404. நான்

12079280_10206717205305952_6505992783110638265_nநான்

நான் யாரெனும் தன்னறிவு நன்மை.
நான் முயல் நான் எறும்பு
நான் திமிரற்றவள் மானம் உள்ளவள்.
நான் படித்தேன் யாழ் கோப்பாயில்.
நான் கட்டுரை கவிதைகள் எழுதுகிறேன்.
விண்மீன்களாய் என்னை சுற்றுது அவைகள்.
நான் உன் அன்பை நினைத்து
என்னை மறக்கிறேன் இது காதல்.

இயற்கை அழகில் தொலையும் நான்
இசையும் கவியில் மயங்கும் நான்
அசையும் மழலையில் உருகும் நான்
அகவும் மயிலை ரசிக்கும் நான்
நான் (தன்)முனைப்பு நீக்கும் நான்
தன்னான்ம உணர்வு பெறுவது தெளிவு.
தான் என்ற கர்வ அழிவில்
நான் என்பது இனிமை கீதமாகும்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
9-9-2015

நான் – 2

நான் ஒரு மனிதனின் நாண்.
நான் எனும் உணர்வற்றவன் வீண்.
நான் எது! நானிந்த உடல்
நான் யார்! நான் மனச்சாட்சி.
நான் தலைக்கன அகந்தையுடன் இணையின்
ஊன் தான் ஒரு மனிதன்.
நான் பிரமம் என்கிறான் வேதாந்தி
நான் பிரமம் என்பது யோகநிலை.

நான் என்பதன் அடையாளம் நாமமாகிறது.
நான் தன்னம்பிக்கைத் தூண் ஆகிறது.
நான் எனதென உரிமை கொண்டாடுகிறது.
நான் நீ சேர்ந்தால் நாமாகிறது.
பெயர் அழைத்து யார் என்பது
துயரின்றி சிலிர்ப்பாய் தான் ஆகிறது.
நத்தை ஓட்டினுள் ஒழிய இயலாது
செத்தை தான் நானற்ற பதிலானது.

நான் கட்டுப்படும் நேர்மை பண்பில்.
நான் விட்டுக் கொடுக்கும் அன்பினில்
மன்னிக்கும் மனம் கொண்ட நான்
மின்னிடும் சூரியக் கதிரான வான்.
நான் நீ சேர்ந்தால் காதல்
என் பெற்றோரின் நல் வளர்ப்பிலும்
வீண் வம்பற்ற சூழலாலும் பண்புடன்
நான் நல்லவன் ஆவது திண்ணம்.

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-9-2015

2004994hc5fmx1bz5

403. நம்பிக்கை கொடுங்கள்!

11940169_881805541873646_1024827662_n

படம் 29

நம்பிக்கை கொடுங்கள்!

எண்ணும் எழுத்தும் கண்ணாகும்
கண்ணெனும் மொழியை நாம்
மண்ணில் முதலில் எழுதினோம்.
இங்கு சிலேட்டுப் பலகையில்.
இப்படித் தயக்கம் வேண்டாம்.
” இ ” னா சுற்றிக் கட்டுமொரு
இடறல் எழுத்துத் தான்!
இசைவாக எழுதி முடிப்பானா!

முகத்தின் தயக்கம் எடு!
அகத்தில் நம்பிக்கையுடன் முன்னெடு!
சுகமாக எழுதுவாய் சரியாகும்!
தகவு தானாகச் சேரும்!
நம்பிக்கை கொடுக்காது ஆசிரியரும்
நழுவி அச்சுறுத்தல் கேடாகும்!
நகுதலும் நளினம் செய்தலும்
நல்ல வளர்ச்சிக்குக் குந்தகமாகும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-9-2015.

lines-d

தொலைத்தவை எத்தனையோ!.. (11)

untitled   11

அப்பொழுது நான் சிறுபிள்ளை பெரியப்பா எமது வீட்டிற்கு வந்த போது சொன்னார் பின்னேரம் எல்லாரும் வாங்கோ தேவாரம் படிக்க வேண்டும் என்று. அன்றிலிருந்து மாலை ஐந்து மணி போல முகம் கழுவி விட்டு நாமும் சகோதரர்களும். பெரியப்பா வீடு போய் அவர்கள் பிள்ளைகள் நாங்களுமாகத் தேவாரம் படிப்போம் திருவாசகமும் கூட. இப்படிப் படித்தது இன்றும் நினைவில் உள்ளது. 

நாம் இங்கு டென்மார்க்கில் முன்பு கூட்டுப் பிரார்த்தனை செய்த போது திருவாசகம் பாட எல்லோரும் புத்தகம் வைத்துப் பாடினார்கள். நான் மனதால் நினைத்துப் பாடினேன். வீடு வர என் கணவர் ‘ கேட்டார் எப்படியப்பா நினைவிருத்திப் பாடினாய!; என்று. ‘ எல்லாம் பெரியப்பாவின் நற் செயல். இன்றும் நினைவிருக்கு’! என்றேன்.
அது மட்டுமல்ல பாடசாலையில் ஏதாவது பரீட்சை என்றால் பெரியப்பா வீட்டுப் படியேறியதும்

Tamil_News_large_123988320150427055123

ஒரு தேங்காயைக் கையில் தந்து ‘ போகும் பொழுது முத்துமாரிக்குத் தேங்காய் உடைத்திட்டுப் போ!’ என்பார் பரீட்சை நன்றாக எழுத.

208980_130759123731912_703948728_n

(இது புதுப்பித்த கோயில். அன்று ஒரு சிறு கட்டிடமாக இருந்தது.)
அவர்கள் வீட்டிற்குப் போய் அக்கா சகோதரங்கள் சேர்ந்து தான் நாவலர் பாடசாலைக்குச் செல்வோம். பாடசாலை நடந்து போகும் தூரம் தான்.

OLYMPUS DIGITAL CAMERA

OLYMPUS DIGITAL CAMER

அக் காலத்தில் சித்திரைப் புது வருடம் வருகிறது என்றால் ஒரே ஆரவாரம். அப்பா வெளியே துப்பரவு செய்ய ஆரம்பிப்பார். அம்மா எமக்குப் புது ஆடைக்குத் துணிகள் எடுத்துத் தைப்பிக்கும் வேலைகளில் இறங்குவார்கள்.

சிப்பிப் பலகாரம் நீண்ட நாட்களிருக்குமாதலால் அது இருக்கும். வேறும் வசதி போல பலகாரங்கள் இருக்கும்.

murukuuraln

சிப்பி என்றால் மாவுருண்டையை உருட்டி உதவுவது. வாழைத் தண்டைப்  பிளந்து அதன் பிளவுகளில் உருண்டையை வைத்துக் குழித்து உருட்டுவோம். நல்ல கட்டம் கட்டமான மாதிரியில் மாவுருண்டை கீழே விழும், சோகி போல.

ஓரு மாதமும் ஆட்கள் புதிதாக வருவதும் (உறவு புதுப்பிப்பது போல) அம்மா அப்பா போவதுமாக இருப்பார்கள். ஓரு மாதமும் வெற்றிலைத் தட்டத்தில்

Areca-Betel_PlateDSC3543-blog

புது வெற்றிலை பாக்குச் சீவல்கள் சுண்ணாம்பு என்று எப்போதும் இருக்கும்

இங்கு தான் பாக்குவெட்டி பாவிப்போம். சாதாரண நேரத்தில் எம் வீட்டில் யாரும் வெற்றிலை உண்ணும் பழக்கமில்லை.

image-19ciseaux
இந்த பாக்குவெட்டியில் பாக்கு வெட்டுதலே ஒரு கலை. மற்றவர்கள் எளிதாகப் பாக்குச் சீவும் போது அதைச் சரியாக வெட்டிப் பழக வேண்டுமென்று மனதில் நல்ல உந்துதல் உருவானது. நல்ல ஞாபகம் மேசன் சவரிமுத்து அழகாக வெட்டுவார் வாயில் வெற்றிலையைக் குதப்பியபடி. (அவர் ஐமீன்தார் மீசை வைத்திருந்தார்.)
சும்மா இருக்கும் வேளையில் எப்படிப் பாக்கை சீவுவது என்று முயற்சித்து வெற்றி கண்டதுண்டு.
நாங்கள் புது வருடத்தன்றே குளித்து புத்தாடை அணிந்து முற்றத்தில் பொங்கலிட்டு

pongal-105

(ஆம் 3 கல்வைத்தே பொங்குவது) புக்கை சாப்பிட்டு எல்லா உறவு வீடுகளிற்கும் சென்று ( அதாவது எமது புது ஆடையைக் காட்டத் தான் – சிறு வயதில் வேறு என்ன எண்ணமுண்டு! இது தவிர!).
புது வருடத்திற்கு நல்ல நேரம் பார்த்து கைவிசேசம் வாங்குவது என்று முதன் முதலில் பணம் தொடுவார்கள். ( அது வரை பிடிவாதமாக பணத்தைக் கையால் தொடாமல் இருப்பார்கள்) அதாவது ராசியான நல்லவரிடம் பணம் கொடுத்து வாங்குவார்கள். அப்படியானால் வருடம் முழுவதும் நல்ல பணம் பெருகும் என்று ஒரு பழக்கம். இதிலெல்லாம் என்றும் எனக்கு நம்பிக்கை வரவில்லை. இதை இன்றும் கடைப் பிடிப்பதில்லை.
சிறு வயதில் அதி காலை முற்றம் கூட்டி , மஞ்சள் நீர், சாணி நீர் தெளிப்பது, புக்கை பொங்கிப் படைக்கும் போது தேவாரம் பாடுவது ஒன்றே எமது வேலையாக இருந்தது. பின்னர் வளர வளர

images (1)download (2)

ஆச்சி வீட்டுத் தொழுவத்தில் ஓடிப்போய் சாணி எடுத்து வந்து முற்றத்தில் வட்டமாய் மெழுகுவது என்றானது.

meluku edit

இன்னும் சிறிது வளர உலக்கை வைத்துக் கோலம் போடுவது, சூரியன் வரைவது, பொங்கல் பானை இறக்கி வைக்கும் இடத்தில் வண்ணமாய் கோலம் போடுவது என்று கற்பனை, கலைகள் வளர்ந்தன. என்ன இருந்தாலும் புது வருடமென்றால் மனதில் இந்த ஏற்பாடுகளால் மகிழ்வு பொங்கும் தான். எந்த நேரமும் ஆட்கள் வருவினமென்பதும் மகிழ்வு தான்.
மேலும் அடுத்த அங்கத்தில் தொடருவோம்.

hheee211

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4-10-2015.

Sparkle_up_your_life_with_happiness_have_a_Mastiful_Dhamakedar_Diwali_pp-ll

402. பவுருசம்(ஆண்மை) சௌந்தரம் (அழகு)

11910747_881781468542720_327804745_n

பவுருசம்(ஆண்மை) சௌந்தரம் (அழகு)

முகில் மறைக்கும் முழுநிலவாய்
துகில் மறைக்கும் முகமாய்
நாணத்தில் சிவக்கும் வதனம்!
காணாதது, கேட்காததாய் நீ !
செய்வதேது புரியவில்லை. நான்
மெய்யாக உன்னை நேசிக்கிறேன்.
மதுவேந்தும் கலசமாய் மனம்
இது கூடவா புரியவில்லை!

வா அருகே! வந்து
தா உன் பதிலை!
பார்வை பேசும் மொழியன்றோ
சீர் மேவும் காதல்!
ஒழித்து வைத்தது போதும்!
அழியா உண்மையை உணர்த்து!
மௌனம் உடை! பவுருசம்
சௌந்தரம் என்று காட்டேன்!….

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-9-2015

ssssd

401. சுதந்திரம் எங்கே!…..

ethu suthanthi

சுதந்திரம் எங்கே!…..

தட்டுத் தடையற்ற கடமை கண்ணியத்தால்
இட்டமுடன் விழிப்புணர்வு நேர்மையாய் வாழல்,
கட்டுப்பாடு எவ்வகைத் தடையின்றி வாழ்தல்
தெட்பமாகப் பேசுதல் சுதந்திரச் செயற்படல்.
கட்டுச் சுமையை ஒருவரில் ஏற்றல்
கூட்டில் அடைத்தல் சுதந்திரம் அழித்தல்.
தன்னிச்சைச் செயற்புhடு, பிறரை எவ்வகையிலும்
வன்முறைக்கு ஆக்காத வழிமுறை சுதந்திரம்.
நாட்டிற்குச் சுதந்திரம் நல்ல ஆட்சி.
காட்டிய சுதந்திரம் காணாமலடிப்பது சூழ்ச்சி.
எதையும் செய்தல் சுதந்திரம் அல்ல
எதைத் தேவையென்றறிந்து செய்தல் சுதந்திரம்.
உத்தம சுதந்திரம் விடுதலை என்போம்.
சித்திரம் தீட்டல் சுவரில் என்றால்
சுத்தியமாயது சட்டமீறல் சுதந்திரம் அல்ல.
சுத்த சுதந்திரம் நேர்மை இதயத்துள்.
(தெட்பம் – தெளிவாக)
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-8-2015
Divider-Red-3

400. நேரம் பொன் .

11911066_876881972366003_724950865_n

நேரம் பொன்

ஏது காப்பென உள்ளத்தில் குறை
பாதுகாப்பு இல்லா வாழ்வு முறை
அகத்தில் கிலி முகத்தில் வலி
செகத்தில் எத்தனை உள்ளங்கள் பலி!

நற்றவம் கொண்டு பெற்ற பிள்ளைகள்
பெற்றவர் வீடேகும் வரை, கல்வி
கற்ற பின் வேறு கலைகளும்
பெற்றிடும் ஒழுங்கு அமைத்தல் வேண்டும்.

வாசலில் காத்திருத்தல், வீதியில் திரிதல்,
வாசம் இழக்கும், பாழாக்கும் வாழ்வை.
வெறுமை மனதில் சாத்தான் குடியேறும்
சிறுமை அழித்தால் சிறப்புற உயரலாம்!

பெறுமதி நேரம் பயனாகும் முறையை
வெகுமதியாய்ப் பெற்றோர் பிள்ளைக்குக் கையளித்தால்
தகுதி வரும் தரமாய் வாழ!
நகுதலற்ற வாழ்வை நானிலம் போற்றும்!

பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
22-8-2015.

1424422_773891019303899_1021719375_n99

39. கலைகள்.

mine 12 066
இங்கு கூடியிருக்கும் கலைஞர்கள், கலையைப் போற்றுவோர், கலையில் பங்கு பற்றுவோர், பெற்றோர்கள், இன்று 25ம் ஆண்டு நிறைவு கொள்ளும் ஓகுஸ் சலங்கை நாதம் சங்கீத கானம் குழுவினர் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள். இவ் விழாவில் பங்கு பற்றுவோருக்கும் அன்பு வணக்கம்.
கலைகள் எனும் தலைப்பில் என்னை எடுத்துரைக்கும் படி வேண்டினார்கள். மேடைப் பேச்சில் எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனாலும் என்னால் முடிந்தளவு முயற்சிக்கிறேன்.

கலைகள்.

ஆயகலைகள் 64 கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை என்று சரசுவதி தாயை கல்விக்கும் கலைகளிற்கும் அதிபதியாக நாம் வணங்குகிறோம்.
இங்கு 64 கலைகள் எவையென நாம் பார்க்கவில்லை.
உணர்விற்கும் கற்பனைக்கும் முக்கியம் தரும் கவின்கலை ” ஏஸ்தெற்றிக் ஆட்ஸ்” என்றும் தொழில் நுட்பக் கலைகள் என்றும் இதைப் பிரிக்கலாம்.
கவின்கலையே அரங்காடல், எழுத்துக்கலை, கேட்கும் கலையென 3 பிரிவாகிறது. அரங்காடல் கலைகளே நடனம், இசை, நாடகம் என்று நாமின்று இங்கு கூடியுள்ளோம்.
எழுத்துக் கலை கவிதை, கட்டுரையாகவும், கண்ணால் பார்ப்பவை கட்புலக் கலைளென ஓவியம், சிற்பம், ஒளிப்படம் என்றாகிறது.
பணம் காலம் அதிகமாகச் செலவு செய்து கற்பவை நுண்கலைகள் என்கிறோம்.
கலை என்றால் என்ன?

மனித ஆக்கத் திறன் வெளிப்பாடு என்கிறோம். பார்ப்பவர் கேட்போரிடம் சொல்ல விரும்பும் தகவலை அழகுற, சீராக, சுவைபடக் கூறுதல், மீண்டும் மீண்டும் கேட்க பார்க்க ஆர்வம் தூண்டும் படைப்பாற்றல் திறன் தான் கலை என்று ஆகிறது. திறமையுள்ளவன் கலைஞன். தன் மனக் கண்ணால் காணும் காட்சியை வெளிப்படுத்தும் திறன் கலை.
20ம் நூற்றாண்டில் 9 கலைகள் தான் என வகுத்தனர். அவை
கட்டிடக்கலை – நடனம் – சிற்பம் – இசை – ஓவியம் – கவிதை – திரைப்படம் ஒளிப்படவியல் – வரைகதை என்பன.
கலைகள் வரலாற்றின் சாட்சியாக, வரலாற்றின் துணைப் பிரிவாக உள்ளது.
கற்கால மனிதன் கல்லிலே பொருட்களைச் செய்தான். அங்கிருந்து கலை ஆரம்பமானது. பின்பு தகரம் செம்பு இரும்புக் காலங்களென அவன் செய்த பொருட்களின் மூலம் எழுதிய வரைந்த உருவங்கள் மூலம் மனித வரலாறை கணித்து அறிய முடிந்தது. அவைகளை ஆவணப் படுத்தியதால் அவற்றை நாமின்று பார்த்து வாசித்து அறிகிறோம்.
கலையில் இன்னொரு புனிதத் திறன் இருக்கிறது. இன மத பேதங்கள் கடந்து கலையைக் கலையாக ரசிக்கும் உணர்வு உருவாகிறது.
அரங்காடல் கலையில் நடனத்தைப் பார்த்தோமானால்:-
இசை தாளத்திற்கு அமைய உடலை அசைத்து குழுவாகவோ தனியாகவோ உருவாக்கும் ஒரு கலை வடிவம். ஆதியில் ஒன்று கூடல், கொண்டாட்டம் – சடங்கு – பொழுது போக்கு என்று நடனம் உருவாகி இருக்கலாம். இதை அன்று கூத்து என்றே கூறினர். பின்னர் கடந்த 3 நூற்றாண்டு காலமாக ” சதிர்” என்று கூறப:பட்டதாம். சுமார் 60பது ஆண்டுகளாகத்தான் பரத நாட்டியம் என்று பிரசித்தம் ஆனதாக கூறப்படுகிறது.
கிறிஸ்துவிற்கு முன்னர் 3300 காலப்பகுதி எகிப்து கல்லறை ஓவியங்களிலும், பழைய குகைகளிலும் நடன ஓவியங்கள் காணப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரீகத் தொல் பொருட்களிலும் நடனம் ஆடும் உருவங்கள் காணப்பட்டன. மேலும் நோய்கள் குணப்படுத்த, சாமியாடுதல் வெறியாட்டு போன்றவற்றிற்கும் நடனம் முன்னோட்டமாக இருந்துள்ளது.

இன்னொரு கருத்தாக சிவன் – சிவபெருமானே நடனத்தைத் தோற்றவித்தவர் என்பார்கள். ஆடல் கலைக்கே அதாவது பரதத்திற்கு முன்னோடி நடராசப் பெருமான் என்றும் நம்புகிறார்கள். ஆகவே தான் பரதம் பயில்வோர் நடராசர் திருவுருவத்தை முன் வைத்தே பயிற்சியைத் தொடங்குவர். மேலும் ஆடல் அரங்குகளிலும் நடராசர் சிலையோ ஓவியமோ இல்லாமல் நிகழ்ச்சிகள் நடப்பதில்லை.  (உதாரணமாக இவ்வரங்கத்தையே பார்க்கலாம்)
அதனால் நடராசர், நடேசர், நடனசபாபதி, ஆடலரசன், ஆடல்வல்லான், கூத்தபிரான் என்ற பல பெயர்களுக்குரியவராய் திகழ்கிறார் நடராசப் பெருமான்.
புராணவியல் நீதியாக பரதமுனிவரால் நாட்டியம் எனும் நடனக்கலை தோன்றியதாக வரலாறு கூறுகிறது.

இதன் பயன்கள் பல . இதில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்.
1. மிக நுணுக்கமாக கண்கள், பாதங்கள், கையசைவுகள், உடலசைவுகள், மனதிற்கு மகிழ்வு தரும்.
2. உடலிற்குச் சிறந்த அப்பியாசமாகவும் அமைகிறது. நடனத்தில் ப – பாவம் என்றும், ர – ராகம் என்றும், த – தாளம் என்று 3 ஐயும் குறிப்பிடுவதால் பரதம் என்றும் குறிக்கப் பட்டதாம். நவரசங்களும் காட்டி ஆடும் அதிசயக்கலை. இது பொழுது போக்கானாலும் சம்பாத்தியமும் தருவதாக உள்ளது.
3. நடனம் ஆடுவதால் உடலும் உள்ளமும் ஒன்றாகிறது. ஒழுக்கப் படுத்தல் எனும் செயல் முறை நல்ல நடத்தைகள் உருவாக்க வழிகாட்டுகிறது. மனித மனம் சமூகம் சார்ந்த உள்ளமாக மாற்றப் படுகிறது. மன அழுத்தம் குறைக்கப் படுகிறது.;
4. நடனத்தின் உளவியல் – கல்விப் பயன்பாட்டைப் பார்க்கும் போது ஒழுக்கப் படுத்தல் எனும் குணம் தான் புலம் பெயர்வில் தமிழ் கலாச்சாரத்தை இழுத்து வைக்க உதவுகிறது.
5. மன உணர்வுகளை உடலசைவு ஆக்குதலே நடன உளவியல் ஆகிறது. உளப் பிரச்சனைகள் நடனத்தின் மூலம் இசைவாக்கப் படுகிறது.
ஆகவே மனம் கவரும் நடனத்தை கற்பது மனமகிழ்வு தரும். ஆண் பெண் பேதமின்றி நடனக்கலை சிறப்புடைத்து என்பதை மனதில் எடுப்போம்.
அடுத்து இசை – சங்கீதத்தை பார்த்தோமானால்:-
கட்டுப் படுத்தப் பட்ட – ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் என்கிறோம். ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஓலி இரைச்சல் என்கிறோம். நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது.
சொல்லுக்கு இசைய வைப்பது மனிதனை சகல உயிரினங்களையும் இசைய வைப்பது இசை. இதை சிரவணக்கலை என்றும் கூறுவர். மிகச் சிறந்த கலைகளில் இதுவும் ஒன்று.
பண்ணிசை அல்லது கர்நாடக இசை யே ஆதி இசை வடிவமாக இருந்தது. 2000 ஆண்டுகளிற்கு முன்னர் ஏழிசை என்று தோன்றியது. தமிழில், இசைக்கலை தொல்காப்பியம், சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றுவரை அரும்பி, மலர்ந்து வளர்ந்து வருகிறது. சங்ககாலம் தொட்டே இசைக்கு என, முறையான, நெறிப்படுத்தப்பட்ட இலக்கணம் உண்டு. இலக்கண நூல்களும் உண்டு. மொழியறிவும் இயற்கையறிவும் கொண்டு, ஏழுவகை இசைப் பெயர்களைப் பண்டைத் தமிழர் வகுத்தனர். அவை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன.
இவையே தமிழ் மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்ட போது இந்த ஏழு இசைகளை சுவரம் என்றனர். சட்சம் -ரிசபம் – காந்தாரம் -மத்திமம் – பஞ்சமம் – தைவதம் – நிசாதம் என்ற இந்த ஏழு சுவரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்றும் எழுத்தக்களால் குறிக்கப் பட்டது.
பண்டைய தமிழிசை களவாடப்பட்டு, சமஸ்கிருத மயம் ஆக்கப் பட்டு, கர்நாடக சங்கீதம் என அழைக்கப்படலாயிற்று. அது மெய்யாகவே, நம் தமிழிசை தான்? மராட்டிய மன்னன் சோமேசுவரன் தமிழிசையைக் கர்நாடக சங்கீதம் என அழைத்தான்; குறித்தான். தமிழிசை என்னும் வழக்காறு தடம் புரண்டு போயிற்று. கர்நாடக சங்கீதம் _ என்னும் வழக்காறு காலூன்றலாயிற்று.
பழம் தமிழ் இசையிலொன்றாக. கிராமிய இசை என்பதே கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென வகுத்துக் கொண்ட ஒரு வகை இசையாகும். இவற்றிற்கு நாடோடி இசை நாட்டுப் பாடல் எனற பெயர்களும் உண்டு.
தமிழரின் மரபு வழி இசைச் செல்வம் பழம் தமிழ் இசையாகும். சங்கத் தமிழே இயல் – இசை – நாடகம் என்ற 3 வகையாகும். இதில் வரும் இசையே பழம் தமிழ் இசையாகும்.
இசையோடு கூத்துமாக இசைக்கலை நுட்ப விளக்கங்கள் நான் முன்பு குறிப்பட்டது போல முச்சங்க காலத்தில் இலக்கணத் தமிழ் நூல்களில் விரிவாக எழுதப் பட்டுள்ளது.இவை சுமார் 3000 ஆண்டுகளிற்கு முன்பாகவே செவ்விய கலைகளாக விளங்கியது.
அடுத்து மிக முக்கியமாக இராக தாளத்தோடு மிகப் பழைமையாக நமக்காகக் கிடைத்தவை தேவாரங்களாகும்.
பண்கள் என்று பலவகை ராகங்களில் இவை பாடப்பட்டன. இசைக்கு அடிப்படை பண்களே.
கடவுள் வழிபாடு மூலம் தேவார திருவாசகம் பாடுதலும் நடனம் இசை மூலம் மன அமைதி மகிழ்வும் ஒழுக்க முறைகளையும் பயில முடியும்.
மன இறுக்கங்கள் விலகி மகிழ்வாக வாழ முடியும்.
இசை மனதை நெகிழ வைத்தல் என்பதும் மொழி கடந்த பொதுத் தன்மையே.
கலைகளாக இங்கு நடனம் இசை பற்றி சிறிது பார்த்தோம். சலங்கை நாதம் சங்கீத கானம் மேலும் தொடர்ந்து இனிமையாக இவ்வரங்கத்தில் முழங்கட்டும். இத்துடன் எனது உரையை முடிக்கின்றேன். இதுவரை பொறுமையாக இதைக் கேட்ட அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
19-9-2015

flourish-text-book-line-divider-writing

Previous Older Entries

Follow

Get every new post delivered to your Inbox.

Join 81 other followers