27. விடியலின் விளிம்பு வெகு தூரம்!

    

விடியலின் விளிம்பு வெகு தூரம்!

விடியாத இரவுகள் வாழ்வாகி
முடியாத போர் தொடராகி,
கண்ணீரில் நீந்தும் மக்களாகி
கடிதான வாழ்வே நிஐமாகி,
விடியலை நோக்கும் நேரம் – எம்
விடியலின் விளிம்பு வெகு தூரம்.

சொர்க்க புரியாம் நம் ஈழம்
மூர்க்க வெறியால் சோக ஆழம்.
யார்க்கும் புரியாத எம்மவர் ஓலம்
பார்க்கும் விழிகளில் காயாத ஈரம்
சோர்ந்த மனங்களில் பெரும் பாரம்.
தீர்வின் விடியல் வெகு தூரம்.
 

கொடிதான போரின் சாரம்
குடிகொண்ட மனதின் சோகம்
வடியுமா எனும் மனப்பாரம்
முடிகின்ற நாள் நெடும் தூரம்.
படியுமா போரின் கோரம்.
விடியலின விளிம்பு வெகு தூரம்.

அருமை உறவுகள் பங்கம்
அங்கம் இழந்தோர் துன்பம்

தங்கமும் ஈடு ஆகாது, ஒரு
திங்களில் நிறைவு பெறாது.
விடியும் எனும் மனத்தீரம் – எமது
விடியலின் விளிம்பு வெகு தூரம

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ்,  டென்மார்க்.
13-11-2006.

(ரி.ஆர்.ரி தமிழ் அலை, இலண்டன் தமிழ் வானொலிகளில் என்னால் வாசிக்கப்பட்டது.)

10-7-2001 டென்மார்க் கற்பகம் சஞ்சிகையிலும் பிரசுரமானது

                    

பின்னூட்டமொன்றை இடுக