31. மல்லிகை மயக்கம்.

 

மல்லிகை மயக்கம்.

திஒளி மயங்கி கதிரிடை தொலைய,
புதிய இதழ் விரித்த புதுமலர்ச் சோலை.
புதிதான சுகந்தம் புது உணர்வு வேளை.
அதிகாலை வேளை, புது நாளின் காலை.

ச்சை வான வெண்ணிற நட்சத்திரங்கள்,
இச்சையுடன் பிறந்தகம் நழுவிய சித்திரங்கள்,
இசைந்து  நிலமகள் அணைத்த தேவதைகள்,
வசந்த வாரிசுகள், வசீகர மல்லிகைகள்.

ல்லிகைப் பந்தலோ! முத்துமணி மேகமோ!
இல்லற முன்றலில் மயக்கும் வசந்தமோ!
இல்லறச் சோடியின் மன்மத வில்வளைவோ!
கொள்ளை கொள்ளும் மதுர சுகந்தமோ!

ல்லிகை மழை மன்மதக் கணைகள்,
வெண்பனித் தூறலாய் தரணிமேல் கலைகள்.
வெள்ளைக் கம்பளம் பூமகள் பந்தம்.
அள்ளும் கைகளில் மென்மை சொந்தம்.

பார்த்துப் பார்த்துச் சேர்க்கும் மலர்களைக்
கோர்த்து மாலை தொடுக்கும் கோதையர்,
ஈர்த்து மயங்கி கூந்திலில் இணைப்பார்.
சேர்க்கும் குழலில் இணையும் சுகந்தம்.

கூந்தலில் முகம் புதைத்துக் கூடும் காளையைக்
காந்தமாய் இழுக்கும் மன்மத மலரே!
காந்த மின்சாரம் இளமொட்டு அழகிலா!
ஏந்துமுன் மேனியின் மெத்தை இதழிலா!

தொன்மையாம் உன் சுய சுகந்தமா!
வெண்மையாம் உன் வேடமில்லா நிறமா!
என்னையும் மயக்கும் மல்லிகை மலரே!
என்ன விந்தையுன் தூய்மைச் சுகந்தம்!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

(19-6 2001 ல் தமிழ் அலை – கவிதை பாடுவோமிலும்,
10-2-2003ல் இலண்டன் தமிழ் வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.)

*

மல்லிகை – (வேறு)

சுயநலமற்ற மல்லிகை
வியக்கும் சுகந்தம்.
இயல்பு மணம்
மயக்கும் மன்னனை
¤
உயர்ந்த கொண்டையிலே
இயலணி (இயற்கை அழகு) தரும்
பயனுடை மல்லிகை
நயனம் பெண்ணழகிற்கு.
¤
தயக்கமின்றி கூந்தலில்லிட
தூய உணர்வு
இயக்கும் மன்னனை
ஐயமின்றி நெருங்குவான்.
¤
கயவனும் மல்லிகையில்
வயகரவாய் மயங்குவான்
குயவனும் குறத்தியை
மயக்கிட கொடுப்பான்.
¤
தூயது மென்மையானது.
நியமமாய் மல்லிகையும்
கையளிக்கும் அல்வாவும்
தியக்கமான (மயக்கம்) மன்மதனம்பு.
¤
நயத்தகு பிலிப்பைன்சின்
யெயமுடைய தேசியப்பூ.
பயனாகும் மருத்துவத்திற்கு.
வியப்பு இருநூறினமுண்டாம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 10-8-2016

*

என் இரண்டாவது வலையில் மல்லிகை பற்றிய தலைப்பில் இன்னொரு கவிதையை இந்த இணைப்பில் காணலாம்.

https://kovaikkothai.wordpress.com/2017/12/23/7-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-85/

 

 

                            
          

வேதாவின் மொழிகள். 9

 

 

27-8-2005.
நல்ல போதனைகள் ஆசிரியராகும். நம்பிக்கை மனதின் வைரமாகும்.
மூன்றாமவரில் பிழை சுமத்தும் தன்மை தோன்றா நிலையே தர்மம் நிலையூன்றிய நிலையாகும்.

19-8-2005.
மனதில் நீதி, நியாயம் துளிர்க்கும் போது, தொல்லைகள் மனிதனைத் தெளிவாக்கும். மனதில் அதர்மம் தளிர்த்துச் செழிக்கும் போது, தொல்லைகள் அவனை நொறுக்கி விடும்.

தூரத்தில் மின்னும் நட்சத்திரங்களுடன் வானம் அழகிய நீலமாகத் தெரிகிறது. மனிதரும் தூரத்திலிருக்கும் போது நட்சத்திரக் கூட்டத்தில் பிரமாதமாகத் தெரிவது போல இருப்பார்கள். வாழ்வில் மிக முக்கியமான அனுபவம், அவர்களை அருகில் சென்று பார்ப்பது. தூரத்திலிருந்து  தெரிய முடியாத அவர்களது சாரம், ஈரம், பாரங்களை அருகினில் காண முடியும். அது ஏமாற்றமாகவும் இருக்கலாம், பிரமாதமாகவும் இருக்கலாம். அவர்கள் மறுபகுதியைக் காணலாம்.

11-9-2005.
எதிர்காலம் தெரியாது வாழ்வைப் புதிராக எடுத்துக் கொள்கிறோம். கனவுக் கதிர், கற்பனைக் கதிரில் நிமிர்ந்து நிற்கிறோம். கலக்கங்களில் அதிர்ந்தும், பலவீன மனதைத் துணிந்து எதிர்த்தும், அனுபவங்களில் முதிர்ந்து, தெளிந்தும், தன்னம்பிக்கை ஒளியில் காலங்களை எதிர் கொள்கிறோம். அத்தனையும் அனுபவம் எனும் பதத்துடன் அடக்கமாகிறது.

அவசர அவிப்புப் படையல் சுவைப் பதம் இழக்கலாம். அவகாச தரப் படையல் அவைமுகம் காணலாம்.

கதமாகப் புலம்பும் வார்த்தையின் பலன், இதமாக மொழியும் வார்த்தையின்  கூர்மையை விடக் குறைவானதே.

கல்லு, பொல்லு, கத்தி, துவக்கினால் மட்டும் தான் வன்முறையல்ல. காரமான ஒரு சொல்லும் ஆயுதமே. முன்னது உடலையும், பின்னது உள்ளத்தையும் காயம் செய்யுமன்றோ!

18-8-2004.
அன்னம் விடு தூது, புறா விடு தூது, கடிதம் விடு தூது, இன்று கணனி விடு தூதாச்சு. எத்தனையோ திருமண இணைப்பு இயந்திரமாகக்  கணனி.

பிறர் பேச்சையும், செயலையும் கூட விழி விரித்துக் கவனித்திட வேண்டிய உலகமாச்சு இவ்வுலகம். அத்தனை அசுத்தங்கள் மலிந்து விட்டது மனிதன் மனதில்.

புலம் பெயர்ந்த நாட்டு மொழி தெரியாது விழிப்பது வடிகட்டிய முட்டாள் தனம். விழி விரிய மகிழ்வதற்கு, வாரிசுகளின் அறிவு விழியைத் திறப்பதற்கும், மொழி அறிவு மிக அத்தியாவசியமான ஒன்றாகிறது.

27-9-2004.
குத்தல்.
இதமின்றிப் பொருட்களால் மொத்தல்,
பதமின்றி கதைகளால் சுத்தல்,
நிதமும் வார்த்தைகளால் கொத்தல்
மதம் (கொள்கை) இல்லாத வதம்
இந்த வாழ்வு தவறு.

நெல்லுக் குத்தல் நல்ல தேகப் பயிற்சி.
பல்லுக் குத்தல் பல்லிற்கு அப்பியாசம்.
கைக்குத்தல் அரிசி தேகத்திற்கு ஆரோக்கியம்.
தசைகளில் மெல்லிய ஊசிக் குத்தலும் நல் வைத்தியம்
29-9-2004.
நாடி.
அன்பு மனதின் அணைப்பு விலகும் போது
நாடி விழுவது (மனோ தைரியம் விழுவது)
போன்ற உணர்வு வரும்.
13-10-2004
விண்.
எண்ணத்தின் விண்ணப்பம் அதன் முயற்சி.
திண்ணமான பயிற்சி முழு வெற்றியானால்
மண்ணில் அனைவரும்  விண்மீன்களென
சாதனையில் தண்ணொளி வீசிடலாம்.
7-12-2004.
கண்ணி.
கண்ணியம் பார்வையில், செயலில் இன்றி
கண்ணி போடுவோர் வாழ்வில் பலர்.

 

வரிகள் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
26-2-2011.

                                                           

 
 

29. வானுயர வாழ்வோம்!

 pearents21

 

வானுயர வாழ்வோம்!

17, 24-3-2007.
வானுயரமாய் எம் மனதில் பெற்றவர்
தேனின் தித்திப்பாய் தினம் இனிக்கிறார்.
காலையில் எழுந்து கடமைகள் தொடங்கி
கணவன், பிள்ளை, குடும்பமாய் வாழ்வு.
கருத்துகள் கூறி கருமம்  ஆற்றும்
கச்சேரிப் பெண்ணாய் தாய் இன்று.
கடக்கும் பாதையில் மாற்றம் இன்று.
நோக்கம் மட்டும் தினமும் ஒன்றே

4-3-2007.
சேவல் கூவ விழித்துத் தூசிபடாது எம்மைக்
காவல் காத்துக் கண்ணியம் ஊட்டினார்கள்.
ஆவல் நிறைந்து எம்மை உயர்த்தினார்கள்.
காத்தல் தெய்வங்களாம் எம் பெற்றவர்களின்
வயோதிபக் காலத்தில் அவர்களுக்கு நிம்மதி
கொடுப்பதான கடமையை மனிதர் மறக்கலாகாது.
6-5-2007.
பால கால அனுபவங்கள் அற்புத பொக்கிசங்கள்.
அடியெடுத்து, தடுக்கி விழுந்து, கடித்து
கண்ணீர் விடும் போதும் கருணையாய்
அணைத்த பெற்றவர் பாசம் உலகில்
திடமாக நிற்கும் பாதப் பிடிப்பிற்கு அற்புதமானது.

7-4-2007.
ஏக்க வெயிலில் தவிக்கும் உயிர்களைக்
காக்கும் குடை நிழலாகப் பரந்து விரிந்து
காலத்திலும் ஆனந்தம் அளிக்கிறார் பெற்றவர்.
பெற்றவர், பிள்ளைகளின் நோக்கம் நிறைவேறினால்
இவ்வுலகு அன்புத் தோட்டம் தான்.

1-4.2007.
அம்மா என்ற முதல் வார்த்தையில்
அன்பும் அகிலமும் என் கண்ணில்.
அகரமும் அறிவும் அணைத்தது என்னை.
அறிவால் இணைந்து அருகில் துணையாக
ஆதரவாக என்றும் அப்பாவும் என்னோடு.

3-12-2006.
உலகெலாம் உயிர் நனைத்து
வலம் வந்து வளம் பெருக்கும்
பலமுடைய பெற்றோர் அன்பெனும்
பூமெத்தையின் சுகம் அறிவோர்
பூவாக அவர் மனதையும் என்றும்
உணர்ந்து போற்ற வேண்டும்.

25-11-2006.
நினைவுகள் உள்ளவரை பெற்றவர்
கனவுகள் தொடரும். கடமையாகக்
கனவுகளை பிள்ளைகள் நிறைவேற்றுதல்
கனமான கடனாகிறது. பிள்ளைகள்
கனவையும் பெற்றவர் ஆதரித்துக்
கைகொடுக்கும் கடன் வாழ்வுள்ளவரை உண்டு.

 

வரிகளாக்கம்
வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
24-2-2011.

படம் நன்றி – ஆனந்த விகடன்.

                                       

 

 

 

 

 
 

168. கலைக் கவியாக்கம்.

 

 

கலைக் கவியாக்கம்.

 

கல்விநிலையச் சீருடை அழகு.
செல்வம், வறுமைச் சமநடை அலகு.
சொல்லும் தலைப்பில் கவிதை தெளிப்பும்
நல்ல சீரடி நடைபாதை வனப்பு.

தலைப்புக் கொடுத்துக் கவிதை தெளிப்பு,
மலைப்புறுவார் மாந்தர் இயல்பு.
வல்லமைச் சொற்கள் வாலாயமானால்,
வில்லில் நாண் ஏற்றுதல் போலாம்.

வலைவீசி வகையாக மீன் பிடித்தலாக,
வட்டம், கட்டமாய் வளைத்துப் போடலே
தலைப் பெறிந்து கவிதை பிடித்தல்.
கலைச்சுவை –  இவ்வகைக் கவியாக்கமெனலாம்.

இலையிலிடும் உணவை ருசிப்பதான உணர்வு,
உலைப் பானை தலைப்பு என்றாகி,
உள்ளிடுதல் மரபு, புதுக்கவிதையாகி
அள்ளுதல் நற் கவிதைப் பொங்கலாகும்.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-2-2011.

In vaarppu.com —   http://www.vaarppu.com/view/2492/

 

                                            

 

13. பிள்ளையின் கத்தலும் கூச்சலிடலும்….

 

 

பிள்ளையின் கத்தலும் கூச்சலிடலும்….

 

திடீரென ஒரு பிள்ளை குழம்பி கத்தி கூச்சலிடுகிறது. குறிப்பட்ட  சப்பாத்தைப் போடு என்று தான் கூறினீர்கள். இதற்கு எதிர்ப்பு, பலத்த கத்தல், மறுப்பு. ஒரு பிள்ளை இப்படிக் கோபமடையும் போது முழுக் குடும்பத்தையே வேலை வாங்கிவிடுகிறது.

‘ என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்களும் பெலமாகக் கத்தப் போகிறீர்களா? குழந்தையைக் கவனிக்கப் போகிறீர்களா அல்லது அலட்சியம் பண்ணிக் காலுறையுடன் போகவிடப் போகிறீர்களா?’

”..பிள்ளையை நோக்கிக் கத்தாதீர்கள்!”..என்கிறார் முழுநேர பேச்சாளர், குழந்தைகள் பின்னணியில் பலகாலம் வேலை செய்த ஒரு டெனிஸ் விற்பன்னர்.

இப்படிக் கத்தும் பிள்ளையை அடக்க ஒரு தொகைச் சக்தியைப் பாவிக்க வேண்டி வரும். நாமே சத்தம் போடும் போது, பிள்ளை நம்மோடு நல்ல மாதிரி சேர்ந்திருக்கும் நேரமும் வடிந்து போய், கோபமான பிள்ளையோடு சேர்ந்திருக்கும் அசிங்கமான நிலைமை உருவாகிறது. இதனால் பிள்ளையுடன் வீட்டிலிருப்பதிலும் வேலையிடத்தில் அதிக நேரம் தங்கி வரலாம் என்ற சிந்தனையும் உருவாகிறது. வேலையிடத்தில் நாம் நினைத்தபடி நடக்க முடியும். விடயம் சரிவர விளங்காது பிள்ளைகள் சொல்வதைக் கேட்காது எதிர்ப்பார்கள். அவர்களோடு சேர்ந்திருப்பது எப்போதும் நாங்கள் நினைப்பது போல இருக்காது.

நீங்கள் எடுத்த ஒரு முடிவை, தீர்மானத்தை எதிர்ப்பதற்குப் பிள்ளைகள் கோபத்தை ஒரு எதிர்ப்பு வழியாக பாவிப்பார்களானால் நீங்கள் உங்கள் நிலைப்பாடில் இருந்து வழுவாது திடமாக நிற்க வேண்டும் என்கிறார். ஃபிளெமிங் பீட்டர்சென்.

நீங்கள் உங்கள் தீர்மான நிலையிலிருந்து பின் வாங்கினால் அது பரிதாபகரமானது. இப்படிக் கத்தி, கோபத்தைக் காட்டினாலோ, நீண்ட நேரம் தொடர்ந்து செய்தாலோ தன் விருப்பம் நிறைவேறி விடும் என்று பிள்ளைகள் எண்ணுவார்கள். அதனால் பிள்ளையிலும் பார்க்க உங்கள் நிலைப்பாடில் இருந்து விலகாது பிள்ளையிலும் பார்க்க திடமாக நில்லுங்கள்.

சிறு விடயங்களில் வேணுமானால் பிள்ளையைத் திருப்பதிப் படுத்த நீங்கள் மாறலாம். அப்படி மாறும் சந்தர்ப்பங்களில, ஆனால் கட்டாயமாக அன்று பிள்ளையைப் படுக்கப் போடும் போதோ, அல்லது சரியான ஒரு சமயத்தில் ” நான் யோசித்துப் பார்த்தேன் எனது முடிவு பிழை தான் என்று நினைத்து மாற்றினேன். நீ கோபப்பட்டுக் கத்தியதற்காக நான் மாறவில்லை ‘ என்பதை உறுதியாகக் கூறிவிட வேண்டும்.

சிலவேளை பிள்ளையின் கோபம் உங்களை எதிர்ப்பதற்காக அல்ல, இரவில் படுக்கைக்குப் போகும் நேரத்திலும் சிறிது கூடுதலாக விழித்திருக்கவோ, அல்லது சாப்பாட்டிற்குப் பின்னான இனிப்பு உணவு சிறிது கூடுதலாகப் பெறவோ என்றால்…..

 பெற்றவர்கள் அதைப் பண்பாக பிள்ளைக்கு எடுத்துக் கூறவேண்டும் இப்படிக் கத்திக் கூச்சலிட்டுக் காரியம் பெறுவது தவறு என்று.

அப்படியும் கேட்காது கத்திக் குளறிக் கூச்சலிட்டால் அதைக் கவனிக்காது, அலட்சியம் செய்ய வேண்டும்.  இல்லை உங்கள கண் முன்னால் வந்து நின்று நின்று கத்தினால் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு அவரை மாற்றி, அங்கிருந்து கத்தி முடித்து  அல்லது அழுயை நிறுத்தினால் தான் மேற்கொண்டு பேச முடியும் என்று திடமாக நடக்க வேண்டும். திருப்பித் திருப்பியும் நாம் அப்படிச் செய்து அவர் அழுகையை நிறுத்திய பின் இவை அழுது பெறும் காரியங்கள் அல்ல  என்பதை உணரப் பண்ண வேண்டும்.

நீங்கள் (பெரியர்கள்) தடுமாறினால் பிள்ளைகள் உங்களில் இடம் கண்டு கொள்வார்கள். இப்படிக் கத்தியே எல்லாக் காரியமும் பெறமுடியும் என்று முடிவு கொள்வார்கள்.

பிள்ளைகள் உங்கள் நெருக்கத்தையும் உங்கள் கவனிப்பையும் எப்போதும் விரும்புவார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
23-2-2011.

 

                                        

10. தாயின் ஆத்மா சாந்தியடைக!

 

 

 

தாயின் ஆத்மா சாந்தியடைக!

 

மற்றவரால் தர முடியாத
மாபெரும் அன்பின் உரித்தாளர்
பெற்றவர் எமது பெரும் சொத்து.
பார்க்காது அவரோடு பேசாது
பேதலித்து வாழ்ந்த காலத்தை
பெரிதாய் எண்ணிக் கலங்காதீர்!

ஊரே கூடி விடையிறுத்தல்
உனக்குக் கூடக் கிடைத்திடுமோ!
உன் தாய் உனக்கு மட்டுமல்ல!
ஊரிற்கு! பெரும் சமுதாயத்திற்கு!
ஆறு! மனமே ஆறு!..அது
அவரது உயர் நிலை ஆறு!

பெரும் சமூகம் ஒன்றாகப்
பிரியாவிடை தரும் மாபெரும்
பெருமையையெண்ணி மனம் ஆறு!
நாளை நமது நிலையெதுவோ!
அழியும் உயிர் பெருமையோடு
அழிவது பெரும் பேறென ஆறு!

ஓயா மன உழைச்சலின் இடைவேளையிது.
தாயின் உடல் உபாதை நீங்கியது.
தக்கபடி பேணப்பட்டுப் பாதுகாப்பாய்
தாயின் ஆத்மாவும் அமைதியடைகிறது.
தாயின்  பிள்ளைகள் உறவுகள்
அனைவருக்கும் அமைதி கிட்டட்டும்
     
தாயின் ஆத்மா சாந்தியடைக.

 

பா ஆக்கம்
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
21-2-2011.

In  alaikal.com

http://www.alaikal.com/news/?p=58075

 

                                       

 

 

12. வேதாவின் வலை – ஒரு கண்ணோட்டம்.

 

 

வேதாவின் வலை – ஒரு கண்னோட்டம்.

வணக்கம் இணையத் தமிழுலகப் பெருமக்களே!

இன்று 20-மாசி 2011 காலை 9.15 – டென்மார்க் நேரம்.
எனது வலை தொடங்கி சுமார் 7 மாதங்கள் சென்றுள்ளது.

இதுவரை – இந்த நிமிடம் வரை 6347 விருந்தாளிகள் எனது வலைக்கு வந்து பார்த்துச் சென்றுள்ளனர். இதில் பின்னூட்டம் இட்டவர்கள் தொகையோ ஆக 186 தான். ஏனோ தெரியாது வருகை தருபவர்கள் அனைவருமே தமது கருத்தை வலையில் பதிவது இல்லை. இது ஒரு பின்னடைவான நிகழ்வு தான்.

மொத்தமாக 489 ஆக்கங்கள் வலையில் ஏற்றியுள்ளேன். 6347விருந்தினர் – எனது வருகையைத் தவிர்த்து கணக்கெடுத்தது என்று வேட் பிறெஸ் கூறுகிறது.

ஆக்கங்களை வலையில் ஏற்றும் போது, எனது 50வது ஆக்கம்,எனது 100வது ஆக்கம் என்று நான் கொண்டாடவில்லை. நேரம் கிடைத்த போது இதுவரை ஏற்றிய ஆக்கங்கள்; தான் 489.
கவிதை – இதை பாமாலிகை – பாக்களின் மாலை என்று ஏற்றுகிறேன் அவற்றையும் பிரிவு பிரிவாக வகுத்துள்ளேன். கவிதையைக் கதம்பமாக, அதாவது எல்லா வகைக் கவிதைகளையும் கலந்து போடுவதை இப்படி குறிப்பிட்டேன். பின்பு பல பிரிவாக வகுத்தேன்.

பாமாலிகை (கதம்பம்)      222.
பாமாலிகை (பெண்மை)     10
பாமாலிகை (தாய்நிலம்)     28
பாமாலிகை (காதல்)              20
பாமாலிகை அஞ்சலி, வாழ்த்துப்பா 29.  (இன்பம், சோகம் கலந்தது….)
பெற்றோர் மாட்சி          28 (இதிலும் கவிதைகள், பெற்றோர் பெருமை வரிகள்)
சிறு கட்டுரைகள்           23  (பல வகைக் கட்டுரைகள்)
வேதாவின் ஆத்திசூடி  12  (உயிரெழுத்து மட்டும் இப்போதைக்கு உண்டு)
பிரபலங்கள்                           9  ( இன்னும் வரும்…..)
பயணக் கட்டுரைகள்       46.  (முழுவதுமாக 2 பயணம். இன்னும் வரும்….)
சிறுவர் பாடல் வரிகள்    12.
சிந்தனைச் சாரல்            8  (முழுவதுமான எனது சொந்தச் சிந்தனைகள்.)
ஆன்மிகம்                          16  (இதுவும் என் சொந்த வரிகளே)
கவிதை பாருங்கள். (படம்-கவிதை) 9.
கவிதை கேளுங்கள்             3. (காணொளியாக, என் குரலில், இன்னும்…. )
எனது புத்தகங்கள்                 4

இப்படி ஒரு கண்ணோட்டமிட எண்ணம் வந்தது. இதில் பார்வையாளரின் கருத்துப் பதிவுகள் குறைவு என்பது குறையாகவே உள்ளது. இது நேயர்களாக உணர்ந்து செய்ய வேண்டியது. எல்லாம் நல்லபடி செல்லும் எனும் நம்பிக்கையில் தொடருகிறேன் என் பணியை.

உங்கள் ஆதரவை என்றும் வேண்டுகிறேன். பின்னூட்டம் இட்டவர்களுக்கு மனமார்த்த நன்றிகள். அது எமக்கு புது உற்சாகம் தருவது. சோர்வை அகற்றுவது.
வருகை தருவோருக்கும் அதே மகிழ்வு நன்றிகள் உரித்தாகுகிறது.  நன்றி நேயர்களே.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-2-2011.

 

                                                      

 

12. ஈ..அடிச்சான் கொப்பி……

 

 

..அடிச்சான் கொப்பி……

 

கண்களை மூடினால் உலகே இருண்டதாக எண்ணும் பூனையாக இன்றி சரண் யார் எது செய்தாலும் அதையே தானும் செய்து முடிக்கும் கெட்ட குணம் கொண்டவனாக இருக்கிறான். ஆனால் இவன் மிகத் திறமைசாலி. தன் சுய சிந்தனையில் மிக நல்ல சிறந்த செயல்களைச் செய்யலாம்.
 

இது சரணின் மகன் சாந்தனுக்குப் பிடிக்கவேயில்லை. மற்றவனைப் பார்த்து செய்வதை  ‘ஈ அடிச்சான் கொப்பி’  என்று கூறும் வழக்கம் உண்டு.

 

ஒருவன் மற்றவனைப் பார்த்து எழுதினானாம்.  இரவு, முதலில் எழுதியவன் எழுதும் போது பூச்சி ஒன்றும் அதில் விழுந்து இறந்து விட்டதாம் அப்படியே கொப்பியை மூடிவிட்டான். பூச்சியும் செத்து எழுத்தோடு ஒட்டுப்பட்டு விட்டது. பார்த்து எழுதியவன் அதே போல பூச்சியையும் தேடி தனது எழுத்தோடு ஒட்டி விட்டானாம். (ஈ அடிச்சான் கொப்பிக்கு வழங்கும் கதை இது).

 ‘என்னப்பா! நீங்கள்! ..அதே போல ஏன் செய்ய வேண்டும்?..’ என்று தடுத்தாலும் சரண் கேட்பதேயில்லை.

சரண் பொறாமைத் தினவெடுத்து, ஆற்றாமை, பொறாமைச் செங்கதிர்ப் பரப்பலில் வெந்து போகிறான். பிறர் செய்வதை அப்படியே தானும் செய்து மனம் ஆறுகிறான், தன் திறமையை உணராது.
இதை எண்ணி எண்ணி சாந்தன் வெட்கக் குமிழிகளில் தன்னை அமிழ்த்துகிறான்.

பெற்றவரின் நல்ல செயல்களைப் பிள்ளைகள் பின்பற்ற வேண்டும். இங்கு பெற்றவர் செயலால் குறுகிவிடுகிறான் சாந்தன்.

‘…அப்பா! உங்கள் திறமை சிறந்தது. உங்களால் முடியும். புதிது புதிதாக ஏதாவது செய்யுங்களப்பா!…கண்ணன் மாமா, சுந்தர் மாமா செய்வதையே நீங்களும் செய்ய வேண்டாமப்பா!..’ என்று ஓதியபடியுள்ளான் அப்பா மாறுவார் என்ற நம்பிக்கையில்…….

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-2-2011.     

In Anthimaalai web site:-    http://anthimaalai.blogspot.com/2011/12/blog-post_05.html 

 

                            

28. எம்மை ஆக்கியவர்.

 

 

எம்மை ஆக்கியவர்.

 

நாங்கள் பெற்றோர் என்ற கொடிக்காலில் பாங்காகச் சுற்றி வளர்ந்த கொடி மலர்கள். தேங்கிய அன்பில் தீதும் நன்றும் அறிந்தோம். எங்கும் இவ்வுறவின் சிறப்பான அடித்தளம் அமைந்தால் பூங்காவனமான உறவமையும். எங்கும் எப்போதும் பேதமற்றது பெற்றோரின் அன்பும், ஆதரவும்.

 எண்ணத்தில் ஒரு சுகம் தருவது பெற்றவர் சொல்லும் இன்ப மொழிகள், அவர்கள் அன்புச் செயல்கள். அச்சுறுத்தல், பயமுறுத்தலின் தாக்கங்கள் அதிக நன்மை தருவதில்லை. நன்மையான எண்ணத்தை எண்ணி அதன் சுகமான நற்பாதையில் நடப்போம்.

மனநிறைவோடு தான் பெற்றவர் எம்மை வளர்க்கிறார். மனம் நிறைந்து பிள்ளைகள் இதை ஏற்றக் கொள்வதில்லை. மனநிறைவோடு பிள்ளைகள் இதை ஏற்றுக் கொள்வதில் தான் பெற்றவர் நிறைவு தங்கியுள்ளது.

3-4-2004.
தேவையைக் குறிப்பாலுணர்ந்து, சேவையினை உவந்து செய்து பூவுலகில் என்னைப் பாவையாக்கினாய். உன் பூரண சேவையின் சிறப்பிற்கு உனக்காகப் பூரிப்புடன் சமர்ப்பிக்கிறேன் பூவை என் கவிப்பூவை அம்மா.
அன்னை எனும் பெயரோடு நீயே தென்னையாய் உயர்கிறாயே! என்னை உலகினுக்குத் தந்து, கண்ணாய் கருதி நீயேந்தி, வண்ணமாய் வாழவைத்தாய் அன்னையே உனக்கு நன்றி!

2-10-2004.
உன்னைக் காணும் போதெல்லாம் உருகியதே என் நெஞ்சம். பனையளவான உன் சேவைகளையெல்லாம் பதமாக அனுபவித்தது கொஞ்சமோ! நினைத்து நினைத்து உருகுவதல்லாமல்  அம்மா! அதை மறக்குமோ என் நெஞ்சம்.

3-10-2004.
பூவாய் முகர்ந்து பூப்போல காத்தாயெமை. பாராட்டி வளர்த்தாய்! தரணியில் நீ பாவை விளக்காய்  என் நெஞ்சில் பரந்து ஒளிர்கிறாயம்மா!

27-8-2005.
குழந்தைப் பருவத்தில் பெற்றவர் வழங்கும் அதிகார நிலை புழங்கும் அடக்கு முறை, குழந்தை மனதில் புழுக்கம் உருவாக்கி, அழுக்குப் படிய வைத்துக் கிருமிகளை உள்ளத்தில் நிறைத்து விடும். குழந்தை பெரியவரானதும் உறைந்த கிருமிநிலை உயிர்த்து தனது செயற்பாட்டை ஆரம்பித்துவிடும். அத்துடன் பெற்றோரின் வாழ்க்கை முறையும் குழந்தையின் மன வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.

பாரில் பெற்றவர் அன்பு தூரிலிருந்து நாம் பெறும் பொக்கிசம். யாரும் ஈடு செய்ய முடியாத பாசம். வேரினைக் காத்தலும், ஊரிலும் சிறந்து வாழ்தலும், அனைவரின் கடனென அனைவரையும் வாழ்த்துகிறேன்.

 

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.

 

                                 

                                                    

 

30. பூவும் வண்டும்.

 

 

பூவும் வண்டும்.

 

பூரித்த அழகு விரியலில்
பூவின் மதுர சுகந்தத்தில்
தாவிடும் வண்டு காதலிலே.

வண்டின் தாவல் விருப்பின்றேல்
வலிந்து போர்வை போர்த்தும்
வசதி நந்தவன மலருக்கில்லை.

மானிடப் பெண் மலரின்
மகத்துவ வசதி பகுத்தறிவு.
மனசில்லாவிடில் தடையிடுவாள்.

வண்டாடிய மலர் காற்றிலே
கொண்டாடுதோ! திண்டாடுதோ!
பண்பாடது தேன் பருகுதல்.

வண்டின் கம்பீர அமர்வில்
உண்ட தேன் இலயிப்பில்
நின்டுறாடுது மலர் தென்றலிலே.

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
18-2-2011.

வித்தியாசாகரின் குழுநிலை முகநூல் பக்கத்தில் இடப்பட்டது.

In Muthukamalam.com………(link)

http://www.muthukamalam.com/muthukamalam_kavithai636.htm

                                          

Previous Older Entries