6. மறுமலர்ச்சி.

(‘ உறவு’  எனும் இந்திய மாத சிறு சஞ்சிகையில்
புதுவை சிவம் அறக்கட்டளை நடத்திய கவிதைப்
போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை.    2006- april – page 23 )

          

 

மறுமலர்ச்சி.

இருமனம் இணையும் ஒருவழி யாகம்
இருமனம் சேரும் திருமண யோகம்.
பிணையா இருமனம் திருமணப் பெயரில்
இணையாதொரு வழி ஏகல் நோதல்.
ஆதிக்க நாயகனின் ஆதிக்க நினைவால்
பாதிக்கும் இல்லறம் – நீதியில் பேதம்.
மோதிப் புழுங்குதல் – மிதித்தல் சேதம்.

அன்பின் கசிவு ஆங்காரமாகி, – ஆதிக்கம்
வன்முறைப் புற்றுநோயானால், -பாதிக்கும்
மென்மனம் கண்ணாடியன்றோ,- சோதிக்கும்
எண்ணமேன்? வேதனை அழிக்கும் ஆரோக்கியம்.
தனக்குள் கலங்கும் வெறுப்பான வாழ்வு
தனக்கே சேதம்- பொருமுதல் தேய்வு.
வாழ்வு வளமான வழிமுறைத் தெரிவு.
தாழ்வு வழியேகும் மனக்காப்பு உயர்

தாலிக்குள் தாம்பத்தியத்தை முடிச்சிட்ட மூத்தோரே!
தாலியால் வாழ்க்கையே தடுமாறல் நியாயமா?
ஒருவனுக்கு ஒருத்தியென்று ஒடுங்கியே வாழ்வதா?
இருவேறு பாதையாய் திசைமாறல் மறுமலர்ச்சி.
திருவினை பெற்றிட திட்பமான வழிமுறை
திருமண விலக்கு திருப்தியான செயல்முறை.
திருப்பம் நிகழ திடமான வழிமுறை
தித்திக்கும் வாழ்வின் மறுமலர்ச்சித் திறவுகோல்.
        

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
6-9-2006

 ( ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலியில் என்னால் வாசிக்கப்பட்ட கவிதை.)

                              

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  
 

101. ஆரோக்கியம்…

ரோக்கியம்…

உள்ளம் ஆரோக்கியமானால்
கள்ளமற்ற சிந்தனை உருவாகும்.
தௌ;ளிமைச் செயலால் உடல் சிறக்கும்.
தன்காலில் சுயமாய் நிற்கின்ற
தன்கையே தனக்குதவும் வாழ்வும்
முன்னோச்சமூக உயர்வின் ஆரோக்கியமே.

கொக்குப் போலக் காத்திருந்து
தக்க சமயத்தில் காரியமாற்றல்
சிக்கலற்ற அமைதியான ஆரோக்கியம்.
விரலிற்கு ஏற்ற வீக்கமாய்
அளவறிந்து, காலம் அறிந்து
வாழ்தலும் நல்ல ஆரோக்கியமே

ஒழுக்கமுடை வாழ்வு முறை,
பழுத்தறிவுடை பெரியோர் உறவு,
இழுக்கில்லா வாழ்வெனும் ஆரோக்கியம்
சீரான உணவும், தேகப்பயிற்சியும்
போராடும் வாழ்வில் நல்ல
ஏராகும் ஆரோக்கிய வாழ்விற்கு.

அடிமை வாழ்வு ஒருநாளும்
வடிவு தராது, சுதந்திர
குடியரசே நாட்டிறைமைக்கு ஆரோக்கியம்.
சொந்த மொழியோடு இணைந்து
வந்த வேர் அறிந்து வாழ்தல்
சாந்தி செழிக்கும் ஆரோக்கியமாகும்.

இந்துக்களிருந்த நாட்டிற்கு இந்தியாவிலிருந்து
பௌத்தமிறங்கியது. இலங்கை சிங்களத்
தீவெனவாவது ஆரோக்கியமா! அன்புச்செங்கோல்,
ஆதரவுச் சிம்மாசனம் வன்முறையற்ற
பல்லாக்குப் பவனியால் பண்டிதபவனியாக
வாழ்வுத் தேரோடுதல் ஆரோக்கியமாகும்:

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-10-2008.

( ரி.ஆர்.ரி தமிழ் ஒலியில் என்னால் வாசிக்கப்பட்டது.)

 

                          

10. காலத்திலும் ஞானமாய்…

 

 

 காலத்திலும் ஞானமாய்…

தேவ கிருபையாலே நாம்
தேவ கீதம் இசைப்போம்.
தேவாதி தேவனைத் துதித்து
தேவ நற்கருணையைப் பாடுவோம்.  (தேவ)

சீவிதம் சிறப்பாய் அமைத்திட
சீதள உலகை உருவாக்கினார்.
சீவ ஆத்துமங்கள் உருவாக்கினார்.
சீவ சுவாசம் தந்திட்டார்.         (தேவ)

கர்த்தருக்கு நன்றியாக நாம்
கருணையை உலகில் பரப்புவோம்.
கடமைகள் சரியாய் கவனிப்போம்.
காலத்திலும் ஞானமாய் நடப்போம்..  (தேவ)
19-4-2007.

                                        

                             

 

 

19. ஊக்கம் தருமன்பு.

 

 ஊக்கம் தருமன்பு.

வாய்மை, வலிமையாம் தந்தையன்பு,
வலையாக வீட்டில் தாய்மையன்பு,
ஆய்வுக்கும் அப்பாலொரு தூயஅன்பு.
ஓய்வின்றிப் பொழியும் பெற்றோரன்பு.  (வாய்மை…)

த்து விரல்கள் பாசமாய்ப் பதித்து
சொத்தாகப் பிள்ளையைப் பார்ப்பார்.
தித்திக்கப் பேசித் தாய்மொழியை
முத்தாகப் பழக்கும் பெற்றோர்.       (வாய்மை….)

பூக்கும் பெற்றோர் அன்பு
ஊக்கம் தந்து காக்கும்.
ஆக்கமான அன்பிழந்தால்
ஏக்கம், தாக்கம் சோகமே.           (வாய்மை….)

பாடல் – வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ், டென்மார்க்.  
21-4-08.

                                                                            

 

18. மூலச்சக்கரங்கள்.

 

 

மூலச்சக்கரங்கள்.

 

அன்புப் போதி மரம்
இன்பப் பெற்றோர் இல்லம்.
பண்பின் இலக்கியம் பெற்றவர்
உன்னத உரை நடைகள்.  (அன்புப்….)

காலச் சக்கரம் சுழல எமக்கு
மூலச்சக்கரம் பெற்றோர்.
சீலமான வாழ்வுத் தேரிற்குப்
பாலமான இராசிச் சக்கரம்.  (அன்புப்…..)

என்னை உருவாக்கிய உயிர்த் துளி.
என்னுள் எதிரொலிக்கும் அன்புமொழி,
எழுத்தாணி இயக்கத்து ஆதார சுருதி
முழுவதும் பெற்றோரின் கொடைகளே.  (அன்புப்….)

பாடல் – வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.  
21-4-08.

                              

17. உறவு வட்டம்

 

 உறவு வட்டம்                                                                   

ருமை உறவு வட்டம்
உருவமைத்தார் உலகில் பெற்றோர்
திருவோடு கருவிலான உரிமை
ஒரு வீடு உறவெனும் பெருமை.                   (அருமை….)

நிறம் மாறாப் பாசம் உயிராட,
திறவுகோல் அன்பு ஆதரவாய்
உறங்காது பாடுபடும் பெற்றேரின்
இறவாத பாசம் உலக சங்கமம்.                       (அருமை…)

நிறக்கும் வானவில்லான உறவு
சிறந்த ஏலக்காயாய் மணந்து
சிறகு விரித்தால் பெற்றோரன்பு
பிறகொரு குறையில்லை, பேதமில்லை..    (அருமை….)

பாடல் – வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ், டென்மார்க். 
21-4-08.

                           

 

16. பெற்றவரே பேறு பெற்றவரே!

 

 

பெற்றவரே பேறு பெற்றவரே! 

யிருக்குள் உயிர் வைத்துப் பிள்ளையை
கருவறைக் கர்ப்பக் கிரகத்தில் கருத்தாய்
உருவாக்கி உலகிற்குத் தரும் இனியவர்
பெருமையுடை பேறு பெற்ற பெற்றவரே!

கமெனும் கோயில் மூலவிக்கிரகங்கள்!
அன்பென்ற இறகினால் ஆன்மா கோதியவர்கள்!
பண்பின் போதி நகரமான இல்லத்தில்
பாசத்தின் சாசுவத சிகரமானவர் பெற்றோர்!

சொர்க்கமாய் இவ்வுலக வாழ்வை, இனிய
வர்க்கமாக்கு என்று தீர்க்கமாய்,
வேரோடி விழுதுவிடும் மனிதத்தை
தூரோடு நுழைத்த உன்னதமானவர்கள்.

நெஞ்சுரம் தந்து நெம்புகோலாகி,
நெறிகாட்டி, நெஞ்சில் நிறைந்தவரைத்
தரணியில் எம்மைத் தவழவிட்டவரை,
அரவணைத்து மரணிக்கும் வரை காப்போம்!

ருமை பெருமையறிந்து பெற்றவரை
கருமைபட வைக்காது நாம் காப்பதே
திருவுடை எமது பெற்றவர்களை
பெருமைக்குரிய பேறு பெற்றவராக்கும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-7-2008.

(லண்டன் தமிழ் வானொலி, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

                            

15. பாசாங்கில்லாத…..

 

 

பாசாங்கில்லாத…..

பாசாங்கில்லாத பரிசுத்த ஆட்சி
தாய்மையாம் இராசாங்க ஆளுமை.
தூய்மைக்கு ஆதாரம் தாய்மை.
தலை சாய்த்து வணங்குவோம்.  (பாசாங்கில்லாத..)

சை அம்மா அப்பாவுடன்
ஆயுட்காலத் தொடர்பு ஆனந்தம்.
ஆயுதமாய் அன்பை ஏந்தி
ஆயாசமின்றி எம்மை ஆதரிப்பார்  (பாசாங்கில்லாத.)

சுடரும் குத்துவிளக்கான அன்பு
படர்ந்;து எமக்கு (படர்ந்தெமக்கு) ஒளியாகும்.
திடமான பெற்றவர் பாசம்
இடர் களைந்து இதமாகும்.       (பாசாங்கில்லாத)

 

பாடல் – வேதா. இலங்காதிலகம். 
ஓகுஸ்,  டென்மார்க்.  
22-4-08.

                                                        

 
 

100. தூருக்குச் சேதமின்றி……

 

தூருக்குச் சேதமின்றி……

 

தோல்விகளின் தொடரான தோரண வரிசைகள்,
சால்வை தரித்து திலகமிடும் ஏமாற்றங்கள்,
மேல்விலாச முத்திரை மாற்றும் இழப்புகள்,
மேல் நிலை மனிதம் மரக்கும் அதிர்வுகள்.

தோல்விகளின் கனம் தாங்கும் உடலில்
தோல் சுரணைத் துலக்கம் குறையும்.
தோழமைப் போர்வை இதமும் மாறும்.
தோள் கொடுக்கும் உணர்வும் ஊறடையும்.

மேடையிட்டு மேவும் பல ஏமாற்றங்கள்
மேலாடையிடுகிறது மேன்மைக் குணங்களிற்கு.
மேன்மாடம் அமைக்கிறது அவநம்பிக்கை உணர்விற்கு.
மேற் பார்வையை அறிவு மயக்குகிறது.

காலூன்றிக் காயமிடும் காட்டமிகு இழப்புகள்
நூலறிவின் ஒளி கலைக்கும் மயக்கங்கள்,
சீலமுடைகுணம் மாற்றும் ஊனங்கள்,
மேல் நிலை மனிதத்தின் இறக்கங்கள்.

வேருக்குள் புகுந்திடும் சிறு பூச்சிகளாய்
யாருக்கு இல்லை அதிர்வான தாக்கங்கள்!
நேருக்கு நேராகும் ஆழ்மன மாற்றங்கள்!
தூருக்குச் சேதமின்றிப் பாதுகாத்திடுங்கள்!

 

வேதா. இலங்காதிலகம்,
ஓகுஸ், டென்மார்க்.
6-4-2007.

(முத்துக் கமலம் இணையத் தளத்தில் வெளியானது.
ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai342.htm

                     
 

 

 

 

 

5. குடத்து விளக்காகவல்ல…..

 

குடத்து விளக்காகவல்ல…..

 

குடத்தில் விளக்காய் ஏன் பெண்ணே!
நடக்கும் விளக்கன்றோ நீ பெண்ணே!
தடம் பதிக்க ஆசை கொள்!
சுடர் வீசத் திறமை கொள்!
திடம் கொண்டு சுமைகள் பங்கிடு!
அடங்கும் எண்ணச் சிறகை அரி!
இடப்புளக்கம் உலகில் பரந்தது.
அடம் பிடித்தேனும் அறிவைப் பெருக்கிடு!

நுண்மையாய்ப் பெண் இல்லம்; பேணும்
வண்ணம் கண்டு ஊர் வியக்கும்!
தண்மை அன்பைத் தரும் இவள்
கண்படும் அழகிலும் ரதி மகள்!
ஊன்றுகோலாய்ப் பெண் குடும்பத்திற்கும்
சான்றோனாக வாரிசை வளர்க்கவும் – ஆனால்
பெண் திறனை எல்லோரும் போற்றார்.
புண்பட வைக்கவும் சிலர் பின்னிற்கார்!

பெண்னைத் தாழ்த்தும் ஆண்மகன்,
பெண்ணிங்கு ஆணை மதிப்பதில்லை
என்ற குற்றப் பாசிகள் விலக்கி
மண்ணேற்க மதித்து நடக்கலாம்.
பெண்ணே தன்னிலை உயர்த்தல் உரிமை.
பெண்கள் தினத்தில் மட்டுமல்லை
என்றும் பெண்மனத் தாழ்வு நிலையழித்து
குன்றில் தீபமாகலாம்!…குடத்து விளக்காகவல்ல!….

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-3-2006.

(ரி.ஆர்;.ரி தமிழ் அலை, ரி.ஆர்.ரி தமிழ் ஒலி, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.    ஜீவநதி 100வது இதழ் ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழில்
பிரசுரமான கவிதை.)

                                    

Previous Older Entries