவைக் கப்பல் பயணம்.

உள்ளே அன்றாடம் வேலைக்குப் போய் வரும் மக்களே பாதிக்கு மேல் காணப்பட்டனர். காலையுணவை உணவகத்தில் வாங்கி உண்பவரும், தம் உணவுப் பொதியை உண்பவருமாகப் பலர். கணனி விளையாட்டு ஒரு புறம், தொலைக் காட்சி, செய்திகள் கவனிப்போர் என்று பல ரகம்.

உள்ளே சுற்றிப் பார்த்து நாம் நேரத்தைக் கழி(ளி)த்தோம்.

மறுபடியும் ஒன்றரை மணி நேர பேருந்துப் பயணத்தில் தலைநகர் காஸ்ருப் விமான நிலையம் அடைந்தோம்.

விமான நிலைய உணவகத்தில் எமது பொதியுணவை உண்டோம்.

பேருந்து ஓடும் திட்டப்படி வேறு வசதியில்லாததால் முற்பகல் 11 மணிக்கு வர வேண்டியிருந்தது.

ஆறுதலாக இருந்து பிள்ளைகளுக்கும் தொலை பேசி எடுத்துவிட்டு நமது பெட்டிகளை ஒப்படைத்து (அப்பாடா! இனி தூக்கிச் சுமக்க வேண்டிய தேவை இல்லை. அவை மலேசியாவில் கிடைக்கும்)

பயண அனுமதித் தணிக்கைகள் முடித்து உள்ளே சென்றோம்.

2.00 மணிக்கு எமரேட்ஸ் விமானம் எங்களைச் சுமந்து சென்றது.


நெருக்கமான இருக்கைகள் கொண்ட, கால்களை வசதியாக நீட்ட முடியாத பயணம். வானொலியில் தமிழ் இசை என்பதின் கீழ் தமிழ் பாடல்கள் காது ஒலிபெருக்கி மூலம் கேட்டபடி, பன்மொழித் தொலைக்காட்சிகளையும் பார்த்தபடி பயணம் நடந்தது. 6 மணி நேரத்தில் டுபாய் விமான நிலையத்தில் இறங்கினோம்.

தொடருவேன் அடுத்த 2ம் அங்கத்தில்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-7-2012.

Next Newer Entries