16. சிந்தனையில் ஒரு சிந்தனை…( வேதாவின் மொழிகள்.)

சிந்தனையில் ஒரு சிந்தனை…

(இது ஆறு வருடங்களின் முன் 16.10.2005ல் இலண்டன் தமிழ் வானொலியில் புதன் கிழமை இலக்கிய நேரத்தில் ஒலிபரப்பாகிய ஒரு ஆக்கம்)

ஆடம்பர சலவைக் கற்தரையில் நடப்பது போல இலேசாகவும், இதமாகவும், பாலும் பழமும் உண்பது போல இனிமையாகவும் வாழ்வு செல்லும் போது, திடீரென கண்ணாடி மீது கல் வீழ்வது போல, கரடு முரடுக் கற்களில் நடப்பது போல, நெஞ்சில் வலிக்கும் உணர்வு தரும் அனுபவமோ, அல்லது பாகற்காய்ச் சுவை போன்ற கசப்பு அனுபவங்கள் வாழ்வில் எதிர்பாராது வருகின்றது.
அவரவர் மனதிடத்திற்கு ஏற்ப நிலைமையை உள் வாங்கலும் அதன் பிரதிபலிப்புகளும் பலவாறாகத் நடக்கின்றன.
கிடைக்கின்ற கசப்பு அனுபவங்கள் காயங்களைத் தந்தாலும், சில நிகழ்வு வாழ்வில் பலரை திருந்தி நடக்க வழி வகுக்கிறது.  அல்லது சில நிகழ்வு ஒதுங்கிச் செல்லும் உணர்வைத் தருகிறது. பலவீன மனதாளரைச் சில நிகழ்வு திக்குமுக்காட வைத்து செயலிழக்கச் செய்கிறது
சிலர் எதுவுமே நடக்கவில்லை என்ற பாவனையில், அவைகளைச் சிறு தூசியாக எண்ணிக் கொண்டு, தத்துவ வரிகளை வீசிக் கொண்டு மனதிடமாக நிகழ்வை உள் வாங்குதலும் நடக்கிறது.
எனக்கு இந்த சிந்தனையை கீழே நான் தரும் சிந்தனையே தந்தது.

இராமகிருஷ பரமஹம்சர் ஒரு ஊரிலே உபதேசம் செய்த போது அந்த ஊர்ப் போக்கிரி ஒருவன் அவர் முன்னிலையில் வந்து அவரைத் தாறுமாறாகத் திட்டினானாம். பரமஹம்சர் கோபமடைவார் என்று சீடர்கள் எதிர்பார்த்த போது, அவர் சிரித்தபடி ஒரு கேள்வியை அந்தர் போக்கிரியிடம் விடுத்தார்.
”அப்பனே! உனக்கு ஒருவர் பரிசு கொடுக்கிறார், அதை நீ ஏற்க மறுக்கிறாய், அப்போது அந்தப் பரிசு யாருக்குச் சொந்தம்? ”
”இதில் என்ன சந்தேகம்? பரிசு கொடுக்க முன் வந்தவனுக்குத் தான் சொந்தம் ” என்றானாம் போக்கிரி.
பரமஹம்சரும் ”பேஷ்! ரெம்ப சரியாகச் சொன்னாய். இப்போது நீ எனக்குக் கொடுத்த திட்டுகளையெல்லாம் நான் ஏற்கவில்லை. ஆதலால் இது யாருக்குப் போய்ச் சேர வேண்டும்  என்பதை நான் சொல்லவா வேண்டும்?” என்று கேட்டாராம்.
போக்கிரி பதில் பேசாது தலை குனிந்து கொண்டானாம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-9-2011.

                          

Advertisements

27. காத்திரடி வயலோரம். (பாமாலிகை காதல்))

 

 

காத்திரடி வயலோரம்

ண்மை கரைந்தோட
காலிலே சேறாட
கரடுமுரடு வரப்பிலே
காலடி வைப்பவளே!

முந்தானை வரிந்து கட்டி
முடிந்த கொண்டைப் பூமணக்க
சிவந்த வாயாலே சிறு
சிந்து பாடி நடப்பவளே!

ப்பா அம்மாவை
அந்தி மாலை வரச்சொல்லி
முன்னாலே நீ வாயேன்
முழுசாகப் பேசிடுவோம்.

வெள்ளரளி வேலியோரம்
விவரமாப் பேசவேணும்
வெத்திலை வாய் சிவக்க
வெட்கத்திலே நீ குனியவேணும்.

(This photo -Thank you for Sujatha . Anton .(my friend)

ண்ணம்மாவென் கண்மணியே
காத்திரடி வயலோரம்
கட்டாயம் நான் வருவேன்
கதை பேசிக் கைகோர்ப்போம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-9-2011.

                       

 

26. அந்திமாலைக்கு வாழ்த்து.

 

 

                                                  

 

 

அந்திமாலைக்கு ஆண்டுநிறைவு வாழ்த்து.

 

லட்சியம் ஊற்றி நிரப்பி
இலக்கோடு மானுடம் நிமிர்த்த
கோலோச்சும் அந்திமாலைக்கு தமிழ்
மொழியோச்சும் பணி வலையில்.
தலை நிமிர்ந்த தமிழை
அலைந்திட விடாது டென்மார்க்கிலும்
இலை விட்டு வளர்கவென
நிலையூன்றும் வினை வலைப்பூ

ந்திமாலை இணையம் ஓயாது
பந்தி விரித்துத் தமிழை
சிந்தி வந்து இப்போது
ஏந்துகிறது ஓராண்டு நிறைவை.
நிலைமைக்கேற்ற உரை கல்லாக
கலை, இலக்கியம், தகவல்,
விலையற்ற பொது அறிவென
நிலைபெற்ற பல சேவை வாழ்க!.

சின்னஞ் சிறாருக்கும் எந்தப்
பென்னம் பெரும் கலைஞருக்கும்
சின்ன வேற்றுமையற்ற சமவிடம்.
என்னே! உன் சேவை வாழ்க!
என்னையும் உன்னுள் எடுத்தாய்!
என் நெஞ்சார்ந்த சேவையுண்டு.
விரிபுவியில் நீ வளர்ந்து
வியத்தகு புகழ் நாட்டு!

சொற்கள் கொம்பு சீவிய
நாவார்ந்த ஓராண்டு நிறைவு
செஞ்சார்ந்த வாழ்த்துகள்!
வாழ்க! வளர்க! வளர்க!

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
22-9-2011.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2011/09/blog-post_7875.html

                           

208. எங்கே போகிறது உலகம்.(பாமாலிகை (கதம்பம்)

 

 

எங்கே போகிறது உலகம்.

 

அன்பின் தழுவலற்ற மழலைகள்
ஏக்க சமுத்திரத்தில் அல்லாட,
அன்பாலிணைந்த இன்ப ஜோடிகள்
வாழ்வுக்காய் மௌன விசும்பலுடன்,
சினமடக்கிய பூமியாய் துணைகள்
சின்ன வாரிசுகளுடன் ஒற்றைக்காற்தவம்.
முன்னோர் தர்மங்களைப் புரட்டி
எறிந்த மனிதக் கூட்டம்.

விண்தொடும் வியத்தகு தொழில்
நுட்பத்தில் விஞ்ஞானக் குழந்தை.
கண்மயக்கும் அடுக்கு மாடிகளைக்
கண்முன்னே பொலபொலவென
நொறுக்கும் உடைந்த மனிதன்.
உன்னத மானுடப் பிறவியை
அங்கவீனர் ஆக்குவோராய் உலகம்
கண்ணிழந்த மானுடராய்ப் புவியில்.

திருவுடை அன்பு வட்டத்தால்
விலகி தனியாய்- குழுவாய்
உருவாக்கிய மனச்சிலந்தியின் பசையில்
சிக்கி, அல்லாடி, பின்னப்பட்டு
பெருகும் பயமற்ற அமிலத்தில்
தோய்ந்து ஊறிய மனிதன்.
பொங்கும் சுயநல விநோத
உருவில் ஆறறிவாளன் மனிதன்!

பூங்காவனம் உலகென்பதை மறக்கிறான்
தொங்கும் வன்முறை நூலாம்படைகள்
தேங்கிய நரகக்குழியாக்கி உலகில்
தங்க மனிதனெங்கே போகிறான்!
எங்களுலகமிங்குதானிங்குதான்! தானே சுற்றி
பங்கமின்றிக் கதிரவனையும் சுற்றும்
எங்கள் உலகம் எங்கள் கையிலே!
அமைதியைக் கைப்பற்றுதல் எமதுகடன்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
4-8-2006.

(ரி.ஆர்.ரி தமிழ் அலையில் என்னால் வாசிக்கப் பட்டது.)

                       

                            

 

கேட்டறிதல் 14. (வாழ்வியல் குறள்+தாழிசை)

 

 

வாழ்வியற்  குறட்டாழிசை

கேட்டறிதல் 14.

 

கூட்டறிவின் ஒரு பகுதி அறிவுடன்
கேட்டறியும் செவிச் செல்வம்.

பார்த்தறிதல், படித்தறிதல் போன்று உலகில்
கேட்டறிதலும் பெரும் செல்வமே.

கேட்டதும் கெட்டதை உடன் மற!
கேட்ட நல்லதோடு தொடர்.

நல்லதைக் கேட்டு பிறருக்கும் தெரிவி!
சொல்வதால் உயர்வாய்! கீழாகாய்!

பெரியோர் வாய் மொழிகள் கேட்டு
உரிய வழியில் செல்லலாம்.

நூலறிவு இல்லாவிடிலும் கேட்ட அறிவு
மேலுயரப் பயனாகும் நல்லவனிற்கு.

பொல்லாத ஊனக்காரர் சிலர் புவியில்
நல்லனவற்றைப் பிறருக்குக் கூறார்.

விட்டு விலகி எதிரியாகாது, பார்த்தும்
கேட்டும் பழகுதல் நட்பு.

வயிற்றிற்கு உணவு, கண்ணிற்குக் காட்சி
செவிக்குக் கேட்டலும் பூரணம்.

கேட்கும் கேள்விகளால் தெளிவு பிறக்கும்.
வாட்டும் ஐயப்பாடு விலகும்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
17-9-2011.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2011/10/14.html

  

 

                        
 

207. மனித தரம் (பாமாலிகை (கதம்பம்)

 

 

மனித தரம்

 

சிரிப்பு உயர் மனித தரம்.
சிந்தனை என்பதும் மனித தரம்.
சிகரம் தொடுவதும் மனித தரம்.
சிவஞானச் சிந்தனையும் மனித தரம்.

‘ சிக்’ கெனத் தவறும் சிந்தனைத் தெறிப்பு
சிக்காது தொடரும் நகைச்சுவைச் சிரிப்பு
நிற்காத மனதின் நிலையற்ற தவிப்பு
தக்காது நிதானம் தவறும் குறிப்பு.

அகரம் தொட்டு வளரும் அறிவு
நுகர இனிமை, தொடரும் உயர்வு.
பகரப் பகர நெருங்காது அயர்வு,
பக்குவமான உயர் அறிவின் உணர்வு.

அஞ்ஞானம் மறைய அகவிருள் ஒளிர்வு.
மெஞ்ஞானம் வந்து மேலோங்கும் உணர்வு.
சுயஞானம் ஒளிர  சுகமான நிறைவு.
சிவஞானம் தானாகத் தோன்றும் உணர்வு.

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-4-2004.

(24-4-2004ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் சகோதரர் லோகதாஸ் நிகழ்ச்சியில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.
மறுபடி 17-3-2006 லும் வாசிக்கப் பட்டது.
13-9-2011 ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலியில் என்னால் இக் கவிதை வாசிக்கப் பட்டது.)

 

                             

206. உறவு ஊஞ்சல்.(பாமாலிகை (கதம்பம்)

 

 

உறவு ஊஞ்சல்.

 

டலில் ஆடும் படகு
உடலில் ஆடும் உணர்வு
உயிரில் ஆடும் உடல்
வயிற்றில் ஆடும் கரு
கயிற்றில் ஆடும் ஊஞ்சல்
காற்றில் ஆடுது கவிதையாய்.

வாழ்வெனும் ஊஞ்சலில் ஆடுகிறோம்
தாழ்ந்திடாத தடம் தேடுகிறோம்
வாழ்ந்திடப் பாடு படுகிறோம்.
வீழ்ந்திடாத இடம் நாடுகிறோம்.
ஆசையின் பிடியில் ஆடுகிறோம்.
ஆடிக் காற்றாய் அலைகிறோம்.

ன்பெனும் ஊஞ்சலில் ஆடுகிறோம்.
ஆத்திவாரம் உறவில் தேடுகிறோம்.
ஆங்கீகாரம் தேடி அலைகிறோம்
அனுபவ ஊஞ்சலில் முதிர்கிறோம்.
அமோகமாகவும் ஆடுகிறோம்.
அத்துவானமாகவும் போகிறோம்.
 

வி ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2001.

(த்துவானம் – பாழிடம்)

31-1-2001ல் – ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும்
23-3.2006ல் இலண்டன் தமிழ் வானொலியிலும்
14-8.2007ல் மறுபடி ரி.ஆர்.ரி வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.

 

 

                           
 

Previous Older Entries