234. பூவாய் மலரும் நாள்!

பூவாய் மலரும் நாள்!

பூவாய் மலருமொரு நாள்
பூமியில் இந்த நாள்
பூவாசனை வீசட்டும் செயலில்.
பூரிப்பை அள்ளித் தரட்டும்.

புது அனுபவம் காத்திருக்கும்
புதுச் சரித்திரம் தொடங்கலாம்.
பூத்திடும் பல முயற்சிகள்
பூரணத்துவம் ஆகலாம் நிதம்.

நீவிடும் பூபாளமாய் விரியும்
நாள் எம்மை ஆள்கிறதா!
நாளை நாம் ஆள்கிறோமா!
கோள்களின் வெற்றி வினையா!

புதிய உயிர் பிறக்கும்.
புன்னகை, புளகாங்கித நாளாகும்.
புகழுடை உயிர் மறையும்
புதிராகித் துயில் துறக்கும்.

வமானம் அள்ளி வராத
சுயமானம் காக்கும் ஒரு
வெகுமானம் நிறையும் நாளாகிக்
கவலைகள் தெரியாத நாளாகட்டும்.

ருவியென அறிவுச் சாரலான
அரும் வாசிப்பில் மூழ்கும்
ஒரு விவரத்திரட்டான
பெரும் அறிவு நாளாகட்டும்.

நுரை பொங்கி அருவருப்பூட்டி
திரையிடும் பல வினைகளிற்கு
இரையாகும் நாளாகவின்றி
இரையாகாத நன் நாளாகட்டும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-5-2012.

அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்.

(8-5-2012 ரி.ஆர்.ரி.தமிழ் ஒலி வானொலியில் இக்கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.)

http://www.vaarppu.com/view/2641/

                                

27. மோகன முறுவலில்…..

 

மோகன முறுவலில்…..

 

மோகன முறுவலில் மயங்காதார் யார்!…..

 

”ஹாய்!…எனக்கு உன்னைப் பார்க்க முடிகிறது. உன் குரலைக் கேட்க முடிகிறது. எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும்.  உன்னோடு சேர்ந்து இருப்பது மிக இன்பமயமானது…”

பச்சிளம் பாலகன் வள்ளுவன் இந்த உலகத்திற்கு வந்து நான்கு கிழமைகள் தான் ஆகிறது. சிறு புன்னகை மூலம் தான் அவனால் செய்தி தெரிவிக்க முடியும். மேலே கூறிய தகவலை அவன் அப்படித்தான் தெரிவித்தான்.

அந்த மின்னல் கீற்று முறுவலைப் பார்த்து மனமிளகி மறுபடியும் அவனைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள். நீங்கள் ஆனந்தத்தால் நிரம்பி வழிவீர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

தனது குழந்தையின் முதற் சிரிப்பால் பெறும் அனுபவம் மனித வாழ்வில் ஒரு மிகப் பெரிய அனுபவமாகும்.

ஆரம்பத்தில் அந்த மோகன முறுவல் ஒரு ஓட்டமானதாகத்,  தாயானவளுக்கு நிச்சயமில்லாததாக,  பிள்ளை சிரிக்கிறானா இல்லையா என்று உறுதியின்றி இருக்கும்.
திடீரென எந்தவிதத் தடுமாற்றமுமின்றி உங்களைப் பார்த்துத் தான் அவன் சிரித்தான் என உணர்வீர்கள்.

குழந்தையின் முதற் சிரிப்பு சிறு சத்தங்களை உருவாக்கி இது ஒரு விளையாட்டுப் போன்று தோன்றும்.

உங்கள் கரத்தில் பிள்ளையைச் சாய்வாகத் தூக்கி நிமிர்த்திக் கண்களோடு கண்களின் தொடர்பைக் கொள்ளுங்கள். மிக இன்பமாக நிறையச் சிரிப்புகள் தொடரும். ஒரு மாதத்தினுள் குழந்தையின் சிரிப்பு மிக வளர்ச்சியடையும். இச்சிரிப்பு மிக நீளும். குழந்தையின் முகத்தையும் ஒளியடையச் செய்யும்.

அன்றாட வாழ்க்கைக் கடன்களால் நீங்கள் அமுங்கி, ஒளியிழந்து இருந்தாலும், கோபமாக இருந்தாலும் அந்தக் குழந்தைச் சிரிப்பை நீங்கள் பார்க்கும் போது ஈடு இணையற்ற ஆனந்தமடைவீர்கள்.

மறுபடி ஒரு பெரிய சிரிப்பைக் கொடுப்பது தவிர உங்களிற்கு வேறு வழியே இல்லை. உங்களால் எது விதத்திலும் இதிலிருந்து தப்பவே முடியாது.

ஒரு மாதக் குழந்தையான கைக்குழந்தை நீங்கள் தான், தன் பெற்றோர் என்று உங்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை.

மற்றைய பெரியவர்களையும்,  தன் கண்பரப்பில் விரிபவர்கள் அனைவரையும் பார்த்துச் சிரிக்கிறது.

ஏனெனில் அது ஒரு வகையான பேசப்படும் குரல். தொடர்பாடல் முறை.

தன்னைப் பற்றிய கவனத்தை உங்களிடம் எழுப்பி, தன்னைப் பார்க்கச் செய்கிறது.
உங்களுக்கே உங்களுக்காக பிள்ளை சிரிக்க நீங்கள் நான்கிலிருந்து ஏழு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

சிரிப்பெனும் தூண்டிலால் ஒரு குழந்தை ஆறு மாதத்திற்குள் யாராயிருந்தாலும் எல்லோரையும் தன் பரப்பினுள் இழுக்கிறது.

ஏழு மாதத்தின் பின்னரே நெருங்கியவர்கள், தனக்குத் தெரிந்தவர்கள் என்று அடையாளம் கண்டு சிரிக்கிறது.
வெளியார் யார், தனது நெருங்கியவர் யார் என அடையாளம் புரிகிறது.

நன்கு சிரித்து விளையாடிய பிள்ளை ஏன் திடீரென தெரியாதவர்களைப் பார்த்து ஒரு வித்தியாசமான நிலையில் ஓதுங்குகிறது என நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இது ஒரு சாதாரண நிலையிலான உங்கள் பிள்ளையின் முன்னேற்றமே.
நீங்கள் இதையிட்டு மகிழ வேண்டும். அதை மதிக்கப் பழக வேண்டும்.
பிள்ளை ஒரு படி முன்னேறியுள்ளான், வளர்ந்துள்ளான் என்று நீங்கள் மகிழ வேண்டும்.

 

ஆக்கம். வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-10-2004.

( இது யெர்மனிய இந்து மகேஷ் ன் ”பூவரசு” இனிய தமிழ் ஏடு- கார்த்திகை, மார்கழி 2004 இதழில் பிரசுரமானது.)

  

 

                                  

233. மலர் தியாகம் செய்வதில்லையே!

 

மலர் தியாகம் செய்வதில்லையே!

வாழ்க்கை உடன்படிக்கை உயிர்ப் பிரிவால் அறுகிறது.
தாழ்விது வல்லவென்று மனமேற்க மறுக்கிறது.
பிரிவு – நிச்சயமது தெரிந்து வருவதல்ல.
சரிவென்றதை வரித்தல் வாழ்விற்கு முறையல்ல.
துணைவன் மறைவோடு தன் வாழ்வே முடிவென்று
துணைவி தன் இன்பம் தொலைப்பது முறையன்று.

ஞ்சி நீ மங்கலமாய்க் கணவன் நெஞ்சிலிருந்தாய்!
கொஞ்சியவுன் முகப்பொலிவு குறைய விரும்புவானா!
மஞ்சுக்குள்ளேயவன் உனை நோக்கானென்றுணர்ந்து
நெஞ்சோடணைத்த  பூ – பொட்டு – மஞ்சளதை
மிஞ்சும் தியாகமென தூரத் தள்ளுவது
விஞ்சும் அநியாயம்! மணவாளத் துரோகமது!

பூ விரிந்தது உன் வீட்டுத் தோட்டத்திலன்று
பூமாலையாக்கி கூந்தலில் இட்டாய்  அழகென்று.
மலரும் பெண்ணுமோரினமாம்! கணவனையிழந்திடினும்
மலர் போல் விரிந்து மகிழ்ந்திடு பெண்ணே!
மழையும், வெயிலும் மலருக்கும் உண்டு.
மலர் மலராகும் மகிழ்வைத் தியாகிப்பதில்லை!

விதவை என்றொரு பெண்பால் வழக்கு
விதவனென்று ஆண்பால் கொள்ளா வழக்கு.
கணவனிழந்தவளுக்கு துறவு நிலை வாழ்வு!
மனைவி இழந்தவனுக்கு உல்லாச வாழ்வு!
அன்றைய சமூகத்தின் அடிமை வழக்கிது.
நன்றல்லதைப் பகுத்தறிவால் விலக்கல் அழகு!.
 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-7.2004.

(யெர்மனிய மண் சஞ்சிகை ”மண்” 107ம் இதழ் 2004 புரட்டாதி-ஐப்பசி இதழில் பிரசுரமானது.)

                                 
 

26. ஒரு குதூகலமான நாள் முயலுங்களேன்!…

ஒரு குதூகலமான நாள் முயலுங்களேன்!…

 

1.        வெளி நாட்டில் நல்ல கோடையில் சூரியன் உதிக்கும் போது பிள்ளைகளிற்கும், பெரியவர்களிற்கும் குதூகலமாக இருக்கும்.
குறைந்த ஆடைகளுடன் வெளியே போக விரும்புவார்கள். வார இறுதியில் பிள்ளைகளுடன் வெளியே புறப்படுங்கள்.
அழகான பூக்களை நீண்ட காம்புடன் பிடுங்கி வந்து ஒரு பாரமான புத்தகத்துள், சமையலறைக் கை துடைக்கும் கடதாசியை வைத்து அதன் மேலே பிடுங்கிய பூ வைத் தலை கீழாக ஒவ்வொன்றாகப் புத்தகத்துள் மூடிப் பாரம் வைக்க வேண்டும்.
இரண்டு நாட்கள் செல்ல அவை காய்ந்த பின்பு எடுத்து அழகான வாழ்த்து அட்டைகள், சட்டம் போடக் கூடிய கலையழகுடைய படங்கள் செய்யலாம்.

 

2.       இன்னும் காய்ந்த விதைகள், இறகுகள், கம்பளி நூல், மெல்லிய றிபன் போன்றவைகளையும் இவைகளோடு சேர்த்துக் கலா ரசனையுடன் வித விதமாக ஒட்டிப் பாவிக்கலாம்.

3.       சவர்க்காரக் கரைசலை உறிஞ்சும் குழாய்கள் மூலம் ஊதிக் குமிழிகள் செய்து பறப்பதை ரசிக்கலாம்.  சிறுவர்கள் அதைப் பிடித்தும் விளையாடுவார்கள். இதுவும் பெரியவர்கள், சிறியவர்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

4.       பெரிது படத்திக் காட்டும் கண்ணாடியுடனும் சென்று பூச்சிகளைப் பிடித்துப் போத்தல்களில் இட்டுக் கவனிக்கலாம். இது பெரியவர்களிற்கும் மனமகிழ்வு தரக் கூடியது என்பது எனது அபிப்பிராயம்.

5.       தீயில் இறைச்சி வாட்டி உண்டு மகிழலாம்.

6.      கடற்கரைக்குச் சென்று மகிழலாம்..

 

இப்படிப் பல வகையில் வெயில் நாளை அனுபவித்து மகிழலாம்.

நீங்கள் தயாரா?…..

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
5-6-2005.

 

                             

1. வாரிசு வந்திட்டார்(17-4-2012 ல்)

 

வாரிசு வந்திட்டார்(17-4-2012)

 

ளியுமிழும் உலகை
விழித்துப் பார்க்கக்
கூசும் கண்கள்
கூசிக்கூசி மூடும்.

தடு எப்போதும்
உங்கு உறிஞ்ச
அங்கும் இங்கும்
ஆவலாய்த் தேடும்.

சின்னக் கையும்
சின்னக் காலும்
மென்மை வழங்க
பொன்னெ மழுங்கும்.

பாரமே இல்லாப்
பஞ்சுப் பொதியாய்
ஒன்றும் தெரியாது
கையுள் நெளிகிறார்.

வ்வுலகை எட்டிட
இருபத்திநான்கு மணியாக
இழுத்தெமைக் கலங்கடித்தார்
இவ்விரத்தினக் குஞ்சு.

ரம்பரை விளங்க
வரம்பிடாது ஒரு
வாரிசு என்ற
பரிசு கிடைத்தது.

”வெற்றி” எம்மகன்
வயிற்றுப் பேரன்.
நெற்றித் திலகமுனக்கு
இலங்காதிலகத்தின் வாரிசே!

ல் வரவுனக்கு!
நலம் சேர்த்தாயெமக்கு!
நிடூழி நலம்பெறுக….
திலீபன்-சாந்தி, வெற்றியுடன்!

 

 

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
19-4-2012.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியில் 24-4.2012 செவ்வாய்க் கிழமை கவிதை நேரத்தில் இக் கவிதை என்னால் வாசிக்கப்பட்டது.)

  

                             

 

 

 

232. மனச்சாட்சி

மனச்சாட்சி

னச்சாட்சி ஓசையில் மனிதம் வாழ்கிறது.
தினக்காட்சி விரிகிறது திருநாள் நீள்கிறது.
மானிடத்தின் கருவறை மகோன்னத மனச்சாட்சி.
வானிடத்திற்குயர்த்தும் வழுவாத குணச்சாட்சி.

னிதத்தை ஆள்வது மதியூக மனச்சாட்சி.
மனிதனின் கடிவாளம் அற்புத மனச்சாட்சி.
தாய்போலக் காக்கும், தீயாகச் சுடும்
பொய் பேசினாலும் பிலாக்கணம் பாடும்.

விருப்பில்லா வினை மானுடன் கொண்டால்
நெருப்பினில் வண்டாகும் நல்லோர் மனமே.
கருத்தான வினையை மானுடன் கொண்டால்
களிப்பில் ஆடும் நல்லோர் மனமே.

னச்சாட்சி தூங்கினால் மனிதம் இறப்பு.
மனச்சாட்சி விழித்தால் மனிதத்தின் சிறப்பு.
மனச்சாட்சியை மதித்தால் மன்றத்தில் மதிப்பு.
மனச்சாட்சியை மிதித்தால் மதிப்பில் இழப்பு.

ட்டங்கள் தர்மங்கள் நீதியின்றி உலகில்
சங்கோசம் சந்தேகம் ஏதுமின்றிப் பலர்
மனச்சாட்சியை  மதிக்காது உதறி  ஓடுவார்
மன்றத்தில் மதிப்பாய் மகுடம் சூடுவார்.

னச்சாட்சி என்ற கலங்கரை விளக்கு
மனிதாபிமானத்தினொரு நந்தா விளக்கு.
மனச்சாட்சி அற்றோனை நேசிக்க யோசி!
மனச்சாட்சியுள்ளோனை மனம் துணிந்து நேசி!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
20-9-2002.

Samme heading  another poem :-   https://kovaikkavi.wordpress.com/2011/05/20/251-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/

(6-3-2001ல் ரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலி கவிதை பாடுவோம் நிகழ்வில் திரு லோகதாஸ், திரு.சுரேந்திரன்(தோழர்) நிகழ்வில் என்னால் வாசிக்கப் பட்டது.
21-9-2002ல் தமிழ் அலை கவிதைச் சோலையில் திரு தீபன் நிகழ்விலும் ஒலிபரப்பாகியது.)

                           

ஆகாயம். 26

வாழ்வியற் குறட்டாழிசை.

ஆகாயம். 26

ஆகாயம், அந்தரம், பேரண்டப் பெருவெளி
ஆதாயம் வழங்குகிறது சீவன்களிற்கு.

ஐம்பூதங்கள் நிலம், நீர், நெருப்பு
வானமெனும் ஆகாயமும் ஒன்றாம்.

சுட்டலாம், தொடலாம் என்ற கம்பீரம்
எட்டிட முடியாத ககனம்.

மண்ணில் விழாத விதானம், குறைக்கவோ
எண்ணினால் கூட்டவோ இயலாதது.

அழியாத, முடிவற்ற, ஒப்பற்ற ஆகாசத்தை
அண்ணாந்தே பார்க்க வேண்டும்.

ஆவி, புகை வானச்சுவரிலரிய
ஓவியமிடுவது ஒப்பற்ற காட்சி.

காலையோ, மாலையோ எப்போதும் ஒரே
கோலம் அல்லாத நிரூபம்.

இடி, மின்னலிற்கும் வளி மண்டலம்
அடி பணியாத சாம்ராஜ்யம்.

கடல் நீல வெட்ட வெளியின்
கொடை – வானவில், மழை.

சுந்தர உலகைப் பார்க்கும் விண்
சூரிய, சந்திர இருப்பிடம்.

ஆத்மா, உடல் தனித்தனி போன்று
ஆகாயமும், மேகமும் தனித்தனியே.

அவதியான உலகில் எதுவுமே இல்லை
நிரந்தரம். வானமே நிரந்தரம்.

(ஆகாயத்திற்கு மறு பெயர்கள்:- அந்தரம், ஆகாசம், பேரண்டப் பெருவெளி, வானம், ககனம், விதானம், நிரூபம், வளி மண்டலம், வெட்ட வெளி, விண் – இன்னும் பலவாகலாம்.)

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-4-2012.

 
 

231. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

பார் விளங்கப் புதுப் பெயரேந்திடும்
நேர்த்தியான புது ஆண்டே  வருக!
தீர்வுக்கான நாட்டில் பல பிரச்சனைகள்
தீர்த்திடும் நோக்குடன் வருக! வருக!
தீர்க்கமாய் தீர்மானமாய் வருக! வருக!
ஆர்வமான நல் வரவு வருக!

மனித கர்வச் சிறகுகள் உடைத்து
மனித நேயச் சிநகுகள் விரித்து
மனதில் குத்து விளக்கேற்ற வருக!
தனம் கனகம் என்று எண்ணுவோரில்
தனம் கல்வி என்ற தகுதியேந்தி
சினமழிக்கும் புது நெறியோடு வருக!

மொத்த அறிவிலிகள் வாழும் நாடாக
செத்த உடல்கள் வீழ்கிறது தினமாக.
விலங்கு மனத்தை வசப்படுத்தித் தெளிவாக்கி
துலங்க வைக்க புத்தாண்டே வருக!.
கத்திக்குக் கத்தியெனும் வாழ் நிலைமாறிப்
புத்திக்குப் புத்தியெனும் புது நிலையாகுக!

 

புத்தாண்டே வருக!  அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துகள்!

 

பா ஆக்கம்  வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-4-2012.

 

43. வைரமூக்குத்திக் கற்கள்

 

வைரமூக்குத்திக் கற்கள்

மைக்கருமை வானிலே
வைரமூக்குத்திக் கற்களைத்
தைரியமாயிறைத்தது யார்!
வைத்த கண்மூடாது
பைய நடக்கிறேன் அண்ணாத்தபடி.

வைரக்கற்களிடையே நான்..
வரையறையற்று நீண்ட பாதை.
வனிதம்! அற்புதம்! ஆகா!
வானவர் உலகோ! இது!
வாய்விட்டு எண்ணுகிறேன் நட்சத்திரங்களை…

னமும் கண்களுமொன்றி
மந்திரத்தால் முடுக்கிய நிலையில்
மறந்தெனை ஆழ்ந்த ரசிப்பு!
உள்ளேயுள்ளே ஆழ ஆழமோ!
வானக் கடலில் அமிழ்ந்திடுவேனோ!

ருநூற்றைம்பது மீட்டர்
இடைவெளி – ஆச்சியெமது வீடு.
இனிய நட்சத்திர இருட்டில்
கண்ணற்றதாக அண்ணாத்த நடை
கால்களோ பழகிய பாதையில்…

கால் தடுக்கக் குனிந்தேன்.
நூல் அறுந்தது கற்பனையில்.
கால் – என்னிலத்தடி பூமியில்!
வானிலல்ல! சிணுங்கியது சின்ன
மனது! ஏமாந்தேனிப்படியிரு தடவை!

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-4-2012.

                    

25. கைத் தொலைபேசியைப் பூட்டுங்கள்!

 

கைத் தொலைபேசியைப் பூட்டுங்கள்!

 

காலை 8 மணிக்கு ஐந்தரை வயது டானியல் பாலர் நிலையம் வந்தான். காலை உணவையே பாலர் நிலையத்தில் தான் அவன் சாப்பிட்டான்.

 மாலை 4.30 ஆகியும் அவனது பெற்றோர் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வரவில்லை. மளமளவென மற்றைய பிள்ளைகளின் பெற்றோர்கள் வந்து தமது பிள்ளைகளை அள்ளி அணைத்து, ஆசை தீர முத்தமிட்டு, அன்பாக வீட்டிற்குக் கூட்டிச் செல்லும் போது டானியலின் முகம் வாடுகிறது.

அன்றாடம் நிலையத்தில் பெற்றவருக்காகக் காத்திருக்கும் இறுதிப் பிள்ளையாக இருக்கும் ஏக்கக் கொடுமையைப் பிஞ்சு மனங்களால் தாங்க முடிவதில்லை. அது ஒரு பயங்கர ஏக்க நிலையாகும்.

டானியலுக்காக நான் வாசித்த கதையில் அவன் மனம் செல்லவில்லை. மணி 4.45க்கு தந்தை யோசப் வந்தார். (நிலையம் பூட்டுவது மாலை 5 மணிக்கு.)  அவன் முகம் பூவானது. ”இதோ உன் அப்பா வந்திட்டார்”என்று கூறியாடி வாசிப்பை நிறுத்தி புத்தகத்தை மூடினேன்.

அவன் தந்தையோ ஒரு கரத்தைக் கதவு நிலையில் ஊன்றியபடி மறு கரத்தில் கைத்தொலை பேசியை ஏந்தி, காதோடு கதைத்தபடி, டானியலுக்குத் தலையை மட்டும் ஆட்டியபடி தனது கதையில் மூழ்கியிருந்தார்.

இந்நிலை எனக்கு எரிச்சலைத் தந்தாலும், எனக்கு எதுவும் கூறமுடியாத நிலைமை. டானியல் தந்தையின் சைகையைப் புரிந்து இருவரும் பிள்ளையின் உடை தொங்கும் இடத்தையடைந்து வீடு செல்லத் தயாராக, நானும் யன்னலை மூடி நிலையத்தைப் பூட்டும் முயற்சியில் இறங்கினேன்.

எட்டு மணி நேரமாகப் பெற்றோரைப் பிரிந்த பிள்ளைக்குத் தேவை ஒரு அன்பான அணைப்பு, ஆசை வார்த்தைப் பரிமாற்றம், ஒரு அன்பு முத்தமே! இதையறியாத தந்தைக்குக் கைத்தொலை பேசி முதலிடம் வகிக்கிறது.

இவர் போன்று பலர் உளர். எம்மோடு பிள்ளை பற்றிய அன்றாட அசைவுகள், அன்று என்ன நடந்தது, என்ற பல தகவல்களின் பரிமாற்றங்களின்று, தகவற் பலகையில் எழுதிய அறிவிப்புகள், தகவல்களையும் வாசிக்காது பலர் உளர். எது தனக்கு முக்கியம் எனும் நேரத்தில் கைத்தொலை பேசியைப் பூட்டுவது நன்றல்லவா!

குழந்தைகளைக் கையளிப்பதும், எடுப்பதும் கூட பெற்றவருக்கும், நிலையத்தினருக்கும் மிக முக்கிய பொழுதுகளன்றோ!

மாலையில் பெற்றவர் அன்புக்காக ஏங்கும் பிள்ளைகளை அன்பாக அணைத்துக் கூட்டிச் செல்ல வேண்டும். காலையிலும் அன்பாக அணைத்துக் கூட்டி வருவது மிக அவசியம். அப்போது தாராளமாகக் கைத்தொலை பேசியைப் பூட்டிவிடலாம்.

சக ஊழியர்களின் கலந்துரையாடல் நேரத்தில் இந்தத் தலைப்பை எடுத்து உரையாடினோம்.

எல்லோரும் கூடிப் பேசி எடுத்த முடிவின்படி ”கைத்தொலை பேசி இங்கு தடை” எனும் அட்டைகளை நிலையத்தின் பல இடங்களில் தொங்கவிட்டு இதை எழுதுகிறேன்.

நீங்கள் என்ன கூறுகிறீர்கள்!…..

கைத்தொலை பேசி வர முதல் எப்படி இருந்தீர்கள்!……

சொல்லுங்கள்!…..
 

 

ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
4-9-2004.

 

                                     

Previous Older Entries