வாழ்வியற் குறட்டாழிசை.10

Art by Vetha.

*

வாழ்வியற் குறட்டாழிசை. 10

*

கல்விச் செல்வம்.

லகில் உயர் செல்வம். வாழ்க்கைக்கு
வாய்ப்பாடானது வளமான கல்வியே.

ல்லையற்ற பெருமை, வல்லமை தரும்
இல்லாமையாகாத கல்விச் செல்வம்.

மின்சாரம் ஒளி தருதல் போல
தன்சாரமாய்க்  கல்வி(அறிவு) ஒளிரும்

ற்றாத கல்வியை ஒருவன் விற்றாலும்,
வெற்று மனிதனாகினாலும் போகாதது.

பாலாவியன்ன பட்டுடை போன்ற அழகு
மேலான கல்வி தரும்.

பெற்ற ஒருவரின் கல்வியால்  குடும்பமும்
உற்றவரும் பயன் பெறுவார்.

கொடுக்கக் கொடுக்க முடிவது பணம்
கொடுக்கக் கொடுக்க வளர்வது கல்வி

நீதியாகக் கற்றபடி ஓழுகாததால் உலகில்
அநீதி மலிந்து நிறைந்துள்ளது.

ல்வியெனும் அமுத தாரையில் அமிழ்ந்து
மூழ்க மூழ்க இன்பம் பெருகும்.

வெட்டினும், கட்டி அடிப்பினும், சுட்டாலும்
பட்டுப் போகாதது கல்வி.

முதாயப் பள்ளங்கள் நிரவும் கல்வியாளன்
சமூகத்துக் கலங்கரை விளக்கமுமாகிறான்.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-7-2011.

In Anthimaalai. web site :-     http://anthimaalai.blogspot.com/2011/09/10.html#comments

  

                             

 

18. ஆதரவிற்கு நன்றி!..நன்றி. (சிறு கட்டுரைகள்.)

 

தரவிற்கு நன்றி!..நன்றி.

”..எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..” -(குறள்)

எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண் என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர்.
நான் மகிழும் எழுத்தால் உலகம் என்னோடு மகிழ்வது ஆனந்தம்..ஆனந்தமே!

எழுத எழுத பயிற்சி தானே!
ஏகாந்தமான என் உன்னத
எண்ண மின்னல்கள் அறிவு
உழவின் விளைச்சல்.

விளைச்சல் கொட்டிக் கிடக்கும் எனது வலை 1-7-2010ல் தோற்றமாகி ஒரு வருட நிறைந்துள்ளதையொட்டி இந்த ஆக்கம் எழுதுகிறேன்.

என்ன தான் நடக்கிறது!…. என்று எல்லோருக்கும் ஆர்வம் எழுவது இயல்பு தானே!

ஒருவர் 100வது ஆக்கம் இடும் போதோ அன்றி 150 – 200வது ஆக்கமிடும் போதோ பெரிய கொண்டாட்டமாக பரபரப்பாக வலையுலக மக்களுக்கு அறிவித்து,  ஆசீர்வாதம் வாங்கும் வழமையுள்ள உலகில்  நானும் என் வலை பற்றி சிறிது கூற விரும்புகிறேன்.

இந்த ஒரு வருடத்தில் (18046) பதினெட்டாயிரத்து நாற்பத்திஆறு  பார்வையாளர்கள் வந்துள்ளனர்.  27.7.2011  இது வேட் பரஸின் பதிவு.  இன்றைய பார்வையாளர் ஆம் 108 ஆகியது. ஆடி 24ம் திகதி 207 பேர் வந்து பார்த்துள்ளனர்.  இதுவே நேற்றுவரை அதிகரிப்பான தொகை. வழமையாக ஒரு நாளிற்கு வலையைப் பார்வையிட  60 பேர், 150 பேர், 170 பேர்களென வருவார்கள்.

நேயர்கள், நீங்கள், அன்புள்ளங்கள் இட்ட கருத்துகள் 27-7-2011 மாலை 7 மணி வரை 1196 பின்னூட்டங்கள் வந்துள்ளன.

மௌனம் பசை தடவாத வார்த்தை ஊர்வலத்தின் பாதையில்… என்ன!…நான் எத்தனை தலைப்புகளிட்டு எழுதியுள்ளேன் என்றால்….21 தலைப்புகளில் (கற்றகறி) எழுதியுள்ளேன். (அண்மைய இடுகைகளுக்குக் கீழே பார்த்தால் தெரியும். அதில் என்னைப் பற்றியும் சேர்த்து விடுங்கள்.)

கவிதைச் செங்கோல் ஏந்தி பாக்களை, கலப்புச் சுவையாகவும் (பாமாலிகை கதம்பம்) கவிதையை (பாமாலிகை) தனித்தனி பிரிவாகவும் எழுதுகிறேன். முதல் 265 கவிதைகள் (கதம்பமாக) வலையேற்றினேன்.  இனி பாமாலிகை கதம்பம் பகுதி- 2 என்று, ஒன்றிலிருந்து போடத் தொடங்குகிறேன்.

இதில் இன்னொரு மகழ்ச்சியான விடயம் நானாக வரைந்து பாவித்த அழகான படங்கள் பலவற்றை கூகிள் நிறுவனம் தனது தமிழ் படம் தேடல் பகுதிக்கு சேர்த்துள்ளது. இது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

பாமாலிகை – கவிதை மாலை.

உறவு சிநேகிதம் என்று உலகில் பயணிக்கிறோம். கூடிக் கையிணைத்து வருபவர்களும், விட்டு விட்டு ஓடுபவர்களும் என்று பல விதமானவர்கள். நம்பிக்கை, முயற்சிகளின் நட்பு கூட வரும் போது பயணம் இனிக்கிறது. ஏமாற்றம் வருவதில்லை.

தான் எனும் சுயநலம் செறிந்த கூட்டுப் புழு நிலை மாறி, அதை உடைத்த பட்டாம் பூச்சிப் பக்குவ நிலை கொண்டு தமிழ் வானில் பறக்கும் நிலை இது.

இத்தனை நேயர்கள் அன்புள்ளங்களின் ஆதரவினால் தான் நான் இவ்வளவு தூரம் வர முடிந்தது. ஆதலால் அனைவருக்கும்  என் அன்பு கலந்த நன்றியை இங்கு கூறி மகிழ்கிறேன்.
துன்பத்தைத் தூக்கிலேற்றும் இன்பப் பயணத்திற்கு மேலும் உங்கள் ஆதரவு பல்கிப் பெருகுக என்று ஆண்டவனை வேண்டுகிறேன்.

உங்களனைவருக்கும் இறை ஆசி கிட்டட்டும்.

நன்றி! நன்றி! நன்றி!

கற்றது கைம்மண்ணளவு.
சற்றதைச் சிந்தித்து எம்
சிற்றறிவை நாளும் பெருக்கலாம்.
வற்றாத அறிவு விற்றாலும்,
வெற்று மனிதனாகிலும் போகாது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-7-2011.

                       

 

 

201. ஒரு வயது வேதாவின் வலை

 

 

ந்தனதோமென்று வேதாவின்வலை
தலைநிமிர்கிறது ஒரு வயதில்.
தமிழ் வர்ணமிட  ஆடி ஒன்றில்
தரணியில் பிறந்தது இரண்டாயிரத்துப் பத்தில்.
சொற் தொடர்கள் சிதறித் தெளித்து
அற்புதப் புதையலாய் விதைக்கிறேன் கவியாக.
தனித்தன்மையின் தமிழ் வர்ணமிது.
இனிதான தாகம்! குறையாத ஞானமிது!

பூக்கள் பரப்பும் எழுத்து ஊர்வலத்தில்
வாழ்க்கை வாசிப்பும் வாகாக மொழிதலுமான
தனமிது! அம்பலத்தில் ஆடுதலெனும், அறிவு
மனம் நெய்திடும் தமிழ் பூவிது!
வெட்டவெளிக் கருத்துகள் சிலகணம்
பொட்டென்று விழும் எங்ஙணும்.
பட்டுத் தெறித்துப் பிரதிபலிக்கும் கருத்து
எட்டிப் பலஅடி எடுக்கச் செய்யும்.

றவு மேடையின் அறிவுப் பாலிது!
மனிதநேயத்து நீதியின் ஆடையிது!
விமரிசனத்தராசில்  விழும் பெரும்
உண்மையின் கனம், ஆளுமைச் சிதறல்!
அறிவு உழவு இது! என்
எழுத்தெனும் சுவாசம்! உயிர்ச் சுவாசம்!
நான் எழுந்து நிற்கவுனைச் சரணடைந்தேன்!
தமிழே! உன் கதிரால் எனைப் பிணை!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-7-2011.

 

இக் கவிதையை 26-7-2011ல் ரி.ஆர்.ரி.தமிழ் ஒலி வானொலியில் கவிதை பாடுவோமில் என்னால் வாசிக்கப்பட்டது..

In Pathivukal web site :-       http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=332:2011-08-10-03-17-34&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

 

 

                        

 

 

17. கட்டுரை…எழுதல்..( சிறு கட்டுரைகள்.)

 

 

 

கட்டுரை…எழுதல்..

 

கட்டுரை என்பதற்கு வியாசம், புனைந்துரை, உரை நடை விளக்கம் என்று இன்ன பல விளக்கங்கள் கூறப் படுகின்றன.

சிறு வயதில் கட்டுரை எழுத ஆரம்பிக்கும் போது பசு பற்றி ஐந்து வசனம் எழுதினோம். அதில் பசுவிற்கு நாலு கால்கள் உண்டு. பசு பால் தரும். பசு புல் தின்னும். பசு சாணமிடும். என்று பசு பற்றிய ஒரு மனப் படத்தை அந்த வரிகள் மூலம் கொடுத்தோம்.

முதியவரானதும் இதையே, அறிவு முதிர் நிலையில், அறிவியல் விளக்கத்துடன் கொடுக்கிறோம்.  ஒரு உருவகத்தை உருவாக்கி, ஒரு மனப் படத்தை, ஒரு செய்தியைக் கொடுக்கிறோம்.

உரை நடை விளக்கம் என்ற கருத்தே அனைத்தையும் தெளிவாக விளக்குகின்றதே!

கட்டுரை எழுதும் போது அரைப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சரியக் குறி இன்னும் பல விதிமுறைகள் கவனிக்கப் படுவதே இல்லை. பந்தி பிரித்து எழுதுவது என்பது தொலைந்தே விட்டது. இந்த விதி முறைகள் கவனிக்கப் படாவிட்டால் கட்டுரையின் அழகு சிதைகிறது.

ஒரு கட்டுரையை வாசித்ததும் கருத்திடும் ஆர்வம் எழவேண்டும். அதுவே கட்டுரையாளனின் வெற்றி.

ஒற்றைக் காலில் நின்று அரை குறை வசனமாக, பாதி விழுங்கியும் விழுங்காமலும் சுருக்கெழுத்துப் போல கொடுப்பதல்ல கட்டுரை. இலக்கணப் பிழையின்றி முழுமையான வசனங்கள் அமையாவிடில் புரிதல் என்பது அங்கு குறைந்து போகிறது.

இந்தக் குளப்பத்திற்கு ஆதியிலிருந்து எழுதியவர்கள், புதிதாக முளைத்தவர்கள், பட்டதாரிகள், பாமரர்கள் என்றும்  ஏதும் பேதமுள்ளதோ தெரியவில்லை.

ஒழுங்கற்ற குழப்பகரமான ( இங்கு கட்டுரை மொழியமைப்பையே குறிப்பிடுகிறேன் கட்டுரைக் கருவை அல்ல ) கட்டுரைகள் படித்ததும் கருத்திடும் ஆர்வத்தை மடக்கி விடுகின்றன.

சிறு கட்டுரையோ பெரும் கட்டுரையோ ஒரு திட்டமிடல் தேவை. மனதில் ஒரு வரை படம் முதலில் வரைந்து கொள்ளல் தேவை. அதற்கு முன்னர் தலைப்பு இடுவது முக்கியம். தலைப்பும், எழுதப்படும் விடயமும் பொருந்தி வர வேண்டும். பொருந்தி வராத பல கட்டுரைகள் உலவுகிறது.

கலவைகள் சரி. கட்டுரைக் கட்டுமானம் தான் தவறாகிறது. அதாவது நீர் மட்டம் பாவிக்காது கட்டப்படும் கட்டடமாகவே கட்டுரை உள்ளது. பூரணத்துவமின்றி உள்ளது.

எழுந்த மானத்தில் எழுதுபவைகளை வாசிக்கும் போது ஆர அமர, கருத்தெழுதும் ஆசையே விலகுகிறது.

”…நவீனக் கட்டுரை, வடிவத்தால், சிறுகதையைப் போன்றது.
அ பளீரென்ற தொடக்கம்
ஆ. பாம்பு ஊர்வது போல சரசரவென்ற போக்கு
இ. கவனத்தில் ஆழப்பதியும் ‘முத்தாய்ப்பு’ கொண்ட முடிவு
– என சிறுகதைக்குரிய மூன்று அடிப்படை இயல்புகளும் கட்டுரைக்கும் தேவை.
சிறந்த கட்டுரையின் அடிப்படைக் குணம் இதுவே– அது வளர்த்தலோ திசை திரும்பலோ இல்லாமல் இருக்கும். ‘கச்சிதமான கட்டுரை’ என்ற வரி ‘சிறந்த கட்டுரை’ என்பதற்கு சமமானதே ”…. இது    — எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது.
மேலும் ” ஒரு கட்டுரை ஒரே போக்காக போவது நல்லது. நடுவே உடைபட வேண்டுமென்றால் அதிகபட்சம் ஒரு உடைவு. அதற்குமேல் போனால் அக்கட்டுரை சிதறியிருப்பதாகவே தோன்றும்” என்கிறார்.

இந்த அவசர உலகில் ஆறுதலாகப் பணி செய்யாது கட்டுரை உலகின் அடிப்படை விதியே மாறுபடுவது பரிதாபமான நிலை தான்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-7-2011.

 

 

 

                            

 

 

 

வேதாவின் மொழிகள். 14

 

 

Art:- Vetha.

 

நெருங்கி நெருங்கித் தேனாகப் பேசுவார்கள். காரியம் பெற்றதும் கழன்று விடும் மனிதர்கள் யாரென நேரியதாகக் கூறுவதா! வீரியமாகக் கூறுவதா! அவர்கள் பாரிய சுயநலவாதிகள் தானே! வேறு எப்படிப் புரிந்து கொள்வது!

பிறரின் உபதேசம் பிடிக்காத போது பிறருக்கு உபதேசிப்பதை விட்டு விடுவது சரியாகும்.
உன்னை மதிப்பவனை நீ அலட்சியம் செய்தால்,  நீ மதிப்பவன் உன்னை அலட்சியம் செய்வான்.

5-12-2006.  தேடல் இன்பம்

சமூகத்துடன் உறவாடி உறவின் நெருக்கம்
சுமுகமாக உறவு தேடல் இன்பம்.

மக்களுக்கு மனமகிழ்வை ஊடகங்கள் தரவேண்டும்.
மனமகிழ்வைத் தொலைக்கும் தேடல், இன்பம் தராது.

தமிழ் சுரங்கமெனும் கணனியில்
அமிழ்ந்து தமிழ் தேடல் இன்பம்.

6-2-2007.  அகத்தான் கடமை.

பொருட்கள் வாங்கிக் குவித்தல், பணம் சேர்த்தல் மட்டுமல்ல, அன்பால் அகம் குளிரச் செய்து அறம் காத்தல் அகத்தான் கடமை. பெண்ணை மதித்து, பிள்ளைகளோடு குலாவுதலும், முகத்தாலும் கோணாத வழியோடு முன்னுதாரணமாகுதலும் அகத்தான் கடமை.

பட்டு.
பட்டுப் போன மரம் படகாகிறது. பட்டுப் போன மனிதன் பிணமாகிறான்.
பட்டும் பட்டும் மனிதர் வார்த்தைகளை
பட்டுப் பட்டென வீசி, நல்ல இதயங்களைப்
பட்டுவிடச் செய்வது தொடர் கதையாகிறது.

தமிழ்.
ஆடு! ஓடு! இன்பத்தை
நாடு! கூடு! தமிழோடு
கூடு! இதை நாடுவதால்
பீடு இல்லை. இதைச்
சூடுவதால் பெறும் பெருமைக்கு
உலகில் ஈடு இல்லை.

பகலும் இரவும் உங்கள் வாரிசுகளுடன் தமிழோடு ஈடுபடுங்கள். என்றுமே நீங்கள் வருந்தமாட்டீர்கள்.

நறுமணம்.
மலரின் சுகந்தம் மட்டும் நறுமணமல்ல.
மனிதன் பெறும் அறிவும் அவன் நறுமணம்.
மனிதனின் ஆற்றல், முயற்சி ஆக்கம்
அனைத்துமே நறுமணமாகிறது.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
வலையேற்றம்:  23-7-2011.

 

                                
 

23. தமிழ்..புதையல்!…(பா மாலிகை (கதம்பம்)

 12299119_981999901857709_556712719288972527_n

தமிழ்..புதையல்!

 

மூத்த புலவன் அகத்தியனும்
முக்குல மன்னரும் அலங்கரித்து
முப்பொழுதும் சீராக்கிய தமிழே!
புதையல் நீ! வண்டி வண்டியாய்
அதையெல்லாம் நான் முழுவதையும்
கதை கதையாய் கிண்டியெடுக்க ஆசை.

ளவையும் கம்பனும் நாளும்
செவ்வையாய்ச் சுவைத்து அனுபவித்த
திவ்விய மொழிக் கடலில்
பவ்வியமாய்க் குளித்தாடி
அவ் உயிர்த் தமிழெடுத்துப்
பயிரிடுகிறேன் வண்ணக் கவிதையாக.

ழு கடலளவிலும் பெரிய
ஆளுமை கொண்ட தமிழ்!
நாளும் குலவும் என்னையும்
ஆளும் அமுதச் சுவை!
சூழும் துன்பங்கள் வீழ்த்தி
வாழும் நிலை உயர்த்துகிறாய்.

ன்னையும் உன்னையும் இணைக்கும்
சின்ன உலகமல்ல தமிழ்!
அன்ன பல இலக்கியங்கள்
பின்னிய  மதுரத்தமிழ்! பார்!
என்னமாய் வளருது கணனியில்!
இன்னமும் வளருது மேற்கில்!

நோய் மொழியாக மனங்களைத்
தீய்க்காது, தூய்மையாய், ஓய்வற்று
வாயூடாக வழிந்தோடிப் பல
ஆய்விற்கும் சென்று ஆழவூன்றி
பாய்விரித்துப் பரவட்டுமெம்
தாய்மொழி அகில உலகமும்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21-7-2011.

 

 

                          

 

வாழ்வியற் குறட்டாழிசை. 9. (பிறர்க்குதவல்.)

பிறர்க்குதவல்.

 

பிறர்க்கு உதவல் என்பது மனிதனிற்கு
பிறவியிலேயே வரும் குணம்.

தவுகிறவனை நன்றி யுணர்வு இன்றி
உதாசீனம் செய்யுமுலகு இது.

திமிர், செருக்குடையோன் தான் பெற்ற
உதவியை நிமிர்ந்தும் நினைக்கான்.

தவுவோன் உள்ளம் திறந்தது. எந்தக்
கதவும் போட்டு   மூடாதது.

யன் கருதாது உதவும் மனமும்
பயணிப்பது மரபணுவோடு எனலாம்.

ற்ற தருணத்தில் செய்யும் உதவி
மாற்றில்லாத் தங்கத்திற்கு ஈடாகும்.

தவி செய்தவனைப் பின்னங்காலால் மறந்தும்
உதைப்பவன் மாக்களுள் ஒருவன்.

தவு! முடிந்தளவு உதவு! சொர்க்கத்தின்
கதவு தானாகத் திறக்கும்.

ன மகிழ்வோடு உதவு! கனதியற்ற
மனத்திருப்தியும், நிறைவும் பெறலாம்.

பெற்ற உதவியை நினைத்து நன்றி
பேணுமுணர்வு எல்லோருக்கும் வராது.

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ் டென்மார்க்.
19-7-2011.

In Anthimaalai web site:-   http://anthimaalai.blogspot.com/2011/10/13.html

 

                                  

27. கவிதை பாருங்கள்(photo,poem

 

வலையேற்றியது -18-7-2011.

பெற்றோர் மாட்சி. 35.

 

 

பெற்றோர் மாட்சி. 35.

18-5.2008.
நிறைவு – நிறைந்தது என்பது அங்கு குறைவாயிருக்கும். குறைவற்ற பேராசைக்காரர் எம் இறையான பெற்றோர். தம் பிள்ளைகள் இமயப் புகழ் பெற்றிட இணையில்லா ஆசையுடையோர்.  இவர்கள் எண்ணம் எம் நடவடிக்கையைச் சீராக்கி நிலைக்க வைக்கிறது.

28-5-2008.
உறவுகளின் தொகுப்பு வாழ்வு. திறவுகோல் இங்கு பெற்றவராகிறார். தினம் எம்மை வழி நடத்தி, திகட்டாத உறவுகளை இணைத்து, திறமையாக வாழ்க என்று எம்மைத் திறம்பட நடத்துகிறார்கள், வாழ்வை உறவுகளின் சங்கமமாக்கி.

20-7-2008.
” தூங்கிய பொழுதாக முயற்சியின்றி வாழாதே! ஏங்கிய பொழுதாக இவை போய்விடும்! தீங்கு நீங்க முயற்சி செய்திடு!”…. பெற்றவரிடம் இருந்து வாங்கிய அறிவுரை ஓங்கி ஒலிப்பதால், சோம்பலை ஒதுக்கி நன்றியைத் தூது விட எழுகிறேன் தூக்கத்திலிருந்து.

18-10-2008.
குழந்தையிலிருந்து எம்மைக் குறையின்றி வளர்க்கும் பெற்றவரின் குறிக்கோள் சீரும் சிறப்புமாகக் குன்றில் எம்மை ஏற்றுதலே. அழவைத்து அவர்களுக்கு ஆக்கினை கொடுத்து அறியாது வளர்கிறோம் நாம். குறைகள் கொடுக்காது அவர்களைக் குனிய விடாது வளர்வோம், நட்சத்திரமாவோம் என்று பெரியவரானதும் எண்ணுகிறோம். அப்போது பெற்றவர் எம்முடன் இல்லை.

2-8-2008.
நித்தமும் முத்தத்துடன் சத்தான மொழிகள்
கொத்தாகத் தரும், அன்புப் பெற்றோரின்
உத்தம நோக்கத்தை நிறைவேற்றும் விழுதாக,
வித்தாகப் பிள்ளைகளை ஆக்குவது
சத்தமில்லாத யுத்தமிப் புதிய உலகில்.

9.8.2008.
முத்து பவளமென எம்மைத் தம் சொத்தாக ஏந்திய பெற்றவருக்கு, ”தத்தெடுத்தவர்களாக பிள்ளைகளை எண்ணுக”வென்பது, புத்தம் புதிய சேமநல சமூகச் சிந்தனை. எத்தனை பேர் இதில் நீந்திக் கரையேறுவார், எத்தனை பிள்ளைகள் முத்து மாணிக்கம் ஆவார்!

10-8-2008.
தவழ்ந்த மடியில் அவிழ்த்த எண்ணங்களின் நேர்கோட்டில், கவிழ்ந்து விடாது காலத்தைச் செலுத்து என்று மகிழ்ந்து கவனமாக வளர்த்தனர் பெற்றோர். மதித்து அவ்வழி நடத்தல் உயர் வாழ்விற்கு உறுதியுடைய தளராத படி.

16.8.2008.
பக்குவமாய்ப் பேசிப் பழகி, அன்பில் சிக்க வைத்து, பாசத்தைப் பொழிந்து சொக்க வைப்பவர் எமது பெற்றோர். அக்குவேறு ஆணிவேராய் அவ்வன்பு அழிந்திடாது இணைத்து, பல படிகள் உயர நடப்பது மிக்க பொறுப்பான எமது கடன்.
ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(uploaded.17-7-2011)

 

                         
 

25. காதல் நயம் தேடு! (பா மாலிகை( காதல்)

 

 

காதல் நயம் தேடு!

அபிநயக் கணகளால்
கவிநயம் பேசிவிட்டு
காதல் நயம் தேடாது
தொலை தூரம் நிற்கிறாய்!

கண்ணடித்துக் கைதொட்டு
உன்னடியில் வீழவைத்து,
காணாதது போலின்று
ஏனோ நீ ஏய்க்கிறாய்!

மலைத்தேனது வாலிபத்தேன்!
வலை விரித்தால் வயோதிபம்
வாலிபத்தேன் தொலைந்திடும்!
காலியாகு முன்னர் களித்திடு!

மன்மத இளமையின்
கன்னல் காதல் வயல்.
மின்னி மறையும்
பின்னல் காதல்நிலா.

தேர்ந்திட்ட காதல் நூலகத்தில்
கண்களே  கருமூலம்.
காதலின் கருவூலம்
ஒருமித்த இதயங்கள்.

நதிமூலம், ரிஷிமூலம்
குருமூலமற்ற மந்திரம்.
போதனைகளற்ற வசீகரம்.
சாதனையூன்றுகோல் காதல்.

கடலளவு உள்ளத்தில்
கையளவு ஆசையேன்!
நேசநறும் தேனருவியை
வாசமாய் ஓடவிடு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-7-2011.

In Anthimaalai web site:-     http://anthimaalai.blogspot.com/2011/08/blog-post_3042.html

 

                

 

 

 

Previous Older Entries