1. கலையும் கற்பனையும். (சிறு அழகுக் குறிப்பு)

   

கலையும் கற்பனையும்.

(சிறு அழகுக் குறிப்பு)

என்ன இது என்று பார்க்கிறீர்களா?

கடந்த வார இறுதியில் இரண்டு விழாக்கள் அடுத்தடுத்து வந்தன. பெண்களென்றாலே அலங்காரத்திற்குக் குறைவில்லை என்பது உங்களுக்குத் தெரியும் தானே.

சேலை, தலையலங்காரம், வளையல் மோதிரம், காப்பு, பொட்டு, காலணி, கை-பை என்று எல்லாமே ஓரளவு பொருந்திட அணிவார்கள்.

முதல் நாள் நீல நிறச் சேலை கட்டிச் சென்ற போது பூசிய நீல நிற நகச் சாயத்தை அடுத்த நாள் வேறு நிறச் சேலை கட்டிய போது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.  கொஞ்சமும் பொருந்தவில்லை.

நகச் சாயம் பூசினால் பூசிய அன்றிலும் பார்க்க அடுத்த நாள் மிக அழகாகத் தெரியும். எனக்கு அதை அழிக்கவே விருப்பமில்லை. நன்றாகப் பிடித்திருந்து. என்ன செய்யலாம் என யோசித்த போது, இங்கு நீங்கள் பார்ப்பது போல மாற்றியமைத்தேன்.

நீல நகச் சாயப் பகுதியைச்  சாய்வாகப் பிரித்து அரைவாசியில் சிவப்பு நிறத்தைப் பூசினேன். ஆனால் சிவப்பு நிறம் மரூண் நிறமாகியது.  அது நீலத்தின் மேல் பூசியதால் தான் அப்படித் தெரிந்திருக்கும். எனது சேலையில் சிவப்பு, இளஞ்சிவப்பு, மரூண் நிறங்கள் இருந்தன. இனி என்ன செய்யலாம் என்று சிந்தித்து, நகத்தின் நுனிப்பகுதியை  இளஞ்சிவப்பு நிறத்தால் மகுடம் போல் பூசினேன்.

இப்போது சேலைக்குப் பொருத்தமான நிற நகச்சாயமாக அது மாறிவிட்டது.
பார்த்தவர்கள் ஆவலுடன் பார்த்தார்கள். வித்தியாசமாக உள்ளதே எனக் கேட்டு விளக்கம் பொற்றதும் கம்பீரம் என்று மகிழ்ந்தார்கள்.
இது போல பின்னர் பேருந்தில் வரும் போதும் டெனிஸ் பெண்கள் வியந்து மகிழ்ந்தனர்.

கற்பனையும், கலையுணர்வும்,  ஊக்கமும் – ஆக்கமும்  தரும்.

இதை நீங்களும் பார்க்கலாமே என்று இங்கு போட்டுள்ளேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
30-4-2011.

In anthimaalai.com…  –  http://anthimaalai.blogspot.com/2011/06/blog-post_1328.html

                                      

 

188. பழி நாணுவோனை…

 

பழி நாணுவோனை…

 

மொத்தமும் அறியாதவர் போல்
தித்திக்கும் தேனாய்ப் பேசி
ஒத்து வராது அத்துமீறும் பல
எத்தர்கள் நிறைந்த உலகிது.
புழகப் பழக இன்புறுவது உறவு.
பழகப் பழகப் பகையாகும் உறவு
விலக்குதற்குரியது. விமோசனப் பாதையை
விரும்புதல் விலை மதிப்புடையது.

உறவை நினைக்கும் தோறும்
நகையுறு மனம் வேண்டும்.
தெகையான கேள்வி முளைகள்
வளராத பிள்ளையார் தந்தமாக
குத்துக்கால் இடுவது வீண்!
தலையினிழிந்த முடி போலுறவைச்
சுருட்டி வீசுதல் இலகு.
உருட்டிப் புத்துருவாக்கல் அரிது.

உறவின் அருமை புரியாதேரிற்கு
உறவின் நிர்வாகம் தெரியாதோரிற்கு
உறவு எட்டிக்காயாகிடும்.
அறியாது நட்புக் கொள்ளல்
ஆப்பிழுத்த குரங்கு போன்றதாம்
ஆதி வள்ளுவரும் கூறுகிறார்.
‘ நாடாது நட்டலிற் கேடில்லை
நட்பின் வீடில்லை நட்பாள்பவருக்கு.’

புறமுதுகு காட்டும் உறவு
அறமற்றது ஊட்ட மற்றது.
திறக்காத கதவு விருந்திற்கு
சிறகொடித்துத் துறவு சொல்வது.
வழுக்கி விழமாட்டாய் உறவினால்
பழி நாணுவோனைத் தேடு!
விழி நிறைந்த உறவிற்காய்
களிப்படைவாய்! உருத்துடையாய்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-4-2011.

 

                          

 

14. பயனில சொல்லாமை…(சிறுகட்டுரை)

 

 

பயனில சொல்லாமை…

 

பார்த்துப் பார்த்து ரசிக்கும் காதலி போல பேணிய என் அழகுப் பூந்தோட்டம். என் நேரம் முழுவதும் கொள்ளையடிக்கும் பல வர்ண மலர்கள் விரிந்து குலுங்கும் நந்தவனம். குருவிகளின் சத்தமும், கிளிகளின் பேச்சுமென மனம் மயங்கும் சூழல்.

பவள மல்லிகை நிழல், மல்லிகைப் பந்தல், அழகிய நீரூற்று, ஊஞ்சல், சறுக்கி விளையாடும் ஏணி, குழந்தைகள் விளையாட நீர்த்தொட்டி எனப் பலவாகப்  பார்த்துப் பார்த்துச் செய்தது.
குறோட்டன் செடிகள் மட்டும் 52 வகையாக உள்ளது.

மழலைகளோடு விளையாடும் மகிழ்வு போலத்தான், பூந்தோட்டத்திலிருப்பதும்  எனக்கு, மனம் கொள்ளாத திருப்தி தந்திடும். ஊஞ்சலில் இருந்து கவிதைகளும் எழுதுவேன். குளிர் நிலவு காணும் மனத் திருப்தி போல மன நிறைவு தரும் பூந்தோட்டம்.

தெரிந்தவர்கள் தமது பிள்ளைகளுடன் வந்து நந்தவனத்தைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்து போவார்கள். சிற்றுண்டி தேநீருடனும் வந்து நீண்ட நேரம் கழிப்போரும் உள்ளனர்.

என் அப்பாவை நம் கிராமத்தில் நிலப் பிரபு என்று தான் கூறுவார்கள். இளவட்டங்கள் நான் சிறுமியாக இருந்த போது ” உங்க அப்பர் லாண்ட் லோட் தானே!..” என்று என்னைக் கேட்டதின் அர்த்தம் இப்போது நன்கு புரிகிறது. அவர்கள் வயிற்றெரிச்சலில் கேட்டது எனக்கு சாதாரண கேள்வியாக அன்று தெரிந்தது.

அப்பாவின் காணியில் தான் இந்தப் பூந்தோட்டமும்.

என்னையும் பூந்தோட்டக்காரி என்று தான் இன்று அழைக்கிறார்கள்.

என் தோழி நர்மதா நீண்ட நாளாக பூந்தோட்டத்தைப் பார்க்க வருவதாகக் கூறிய படியே இருந்தாள். இன்று வந்து விட்டாள்.

நாம் நந்தவனம் முழுதும் சுற்றிப் பார்த்து ஓய்ந்த போது தெருவோடு போன கிராமத்தவர் ஒருவர் உள்ளே வந்து தாம் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்.

இவரை நான் பாடசாலை செல்லும் போது வழியில் பார்த்து தலையாட்டியுள்ளேன். நான் அருகுப் பாடசாலையில் ஆசிரியை என்புதும் அவரறிவார்.

இருவரும் சுற்றிப்பார்க்கும் போது..” ஏன் நீரூற்றை இந்த ஓரத்தில் வைத்திருந்திருக்கலாமே!..  ஊஞ்சல் இருக்குமிடம் தவறு. அதை மூலையில் போட்டிருக்கலாம். அலரிப் பூக்கன்றுகள் மறு பக்கம் நாட்டியிருக்கலாம். சிறுவர்களுக்கு  நீச்சல் போல பெரியவர்களுக்கு ஏன் இல்லை? ஒன்று போட வேண்டும்.” என்று மனம் போனபடி கருத்துக் கூறிச் சென்றார். போகும் போது ”நன்றாக இதை வைத்துப் பராமரிக்கிறீர்கள்..” என்றும் கூறிச் சென்றார்.

நர்மதா பிள்ளைகளோடு தன் பொழுதைப் போக்க, நானும் பின்னர் அவளுடன் இணைந்தேன். வந்தவர் கூறிய கருத்துகளை நர்மதாவுடன் பகிர்ந்து கொண்டேன்.

”நீர்க் குழாய்கள் செல்லும் வழி, கற்பாறையில்லாத மண், எனது வீட்டின் பாதுகாப்புப் போன்ற பல வழிகளை நாம் சிந்தித்துத் தானே இவைகளை உருவாக்கியுள்ளோம். பார்த்து ரசித்து மகிழ்ந்து கொள்ள வேண்டியது தானே!

ஒருவர் தன் பாதையில் சுதந்திரமாக தன் விருப்பப்படி மகிழ்வாகச் செல்ல வேண்டும். கந்தன் சொல்வான், வள்ளி சொல்வாள் தங்கள் பார்வையின் கோணத்தில். உடைமையாளர்களின் பார்வை வியூகத்தை இவர்கள் அறியமாட்டார்கள்.

நாம் எத்தனை இழந்திருப்போம், எதைப் பெற்றிருப்பொம் என்பதெல்லாம் இவர்களுக்கெங்கெ புரியப் போகிறது! மிகச் சுலபமாகக் கூறிவிட்டுச் செல்கிறார்”… என்றேன்.

”..விட்டுத் தள்ளு வாணி!…நாம் கல்யாணிப் பூங்கொடியின் கீழ் போய்க் காற்று வாங்குவோம்..வா!..” என்று நர்மதா அழைக்க நாம் இடம் மாறினோம். செறிப் பழங்களைச் சுவைத்தபடி குழந்தைகள் எம்மோடு ஓடி வந்தனர்.

என் அழகான பூச்சொரிந்த பாதையில் காக்கா எச்சமும், கோழி எச்சமும் வரத்தான் செய்கிறது.

என் பூந்தோட்டம், நான் கடினமாக உழைத்துப் பராமரிக்கிறேன். தெருவில் போவோர் வந்து தெளிக்கிறார்கள் வார்த்தைகளை.

திருவள்ளுவர் கூறுகிறார்…

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
(சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாதவைகளாகிய சொற்களைச் சொல்லவே கூடாது.)

இன்னும் கூறுகிறார்….

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சியவர்.
( மயக்கத்திலிருந்து தெளிந்த மாசற்ற அறிவை உடையவர் பயன் நீங்கிய சொற்களை ஒருகால் மறந்தும் சொல்லமாட்டார்.)
அதிகாரம் 20.

 

ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-4-2011.

                                        

 

19. கவிதை பாருங்கள்(photo,poem)

 

          

187. நிலையற்ற வாழ்வில் நிசங்களைத் தேடுவோம்.

 

நிலையற்ற வாழ்வில் நிசங்களைத் தேடுவோம்.

பிறப்பு, வாழ்வு, இறப்பு நிசமானால்
அறுப்பவை அதர்மமின்றி அமைத்தல் நிசம்.
பொறுப்பணர்வு பொன். அது கைவசமானால்,
சிறப்போடொரு நல் மனிதனாவது நிசம்.

காணி, வீடு தோட்டம், துரவு
ஆணியடித்த நிசமென்ற நம்பிக்கை
தோணி கவிழ்த்ததாய் ஆனது போரினால்.
நாணித் தலை குனியும் நிலையுமானது.

அடக்கு முறைகள், அகங்காரத்துள் அசையும்
அவனி வாழ்வில் சுயநலங்கள் நிசம்.
ஆத்ம பலம், உடல் ஆரோக்கியம், எம்
ஆளுமைத் திறமை உறுதியான நிசம்.

உலகைத் தலையில் ஏந்துவதாய்ச் சிலர்
கலகம் பண்ணுவதில் இல்லை நிசம்.
திலகம் வைப்பதாய்ச் செய்யும் செயல்கள்
நலமாய் அமைதலே நிலத்திலூன்றும் செயல்.

கம்பன் இலக்கியத்தில் கொடி யேற்றினான்
கருணையற்ற கிட்லர் இம்சையில் நிலைத்தான்.
காந்தி அகிம்சைப் போரில் நிசமானார்.
கவிதையில் பாரதி நிலைக்கின்றார் நிசம்.

கவிதையில் நானிதை வரைகிறேன் நிசம்.
கரைகாணாத் துரும்பாய் அலைவதும் நிசம்.
காசினியில் காவும் உடலது அழியும் வரை
கட்டியெழுப்பும் நன்மை தீமைகளே நிசம்.

 

 

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-2-2007.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானெலியில் 2007 மாசி மாதத்திலும்,
ஐ.ரி.ஆர் வானொலியில் 25-9-2008லும் என்னால் வாசிக்கப்பட்டது.)

In Muthukamalam.com     –     http://muthukamalam.com/muthukamalam_kavithai695.htm

 

                           

 

தாய்லாந்துப் பயணம் – அங்கம் 15.

எனது பயண வரிசைகளில் பயணம் மூன்றின்

தாய்லாந்துப் பயணம் – அங்கம் 15.   

சைனா ரவுணைத் தாண்டியதும் அருகிலேயே flower market  பூக்களின் சந்தை வந்தது.  இதை pak khlong talat  என்று கூறுவர்.

60பது வருடமாக இச் சந்தை நடக்கிறதாம். தெருவின் வலது இடது பகுதியில் மிகப் பரந்த நீண்ட தூரத்திற்கு பூக்கடைச் சந்தையாகவே இருந்தது. சியாங்மய், சியாங்றய் என்ற குளிரான பிரதேசங்களில், சுற்று வட்ட மாநிலங்களில் இருந்தும் எல்லா விதமான பூக்கள் அதிகாலையில், படகிலும், பேருந்துகளிலும் இங்கு வருகிறதாம். மிக ஆச்சரியமாகவே இருந்தது. இங்கும் வாய் பிளந்து அம்மாடியோவ்! என்றேன்.

    

இப்போது புரிந்தது முதலாவது வாடி வீட்டில் கட்டிலில் பூவும் மேசையில் பூவும் எப்படி வந்தது என்று. பெரிய வாடிவீடுகளுக்கு பதிவு செய்து அதாவது  order  பண்ணி பூக்களை இங்கிருந்த தான் எடுப்பிக்கிறார்கள் என்பது புரிந்தது.    ( பூக்கடைகள்)

   

தெருவில் வாகனம் மெதுவாகப் போனாலே தரிப்பு இடத்திற்கு ஓடி வந்து மல்லிகைப் பூமாலையை விற்பனைக்கு நீட்டுகிறார்கள். காரணம் இறை பக்தி தான். இல்லாவிடில் இந்தியா மாதிரி மனைவிக்குப் பூக் கொண்டு போக இருக்காதல்லவா? 

அரச மாளிகை அனைவரும் பார்க்க வேண்டியதும் முக்கியமான சுற்றுலா இடமுமாகும். காணக் கண் கோடி வேண்டும்! அத்தனை அழகிய கட்டிடங்கள், தொழில் நுட்ப, கலைத் திறமைகள் கொண்டவை.

     

றோயல் கிறாண்ட் பலஸ் 218,000 சதுர மீட்டர் இடத்தில், சாயோ பிறையா நதி தீரத்தில் பாங்கொக்கில் உள்ளது. சக்ரி பரம்பரையில் ராமா ஒன்று அரசுக்கு வந்த போது அன்று மறுகரையில் தோண்புரியிலிருந்து இக் கரைக்கு அரசினை மாற்றினார்கள். மந்திரிகள் காரியாலயம், பாதுகாப்பு அமைச்சு, அரசர் குடியிருக்கும் மாளிகை என பல காரியாலயக் கட்டிடங்களுடன், சுற்றி வர வெள்ளை மதிலுக்குள் அமைந்த மாளிகை இது.

1783ல் மதில் சுவர்கள் கட்டப்பட்டது. 3 பிரதானமான அழகிய கோபுரங்களுடன்

   

வேறும் பல சிறு கோபுரங்களுடன் அமைந்த மாளிகை இது. தங்க நிறக் கோபுரம் இலங்கைப் பாணியிலும், மற்ற இரண்டும் தாய்லாந்து கம்போடியா மாதிரியிலும் அமைந்துள்ளது.  கோபுரங்கள் மினுங்கும் கற்கள், கண்ணாடிக் கற்கள், தங்கநிற பீங்கான் கற்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. 10 துர்த்தேவதைகள், குரங்குகள், காவலர்கள், உருவங்களும் சுவர்களில் செதுக்கியுள்ளது.

           

முன்பு 158 வருடங்களாக அரசர்கள் இங்கு வசித்து வந்தனர். 20ம், நூற்றாண்டிலிருந்து இங்கு அரசர்கள் வாழ்வதை நிறுத்திக் கொண்டனர். முழுக்க முழுக்க உல்லாசப் பயணிகளுக்காக 3 சாலைகள் திறந்துவிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய – தாய்லாந்து தொழில் நுட்பத்தில் கட்டிடம் வித்தியாசமான கூரையுடன் உள்ளது. இந்த வெள்ளை மதிலுக்குள்ளே தான் அரச தேவாலயமான Emareld  புத்தர் கோயிலும் உள்ளது. இக் கட்டிடங்களும் இந்திய சினிமாவில் காதல் காட்சிகளில் வந்துள்ளது. இங்கு மரியாதையான ஆடைகளுடன் தான் போக முடியும். மிகவும் கட்டையான ஆடைகளுடன் போக முடியாது. இதைக் கண்காணிக்க உத்தியோகத்தர் உள்ளனர்.

இந்த அரசமாளிகை ரட்னா கோசின் தீவு அயோத்தியா மாளிகைகளின் மாதிரியில் கட்டப்பட்டுள்ளது. முழுவதுமான தாய்லாந்தின் பிரபலமான, மிகப் பரந்த தங்க நகரமான பாங்கொக்கின் அடையாளம் (சிம்போல்) இந்த றோயல் அரச மாளிகையாகும். புத்த மத மேன்மையுடைய தாய்லாந்து மக்களுக்கு, நான்கு சுவருக்குள் உள்ள, இந்த எமரல்ட் புத்த கோயில் மெக்காவாக உள்ளது. 45 செ.மீ நீளமான புத்தர் சிலை பச்சை நிற  jade ல், பச்சை ரா கல்லில் ஆனது. இதற்கு தங்கத்தில் 3 காலநிலைக்குரிய ஆடைகளுடன் தேவாலயத்தில் நல்ல பீடங்கள் அமைத்துப் பத்திரப் படுத்தியுள்ளனர்.

எமரெல்ட் புத்த கோயிலுக்கு

   (ஆடைகள் மாற்றும் போது…)

ஒரு சரித்திரம் உண்டு. பழைய கட்டுக் கதையின் படி 43ம் நூற்றாண்டு கி.முன்னர் பாடலிபுரத்தில் நாகசேனா எனும் இடத்தில் இச் சிலை உருவாக்கப்பட்டது. பாடலிபுரம் இன்று பற்னா என்று கூறப்படுகிறது. பாடலிபுரத்தில் 300 வருடங்கள் இச் சிலை இருந்த பின் ஒரு பொது யுத்தம் வந்த போது சிலையைப் பாதுகாக்க இச் சிலை சிறீலங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. 457ம் ஆண்டு பர்மிய அரசன் அனுருத் ஒரு தூதுக் குழுவை இலங்கைக்கு அனுப்பி தனது நாட்டில் புத்த சமயத்தை உருவாக்க, மத நூல்களும், எமரெல்ட் புத்த சிலையையும் தனக்குத் தரும்படியாகக் கேட்டானாம். இந்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கப்பலில் இதை எடுத்துச் செல்லும் போது புயல் ஏற்பட்டு, கப்பல் பாதையைத் தொலைத்து, கம்போடியாவில் கப்பல் நிலையூன்றியதாம். 1432ல் தாய்லாந்து அங்கோர் சமஸ்தானத்தைக் கைப்பற்றிய போது இந்த புத்தர் சிலையையும் தம்மோடு தாய்லாந்தின் அயோத்தியா நகரத்துக்கு எடுத்துச் சென்றனர்

.—பயணம் தொடரும்– —–

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
18-1-2009.

In anthimaalai web site:-      http://anthimaalai.blogspot.com/2011/08/15.html

                                       

வேதாவின் மொழிகள். 11

  

 

கேணி  16-3-2005.
குழந்தையாக கேணியில் (தொட்டிலில்) ஆடி மகிழ்ந்து, ஆழமான கேணியில் (கிணற்றில்) நீர் எடுத்து அருந்தி , கோயிற் கேணியில் (குளம்) கால்கள் கழுவி இறைவனை வணங்கியும், வாழ்வுக் கேணியில் (அகழி) நாற்றமெடுக்கும் சகதியில் அகப்பட்டு நிற்கிறோம்.

மூப்பு.  21-3-2005.
மூப்பில் (முதுமையில்) இளமை வாழ்வு அனுபவக் கோப்பு மகிழ்வுடைத்து. மூப்பாக (பிடிவாதமாக) ஆற்றிய சாதனைகளும், மூப்புடன் (தலைமையுடன்)ஆக்கிய சாதனைகளும் பெருமை தரும்.

மரபு.  16-2-2006.
மரபு காலாதி காலமாக பின் பற்றுவதானாலும், மூட வழக்கங்களைக் காலத்திற் கேற்ப மாற்றலாம்.

பட்டு.  28-4 2004.
பட்டுப் போன மரம் படகாகிறது.
பட்டுப் போன மனிதன் பிணமாகிறான்.

பட்டும் பட்டும் மனிதர் வார்த்தைகளை
பட்டுப் பட்டென வீசி நல்ல இதயங்களைப்
பட்டுவிடச் செய்வது தொடர் கதை.

ஆட்டம். 5-5-2004.
புலம் பெயர் கலாச்சாரமும்,
எமது கலாச்சாரமும் இடிபட்டு
நல்ல பண்புகளைக் கூட
கடித்து ஆட்டம் காண வைக்கிறது.

திரு.  3-5 2004.
ஏதும் செய்வதறியாது யாருமே
திரு திருவென முழிக்கத்
தேவையில்லை. திருவள்ளுவர்
திருக்குறள் படித்தும் மக்கள் தம்
வாழ்வைத் திருத்த முடியும்.

ஈர்   17-5-2004.
ஈரடிக் குறளின் பயிற்சி மூளைக்கு.
ஈர்க்குமாறால் வரும் பயிற்சி உடலுக்கு.

வாசிப்பு.   6-3-2004.
வாசிப்பு வாசம் மிக சுகந்தமானது. அது என்னை ஆனந்த வாசியாக்குகிறது. எவ்வளவு வாசியான நிலைமை அது!.

வாசனை.
பூவோடு சேர்ந்த நாரும் வாசம் பெறுவது போல, நல்ல பழக்க வாசனையே மனிதருக்கு எப்போதும் தேவை. மீன் கடையருகிலிருந்த பூக்கடை போன்று கெட்ட வாசனையால் மனிதன் கேடு அடைகிறான்.

 

 வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                       

18. கவிதை பாருங்கள்(photo,poem).

 

                              

186. என்னைப் பின் தொடர்….

 

 

என்னைப் பின் தொடர்….

 

கூட்டம்    சேர்த்திடவோ!
கூடிப்  பின்  தொடரவோ!
கையொப்பம்  சேர்த்திடவோ!
கட்சி நடத்திடவோ!

அன்புடை  மகானோ!
இன்னமுத அறிவுச் சுடரோ!
ஆருயிர்ப்   பாதுகாவலனோ!
மனிதநேய   அரசியலாளனோ!

அருமை  நடத்தையால்  உயர்ந்திடு!
அன்பைக்  காட்டிக்  கவர்!
அரிய  கருத்தால்  ஆள்!
அமோக  ஆதரவு  பெறுவாய்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
20-4-2011.

 

                                     

185. சொல்லுக்கும் செயலுக்கும் நிலாத்தூரம்.(பாமாலிகை)

 

 

சொல்லுக்கும் செயலுக்கும் நிலாத்தூரம்.

 

கொள்கைத் தூண்களெனும் வார்த்தைகள்
அள்ளி அமைக்கும் கோபுரம்
கொள்ளை கொள்வது யாவரையும்
சொல்லும் செயலும் நிசமானதும்.

சொற் கருத்தும் – செயலின் நினைப்பும்
வில் – நாணென இணைந்த முனைப்பில்
சொல் – செயலுக்கில்லை தூரம்.
சொல் செயலாகிட இல்லை நேரம்.

சொல்வதைச் செய்யாத மனிதனின்
சொல் – செயலின் தூரம்
கல் தொடா நிலாத்தூரம்.
சொல்லாமலிருப்பது உயர் தரம்.

” சொல்லாமற் செய்வர் பெரியார்.
சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியும் செய்யார் கயவர்…”
உதாரணம் சொன்னார் ஒளவையார்.

சொல்லெனும் பூ, செயலெனும் காயாய்
பூவாமற் காய்க்கும் பலாமரம் – பெரியார்.
பூத்துக் காய்க்கும் மாமரம் – சிறியார்.
பூத்தும் காய்க்காத பாதிரியாய் – கயவர்.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-9-2001.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் அமரர் வியூகன ;(கீழ்கரவையூர்ப் பொன்னையனின்) சாளரம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது.)

In Tamilauthors.com ….Link

http://www.tamilauthors.com/03/369.html

In Muthukamalam web site :-   http://www.muthukamalam.com/verse/p788.html

 

                                   
 

Previous Older Entries