252. அறிவும், அறிவீனமும்.

 

அறிவும், அறிவீனமும்.

 

றிவெனுமுயர் நிலையடையவும்
அறிந்தாய்ந்து ஆழவுணர்ந்திடவும்
அறியவுள்ளது பல் நிலைகளாம்.
அறிந்து தெளிந்தனுபவம் கூட்டலும்
அறிவுப்பள்ளியிலடையும் நிலையாம்.

றிவைக் கொடுத்தனுபவித்தலுயர்வு!
அறியாதவனறியா இன்பமிது!
அறிவுக்குள்ளேயமிர்தம் காணாதவன்
அறிவையென்றும் இழுக்கென்றிருப்பான்.
அறிவையறியாதிருத்தல் அந்தகாரம்.

றிவுடை மனது பாரமற்றது, அழுக்கற்றது.
அறிவும் பண்பும் மனிதனுக்கு அரணது.
அறிவாளனுக்கு மொழியுற்ற நண்பன்.
அறிவொளி வாழ்வின் கலங்கரை விளக்காம்.
அறியாதுலகில் மயக்கமடைவோர் பலர்!

றிவினாலுலகைத் தட்டுதல், எழுப்புதலும்
அறிவற்றவனால் முடியாத தொன்றாகும்.
அறிவிற்கீடு எதுவுமே இல்லையாம்.
அறிவுடை யுள்ளத்திற் கழிவென்பதில்லை.
அறிவேயுண்மை அறிவே உயர்வு.

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-10-2012.

 

                        

 
 

Advertisements

4. வெல்லமே வெற்றி….

 

வெல்லமே வெற்றி….

 

பேசிடும் கருப்பொருளில்
வீசிடும் ஒளிக்கற்றை.
ஆசியுடை நடுப்புள்ளி
தேசிகன்(அழகன்) நீயன்றோ!

னம் செழித்ததுவே
மனம் சூனியமாகாதே
புனலாய்க் குருதியையே
தனமாய்ப் பெருக்குகிறாயே!

கிளை பரப்புமுறவின்
முளை இவன்! பலாச்
சுளை! பால் முகக்
களை களையகற்றும்.

குடும்ப அதிகாரத்தில்
படு காத்திரமாக
எடுக்கிறாய் செங்கோல்.
பாடுபொருள் நீயன்றோ!

ன் சிரிப்போ
தேன்! உதிர்க்கிறாய்
பொன்! அன்பொழுகும்
சின்ன நிலாவே வெற்றி.

ன்னகையும் வேண்டாம்
இன்னிசையாமுன் புன்னகை
நன்னகைத் தங்கம்
ஓன்றே போதும்!

ந்தாவிளக்கே! எம்
நந்தவன நறவமே! (மணம்)
விந்தையடா நீயெமக்கு.
விந்தியமலைத் தேனடா!

வாழ்வுவானின் விண்மீன்!
வாழ்வுக் கலங்கரைவிளக்கு!
வாழ்வுப் பௌர்ணமி நிலா!
வாழ்க! வளமோடு நீடு!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-10-2012.

 

 
 

4. பயணம் மலேசியா. 12

மலேசியாவின் பிரபல பழம் டுறியான் (durian)

4. பயணம் மலேசியா. 12

மலாக்கா போகும் வழியில் மலேசியாவின் மிகப் பிரபலமான டுறியான் (durian   ) பழத்தை ருசி பாருங்கள் என்று பாதையோரக் கடையில் நிறுத்தினார் சாரதி. வாகனத்தில் வைத்து விற்பனை நடந்தது. பார்வைக்குப் பெரிய சீதாப் பழம் போல தோற்றம். ஒரு கிலோ பழம் 15 றிங்ஙெட். அதை வாங்கி 5 பேரும் பிரித்துச் சாப்பிட்டோம். அவர்களே எல்லாம் வெட்டித் தந்தனர்.  சுவையாகவே இருந்தது.

மலாக்கா ஆற்றில் படகுப் பவனி.
சுமார் 10க்கும் மேற் பட்ட மேம்பாலங்கள்,
வித விதமான பெயர்கள். ஸ்பைஸ் கார்டின் (spice garden ), த பைறட் பார்க் (The pirate  park ), பழைய பேருந்துத் தரிப்புப் பாலம் (old bus station bridge), யாவா கிராமம் (Jawa village), வாட்டர் மில் (water mill) லக்சுமணன் தெரு, என்று பல பெயர்கள் உள்ள பாலத்திற்கூடாக படகு பயணிக்கும்.

மலாக்கா சரித்திரம், அந்தந்த இடத்தின் சிறப்பு என்று ஒரு ஒலிப் பதிவு நாடா ஓடியபடி உள்ளது. இது துறைமுகம், இது மீன் கடை, இது அழகு நிலையம் என்று கூறியபடி வருகிறது.

படகுப் பவனி முடிய பக்கத்துக் கடை வீதிக்கு வந்தோம்.

அலங்கரித்த சைக்கிள் றிக்சாக்கள் வரிசையாக நின்று எம்மை வா..வா என பிடுங்கியபடி உள்ளனர். 20 றிங்ஙெட்டுக்கு மலாக்கா பட்டணத்தை சுற்றிக் காட்டுவார்கள். இதை நாம் மிகவாகக் கணக்கெடுக்க வில்லை.

ஆனால் மகளும் துணைவரும் போய் வந்தனர்.

நான் இப்போ மிகவும் வருந்துகிறேன் ஏன் இதில் போய் சுற்றிப் பார்க்காது தவற விட்டோம் என்று. மகள் எம்மோடு மிகவும் வாதாடினாள், மனத்தாபப்பட்டாள் வாருங்கள் என்று.
அதாவது பரமேஸ்வரா ஒதுங்கி இருந்த மரம், வேறும் பல சரித்திர முக்கியத்துவமான இடங்களெல்லாம் பார்த்து வந்துள்ளனர்.

  எனவே சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த றிக்சா சுற்றுப் பயணம் மிக முக்கியத்துவமானது.
அனைவரும் அனுபவித்து முக்கிய இடங்களைப் பார்க்க வேண்டியது.

இதற்கு மேலும் அங்கு நின்றால் மிக இருட்டி விடும் என்று அன்றைய உலாவை முடித்து நமது தங்கும் வாடி வீட்டிற்குத் திரும்பினோம்.

போகும் வழியில் மலேசிய பிரபலமான குளிர் பானம் ” சென்டுல் ” (sendol )

ருசித்துப் பாருங்கள் என்று  நிறுத்தினார். ஐஸ், தேங்காய்ப் பால், மண்ணிறச் சீனி, ஜெலி கலந்த கலவை. எனக்குப் பிடிக்கவில்லை. சாரதி விழுந்து விழுந்து ருசித்தார்.

சரியாக இரவு ஒன்பது மணிக்கு அறைக்கு வந்தோம்.

அடுத்த நாள்……

மிகுதியை அங்கம் 13ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.  
ஓகுஸ், டென்மார்க்.
26-10-2012.

38. திலகமிட்டு விடு!

 

திலகமிட்டு விடு!

ஆண்:-
ஒரு மொழி எனக்குன் மறுமொழி மலர்வாய்!
ஒரு நாழிகைப் பொழுதெனும்முன் திருமுகம் காட்டேன்!
மதுரசமே! மாங்கனியே! மதுர இதழ் திறவேன்!
முந்திய நாளின் வினாவிற்கு முழுமை மறுமொழி தாராய்!
                                  (ஒரு மொழி)
பெண்:-
குறுநிலவோ! நீ முழுநிலவோ! எந்தன்
உருவினுக்கொளியூட்டும் கருவூலமோ! கலங்கரைவிளக்கோ!
கமழும் முல்லைக் கொடியின் கீழ் கருத்துக் கேட்கும் சுந்தரனே!
மறுத்துப் பேசா நிலையாலே மகிழ்ந்த பதிலாயுணராயோ! (குறுநிலவோ!)

ஆண்:-
கண்மணியுன் கமல அழகு, கண்டு தடுமாறும் மனது
விண்டுரைக்க வழியேது! கண்டு நீ ஓடும் போது!
நில்! நிலையாக என் நெஞ்சில் நிற்பவளே நிர்மலப் பெண்ணெ!
நீயோட முடியாதே நான் தாலியொன்று தந்தால்   (ஒரு மொழி)

பெண்:-
கண்ணின் கருமணிக் கதிர்கள், இன்னும் சொல்வதென்ன!
எண்ணு முன்னே விழியம்புகள் என்னைத் துளைப்பதென்ன!
காளையுன் பாளைச் சிரிப்பு ஆளை மாய்க்கிறதே!
வேளையின்றி உன்னையெண்ணியென் வளையலும் கழன்றிடுதே!
                                  (குறுநிலவே)
ஆண்:-
கற்றைக் குழலில் விரல் நுழைத்து சுற்றிச் சுருட்டுமென் ஆசை
வெற்று வேட்டாய் போவதோ வேல் விழியாளே கூறாய்! (ஒரு மொழி)

பெண்:-
முற்றும் தெரிந்த ஞானியாய் நீ நெற்றியில் திலகமிட்டு விடு!
குற்றமின்றி நானுமுன்னோடு குளிர்ந்து மகிழ்ந்து ஆடலாமே! (குறுநிலவோ!)

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-10-12.

 

                                             

 

37. கவிதை பாருங்கள்(photo,poem)

உள்ளக் கமலத்தில் உறைபவளே
வெள்ளைத் தாமரை வீணையாளே!
கொள்ளையாயுன்னருளை உலகிற்கு
அள்ளிருள் (கும்மிருட்டு) நீங்கத் தருவாயே!

கலை கல்விக்கு அளப்பரிய
விலையற்ற இராசாங்கம் கொண்டவளே
அலையிடும் உள்ளம் காத்திரமாய்
நிலையிட கலைகள் நிறைப்பாயே!

சரசுவதித் தாயே! உன்
அரசாம் வித்துவப் பகுதி
முரசு கொட்ட என்னுள்ளே
பரவசமாய்ப் பதிய அருள்வாயே!

இலட்சமீகரத்திற்கு அலைமகள்
இலக்கணமான தெய்வீகம்
இலங்கும் மூவிரவு.

இலக்கிற்காய் இலக்கிடுவார்

இலட்சம் மனிதர்
இலட்சுமி கடாட்சத்திற்கு.

இலட்சணமாய் இசைந்து
இலட்சியம் நிறைவேற
இலக்குமியை இறைஞ்சுவோம்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-10-2012.

                                    

தொலைத்தவை எத்தனையோ 7.

                                                                                                                   7.

வளவு, நிலம் என்று அன்று வாழ்ந்த வாழ்வு இன்று எப்படியெல்லாம் மாறிவிட்டது. தாய் நிலத்தில் வாழ்ந்த வாழ்வைக் கனவிலே தான் காண முடிகிறது. (போகலாமே, பார்க்கலாமே என்கிறீர்களா!)

அங்கு வாழ்நிலையே மாறிவிட்டது.

கணனியில் பல படங்களைப் பார்க்கும் போது நினைவு பொங்கியெழுகிறது. ஏக்கம் பெருகுகிறது.

சமீபத்தில் இலுப்பம் பூவைப்பார்த்தேன். எத்தனை நினைவுகள்!….

நான் வாழ்ந்த வீட்டின் முன்புறத்தில் பக்கமாக பெரிய வளவு. அதில் பெரிய இலுப்பை மரங்கள் 2ம், சிறியதாக வேறும் இருந்தது.

இதில் பூக்கள் பூத்து விழும் போது, நிலத்தில் முத்து சிதறியதான அழகு.

கொட்டிக் கிடக்கும் அதனழகைப் பூரணமாக ரசிப்பதற்காகவே தம்பி தங்கைகளுடன் சேர்ந்து மரத்தின் கீழே சருகுகளைக் கூட்டி, கற்களைப் பொறுக்கி, பெரிய புற்களை வெட்டி, அழகாக்கி மாலையில் எதிரே அமர்ந்து ரசிப்போம். அதிகாலையிலும் பார்க்கும் போது மனமகிழ்வாக இருக்கும். நாமாக முன்னெடுக்கும் இந்த வேலைகளிற்கு அப்பா மறைமுகமாக ஆதரவு தருவார்.

உரித்துச் செதுக்கிய குட்டிக்குட்டித் (மினி மினித்) தேங்காய் –  முடியோடு இருப்பது போன்ற தோற்றம் கொண்டது இலுப்பைப் பூ.

இது மட்டுமா! இன்னம் பல….

இரவில் இலுப்பைப் பழம் பழுக்கும் காலங்களில்

இலுப்பை-காய்-thamil.co_.uk_

வெளவால்களின் கூச்சல் நிறையக் கேட்கும். தெரிந்த. சொந்தக் காரர் வெளவால் இறைச்சிக்காக இதை இரவில் சுடுவார்கள். பின்பு காலையில் நாங்கள் கீழே கிடக்கும் வெளவாலைப் பார்த்து ஆச்சரியப் படுவோம். யாரோ சுட்டிருப்பார்கள் என்று ஊகித்து இன்னார் இன்னார் என எங்களுக்குள் பேசுவோம். பின்பு நேரம் சிறிது செல்ல ”அண்ணை நாங்கள் தான் சுட்டோம் ” என்று கேட்டு எடுத்துச் செல்வார்கள்.
இது தவிர வெளவால்களால் தானென்று நினைக்கிறேன் ஓக்கிட்  பூக்கன்றுகள் இலுப்பை மரத்தில் ஒட்டி வளரும்.

bulbophyllum_night_flower_003orchidcutout

முன் வீட்டு டாக்டர் அருட்பிரகாசத்தின் சொந்தக்காரர்கள் வந்து எம்மிடம் கேட்டு கொக்கைத் தடியால் பிடுங்கிச் செல்வார்கள்.

vavvaal

(வெளவால் )
அவர்களிற்கு ஓம் சொல்லிப் பிடுங்கிச் செல்வது மன மகிழ்வாக இருக்கும். அடுத்து

அப்பா மண்வெட்டியை எடுத்துக் கொண்டு ”..பேபி (baby – my village name)வருகிறாயா கொச்சாட்டிக்கு? (பனை வளவிற்கு)” என்று கூப்பிட்டதும், அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடப்பேன். ( எனக்கு 8 வயதிற்குள் தானிருக்கும்.)
”…ஏனப்பா?…” என்று கேட்டபடி போவேன்.
”…வாவேன்…” என்றபடி கூட்டிப் போவார்..

அங்கு போனதும் என்னை மறந்து புல்லுப் பூக்களை நான் பிடுங்கிச் சேகரிப்பேன். கரடு முரடற்ற, வழவழப்பான கற்களைச் சேர்த்துப் பொறுக்குவேன். ( அவை கொக்கான் வெட்டவும், வேறு விளையாட்டிற்கும் உதவும்).

இப்படி என்னை மறந்து நான் உலாவ மறு பக்கம் அப்பா இரட்டைக் கட்டில் போட்டது போல ஈரமண்ணை சேர்த்து அணைத்து  உயரமான பாத்தி ஒன்று செய்திட்டார்.

எப்படி இப்படி அப்பாவால் முடிகிறது! என என்னுள் நான் ஆச்சரியப்பட்டேன்.

அப்பா மெலிந்த தேக வாகு கொண்டவர்.

சில வேளைகளில் தான் அப்பா இப்படிச் செய்வார். 
மற்றும் வேளைகளில் சின்னப் பொடி வந்து கூலிக்குச் செய்து தரும். அப்போதும் சின்னப் பொடிக்கு தேனீர் கொடுக்க என்று நானும் வீட்டுப் பெரியவர்களுடன் கூடச் சென்று செய்யும் வேலைகளைப் பார்ப்பதுண்டு.

மிகுதியை  மறு அங்கத்தில் பார்ப்போம்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-10-2012.

36. கவிதை பாருங்கள்(photo,poem)

துர்க்கை அம்மன்.

 

ஆர்க்கம் (இலாபம்) கருதிடும்

பார்க்கம் (வீரியம்)வேண்டிடும்

மார்க்கம் (நெறி,முறை) தானே

தீர்க்கமான தாயாம்

மூர்க்கை (ஆங்காரி) அம்மனாம்

துர்க்கையை வணங்குகிறோம்.

எண்ணங்களை கவி எண்ணங்களை
கண்ணதாசன் வளர வைக்கிறான்.
வண்ண வண்ணக்கவிதைகள் உதயம்.
மண்ணிலே இதை மறுப்பாரில்லை.
பின்னிய அவன் பாடல்களே
பொன்னான பதிகங்களாக தினந்தினம்.

 

                                           

Previous Older Entries