இறுதி அங்கம். 22.

அனுபவம். அங்கம்.22.

(யாழ் நல்லூர் கோயிலுக்குச் சென்றோம் சில படங்கள் இங்கு இணைத்துள்ளேன். –  முன்பு தவற விடப்பட்டது.)

     
முனீசுவரம் கோயில் மிகப் பெரியதாக உள்ளது. படத்தில் பார்த்திருப்பீர்கள்.

மார்கழி 11ம் திகதி 2003 பாரதியாரின் பிறந்த தினமன்று. காலை 9.30 திலிருந்து 10.30 வரை ரூபவாகினி ஐ சனாலில் மனையாள் மண்டபம் நிகழ்வில் என்னை விசேட விருந்தினராகப் பேட்டி கண்டனர். அந்த

நிகழ்வு நேரடி ஒளி பரப்பாகக் காட்சியானது.

 

றிவிப்பாளினிகள் துஷ்யந்தி மோகளதாஸ், சாந்தினி கருணாரட்னம் ஆகிய இரண்டு சகோதரிகள் என்னை பேட்டி எடுத்தனர்.

 

சில படங்கள் பார்க்கிறீர்கள். (மனையாள் மண்டபப் பேட்டி)

        

மார்கழி 12   நள்ளிரவு 12 மணிக்கு கொழும்பிலிருந்து  நாங்கள் (நானும் என்கணவரும்) விமான நிலையத்திற்குப் பயணமானோம் டென்மார்க் வர.

இத்துடன் இந்தப் பயணக் கட்டுரை முடிவடைகிறது.

ன்னொரு பயணக் கட்டுரை தொடரும்……

க்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
9-10-2010.

 சுற்றுலா இயற்கை அனுபவ நூலகம்.  

அனுபவம். அங்கம். 21.

அனுபவம். அங்கம். 21.
 

திர்காமம் போய் கொழும்பு வந்த பின்பு 30ம் திகதி நானும் கணவரும் விமானத்தில் யாழ் சென்றோம். கோவையில் எனது தங்கையைச் சந்தித்தோம்.

யாழில் இளவாலை, சங்கானை, உரும்பராய். எனும் ஊர்களுக்கு உறவினர்களிடம் சென்று வரும் வழியில் கோவை மாவீரர் துயிலும் இல்லம் சென்றோம். இங்கு படங்கள் காண்கிறீர்கள்.

கோவை மாவீரர் துயிலும் இல்லம்.

     

 

பார்க்க மிக அழகாக கம்பீரமாக அந்த நினைவாலயம் இருந்தது. அஞ்சலி செய்தோம். கனத்த இதயத்தோடு நடமாடினோம். ஏராளமான பேருந்துகளாக இலங்கை பூராக சிங்கள மக்களும் வருவது போவதுமாக  ஒரு சுற்றுலா இடமாகத் தெரிந்தது. இது ஒரு மறக்க முடியாத நினைவு தான்.

யாழ் தமிழாராய்ச்சி மகாநாட்டில் உயிர் நீத்தோர் நினைவிடம், யாழ் வீரசிங்க மண்டபம், யாழ் பதிய நூல் நிலைய சரஸ:வதி சிலை வரை  சுற்றி நடந்தோம். உள் புக அனுமதி மறுக்கப்பட்டது.

     

மார்கழி 4ம் திகதி அதிகாலை 7.00 மணிக்கு யாழ் சிங்கள மகாவித்தியாலயத்தில் பேருந்து எடுத்து  பலாலி விமானம் மூலம் பகல் ஒரு மணிக்கு கொழும்பு வந்தடைந்தோம்.

கொழும்பிவ் நாம் ஓய்வாக இருந்து உரையாடிய போது. எனது பெட்டகோ வேலை (சிறுவர் பராமரிப்பு) அனுபவங்கள், தமிழ் அலை வானொலி ஐரோப்பிய வலம் டென்மார்க் செய்தி வாசிப்பு, எனது கவிதைத் தொகுதி வெளியிடும் ஆயத்தங்கள் யாவும் கவனித்த என் தங்கை கமலா    ”உன்னை ரூபவாகினி தொலைக்காட்சி  ஐ சனாலில் மனையாள் மண்டப விசேட விருந்தினர் பேட்டி நிகழ்வுக்கு அனுப்பத்தான் போகிறோம், ‘ என்றாள்.

னையாள் மண்டப நிகழ்வு காலை 9.30- 10.30 ஆக ஒரு மணி நேர நிகழ்வாக அங்கு நடை பெறுகிறது. 

நிலையப் பொறுப்பாளர் திரு விசுவநாதனுடன் தொடர்பு கொள்ள, நாள் நியமிக்க, அறிவிப்பளர்களுடன் வேண்டிய ஆயத்தங்கள் செய்ய என்று நேரம் ஒதுக்க வேண்டி இருந்ததால் எமது கண்டி நுவரெலியாப் பயணம் தடைப்பட்டுவிட்டது.

யினும் மார்கழி 8ம் திகதி காலை சிலாபம் முனீசுவரர் கோயிலுக்கு தங்கை குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்று மாலையே கொழும்பு வந்தடைந்தோம்.

இங்கு படங்கள் காண்கிறீர்கள்.

             

முனீசுவரம் முழுவதும் சிங்கள மயம். ஆலயத்தில் அனைத்தும் பணம் பிடுங்கும் செயலாகவே கண்டோம். வெறுப்பாக இருந்தது. கடதாசி மாலை உட்பட பழ குவியலாக  அலங்கார அருச்சனைத் தட்டு, சிங்கள பாணியில். அள்ளு கொள்ளையாக விலை கூறினார்கள்.

பாக்கு, வெத்திலை, பழம், தேங்காய், பூ, கர்ப்பூரம், சாம்பிராணி என நாம் பிடிவாதமாக தட்டு சரிக்கட்டி வாங்கினோம். பக்தி என்பது அங்கு பணமாகவே இருந்தது.  தமது கடையில் பொருள் வாங்கினால் தான் அங்கு வாகனம் நிறுத்த இடம் தரும் அந்த  அநாகரீகச் செயல், முனீசுவரத்தில் மட்டுமல்ல, கதிர்காமத்திலும் கண்டோம். வெறுப்படைந்தோம்.

—–மிகுதியை அங்கம்   22ல் காண்போம்.——-

20.

அனுபவம் அங்கம். 20.

காலி மாத்தறைப் பாதையால் கதிர்காமம் சென்று சேர்ந்து சுவாமி தரிசனம் செய்தோம். மிக வெயிலாதலால் சுடுமணலில் நடந்து நடந்து கால்கள் கீழே பதிக்க முடியாதவாறு தவித்தோம். இந்த வேதனையில் அடுத்த நாள் காலை ஏழு மலைக்கு ஏறவில்லை யென்று நான் மக்கர் பண்ணினேன். ‘ சரி படுத்துத் தூங்குங்கள் காலையில் எம்முடன் மலை ஏற வருவீர்கள் பாருங்கள் ‘ என்று தங்கை மகன் கூறினார். படுத்தோம். 

 

திகாலை மாணிக்க கங்கையில் சென்று மழையில் கலங்கி வந்த நீரில் எல்லோரும் குளித்தோம்.

நாம் தங்கிய கரிர்காமத்து வாடிவீடு மிக அழகானது. வரவேற்பு அறை அல்லது முன் அறையில் ஒற்றை மாட்டு வண்டிலோ, குதிரை வண்டிலோ தெரியவில்லை, ஒரு மிருகம் இழுக்கும் வண்டி அழகுக்கு வைத்திருந்தனர். அழகான சோபா, மாடி படிக்கட்டுகள் என அலங்கரித்த விதம் என்ன! அழகு! மேல் நாடென்ன மேல் நாடு! ஆத்தனை ஆடம்பரமாக அலங்கரித்திருந்தனர். நாற்சாரம் மாதிரி வீடு, நடுவில் ஒரு முற்றம் பூக்கன்றுகள், அருமை! அழகு தான்! போங்கள்!

 

ழுமலை ஏற பாத அணி – காலணி போடக் கூடாது என தங்கை பிடிவாதமாக ஏறினார்கள். முதல் நாள் எமக்குச் சுடுமணல் சுட்ட வேதனையில் எங்கள் கால்கள் பாதணி கேட்டது.

15 வருட டென்மார்க் வாழ்வில் காலின் முரட்டுத் தனம் இழந்தது தெரிந்தது. பாதணி போட்டபடி தான் நாங்கள் மலை ஏறினோம். மேலே தமிழ் முருகன் சிறந்த கவனிப்பு இன்றியும், சிங்கள முருகன், சிறந்த கவனிப்புடன் கோலாகல பூசையுடன் இருந்த பேதங்கள் அப்படியே தெளிவாகத் தெரிந்தன. மேலே மலையிலிருந்து நாற்புறமும் படங்கள் எடுத்தோம். அவைகளை நீங்கள் பார்ப்பீர்கள்.

29ம் திகதி மாலை கொழும்பு திரும்பினோம். மாலை இருட்டு பாதைப் படங்கள் காணுகிறீர்கள்.

திச வாவி, திச விகாரை நல்ல காட்சிகளாக இருந்தது.(படங்கள் காணுங்கள்). தூரத்தில் ஏழு மலையும் தெரிந்தத் போல இருந்தது. நீங்களும் பாருங்கள் கொஞ்சம் படத்தில் தெரிகிறது.


ழு தொதல், மீகிரி (கறுப்பு தொதல், எருமைத் தயிர்) என்று பாதையோரக் கடைகளில் இறங்கியிருந்து ரசித்துச் சுவைத்தோம்.

செல்லக் கதிர்காமத்தில் பென்னம் பெரிய ஐந்து தலைநாக படம் கட்டியமை யாவும் எமக்குப் புதிதாக இருந்தது. முழுக்க புதிய கட்டிடங்கள் எழுந்துள்ளன.

 

—————மீதியை அடுத்த 21ம் அங்கத்தில் பார்ப்போம்.———–

19.

 

அனுபவம்.  அங்கம் 19.

( டங்களாக அழகிய கோலாலம்பூர் விமான நிலையமும், பண்டாரநாயக்க விமான நிலையமும், காலி- மாத்தறை பாதை வழிப் படங்களும் காண்கிறீர்கள். படத்தில் கிளிக் செய்தால் சரியான அளவுப் படங்கள் காணலாம்.)

மேலே பக்ரு(பத்து) குகைக் கோயில் பார்த்து, கீழே இறங்கி வந்து அருகாமையில் இருந்த கடையில் காலை உணவை அருந்தினோம். குகையை நேரில் பார்த்து புகைப் படங்கள் எடுத்தும் கூட கடையில் அதன் மொத்தத் தொகுப்புப் படங்களைக் கண்டு வாங்கினோம். காரணம் அத்தனை அழகு, அற்புதமாக இருந்தது. வார்த்தைகளால் எனக்கு விபரிக்க முடியவில்லை. இங்கு பனி உருகி வடிந்து தொங்குவது போல அங்கு சுண்ணக் கற்பாறைகள் ஒழுகிய நிலை போல பாறைகள் அழகழகாக இருந்தன.

நாம் தொடர்ந்து கோலாலம்பூர் விமான நிலையத்தை நோக்கிப் பயணமானோம். பகல் 1.30க்கு இலங்கைக்கு சிறிலங்கன் எயர் லைனில் பயணம். 12.35க்கு பயண அனுமதி பெற சென்றால் நேரமாகிவிட்டது என மேசையை மூடிவிட்டார்கள். (கவுன்டர் குளோஸ்ட்.)  ‘திகீர்’ என பீதியாகிவிட்டது.

மேசைக்குக் கிட்டச் சென்று 5 நிமிடம் தானே  பிந்தியது…தெருப் போக்குவரவினால் கூட இது நடக்கலாம் அல்லவா என்று பல வகையில் வாதாடி  ஒரு மாதிரி வெற்றி கண்டோம்.

முகத்தில் அவர்கள் எந்த உணர்வும் காட்டாது சைகையால் எமது பொதிகளைக் கட்டுப் பாட்டுப் பட்டியில் வைக்க சைகை காட்டினார்கள். கைகளை நீட்டி பத்திரங்களை வாங்கி, செயலில் இறங்கினார்கள்.

நாம் மட்டுமல்ல பின்னால் 10-15 பேர் பயணமாக வந்தனர். அனைவரும் பயணத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். கிடைத்த அனுபவத்தை வைத்து ‘ டென்மார்க் டென்மார்க் தான்! அரை மணி நேரம் பிந்தினாலும் உள்ளெ விடுவார்கள்’…. என்று கூறினார் என் கணவர்.

சிறிது நேரம் பிந்தியதால் தேவையற்ற பீதியை எங்களுக்கு ஏற்படுத்திய சிறிலங்கன் எயர்லைன்ஸ் அனுபவம் மறக்க முடியாதது தான்.

தை விட கோலாலம்பூர் விமான நிலைய அழகு, அமைப்பு வியப்பு, என்னை பிரமிக்க வைத்தது. உள்ளே கால் வைத்ததும் அதன் உட்புறத் தோற்றம் பிரமாண்டம், பிரமிப்பு எனும் பதத்தின் அர்த்தத்தைத் தந்தது. வியக்கத் தக்க அழகோ! அழகு! நவீன லோகம், சிங்காரக் கோலாலம்பூர் என்று கூறும் வகையில் அதன் கூரையின் அமைப்பு பிரமிப்பு! பிரமிப்பு!….அழகு!……அழகு!.

22 கார்த்திகை 2002 மாலை  6.00 மணிக்கு பண்டார நாயக்க விமான நிலையத்தை அடைந்தோம்.

கார்த்திகை 28ல் தங்கை குடும்பத்துடன் காலி மாத்தறை கரையோரமாக வானில் கதிர்காமம் சென்றோம்.

15 வருடமாக குளிரிலும், 3 மாத அரை குறைக் கோடையிலும் வெப்பமற்ற இயற்கைக் காட்சியிலும் அவிந்த எமக்கு, அந்தக் கடற்கரைச் சாலை வழிப் பயணம் சொர்க்கபுரிப் பாதையாகத் தெரிந்தது. ஆகா! ஓகோ! என வாய்பிளந்து நான் ரசிப்பதை என் தங்கை புருவம் உயர்த்தி ரசித்ததுவும், ‘”இறங்குங்கோ பெரியம்மா! இதில் ஒரு படம் எடுப்போம்!’ “என்று என் ரசனையை ஏற்று தங்கை மகன்  விரும்பிய இடமெல்லாம் வாகனத்தை நிறுத்தி எனக்கு வசதி செய்த தந்ததும், எவ்வளவோ ஆனந்த அனுபவங்கள். 

ங்கு காலி மாத்தறை கடற்கரைப் படங்கள் காண்கிறீர்கள்.

——-மிகுதியை  அங்கம் 20ல் பார்ப்போம்.——–

18.

 

அனுபவம். அங்கம் 18

( டங்களில், புறாக்களும் அதற்குத் தீனி விற்பவரும், கோயில் படிக்கட்டுகள், குகை வாசல்கள், இறுதியாக காணும் கோயிலும்.)
 

22ம் திகதி காலை 8.00மணிக்கு சாமியுடன் 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பட்டு கேவ்ஸ் – பத்து குகைக் கோவிலுக்குச் சென்றோம். சுண்ணாம்புக் கல்லினால் ஆன மலையில் உள்ள குகைக் கோயில் இது.  நிலத்திலிருந்து ஓரளவு செங்குத்தான படிகள் கொண்ட கோயில்.

 

கீழே உள்ள கோயிலில் வணங்கி அருச்சனைப் பொருட்களை வாங்கி, உடனே ஒரு உறையில் போட வேண்டும். ஏமாந்தீர்களோ குரங்குகள் தட்டிப் பறித்து விடும். இதை விட எண்ணிக்கையற்ற புறாக்கள் உள்ளன. புறாக்களுக்கு பெரிய சாக்கு உறையில், வாளியில்  தானியங்களை ஒரு பெண்மணி விற்கிறார். இது அவரின் அன்றாடப் பிழைப்பு ஆகும். புறாக்களுக்குத் தீனியைப் போட்டு அவைகளுக்கு நடுவில் நிற்கும் அனுபவம் அற்புதம்.

 

272 படிகள் கொண்ட கோயில். இதில் ஏறிட வசதியாக கம்பிகள் பதித்துள்ளனர். இயலாமை கொண்டவர்கள் மெல்ல மெல்ல எறிட முடியும். இடது பகுதியால் ஏறி, வலது பகுதியால் இறங்க முடியும். உள்ளேயும் மேலே மேலே நடக்க வேண்டும்.  சாமி எமக்கு ஒன்றரை மணி நேரமே தந்தார். தான் எங்களுடன் மேலே ஏறி வரவில்லை என்று கூறிவிட்டார். மூச்சை நன்கு இழுத்து விட்டு, ஆறுதலாகப் போய் வாருங்கள். 5,6 படிகளுக்கு ஒரு இடைவெளியாக இருந்தது. நின்று நின்று ஏறினோம்.

 

100 வருடங்களுக்கு முன்னே ஒரு வெள்ளைக்காரர் இந்தக் குகையைக் கண்டு பிடித்து, தமிழரிடம் ஒப்படைத்து, கோயில் உருவாக்கும் படி கூறினாராம். பட்டு கேவ்ஸ் என்ற இப் பெயரை மாற்றிவிடப் பலரும் முயன்றனராம். இந்தப் பெயரில் இக் கோயில் பிரபலமானதால், பலத்த எதிர்ப்புக் கிளம்பியதால், பெயர் மாற்றம் நடை பெறவில்லை என்று சாமி கூறினார்.

 

டத்தில் தெரியும் படிகளில் ஏறி முடிய முருகன் மயிலுடன் பட்டுக் குடையுடன் நிற்கிறார். பின்னர் சிறிது கீழே இறங்கி படிகள் உள்ளே தொடருகிறது. இடைவெளி அத்துடன் படிகள் என்று தொடர்கிறது. இறுதியில் வள்ளி தெய்வயானை முருகன் கோயில் உள்ளது.

 

நேயர்களே கற்பனையில் கூட நினைக்க முடியாதது இந்த பக்ரு குகைக் கோயிலின் தோற்றம். இப்படி கல்லுக்குள் ஒரு அதிசயமா  என எண்ணத் தோன்றியது.

 

கோயிலுடன் ஒரு குகை. இது தவிர இன்னும் இரண்டு குகைள் அருகினிலே உள்ளதாம்.

தில் ஒரு குகையை மின்சார தேவைகளுக்காக மின்சார நிலையத்தினர் கையாளுகிறார்களாம். இன்னொரு குகையில் பல கடவுள்களின் உருவங்கள் வைத்து  ஒரு மியூசியமாக  – நூதன கண்காட்சியகமாக நடத்துகின்றனராம். சுப்பரமணியர், சிவன், பயமுறுத்தும் துர்க்கா, அர்த்த நாரீசுவரர் போன்று பல உருவங்கள் உள்ளதாம்.
 

ன்னொரு குகையில் மின்சாரமின்றி  வெளிச்சம் உருவாகிறதாம். இது எப்படி, எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை என கூறப்படுகிறது. இங்கு உள்ளே சென்று பார்க்கத் தலைக்கவசம், பாதுகாப்பு உடைகளுடன் வழிகாட்டிகளுடன் முன் அனுமதியுடனேயே செல்ல முடியும் என்று நமது வழிகாட்டி சாமி கூறினார்.

 

ருவத்தில் சிறிய மந்திகள் பாய்ந்து குதித்தோடியபடி உள்ள ‘பக்து கேவ்ஸ்’ – பத்து குகைக் கோவில் தைப்பூசத் திருவிழா மிகப் பெரும் விழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடுவார்களாம். முழு மலேசியாவிலும் இது பெரும் விழாவாம். மில்லியன் கணக்கில் மக்கள் கூடி, இத் திருவிழாவில் வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் என்று நிறைவேற்றுவார்களாம். கோலாலம்பூரின் சிறீ மாரியம்மன் கோவிலில் இருந்து பத்து குகைக் கோயிலுக்கு வருவார்களாம். முதுகிலும், நாக்கிலும் ஊசிகள் குத்தி, காவடி, வேல் காவடி, காவடியாட்டம் பால்குடம் ஏந்துதல் என பிரார்த்தனைகள் நடைபெறுகிறதாம்.

27-9-2003.
——–மிகுதியை அங்கம் 19ல் பார்ப்போம்.——–
 

அனுபவம். அங்கம். 17

(டங்களில் இரட்டைக் கோபுரம்,  இந்திய சினிமா காதல் காட்சிகளில் வரும் அந்தப் புல்வெளி, அருகு தெரு என்று காண்கிறீர்கள்.)
 

டுத்து இரட்டைக் கோபுரமான ‘பெட்டோனா ரவேர்ஸ்’ பார்த்தோம். பெட்றோலியம் நசனல் கட்டிடம் என்று கூறினார் சாமி.  1453 அடி உயரமான உலகிலேயே மிக உயர்ந்த கோபுரம் இதுவாகும். (2003ம் ஆண்டு இது எழுதப்பட்டது) . மலேசியாவின் இரண்டு தசாப்த கால பிரமிப்பூட்டம் வளர்ச்சியின் அடையாளம் இதுவாகும்.  இரு கோபுரத்தையும் இணைக்கும் பாலம் கூட துல்லியமாக பார்வையில் விழுகிறது.

 

காலையிலேயே சென்றால் குறிப்பிட்ட தொகையினருக்கு மேலே ஏறிப் பார்க்க  அனுமதி பெறமுடியுமாம். எமக்கு அது முடியாது. அடுத்த நாள் இலங்கை செல்ல விமானம் இருந்தது. எனவே அருகோடு காரில் சென்று பார்த்தோம். அமெரிக்காவில் அழிந்த கோபுரம் இதனிலும் பார்க்க 6, 7 அடி உயரம் குறைவு என்றார் சாமி. பின்னர் டென்மார்க் வந்து ‘ யூனியர் சீனியர்’ என்ற சினிமா படத்தில் இக் கோபுரத்தைச் சுற்றி எடுக்கப்பட்ட காட்சிகள் கண்டோம்.  இந்த இரட்டைக் கோபுரத்திற்கு அருகில் இன்னொரு கோபுரம், அதுவும் ஒரு அரச கட்டிடம் என்னை மிகவும் கவர்ந்தது. அராபிய பாணியின் கலை, மிக அழகாக இருந்தது. இவைகளை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அத்தனை ரம்மியம். அனுபவித்துத் தான் புரிந்து கொள்ள முடியும். அழகோ அழகு.

 கோலாலம்பூரில் ஆங்கிலேயர் காலக் கட்டிடக்கலை கொண்ட பழைய காலப் புகையிரத நிலையம், நீதி நிர்வாகக் கட்டிடம், பழைய காலச் சூழல் கொண்ட பழைய நகரத்தினுள் போனோம். மலேசிய பார்லிமென்ட பக்கம், பழைய மசூதிகள் கூட மிகக் கலையழகோடு அழகாக இருந்தது.
 

ந்தே கால் மணி போல ஒரு பாலத்தடிக்கு வந்தோம். அங்கு இரண்டு சிறிய ஆறு ஒன்றிணைந்து, ஒன்றாகி பாலத்தின் கீழாக ஓடுகிறது. ( படத்தில் காண்கிறீர்கள்.) சேறுகளின் சங்கமம். (மடி கொன்ஃபளுயென்ஸ்) குஆலா(கோலா) என்றால் சேறு என்றும், லும்பூர் என்றால் சங்கமம் என்றும் கோலாலாம்பூர் பெயர் இப்படித்தான் வந்தது என்று சாமி கூறினார். இங்கு மக்கள் குடியேறிய சிறு சரித்திரத்தைப் பார்ப்போம்.

 

1860ல் தாதுப் பொருட்கள் தேடும் குழு ஒன்று தகரம் (ரின்) தேடிக் கொண்டு வந்தது. கெலங் ஆறும் கொம்பக் ஆறும் சந்திக்கும் இடத்தில் இவர்கள் நிலையூன்றினார்கள். தமது கற்பனைப்படி சேறுகளின் சங்கமம் கோலாலம்பூர் என இதற்குப் பெயர் இட்டார்களாம்.

 

கரம் தேடி வந்த இக் குழுவினரில் பாதிக்கும் மேலோர் மலேரியா நோயால் இறந்துவிட்டனராம். அம்பங் என்னும் இடத்தில் கண்டு பிடித்த தகரம் இவர்களது ஆர்வத்தைத் தூண்டியது. இன்னும் பல தகரச் சுரங்கங்களைக் கண்டு பிடித்து இன்று இந்த அளவில் உயர்ந்தள்ளனர் என்று வாசித்து அறிந்து கொண்டோம்.

 

நாம் தங்கிய கட்டாரி வாடிவீட்டுக்குப் பின்புறம் பிள்ளையார் கோவிலும், லிட்டில் இந்தியாவும் உள்ளது. ஆறுதலாகச் சென்று பாருங்கள் எனக் கூறி இரண்டரை மணி நேரம் காரில் சுற்றிய பின் ஐந்தரை மணிக்கு சாமி எங்களை வாடிவீட்டிற்குக் கிட்ட இறக்கி விட்டார். நாம் தான் அரை மணி நேரத்தைச் சுருக்கினோம்.  கடைகள் சுற்றி உறவினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வாங்கினோம்.

ப்படியே இரவு உணவும் முடித்து அறைக்கு வந்து ஓய்வாக நித்திரை கொண்டோம்.
எமக்கு சாரதி சாமியுடன் நன்கு ஒத்துப் போனதால் 22ம் திகதி மறு நாள் காலை 8 மணிக்கு அவரை வரும்படி பேசி வைத்து, அவர் வந்தார்.

—-மிகுதியை அங்கம் 18ல் அறிவோம்  காத்திருங்கள்.—–

 

அனுபவம் அங்கம் 16.

 

(  கட்டாரி வாடி வீடு, பழைய காலப் புகையிரதமும் சாரதி சாமியும் (கறுப்பு கால்சட்டையுடன் நிற்பவர்)    அரச மாளிகை  முன்புறத்தோற்றம், அவர்கள் படலை ஆகியன காண்கிறீர்கள்.      படங்களின் மேலே அழுத்தினால் பெரிதாகக் காணலாம்.)

பினாங்கிலிருந்து கோலாலம்பூர் செல்லும் வழியில் ஒன்றிரண்டு ஆறுகளையும் கடந்தோம். மிக ஆழமாக, சரியான கலங்கலாக அந்த ஆறுகளைக் கண்டோம். மழை பெய்து கலங்கிய நீராக, மண்ணிறமாகப் பாய்ந்தது. மலைகளும், பசுமையுமாக இவ்வளவு அழகாவென என் கணவரும் வியந்தார். பெறாக், செலங்கூர் மாவட்டங்களைத் தாண்டிக் கிட்டத்தட்ட ஒன்றேமுக்கால், இரண்டு மணி போல கோலாலம்பூர் பேருந்து நிலையத்தின் முன்பாக இறங்கினோம்.

நான் பயணப் பெட்டிகளுடன் நிற்க, கணவர் சுற்றுப் புற வாடிவீடுகளில் விசாரித்து அருகிலேயே இருந்த ஹோட்டல் கட்டாரியில் இடம் எடுத்தோம். அறைக்குப் போக முதலே கோலாலம்பூரைச் சுற்றிப்பார்க்க (சைட் சீயிங்கிற்கு) வேண்டிய ஒழுங்கினை வரவேற்பாளரிடமே செய்து விட்டு, அதாவது 3 மணிக்கு,  3 மணி நேர ஒழுங்கினைச் செய்து விட்டு நமது அறைக்குப் போய் குளித்து ஆடை மாற்றி, கீழே வந்து ஒரு தமிழ் கடை தேடி உணவு உண்டு, புத்துணர்வுடன் தயாராக நின்றோம். அது நடு பட்டினம் என்பதால் தடுக்கி விழுந்தால் கூட கடைகளில் தான் விழுவோம். அவ்வளவு கடைகள். 

சாமி என்ற பெயர் கொண்ட அங்கு பிறந்து வளர்ந்த நடுத்தர வயதுத் தமிழ் மகன் ஒருவர் எமக்கு சாரதியாக வந்தார். சரியாக 3 மணிக்கு கோலாலம்பூரைச் சுற்றிப் பார்க்க, சாமியின் காரில் புறப்பட்டோம்.

2 மில்லியன் மக்கள் கோலாலம்பூரில் வாழ்கிறார்களாம்.

லேசியா தொல்பொருட்களிலும், பட்டிக்கிலும் சிறப்புடையது.  முதலில் கைப்பை,  இடைப்பட்டி செய்யும் சிறு கைத்தொழில் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றார். ஆதிகாலத் தோலில் இருந்து பல விளக்கங்கள் கூறி எப்படிச் செய்வது என்ற விளக்கங்கள் தந்தனர் அங்கு உள்ள உத்தியோகத்தர்கள். மிக அழகான புது வித பைகள் தான். ஆனால் யானை விலை குதிரை விலை. நானும் ஒரு கை பைப் பைத்தியம்தான்,  ஆயினும் மனதை அடக்கியபடி வெளியே வந்தோம்.  இந்த பட்டிக் செய்யும், பட்டிக் அச்சடிப்பு இடத்திற்குக் கூட்டிப் போனார். விளக்கம் தர ஆரம்பித்தனர். கொழும்பில் இதை நான் 1986ல் படித்தப் பழகியிருந்தேனாதலால் விளக்கங்களை நிறுத்தி விட்டு பார்வையிடுவதில் நேரத்தைப் பாவித்தோம். அவைகளும் மிக விலையாகவே இருந்தது.

பின்னர் நகரங்களின் உள்ளே சுற்றினோம். மியூசியத்தின் முன் கட்டிடத்தைப் படம் எடுத்தோம். ஆதியில் முதல் ஓடிய புகைவண்டியைப் பார்த்தோம். படம் எடுத்தோம்.

பின்னர் அரச மாளிகை முன்புறம் சென்று காலாற நடந்து படங்கள் எடுத்தோம்.  பல வண்ணங்களில் மலர்களும், கத்தரித்த செடிகள் ‘பாம்’ மரங்கள் எனவும், கறுப்பு, தங்க நிறத்தில் நிறம் அடித்த படலையும் மிக அழகாக இருந்தது. ஐரோப்பாவில் கோடை காலத்தில் தானே இந்தப் பசுமை நிறங்களைக் காண முடியும். இதனால் அந்த அழகு எமக்குப் பூலோக சொர்க்கமாக இருந்தது. காவலாளிகளும் சர்வ சாதாரணமாக நின்றனர்.

—-மிகுதியை அங்கம் 17ல் அறிவோம்  காத்திருங்கள்.—–

 

அனுபவம் அங்கம். 15

( ங்கு காணும் படங்கள் றிக்சா வண்டி, பேருந்து, பினாங் – கோலாலம்பூர் பயணப் பாதையைப் பார்க்கிறீர்கள், தூரத்தில் பினாங் மலை தெரிகிறது. படத்தில்,)
 

வாடகை வண்டிகள் (றிக்ஷா சைக்கிள்கள்) ஓடியது. இனி அங்கு நிற்பது ஆபத்து என உணர்ந்த போது ஒரு வாடகை வண்டியைப் பேரம் பேசி அமர்ந்தோம். மழை ‘சோ’ வெனப் பொழிந்தது.  நாம் நனையாதிருக்க றப்பர் துணியை தன் வண்டி மீது கூடாரம் போல் விரித்தான், சாரதியான வயதான வறிய கிழவன். எம்மை வைத்து ஓட்ட அவன் உடம்பில் சக்தி இருக்கா! சாப்பிட்டிருப்பானா! என்ற எண்ணம் என்னுள் இழைந்தது, அவன் தோற்றம் பார்த்து. அல்லது நாம் கொடுக்கும் பணத்தில் தான் அவன் வீட்டு அடுப்பு அன்று எரியுமா என்ற எண்ணங்களும் மனதை வாட்டியது.  ‘ இந்த சவாரியை என்னால் ரசிக்க முடியவில்லையே ‘  என்று கணவரிடமும் டனிஸ் மொழியில் கூறினேன். அங்கு தான் எல்லோருக்கும் தமிழும், ஆங்கிலமும் புரிந்துவிடுமே!
 

வாடிவீட்டுக்கு வந்ததும் வரவேற்பு இடத்தில் பணத்தினை மாற்ற என் கணவர் உள்ளே செல்ல, அவனும் உள்ளே பின் தொடர்ந்தான். நான் இதை சிறிதும் எதிர் பார்க்கவில்லை. அவன் வெளியே என்னுடன் காத்திருப்பான் என்று நினைத்தேன். இனி என்ன செய்வதென நானும் உள்ளே அவனைப் பின் தொடர்ந்தேன்.  என் கணவர் வரச் சிறிது தாமதமானது. இந்த இடைப்பட்ட நேரம் ஒரு தர்மசங்கடமான நேரமாக இருந்தது. சாரதியின் வறிய கோலமும், கந்தல் துணி ஆடையும், அலங்கார விளக்கும், ராசமாளிகை போன்ற ஆடம்பர வாடிவீடும் கொஞ்சமுமே பொருந்தவில்லை. உள்ளே இருந்த ஒருசிலர் எம்மை ஒரு மாதிரியாகப் பார்த்தனர். இது என்ன இவன்! கொஞ்சமும் பொறுமையின்றிப் பர பரவென உள்ளே வந்து இப்படிச் சங்கடமான நிலையை உருவாக்கி விட்டானே, எம் மானத்தை வாங்குகிறானே என்று இருந்தாலும், வழியில் வரும் போது நாம் எமக்குள் பேசியபடி அவனது ஏழ்மையால், அவனுக்குக் கூடுதலான பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தோம். அவன் எத்தனை பேரிடம் பெரிய மனுசத் தோரணையில் ஏமாந்தானோ யார் கண்டது!
 

20ம் திகதி கார்த்திகை இப்படி அமைய, 21ம் திகதி காலையில் எழுந்து எமது காலைக் கடமைகள் முடிய வரவேற்பினரின் உதவியில் ஒரு வாடகை வண்டி அமைத்து கோலாலம்பூர் செல்லும் பேருந்து நிலையம் அடைந்தோம். பினாங் வரும் போது நன்கு  நித்திரை கொண்ட என் கணவர் இந்தப் பயணத்தில் சுற்றுப் புறக் காட்சிகளை வெகுவாக ரசித்தபடி அனுபவித்தார். இதற்காகவே முன்புற இருக்கைகளை விசேடமாகக் கேட்டுப் பெற்று அமர்ந்திருந்தோம். நீண்ட தூரப் பேருந்துச் சாரதிகளின் ஓய்வுக்காக விசேட பஸ் தரிப்பு இடங்கள் உண்டு.
 

ப்படியான இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காக விசேட கடைகள் இருந்தன. இதில் இங்கு கிடைக்காத கைவேலைப் பொருட்கள் விற்பனை செய்தனர். வெப்பப் விரதேச பழவகைகள் வித விதமாக தோல்கள் சீவித் துண்டு துண்டாக விற்பனை செய்தனர். நாம் காலைத் தேனீர் கூட அருந்தாது பயணத்தை ஆரம்பித்தோம்.  ஆசை தீர காலையுணவாக பழவகைகள் தெரிவு செய்து உறையில் போட்டு வந்து பேருந்தில் இருந்து சுவைத்தபடி பயணித்தோம். கொய்யாப்பழம், மாம்பழம், பப்பாளிப்பழம் எனப் பல வகையான பழங்கள், சிற்றுண்டிகள் என சுவைத்தோம்.

நாம் இப்போது சிறிது பின் நோக்கிச் செல்வோம். பினாங் தீவிலிருந்து பிரதான தீபகற்பம் மலேசியாவை நோக்கி வரும் கடற் பாலத்தில் பேருந்தில் வரும் போது, அது மனம் மயக்கும் காட்சியாக, கண்பறிக்கும் காட்சியாக, பாம்பு போல நீளும் பாலமும், இருபுறமும் தூரத்துக் காட்சிகள் நாம் பார்க்காத பினாங்கின் மறுபுறத்து வான்தொடும் உயர்கட்டிடங்களும், பினாங் மலையும் மிகமிக அற்புதமாகத் தெரிந்தன.
 

நாம் இப்பாலத்தினூடாக பினாங் தீவிற்கு வரும் போது மிக அதிகாலையென்பதால் தெளிவு குறைவாக இருந்தது. தூரத்துக் காட்சி ரசிக்க முடியாது இருந்தது. இப்போது மிக அழகாகத் தெரிந்தது. பிரதான தீவு பட்டாவேத் நகரக் காட்சிகளும் அற்புதமாகத் தெரிந்தது குறிப்பிடக்கூடிய காட்சிகளாக இருந்தது.
 

வேதா. இலங்காதிலகம்.
ஓகஸ், டென்மார்க்.
7-6-2003

—————–மிகுதியை அங்கம் 16ல் பார்ப்போம்.————————

 

 

அனுபவம். அங்கம் 14.

நான் 3ம் வகுப்புப் படிக்கும் போது நாகலிங்கப் பூவைப் பார்த்து வியந்தேன். பாம்பின் படத்ததின் கீழ் சிவலிங்கம் இருப்பது போல் ஆச்சரியம் தந்த பூ, தெய்வப் பூ என மனதில் அன்று எண்ணினேன். இங்கு நாகலிங்க மரத்தைக் கண்டோம். மரத்தின் பெரிய அடிப்பாகத்தில் எமது தடித்த விரல்கள் அளவு சிறு சிறு குச்சிகள் வளைந்து நெளிந்த காம்பு போல அல்லது சிறு குச்சிக் கொப்புகள் போல, (படத்தில் காண்கிறீர்கள்) அதில் இளம் சிவப்பு, தோடம்பழ நிறம் கலந்த நாகலிங்கப் பூக்கள் மணத்துடன் அழகாக இருந்தது. இதன் 5 படங்களை பார்க்கிறீர்கள் (பெரிய மரத்தில் எப்படி குச்சி குச்சியாக வளர்ந்து பின் பூக்களையும் படத்தில் காட்டியுள்ளேன்.) முதன் முதலில் நாகலிங்கப் பூ மரத்தைக் கண்டதை விசேடமாகக் கூறலாம். நாம் சாதாரணமாக நின்றபடியே பூவைக் கொய்ய முடிந்தது. ஒடிப் பிடித்து விளையாடக் கூடிய பசும் புற்தரைகள்  என்று பூந்தோட்டம் அழகாக இருந்தது. நாகலிங்கப் பூவின் ஆங்கிலப் பெயர் பிரேசில் நட் பூ இதை சகோதரர் அனா கண்ணனிடம்(இந்தியா) அறிந்து கொண்டேன். அவருக்கும் நன்றி கூறுகிறேன்.  இந்தப் பூங்காவிலிருந்து பினாங் மலைக்கு ஏற முடியுமாம். யோய்ரவுணிலிருந்து (Geoge town)  இது 830 மீட்டர் உயரத்தில் உள்ளது எனவும் மேலே 5 பாகை வெப்பமே உண்டு. அதாவது குளிராக இருக்கும் என அறிந்தோம். பிரான்சிஸ் லைற் தான் முதலில் ஸ்ரோபெறி பழவகைச் செடிகளை நாட்ட இம் மலையைத் துப்பரவாக்கினாராம். அதனாலேயே ஸ்ரோபெறி மலை என ஆதிப் பெயராக இருந்தது. இப்போது பக்கிற் பென்டேறா எனவும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது.

யரத்தில் ஹோட்டல், பூந்தோட்டம், உணவகமும், அருமையான கண்ணைக் கவரும் வெளிநோக்குக் காட்சியும் அனுபவிக்கலாமாம். முடிந்தவர்கள் தாவரவியல் பூங்காவின் மூன் கேட்டிலிருந்து நடந்து போகலாமாம்.  6 கிலோ மீட்டர் நீளம் எனவும், நடந்து செல்ல 3 மணி நேரம் எடுக்கும், மறக்காது தண்ணீரும், உணவும் எடுத்துச் செல்லுமாறும் கூறுகிறார்கள்.

நாம் மலை ஏறவில்லை. பூங்கா பார்த்து முடிய எதிரும் புதிருமாக இருந்த கோயில்களின் ஊடே இருந்த பேருந்து நிலையத்திற்கு வந்து காத்திருந்தோம். பேருந்து நிலைய நேரக் குறிப்போ, பேருந்து நிலையம் என்ற எந்த வித அடையாளமும் இன்றி சாதாரணமாக இருந்தது. காலையில் ஓகோ கோ என்றிருந்த கல கலப்பான தெருவின் சூழல் இன்றி, ஒரு ஈ காக்கை கூட இன்றி வெறிச்சோடிக் கிடந்தது.

தேன்குழல், அல்வா விற்ற கண்ணாடி வண்டில் வியாபாரி தனது பொருட்களைச் சுருட்டி வாரிக் கட்டி வாகனத்தில் ஏற்றிக்  கொண்டிருந்தான். பழங்கள், தேங்காய்த் துண்டுகளைப் பொறுக்க குரங்குகள், பிள்ளைகள் போன்று தவழ்ந்து, ஒன்றொன்றாக ஆய்வு செய்து வயிறு நிரப்பிக் கொண்டிருந்தன. எமது கையில் ஏதும் அவ் வகையில் இருப்பது தெரிந்தால் எந்தவித பயமும் இன்றி அதையும் தட்டிப் பறிக்குமாப் போல் உறுத்து உறுத்துப் பார்த்தன. நடுத்தெரு, பக்கம், ஓரம் என்றவாறின்றி  பாய்ந்து பாய்ந்து தவழ்ந்தன. பேருந்து வர புறப்பட்டோம். மாலை 6 மணியானது. கடை வீதிகளைச் சுற்றிப் பார்த்து, அப்படியே இரவு உணவையும் முடித்துக் கொண்ட போது, ஏற்கெனவே பிடித்த மழை சோவெனப் பொழிய ஆரம்பித்தது. மழை நின்ற பாடில்லை. நீண்ட நேரம் காத்திருந்தோம், இருட்டு, தெருவின் வெறுமை, ஒடுங்கிய தெரு பயமூட்டியது. அது வாடகை வண்டி ஓடும் தெருவுமல்ல.
மிகுதியை அடுத்த அங்கம் 15ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
1-6-2003.

( புகைப் படங்கள் – நாகலிங்கப்பூ (பிரேசில் நட் பூ) குரங்குகள்)

அனுபவம் அங்கம் 13.

மேலும்

Previous Older Entries