(நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (26.) இறுதி அங்கம்.

(நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (26.) இறுதி அங்கம்.

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்தது)

வெப்பமான காலநிலையில் பிறந்து, வளர்ந்து, இங்கு வந்து 25 வருடங்கள் இந்தக் குளிரான காலநிலைக்குப்  பழக்கமாகினோம்.                                                         

ரோமாபுரியின் வெப்பமான காலநிலை என் கணவருக்கு ஒத்து வரவில்லை என்பது எனக்குத் தெரிந்தது. எதையும் வாய்விட்டுக் கூறி மற்றவர்கள் உட்பட என்னையும் தொல்லைப் படுத்தும் ரகமானவர் அல்ல என் கணவர். அதற்கேற்றபடி நான் புரிந்து நடந்து கொள்வேன். எனது கணவர் கஷ்டப்படுவதும் வேர்த்து விறு விறுப்பதையும் பார்த்ததும், நாமிருவரும் மாறி மாறி வாகனம் ஓடி சுகமாக, பத்திரமாக டென்மார்க் வரவேண்டும் என்ற எண்ணம் எனக்;கு மேலோங்கியது. அதுவும் நீண்ட தூர வாகன ஓட்டம்.                                           

மது பயணத் திட்டத்தின் அடுத்த குறி இத்தாலி நாப்போலியாக இருந்தது. அங்கு சென்று கப்றி எனும் தீவுக்கும் செல்வது திட்டமாக இருந்தது.    போகமுடியாத ஏக்கம் தந்த கப்றி தீவின் அழகைப்பாருங்கள்.

          

நாப்போலி போகும் எண்ணத்தைப் பலவந்தமாகக் கைவிடப் பண்ணினேன். கணவர் விருப்பம் 50க்கு 50 ஆகத் தான் இருந்தார். ரோமில் அன்று இரவு தங்கி, காலையில் பயணித்து ஒரு இரவை வீணாக்காது அன்று மாலையே டென்மார்க் திரும்புவோம் என்று, வத்திக்கான் திருத்தலமருகில் தங்கிய ஸ்ரார் ஹோட்டலைக் காலி பண்ணினோம். உடனேயே டென்மார்க் புறப்படும் பயணத்தைத் தொடங்கினோம்.

முடிந்தளவு வாகனம் ஓடியபடி தெருவோர வாடி வீடுகளாகப் பார்த்தபடி சென்றோம். தெருவோரமாக வசதியாக வாடிவீடு வர, உள்ளே சென்று கேட்டோம். இடம் இருந்தது. விலை மலிவாகவும்  இருந்தது ஆச்சரியம். அங்கு இரவு தங்கி நல்ல தூக்கம் கொண்டோம். காலையுணவை முடித்து பயணத்தைத் தொடர்ந்தோம்.                                                                 

2001 கி.லோமீட்டர் காட்டினார் நவீன பார்த்தசாரதியார் அங்கிருந்து நமது ஓகுஸ் நகர் போகும் தூரமென்று.

தில் என்ன திறில் என்றால் நவீன பார்த்தசாரதியார் எந்தப் பாதையை எமக்குக் காட்டுவார் என்பது தான். பொதுவாக பிரதான பாதையையே எப்போதும் தெரிவு செய்வார்.

நாம்  FIRENZA  போகும் வரை எதுபாதையெனத் தெரிய வராது. அதிலிருந்து பாதை பிரியும் போது தான் தெரியும்.

றுதியில் ஒஸ்றி;யாவுக்கு ஊடாகத்தான் நவீனபார்த்தசாரதியார் பாதை காட்டினார். நல்ல மலைநாடு தானே ஒஸ்றியா!
வ்வொரு குகைப் பாதைகளும் சுமார் 2254 மீட்டர் நீளமாகவும், ஆகக் கூடியது 3418 மீட்டர்  நீளமாகவும் இருந்தது. இவைகள் பென்னம் பெரிய மலையைக் குடைந்த குகைப் பாதைகள் தான்.

திராட்சைத் தோட்டங்கள் இரு மருங்கும். அதனுடாக தெருவானது செல்கிறது. அசல் தேயிலைத் தோட்டம் போல படிகள்  படிகளாக திராட்சைத் தோட்டங்கள். அதாவது திராட்சைப் பந்தல்கள் அந்த அழகைத் தந்தன. 

 

10 வயதுப் பிள்ளை எட்டிப் பறிக்கும் அளவு தான் திராட்சைக் கொடிகளின் உயரம். ஊரில் நாம் பார்த்தது, ஒரு பெரிய மனிதன் அளவு உயரமான திராட்சைப் பந்தல் தானே! இடையிடையே வைன் தொழிற் சாலைகள்.

Bologna, Modena, Verona< Montova   எனும் நகரங்களுடாக ஓடினோம்.

வெரோனா மலைத் தொடர் ஒரே கல்லு மலைத் தொடராக இருந்தது.

றொவேறிற்ரோ எனும் மலைக் குன்றில் ஒரு கோட்டை இருந்தது தெரிந்தது. ஒரே மலை மலைக் காட்சிகள தான். மிகவும் கண்ணைக் கவர்ந்தது அதன் எழில். குளிர்மையாகவும் இருந்தது. கண் முன்னாலே எதிரில், இரு பக்கமுமாக மலைகள் தான்.

         

ஸ்றியாவைப் பார்த்த பிறகு, இப்போது ஒஸ்றியா தான் மிக அழகான இடமாகத் தெரிந்தது. vils எனும் கிராமத்தில் உடைத்த  கல்லுகள் மின்சாரக் கம்பியூடாக ஒரு மலையிலிருந்து மறு பகுதி மலைக்கு தானியங்கியாகச் செல்வது தெரிந்தது.

Brenner  எனும் நகரம் மிக அழகாகத் தெரிந்தது.

  

21-8-06 திங்கள இரவு ஒஸ்றி யில் ஒரு வாடிவீட்டில் தங்கினோம். நிம்மதியான இரவு,

காலை எழுந்து யன்னலைத் திறந்தால் அழகான பென்னம் பெரிய மலை கண் முன்னால். அழகான ஒரு வாடிவீடும் தான். காலை 9 மணிக்கு அங்கிருந்து பயணமாகிப் புறப்பட்டோம்.

10.20 க்கு nஐர்மனி வந்துவிட்டோம்.  aalan-westhausen  யேர்மனியிலும் நீண்ட நேரத்தின் பின் ஒரு சுரங்கப் பாதை ஒஸ்றியாவில் கண்டது போலக் கண்டோம். முஞ்சனுடாக 22-8-06 சுகமாக டென்மார்க் வந்தடைந்தோம்

ரோம் தாண்டியதும் கணவரும் சுறு சுறுப்பாக வந்திட்டார். காரணம் அந்த ரோம் நகர  வெப்பக் காலநிலை மாறியது தான் காரணம்.

ல்ல ஒரு பயணமாக இது அமைந்தது. அதை உங்களுடன் பகிர்ந்தது இன்னும் மகிழ்வு தான். இலண்டன் தமிழ் வானொலியூடாக எனது குரலில் இதை கிழமை தோறும் வாசித்திருந்தேன். நிலையத்திற்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

விரைவில் தாய்லாந்துப் பயண விவரணம் எனது வலையில் தொடரும் இதுவும் இதே வானொலியில் வாசிக்கப்பட்டது தான்.

 வணக்கம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-4-2007.                 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (25)

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (25)

 (பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)


லகத்திலேயே முதன் முதலில் சீசர் தான், தனது உருவச்சிலையை தனது இராசதானியில் தனக்கு அமைக்க அனுமதி கொடுத்தானாம்.

வெற்றியை அடையாளப்படுத்தும் புன்னகையுடன் சக்தி மிகுந்த ஒரு குதிரையில் அமர்ந்த யூலியஸ் சீசர், கீழே ஒரு பாபேரியன் ஒடுங்கி நிற்பது போலவும் சிலை அமைக்கப்பட்டது. கவசம், ஆயுதங்களின்றி அழிவுகளல்ல, ஆக்கம் கொண்டு வருபவனாகச் சிலை இருந்தது.

(Ceaser in horse.)

ந்தச் சிலையே பிற்காலத்தில் மற்றைய அரசர்களின் சிலை ஆக்கங்களுக்கு முன் மாதிரியாக இருந்ததாம். இதே போல கொன்ஸ்தாந்தைனின் சிலையும் அமைக்கப்பட்டது.

வ்வப்போது ஒவ்வொரு அரசர்களும் பல பெயர்களில்  ரோமாவில் இராசதானிகள் அமைத்தார்கள். ரோமானியம் எனும் புகழ் பெற்ற இராசதானியும் மலைகளுக்கிடையில் உள்ள பள்ளத்தாக்கில் தான் முன்பு அமைந்திருந்ததாம். அது முன்பு ஒரு அடக்கத்தலமாகவும் இருந்த இடமாம்.

நாம் யூலியஸ்சீசர் வாழ்ந்த இடிந்த வீட்டையும் பார்த்தோம்.
அவனது குதிரைச் சிலை எங்கே என்று தெரியவில்லை. சாதாரணமாக அரச உடையில் தனது வீட்டிற்குக் கிட்ட பெரிய தெருவோரமாக, சீசர் நிற்கும் உருவச் சிலையுடன் நின்று ஒரு படம் எடுத்தேன்.

  

மாலை வரை சுற்றிப் பார்த்தோம்.

மிக வெப்பமாக இருந்தது காலநிலை.                                        

மிகப் பரந்த இடம். நடக்க நடக்கப், பழைய ரோம நகரமாகவே இருந்தது.

(பழைய ரோம நகர படங்கள் முதல் அங்கத்தில் பார்க்கலாம். படத்தில் ”கிளிக்” பண்ணினால் பெரிதாகக் காணலாம்.)

பிரமாண்டமான இடிந்த கட்டிடங்களானாலும் பார்க்க அலுப்பு வரவேயில்லை. அவ்வளவு சனக் கூட்டம். உல்லாசப் பேருந்தே தேவை யில்லைப் போல இருந்தது நடந்த போது.  

கொன்ஸ்தாந்தைனின் சிலை.

 

 நான் முன்பு வத்திக்கானோடு சேர்ந்த தகவலாகக் கூறினேனோ தெரியவில்லை ரோமில் சுமார் 400 தேவாலயங்கள் இருக்கிறதாம். இந்த இடிந்த இடங்களிலும் தேவாலயங்களும் இருந்தது.

டுத்து ஒரு தகவலாக இத்தாலியில் சூரிய சக்தியைப் பாவிக்கிறார்கள் என்பதற்குச் சான்றாக தெருவோரங்களில் தொலைக் காட்சி போன்று சதுர தகடுகள் கம்பு போன்று நட்டு, அதில் பொருத்தியுள்ளனர். அடிக்கடி இது பெரும் தெருவோடு காட்சியாக இருந்தது. இது என்ன என்று முதலில் ஆச்சரியமாகத் தான் பார்த்தோம். பின்னர் அதை ஊகிக்க முடிந்தது

அடுத்த அங்கத்துடன் இந்தப் பயண விவரணம் முடிவடைகிறது.

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.

23-4-2007.

 

 

 

                                                                    

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். (24)

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். (24)

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

ருவன் என் வலது மணிக்கட்டை, அதாவது எனது கையை இறுகப் பிடித்தான்.

டனே..  “”  hej! what are you doing? “” என்று நான் சத்தமாகக் குரலை உயர்த்தினேன். அவன் வேகமாக நகர்ந்து 100 மீட்டர் என்னைத் தாண்டி விட்டான். நான் பின்புறமாக் திரும்பியே சத்தமிட்டேன். அவன் முகத்தைக் கூட என்னால் பார்க்க முடியவில்லை. ஒரு சீன நாட்டுத் தடியன் போன்று, பின்புறம் தெரிந்தது. கட்டைக் காற்சட்டையுடன் மிக வேகமாகச் சென்றான். பேசாமல் பார்த்தபடி, “´இங்கே பாருங்கோ! அவன் என் கையை இறுகப் பிடித்தானப்பா!””  என்றேன்.

ன் கையைப் பார்த்தேன். என் மணிக்கூடு கையில் இருந்தது. நான் எனது வலது கையில் தான் மணிக்கூடு கட்டுவது வழமை. ஏன் அவன் கையைப் பிடித்தான்,  நிச்சயமாக எனது மணிக்கூட்டை உருவிடத்தான் அவன் முயற்சித்தான் என்பது புரிந்தது. காரணம் நாம் நின்று கதைக்கவோ அவனைக் காணவோ இல்லையே! கணவர் “” அவன் மணிக்கூடை பிடுங்கத்தான் பார்த்திருப்பான்””   என்றார்.  “”நல்ல வேளை எந்தத் தங்க நகையுமின்றி ஊர் சுற்ற வந்தது எவ்வளவு நிம்மதி “”  என்றேன் நான்.

பின் டென்மார்க் வந்த பின்பு என் சிநேகிதியுடன் “”  ரோம் போய் வந்தோம்”” என்று போது, “” ஏதும் களவு கொடுக்க வில்லையா? அங்கு சரியான களவாம் “” என்று கேட்டார்.

நாம் அப்படியே நடந்து பழைய ரோம நகரத்தைக் கால் ஓயும் வரை பார்த்தோம்.

       

சுற்றுலா வழிகாட்டியை அமர்த்தினால் தனியே போக, குழுவாகப் போக என்று பல வித ரகத்தில் வழிகாட்டிகளின்  பணத்தின் விகிதம் உள்ளது. இந்த நிலை கொலேசியத்திலும், எல்லா இடத்திலும் இருந்தது.

யூலியஸ் சீசர், கிளியோபட்ரா போல ஆடையணிந்து வாள் கேடயங்களுடன், ஆதிகால உடையில் ஆங்காங்கே வேடமிட்டு நிற்கிறார்கள். அவர்களுடன் நின்று படம் எடுத்தால் அதற்கும் பணம் கொடுக்க வேண்டும். எனது கணவர் ஆசைப்பட்டு இரு வேடதாரிகளுடன் நின்று, என்னைப் படம் எடுக்க வேண்டினார்.  

                                                   

ழைய ரோம நகரம் இடிந்த நிலையில் பாழடைந்து தான், ஆனால் ஏராளமான உல்லாசப் பயணிகள் ஒவ்வொரு வழிகாட்டிகளுடன், விரும்பிய மொழிகளில் கூட்டம் கூட்டமாகக் குழுமிச் சென்ற காட்சி   யே! யே!… என்றே இருந்தது.                                                                                           

ரி! நாம் இனி ரோமாபுரி பற்றிச் சிறிது பார்ப்போம்.

ரோமாபுரியின் ஆரம்பம் கிறிஸ்துவிற்கு முன் 31ல் ஒகஸ்தஸ் காலத்திலிருந்து உதயமாகி, சுமார் 500 வருடங்கள் நிலைத்திருந்ததாம். 44ல் யூலியம் என்றும் யூலீ என்றும் யூலியஸ் சீசரினால் அடித்தளமிடப்பட்டது.

க்காலம் பொருளாதாரத்தில் மிக உயர்வாக இருந்ததாம். கட்டிடக் கலையின் எழுச்சியின் அடையாளமாகவும், உலகத்தின் நடு மையமாகவும் அன்று ரோம இராஐஸ்தானம் இருந்ததாம். கொலேசியமும்,  அதைச் சூழ்ந்த பிரதேசமும் ரோமர்களின் பிரதான நகரமாக, இராஐதானியாக விளங்கியது.

பெரும் திரளான மக்களின் கலை, கலாச்சாரம், மதம், நீதி, வியாபாரம், அரண்மனைகள், கோயில்கள், பிரசங்க மேடைகள் என வியாபித்த பெரும் நகரமாக இது விளங்கியது. ஆக ரோமாபுரி நிறுவுவதற்கு ஒகஸ்தசும், யூலியஸ் சீசரும் மிகப் பிரதானமானவர்களாக இருந்தார்கள்.     

தொடரும்.                    

வேதா. இலங்காதிலகம்., 
ஓகுஸ்,  டென்மார்க்.
16-4-2007.                                                      

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (23)

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (23)
(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது.)

ரங்கத்தில் சண்டை பிடிக்க புலி, சிங்கம் யானை, காண்டாமிருகம், சிறுத்தையெனப் பல மிருகங்கள் ஆபிரிக்கா, இந்தியாவிலிருந்தும் தருவிக்கப்பட்டதாம். விரும்பாதவர்கள் பலவந்தப் படுத்தப்பட்டார்கள். அந்த வகையில் கிறிஸ்ரியன் எனும் அரசனைத் தூக்கி சிங்கத்திற்கு எறிந்து கொடூரமாகக் கொன்றார்களாம். இதன்பின்னர் இந்த வேகமான கொடுமையின் இழிவுகேடு புறக்கணிக்கப்பட்டது.

       

கி.பி. 399ல்  Honorius  என்ற அரசன் மனித சாகசச் செயல் படிக்கும் பாடசாலையை மூடிவிடக் கட்டளையிட்டான். 404ல் சாகசச் சண்டைகள், மனித ஆட்டங்களைத் தடை செய்தான். கிறிஸ்தவ சமயம்  St,Augustine காலத்தில் புகுத்தப்பட்டதுடன் இக் கொடுமைகளுக்கு முடிவு காலம் வந்தது.                                          

1995ல் முந்திய கொலேசியத்தின் 15 விகித அழிவும் பார்க்கக் கூடிய விதத்தில் 85 விகிதமாகத் திருத்தி அமைக்கப்பட்டது.   2003, 2004ல் திருத்தியமைப்புகள் முடிவுக்கு வந்தது என்று வாசித்தேனாயினும் அங்கு திருத்த வேலைகள் இப்போதும் நடை பெறுவது போன்றே தோற்றம் இருந்தது.                                                      

ற்காலம் என்பது போல, நடுக் காலத்தில் கொலேசியம் ஒரு வகையான குகை போன்று, கல்லெடுக்கும் சுரங்கமாக, கட்டடப் பொருட்களுக்கு கற்கள், வேறும் பொருட்களும் இங்கிருந்து, புதிய கட்டடங்களுக்கு எடுக்கப்பட்டது.  St.Petters baslica  அதாவது வத்திக்கான் தேவாலயத்திற்குக் கூட கற்கள் இங்கிருந்து எடுக்கப்பட்டதாம். பின்னர் பாப்பரசர் பெனடிற்றோ தான் இக் கட்டிடப் பொருட்கள் சூறையாடலைத் தடுத்து நிறுத்தினாராம்.

கி.பி 476 லிருந்து 1453 வரை  கொலேசியம் மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்ததாம்.  இப்போது உலகிலேயே மிகப் பெயர் பெற்ற இடமாக உல்லாசப் பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது.

க்கள் கூட்டம் நிறைந்து, எதற்குப் போனாலும் வரிசையில் நின்று காத்திருந்து போவதான நிலைமையில், மேலே ஏறிப் போய்ப் பார்க்க நான் மிகவும் மறுத்தேன். கணவர் அடம் பிடித்து, மேலே ஏறிப் போனோம். ஒருவருக்கு 11 ஈரோ அனுமதிக் கட்டணமாக இருந்தது. இப்போதும் கிண்டல் பண்ணுவார் வரமாட்டேன் என்றாயே என்று, உண்மையில் மேலே ஏறினால் தான் அதன் முழுமையைப் புரிய முடியும்.

த்திக்கான் பற்றி நிறைய வாசித்த பின்பு, மறுபடி போய்  அதன் உட்புறங்களைப்  பார்க்க வேண்டும் போல உள்ளது.                                                   

ந்த வகையில் கொலேசியம் பார்த்தது திருப்தியாகவும், இதற்குப் பிள்ளைகளுக்குத் தான் நாம் நன்றி கூற வேண்டும். அடுத்தது என் கணவரின் துணிச்சலும், அதற்குத் துணையான எம் சவால் மனமும் தான்.

கொலேசியத்தைச் சுற்றி எல்லாப் பக்கமும் மிகப் பரந்த இடத்துடன் நிலம் இருந்தது. படியேறி மேலே போனால் பெரும் தெருக்கள் தான் சுற்றிவர இருந்தது.

தெருவோரங்களில் பொருட்களை விலை கூறிக் கூறி கூவி நமது நாட்டில் லாட்டரிச் சீட்டு விற்பார்களே!  அப்படி, பிரஸ்லெட், கழுத்திற்குச் சுற்றும் துணிகள், மோதிரங்கள், மணிக்கூடுகள் என்று விற்றார்கள். நன்கு பேரம் பேசி நாம் வாழும் நாட்டு விலையிலும் மலிவாக வாங்க முடிகிறது. நான் அழகான பிரஸ்லெட் 2 வாங்கினேன்.

ப்படியே மேலே ஏறி நடந்தால் பழைய ரோமாபுரியைப் பார்க்க முடிகிறது. அது ஒரு பரந்த வட்டாரம். நடந்து போகும் போது கணவரும் நானும் முன்னும் பின்னுமாக ஒரு அரையடி கூட இடைவெளியின்றி நடந்த போது, திடீரென ஒருவன் எனது வலது மணிக்கட்டை இறுகப் பிடித்தான். 

———மிகுதியை அடுத்த அங்கத்தில் பார்ப்போம்.—————            

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
8-4-2007.

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (22)

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (22)

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)


கொலேசியம் எனும் அரங்கைக் கட்ட ஆரம்பித்த வெஸ்பசியனின் மகன் ரிற்ரோ, 600 பேருக்கும் மேலானவர்கள் கொலை செய்யப்பட்டு, பிரபல சலமன் தேவாலயத்தை எரித்த பலஸ்தீன யூதப் புரட்சியை அடக்கியவன். அந்த நிமிடத்திலிருந்து சியக்கோ மசிமோவில் உள்ளே நடந்த எளிமையான குதிரைச் சவாரியில் மக்கள் கூட்டம் காட்டிய ஆர்வம், உணர்வுகள் தான், இந்தக் கொலேசியத்தைக் காளைச் சண்டை, வேறு மிருகங்களின் சண்டைச் சித்திரவதை, கப்பற் படையாளரின் வீரச் சாகசங்களுக்கு ஏற்ற இடமாக்கும் சிந்தனையைக் கொடுத்ததாம்.                                         

கி.பின் 80ல் கொலேசியம் கட்டி முடித்த போது அதன் திறப்பு விழா 100 நாட்கள் கொண்டாட்டமாக நடந்தது. 5000க்கும் மேலான மிருகங்கள் ஆபிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது. சண்டைப் போட்டிகளில் இங்கு 1000க்கும் மேலான மிருகங்கள் வெட்டப்பட்டும், பல ஆயிரக் கணக்கான சாகசக்காரர்களும் விளையாட்டு என்ற பெயரில் கொல்லப்பட்டனர்.

விற்பன்னரான சண்டைக்காரர்கள் பொது மக்களைப் பிடித்து இதில் ஈடுபடுத்தி மூர்க்கத்தனமாகப் போராடினார்களாம். இந்தக் குரூரமான ரசனைச் செயல் நவீன பார்வையாக, ஆனால் மிகத் தீவிரமாக, அரசியல்வாதிகள், கலைஞர்கள், உயர் வகுப்பு மக்களுக்கு தேவைப்பட்டதாம். குறிப்பாகச் சொல்லப் போனால் ஒரு அரசனோ, உயர் குடும்பத்தவனோ, யாருமே இதை எதிர்க்கவில்லை. தமது குடும்ப விழாக்களையும் இதில் கொண்டாடினார்கள். அரசர்களும் இதைச் சக்தி வாய்ந்த கருவியாகத் தமது சொந்தத் தேவைகளுக்கும் பாவித்தனர்.                       

ந்தக் காலத்தில் கொலேசியம் ஒரு மாபெரும் உருவாக்கமாக, பரந்த உள்ளிடம் கொண்ட அரங்கமாக இருந்தது. உள் அரங்கம் 280அடி நீளம் 175 அடி அகலத்துடன் சுற்றி வர உயரச் சுவர், பார்வையாளரைப் பயங்கர மிருகங்களிடமிருந்த பாதுகாக்க அமைக்கப்பட்டது.

   

பார்வையாளர் அமரும் இடங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற வகையிலேயே அமைந்தது. முன்னிருக்கையில் அரச பிரதிநிதிகள், குதிரைச் சவாரி செய்வோருக்கு மாபிளில் வட்ட இருக்கைகளும், இந்த வகை உடைந்த சில இருக்கைகளை அங்கு காணக்கூடியதாக இருந்தது.

தற்குப் பின் பணக்காரரும், கௌரவமானவர்களும், அவர்களுக்குப் பின்னால், பொதுவானவர்களும், பெண்களும் மர இருக்கைகளில் உயரமான இடத்திலும் இருக்கக் கூடியதாக ஆசனங்களின் அமைவு உருவாக்கப்பட்டிருந்தது. தனிப்பட்ட பெட்டி இருக்கைகள் தலைமை உத்தியோகத்தருக்கும், அரசருக்கும் உருவாக்கப்பட்டிருந்தது.

டிமைகள், சிறைக் கைதிகள், தாமாக விரும்பி வருபவர்கள் இவ்வரங்கத்துச் சண்டைக்;காரர், வித்தையாளராக இருந்தனர்.                                           

சாவுக்கும், வாழ்வுக்குமிடையில், மனிதருக்கும், மிருகங்களுக்கு மிடையில் போராட்டம் நடத்தினார்கள். அரங்கத்தின் மர தளத்தின் மேல் மணல் போடப்பட்டிருந்தது. கீழே தான் பொறிக் கதவுகள், மிருகங்கள் அடைக்கும் கூடுகள், சிறைக் கைதியினரும், அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

நாங்கள் பார்த்த போது தளப் பலகை அங்கு இருக்கவில்லை. ஆனால் கீழே சிறு சிறு பிரிவாகப் பிரித்த சுவர்கள் இருந்தது. எம்மால் ஊகிக்க முடிந்தது.

வெள்ளம் வந்து அரங்கத்தை மூடியதாகவும், காலத்திற்குக் காலம் நில நடுக்கம் வந்தும் எல்லாம் பாழ்படுத்தப் பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரங்கத்திலிருந்து சாகசக்காரர், சண்டைக்காரர் பூனை நடை  (cat walk ) நடந்து, மக்களுக்குள் வந்து எதிர்க்கும் சகபங்காளியையும், தம்மை எதிர்ப் போரையும், முரண்டு பண்ணும் மிருகங்களையும் சுடுவார்களாம்.

கிறிஸ்துவுக்கு முன் 65ல் யூலியஸ் சீசர் தேர்தலில் வென்ற போதும் உச்சக் கட்டமாக இந்த சோடிச் சண்டைகள் நடந்ததாம். 300 க்கம் மேற்பட்ட சோடிகளின் சண்டைச் சித்திரவதையை, சித்திரவதைக் குளப்பத்திற்கு ஆரம்பமாக அமைத்தானாம். பலவீனப் பட்டவர்களைப் பணம் கொடுத்தும் சண்டை விளையாட்டுக்கு இழுத்தார்களாம்.

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்
1-4-2007.

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் அங்கம் (21)

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் அங்கம் (21)
(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

ரோம் நகரம் எரியும் போது நீரோ பிடில் வாசித்தது போல…” எனும் சொற் தொடர் ஏன் வந்தது என்று இப்போது விளங்குகிறது. ஆனாலும் அது பொய் என்பதை உறுதிப்படுத்த என்னால் முடியவில்லை. இணையத் தளங்கள் எல்லாவற்றிலும் எல்லாத் தகவல்களும் வருவதில்லை. நான் 2 அல்லது 3, 4 இணையத் தகவல்களைத் தான் பார்த்துக் கொள்கிறேன். ஒவ்வொன்றிலும் தகவல்கள் வித்தியாசமானவைகளாகவே இருக்கின்றன. ஏராளமான தகவல்கள் நல்ல சுத்த ஆங்கிலத்தில் உள்ளன. என்னால் விளங்கிக் கொள்ள முடிந்த தகவல்களைத் தான் எடுக்கிறேன். சில வேளை கணவரிடம் சந்தேகம் கேட்டால், ”  என்னை ஏன் தொல்லைப் படுத்துகிறாய் விளங்கியதை எழுது ” என்பார். நான் விளங்கிய வகையில் தேடுவேன், மிக ஆர்வமாக தேடுகிறேன். அப்படித் தேடிப் பிறருக்குக் கொடுக்கும் போது, மிக மிக மனநிறைவு கொள்கிறேன்.

நீரோ மன்னன் தற்கொலை செய்ய ஓடிப் போய் நீரோவின் அரச மாளிகை Nero’s golden house க்கு அரை மைல் தள்ளி உள்ள பலற்றையின் (Palatine) மலையில் உள்ள குளத்தில் விழுந்து இறந்தான். மக்கள் குளத்தின் நீரை இறைத்து, இந்தக் குளத்தின் உச்சியிற் தான் கொலேசியம் கட்டப்பட்டதாம்.  Palatine,celian,oppian மலைகளுக்கிடையில, பழைய ரோம நகரத்தில் இந்த அரங்கு கட்டப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில்  caelin – Esquiline மலைகளுக்கிடையில் இது கட்டப் பட்டதாகவும் தகவல் உள்ளது.    

         Nero.                                  

நீரோவின் வீழ்கைக்குப் பிறகு Flavian  குடும்பத்தில் வந்துதித்த வெஸ்பசியன் எனும் பேரரசன் கி.பின் 72ல் பிரமிக்கத் தக்க இவ்வரங்கத்தை நிறுவினான். இவ்வரங்கத்தின் உண்மையான பெயர்  “”  The Amphitheatrum Flavian”” – Anfiteatro Flavio.  கொலேசியத்தை நிறுவுதலில் ரோம ஆதிக்கத்தின் சக்தி, அதிகாரம், என்பவை உலகப் புகழாகி வெஸ்பசியன் பிரபலமானான். மக்களுடன் ஆதரவான உறவை வைத்திருந்தான். மக்களுக்கு ஒரு உல்லாசப் பொழுது போக்குக் கட்டிடமாகவே இக் கொலேசியத்தைக் கட்டினான்.

வன் காலத்தில் இது கட்டி முடியவில்லை, இவன் மகன் ரிற்ருஸ் பொறுப்பெடுத்துத் தொடர்ந்தான். ரிற்ருஸ் 2 வருடமே அரசாண்டான். கட்டிட வேலையை பொறுப்பாக அவனின் இளைய சகோதரன் டொமிற்றியன் கி.பி 80ல் முடித்தான். தனது தந்தைக்காகவே Flavian Amphitheater  என்ற பெயரைச் சூட்டினான். பின்னர் ரோமச் சொல்லான  goantic  எனும் சொல்லை மருவி கொலீசியம்   எனப் பெயரும் மாறியது.

  

நீரோவின் 38 மீட்டர் உயரமான உருவச் சிலை,  bronza colossal  சிலை ஒன்றும் இக் கட்டிடம் இருந்த இடத்தினருகில் இருந்தது.

    Entrance–

 இப்போது அந்தச் சிலை அங்கு இல்லை.                                                      

6 ஏக்கர் நிலத்தில், இக் கட்டிடம் கட்டி முடிய ஒன்பது வருடங்கள் எடுத்தது. 30 ஆயிரம் யூதர்கள் இதைக் கட்ட உதவினார்கள். மென்மையான மண் கொண்ட இடமாக இருந்ததால், 40 அடி ஆழத்தில் அத்திவாரம் எரிமலைச் சாம்பலும், சுண்ணாம்பும் கொண்டு கட்டப்பட்டது. 620 தர 507 அடி அகலம் கொண்டது. வெளிச் சுவர் 157 அடி உயரம் உடைய 4 மாடிகள் கொண்ட கட்டிடமாகும். ஓவ்வொரு மாடியிலும் 80 யன்னல்கள், திறந்த ஆர்க் என்று கூறும் வளைவுகளாக, தூண்களால் பிரிக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் பார்வையாளர்கள் அமரக் கூடியதாக இவ்வரங்கம் அமைந்தள்ளது. இது பற்றி மேலும் தொடர்வோம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-3.2007

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (20)

 

 

வீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (20)

 

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது)

நேரம் சுமார் மாலை 4.45ல் கணவர் கூறியதுவும் நல்ல யோசனையாகவே இருந்து, ”கிறிஸ்ரியன் ரோம்” எனும் சுற்றுலாப் பேருந்தின் பயணச் சீட்டு, ஒருவருக்கு 13 ஈரோவாக பயணக் கட்டணமிருந்தது. அன்று 19-8-06ம் திகதி பேருந்தினுள் ஆங்கில மொழி பெயர்ப்பு ஒலி வாங்கியைக் காதில் கொழுவிக் கொண்டு ஓய்வாக அமர்ந்திருந்து முழு இடங்களையும் ஒரு சுற்று சுற்றிப் பார்த்தோம்.

     

ந்த பயணச் சீட்டை 24 மணித்தியாலங்கள் பாவிக்கலாம். இது எமக்கு மிக வசதியாக இருந்தது. அடுத்த நாள் 5 மணி வரை அதைப் பாவிக்கலாமே! நாம் நமது வாகனத்தை எடுக்க வேண்டிய தேவையே இருக்கவில்லை. ரோமைச் சுற்றி வர ஒன்றரை மணி நேரம் எடுத்தது.
மீண்டும் சுற்றுலாப் பேருந்தில் ஏறிய அதே இடத்தில் வந்து இறங்கினோம்.

த்திக்கான் கோயில் உள்ளே சென்று நாங்கள் மிகவும் ஆராயவில்லை. இதற்கு நேரமும் எமது பயணத் திட்டத்தில் இருந்திருக்கவில்லை. 1656லிருந்து 1667ல் தேவாலயத்திற்கு அருகில் உள்ள சதுக்கம் கட்டப்பட்டதாம். சதுக்கத்தில் ஒரு சுற்றுச் சுற்றினோம்.

   

ருட்டிக் கொண்டு வர இரவு உணவைத் தேடிச் சென்றோம். நூடில்ஸ் தான், சாப்பிட்டோம், இத்தாலி அல்லவா!                                  

ரவு ஒளியில் மிக அழகாகவே கட்டிடங்களும் ஒளியமைப்பும் இருந்தன. மக்கள் நடமாட்டமும் பகல் போலவே இருந்தது.” இரவில் அறையில் இருக்காது சுற்றிப் பாருங்கள், இரவில் தான் ரோம் மிக அழகு! ” என்று மகள் சொல்லியே தான் எங்களை அனுப்பினார். அவர் பாடசாலைக் காலங்களில் இந்த இடங்ளைச் சுற்றிப் பார்த்துள்ளார். நடந்து திரிந்து விட்டு அறைக்குச் சென்றோம்.

ரவு கழிந்தது. மறு நாள் அதே இடத்திற்கு வந்து காலை 9 மணி போல சுற்றுலாப் பேருந்தில் ஏறினோம்.
முதலில் கொலீசியம் என்று கூறும் மாபெரும் சாகச விளையாட்டு அரங்கத்தைப் பார்ப்போம் என்று, அங்கு இறங்கினோம்.

   

பாடசாலைக் காலங்களில் எமது மகன் தனது சுற்றுலாப் படங்களைக் காட்டியபோது எப்போது நான் இந்த இடங்களைப் பார்ப்பது! ஐரோப்பாவில் தானே இருக்கிறோம்! என்று எண்ணியதுண்டு. வேறும் பல தடவைகள் இயற்கைக் காட்சிகளைக் காணும் போதும் ஏங்கியதுண்டு. பின்னர் மகள் சென்று வந்த போது ”கொலோசியம் பார்த்தீர்களா?” என்றும் கேட்டதுண்டு. ஆக கொலோசியம் என் மனதில் ஒரு சுற்றுலாப் புள்ளியாக இருந்தது. இப்போது அது நிசமாகியது மகிழ்வு தான்.

கிறிஸ்துவிற்கு முன் 753 சித்திரை 21ல் தான் ரோம் கண்டு பிடிக்கப்பட்டது என்று ரோமர் நம்புகின்றனர். ஆனால் நவீன சரித்திரக்காரர் கி. பி 625ல் கண்டு பிடிக்கப்பட்டது என்று நம்புகின்றனர்.

வ்வொரு வருடமும் சித்திரை 21ல் தமது நகரம் பிறந்தது என்று ரோம நகரம் இருக்கும் மலை முழுதும் நீண்ட நேரம் எரியும் மெழுகுதிரியால் மூடி அழகு படுத்திப், பிரமாண்ட நெருப்பு விளையாட்டுக்களை, ரைபர் நதிக் கரையில்  செய்து மகிழ்வார்களாம். (முன்னைய படங்களில் இந்த நதியைக  காட்டியிருந்தேன்)அன்று நூதன சாலைகள் போன்ற இடங்களுக்கு நுழைவுக் கட்டணங்கள் யாவும் இலவசமாக இருக்குமாம்.                                           

ரோம நகரம்  கிறிஸ்துவிற்குப் பின் 64ல் நீரோவின் ஆட்சியில் தீப்பிடித்து எரிந்தது. நகரம் எரியத் தொடங்கிய போது நீரோ நாட்டிற்குத் தூரவே இருந்தான். ஆயினும் மக்கள் அவனைத்தான் நாடு எரிந்ததற்குக் குறை கூறினார்கள். அவன் மிகவும் மனக் குளப்பமாகி தற்கொலை செய்து கொண்டான். அப்படியாகியும் மக்கள் திருப்தி அடையவில்லை. அவனைப் பற்றிய எல்லா அடையாளங்களையும் அழித்தார்கள்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
18-3-2007.

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். (19)

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம். (19)
(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களும் அமைந்தது.)

ன்றல்ல, இரண்டு, மூன்று சுற்றுலாப் பயணிகள் பேருந்து சென்ற் பீட்டேஸ் தேவாலயத்திற்கு அருகாக அரை வட்ட மடித்துச் சென்றதைக் கண்ட என் கணவர்,  ” இன்று களைத்து விட்டோம், இனி நடந்து திரிந்து இடங்கள் பார்க்க முடியாது, வா! பேருந்தில் ஏறி ரோம் நகரைச் சுற்றுவோம். பின்பு நாம் எதைப் பார்ப்பதென்று தீர்மானிப்போம்” …என்றார்.

    

நாம் பேருந்தில் ரோம் பார்க்கும் போது, நான் உங்களுக்கு வத்திக்கான் பற்றிச் சிறிது கூறுகிறேன்.               

16ம் நூற்றாண்டில் தான் வத்திக்கான் நகரம் அமைக்கப்பட்டதாம். ரோமின் மேற்குப்
புறத்தில் ரிபர் (triber) நதி அருகில் வத்திக்கான் மலையில் வத்திக்கான் நகரம் இருக்கிறது.    

      

4ம் நூற்றாண்டில் ரோம அரசன்  Nero “”சியக்கோ வத்திக்கானோ “” என்ற சேர்க்கஸ்
வைத்திருந்தானாம். அந்த இடத்திலேயே தேவாலயம் அமைக்கப்பட்டுள்ளதாம்
இது உலகில் மிக முக்கிய தேவாலயமும், ரோமன் கத்தோலிக்கத்தின் ஆன்மிகத் தலைமை யிடமுமாகும். இத் தேவாலயக் கோபுரத்தை ஆண்டவனின் கரம் என்று இணையத் தளத்தில் வருணிக்கப் பட்டுள்ளது.

கிறிஸ்து பிறப்பின் பின் 64ல் சித்திரவதையின் பின் புதைக்கப்பட்ட சென்ற் பீட்டரின் புதை குழியில், 4ம் நூற்றாண்டில் கி.பி. 326ல் அரசன் கொன்ஸ்ரான்தைன்  முதன் முதலில் ஒரு தேவாலயத்தைக் கட்டுவித்தானாம். “” கொன்ஸ்தாந்தி நோப்பிள் பஸ்லிக்கா””  என்று குறிப்பிடப்பட்ட இது மரத்தினால் வேயப்பட்ட கூரையுடையதாக இருந்ததாம். இன்று நாம் பார்த்து மகிழும் இந்த ஆடம்பரத் தேவாலயம் தான் முன்னர் மரத்தினால் வேயப்பட்டிருந்ததைச் சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்.

   

old vatican—-

பின்னர் 1506 – 1615ல் போப் யூலியஸ் இதை மறு சீரமைக்க Bramante( பிறமன்ரா)  என்னும் கட்டிடக் கலைஞர் தலைமையில் ஒரு குழுவை  நியமித்தான். சிலுவை அமைப்பில், (குருசின்) நட்ட நடுவில் அந்த அழகிய கோபுரம் அமையக் கூடியதாக கட்டிடத்தை அமைத்து வெற்றி கண்டான். 130 வருடங்களுக்கு மேல்  எடுத்து அக் கட்டிடம் கட்டப்பட்டது. இது 23000 ச.மீட்டரும், 60,000 மனிதர் இருக்கக் கூடியதுமாகும்.

மிகப் பிரபலமான அக்காலக் கட்டிடக் கலைஞரான மைக்கல் ஏஞ்சலோ தான் மேற்குப் புறத்துக் குவிந்த கூரையை வரை படம் கீறிச் செய்தார். உலகத்தில் இதுவும் மிகப் பெரியதாகும். இது137 அடி அல்லது 42 மீட்டர் உட்புறக் குறுக்கு வட்டமும், 404அடி அல்லது 123மீட்டர், நடை பாதையிலிருந்து உயரமுமாகும். இதில் உள்ள பலிபீடத்தில் தான் பாப்பரசர் பூசை செய்வார். மைக்கலேஞ்சலோவிற்கு Fontana,  Porta,  ராபெல், அன்ரோனியோ சன்காலோ  என்பவர்கள் உதவியாக இருந்தார்கள்.

டேர்னோ முகப்புத் தோற்றத்தைக் கட்டினார். பேர்னினி என்பவர் இரட்டைக் கோபுரத்தை முன்புறச் சட்டமாக (பிரேம்) அமைத்தார். பின்னர் 1656லிருந்து 1667ல் தான் சென்ற் பீட்டேர்ஸ் சதுக்கமும் பேர்னினியால் கட்டப்பட்டது. 25.5 மீட்டர் நீளம் கொண்ட கற் தூண் (obelisk ) தேவாலயத்திற்கு முன்னரே சியக்கோ வத்திக்கானோவில் அமைக்கப்பட்டது. 1585ல் இப்போது இருக்கும் சதுக்கத்தின் நடுவிற்கு இது நகர்த்தப்பட்டதாம், சுவர்களின் மேலே 140 சொரூபங்கள் குரு பிரதானிகளாக, பாப்பரசர்கள், உறவினர்களென உள்ளது.

 துக்கத்திற்கு வரும் நிரந்தரமான வாசல் வழியை முசோலினி என்பவன் அமைத்தானாம். தேவாலயம் 45 பலிபீடங்களைக் கொண்டுள்ளது. கட்டிட நடுவில் குறுக்கே போகும் படிகள் கீழே பேர்னினி சிலைக்குக் கீழ்ப் புறமாகப், பல பிரபல பாப்பரசர்களைப் புதைத்த புதைகுழிக் குகை உள்ளது. பிரதான மண்டபத்தில் சென்ற் பீட்டரின் பாதத்தை முத்தமிட முடியும். இப்படிப் பல அற்புதங்கள் உள்ளன.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
23-2-2007.

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (18)

 

 

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (18)

(பயண அனுபவங்களும் சரித்திரத் தகவல்களுடனும் அமைந்து)

ந்த பைசா சாய்ந்த கோபுரத்தை, 2வது உலகப் போரில, நாசிகள் அவதானிக்கும் நிலையமாக observation post  ராகப் பாவித்தார்களாம்.

ன்னொரு சோகம் என்ன வென்றால் 1392ல் பைசா நகரப் பரம எதிரியான புளோறன்சுக்கு இக் கோபுரம் விற்கப்பட்டதாம். பைசா மக்களும் புளோறன்சுக்கு அடிமைகளானார்களாம். இத்தோடு பைசா சரித்திரக் கதை முடிவடைந்ததாம்.

மது பெருவிரல் அளவிலிருந்து பல வித அளவுகளில் பைசாக் கோபுரமும், அதன் சுற்று வட்டக் கேபுரங்கள் அனைத்தும் உருவமாக அழகழகாக விற்கிறார்கள்.

 

நாம் பைசா நகரைச் சுற்றிப் பார்த்த போது  Arono நதிக்கரையில் திடீரென நமது புகைவண்டி வாகனம் ஏதோ பிழையாகி ஓட முடியாது நின்று விட்டது.

டடா! நாம் நடந்து போக வேண்டுமோ என எண்ணிக் காத்திருந்தோம். சாரதியார் இன்னொரு என்சின் பெட்டியைக் கொண்டு வந்து கொழுவினார். பின்னர் வண்டி யோராக ஓடியது.

ரவு ஒளியிலும் பகல் போல மிக அழகாக மக்கள் பரவி நின்றிருந்தனர்.
கடைகள் நமது ஊர் போல நடை பாதைக் கடைகளாக இருந்தது.

   

ழகிய கைப்பைகள் இருந்தது, அவை யானை விலை, குதிரை விலையாகத் தான் இருந்தது. வானில் தமது சாமான்களைக் கொண்டு வந்து இறக்கி விட்டு வானை நான்கு புறமும் திறந்து தட்டுகள் அடுக்கி, அதையே ஒரு கடை போல ஆக்கித் தமது பொருட்களை விற்கிறார்கள். இரவு கடை மூடும் போது சுத்தமாகத் துடைத்து விட்டது போல அந்த இடத்தை விட்டுத் தமது வாகனத்தில் சென்று விடுகிறார்கள். 

கூரையற்ற திறந்த வெளியில் பிசா கடைகள், சலாட், நூடில்ஸ் தான் உணவுகளாக இருந்தன. நன்றாகச் சுற்றிப் பார்த்த பின்பு இரவு உணவை அப்படி ஒரு கடையில் உண்டோம். பின்னும் சிறிது நடந்து திரிந்து விட்டுச் சிறு நடை தூரத்தில் உள்ள தங்குமிடம் சென்றோம்.

று நாள் காலை 9.30 க்கு ரோம் நோக்கிப் பயணமானோம்.

ப்படியே போய்க் கொண்டிருந்த போது நவீன பார்த்தசாரதி வழி காட்டியும், நாம் பாதையைத் தவற விட்டு விட்டோம் என்பது புரிந்தது. தொடர்ந்து ஓடித் தூரப் போய்விடாது, பக்கத்துப் பாதையில் இறங்கினோம். அப்படியே ஓடி ஒரு இடத்தில் நிறுத்தி விசாரித்த போது, அந்தப் பாதை வத்திக்கான் நோக்கிப் போவதாக அறிந்தோம்.  அது ரோமுக்கு அருகாமையான இடம் தான். பரவாயில்லை, அதுவும் போக வேண்டிய இடம் தானே என்று, அப்படியே வத்திக்கான் நோக்கி ஓடினோம்.

த்தாலிக் காலநிலை என் கணவருக்கு தொல்லை தந்தது. வியர்வை ஆறாகப் பெருகி கணவரது மேலாடை நனைந்தது.மேலாடையைக் களட்டிவிட்டு, பனியனோடு வாகனம் ஓட்டினார். அப்படியே ஓடி ஓடி வத்திக்கானை அடைந்தோம். தலை நிமிர்ந்த போது மேலே வத்திக்கானின் கோபுரம் பிரமாண்டமாகத் தெரிந்தது.

ரி, தங்குவதற்கு இடத்தைத் தேடினோம். 2, 3 இடங்கள் பார்த்தோம். இறுதியில் அருகிலேயே இருந்த ஆடம்பர வாடி வீட்டைத் தெரிவு செய்து, பொருட்களைக் கொண்டு போய் வைத்து விட்டு, நடை தூரத்தில் இருந்த வத்திக்கான் கோயிலை அடைந்தோம்.

ம்மாடி! பிரமாண்டமான கட்டிடங்கள்! இத்தாலியர் கட்டிடக் கலையில் தலை சிறந்தவர்கள் என்பது எள்ளளவும் சந்தேகமற நிரூபணமாய்த் தெரிந்தது. அதைவிட இது ஒருநாள், இரண்டு நாளில் பார்க்கும் இடமுமல்ல என்பதும் புரிந்தது.

டிக்கொரு தடவை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளும் அங்கு வட்டமடித்துச் சென்ற படியும் இருந்தது

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
17-2-2007.

நவீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (17)

 

வீன பார்த்தசாரதியெனும் நவிகேட்டருடன் நாம் (17)

 

(பயண அனுபவங்களுடன் சரித்திரத் தகவல்களும் அமைந்தது.)

பைசா நகர மக்களின் செல்வ நிலையைக் காட்டவே இந்த மணிக்கூட்டுக் கோபுரம் கட்டப்பட்டது என்று முன்னர் கூறினேன்.

ந்தக் கோபுர ஆரம்ப கர்த்தாவாக 1172ம் ஆண்டு ஒரு பணக்கார விதவை  Berta di Bernade  எனும் பெண்மணி தனது உயிலில் 60 வெள்ளிக் காசுகளை, முதல் ஆரம்பக் கல்லை வாங்கும்படி எழுதி வைத்தாராம்.

3 கட்டமாக இந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. 1173ல் ஆவணி மாதம் முதற் கல்லு வைக்கப்பட்டது. அடிப்பாகம்  BONNANO  PISANO  என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர்  Florance  நாட்டுக்கு எதிராகப் போர் ஏற்பட்டது. கட்டட வேலை நின்றது.

1180ல் மறுபடி கட்டிட வேலை ஆரம்பித்தது.  1185ல் 1ம், 2ம், 3வது மாடிகளைக் கட்டி முடித்தனர். புளோறன்சா நாட்டுடன் மறுபடியும் போர். நாட்டுப் பணம் போருக்கே செலவானதாம். இந்நேரம் இந்தக் கட்டிடம் தெற்குப் புறமாகச் சாயத் தொடங்கியது.

ணியில்லாது எப்படி இது மணிக்கூட்டுக் கோபுரமாகும் என்று 1198ல் 3வது மாடியில் மணியைப் போட்டார்கள். மறுபடியும் புளோறன்சாவுடன் 9 வருடப் போர் நடந்தது.
1284ல்  Giovanni di Simone  என்பவர் இன்னும் 3 மாடிகளைக் கட்டி முடித்தார்.

14ம் நூற்றாண்டு ஆரம்பத்தில் 6வது மாடியில் மணி வைக்கப்பட்டது. 55.86 மீட்டர், அதாவது 83.27 அடி உயரமானது இக் கோபுரம்.

து சரியில்லாத நிலத்தில், உயரமாக, பாரமாகக் கட்டப்பட்டதால் கட்டிடம் சாய்ந்ததாம். கடல் மட்டத்திலிருந்து 6அடி உயரப் பூமியில், கடற் படுக்கை அளவிலிருந்து இக் கட்டிடம் கட்டப்பட்டதாம். நீண்ட கால இடைவெளிகள் எடுத்துக் கட்டப்பட்டதால் அத்திவாரம், கட்டிடம் நன்கு இறுகியதால் கட்டிடம் விழாது இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

க் கட்டிடம் சுண்ணக் கல்லினால் கட்டி மாபிளினால் மூடப்பட்டுள்ளதாம். அத்திவாரத்திற்கு மேல் 1.2 மி.மீட்டர் ஒவ்வொரு வருடத்திற்கும் சரிகிறதாம்.( இது பழைய கணக்குக் கதையாக இருக்கலாம்.)

1934ல் ஒரு இத்தாலியக் கட்டிட நிபுணர் 361 துளைகளை உருவாக்கி அதனுள் காரைச் சுண்ணாம்பையிட்டு, கட்டிடத்தைப் பெலப்படுத்துவதற்காக நிரப்பினாராம். பின்னர் 1995லும் அத்திவாரத்தைத் திருத்தி இவர்கள்; களைத்து விட்டனராம். அதன் பின்னர் கோபுரம் வடக்குப் பக்கம் நோக்கிச் சாயத் தொடங்கியதாம்.

தன் பின்னர் இங்கிலாந்துக் கட்டிட நிபுணர்களின் முயற்சியால் 16 இஞ்சுகள் நிமிர்த்தி, 1838ல் இருந்த நிலைக்குக் கொண்டு வந்து, இன்னும் 300 வருடங்களிற்குப் பாதுகாத்துள்ளதாக எண்ணுகின்றனர்.                                       

பைசா நகர மக்களோ அதை நிமிர்த்த வேண்டாம். அது விழுந்தால் விழட்டும், இது சாய்ந்த கோபுரமாகவே இருக்கட்டும் என்கிறார்களாம்.

1990ல் இக் கட்டிடம் பொது மக்கள் பார்வைக்கு இல்லாது மூடப்பட்டது. வைகாசி 2001ல் மறுபடி திறக்கப்பட்டு மக்கள் பார்க்கிறார்கள். 8 மாடிக் கட்டிடமாக 294 படிகள் சுருளாக spiral போல மேலே ஏறிச் செல்லுவதற்கு உள்ளது. 7 மணிகள் 7 வித்தியாச வருடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் விபரங்கள் இங்கு குறுக்கப்பட்டுள்ளது.
(சில பைசா நகரக் காட்சிகளை இங்கு காண்கிறீர்கள்.)

        
கார்ட்டூன்களில், டிஸ்னி படங்கள், சில சினிமாக்களில் இக் கட்டிடம் பாவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இங்கும் என் அபிமான பிரசாந்த், ஐஸ்வர்யாராய் நினைவுக்கு வந்தனர்.

கோபுரமும் மனதுக்குள் பூ விரித்தது. மிகப் பிரமாண்ட வெள்ளை வெளேர் என்ற தேவாலயமும், ஞானஸ்நான மண்டபமும் அனைத்தும் ஒன்றுடன் ஒன்றுக்கு அழகு சேர்ப்பது….அருமை தான்!

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-2-2007.

Previous Older Entries