26. உணர்வு மொழி.

 

உணர்வு மொழி.

 

அன்பு மொழி ஆசை மொழி
பண்பு மொழி பாச மொழி
கனிவு மொழி காதல் மொழி
கருத்து மொழியென ஏராளமேராளம்.

உயிர் மெய்யா யுயர்வாய்ப் பயிரிட்டு
உயிர்பித்தே உயிர் மூச்சான மொழி
வல்லினம், மெல்லினம்,இடையினமாய் வளர்ந்த
தனம்! தகவுடைய இனத்தின் வேர்!

தன் மொழி அழகிய மலர்!
இன் மொழி இனிக்கும் பழம்!
அமுதெனப் படைக்கும் வாக்கிய வாளிப்பு
ஆக்காதோ வரலாறு கோலோச்சுமணைப்பு!

மொழி யூர்வலத்தில் பொழியுமத னிதத்தில்
விழி பூரித்திடும், குளிர்ச் சாரலாகும்.
புழியான துன்ப மொழிகளைத் தூரவாக்கினால்
மொழித் தேரழகில் விழிகளகல விரியும்.

உடை, உணவு உரித்தான பழக்கங்கள்
உடைந்தாலும் வேரான மொழியைக் காத்திடு!
மொழியெம் விழி! கற்பது இனத்திற்கு மொளி!
அழியாமற் பாதுகாத்தல் இழிவல்ல! உயர்வே!

மொழித் தித்திப்புக் குமிழ்கள் அழகாய்
வழிந்து சந்து பொந்துகளிலும் புகுந்து
அழகிய பந்துகளா யுருண்டு தவழட்டும்.
அமிழ்தெனத் தேனாய் எப்போது மினிக்கட்டும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-4-2009.

இது பதிவுகள்.கொம் ல் 26-4-2009லும் பிரசுரமானது.

 

                                 

 

29. துர்க்காவிற்கு வாழ்த்து.

துர்க்காவிற்கு வாழ்த்து.

வாழ்த்து! மனசார வாழ்த்தல்
வீழ்த்திவிடாது யாரையும்.
வாழ்ந்த மனது நல்லதிற்கு
வாழ்த்த எண்ணல் இயற்கை.
வாழ்த்தவொரு மனம் வேண்டும்!
ஆழ்ந்த புரிந்துணர்வு அங்கீகரிக்கும்!.
தாழ்ந்த புரிந்துணர்வு நிராகரிக்கும்!.
வாழத்தை மதிப்புடையோர் மதிப்பர்.

இது என் கணவரின் மூத்த தங்கையின் பேத்தியின் குரலிசை அரங்கேற்ற வாழ்த்து.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-7-2012.

http://youtu.be/jpRfl_puGX0          (Thurka’s      song)

 

                                     

4. பயணம் மலேசியா – 4

Goal of 750 Posts Completed. Congratulations! —Wordpress.com

 

4. பயணம் மலேசியா – 4

எமது பயணத் திகதிகளை இங்கு நான் குறிப்பிடவில்லை மகனின் திருமணத்திற்கு 5 நாட்களின் முன்னர் பரிசம் போட்டனர்.

பரிசம் என்றாலே என்னவென்று எமக்குத் தெரியாது. யாழ்ப்பாணத்தில் அப்படி நாம் செய்வதில்லை.

எல்லாவற்றையும் எமக்காகவும் செய்யுங்கள் நாம் வருகிறோம் என்றே நேரத்துடன் அங்கு சென்றோம்.

சுமார் 40, 50 மக்கள் சாந்தியின் உறவினர்கள் கூடி பரிசம் போடப்பட்டது.

சினிமாவில் வருவது போல ஆனால் கோயில் குருக்கள் (ஐயர்) வந்து இன்னாருக்கு இன்னாரை மணமுடித்து வைக்கிறோம் என்று கூறி, பெண்ணும் மாப்பிள்ளையும் மோதிரம் மாற்றி, சேலை மாலை என்று தட்டுகள் மாற்றி,

(கிட்டத்தட்ட தெத்தம் பண்ணுவது போலக் கொஞ்சம்) அவர்கள் பெண்ணை எமக்குத் தருவது போலவும், பின்னர் சாந்தி சேலை மாற்றி வந்து வீட்டிற்கு விளக்கேற்றினார்.

ஐயரிடம் கேட்டேன் இது ஏன் செய்வதென்று. வீட்டிற்கு விளக்கேற்றுவதே இதன் முக்கிய கருத்து என்றார்.

இரவுணவு, படங்கள், வீடியோவென கிட்டத்தட்ட ஒரு குட்டிக் கல்யாண வீடாகவே இருந்தது – நடந்தது. (என்ன! மாப்பிள்ளைப் பகுதியில் நாமிருவருமே. வேலை, லீவு என்பதால் மற்றவர்கள் இனித்தான் வருவார்கள்.)
இரவு பரிசம் முடிய கூடி இருந்து கதைத்து, வந்த விருந்தினர்கள் யாவரும் செல்ல இரவு ஒரு மணி போல எம் அறைக்குச் சென்று, நல்ல நித்திரை கொண்டோம்.

இது எமது அறை யன்னலூடான காட்சி. கண்ணுக்கு அழகாக உள்ளது. (மழை பெய்ய புழுத்த நாற்றம், சாக்கடை நாற்றம்)

அடுத்த நாள் – காலை ஒன்பதரை, பத்து மணி போல சாந்தியும், திலீபனும் சாந்தியின் நீல நிறக் காரில் வந்து எங்களைத் தங்கள் வீட்டுக்குக் கிட்ட உள்ள டே ரு டே (day to day    ) எனும் உணவகத்திற்கு காலையுணவிற்காக அழைத்துச் சென்றனர்.

இங்கு தான் பசும்பால் கலந்த தேனீர் கிடைக்கும். சாந்தியின் அப்பா, அம்மா சாந்தியின் தங்கை பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக உணவுண்டோம்.

அப்பம் காலையுணவாக எடுத்தோம். நாம் தேங்காய்ப் பாலை அப்பத்தின் மேல் விட்டு சூட்டில் உறைய வைத்து (சுட்டு) உண்போம். இவர்கள் தேங்காய்ப் பாலை வேறாக, குட்டித் டம்ளரில் வைத்தனர். ஆனால் சும்மாவே அப்பம் சாப்பிட மிகச் சுவையாக இருந்தது.

தேனீரும் ம்..ம்….மிக மிக சுவை. ( ஐ லவ் பால் தேனீர் – என் உயிர்)
சாந்தியின் தங்கை மகள் அப்பத்தை தேங்காய்ப் பாலில் குளிப்பாட்டிச் சாப்பிட்டார்.
என் கணவர் அப்பத்திற்குக் கட்டைச் சம்பல் கேட்டார். (மிளகாய் அரைத்து, உப்பு, புளி வெங்காயம், மாசி கலப்பது). உடனே முதலாளி போய்க் கொண்டு வந்தார்.

இதற்கிடையில் நாம் வெளி நாட்டுக்காரர் என்று ஓரே கலகலப்பாக்கி விட்டனர். முதலாளி தன் மனைவியைக் கூட்டி வந்து அறிமுகம் செய்து வைத்தார்.

பின்பு சாந்தி வீடு அப்படி இப்படி என்று நாட்கள் செல்ல மகளும் துணைவரும் இலண்டனில் இருந்து வந்தனர். எமக்கு அடுத்தடுத்த அறையையே அவர்களிற்கும்
பதிவு பண்ணியிருந்தனர். திருமணம் முடியும் வரை வெளியே உலாத்துவதைத் தவிர்த்திருந்தோம்.

மகளுடன் மசாஜ், முக அழகு, காலழகு செய்ய என்று இடம் தேடித் திரிய எம்மோடு எமது துணைகளும் வந்து அந்தப் பெரிய மாலில் செய்தோம், சுற்றினோம்.

அங்கேயே உணவு என்று நன்றாகவே பொழுதைக் கழி(ளி)க்கலாம்.

அவ்வளவு அழகு, நவீனம்.

மிகுதியை அங்கம் 4ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-7-2012.

                                                

 

33. கவிதை பாருங்கள்

 

மகிழ்நிறை வாழ்வை
மகிழ்வழித்துத் தாழ்வை
அகிலத்திலணைத்து மகிழ்வைத்
துகிலுரிப்போரெத்தனை எத்தனை!!!

 

 

                                         

243. இல்லறம்..நல்லறம்..

 

 

இல்லறம்..நல்லறம்..

(நாற்பொருள் – அறம், பொருள், இன்பம், வீடு)

 

நாற்பொருள் கண்டோம் எம்
ஏற்புடை இல்லறம் நல்லறம்.
குற்றம் குறையையும் ஏற்றோம்.
சுற்றமுடன் நிறைவாய்க் கழித்தோம்.
 
ன்ப இளமையில் தோன்றியது
அன்பு நாற்றை ஊன்றியது.
பண்புடை 45 வருடங்களிது.
நன்றென நிறையும் மகிழ்விது.

தோள்சாயுமுன் ஆழ்ந்த அன்பு.
நாள்தோறும் தோழனாய் நட்பு.
வாள் போலவும் கோபக் கொதிப்பு.
ஆள்கின்றுவோர் அரசனாய் நினைப்பு.

நிறைந்த சுதந்திர வாழ்விற்கு நன்றி.
குறைந்து வரும் இளமைக்கு நன்றி.
குறையாத பிள்ளைகள் அன்புக்கு நன்றி.
நிறைவாய்த் தந்த பேரனுக்கும் நன்றி.

தொல்லையெனப் புத்தகங்கள் வாசியாமை வெறுக்கும்.
தொல்லைகள் அனைத்தும் பேசாமை வெறுக்கும்.
நல்லதும் அதிகம் பேசாமை கசக்கும்.
பொல்லாத புகை ஊதுவதும் வெறுக்கும்.

ன்னோடு பயண உல்லாசம் பிடிக்கும்.
உன்னுடைய நிர்வாகத் திறமை பிடிக்கும்.
என்னைப் பிள்ளையாய்ப் பாதுகாப்பாய் நன்றி.
நன்னயமான உன் அன்புக்கு நன்றி.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ், டென்மார்க்.
21-7-2012.

 

 

                        

4. பயணம் மலேசியா .3

 

4. பயணம்   மலேசியா .3

புச்சோங் (Puchong )பயணமானோம். போக்கு வரவு நெரிசல் இல்லாததால் 1 மணி நேரத்தில் சாந்தி வீடு சென்றோம். (நடுவில் வாகனம் ஓடியபடி சாந்தி தன் வீட்டிற்குத் தகவல் கொடுத்தார். உணவு சமைத்துள்ளதாகத் தாயார் கூறினார்கள்.)

அங்கு உணவருந்தினோம்.  ஆறதலாக இருந்து பேசி இரவு போல நாம் தங்கும் வாடி வீட்டிற்கு சாந்தியும், மகன் திலீபனும்  மறுபடியும் எம்மை அழைத்துப் போனார்கள். அரை மணி நேர ஓட்டம் தான்.

சீனாக்காரனின் வாடிவீடு. 101 லேக் வியூ ஹோட்டல். ஒரு நாளிற்கு 90 றிங்ஙெட். இதை 2ஆல் பெருக்கினால் டென்மார்க் 180 குறோணர்கள். சாந்தி தான் இவற்றை ஒழுங்கு செய்திருந்தார். முதலில் 3 நாட்களிற்குப் பதிவு செய்தோம்.

சாந்தியினது வரிசை வீடுகள் (ரெறாஸ கவுஸ்). 25 வருடமாக வாழ்கிறார்களாம். மேலே 3 படுக்கை அறைகள் கீழே இருக்கையறை, குசினி, குளியலறை. முன்னாலே மூடிய விறாந்தை (அல்லது போஃட்டிக்கோ) உள்ளது.

இரவு அறையில் நல்ல குளியல் எடுத்தோம். சுடுநீரும் உண்டு. இது தானே 25 வருடமாகப் பழகியது. ஆயினும் நான் குளிர் நீரிலேயே குளித்தேன். கணவர் சுடுநீரில் குளித்தாராம். குளிருட்டியை எமக்குப் பிடித்தமான அளவில் வைத்து நன்றாகத் தூங்கினோம்.

காலையில் எலாம் அடிக்கவோ, வேலைச் சிந்தனையோ இன்றி ஆறுதலாக எழுந்து மறுபடி குளித்து வெளிக்கிட்டு அருகிலிருந்த Pelita உணவகத்திற்கு சென்றோம் காலையுணவிற்கு.

(இறுதியாகப் அங்கிருந்து டென்மார்க் வரப் பயணப் படும் போது, பயணக்கட்டுரைக்கு உதவுமே என்று அவசரத்தில் காரில் இருந்தபடியே நான் தட்டிய படம் இது.)

இந்த உணவகம் மலேசியா முழுக்க சங்கிலி போல உள்ளது. மலேயாக்காரன், சீனாக்காரனுக்குச் சொந்தமானது. இந்தியா, பங்களாதேஷ் வாலிபர்கள் வேலை செய்கிறார்கள். 

மசாலா தோசை ,ரவா தோசை எனப் பலவாறான தோசைகள், (உழுந்துத் தோசையை நினைக்கக் கூடாது) பரோட்டா என காலை, மாலையுணவாகவும்,  பகலில் சோறு, கடலுணவு வித விதமாகவும், (ஹலோ!..ஹலோ! நான் தாவர பட்சணி! கன்னா பின்னாவெனக் கற்பனை ஓட்ட வேண்டாம்), நூடில்ஸ் எல்லா நேரமும் என்றிருந்தது.

ஆனால்!…ஆனால்!…ஐய்யோ!……..

தேனீருக்கு டின்பாலோ அல்லது மாவோ தான் கரைக்கிறார்களாம். சப்பென்று போய்விட்டது. பசும்பால் தேனீருக்கு விசேட கடைக்குச் செல்ல வேண்டுமாம். இந்தக் கடையில் அங்கு நின்ற நாட்களில் பலவகையாக உணவுகளை ருசித்துப் பார்த்தோம்.

அருகிலேயே பெரிய ஷொப்பிங் மால் உள்ளது (101   shoping mall  ).

அங்கு சுற்றிப் பார்த்து   (3 அடுக்கு  வியாபார நிலையம் சினிமா தொடங்கி அத்தனையும் உண்டு.)மொபைல் சிம் காட்  எல்லாம் வாங்கி, பகல் இரவு உணவும் முடித்து  அறைக்குத் திரும்பினோம்.  அன்றைய பொழுது அப்படியே போனது. வெயிலும், வியர்வையும். காலையும் மாலையும் குளிப்பது தான்.

அடுத்த அங்கத்தில் 4ல் சந்திப்போம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-7-2012.

                                 

242. சடங்குகள். (முதலாவது நூலில் வெளியான கவிதை)

 

சடங்குகள்.

கோத்திரம் தளிர்க்கச் செய்யும் கிரியை
சாத்திர விதிப்படி செய்யும் கிரியை.
மாத்திட முடியாத மதமுறையென்று
ஏத்தியே நாமுமெடுக்கும் சடங்குகள்.

ழுவாத வகையிலிவை வழக்கங்கள்.
பழுதாக வகையில்லையிவை நலங்கள்.
முழுதாகக் கூறினாலிவை யாவும்
எழுதாத சட்டங்களெனவாகும்.

ட்ட நின்று வேடிக்கை பார்த்துத்
திட்டமின்றிப் பல கதைகள் கூறி
சட்டம் சடங்கு எதற்கென்று
மட்டம் தட்டும் மனிதருமுண்டு.

னாவசிய ஆடம்பரச் சடங்குகள்
பணவீக்கம் பறைசாற்றும்  சடங்குகள்
வழக்கங்கள் குளம்பிய சடங்குகள்
புலம்பெயர்ந்த நம் சடங்குகள்.

லைமுறைப் பாரம்பரிய சடங்குகள்
இளைய தலைமுறைக்கு அனாவசிய சடங்குகள்.
கலாச்சார நெரிசலிலிது கலக்க வெளிப்பாடு.
காலப் போக்கிலே மாறியும் மறையலாம்.

டங்குகள் சமூகத்தின் கலாச்சாரத் தூண்கள்.
சடங்குச் சம்பிரதாயம் பேணற்குரியது.
சடங்குகள் மனிதனின் காவலரண்கள்.
சடங்குகளின் புனிதம் வாழ்விற்குத் திண்மை.

டங்குகள் காலப்போக்கிலொரு
படங்காக வீசப்படலாம். பல
மடங்காக ஒரு வேளை பேணப்படலாம்.
முடங்குதலும், விளங்குதலும் தலைமுறைப் பாரம்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-5-1999

(ரி.ஆர்.ரி) தமிழ் ஒளித் தொலைக்காட்சிக் கவிதை பாடுவோமில் 9-5-1999ல் ஒளிபரப்பானது)

                                 
 

4. பயணம் (மலேசியா). 2

our photo.

 

4. பயணம் (மலேசியா). 2

டுபாய் தேசிய விமான நிலையத்தில் இறங்கினோம்.

மாபெரும் விமான நிலையம். 8200 ஏக்கர் நிலப்பரப்பில் விமான நிலையம் பரந்துள்ளதாம். உத்தியோக பூர்வமாக 1960ல் இந்த விமான நிலையம் திறக்கப்பட்டதாம். மத்திய கிழக்கில் முதன் முதலாகத்திறக்கப் பட்ட விமான நிலையம் இதுவாம்
வருடத்திற்கு சுமார் 40 மில்லியன் பிரயாணிகள் பயணிக்கிறார்களாம். இது கூடிக் கொண்டே வருகிறதாம்.
ரேமினல் 3 –  2008 ல் திறக்கப்பட்டதாம்.

google photo.

இது உலகிலேயே மிகப் பெரிய கட்டடம் எனப்படுகிறது.
மத்திய கிழக்கில் இது மிகவும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகிறது. 130க்கம் மேலான விமானப்பயணங்களும் 220க்கும் மேலாக கால அட்டவணைப்படி சேரும் இடங்களாகவும் உள்ளது.

பிரயாண நெரிசலில், பரபரப்பில் 13வது இடத்தை உலகில் பெற்றது 2011ல்.

our photo.

4 மணி நேரம் நாம் அங்கு தங்கினோம்.

நிறைய தமிழர் ஆணும் பெண்ணுமாக விமான நிலையத்தில் வேலை புரிகின்றனர். எங்களைக் கண்டவுடனேயே தமிழா என்று கேட்டுப் பேசுகின்றனர். பெண்கள் குங்குமப் பொட்டோ, ஒட்டுப் பொட்டுடன் இலட்சுமிகரமாக விமான நிலைய உடையுடன் பணி புரிகிறார்கள். தமிழரைக் காண்பது அந்த அரேபிய விமான நிலையத்தில் மிகவும் சர்வசாதாரணமான காட்சியாக இருந்தது.

our photo. 
25 வருடத்திற்கும் மேலாக இப்படிக் காட்சியை நாம் காணவில்லையே! மகிழ்வாக இருந்தது.

our photo.

அழகு படுத்த செயற்கையாக பூந்தோட்டம் நீரூற்று செய்து வைத்துள்ளனர். மிக அழகாக, ஆடம்பரமாகவே விமான நிலையம் இருந்தது. என் கணவர் ”எண்ணெய்க் காசுகளைப் பிறகென்ன செய்வது! இப்படிக் கொட்ட வேண்டியது தானே!”…என்றார்.

our photo.

அதிகாலை 3 மணிக்கு விமானம் மலேசியாவிற்குப் புறப்பட்டது. பகல் 1.50க்கு கோலாலம்பூர் விமான நிலையம் சென்று சேர்ந்தது. இறங்கியதும் பயணப் பெட்டியைத் தானே தேடுவோம். எங்கு பெட்டிகளை எடுப்பது என்பதை அறிய முடியவில்லை. விசாரித்த போது ஒரு கோச் வண்டியில் ஏறி அடுத்த ரேமினலுக்குச் சென்று அங்குதான் பெட்டிகள் எடுக்க வேண்டுமாம். இது புது விதமாக எமக்கு இருந்தது. சுமார் ஒரு 5 ,10 நிமிட ஓட்டம். இறங்கினோம். இங்குதான் பாஸ்போட், மலேசியா அல்லாதவர் நிரப்பி வைத்த பத்திரம் முதலியவற்றைக் கொடுத்தோம். எதுவித தடைகளுமின்றி எமது பெருவிரல் அடையாளத்தை எடுத்த பின்பு மறு புறம் சென்றோம். காத்திருந்து உருளும் பட்டியலில் எமது பெட்டிகளை எடுத்தோம்.
மகனும்,மருமகளும் எம்மைக் கூட்டிச் செல்ல வந்திருந்தனர். ”…என்னப்பா இறங்கியவுடன் செக்கிங் பெட்டி என்றில்லாது குளம்பி – குட்டி ரெயின் ஏறியல்லவா இங்கு வந்தோம்!..” என்றோம். ”..அன்ரி உங்களுக்கு இதைக் கூற மறந்து விட்டேன்¨ என்றார் சாந்தி.
அங்கு இன்னொரு விமான நிலையமும் உண்டாம் அதில் இப்படியல்ல என்றார் சாந்தி. ”..சரி உடனே மகள் லாவண்யாவிற்கு இதைக் கூற வேண்டும் இல்லாவிடில் அவர்கள் வரும் போது எம்மைப் போன்று குளம்பி விடுவார்கள்..” என்றேன். கோலாலம்பூர் விமான நிலையத்திலிருந்து புச்சோங் எனும் இடம் ஒருமணி நேரப் பயணம். சாந்தியின் வீடு. அங்கு பயணமானோம்.

அங்கம் 3ல் சந்திப்போம்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
11-7-2012.

our photo.

 

                                      

4. பயணக் கட்டுரைகள்.(மலேசியா) – 1

 

4. பயணம் மலேசியா) – 1

கடந்த  வருட 2011 இறுதியில் …
ஓ!..மனம் நிறைந்த மகிழ்ச்சி!…அன்றாட வழமை வேலைகள், குளிர்…அனைத்திலுமிருந்து விடுதலை.
18 நாட்கள் பயணம் வெளிநாட்டில்.
முன்னரும் மலேசியா போயிருந்தோம். ஆயினும் ஆனந்தம்!….ஆனந்தமே!……

பயணம் புது சக்தி தரும்.
நயனம் நிறை மாறுகாட்சிகள்
சயனமற்ற பல புரிதல்கள்
வயன(ண)மான(விதமான) அனுபவங்கள்!
சுயமாயுன்னைப் புதுப்பிக்கலாம்!

அதிகாலை 6.15க்கு பயணப் பெட்டியை உருட்டியபடி சென்று நகரப் பேருந்தில் ஏறினோம்.

15 நிமிடங்களில் அது நமது ஓகுஸ் நகரப் பிரதான பேருந்து நிலையத்தை  அடைந்தது. 

அங்கிருந்து 7.15க்கு டென்மார்க் தலைநகர் கொப்பென்கேகனுக்குச் செல்லும் பேருந்தில் ஏறினோம். 

6, 7 நிமிடத்தில் அது டென்மார்க் கடல் வழி துறைமுகத்திற்குச் சென்றது.

அங்கு பேருந்தும் நாமும் பெரிய கடவைப் படகின் (பெஃறியின்) வயிற்றினுள் புகுந்தோம். பேருந்திலிருந்து இறங்கி படிகளால் ஏறி கப்பலினுள் சென்றோம்.
 

இது ஒன்றரை மணி நேர கடவைக் கப்பல் பயணம்.

உள்ளே அன்றாடம் வேலைக்குப் போய் வரும் மக்களே பாதிக்கு மேல் காணப்பட்டனர். காலையுணவை உணவகத்தில் வாங்கி உண்பவரும், தம் உணவுப் பொதியை உண்பவருமாகப் பலர். கணனி விளையாட்டு ஒரு புறம், தொலைக் காட்சி, செய்திகள் கவனிப்போர் என்று பல ரகம்.

உள்ளே சுற்றிப் பார்த்து நாம் நேரத்தைக் கழி(ளி)த்தோம்.

மறுபடியும் ஒன்றரை மணி நேர பேருந்துப் பயணத்தில் தலைநகர் காஸ்ருப் விமான நிலையம் அடைந்தோம்.

விமான நிலைய உணவகத்தில் எமது பொதியுணவை உண்டோம்.

பேருந்து ஓடும் திட்டப்படி வேறு வசதியில்லாததால் முற்பகல் 11 மணிக்கு வர வேண்டியிருந்தது.

ஆறுதலாக இருந்து பிள்ளைகளுக்கும் தொலை பேசி எடுத்துவிட்டு நமது பெட்டிகளை ஒப்படைத்து (அப்பாடா! இனி தூக்கிச் சுமக்க வேண்டிய தேவை இல்லை. அவை மலேசியாவில் கிடைக்கும்)

பயண அனுமதித் தணிக்கைகள் முடித்து உள்ளே சென்றோம்.

2.00 மணிக்கு எமரேட்ஸ் விமானம் எங்களைச் சுமந்து சென்றது.


நெருக்கமான இருக்கைகள் கொண்ட, கால்களை வசதியாக நீட்ட முடியாத பயணம். வானொலியில் தமிழ் இசை என்பதின் கீழ் தமிழ் பாடல்கள் காது ஒலிபெருக்கி மூலம் கேட்டபடி, பன்மொழித் தொலைக்காட்சிகளையும் பார்த்தபடி பயணம் நடந்தது. 6 மணி நேரத்தில் டுபாய் விமான நிலையத்தில் இறங்கினோம்.

தொடருவேன் அடுத்த 2ம் அங்கத்தில்.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
8-7-2012.

2. உணர்வுப் பல்லக்கு.

உணர்வுப் பல்லக்கு.

சில்லெனும் தென்றலாய் விரிந்திடுமுணர்வது.
அல்லும் பகலு மிதயத்தி லூர்ந்து
முல்லை மலராய்ச் சுகந்த மெழுப்புது!
தொல்லை யற்ற உலகிற் கழைக்குது!

பல்லக்கி லேறி யூர்வலம் வருவதாய்
உல்லாச வுணர்வைச் சிந்தையில் தெளிக்கிறான்.
செல்லக் கண்ணன் படுத்தும் பாட்டைச்
சொல்லவும் முடியுமோ! சொர்க்கமிதோ!

பழகு தமிழ்ப் பயிலரங்குப் படியின்
அழகு ”ங்கா… ம்மா”…அம் மொழியோ!
குழந்தை மொழியழகு கூறியும் முடியுமோ!
பழந்தமிழ் நூல் போன்றது பசுஞ்சிரிப்பு.

தெரிந்த சைகைகள் அரங்கேறிடும்.
ஈரமாக உயிர் போகு மழுகை.
ஓரமானால் துயில் – ஓயாதழுகை
வாயாரக் கதை வயிறு நிறைந்ததும்.

கை பிடித்தாலோ நெஞ்சு நிமிர்த்தி
பைய என்னை ஏந்திடு வென்று
மையல் செய்வதில் மாயக் கண்ணன்!
கையிலேந்தினாற் கொண்டாட்டம்! கொண்டாட்டம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
3-7-2012.

(அம்- அழகு)

                                             

 

Previous Older Entries