238. ஒவ்வாமையும், உவப்பும்…..

 

ஒவ்வாமையும், உவப்பும்…..

 

தவறென்று கருதுவதைத்
தவறென்று கூறாது
தடையிடும் மௌனம்
குடை விரித்து
எடை கூட்டுவது
பொய்மையினைத் தானே!

கருத்தில் தவறிருப்பின்
உருத்தாகாது மௌனம்!
உருத்தை உதறிடாது
விருப்பொடு எடுத்தாளுதல்
வருத்தம் ஆகாது.
பொருத்தமுடை தீர்மானமே!

உண்மையன்றி இதில்
உயர்ந்தோர், தாழ்ந்தோர்
பயந்தோர் பாகுபாடு,
ஐயப்பாடு தேவையில்லை.
மயக்கம் கொள்ளலோ
தயக்கமோ தேவையில்லை.

சாமரம் வீசுதல்,
சாய்ந்து ஆடுதல்,
சாவாகசமாய் எண்ணெயிடல்,
சரியாய்ப் பந்தமேந்தல்
உரிய புரிந்துணர்வல்ல.
அரிய தீர்மானமுமல்ல.

ஒவ்வொரு நிகழ்விலும்
ஒவ்வொரு  நிறமாகும்.
எவ்வளவோ காட்சியாகும்!
அவ்வளவும் நன்மைக்கே!
ஒவ்வாததும் புரியலாம்,
உவப்பதும் அறியலாம்.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
31-5-2012.

(26-6-2012 செவ்வாய்க்கிழமை ரி.ஆர்.ரி தமிழ் ஒலி வானொலி மாலை 19.00-20.00 மணி நேரக் கவிதை பாடுவோம் நிகழ்வில் இக் கவிதை என்னால் வாசிக்கப் பட்டது)

 

 

                                        

237. செய்தித்தாள்.

 

செய்தித்தாள்.

 

எழுச்சித் தகவல் இணைத்து
ஏற்ற களமாய்ப் பத்திரிகை
மாற்றுச் சிந்தனைகளும் தந்து
வெற்றி உலகு நோக்க
கற்றை மனவிருள் அகற்றுவது.

கூர்மைக் கருத்துக் கூறி
பார் ஒற்றுமை பேணி
யார் என்றாலும் பேதமற்று
வேர் போலெமைப் பிணைப்பது
நேர்மைச் செய்தித்தாள்.

குறிக்கோளுடை செய்தித்தாள்
செறிவுடை அறிவொளி ஏற்றும்.
அறிஞர்கள் அறிவு நீரில்
அமிழ்ந்து துளாவி உணர்தல்,
அறிதல், பெரும் பேறுலகில்.

உலகினொரு மூலை நிகழ்வைச்
சிலாகித்து மக்கள் நெஞ்சைச்
சிந்தி என்று தட்டுகை
சிறப்பான தகவற் சேவை.
சீரானது எமக்குத் தேவை.

விறகு வெட்டுவோர், வியாபாரி,
வீடு கூட்டும் மாந்தரும,;
நாடு காக்கும் கனவாரும்
கூடியிருந்து படித்திட
நாடி வாங்கும் செய்தித்தாள்.

கதை, நகைச்சுவை, ஓவியம்,
கட்டுரை, அறிவியல்,சிற்பம்,
கவிதை, சித்திரக்கதை, சரித்திரம்,
சிந்தனை, காலநிலை யோகமென
பந்தங்கள் பெருக்கி அறிவூட்டும்.

இணையப் பத்திரிகைகள் பெருகி
இணைத்து மக்களை ஊக்கும்
இணையிலாச் சேவை இது.
இயற்கை நிலை மாற்றும்
செயற்கை வேக உலகிது.

 

‘பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
29-5-2012

 

(ரி.ஆர்.ரி தமிழ்ஒலி வானொலியில் 29-5-2012 செவ்வாய் மாலை 19.00- 20.00 கவிதை பாடுவோம் நிகழ்வில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.) 

 

                                 

 

 

விருந்துபசரிப்பு. 27.

 

விருந்துபசரிப்பு. 27.

 

பெருந்தன்மையான மனிதனின் பண்பு  சமூகத்தில்
விருந்தினர் உபசரிப்பு வளமை.

இன்முகமாய், இதமாய் உபசரிக்கும் கலையே
அன்பான விருந்தினர் பராமரிப்பு.

மனையிலிருந்து விருந்து உபசரித்தனர் அன்று.
வினையோடு இதுவுமொன்று இன்று.

உபசரித்துச் சேர்ந்து உறவாடி உண்ணலில்
உறவு நன்கு விருத்தியுறும்.

முகம் கோணும் உபசரிப்பு உடனே
இனம் கண்டு விலகும்.

கொடுப்பது என்பது விருந்து உபசரிப்பில்
எடுப்பதான மனநிறைவுடைத்து.

ஆலயப் பூசையின் பின்னர் தரும்
அன்னதானமும்  விருந்து உபசரிப்பே.

இஸ்லாமியரும் பள்ளிவாசலில் கந்தூரி
சோற்றைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இளைப்பாற, இராத்தங்கல் உபசரிப்புக்காய் வீட்டோடு
இணைத்தனர் திண்ணையை முன்னோர்.

தண்ணீர் நிரப்பிய குடத்தை விருந்தோம்பிடவே
திண்ணையில் வைத்தனராம் முன்னோர்.
 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
27-5-2012.

 

                           

 

236. துணிவு.

துணிவு.

உலக முன்னேற்றம் துணிவில் பிறப்பது.
மனித வரலாறு துணிவிற் பிறந்தது.
மனித வாழ்வின் மகிழ்வூற்று துணிவு.
மனித தராதர ஏற்றம் துணிவு.
துணிவு நிலைத்திட இலக்கு ஏற்றது.
துணிவு ஒரு பரிமாணமும் அற்றது.

வாயாடுவோன் அகிலத்தில் துணிவாளன் அல்லன்.
வலிய உருவுடையோனும் துணிவாளன் அல்லன்.
துணிவுப் பலம் – ஓயா முயற்சி சிகரத்தினூர்.
துணிவின் எதிரி – பலவீனம், தயக்கம்.
துணிவின் விலங்கு – கோழை, அடிமைத்தனம்,
துணிவுடை வலியோன் தலைவன் ஆகிறான்.

துணிவின் ஏணி – சுயஆற்றல், சுயசக்தி.
துணிவாளன் – சுயகருத்தாளன், சுயமுடிவாளன்.
பெண்களை மதித்து மரியாதை செய்தல்,
மென்மையாய் குழந்தைகளை மதித்து நடத்தல்;
நொந்தவருக் குதவுதல், நேர்மையாளரை நேசித்தல்,
நேரான துணிவாளனின் நல்லிலக்கணம்.

நீதிக்குப் போராடல், நெருக்கடியில் நின்றுபிடித்தல்
நீதியாக நடத்தல், வாய்மை பேசுதல்,
நல்லதைப் பின்பற்றல், கெட்டதை எதிர்த்தல்,
நெறியான கொள்கைக்காய்ப் போராடல் துணிவு.

ஆக்க மனத்துணிவு வழி – ஒழுக்கம், நீதி.
ஆளுமை அபிவிருத்திக்குரியது – உடற்துணிவு.
அச்சம் தொலைக்க – நம்பிக்கை வளர்!
அச்சம் வென்ற உச்ச நிலையே துணிவு!
இச்சையுடைய  உடற் பயிற்சியாலும் துணிவு.
அஞ்சமாட்டான் வாய்மை, நேர்மையாளன்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-4-2004.

samme heading  – துணிவு.  another poem by me :  

https://kovaikkavi.wordpress.com/2014/02/03/308-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/

 

                                     
 

28. தொட்டிற் பாடல்

 

தொட்டிற் பாடல்

 

சாய்ந்தாடய்யா சாய்ந்தாடு!
சாதனை வீரனாய்ச் சாய்ந்தாடு!

சாதுரிய சீலனே சாய்ந்தாடு!
சாந்த ரூபனே சாய்ந்தாடு!

கட்டித் தங்கமே சாய்ந்தாடு!
பெட்டி வைரமே சாய்ந்தாடு!

கற்கண்டுக் கட்டியே சாய்ந்தாடு!
கருணை ஒளியே சாய்ந்தாடு!

தாமரை மொட்டே சாய்ந்தாடு!
தாவிக் குதிக்கச் சாய்ந்தாடு!

சின்னப் புறாவே சாய்ந்தாடு!
சிணுங்காது சிரித்துச் சாய்ந்தாடு!

                 —— வேதா……..

வண்ணங்களின் கீழ் வருகிறது இப் பாடல். தமிழில் 1000 வண்ணங்கள் உள்ளதாம். இப் பால்களின் ஓசை நயம் குழந்தைகள் செவிப் புலன் சீரடைய வழி வகுக்கும். இது பிள்ளைகளின் பிற்கால இசை வளர்ச்சியை, பாடல் (செய்யுள்) இயற்றலையும் வெகு இலகுவாகக் கற்க உதவிடும்.

மிகவும் முயற்சியுறாது கேட்டுணரும் இவை பிற்காலத் தமிழ் இசை, இலக்கிய வளத்திற்குப் பெரிதும் உதவியாற்றும்.

3 முதல் ஏழு வயதுப் பிள்ளைகளிற்கு இது நல்ல கருத்துணர்வைத் தட்டியெழுப்பும். சிந்திக்கும் திறனை உருவாக்கும்.

இவர்கள் இந்த இசையின் கவர்ச்சியால் சொல்லின் கருத்தறிவார்கள். சொற் கருத்தால் பொருளின் அறிவு பெறுவார்கள். அறிந்த பொருளுடன் அறியாத பொருள் பற்றியும் ஆராய முயற்சிப்பார்கள்.

வியப்பு, நேசம், பாசமிகு அன்புப் பாடல்களை இவர்கள் மிக விரும்புவார்கள்.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் தன் பாட்டி இலக்குமிப்பிள்ளை ஒரு பிள்ளையைத் தூக்கி வைத்துப் பாடிய பாடல் என்று

”…சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
   தாமரைப் பூவே சாய்ந்தாடு…”

எனும் பாடலை எழுதியுள்ளார். இவை மழலைப் பருவ இலக்கியங்கள் என்கிறார்.

பாடசாலைப் பருவ இலக்கியத் தமிழ் கற்க ‘ அழகியலுணர்வு ‘ பெற இப்பாடல்கள் அடிப்படையைத் தருவது என்கிறார். ஓசை நயம் கலந்த இந்தப் பாடல்களை இடைவெளியின்றித்  திரும்பத் திரும்பக் குழந்தைகள் கேட்கலாம். நாமும் பாடலாம். அவர்கள் அறியாது இவைகளை அறிவார்கள்.

மனம் முயற்சியின்றிப் படித்தலெனும் இத்திறனை அகநூலார் ”அசாக்கிரப் படிப்பு” என்பார் என்கிறார் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.
”குழவிப் பருவ இலக்கியப் பாடல்கள் எல்லாம் அசாக்கிரமயுருப்படுவனவாதலின் அவை செவ்விய ஓசை வளமுடையனவாக இருத்தல் வேண்டும்” என்கிறார் சோமசுந்தரப் புலவர்.

1955ம் ஆண்டுப் பதிப்பு நூலில் 35 ஆண்டுகளிற்கு முன்னர் இத்தகைய பாடல்கள் யாழ்ப்பாணத்தில் சொல்வழக்கிலிருந்தது என்கிறார்.
இதை நாம் இன்று கூறுவதானால் 92 வருடங்களிற்கு  முன் இவை யாழ்ப்பாணத்தில் சொல் வழக்கிலிருந்தது என்று கூறமுடியும்.

பிறநாட்டு மொழிகள், நாகரீகம் வந்து புக எமது பழைமைப் பாடல்கள் அழிந்துபட்டன. ஆயினும் எனது பாட்டிமார் இதைப் பாட நான் கேட்டுள்ளேன். இதை எம் பேரனுக்காக நான் எழுதினேன். அவர் சிறிது வளர, பாடிக் காட்டுவேன்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-5-2012.

இதோடு சேரும் ஒரு இடுகை. வாசித்துப் பாருங்களேன்!  மிக்க நன்றி.

https://kovaikkavi.wordpress.com/2010/12/12/179-%e0%ae%85%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

 

                             

25. இணையில்லாத் தமிழின் பாடு…

??????????????¸???????

இணையில்லாத் தமிழின் பாடு…

 

உயிரெழுத்து மெய்யோடு ஊடாடி
உயிர்மெய்யாய்ப் புணர்ந்து மொழியின்
உயிர் நாணாகிச் செங்கோலோச்சுகிறது.
தாய்மொழியே கலாச்சார வேர்மொழி.
மொழியும் மரபுமொன்றாய்ப் பிணைந்தும்
மொழியழியின் மரபழியும் விதியாம்.

கலாச்சாரத்தில் வாழ்வுச் சாரமிணைப்பு.
மூலாதாரப் பழைமை உதாரணங்கள்
சீலாச்சாரத் தாய்மொழிக் கொல்லையின்
மூதாதையர் அடிச்சுவட்டில் தொடர்கிறது.
புத்தகவனங்களில் வழமைகள் மேய்ந்து
புத்துருவான அடிப்படை எல்லையாகிறது.

இன்னுயிர்த் தமிழின் படற்கை,
தன்மை, முன்னிலையிலில்லை மாறுகை.
நெடில், குறிலாய்க் கூடித்தமிழ்
நெடுங்காலம் வாழுது பரவசமாய்.
பனை ஓலைச் சுவடியிலன்று
மின் கணனிச் சுவடியிலின்று.

இணையத்தில் தமிழணையுடைத்தும்
இணையிலாச் செந்தமிழ் இன்றியும்
நாட்டு வழக்கும், நளினமும்
கொட்டி நடைமுறைத் தமிழும்
பேச்சுத் தமிழென இணையம்
அச்சச்சோ!..அதன்…பாடு!….

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-3-2012.

 

Swirl divider v2

 

44. மயிலே! ஒயிலே!

 

மயிலே! ஒயிலே!

 

யிலாத கலைஞன் ஒயிலாக வரைந்தான்
ஒயிலே ஓயிலே மயிலின் தோகை!
துயிலும் மறக்கும் மயிலின் ஆடலில்.

ழுதிலா ஓவியம் எழுதாத காவியம்!
அழுதிடும் பாலனும் எழுந்தே பார்ப்பான்.
வழுவின்றி வரைந்தோன் உலகில் உள்ளானா!

கோலத் தோகையின் மாயக் கண்களழகு!
நீலக் கண்ணனை, நீலக் கடலை
நீல வானழகை ஏளனம் செய்யுமோ!

ங்கமுருக்கிய மரகதப் பொட்டோ!
மங்கா நீலம், பாதி நிலாவென
எங்களை இழுக்கும் இதமான தோகை.

குட்டிச் செண்டு தலைக் கிரீடமாய்
ஓட்டிய அழகு விநோதம்! – பறவைகளின்
கோட்டை அரசனோ மயிலே நீயும்!

பெண்ணைக் கவரப் பண்ணும் மன்மதம்
என்னமாய் விரிக்கும் தோகையும் நடனமும்!
கண்கள் மயங்கிப் பேடையும் சாயும்!

னந்த மழை வந்தாலும் நடனம்!
பேரானந்தக் கவர்ச்சித் தோகையின் காலம்
ஆண்டுக் கொருமுறை களன்று வீழுமாம்!

ந்தியத்தேசியப் பறவை மயிலை
மறந்தும் வேட்டை ஆடுதல் தவறு!
தண்டனைக் குரிய மகா குற்றமாம்!

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
14-5-2010.

 

                                            

37.அன்னைக்காக….

 

 

அன்னைக்காக….

 

மேகத்தில் மின்னும் நட்சத்திரம் – என்
தேகத்தை ஆக்கிய உயிர்ச்சித்திரம் -என்
தாகத்தில் பாலீந்த தாய்ச் சித்திரம்.
ஈகத்தில் நீயொரு உயர் சித்திரம்.

தேவையைக் குறிப்பால் உணர்ந்து
சேவையினை உவந்து செய்து
பூரண சேவையில் தினமும்
பூவுலகில் என்னைப் பாவையாக்கினாய்.

ன்னையென்ற பெயரோடு நீயே
தென்னையாய் உயர்ந்த தாயே
என்னைக் கண்ணாக நீயேந்தி
வண்ணமாய் வாழவைத்தாய் நன்றி.

பூரண உன் சேவைச் சிறப்பிற்கு
பூரிப்பான ஒரு சமர்ப்பணமிது.
பூவை உன் மகளின் கவிப்பூவிது.
சேவை உன் தாய்மைக்குச் சிறப்பிது.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
2005.

 

 
 

235. போர்த்திய கற்பனை….

 

போர்த்திய கற்பனை….

( கிழமையில் ஒரு நாள் அதிகாலை 6.30 மணிக்குப் பாலர் நிலையம் திறக்கும் நாளின் காட்சி, – கருவாக.)

திகாலை அழகு, இனிய மோனத்தில்
குதிநடையோடு வரும் தளிர் வதனங்கள்.
வெள்ளைநிறத் தளிரொன்று நீல விழிகளில்
கொள்ளையிடு மொன்று பசிய விழிகளில்.
கருமை நிறத் தளிரொன்று கரிய விழிகளில்
மஞ்சள் நிறத் தளிரொன்று மண்ணிற விழிகளில்

விழிகளின் அழகிற் பல வேறுபாடு
மொழிகளிலும் எத்தனை பல மாறுபாடு.
நிறங்களிலும் கூட இல்லை ஒருமைப்பாடு
குணங்களிலோ எல்லோரும் ஒன்று – பிள்ளைகள்
பிணங்கிப் பெற்றவரைப் பிரிகிறார் – தாக்கம்
இணங்கியும் பிரியாவிடையிறுக்கிறார் ஊக்கம்.

கோல விழிகளாற் கற்பனையிலென் கேள்விகள்
நீலவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
நீலவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
கருவிழிகளிற்கு வனப்பு நீல மையிலா!
கருவிழிகளிற்கு வனப்பு கரிய மையிலா!
மண்ணிறவிழிகளிற்கு வனப்பு மண்ணிற மையிலா!

குற்றால அருவியாகக் காலையிசை முன்னணியில்
கற்பனை வளர்ந்தது வனப்பு விழிகளால்.
வெள்ளை நுதலின் புருவ இடையில்
வெண்ணிலாத் திலகம் ஒன்று இட்டு
வட்ட விழிகளிற்கு வடிவாக மையிட்டுக்
கத்தரித்த கூந்தலிணைத்துக் கருநாகப் பின்னலிடலாம்.

பின்னலிற்குப் பூச்சூடி இடையில் ஒரு
வண்ணச் சேலை அணிந்திட்டால் அவள்
பண்டைத் தமிழ் வாலைக் குமரியே!
ஈர்க்கும் வெள்ளைப் பெண்களை முன்பு
போர்த்திக் கற்பனையால் அலங்கரித்து ரசித்தேன்.
பொற்சிலையாய்! அச்சாயொரு  தமிழ்ப் பெண்ணாய்!

பா ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-10-1999.

(லண்டன் தமிழ் வானொலியில் 3-11-1999ல் அறிவிப்பாளர் ஜீவா சுகந்தன் இதை வாசித்தார்.)

In Pthivukal web site  this poem .—–http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=852:-2&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

                                 

வேதாவின் மொழிகள். 19.

வேதாவின் மொழிகள். 19.

மனம் – ஊனம் – மனிதம்.  5-6-2006.

மனித மனம் ஊனமடைவது
மனிதநேயம் இழக்கும் போது.
உடல் ஊனம் போன்று இதயத்
திடலும் நிலையற்றுப் போதல்.
வெல்லும் பகுத்தறிவு மனமும்
நல்ல பரம்பரை மனதாலுமே
நோய் குணப்பட முடியும்.

நேர்மை –வாய்மை –பாவம். 22-5-2006

வாய்மை தாய்மை போன்றது.
நேர்மையாக வாய்மை பேசல் சொர்க்கம்.
ஆயினும் அது இலைமறை காயானது.
நிலைமை இலைகளை விலக்கிப் பார்ப்பது போலவே இருக்கும்.

பொய்மை பாவமின்றித் துருத்திக் கொண்டு முன்னே நிற்கும்.

நேர்மையாக வாய்மை பேசுபவனுக்கு உலகில் சொற்ப இடம் இருப்பது போலவே தெரியும்.

தனிமை.

இனிதான ஒரு வழியில் மனம் ஒன்றிடில் தனிமையும் ஒரு வித இனிமையே. இன்ப இசை,
அமைதி வாசிப்பு,
ஓவியம் வரைதல்,
கவி புனைவும் இனிமையே.

கொடுமை.
விரக்தி மனதிற்குத் தனிமை கொடுமை.
விசன மனதிற்குத் தனிமை கொடுமை.
விரோத மனதிற்குத் தனிமை கொடுமை.
விளைவு வில்லங்கம் தந்திடும் உண்மை.

அமைதிக்கேடு.   26-9.2004.

அகம் நிறை தாய்நாடு
அகம்பாவத்தால் கேடு.
அடிவானத்தில் அமைதிக்கோடு
அந்தகாரத்தில் ஆனந்தமேடு.

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
7-5-2012.

                               

 

 

Previous Older Entries